Skip to Content

22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்

வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்

‘அன்னையைத் தெய்வமாக ஏற்றுக் கொள்ளுதல்’ என்பது, அன்னையின் தெய்வ அம்சத்தை உணருதலாகும். ‘அன்னையை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளுதல்’ என்பது, முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். ‘பொய் சொல்லாமல் இருப்பது உயர்ந்தது’ என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளலாம். அது அறிவால் அக்கருத்தைப் புரிந்து கொண்டதாக அர்த்தம். அந்த இலட்சியத்தை வாழ்க்கையில் எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ள முடியும்? இங்கும் அது போன்ற ஒரு வித்தியாசம் உண்டு.

பொதுவாக வாழ்க்கையும், குறிப்பாக மனித வாழ்க்கையும் செயல்படும் முறைகள் இரண்டு: (1) விருப்பு வெறுப்பு, (2) சத்வ, ரஜஸ், தமோ குணங்கள். நாம் விரும்பும் காரியங்களைச் செய்கிறோம். விரும்பாத காரியங்களைப் புறக்கணிக்கின்றோம். அது மனித வாழ்க்கைக்கு, சாதாரணமான மனிதனுடைய வாழ்க்கைக்கு ஓர் அடிப்படை. அடுத்தாற்போல் அறிவால் நிதானமாகச் செயல்படும் பொழுது சத்வ குணமும், செயலற்று இருக்கும் பொழுது தமோ குணமும் வெளிப்படுகின்றன. இக்குணங்களுடைய பாதிப்பின்றி மனிதன் செயல்பட முடியாது.

அன்னையை வாழ்வில் ஏற்றுக்கொண்டபின் ஒரு காரியத்தைச் செய்ய, ‘‘இது எனக்குப் பிடிக்கும்; செய்கிறேன். அது எனக்குப் பிடிக்காது; செய்யமாட்டேன்’’ எனச் சொல்லாமல், ‘அன்னை வழிப்படி இவை செய்யப்பட வேண்டியவை; இவை வேண்டியவை’’ என்றே சொல்ல வேண்டும். ஒருவர் இக்கருத்தை இலட்சியமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தால், அவர் யோகப் பாதையில் பல கட்டங்களை சீக்கிரத்தில் தாண்டிவிடுவார். கீதையில் ராக துவேஷம் என்பது இதையே.

குணங்களால் செய்யப்பட்ட மனிதன் குணங்களை விலக்கிச் செயல்படுதல் எப்படி? சுருக்கமாகச் சொன்னால் எதிர்ச்செயல் (Reaction) இன்றிச் செயல்பட வேண்டும். காலையில் தபாலை எதிர்பார்க்கிறோம். அதை எதிர்பார்க்காமலிருந்தால் reaction இல்லாமல் செயல்படுவதாக அர்த்தம். கதவைப் படாரென்று ஒருவர் சாத்தியவுடன் எரிச்சல் வருகிறது. எரிச்சல் நம் reaction. அது இருக்கக்கூடாது. வழக்கமாக 50 மார்க் வாங்கிய பையன் பெருமுயற்சி செய்து 68 மார்க் பெறும்போது, இன்னும் ஒரு மார்க் கூடக் கிடைத்திருந்தால் முதல் மார்க்காக இருக்கும் என நினைப்பது மனித நியாயம். ஆனால் அதற்குப் பேராசை என்று பெயர். மாதம் 60 அல்லது 70 ரூபாய் சம்பளம் கேட்டவருக்கு முதலாளி 75 ரூபாய் கொடுத்து, ‘‘இது 2 வாரச் சம்பளம்’’ என்று சொன்னார். மேலும் அவருக்கு ஒரு வீடு கொடுத்து அதில் வாடகை இல்லாமல் இருந்து கொள்ளச் சொன்னார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது வரை தான் செய்த தோட்ட வேலைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் செய்த வேலைக்கு ஓவர் டைம் கேட்டதை நாம் பேராசை என்று ஒத்துக்கொள்வோம். ‘68 மதிப்பு எண்கள் பெற்ற பின் முதல் மார்க்குக்கு ஆசைப்படுவது நியாயம். நல்ல ஆசை’ என்போம். அடிப்படை இரண்டிற்கும் ஒன்றே.

‘நட்ட பயிர் என்ன பலன் கொடுக்கும்?’ என்று விவசாயி கணக்குப் போடக் கூடாது என்பது நம் பரம்பரை. அதன் அடிப்படை, ‘பலனை எதிர்பார்க்கக் கூடாது’ என்பதே. பலனை எதிர்பார்ப்பதுடன். அதை அடிப்படையாக வைத்து மேலே கணக்குப் போடுவது மனித மனத்தின் இயல்பு. அதை மாற்றி, ‘செய்த வேலை சரியாக இருக்கிறதா? இனியும் செய்யக்கூடியது உண்டா?’ என்பதுடன், மனோ வேகம் நிறுத்தப்பட வேண்டும் என்பது ஆத்மீக வழி. அதுவே அன்னை வழி. அது பழக்கத்தால் மட்டும் வராது. அடிப்படையில், மனத்தின் ஆழத்தில், அந்த மனப்பான்மையை மனமும், குறிப்பாக உணர்ச்சியும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற நெறிமுறைகளை வரிசையாகச் சொல்லிக் கொண்டு வந்தால், ‘இவையெல்லாம் உயர்ந்த முறைகள். நான் இவற்றைப் பின்பற்றப் பிரியப்படுகிறேன்’ என்று சொல்பவர்களை விட, ‘இதெல்லாம் நமக்கு முடியாது. இந்த யோகம் எனக்கு வேண்டாம்’ என்ற சொல்பவர்களே அதிகமாக இருப்பார்கள். ‘நல்லது’ என்று முடிவெடுத்து ஒரு காரியத்தைத் தொடங்குகின்ற பலர், சீக்கிரத்தில் ‘‘என்னவோ நினைத்தேன். இது நடக்காது போலிருக்கிறது’’ என்று சோர்ந்து போவார்கள். முனைந்து தொடர்ந்தால், நடக்கும் நிகழ்ச்சிகள் நம் பொறுமைக்குச் சோதனைகளைத் தவறாது கொண்டு வரும். பொறுமை ஜெயிப்பது குறைவு. அதிலும் நல்ல காரியங்களைச் செய்ய முனைந்து, தவறானதைப் புறக்கணிப்பதில் வெற்றி காணலாம். பரீட்சைக்கு முயற்சி செய்து படிப்பது சிரமமானாலும், அதைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளலாம். அந்தக் கட்டத்தில் வெற்றியடைந்தால், வாழ்க்கை சோதனையை நகர்த்தி அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோகும்.

ஒரு முறை கைமாற்று வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்காமல், அடுத்த முறையும் கடன் கேட்பார். ‘‘இல்லை’’ என்று சொல்வது முறை. ‘இல்லை’ என்று சொல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு கொடுத்தால், மறுபடியும் வாங்கியதை மறந்துவிட்டு வந்து கடன் கேட்பார். ஏதாவது ஒரு கட்டத்தில் ‘இல்லை’ என்றால், அவர் திரும்பி வந்து ‘‘உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லையா? சமயத்துக்கு உதவாத நீங்களும் ஒரு நண்பரா?’’ என்று கடுகடுக்கிறார். கொடுப்பது தவறு. கொடுக்காவிட்டால் மனம் புண்படும்படி பேசுகிறார். இக்கட்டான நிலைமை. ‘‘வாங்கியதைக் கொடுக்காமல், மறுபடியும் எந்த முகத்தோடு வந்து கடன் கேட்கிறீர்கள்?’’ என்று கேட்க மனம் துடித்தாலும், வாய் கேட்க மறுக்கிறது. இது ரொம்ப சாதாரண நிலை. இதில் நிலைமையை எல்லோரும் சமாளித்து விடுவார்கள். சமாளித்தபின் எத்தனை பேரால் மனத்தின் அலைச்சலைச் சமாளிக்க முடியும்? மனம் அலைபாயாமல், சலனமற்றிருக்க வேண்டியதே அன்னை வழி என்றால், நமக்கு எத்தனை சதவிகித வெற்றி கிடைக்கும்? பாதையின் முதற் கட்டங்கள் இவை. போகப்போக வாழ்க்கை நம்மை சோதனை செய்யும் முறைகளைக் கவனித்தால், ஒன்று விளங்கும். அதாவது, ‘‘உனக்கு வெற்றியா, தோல்வியா?’’ என்பதை மட்டும் குறியாகக் கொண்டு வாழ்க்கை செயல்படுவது விளங்கும். வாழ்க்கையின் அந்தக் குறிக்கோளைப் புரிந்து கொண்டு, வாழ்க்கைக்கு வெற்றி அளிப்பதில்லை என்ற முடிவோடு செயல்பட்டால், சோதனையின் கடுமை குறையும்.

இந்த மாதிரி நிலை சிறிய காரியங்களிலிருந்து, பெரிய காரியங்கள் வரை தினமும் நிறைய வருவதால், அன்னையின் வழியை ஏற்றுக்கொண்டவுடன் ‘நாம் எப்படிச் செயல்படுவது? எந்த அளவுக்குப் பொறுமையாகவிருப்பது? எந்த அளவில் நின்று நாம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்?’ என்பன பற்றி எல்லாம் மனத்தில் ஒரு திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். பிறகு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும். அதை நிறைவேற்றிக் கொடுக்க அன்னைக்குப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

கல்யாண சம்பந்தம் பேசுகிறோம். சொத்து வாங்க விற்கப் பேரம் பேசுகிறோம். இது போன்று உத்தியோகம், அட்மிஷன், பணம் விஷயமாகப் பேச்சு வார்த்தைகள் நடக்கும் பொழுது, விஷயம் முடிந்து, கையெழுத்திட்டு, கையில் பணம் வரும் வரைக்கும், கழுத்தில் தாலி ஏறும் வரைக்கும், உத்தியோகத்திற்கு ஆர்டர் வந்து சேரும் வரைக்கும் மனம் நிலையில்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் நமக்கு வேண்டியவர்கள் குறுக்கே புகுந்து, ‘‘இது வேண்டாம்’’ என்று நாம் நம்பும்படியாக உபதேசம் செய்து கெடுப்பதுண்டு. அல்லது கொஞ்சம் அதிகமாகக் கேட்கச் சொல்லிப் பேரத்தைக் கெடுப்பதுண்டு. வேறு யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நம்முடைய அவசரத்தாலும் கெட்டுப்போவதுண்டு. பெரிய விஷயம், சிறிய பொருளில் ஒத்துப்போகாததால் கெட்டுப் போவதுண்டு. அனுபவமுள்ளவர் அனைவரும் அறிந்த விஷயமிது.

சில நபர்களுக்குப் பொதுவாக ஒரு வேலையைக் கெடுப்பதில் சந்தோஷம். நம் வாழ்க்கையில் அப்படிப்பட்டவர் ஒருவர் இருக்கலாம். நம்முடைய பெண்ணுக்கு ஒரு என்ஜினியர் மாப்பிள்ளையை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஒரு I.A.S. மாப்பிள்ளை அமைந்து, பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடையக் கூடிய கட்டத்தில், ‘கல்யாணத்தை சென்னையில் நடத்துவதா, திருச்சியில் வைப்பதா?’ என்ற பேச்சு வரும். அப்பொழுது, இவனுக்கு I.A.S. மாப்பிள்ளை கிடைக்க விடலாமா?’ என்று பொறாமையில் பொங்கும் நம் உறவினர், ‘‘திருச்சியில் வேண்டும் என்றால் சம்பந்தமே வேண்டாம்’’ என்று தோரணையில் பேசுவார். உடனே நாம் உஷாராகி விடுகிறோம். ‘‘இந்த மனிதரின் பேச்சைக் கேட்டால் காரியம் கெட்டுவிடும். காரியத்தைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடேயே இவர் இப்படிப் பேசுகிறார்’’ என்று நமக்குப் புரிந்துவிட்டால், பிறகு நாம் முழுவதுமாக மாறிவிடுகிறோம். ஒரு திடமான முடிவுக்கு வருகிறோம். ‘அவரை நம் வேலையைக் கெடுக்க விடுவதில்லை’ என்பதே முடிவு. அவர் சொல்வது ஒரு வேளை சரியாயிருக்கலாம்; முறையாயிருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். அதெல்லாம் பிரச்சனையில்லை. நாம் உஷாராகிவிட்டோம் என்பதுதான் முக்கியம். அதுபோல் வாழ்க்கை நம்மை சோதனை செய்யும். நாம் சத்தியத்தை மேற்கொண்டால், அன்னை வழியை மேற்கொண்டால், நம் குறை மூலம் செயல்பட்டு வேலையைக் கெடுக்கும். குறையை அகற்றினால், உன்னதமான கருத்து மூலம் செயல்பட்டு வேலையைக் கெடுக்கும். அது நம்மைப் பாதையிலிருந்து விலக்க மட்டுமே குறியுடன் செயல்படும். வாழ்க்கையின் அந்த குணத்தைக் கண்டுகொண்டு ‘அதற்கு நாம் பலியாவதில்லை’ என முடிவு செய்து நடந்தால் நமக்கு விஷயங்கள் கட்டுப்படும். அதுவரை நம்மைப் புளியம்பழத்தைப் போல உலுக்க நினைத்தவர்கள், ‘‘என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன். எதற்கும் அசையமாட்டேன் என்கிறான் மனிதன். சொரணையேயில்லை’’ என்று கடைசியாகச் சொல்லிப் பெருமூச்சு விட்டுவிட்டு நம்மையும் விட்டுவிடுவார்கள். இது நிறைவான ஒருமுறை; சாதாரண வாழ்க்கையில் சிறப்புமிக்க பெரியவர்கள் மட்டுமே கையாளக்கூடிய ஒன்று. நாம் அதைக் கைக்கொள்ள முடிவு செய்து முயன்றால் அன்னை அதை நமக்குப் பூர்த்தி செய்து கொடுப்பார். யோகச் சிறப்புள்ள உயர்ந்த வாழ்க்கை முறையாகும் அது. அன்னை சோதனை செய்வதே இல்லை, வாழ்க்கை சோதனை செய்யத் தவறுவதேயில்லை. நாம் நிதானமானால், அன்னை சோதனையில் வெற்றிபெற தவறாது உதவுவார். வாழ்க்கை செய்யும் சோதனையை நாம் தவறாக அன்னை சோதனை செய்கிறார் என்கிறோம்.

இதுபோன்ற ஒரு தெளிவான நிலைக்கு வந்த பின், ‘ஒவ்வொரு பெரிய காரியத்திலும், சிறிய காரியத்திலும், எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கலாம், எந்த அளவுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும், எதை விடக்கூடாது?’ என்று ஒரு திட்டமிட்ட வரையறையை ஏற்படுத்திச் சோதனை செய்துபார்த்து அதைப் பின்பற்ற வேண்டும். கூர்ந்து பார்த்தால் எல்லோருமே இதைச் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குறிக்கோளை (சுயநலம், மரியாதை, லாபம், நேர்மை, மானம் என்பன போன்ற பல வகையான குறிக்கோள்களை) நிறைவேற்றப் பின்பற்றும் முறையை நாம் அன்னையைப் பின்பற்றும் குறிக்கோளை மட்டும் நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இந்தப் பாதையை ஒருவர் ஏற்றுக்கொண்டால், நடைமுறையில் எப்படி இதை நிறைவேற்றுவது? பல கட்டங்களாகப் பிரித்து இதை விளக்கலாம்.

‘வெறுப்பு, பொறாமை, பிறர் மனம் புண்படப் பேசுதல், சுயநலம் ஆகியவை விட்டொழிக்கப்பட வேண்டியவை என நாம் ஒத்துக் கொள்வோம். செய்து பார்த்தால் 90, 95 விழுக்காடுகளுக்கு மேல் இவற்றைச் சாதிப்பது கடினம் என்று தெரியும். நம்மவர்களிடம் வெறுப்பில்லாமல் இருக்கலாம். தலைமை ஆபீஸூக்குச் சென்று உள்ளுரிலேயே 20 வருஷமாக இருக்கும் நம்மை மாற்றச் சொல்லி முயற்சி செய்பவர் மீது வெறுப்பில்லாமல் இருப்பது எளிதல்ல. பெரிய பெரிய இடத்துச் சம்பந்தம் கூடிவரும் சமயத்தில் அவர்கள் வீட்டாரைச் சந்தித்து ஒரு கதையைச் சொல்லி, சம்பந்தத்தை அறுத்துவிட்டவர் மீது வெறுப்பில்லாமல் இருப்பது கடினம். சுயநலமில்லாமல் இருக்கலாம். பல ஆண்டுகள் ஒரு ஸ்தாபனத்தில் தனியாக உழைத்து ஸ்தாபனம் பெரியதாகி, தலைமைப் பதவி நம்மை அடையும் தருணத்தில் உதவாக்கரை சுயநலமி ஒருவர், ‘நான் தலைவராக இருக்கிறேனே! என்னை நீங்கள் தலைவராகச் செய்யுங்களேன்!’ என்று கேட்கும் சமயத்தில் போனால் போகிறார் என்று பதவியை விட்டுக்கொடுக்க மனம் வருகிறதா, ஏன் வரவில்லை? சுயநலம்! சுயநலம் தவறு என்று தெரிகிறது. அதற்காக நியாயமாக அடைய வேண்டிய ஒரு பதவியை விட்டுக்கொடுக்க முடிகிறதா? முடியாது. தூசியைத் துடைப்பது போலச் சுயநலத்தைத் துடைத்துவிட்டு, பதவியையும் விட்டுக் கொடுப்பது கடினம்.

இவை எல்லாவற்றையும் முழுவதுமாக விட முடியவில்லை என்றால், ஏதாவது ஒன்றை முழுமையாக விலக்க முயல வேண்டும். அதுவே ஆரம்பம்.

மேலே சொல்லியது குறைகளை விலக்குதல். அடுத்த கட்டத்தில் ஒரு நல்ல விஷயத்தைப் புதியதாக ஏற்றுக் கொள்ளுதல். அப்படிப்பட்டவை அநேகம். 1) எப்பொழுதும் பிறர் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். 2) ஒருவர் பேசும் போது கவனமாகவும், அக்கறையாகவும், முழுமையாகவும் கேட்கப் பழகிக் கொள்ளவேண்டும். 3) எக்காரணத்தைக் கொண்டும் இனிமையாக இருப்பதைக் கை விடக்கூடாது. 4) தன்னலம் இருந்தால் அக்காரியத்தைக் செய்யக்கூடாது. 5) பிறருக்கு நல்லது செய்ய சந்தர்ப்பம் வந்தால், தவறாது அதைச் செய்ய வேண்டும். 6) அறிவில்லாமல் ஒருவர் ஆத்திரத்தைக் கிளப்பினால், ஆத்திரப்படக் கூடாது. 7) வேண்டுமென்றே எரிச்சலைக் கிளப்பினால், அவருக்கு வெற்றி கிடைக்கும் வகையில் நாம் எரிச்சல்படக் கூடாது. இவை போல இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

நேரத்தில் வருவது, மேஜை, அறை, வீடு, ஆபீஸ் ஆகிய இடங்களைத் தூசியில்லாமல் எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது, அடுக்கி அழகாக வைத்துக் கொள்வது, தவறாமல் பணிகளை நினைவாகச் செய்வது போன்ற பல செயல்கள் நினைப்பதற்கு எளிதானவை. செய்வதற்குக் கஷ்டமானவை. முன் கட்டு அழகாக இருந்தால், பின்கட்டு குப்பையாக இருக்கும். மேஜை ஒழுங்காக அடுக்கியிருந்தால், டிராயர் உள்ளே கலைந்து கிடக்கும். பார்வையில் உள்ள இடங்களே சில நாட்கள்தாம் சுத்தமாக இருக்கும். எல்லா நாட்களிலும், எல்லா இடங்களையும், எந்த வகையிலும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருப்பது தெய்வீகத்திறமை. Cleanliness is next only to Godliness என்பது பழமொழி. சுத்தம் தெய்வீகத்திற்கு அடுத்தபடியானது.

தெய்வ நம்பிக்கை, அன்னை மீது நம்பிக்கை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அன்னையிடம் பொறுப்பினை முழுவதுமாகக் கொடுத்துவிட்டு, முயற்சியை மட்டும், வேலைகளை மட்டும் நாம் சிறப்பாகச் செய்யப் பழகிக் கொள்ளுதல் ஒரு பெரிய தவ முயற்சி. பலித்தால் புண்ணியம். அதுவும் பலிக்க அன்னைக்கு மற்றும் ஒரு பிரார்த்தனை செய்யலாம்.

சாதாரண மனிதன் சௌகரியமும், சந்தோஷமும் தேடுகின்றான். இது விஷயத்தில் எல்லோருமே சாதாரண மனிதர்கள்தாம். யோகத்தை, சன்னியாசத்தை மேற்கொண்டவர்களை விலக்கினால், மற்ற எல்லா மனிதர்களும் இந்தத் தலைப்பில் வருவார்கள்.

சௌகரியம் தேவைப்பட்டால் அன்னைக்கு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய். அது போதும். அதையும் முறையாகச் செய்ய வேண்டுமானால் எதற்காகப் பிரார்த்தனை செய்கிறாயோ, அவ்விஷயத்தில் உன் கடமைகளை, பொறுப்புகளை திறமையுடனும், கருத்தாகவும், கவனமாகவும் பூர்த்தி செய்து விட்டுப் பிரார்த்தனை செய்தல் நலம். இவ்வாறு உன் பங்கைச் செய்தபின், நம்பிக்கையே பிரார்த்தனையில்லாமல் உன் கோரிக்கையைப் பூர்த்தி செய்யும். நம்பிக்கையின் அடிப்படையில் கடமைகளைச் சரிவரச் செய்தபின் பிரார்த்தனை செய்தால், காரியங்கள் பூரணமாகப் பூர்த்தியாவதுடன் மற்றும் ஒரு விசேஷம்.

கடமையைச் செய்யாமல் செய்யும் பிரார்த்தனை பூர்த்தியானால் மனித வாழ்வு சௌகரியம் பெறுகிறது என்று அர்த்தம். நம்பிக்கையோடு செயல்பட்டு பிரார்த்தனை செய்யாமலிருந்து அன்னையே காரியத்தைப் பூர்த்தி செய்தால், நாம் காரியங்களைப் பூர்த்தி செய்து கொள்வதை விட நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதில் முனைந்துள்ளோம் என்று பொருள். நம்பிக்கை, சிறந்த செயல், பிரார்த்தனை ஆகிய மூன்றும் அமைந்து செயல் அழகாகப் பூர்த்தியானால் அன்னையின் தெய்வீக வாழ்வை மனித சமுதாயத்தில் நிலைப்படுத்த நாம் இந்த ஒரு விஷயத்தில் கருவியாக இருக்கிறோம் என்றாகும்.

சந்தோஷம் தேவைப்பட்டால் நெகிழ்ந்த உணர்ச்சியுடன் பிரார்த்தனை செய்தால், சந்தோஷம் மனத்தில் பொங்கி நிறைந்து வழியும். சௌகரியமும் சந்தோஷமுமிருந்தால் அநேகமாக வாழ்க்கை பூர்த்தியாகி விடுகிறது. மேலும் முன்னேற ஒருவர் விரும்பினால், அவர்களுக்கும் பல நிலைகளில் உள்ள யோசனைகளைக் கொடுக்கலாம். மேற்சொன்ன இரு முறைகளையும் தொடர்ந்தால், கீழ்க்கண்டவை படிப்படியாகக் கிடைக்கும்.

  1. இன்றுள்ள நிலையில் தொடர்ந்து நிரந்தர வெற்றி கிடைக்குமாறு செயல்படுவது முதற்படியான முன்னேற்றம்.
  2. சீக்கிரமே முன்னேற்றமடைந்து கடைசியில் கிடைக்கும் பலன் ஆரம்பத்திலேயே கிடைக்கும் வகையில் செயல்படுவது அடுத்த கட்டம். (இவை இரண்டும் இருக்கும் நிலையிலேயே கிடைக்கும் பலன்கள்).
  3. நாமிருக்கும் நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும் பலன். (கிளார்க் ஆபீஸராவது, டிரைவர் ஓனராவது, குத்தகைக்காரன் சொந்த நிலம் வாங்குவது, தொண்டன் தலைவனாவது போன்றவை).
  4. தாழ்ந்த நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைக்குப் போவது. (சிறிய ஊரில் ஜவுளிக்கடை வைத்திருந்தவர் மில் முதலாளி ஆவது, முதல்முறை எம்.எல்.ஏ. ஆனவர் முதல் அமைச்சர் பதவியைப் பிடிப்பது).
  5. ஒவ்வொரு கட்டத்திலும் பல நிலைகள் உள்ளன. அது போல் பல கட்டங்கள் இருக்கின்றன. ஓர் அரசியல்வாதி முனிசிபாலிட்டியில் வேலை செய்தால் முனிசிபல் அரசியலில் உறுப்பினர், குழு உறுப்பினர், உதவித் தலைவர் என பல கட்டங்கள் உள்ளன. அடுத்தாற்போல் மாநில அரசியல் என்று ஒரு கட்டம். அதில் இதே போல் பல நிலைகள். அதற்கும் மேல் மத்திய அரசியல். அரசியல் வாழ்க்கை பல கட்டங்களையும், ஒவ்வொரு கட்டத்தில் பல நிலைகளையும் கொண்டது. அதே போல் எல்லாப் பகுதிகளிலும் வாழ்க்கை அமைந்துள்ளது.

ஒரு கட்டத்தில் கீழிருந்து மேலேவந்து அது முடிந்தவுடன், அடுத்த கட்டத்திற்குத் தவறாது செல்லும்படியான முன்னேற்றம் அடுத்த வகையான முன்னேற்றம்.

இந்த ஐந்து வகையான முன்னேற்றங்களையும் அடைய, ஒவ்வொரு வகைக்கும் உரிய முறையைக் கீழே தருகிறேன்.

  1. அன்னையின் மீது பக்தியையும் நினைவையும் தொடர்ந்து நிலைப்படுத்திக்கொண்டால், முதல் வகை முன்னேற்றம் கிடைக்கும்.
  2. உன் கடமையைச் சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் செய்தால் இரண்டாம் வகை முன்னேற்றம் பலிக்கும்.
  3. பொதுவாக அன்னையை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்.
  4. உன் வாழ்க்கையின் அம்சங்களில், குறிப்பாக நீ முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் வாழ்க்கைத் துறைகளில் அன்னையைப் பூரணமாக ஏற்றுக்கொள்.
  5. அன்னையைப் பூரணமாக ஏற்றுக்கொண்டபின் உன் திறமைகளையும் ஆர்வத்தையும் சமர்ப்பணம் செய்து, அன்னை உன் வாழ்வில் பெரிய அளவில் விரிந்து செயல்படுவதற்கு இசைவாக அன்னையை ஏற்றுக்கொள்.

**********book | by Dr. Radut