Skip to Content

30. அன்னையின் தரிசனம்

அன்னையின் தரிசனம்

அன்னையின் வாழ்நாட்களில் அவர்களை நேரில் தரிசித்தவர்கள் தாங்கள் அன்னை தரிசனம் செய்ததாகக் கூறுவார்கள். பூதவுடலில் அன்னையைத் தரிசிப்பது பாக்கியம்; பூர்வ ஜன்மப் புண்ணியம். அன்னையின் தரிசனம் அத்துடன் நின்றுவிடவில்லை. அதைப் பல ரூபங்களில் காணலாம். ரூபத்திற்கேற்ப அம்சங்கள் உண்டு. என்றாலும், எந்த வகையில் அன்னையைக் கண்டாலும் அதுவும் பூரண தரிசனமே.

பொருள் ரூபாயாக இருக்கிறது. வெள்ளி ரூபாயாக உள்ள மரியாதை நோட்டிற்கு வெகுநாள் வரை வரவில்லை.

இரண்டாம் யுத்தத்திற்குமுன் கிராமங்களில் 100 ரூபாய் நோட்டை வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ‘‘நோட்டைக் கொடுத்து ஏமாற்றலாம் என நினைக்கிறாயா?’’ என்பார்கள். பொருள் நிலமாக இருக்கிறது. கிராமத்தில் நிலம் உள்ளவர்க்கே மரியாதை. ஒரு கிராமத்துவாசிக்கு சென்னையில் பெரிய வீடு இருந்தாலும், ஊரில் நிலமில்லையானால் மரியாதை குறைவு. ஆனால் கிராமத்திலுள்ள நிலம், பம்பாயில் உள்ள சூழ்நிலையில் மரியாதையைப் பெற்றுத்தராது. சென்னையிலும் வீடு, பங்களா, மனைக்குள்ள மரியாதை, ஸ்டாக், டெபாசிட், ஷேர் சர்ட்டிபிக்கேட்டுகளுக்குக் கிடையாது. சமீபத்தில் நிலைமை மாறி வருகிறது. தூத்துக்குடியில் 100 பஸ் ஓட்டுகிறவர் சென்னையில் தன் சொத்து முழுவதையும் கம்பெனி ஸ்டாக்கில் வைத்திருப்பவரை, பணக்காரர் என ஏற்கத் தயங்குகிறார். சம்பந்தம் செய்ய நினைத்தால், தன்னைப் போன்ற பஸ் ஓனர், எஸ்டேட் முதலாளி போன்றவர்களையே அவர் மனம் நாடுகிறது. ஆனால் பவுன், பவுன் நகை, பணம், பாங்க் டெபாசிட், வீடு, மனை, எஸ்டேட், கம்பெனி ஸ்டாக், ஷேர் ஆக எந்த ரூபத்திலிருந்தாலும் பொருளின் மதிப்பு ஒன்றேயாகும்.

அன்னை என்பது ஒரு சக்தி. தெய்வம் வாழ்வில் செயல்படும் சிருஷ்டிக்குரிய சக்தி. வாழ்வு ஒரு நிலையிலில்லை. ஜடமாகவும், தாவரமாகவும், விலங்காகவும், மனிதனாகவும் வாழ்வு பல நிலைகளில் இருக்கின்றது. அன்னை பூவுலக வாழ்வு அனைத்தையும் அணைத்துச் செயல்படும் சக்தியாக இருப்பதால், ஜடத்திலும், மரத்திலும் செயல்பட வேண்டிய அவசியம் உண்டு. ஜடப் பொருளில் காணப்படும் அன்னை வேறு, மனித வாழ்க்கையில் காணப்படும் அன்னை வேறில்லை. வேறு வேறு வகைகளாக அன்னை காட்சியளிக்கிறார். மனித வாழ்க்கையும் ஒரே நிலையாக இருப்பதில்லை. எண்ணம் நிறைந்த மனமாகவும், சூட்சுமமாகவும், உணர்ச்சி நிறைந்த நெஞ்சமாகவும், கிளர்ச்சி நிறைந்த நாதமாகவும், செயலாலான உடலாகவும் இருப்பதால், எவ்விடத்தில் அன்னை தோன்றினாலும் அது அன்னையே; அன்னையின் பூரணமே; நமக்குக் கிடைக்கும் பூரண அருளே; பூரணமான தரிசனமே என்பது தெளிவு.

மனத்தில் தோன்றும் அன்னை ஜோதி வடிவாக இருக்கின்றார். உணர்ச்சியில் அன்னை உருவெடுத்தால் நெகிழ்வாகி விடுகிறார். பூரண அமைதியை நாம் உணரும் போது அன்னையின் தரிசனத்தை ஆத்மா பெறுகிறது. மௌனமும் ஆத்ம தரிசனமே. அறிவாலான மனம் ஜோதியைக் கண்டாலும், உள்ளம் பூரித்து நெகிழ்ந்தாலும், பிராணன் கிளர்ந்தெழுந்து வீறு கொண்டு செயல்பட்டாலும், உடல் காரியங்களை சுறுசுறுப்பாய்ச் செய்வதால் புளகாங்கிதம் அடைந்தாலும், அகக்கண் முன் அன்னையின் உருவம் தோன்றினாலும், அமைதி தவழ்ந்தாலும் ஆனந்தப் பெருக்கு அளவுக்கு மீறிப் போனாலும், அவையெல்லாம் அன்னை நமக்கு அளிக்கும் தரிசனமே.

வாழ்விலும் அன்னை தரிசனம் கொடுப்பது வழக்கம். செல்லுமிடத்திலெல்லாம் எதிர்பாராத வகையில் காரியங்கள் கூடிவரும்பொழுது, யாரைப் பார்க்கப் போகிறோமோ அவரே நம்மைத் தேடிவரும் பொழுது, காரியங்கள் திட்டமிட்டதை விட விரைவாகப் பூர்த்தியாகும் பொழுது, உரத்த குரலில் நம்மால் பேச முடியாதபொழுது, எங்கும் கிடக்கும் குப்பையை வேறு ஒரு காரணத்திற்காக அகற்றும் பொழுது, அதாவது குப்பையால் நாமிருக்கும் இடத்தில் இருக்க முடியாத பொழுது, அதன் உருவில் அன்னை தரிசனம் அளிக்கிறார்கள். சூட்சுமப் பார்வை உள்ளவர்களுக்கு அது போன்ற நிலைகளில் அன்னையின் திருப்பாதங்கள், கரங்கள், உருவம் தரிசனம் அளிக்கும்.

தரிசனத்தின் உருவங்கள் வேறு. ஆனால் அவற்றின் உயிர்ப்பும் ஒன்றே; உயர்வும் ஒன்றே.

அந்த உயிர்ப்பு அன்னையே! உயர்வு அன்னையின் தரிசனமே!

***********book | by Dr. Radut