Skip to Content

19. எங்கும் அன்னை இருக்கின்றார்

எங்கும் அன்னை இருக்கின்றார்

‘அன்னை’ என்பது ஒரு மானுட உருவம் தாங்கிய தெய்விக அவதார புருஷர் என்பதுடன், அன்னை அந்த அவதாரத்திற்கு அப்பாற்பட்டும் ஒரு தெய்விக சக்தியாக இருக்கிறார். அன்னையின் வாழ்நாளில் அவருடன் பழகியவர்கள், அவருக்குச் சேவை செய்தவர்கள், அவருடைய சிஷ்யர்கள், பக்தர்கள், அவருடைய பூதவுடலில் தெய்விக அவதாரத்தையும், சக்தியையும் தரிசித்தார்கள். அன்னை சமாதியடைந்த பின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டாலும், அவருடைய சூட்சும உடல் சமாதியிலும், ஆசிரமத்திலும், புதுவையைச் சுற்றிலும், அவர்களுடைய அன்பர்களின் உள்ளத்திலும், வாழ்விலும் நின்று நிரந்தரமாகச் செயல்படுகிறது. அன்னை பூதவுடல் தாங்கி இருந்த காலத்தைவிட இன்று அவர்கள் சூட்சும உலகில் தன் யோகத்தை பெரிய அளவில் தொடர்வதால், முன் எப்பொழுதையும் விட இப்பொழுது அவர்களுடைய அருள் மிக மேலாகவும், விரைவாகவும் செயல்படுகிறது. அத்துடன், உண்மை, தூய்மை, பவித்திரம், விஸ்வாசம், கற்பு, திறன், சுறுசுறுப்பு, அறிவின் உயர்வு, உணர்வின் செறிவு, செயலின் நுட்பம் உள்ள இடங்களை அன்னையின் சூட்சும உடல் தேடிப் போய் இறைவனின் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்கிறது.

அன்பர்கள் ஒரு காரியம் வெற்றி பெற்றால், வெற்றி தன் திறமையால் ஏற்பட்டதா, அன்னையின் அருளால் ஏற்பட்டதா என எப்படித் தெரிந்து கொள்ளலாம்? அது மிகவும் சுலபம். நமக்குத் திறமையில்லாத விஷயத்தில் நாம் வெற்றி பெற்றால் அது நம் திறமையால் அல்ல என்பதும், அது அன்னையின் அருட்கொடை என்பதும் தெளிவான உண்மை அல்லவா? அது போல அன்னை எங்கு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில அடையாளங்கள் உண்டு. அவர்களுக்குள்ள தனிச்சிறப்புகள் எங்கு காணப்படுகின்றனவோ, அங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதை நாம் அறியலாம். அவற்றிற்குரிய சுவடுகள், அடையாளங்கள், அறிகுறிகள் இவை.

 1. அமைதி, அலையாக வந்து மனத்தை ஆட்கொண்டால்,
 2. காரணமின்றி நெஞ்சம் உவகையால் பூரிப்படைந்தால்,
 3. மனம் பரந்து விரியும் தன்மையைப் பெற்றால்,
 4. அலை மோதும் எண்ணங்களின் அலை ஓயுமானால்,
 5. துடிப்பான உணர்வு துடிப்பை இழந்து இனிமையான பரவசமானால்,
 6. உடல் தெய்விக ஆரோக்கியத்தின் அமைதியான இன்பத்தை உணருமானால்,
 7. பிறர் உங்கள் மனத்திலுள்ள எண்ணங்களைப் பேசினால்,
 8. வாழ்வு உங்களை மையமாக்கி உங்கள் சிறப்புக்காகச் செயல்படுமானால்,
 9. சட்டம் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மாறுமானால்,
 10. நீங்கள் கேட்டதை விட உங்களுக்கு அதிகம் கிடைக்குமானால்,
 11. உங்களுக்கு எதிராக ஆரம்பிக்கும் வேலை உங்களுக்குச் சாதகமாகத் திரும்புமானால்,
 12. குறிப்பிட்ட நேரத்தில், தேவைப்பட்ட உதவி தானே வந்து சேருமானால்,

அந்நேரங்களில் அவ்விடங்களில், அம் மனிதர்களில் அன்னை இருக்கிறார் என்பது கண்கூடு.

தூய்மையான உள்ளங்களில் அன்னை வசிக்கின்றார். அத்தகைய தூய உள்ளங்களுக்குச் செய்யும் சேவை, அன்னைக்கு செய்யும் சேவையாகும். அது போன்ற சேவைக்குரிய சந்தர்ப்பங்கள் மனிதனுக்குக் கிடைப்பது அரிது.

M.A., பட்டம் பெற்று வேலையில்லாமல் 4 ஆண்டுகளாகத் தங்கள் கடையிலும், அருகிலுள்ள டாக்டர் வீட்டிலும் பொழுதைக் கழித்த ஒருவர் வேலைக்கு விண்ணப்பித்து விட்டு வந்து சமாதியைத் தரிசனம் செய்தார். அதற்குப் பிறகு அவருக்கு அறிமுகம் உள்ள அதே டாக்டர், ‘‘நீ வேலையில்லாமலிருப்பது சரியில்லை. என்னுடன் சென்னைக்கு வா. நான் செலக்க்ஷன் கமிட்டி மெம்பரிடம் சொல்லி உனக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறேன்’’ என்று கூறி, அவரைத் தன் செலவில் அழைத்துப் போய், Ph.D. பட்டதாரிகள் விண்ணப்பித்த வேலையை அவருக்கு வாங்கிக் கொடுத்த இடத்தில் அன்னை இருக்கிறார். அந்தப் பட்டதாரி சமாதியைத் தரிசித்த அந்தக் கணத்திலேயே அவருக்குத் தன் அருள் நிரம்பிய இடத்தை அளித்து விட்டார் அன்னை.

உலகத்தின் மீது துவேஷமும் வெறுப்பும் காட்டி மாசுபடிந்த மனத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த ஒருவர், சமாதி தரிசனம் செய்து அன்னையின் பார்வை பட்டபோது, கசப்பும், வெறுப்பும் போய் கனிந்த மனிதராகி விட்ட தருணத்தில் அன்னயைின் பாதம் படும் சுவடுள்ளது.

பயத்தாலும் பீதியாலும், எதைப் பார்த்தாலும் நடுங்கி, யாரைப் பார்த்தாலும் பயந்த பெண்ணின் கையில் சமாதி மலர் பட்டு, பயமும் பீதியும், நீங்கி, மலர்ச்சியும் மகிழ்ச்சியும் பிறக்கும் இடத்தில் இருப்பது அன்னையே.

தெருவில் சிறு குழந்தையை இழந்து, தன் நம்பிக்கையையும் இழந்து புலம்பும் பெண்ணுக்காக வழியே வந்த ஓர் அன்னையின் பக்தர், தீனக் குரலெழுப்பியபோது அக்குரலைக் கேட்டுக் குழந்தையை மீட்பது அன்னையின் திருவருளே.

***********book | by Dr. Radut