Skip to Content

27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு

அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு

அன்னைக்கு, விலங்குகளுடைய உணர்ச்சி அது அவரிடம் நேரில் பேசுவது போலத் தெளிவாகத் தெரியும். மரங்களுடன் அன்னை பேசுவதுண்டு. ஜடப்பொருட்களான கட்டை, மரம், இரும்பு, போன்றவற்றின் மீதும் அன்னைக்கு அன்புண்டு. அந்த அன்பின் காரணமாக அன்னை அவற்றுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்வது வழக்கம்.

ஒரு நாள் அன்னை உணவுக்கூடத்தின் பொறுப்பாளரை அழைத்து, அங்குள்ள பட்டுப்போன ஒரு மாமரத்தைப் பற்றி விசாரித்தார். அவர், ‘‘அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திவிட வேண்டியது அவசியம். இன்னும் கொஞ்ச நாளில் செய்து விடுகிறேன்’’ என்று தன் கடமையிலிருந்து தவறிவிட்டது போன்ற உணர்வுடன் பேசினார். மேலும் மரத்தை வெட்ட ஏற்பாடெல்லாம் செய்துவிட்டதாகவும் கூறினார். அன்னை பலமாகச் சிரித்து விட்டு, ‘‘மரத்தை வெட்ட வேண்டாம். அதற்கு இன்னும் உயிர் இருக்கிறது. அது முழுவதுமாகப் பட்டுப் போகவில்லை. நேற்றிரவு அந்த மரம் என்னிடம் வந்து, ‘என்னை வெட்டப் போகிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்’ என முறையிட்டது. அதனால்தான் விசாரித்தேன். மரத்தை வெட்ட வேண்டாம்’’ என்றார்.

அதற்குப் பிறகு திட்டம் தலை கீழாக மாறி, மரத்தின் மீது கவனம் அதிகரித்து, அதன் மீது வைக்கோல் பிரிகளைச் சுற்றி வைத்து, தண்ணீரை மரத்தின் மீது வாரியிறைத்து, அதை வழிபடுவது போல் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது. மரம் தளிர்த்து, கிளை விட்டு வளர்ந்து, பூத்துக் காய்க்க ஆரம்பித்து விட்டது. இது 40 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. இன்றும் அந்த மாமரம் அன்னையின் அருளையும், அது அன்னையிடமிருந்து பெற்ற ஆயுள் வரத்தையும் விளக்குவது போன்று செழிப்பாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

ஆரோவில் நகரில் உள்ள பிரம்மாண்டமான அரச மரம் ஒன்று தன் வேதனையை அன்னையிடம் முறையிட்டது. அன்னை அங்கு ஒரு சாதகரை அனுப்பிப் பார்த்ததில், தன் மீது மரம் வெட்டுபவர்கள் ஒரு கோடாரியைக் குத்தி வைத்திருந்தார்கள் எனக் கண்டு, அதை அப்புறப்படுத்தி மரத்தின் வேதனையை அன்னை விலக்கினார்கள் என்பது, நம் அன்பர்கள் ஏற்கனவே தெரிந்து கொண்டிருக்கும் செய்திதான்.

ரோஜா மலர்கள் தம்மை மற்ற மலர்களுடன் சேர்த்து வைப்பதை விரும்புவதில்லை. ‘‘அவை தனித்திருக்கவே பிரியப்படுகின்றன. அவற்றுக்குள் போட்டி, பொறாமை எல்லாம் உண்டு’’ என அன்னை கூறுகிறார். மேலும், ‘‘தனியே ஒரு பெரிய ரோஜாவை ஒரு பாத்திரத்தில் வைத்தவுடன் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது’’ என்கிறார் அன்னை.

இவற்றை அன்னை தரும் செய்திகளாக மட்டும் கொள்ளாமல், செயல்களாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். தாவரங்களுக்கு உயிர் உண்டு; உணர்வு உண்டு. நாம் நினைப்பதைப் போல அவை ஜடம் இல்லை. இயற்கை வரமாக அளித்த செடி, கொடி, தாவரங்களை நேசித்து, அவற்றுக்கு உரிய கவனத்தை அளிக்கும் பொழுது அவை மகிழ்கின்றன. தம் மகிழ்வின் அடையாளமான பலன்களைக் கொடுப்பதற்கு அவை மிகவும் விரும்புகின்றன.

***********



book | by Dr. Radut