Skip to Content

07. உடல் நலம், நோய், உடலின் தன்மை

உடல் நலம், நோய், உடலின் தன்மை

உடல் நோயுற்றபோது அவ்வுடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கிறது. ‘உடல் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள முடிவு செய்யும்வரை நோய் தீராது’ என ஸ்ரீ அரவிந்தர் சொல்லியிருக்கிறார். டாக்டர்கள் நம்மை வியாதியிலிருந்து குணப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அவர்கள் மீது நமக்குள்ள நம்பிக்கையே. சிலருக்கு, ‘தன்னுடைய வியாதி தீராது’ என்ற நம்பிக்கையிருப்பதுண்டு. அவர்களை அன்னை குணப்படுத்த முயன்றால் அவருடைய சக்தி திறனை இழந்து நிற்கும். வியாதியஸ்தனுடைய நம்பிக்கைக்கு வலுவுண்டு. அது பேரருளுடைய ஆற்றலையும் சிதைத்துவிடக் கூடியது.

அன்னைக்குப் பிரார்த்தனை செய்தவர்களில் சிலருக்கு அன்னையின் முயற்சியில்லாமலே குணமானதுண்டு. தன் வியாதியைக் குணப்படுத்தும்படி பிரார்த்தனை செய்தாலும், தனக்காக மற்றொருவரைப் பாதுகாக்க வேண்டிப் பிரார்த்தனை செய்தாலும் அன்னையின் அருள் கிட்டும்.

உணவைப் போல் நிம்மதியான தூக்கம் மனிதனுக்குத் தேவை. யோகம் முதிர்ச்சி அடைந்தால் ஒளிமயமான சாந்தம் (luminous peace) தூக்கத்திற்குப் பதிலாக நம்மை ஆட்கொள்ளும். தூங்குவதற்கு முன் ஒளி மயமான கூண்டு (cocoon) ஒன்றை நம்மைச் சுற்றிக் கற்பனை செய்தால், அது கற்பனையில் பலித்த பின் தூங்கினால், தூக்கம் சிறப்பாகவும், அமைதியாகவுமிருக்கும். எந்தக் கெட்ட கனவோ, மற்ற தொந்தரவுகளோ இருக்காது.

வலி அல்லது வியாதியுடையவர்களைக் குணப்படுத்த ஸ்ரீ அரவிந்தர் சம்மதித்தால் அவரது சக்தி வலியின் மீது பட்டு அதைக் கரைத்து விடும். சூட்சுமப் பார்வையுள்ளவர்கள் கண்களுக்கு ஸ்ரீ அரவிந்தர் கை நீல ஒளியுடன் தோன்றி, வலி இருக்கும் இடத்தில் தடவிக் கொடுப்பது தெரியும். சத்திய லோக சக்தியால் (Supramental Force) ஒரு வியாதி குணப்படுத்தப்பட்டால் அது மீண்டும் வராது. ஏனெனில், அது அப்போதைக்கு வியாதியைக் குணப்படுத்துவது மட்டுமல்ல; வியாதிக்குத் தோற்றுவாயாக உயிரிலும், உடலிலும், ஆத்மாவிலும் உள்ள குறைபாடுகளையும், கர்ம பலனையும் கரைத்து வியாதியைக் குணப்படுத்துவதால் வியாதி மீண்டும் வராது.

உடலில் ஒரு பகுதியில் சிறு வலியிருந்தால், நாம் அதைக் கவனித்தால் வலி அதிகமாகும். பிறரிடமோ அல்லது டாக்டரிடமோ காண்பித்தால் அது அதிகமாக வளரும். அணுக்கள் (Cells) தங்களை மிக முக்கியமாகக் கருதுகின்றன. நாம் வியாதியைப் பார்த்தாலும் அணு (செல்) அந்தக் கவனத்தைப் பெறுவதால், கவனம் அதிகமாக அதிகமாக வியாதியும் அதிகமாகும். ‘‘அணுக்கள் தங்களை முக்கியமாகக் கருதும் தன்மை வியாதிக்கு ஒரு காரணம்’’ என அன்னை கூறுகிறார். அதனால் ஏதாவது வியாதியைக் குணப்படுத்த வேண்டுமானால், அணுக்களை விளித்து, “Keep quiet, you stupid fools’’ (“மடையனே சும்மாயிரு!”) எனப் பலமுறை சொன்னால், வியாதி குணமடையும்’’ என அன்னை கூறுகிறார். இந்த முறையைப் பயன்படுத்தியவர்கள் பலனைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

*********



book | by Dr. Radut