Skip to Content

18. திருவுருமாற்றம்

திருவுருமாற்றம்

மனிதன் தன் இயற்கை - சிருஷ்டியில் உள்ள இயற்கையை - மாற்றி, தெய்வத்திற்கும் மேலாக உயர்ந்து, பூவுலகில் சத்திய ஆட்சியை நிலவி வாழ அவனுள் ஏற்படும் ஆத்மீக மாற்றங்களை அன்னை ‘திருவுருமாற்றம்’ (transformation) என்கிறார். சிருஷ்டியில் மனிதன் முதலில் மனித ஜீவியத்தை (consciousness) பெறுகிறான். பொதுவான ஜீவியம் ஒவ்வொரு மனிதனிலும் தனிப்பட்ட சுபாவத்தை (character) பெறுகிறது. அதாவது சுபாவம் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒவ்வொருவரும் வளர்ப்பு முறை, கல்வி, பிறந்த இடத்திற்கு ஏற்பச் சொந்த நடைமுறையை (behaviour) பெறுகின்றனர். மரியாதையாகப் பழகுவது நடைமுறையாகும். நல்ல நடைமுறை அல்லது நடத்தை என்கிறோம். சுறுசுறுப்பாகச் செயல்படுவதை, ‘அவரது சுபாவம்’ என்கிறோம். சுறுசுறுப்புள்ள இருவரில் ஒருவர் மரியாதையாயும், மற்றவர் மரியாதையில்லாமலும் இருக்கலாம். நடைமுறை மனிதனிடம் மேலெழுந்தவாரியாக உள்ளது. அதை மாற்ற முடியும் என்றாலும், அது எளிதல்ல. கிராமத்து நடைமுறையை விட்டு நகரத்து நடைமுறையை ஏற்றுக்கொள்வது எளிதல்ல. நல்ல பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைச் சேர்த்தால், நல்ல நடைமுறைகளைச் சில ஆண்டுகளில் பயிற்றுவிக்கின்றார்கள். ஆனால் சுபாவம் உடன் பிறந்தது. ‘சுபாவத்தை மாற்றவே முடியாது’ என்பதே எல்லா நாட்டு மக்களுடைய பொதுவான கருத்தாக இருக்கிறது. விதிவிலக்காக ஓரிரு கலாச்சாரங்களும் இருக்கின்றன.

ஒரு வேலைக்காரப் பெண் திருடுவாள். பொய் சொல்வாள். அதுபோன்ற எல்லாக் காரியங்களையும் செய்வாள். அவளை வேலைக்கு வைத்துக்கொண்டிருந்த ஒரு பிரெஞ்சு குடும்பத்தினர் அவளைத் தங்களுடன் பாரிசுக்கு அழைத்துப் போய்ப் படிக்க வைத்தார்கள். அவள் 18 ஆண்டு காலம் அங்கிருந்தாள். எல்லா பழக்கங்களும் அவளுக்கு மாறிவிட்டன. பட்டதாரியைப் போலவும், உயர் குடிப்பெண் போலவும் இருந்தாள். அவளுடைய மாற்றம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை விளைவித்தது. 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பினாள். இங்கேயே தங்கிவிட்டாள். ஆறுமாதம் கழித்துப் பழைய குணங்கள் புதியபடிப்பு, சொத்து, அந்தஸ்து ஆகியவற்றை மீறி முழுவதும் வந்து சுபாவத்தைப் பொறுத்த வரையில் பழைய திருடியாகிவிட்டாள். ‘‘சுபாவத்தை மாற்ற முடியும்’’ என்று சொல்பவர்கள், ‘‘கடும் விரதங்களை 35 ஆண்டு காலம் கடைப்பிடித்தால் மாற்றலாம்’’ என்கின்றனர்.

மாற்றம் கடினமானது. என்றாலும் ஏற்றத்திற்கு அது ஒன்றே வழி.

ஸ்ரீ அரவிந்தரின் யோகம் பலிக்க வேண்டுமானால், நடைமுறை (behaviour) மாற வேண்டும். சுபாவம் மாற வேண்டும். ஜீவியமும் (consciousness) மாற வேண்டும்.

நம் நடைமுறையின் அடிப்படைகள் நம் சமுதாயப் பழக்க வழக்கங்களை ஒட்டியது. ‘‘பெரியவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்; கடவுளுக்குப் பயந்து நடக்கவேண்டும்; ‘ஊரை ஒட்டிச் செயல்பட வேண்டும்; சம்பிரதாயங்களை அனுஷ்டிக்க வேண்டும்’’ என்பவை நல்ல நடைமுறைகள். மேலைநாடுகளில், குறித்த நேரத்தில் (punctuality) வர வேண்டும்; அயராது உழைக்க வேண்டும் போன்ற நடைமுறைகள், சமுதாயப் பழக்கங்கள். நாம் சமூகத்தில் இருப்பதால் சமூகத்திற்கு முதலிடம் கொடுத்து அதன் பழக்கங்களை மதித்து நடக்கிறோம். சாதகனுக்கு சமூகத்தைவிட தெய்வம் முக்கியம். சமூகத்தின் நல்ல பழக்கங்களை சாதகனும் ஏற்றுக் கொள்ளலாம். சமூகத்தில் தவறான பழக்கங்களும் ஏராளமாக உண்டு. அவற்றை மீறினால் சமூகம் தண்டிக்கும்.

எல்லோரும் ஒரு கிராமத்தில் அல்லது ஒரு வீட்டில் ஒரு கட்சிக்கு ஓட்டுப்போடும் பொழுது மனசாட்சி கருதி ஒருவர் மற்ற கட்சிக்குப் போடவேண்டும் என்றால், வீடோ, சமூகமோ அனுமதித்தாலும், ஆமோதிக்காது. சமூகம், ‘‘நல்லதைச் செய்’’ என்று சொல்லாது. அது எல்லோரும் செய்வதையே செய்யச் சொல்லும். செய்வதை மாற்றிச் செய்தால், ‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்’ என்று பயமுறுத்தும். ஒருவர் வாழ்க்கையில் சமூகத்திற்கு எதிராகவோ அல்லது சமூகத்தின் வழக்கங்களிலிருந்து மாறியோ நடக்கச் சந்தர்ப்பம் வராவிட்டால் அவர் அதிர்ஷ்டசாலி.

அன்னையை ஏற்றுக்கொண்டு யோகம் செய்யும் சாதகன், உள்ளுணர்வையும், மனசாட்சியையும் மட்டும் ஏற்றுச் செயல்படவேண்டும். இதற்குத் தன்னை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும். அந்த மாற்றம் மனதில் முழுமையாக ஏற்பட்டால், நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டதாக அர்த்தம். இதுவே பெரிய காரியம்.

அடுத்தது, சாதகன் தன் சுபாவத்தை தெய்வ உணர்வுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும். ‘அது மனிதனால் இயலாத காரியம்’ எனப் பலர் சொன்னாலும், ‘அன்னையின் சக்திக்கு அது முடியும்’ என்பதை சாதகர்கள் அறிவார்கள். சுயநலம் படைத்தவனுக்குத் தன்னலமில்லாமல் நடப்பது சிரமம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். சுயநலம் இல்லாதவன், சுய நலத்துடன் நடப்பதும் அதே அளவு சிரமம் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்ள முடியாது. சோம்பேறி, சுறுசுறுப்பாவது கஷ்டம். சுறுசுறுப்பானவன் சோம்பேறியாக இருப்பதும் கஷ்டம். அதாவது, சுபாவத்தை மாற்றுவது கஷ்டம். யோகத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்குத் தங்கள் சுபாவத்திற்கு எதிராக நடக்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வரும்.

அதற்கும் அடுத்தபடியாக ஜீவியம் (consciousness), விலங்கின் தன்மை (animal consciousness), மனிதத் தன்மை (human consciousness), தெய்வத்தன்மை (God consciousness) என்ற இயல்புகளைப் பெறுகின்றன. விலங்குத் தன்மையை மனிதத் தன்மையாக மாற்றி, பிறகு அந்த மனிதத் தன்மையை தெய்வத் தன்மையாகவும், அதற்கும் மேலாகவும் மாற்ற வேண்டும்.

இதுபோல் சாதகன், தன் நடைமுறை, சுபாவம், ஜீவியம் ஆகியவற்றை மாற்றிக்கொண்டு அன்னையின் யோகத்தைப் பூர்த்தி செய்யத் தயாராவதை திருவுருமாற்றம் (transformation) என்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார்.

இவையெல்லாம் யோக சித்தி பெற்றவர்களிடம் காணக்கூடியவை என்றாலும், அன்னையிடம் வந்தபின் இவற்றின் அறிகுறியாக, சில நிகழ்ச்சிகளைக் கண்கூடாகக் காணலாம்.

கோடிக்கணக்கான சொத்திருந்தாலும், சொந்தப் பிள்ளைக்கோ, மனைவிக்கோ செலவு செய்ய மனமில்லாமல் கருமித்தனம் செய்து ரூ.5-க்கும் ரூ.2-க்கும் கஷ்டப்படுபவர்கள் உண்டு. சுவாமி கும்பிடப் போனல் 1 ரூபாய் காணிக்கை செலுத்துபவர்கள் இவர்கள். ஆனால் இவர்கள் அன்னை விஷயத்தில் தங்கள் சுபாவத்திற்கு முற்றிலும் மாறாக நடந்துகொண்டு 1000, 2000 என்று சந்தோஷமாகப் பணம் கொடுத்திருக்கிறார்கள்.

நாணயமான ஒருவர்கூட இல்லாத கிராமம் அது. அந்த ஊர்க்காரர்களுக்குக் கடைத்தெருவில் யாரும் ஐந்து பைசாக்கூடக் கடன் கொடுப்பதில்லை. கூட்டுறவு சொஸைட்டியில் கடன் கொடுத்தபோது எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு கடன் வாங்கினார்கள். ஆனால் யாருமே பாக்கியைக் கட்டவில்லை. சொஸைட்டி மூழ்கிவிட்டது. அப்படித் தலையைத் தின்கிற ஊரின் மீது அனுதாபம் கொண்ட ஓர் அன்னயைின் பக்தர், அவர்களுக்கு சேவை செய்யப்போய் வங்கி மூலம் கடன் கொடுத்து, அனைவரும் தவணை தவறாமல், தானே வங்கிக்குச் சென்று 63,000 கடனையும் பைசாப் பாக்கி இல்லாமல் திருப்பிக் கொடுத்தார்கள். அவர்கள் சுபாவத்திலேயே இல்லாத ஒன்று நாணயம். ஆனால் அன்னை தன் அன்பர் ஒருவர் மூலமாக அவர்கள் சுபாவத்தை மாற்றி அவர்களுக்கு ‘நாணயம்’ என்ற ஒரு புது நடைமுறையை அளித்தார். அதற்குப் பிறகு எல்லா வகைகளிலும் ஊர் சிறப்பாக முன்னேறி, அந்த மாவட்டத்திலேயே அது ஆதர்ச கிராமமாக விளங்குகிறது.

திருடன் மனம் மாறினால் திருடுவதை நிறுத்துவான். அது சரி. அவனை யார் மாற்றுவது? அந்தத் தோப்புக்காரருக்கு அது சிரமமாக இருக்கவில்லை. ஏனென்றால் அவர் அன்னையின் பக்தர். அவர் தன்னுடைய தோப்பில் திருடு போவதை நிறுத்த அன்னையைப் பிரார்த்தனை செய்ததில், திருடு நின்றது. விஷயம் அதோடு முடியவில்லை. திருடியவன் அவரிடம் வந்து இதுவரை தானே தோப்பில் திருடியதாகவும், தான் இனித் திருந்தி வாழப்போவதாகவும் கூறிச் சென்றான். அவன் திருந்திய மனிதனாக வாழ்ந்தும் காட்டினான். தோப்புக்காரர் பிரார்த்தனையின் மூலம் கேட்டது ஒன்று. ஆனால் அன்னை வழங்கியவை இரண்டு. அவர் தன் தோப்பில் திருடு போகக்கூடாது என்று மட்டும்தான் பிரார்த்தனை செய்து கொண்டார். அன்னை அவருடைய பிரார்த்தனையை நிறைவேற்றியதோடு, திருடனைத் திருந்திய மனிதனாகவும் மாற்றிவிட்டார்.

பாங்கில் கடன் வாங்கப் போனால் கேட்பதைவிடக் குறைவாகக் கொடுப்பார்கள். ‘கேட்ட தொகை நியாயமானது’ என்றாலும், ‘‘கேட்டதை எப்படிக் கொடுப்பது? அது சரியில்லை அல்லவா’’ என்பார்கள். பாங்க் அதிகாரிகள் நல்லவர்களாகவும், வேண்டியவர்களாகவும் இருந்தாலும், விண்ணப்பம் போடுமுன் நாம் கேட்கும் தொகையைக் கொடுக்கச் சம்மதம் தெரிவித்தாலும், ‘‘விண்ணப்பத்தில் கொஞ்சம் அதிகமாகக் கேளுங்கள். நாங்கள் குறைத்துக் கொடுத்தாலும் உங்களுக்கு வேண்டியது கிடைக்கும்’’ என்று சொல்வார்கள். இரண்டு லட்சம் கேட்டவருக்கு 4 லட்சம் கொடுக்க பாங்க் முன் வந்தது, வங்கிச் சரித்திரத்திலேயே இல்லாத அதிசயம். வங்கி அதிகாரிகளின் சுபாவத்திற்கு மாறுபட்டது. 8 லட்சம் கேட்ட ஒருவர் மனத்தை மாற்றிக் கொண்டு 3 லட்சத்திற்கு விண்ணப்பம் எடுத்துக் கொண்டு போனதற்கு வங்கி அதிகாரி, ‘‘உங்கள் திட்டத்திற்கு 3 லட்சத்திற்கு மேல் யாரும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் உங்களையும் உங்கள் திட்டத்தையும் மெச்சி 8 லட்சம் கொடுக்கப் பிரியப்படுகிறேன். அதற்குக் குறைந்து கேட்காதீர்கள். விண்ணப்பத்தை மாற்றி 8 லட்சமாக்கிக் கொண்டு வாருங்கள்’’ எனச் சொன்னார். இந்த அதிசயங்களை எல்லாம் நிகழ்த்தியவர்கள் அன்னையின் பக்தர்கள்.

பாங்க் அதிகாரிகளைப் போலவே, கடையில் சாமான் வாங்கப் போனால், அதற்கான சரியான தொகையை விட அதிகத் தொகையைக் கொடுக்க யாரும் முன் வருவதைக் கண்டிருக்க முடியாது. அன்னையின் அன்பரான ஒரு பேப்பர் வியாபாரி ஒரு ரீம் பேப்பர் 150 டாலர் என்று ஒரு வாடிக்கையாளரிடம் சொன்னார். வாங்க வந்தவர் பேப்பரைப் பார்த்தார். ‘‘இது போன்ற பேப்பரை நான் பார்த்ததில்லை. இவ்வளவு உயர்ந்த பேப்பரை 150 டாலருக்கு விற்கக்கூடாது. நான் 175 டாலர் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்’’ என்றார். இது மனித சுபாவத்தில் இல்லாத ஒன்று. ஆனால் அன்னையின் அன்பர்களின் வாழ்வில் இல்லாத எதுவும் இருக்கும் ஒன்றாக மாறிவிடுகின்றது!

எஸ்டேட்டிற்கு உடையவர் அதன் விலை ரூ.2 லட்சம் என்று குறிப்பிட்டபின், ஒருவர் அதை 3 லட்சத்திற்கு விலை கேட்டு வாங்கினார் என்றால், பேரம், வியாபாரம் என்பவை அர்த்தத்தை இழந்து விடுகின்றன. ஆனால் அந்த எஸ்டேட்டின் சொந்தக்காரர் அன்னையின் பக்தர் என்பதால், வாங்குபவர் வள்ளலாக மாறி விடுகிறார்!

சிலருடைய சுபாவம் யாரைப் பார்த்தாலும், ‘‘எதையாவது கொடு’’ என்று கேட்கக் கூடியதாக இருக்கும். டெல்லியில் நடந்த ஓர் அனைத்துலக மானேஜ்மெண்ட் மாகாநாட்டிற்கு பெல்ஜியத்திலிருந்து ஒரு பேச்சாளர் வந்திருந்தார். அவர் திரும்பிப் போனபின் அவருக்கு இந்தியாவிலிருந்து தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு 70 கடிதங்கள் வந்தன. ‘என் பிள்ளையை உன் வீட்டில் வைத்துப் படிக்கவை;’ ‘உன் ஊருக்கு வர எனக்கு டிக்கட் வாங்கி அனுப்பு;’ ‘காமிரா பிரஸன்டேஷன் கொடு’ போன்ற கடிதங்கள் அவை. அவருக்குப் புரியவில்லை. இந்தியாவைப் பற்றி அறிந்தவர்களைக் கேட்டுப் புரிந்து கொண்டார். ஒருவரோடு ஐந்து நிமிடம் பார்த்துப் பேசினால்கூட, ‘‘உன் பேனாவைக் கொடு,’’ ‘‘புத்தகத்தைக் கொடு’’ என்று கேட்காமலிருந்தால் சிலருக்கு உயிர் போய்விடும். இது அவர்கள் சுபாவம். அப்படிப்பட்ட ஒருவர் அன்னையின் சேவையில் ஈடுபட்டார். வருடக் கணக்காக அவர் ஒன்றுமே கேட்கவில்லை; யாரையும் கேட்கவில்லை. இந்த மாற்றம் அவருக்கு எப்படி ஏற்பட்டது? அவரை அறிந்தவர்கள் யாராலும் அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அன்னை அவரிடம் ஏற்படுத்திய மாற்றம் அது.

அதைப்போல் மனிதன் தனக்குத்தானே முயன்று ஒரு மாற்றம் செய்தால், அன்னையின் சக்தி அளவு கடந்து தீவிரமாக அவர்கள் வாழ்விலும், தாழ்விலும் பெரும் மாற்றங்களைத் தோற்றுவிக்கும்.

**********book | by Dr. Radut