Skip to Content

14. இந்தியா

இந்தியா

‘‘இந்தியா புண்ணிய பூமி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆத்மிகம் வளர்ந்த நாடு. உலகத்தின் குரு. பலமாக வளர்ந்து பெருமையுற்று உலகத்தின் தலைமை வகிக்கக் கூடிய நாடு இந்தியா ஒன்றே. ஆங்கிலேயர்கள் இங்கு வந்து அளவு கடந்து தங்கிவிட்டார்கள். அவர்களோடு தொடர்புள்ள இந்தியா 30% அழகை இழந்தது. இன்னும் 70 சதம் அவர்களுடைய தொடர்பால் பாதிக்கப்படாமலிருக்கிறது. மேலை நாடுகளை இந்தியா பின்பற்றக் கூடாது. இந்தியாவின் தலைமையை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திய விவசாயிக்கு ஐரோப்பிய மேதையை விட ஆத்மீகம் புரியும். ஆண்டவனுக்கு அந்த மேதையை விட இந்திய விவசாயியே உகந்த புதல்வன். இந்தியர்களுக்கு சுபாவத்திலேயே ஆத்மீகத்தைப் பொறுத்த வரை எது சரி, எது தப்பு என்ற உள்ளுணர்வு உண்டு’’ என்றெல்லாம் அன்னை இந்தியாவின் ஆத்மீகப் பெருமையை உலகம் அறியுமாறு கூறியுள்ளார்.

அன்னை முதலில் இங்கு வந்தபொழுது ஸ்ரீ அரவிந்தரிடம் கலந்தாலோசித்த விஷயங்கள் பல. அவற்றுள் முக்கியமானது இந்திய விடுதலை. 1914-இல் அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் ‘இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது’ என்று சூட்சம தரிசனத்தில் தான் கண்டதைச் சொன்னார். 1930-இல் பெரும் தலைவர்கள் காங்கிரஸை நடத்தி வந்த பொழுது ஜவஹர்லால் நேருவை ஓர் உற்சாகமான இளைஞராகக் கருதுவார்கள். காங்கிரஸ் தலைவர்களுடைய போட்டோ ஒன்றை அன்னை பார்த்த பொழுது நேருவைச் சுட்டிக்காட்டி, ‘‘அது யார்?’’ என விசாரித்தார்கள். பின்னர் நேரு எதிர் காலத்தில் இந்தியத் தலைவராக வருவார்’’ என்று அன்னை கூறியதை, அன்று யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்னை இந்தியப் பிரஜா உரிமைக்காக விண்ணப்பித்தார். பிரான்சு நாட்டுப் பிரஜா உரிமையை ராஜினாமாச் செய்த பின்னரே இந்தியப் பிரஜா உரிமையைக் கொடுக்கச் சட்டம் உள்ளது. அன்னை இரு நாட்டுப் பிரஜையாகவும் இருக்க விரும்பினார். இந்திய சர்க்கார் அன்னையின் விருப்பத்தை ஏற்று இந்தியப் பிரஜா உரிமையை வழங்கிற்று.

1947-இல் ஸ்ரீ அரவிந்தர், ‘‘மீண்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்று சேரும்’’ என்றார்.

எல்லா இந்தியப் பிரதமர்களும் அன்னையைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்கள். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அன்னையை நாடி ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்கள்.

Mother as a disciplinarian
கட்டுப்பாடு

‘Discipline’ - கட்டுப்பாடு என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஒழுங்கு, கட்டுப்பாடு இல்லாமல் எதையும் செய்ய முடியாது. ஒழுங்கும், கட்டுப்பாடும் இல்லாவிட்டால், மற்ற எந்த ஒரு விஷயத்தாலும் - செல்வாக்கு, அந்தஸ்த்து, பணம், அறிவு போன்றவற்றால் - சரிக்கட்ட முடியாது. அன்னையின் தாயார் உயர்ந்த வைராக்கியமான கட்டுப்பாட்டில் குழந்தைகளை வளர்த்தார். அன்னையின் சிறப்பான வாழ்வுக்கு அந்தக் கட்டுப்பாடு அஸ்திவாரமாக அமைந்தது.

கட்டுப்பாடு பல வகை. பெரியவர்கள் சிறியவர்களை அடக்கும் கட்டுப்பாடு; சர்க்கார் சட்டத்தால் ஏற்படுத்தும் கட்டுப்பாடு; சமூகம் தன் உறுப்பனர்களிடம் அமுல் செய்யும் கட்டுப்பாடு போன்ற ஏராளமானவை உண்டு. இவை வெளியிலிருந்து வந்து மனிதனைக் கட்டுப்படுத்தும் புறக் கட்டுப்பாடுகளாகும். இந்தக் கட்டுப்பாடு அவசியம். பெரும்பலன் தரத் தக்கது. வாழ்க்கையை வளப்படுத்தக் கூடியது. மற்றொரு வகை தானே தன்னை நியாயத்திற்குக் கட்டுப்படுத்திக் கொள்வது; மனச் சாட்சிக்குக் கட்டுப்படுத்திக் கொள்வது; சொல்லுக்குக் கட்டுப்படுவது; சொல்லிய சொல்லைக் காப்பாற்றுவது; நேர்மைக்குக் கட்டுப்படுத்திக் கொள்வது. இது சுயக் கட்டுப்பாடு (Self control) ஆகும்; இது உள்ளிருந்து வருவதாகும். முதல் வகையை விட இது சிறந்தது; அளவிறந்த பயனளிக்கக் கூடியது; யோக வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இதை விட உயர்ந்த கட்டுப்பாடு ஒன்றுள்ளது. அது புலன்களைத் துலக்கும் கட்டுப்பாடாகும். புலன்களைக் கட்டுப்படுத்துவது உயர்ந்தது. அவை இரண்டையும் இப்பகுதியில் நாம் இங்கு கருதப்போவதில்லை.

முதல்வகை (பொது) புறக்கட்டுப்பாடும், இரண்டாம் வகை சுய (உள்) கட்டுப்பாடும் அன்னையை ஏற்றுக்கொள்வதில் என்ன பங்கு கொள்கின்றன என்பதைப் பார்ப்போம்.

சைவ மரபில், ‘சிவனடியார்க்குச் செய்யும் சேவை சிவனுக்குச் செய்யும் சேவையை விடப் பெரியது’ என்று கருதுவார்கள், வைஷ்ணவர்கள் தன்னை ‘அடியேன்’ என்றே மற்ற வைஷ்ணவர்களிடம் குறிப்பார்கள். ‘பக்தர்களே பரமாத்மாவை விட உயர்ந்தவர்கள்’ என்ற நடைமுறை அவர்களிடம் உண்டு. இது எல்லாத் தெய்வ வழிபாட்டிலும் உள்ள சிறப்பான அம்சம்.

அதே கருத்தை சிறிது மாற்றி நான் அன்னை விஷயத்தில் சொல்லப் பிரியப்படுகிறேன். அன்னையின் முறைகள், விதிகள், திட்டங்களைப் பின்பற்றினால் அன்னையைப் பின்பற்ற வேண்டியதில்லை. அன்னை அன்பரைப் பின் தொடர்ந்து வருவார். அன்னையின் முறைகள் ஒரு வகையில் அன்னையேயாகும். பக்தரைப் பொறுத்தவரை அவருக்கு அம்முறைகள் அன்னையை விட உயர்ந்தவையாகக் கருதப்படும்.

புறக் கட்டுப்பாட்டை மட்டும் ஒரு பக்தர் முழுமையாக ஏற்றுக்கொள்வாரானால், அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள் வியக்கத் தக்கவையாக இருக்கும். அவை 10 ஆண்டுகளுக்கு முன் பஸ் டிரைவராக இருந்தவர், இன்று 10 பஸ்ஸூக்குச் சொந்தக்காரராக மாறியவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஒத்திருக்கும். அகக்கட்டுப்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டால், அவர் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களைக் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாது. ‘பெரும் தலைவர்’ என்று எல்லோராலும் போற்றப்பட்ட காமராஜரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் மாறுதல்கள், அவருடைய தன்னலமற்ற தொண்டு, தூய்மை, பணிவு, திறமைகளால் ஏற்பட்டவை. இவையெல்லாம் ‘அகக் கட்டுப்பாடு’ என நாம் விவரிப்பதில் உள்ளவை. இலட்சத்தில் ஒருவருக்கு அத்தகைய முன்னேற்றம் வாழ்க்கையில் ஏற்படுகிறது. அன்னையை ஏற்றுக்கொண்டவர்கள், ‘அகக் கட்டுப்பாட்டை’ முழுவதும் ஏற்றுக்கொண்டால், அத்தனை பேருக்கும் அத்தகைய மாற்றம் ஏற்படும். ஒரே வித்தியாசம்: வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வந்தாலும், பொறுமையாக, நிதானமாக நாள் பட்டு வருகிறது. அன்னையின் விஷயத்தில் எந்த நிமிஷம் பக்தனுக்குப் பூரண மன மாற்றம் ஏற்படுகிறதோ, அதே நிமிஷம் வாழ்க்கை மாறிவிடும். அத்தகையக் கட்டுப்பாடும் பல நிலைகளில் விரிந்து சிறியது, பெரியது என்றுள்ளது.

  1. ஆரம்பத்திலுள்ள அன்பர்கள், பிரச்சனை வந்த பின் அன்னையை நினைக்கின்றார்கள்.
  2. அடுத்த கட்டத்தில் ஈடுபாடுள்ளவர்கள், வேலையை ஆரம்பிக்கும்முன் அன்னையை நினைப்பார்கள்.
  3. ஒரு வேலையைத் தொடங்குமுன் தன் சரித்திரத்தை நினைவுபடுத்தி - அதாவது, அக்காரியத்தில் பிணைந்துள்ள பழைய செயல்களை - அன்னைக்குப் பிரார்த்தனை செய்பவர்கள், மேலும் ஈடுபாடு உடையவர்கள்.
  4. வீட்டை விழிப்புடன் சுத்தமாக வைத்துக்கொண்டு, கண்ணும் கருத்துமாகக் செயல்படுகின்றவர்கள் அதற்கும் அடுத்த உயர்ந்த கட்டத்தில் உள்ளவர்கள்.
  5. மனத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டு தூய்மையான வீட்டில் திறமையாகச் செயல்படுவது அதனினும் சிறப்பு.
  6. காரியங்களை ஆரம்பிக்கும்முன் ஏற்கனவே நமக்கு அந்த வேலையில் தெரிந்த குறைகளை நீக்கி - அவற்றில் கலந்துள்ள கர்மங்களை நீக்கி - மனத்தைத் தூய்மையாக நெறிப்படுத்தி, வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொண்டு, அன்னையை நினைத்தோ, நினைக்காமலோ திறமையாகச் செயல்படுவது அடுத்த நிலை. அப்படிப்பட்டவர்கள் அன்னையை நினைக்கத் தேவையில்லை. தூய்மையும், சுத்தமும், திறமையும் அன்னையின் வடிவங்களே. அவை அன்னையேயாகும். அவர்களை அன்னை எப்போதும் நினைப்பார். அவர்களை அன்னை பின் தொடர்வார்கள். அவர்கள் ஒரு வேலைக்குப் போகுமுன் அன்னை அங்கு சென்று காத்திருப்பார்.

பிரார்த்தனை, தியான (தவ) முயற்சி எல்லாம் யோகத்தில் ஆத்மீகப் பலனைப் பெறுவதற்கே தேவை. வாழ்க்கையில் செல்வமும், சந்தோஷமும், வெற்றியும், நிம்மதியும் பெற உழைப்பும், நேர்மையும், திறமையும் அன்னையின் பக்தர்களுக்குப் போதும். வாழ்க்கைக்கு வேண்டிய இவற்றைப் பெற்றவர்கள் பிரார்த்தனையையும், தியானத்தையும் மேற்கொண்டால், அவர்கள் வாழ்வு சிறிது சிறிதாக யோகத்தை நாடிச் செல்லும்.

**********book | by Dr. Radut