Skip to Content

26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்

மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்

அன்னை ஒளி மயமானவர்கள். அன்னையின் தலையில் வட்டமான வெண் ஒளி கிரீடம் வைத்தாற் போலவும், 12 பந்துகள் தன் மேல் பொருத்தப்பட்டுள்ளது போலவும் உள்ளது. மனித வாழ்வு ஆசைகளாலும், பொய்மையாலும், இருளாலும் சூழப்பட்டது. ஒளிமயமான யோக வாழ்க்கையை அன்னை மனிதனுக்கு வழங்குகிறார். அதை ஏற்று அவ்வாழ்வின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஒருபடி எடுத்து வைக்கும் அன்பர்கள் பலர். அவர்களுக்கான முறைகள் எல்லாம் யோக முறைகள். அவை ஆர்வம் (aspiration), வேண்டாததை விலக்குதல் (rejection), சரணாகதி (surrender), மனத்தை ஒரு நிலைப்படுத்துதல் (concentration), அன்னையின் நினைவு (remembrance), அன்னை நம்முள்ளே வந்து இருத்தல் (presence), திருவுருமாற்றம் (transformation), தியானம் (meditation) இவையெல்லாம் அன்பனை சாதகனாக்கி அவனை அன்னையிடம் அனுப்பும் முறைகள். Grace-அருள் அன்னை தானாகவே அன்பனிடம் வரும் வழி.

ஆர்வம்: அன்னையின் பெயரை உச்சரிக்க ஆரம்பித்து, மனத்தால் உச்சாடனம் செய்து; இருதயம் அதை அடுத்த கட்டத்தில் மேற்கொண்டு, சாதகனுடைய உச்சாடனத்தை அவன் அக வாழ்வு (inner being) தானே மேற்கொண்டு அன்னையை உள்ளிருந்து ஜீவன் இடையறாது அழைத்தல் ஆர்வத்திற்கு உரிய முறையாகும். அதாவது மனத்தால் தொடங்கிய முயற்சியை ஜீவனைக்கொண்டு நிறைவேற்றச் செய்வது ஆர்வமாகிறது.

தியானம்: சாதாரணமாக மனம் அன்னையில் லயித்து, மௌனத்தில் ஆழ்ந்து, சலனமிழந்து, பிரகாசம் பெற்று, ஜோதியால் நிரம்பி, மனிதத் தன்மையை விட்டகன்று, தெய்வத் தன்மையை அடைந்து, காலத்தைக் கடந்து தன் நிலை இழந்திருக்கும் தியானம், அன்னையின் கதவைத் திறந்து கொண்டு அவர்கள் பாதத்தில் பக்தனை தியானம் நிலைக்கும் வரை பதிக்கின்றது.

இடையறாத நினைவு: நினைவு அன்னையால் நிறைந்து, மனம் நெகிழ்ந்து, அகக் காட்சியில் அன்னை நிலைத்து, அகக் காட்சி புறக் காட்சியாகி, அன்னையைப் பொருட்கள் மீது கண்டு, கடைசியாகப் பொருட்களை அன்னையாகக் காணும் நினைவு, தெய்விக மணம் கமழும் தூய்மையான நினைவு.

திருவுருமாற்றம்: நம் செயல்களைப் பல கூறுகளாகப் பிரிக்கலாம். பிரித்த கூறுகளை மேலும் சிறு பகுதிகளாகப் பிரிக்கலாம். அப்படி ஒரு செயலை முழுவதுமாக ஆராய்ச்சி செய்து பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் பரிசீலனை செய்தால், ஒவ்வொன்றும் ஒரு மனித இயல்பைக் குறிக்கும். அவை சுயநலம், விருப்பு, வெறுப்பு, நம் சுபாவத்தின் மற்ற பகுதிகள் என்ற அளவில் இருக்கும். அன்னையை அடைய விரும்புபவன், மனித வாழ்வைத் தெய்வீக வாழ்வாக மாற்றத் தவம் செய்யும் சாதகன், அம்மனித இயல்புகளின் கூறுகள் ஒவ்வொன்றையும், தெய்வத் தன்மையின் கூறுகளாக மாற்ற முயன்று, மாறிச் செயல்படுதல், ‘திருவுருமாற்றம்’ எனப்படும். சுயநலத்தை தன்னலமற்றதாகவும், வெறுப்பை விருப்பாகவும், விருப்பை பற்றற்றதாகவும் மாற்றி, மீண்டும் அதே செயலைப் புதிய நோக்கோடு செய்தால், அச்செயலைப் பொறுத்தவரை திருவுருமாற்றம் நடக்கிறது.

ஒரு முழு நாளில் நாம் செய்த எல்லாக் காரியங்களையும் பட்டியலாக எடுத்து, மனிதத் தன்மையிலிருந்து அவற்றையெல்லாம் தெய்வத்தன்மையுடையதாக எப்படி மாற்றுவது என ஆராய்ந்து, தெளிந்து, அதன்படி செயல்பட முடிவு செய்து, வாழ்க்கையின் போக்கை மாற்ற முயல்வது திருவுருமாற்றமாகும்.

மனத்தை ஒரு நிலைப்படுத்துதல்: வெளியே கட்டு மீறி ஓடும் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதன் திசையைத் திருப்பி, உள்ளேயனுப்பி, அன்னையின் ஒளிமயமான கதவு திறந்து வழி விடும் வரை வாயிலிலேயே இருந்து காத்திருப்பது, ‘மனத்தை ஒரு நிலைப்படுத்துதல்’ (concentration) எனப்படும்.

சரணாகதி: மனத்தில் எழும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும், கிளர்ச்சிகளையும் முழுவதுமாக உள்ளொளிக்குச் சமர்ப்பிப்பது சரணாகதி மார்க்கமாகும்.

வேண்டாததை விலக்கல்: மன உறுதியுடன் மனிதத் தன்மையின் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் பூரணமாக விலக்குதல், சரணாகதியைப் பூர்த்தி செய்து அன்னையின் ஒளி வீட்டின் கதவைத் திறக்கும்.

**********



book | by Dr. Radut