Skip to Content

16. இயற்கை

இயற்கை

யோக பாஷையில் பிரகிருதியையே ‘இயற்கை’ எனக் குறிப்பிடுவார்கள். வாழ்க்கையில் ‘இயற்கை’ என்று சொல்லும் பொழுது செடி, கொடி, மழை, ஆறு, குளம், வெட்ப தட்ப நிலை போன்று மனிதனால் செய்யப்படாமல் தானே உற்பத்தியானவற்றைக் குறிக்கிறோம்.

தன் வாழ்க்கையில் அன்னை இயற்கையுடன் ஒன்றிச் செயல்பட்டு, அனுபவித்தவை பல நிகழ்ச்சிகள். தன் அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தால், ஒரு தென்னை மரத்தின் குருத்து அன்னைக்கு நேராகத் தெரியும். பாளை வெடித்து, பூ மலர்ந்து, கொட்டி, பிஞ்சு விட்டுக் காய்த்து, முற்றி, தானே தேங்காய் மரத்திலிருந்து கீழே விழும் வரை அன்னை அம்மரத்தின் பல்வேறு நிலைகளை ஆர்வமாகக் கவனித்து மகிழ்ந்திருக்கிறார். மரம் மலர்ந்து கருவுற்று, பிஞ்சு விடும் நேரத்தை ஒரு சாதகருக்கு விளக்கிச் சொற்பொழிவாற்றினார். ஒரு கலைஞனும் விஞ்ஞானியும் கலந்து சிறந்துணர்ந்த உணர்ச்சிமிக்க ஞானப் பெருக்காக அது அமைந்துள்ளது. இயல்பாக அன்னை இயற்கையுடன் ஒன்றிவிடுதல் வழக்கம்.

மழைக்காக பக்தர்கள் கூடிப் பிரார்த்தனை செய்தால் மழை உடனே பெய்வது வழக்கம். புயல் அடிக்கப்போவதை அறிந்து புயலை விலக்கப் பிரார்த்தனை செய்தால், புயல் விலகிப் போவதை பல அன்பர்கள் விவரமாக வியப்புடன் வர்ணித்திருக்கிறார்கள். ஓர் அன்பர் புயலின் உற்பத்தியை விவரமாகப் படித்தவர். கடலில் புயல் எப்படி உருவாகிறது, தன் போக்கை நிர்ணயிக்கும் சக்திகள் எவை என்பவையெல்லாம் அவருக்குப் பாடமாகக் கல்லூரியில் அமைந்தன. அவர் அடிக்கடி புயலைப் பற்றிய விவரங்களை விளக்குவது வழக்கம். அதில் ‘eye of cyclone என்பதே புயலின் கரு’ என்று சொல்வார். ஒரு முறை புயல் உருவாகிக் கொண்டிருந்த சமயம். இவர் வழக்கமான தோரணையில் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அன்னையைப் பற்றி உள்ளுணர்வோடுள்ள அன்பர் ஒருவர், அவரிடம், ‘அன்னையின் ஒளி eye of cycloneனில் பட்டால், புயல் கரைந்து விடும்’’ என அபிப்பிராயம் தெரிவித்தார். அம்முறை அதைச் சோதித்துப் பார்த்ததில், அது உண்மை எனத் தெரிந்தது.

ஒரு நாள் புயல் வருவது போல் காற்றடிக்கத் தொடங்கியது. சென்னையிலிருந்து ஓர் அன்பர் பாண்டிச்சேரிக்கு நண்பருடன் டெலிபோனில் பேசிய பொழுது, வியாபார விஷயங்களிடையே புயலைப் பற்றியும் பேசிக்கொண்டார்கள். இருவரும் புயலால் பாதிக்கப்படக் கூடிய தொழில் உடையவர்கள் இல்லை. பொதுவாக நிலைமையை அறியும் பழக்கம் தான். சென்னையில் காற்று மிக வேகமாக அடிப்பதாக அன்பர் சொன்னார். புதுவை நண்பர் அன்றிரவு வெகுநேரம் தூங்காமல் தன் வேலையைச் செய்து கொண்டிருந்த பொழுது, ‘புயலின் பயங்கரம் அதிகமாக இருக்கும்’ என்று உணர்ந்தார். ரேடியோவிலும் அது போன்ற செய்தி அறிவிக்கப்பட்டது. நண்பர் புயல் விலகப் பிரார்த்தனை ஆரம்பித்தவுடன், காற்றின் வேகம் அதிகமாயிற்று. அது பயங்கரப் புயலுக்கு அறிகுறி. வேலையை நிறுத்திவிட்டு புயலைக் கவனிக்க ஆரம்பித்தார் அவர். ஒரு மணி நேரத்திற்குப் பின் புயல் அவர் மனத்தில் கட்டுப்பட்டது. பிறகு தூங்கி விட்டார். மறுநாள் காலையில் புயல் நகர்ந்து விட்டதாக ரேடியோச் செய்தி! சென்னை அன்பர், புதுவை நண்பரைக் காலையில் போனில் கூப்பிட்டு, ‘‘புயலைக் கட்டுப்படுத்த நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா?’’ என்று கேட்டார். ‘அவர் ஏன் அப்படிக் கேட்கிறார்?’ என இவருக்குப் புரியவில்லை. தான் செய்ததைச் சென்னார்.

மற்றொரு சமயம் புயல் அடித்து ஓய்ந்ததும், ஒரு தொழில் அதிபர் தான் ஏற்படுத்திய 3 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள ஒரு மிகப் பிரம்மாண்டமான விளம்பரப் பலகை என்ன ஆயிற்று என்று பார்க்கப் போனார். வழியெல்லாம் புயலின் அமர்க்களம். விளம்பரப் பலகையை நெருங்கும் பொழுது, அந்தப் பலகையைத் தாங்கிக் கொண்டிருந்த தண்டவாளங்கள் மட்டுமே வளைக்கப்பட்டிருந்தன. இத்தனை ஆர்ப்பாட்டத்திற்கும் நடுவில் விளம்பரப் பலகை சேதமில்லாமல் நன்றாக இருந்ததை அவரால் நம்ப முடியவில்லை. 300 ரூபாய் பெறுமானத் தகடு உடைந்தது மட்டுமே சேதம்.

அந்தத் தொழில் அதிபர் அன்னையின் அன்பர். அவர் செய்து கொண்ட பிரார்த்தனையால், மூன்று லட்சம் ரூபாய் நஷ்டத்தில் முடிந்திருக்க வேண்டிய ஒரு புயல் சேதத்தை, முன்னூறு ரூபாய் அளவில் குறைத்துவிட்டார் அன்னை.

அமெரிக்க சாதகர் ஒருவர், இவர் எதைச் செய்தாலும் தீவிரமாகச் செய்வார். கொஞ்ச நாள் கழித்து அதை விட்டு மற்றொன்றைச் செய்வார். சாதனையை ஒரு சமயம் தீவிரமாகக் கருதி மற்றெல்லாவற்றையும் இரண்டாம் பட்சமாக்கினார். ஸ்ரீ அரவிந்தர் எழுதிய காயத்திரி மந்திர ஜபத்தை ஆரம்பித்தார். இந்த ஜபம் செய்பவர்களில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு 500, 600-க்கு மேல் சொல்ல முடிவதில்லை. வேத விற்பன்னர் ஒருவர் ஆசிரமம் வந்தபொழுது ஸ்ரீ அரவிந்தர் காயத்ரி மந்திரத்தை 1000 முறை சொல்வதைப் பற்றி கேள்விப்பட்டார். தானும் செய்து பார்த்தார். 700-க்கு மேல் சொல்ல முடியவில்லை அவரால். இந்த அமெரிக்க சாதகர் நாற்காலியில் உட்கார்ந்து காயத்ரி ஜபம் சொல்ல ஆரம்பித்தால், சிலை போல் ஆகிவிடுவார். 6 மணிநேரம் அசையாமல், ஜபம் செய்வார். ஒரு முறை 1000-க்கு மேல் காயத்ரியைச் சொன்னார். இதயத்தில் சூரியன் தெரிந்தது. தலையில் சூரியன் தெரிகிறது. நிறுத்தாமல் தொடர்ந்து சொன்னார். இந்தியாவுக்கு வந்தார். ஜபத்தைத் தொடர்ந்தார். அது பங்குனி மாதம். வெயில் கோடையே குமுறி வெடித்தது போலப் பற்றி எரிந்தது. தான் காயத்திரி ஜபம் செய்வதற்கும் வெயிலின் கடுமை அதிகரிப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என இவருக்கு ஐயம் ஏற்பட்டது. ஜபத்தை நிறுத்தினார். வெயில் கடுமை குறைந்து வழக்கம் போல் ஆகிவிட்டது. காயத்ரி இவரை விடவில்லை. தானே இவருள் சொல்ல ஆரம்பித்தது. உடனே வெயிலின் கடுமை அதிகமானதைக் கண்டார். இவர் ஜபத்தை நிறுத்தினாலும், அது தானாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டது! இவரால் காயத்ரி தானே சொல்வதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வெயிலுக்கும், ஜபத்திற்கும் தொடர்புள்ளதைக் கவனித்து, முயன்று, காயத்திரியை விட்டுவிட்டார். வெயில் கடுமையும் குறைந்தது.

**********



book | by Dr. Radut