Skip to Content

12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை

அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை

அன்னையை ஒருவர் சந்தித்தால் அன்னை அவர்களது கண்களை உற்று நோக்குவார். கண்கள் மூலம் அவரது ஆத்மாவை அன்னை ஊடுருவி அடைகிறார். ஆத்மாவைத் திறந்து அங்கு தன் அவதாரச் சிறப்பான இந்த ஜீவியத்தின் ஒரு பொறியை ஊன்றி விடுகிறார். அதன் பின் அப்பொறி அன்னையின் பிரதிநிதியாக அவரது ஆத்மாவில் நின்று அவர் வாழ்க்கையை நடத்திச் செல்லும். அதுபற்றி அன்னை கூறுவார் ‘‘நான் ஒருவரை ஒரு கணம் சந்தித்தாலும் வாழ்நாள் முழுவதும் அவரது வாழ்க்கைப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.’’

அன்னை ஏதாவது ஒரு வேலையைச் செய்த கொண்டிருக்கும் பொழுது அடிக்கடி வேலை செய்வதை நிறுத்திவிட்டு எதையோ உற்றுக்கேட்பது போல நோக்கிக் கொண்டிருப்பார். எங்கிருந்தோ ஒரு பக்தர் அன்னையைப் பிரார்த்தித்து அவரை அழைத்தால், அக்குரல் அன்னையின் சூழலில் (Atmosphere) வந்து சேர்ந்தவுடன், அழைப்புக்கான பதில் திரும்பிச் செல்லும். பக்தர் பதிலைப் பெறுவார். அழைப்பு பொதுவாக இவ்விதமே அமையும். இது அன்னைக்குத் தெரிவதில்லை. அழைப்பு ஆர்வம் மிகுந்த ஒன்றானாலும், ஆபத்து நிறைந்த சூழ்நிலையிலிருந்து வந்த ஆழ்ந்த குரலானாலும் அது அன்னையின் காதிலே விழுவதுண்டு. அந்த வகையில் குரல் கேட்கும் பொழுது அன்னை ஒரு கணம் வேலையை நிறுத்திப் பதில் அனுப்பிவிட்டு மீண்டும் வேலையைத் தொடங்குவார். ஒரு நாள் இரவு 1 மணிக்கு மேல் அன்னை தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது அது போன்ற குரல் ஒன்று ஒலிப்பதைக் கேட்டு விழித்துப்பார்த்தார். யாரோ ஒருவர் தன் படுக்கையிலிருந்து எழுந்து நெஞ்சைப்பிடித்துக் கொண்டு கதவு வரை வந்து, கதவின் மீது சாய்ந்து கொண்டு தன்னைக் கூப்பிடுவது தெரிந்தது. யாரென்று அன்னைக்கு தெரியவில்லை. மறுநாள் லால் பகதூர் சாஸ்திரி இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. சில நாட்களுக்குப் பிறகு இறக்கும் தறுவாயில் சாஸ்திரியின் நிலையை அன்னைக்கு விளக்கிய பொழுது அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

மனிதன் ஒரு வகையில் ஆத்மாவின் பிழம்பானாலும், மற்றொரு வகையில் ஆசைகளின் பிடியில் வாழ்பவன். அவனுக்குள்ள ஆசைகளில் சில பிறருக்குத் தெரியும். பல ஆசைகள் பிறருக்குத் தெரிவதில்லை. ஆசைகளுக்கு அவன் மீதுள்ள பிடிப்பு ஆழமானது. அவனையும் அறியாமல் அவன் நெஞ்சத்தின் ஆழத்தில் சில ஆசைகள் உறைவதுண்டு. மனிதன் அறிந்த ஆசையைப் பற்றி அவன் பிறருக்கு விளக்கமாகச் சொல்வான். தானும் அறியாத, மனத்தின் ஆழத்திலுள்ள ஆசைகள் சூட்சும அலைகளாக எழுந்து அவனிடமிருந்து பரவும். ஒருவர் அன்னையைத் தரிசிக்க வந்தால், அவர் தன் குறைகளை சாதகர்கள் மூலம் அன்னைக்குச் சொல்வதுண்டு. எழுதியும் அனுப்புவதுண்டு. அன்னையைத் தரிசித்து வணங்கும் பொழுது மனத்தில் அந்தக் குறையை, ஆசையைப் பிரார்த்தனையாகத் தெளிவாக நினைப்பதுண்டு. ‘‘எனக்கு வேலை கிடைக்க வேண்டும்’’, ‘‘என் வழக்கு ஜெயிக்க வேண்டும்’’ என்பன போன்றவை அவை. அன்னையின் முன், அல்லது அவர்களது சமாதியின் முன் மனத்தில் தெளிவாக நினைத்த பிரச்சனைகள், தீரும் வேகத்தைப் பார்க்கும் பொழுது பக்தருக்கே வியப்பாக இருக்கும். இது போக, ஒருவருக்கு ஆழ்ந்து தன்னை ஆட்கொள்ளும் வகையில் ஒரு பிரச்சனையிருந்து, அதை அவர் அறிந்தாலும், அறியாவிட்டாலும், அன்னையிடம் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், வேறு ஒரு பிரச்சனையை அன்னையிடம் கூறினாலும், இத்தன்மையான மனிதர் ஆசிரமத்திலிருந்து வீட்டுக்குப் போனவுடன் தன் மனத்திலிருந்த நீண்ட நாள் பிரச்சனை தீர்ந்து போனதைக் காண்பார்.

மேலெழுந்த வாரியாக உள்ள எண்ணங்கள் சொல்லால் வெளிப்படுவது போல், ஆழ்ந்த உணர்ச்சிகள் சூட்சும அலைகளாக வெளிப்பட்டு, பரவி, அன்னையைத் தொட்டவுடன் அவற்றுக்கு பதில் கிடைத்துவிடும். சில சமயம் இது பக்தருக்குத் தெரியாதது போல் அன்னைக்கும் தெரிவதில்லை.

அன்னைக்குப் பிரார்த்தனை செய்யும்பொழுது பக்தன் செய்த பிரார்த்தனையை ஒதுக்கி, பக்தனுக்கு அதை விட முக்கியமாகத் தேவைப்படுவதைக் கொடுப்பதைப் போல் அன்னை பக்தனுடைய நம்பிக்கை எத்தகையதோ, அதற்கேற்பப் பரிகாரத்தை வழங்குவதும் வழக்கம். ஒரு பக்தருக்கு அன்னை மீது நம்பிக்கையுண்டு. ஆனால் வியாதி விஷயத்தில் மருந்து மேல் அதிக நம்பிக்கையுள்ளவராக இருந்து அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், அன்னை வியாதியை மருந்து மூலம் குணப்படுத்துகிறார். 10 வேளை சாப்பிட வேண்டிய மருந்து இரண்டு வேளையில் பலிக்கிறது. பக்தனுக்குப் பரிகாரம் கொடுப்பதே அன்னைக்கு முக்கியம். அவனது நம்பிக்கையை மாற்ற முயற்சி செய்வதில்லை. ‘நம்பிக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்ற நிபந்தனையையும் போடுவதில்லை.

அன்னையிடம் வந்தபின் குல தெய்வ வழிபாட்டைப் பலர் தொடர்ந்து வருகிறார்கள். அன்னைக்கு அது தவறாகவோ, முறையற்றதாகவோ தோன்றுவதில்லை. அன்னையிடம் செய்யும் பிரார்த்தனையை, அன்னை மருந்து மூலமாக வியாதியைக் குணப்படுத்துதல் போல், தான் நேரில் பரிகாரத்தை அளிக்காமல், குல தெய்வத்தின் மூலமாகக் கொடுப்பார். மருந்தின் மேல் நம்பிக்கையிருப்பதைப் போல், குல தெய்வ நம்பிக்கையைப் போல், நேர்மையிலும், சட்டத்திலும், செல்வாக்கிலும், அந்தஸ்த்திலும், வேறுபல விஷயங்களிலும் மனிதனுக்கு நம்பிக்கையுண்டு. அக்காலத்தில், அன்னை அவரவர்கள் நம்பிக்கை மூலம் செயல்படுவது வழக்கம். அத்தகைய அன்பர்கள் இதுவரை அனுபவமில்லாத விஷயங்களை ஆரம்பித்து அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், பலன் வெள்ளமாக வரும். ‘‘இதுவரை நான் எத்தனையோ பிரார்த்தனைகள் செய்திருக்கிறேன். பலன் பெற்றிருக்கிறேன். இது போல் பிரவாகமாய் பலனைப் பார்த்ததில்லை; கேட்டதில்லை’’ என அவர்கள் சொல்வதுண்டு. அதற்கு காரணம், இது விஷயத்தில் ‘அன்னைக்கும் அவருக்கும் இடையே எதுவும் இல்லை’ என்பதாகும்.

பக்தருக்கு ஒரு பிரச்சனையிருக்கும். சமயத்தில் அது பக்தருக்கே தெரியாது. அல்லது ஒரு பிரச்சனை ஓரிரு நாள் கழித்து வர இருக்கும். அது பக்தருக்குத் தெரிய முடியாது. அது போன்ற சமயங்களில் நாளைக்கு வரும் பிரச்சனையைத் தீர்க்க, பிரச்சனை வந்த பின் எதை நாம் நாடுவோமோ, அதை அன்னை இன்றே நமக்கு அனுப்பி வைப்பார். ‘‘நல்ல வேளை இது வந்தது. இது இல்லையென்றால் நாம் என்னாவது? தெய்வ சங்கல்பம். முன் கூட்டியே தெய்வம் காப்பாற்றி விட்டது’’ என்று சொல்லும் வகையில், பிரார்த்தனை செய்யாத பிரச்சனைகளை அன்னை தீர்ப்பதுண்டு.

சில பிரச்சனைகள் நீண்ட நாள் பட்டதாக இருக்கும். ஆரம்பமே சிக்கலாகவும், சிக்கல்கள் பெரும் சிக்கலாக மாறி, உருண்டு திரண்டு பயங்கர ரூபத்தில் வந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து, நிதானமாக முழுவதும் சிக்கல் அவிழும் பொழுது, பிரச்சனைக்கு உரியவர்களுக்குத் திகைப்பாக இருக்கும். வேறு சில சமயங்களில் இதுபோன்ற பெரும் சிக்கல்கள் நிறைந்த பிரச்சனையை அன்னையிடம் முறையிடும் பொழுது நிகழ்ச்சிகள் புதிய பாணியில் நடக்க ஆரம்பிக்கும். நம் பிரச்சனையின் எல்லா அம்சங்களையும், தானே தீர்க்க ஆண்டவன் கங்கணம் கட்டிக்கொண்டதுபோல், ‘ஒவ்வொர் அம்சத்தையும் தீர்க்க ஒரு சந்தர்ப்பம்’ என்பது போல், பல புதிய சந்தர்ப்பங்கள் ஒரே சமயத்தில் எழுந்து பிரச்சனையின் எல்லாச் சிக்கல்களையும் ஒன்று விடாமல் அவிழ்த்து, சிரமம் இருந்த இடம் தெரியாமல் செய்வதுண்டு. 1969, ஜனவரியில் சத்திய ஜீவன் (Superman) அன்னை முன் வந்து காட்சியளித்த பின், அதன் செயல் சில சமயங்களில் சில அன்பர்கள் வாழ்க்கையில் நடைபெறுகிறது. அதன் பின் தனக்கு வரும் கடிதங்கள் இத்தகைய நிகழ்ச்சிகளை விளக்குகின்றன என அன்னை கூறுகிறார். ‘‘மரணப் படுக்கையிலுள்ளவர்களில் பலர் எக்காரணமுமின்றி தானே உயிர் பெற்றெழுந்ததாகக் கடிதங்கள் வந்தபடி இருக்கின்றன’’ என்கிறார் அன்னை.

அன்னையை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வதில் பல கட்டங்கள், பல நிலைகள் இருக்கின்றன.

  1. ஏதாவது ஒரு சமயம் அன்னையை நினைப்பது, எப்பொழுதாவது ஆசிரமம் வருவது என்ற நிலையில் உள்ளவர்களையே casual visitors என்கிறோம்.
  2. முக்கியமான வேலையானாலும், பிரச்சனையானாலும், அன்னையை நம்பிச் செயல்படுபவர்கள் அடுத்த கட்டத்தைச் சேர்ந்தவர் (devotees).
  3. தவறாமல் அன்னையை நினைப்பவர்கள், தவறாமல் ஆசிரமம் வருபவர்கள், பலன் கருதாமல் செயல்படுபவர்கள் (regular visitors).
  4. ஆத்மீக முன்னேற்றத்திற்காகப் பிரார்த்தனை செய்பவர் (sadhak).
  5. அன்னைக்குப் பிடித்த காரியங்களை அன்னைக்குப் பிடிக்கும் என்ற ஒரு காரணத்திற்காகச் செய்பவர்கள் (devout persons).
  6. அன்னைக்குப் பிடிக்காத விஷயங்களை அடியோடு புறக்கணிக்கும் பக்தர் (disciplined devotee).
  7. அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் தன் நடைமுறையை (behaviour) மாற்றிக் கொள்ள முன் வருபவர்.
  8. அன்னையை அளவுகடந்து ஏற்றுக்கொள்ள வேண்டி தன் சுபாவத்தை (character) மாற்றிக்கொள்ள முயற்சி செய்யும் சாதகர்.
  9. அன்னையைப் பூரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டி தன் சுபாவத்தின் (character) பிறப்பிடமாகிய ஜீவியத்தை (consciousness) மாற்றிக்கொள்ளப் பெரு முயற்சி செய்யும் யோகி.

இதெல்லாம் போக உயர்ந்த நிலையில் தன் போக்கில் அன்னைக்காக தன்னை அர்ப்பணித்து i. பலன் கருதாமல் கடமைகளைச் செய்பவர்கள். ii. அன்னையை மட்டும் நம்பி வாழ்பவர்கள். iii. பிரார்த்தனையே செய்யாதவர்கள் ஆகியவர் உண்டு.

அன்னையின் குழந்தை அன்னையுடன் ஐக்கியமாவதையே இலட்சியமாகக் கொண்டு ஜீவிக்கின்றது. அது போன்ற உள்ளம் உடையவர்களும் உண்டு.

**********book | by Dr. Radut