Skip to Content

01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்

அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் மாநகரத்திலுள்ள ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர் நாம் ‘அன்னை’ என்று அழைக்கும் அவதார நாயகி. இளம் வயதில் பெற்றோர் இட்ட பெயர் மிரா. இவருடன் பிறந்தவர் ஒருவரே. அவர் சகோதரர். இவரது தாயார் ஒரு பெரும் இலட்சியவாதி. திண்மை வாய்ந்த மனத்தவர்.

‘‘வாழ்க்கை அனுபவிப்பதற்காக நமக்குக் கொடுக்கப்படவில்லை. நாம் செய்ய வேண்டியவை பல உள்ளன. அவற்றை (Perfect) சிறப்பாகச் செய்யவே நாம் பூமியிலிருக்கிறோம்’’ என்று அடிக்கடி தன் குழந்தைகளிடம் வலியுறுத்திக் கூறுவார். ‘இரும்பு போன்ற திண்மையும், திறனும் உடையவர் என் தாயார்’ என அன்னை சொல்வார். ‘‘ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுதல் என்பதே நாங்கள் அறியாத ஒன்று’’ என்றும் அன்னை கூறுகிறார். இறுதிக் காலத்தில் ஸ்ரீ அரவிந்தர், ‘‘நம்மில் ஒருவர் பூமியிலிருந்து யோகத்தைத் தொடர வேண்டும். மற்றவர் சூட்சும உலகிலிருந்து பூவுலகத்தைத் தயார் செய்ய வேண்டும்’’ என்று அன்னையிடம் கூறினார். சூட்சும உலகில் செய்ய வேண்டிய பணிகளுக்காக, தன் உடலை விட்டு நீங்க முன் வந்தார் அன்னை. அப்பொழுது, ‘‘உன் உடல் ஒன்று மட்டுமே இந்தப் பூரண யோகத்திற்குத் தகுதியானது. நீ இங்குதான் இருக்க வேண்டும்’’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறினார்.

பலமுறை அன்னை அச்சொற்களை நினைவு கூர்ந்து தன் உடலைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் கூறியதன் உண்மையின் அடிப்படை, தன் தாயாரின் வளர்ப்பு முறையால், ஆசைகளை முழுவதுமாகப் புறக்கணிக்கும் முறையால் ஏற்பட்டது என்று கூறுகிறார். இவரது தாயாருக்கு தெய்வ நம்பிக்கை சிறிதும் இல்லை. ஆனால் எதையும் சிறப்பாகச் (Perfect) செய்வதில் நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு.

ஒரு முறை இவரது சகோதரர் ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபொழுது, ‘‘உனக்குத் தெய்வமாக விருப்பம் உண்டா?’’ என்று ஓர் அசரீரி அவரைக் கேட்டது.

சுமார் 5 வயது முதல் அன்னையின் தலையில் ஒரு வட்டமான ஒளி இருந்தது. பின்னர் தன்னுடைய குருவை ஆப்பிரிக்காவில் சந்தித்த பொழுது அவரது மனைவி அந்த ஒளியைப் பார்த்து அதன் இரகஸ்யத்தை அவருக்கு வெளியிட்டார். ஒரு வட்டம் போன்றும், 12 குண்டுகள் போன்றும் வெண்மையான ஒளி வட்டக் குண்டுகள் கிரீடமாக அன்னையின் தலையில் எப்பொழுதும் நிலவின.

இளம் வயதில் அடிக்கடி அன்னைக்குத் தன்னை முழுமையாக மறந்து விடும் அளவுக்குத் தியானம் தானே வந்து கூடுவதுண்டு. நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் பொழுதும், சாப்பிடும் பொழுதும் இத்தகைய தியானம் வந்து விடும். கையில் கரண்டியைப் பிடித்து உணவை எடுத்து வாயில் போடப் போகுமுன் தியானத்திலாழ்ந்து கண்ணைமூடி, தன்னை மறந்து 15 நிமிடங்கள் இருப்பது அவர் வழக்கம். பலருக்கு மத்தியில் தன் மகள் அப்படித் தியானத்தில் ஆழ்ந்து விடுவதைக் கண்டு அவர் தாயார் கவலையும், வெட்கமும் அடைவார்.

சிறு குழந்தையாக இருந்த பொழுது 10, 12 வயதுச் சிறுமிகளுடன் அன்னை ஒரு நாள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர், ஒரு பாறையின் விளிம்பைத் தாண்டி விழுந்து விட்டார். கீழேயோ கிடுகிடுபள்ளம். பள்ளத்தில் விழுந்தால் என்ன ஆகும்? எலும்புகள் நொறுங்கி உயிர் போகும். ஆனால் அன்னைக்கு அப்படி எதுவும் ஆகவில்லை. தன்னை யாரோ தாங்கிப் பிடித்துக் கொண்டதைப் போன்ற ஓர் உணர்வு அவரை ஆட்கொண்டது. கண்களைத் திறந்து பார்த்தார். தான் தரையில் நின்று கொண்டு இருப்பதை அறிந்தார். தனக்கு எந்த விதமான அடியோ, காயமோ இல்லாமல் இருப்பதைக் கண்டார். தன்னைப் பாதுகாக்கும் வண்ணம் தெய்வீக சக்திகள் பல வகையான ஜீவ உருவில் தன்னைச் சுற்றியிருப்பதை பிற்காலத்தில் நன்குணர்ந்து விவரித்திருக்கிறார். பெரியவராக வளர்ந்து, அடுப்பில் பால் காய்ச்சும் பொழுது வேறு கவனத்திலாழ்ந்திருந்தால், தன் உடையைப் பிடித்து மெல்ல இழுத்து, ‘பால் பொங்குகிறது’ என அறிவுறுத்தும் ஜீவன் ஒன்று (being) தன்னுடனேயே எப்பொழுதும் இருந்தது என்றார்.

பாரிஸ் நகரில் அன்னை தியானத்தில் ஆழ்ந்து தன்னை மறந்து ஒரு சாலையைக் கடந்த பொழுது வேகமாக வந்த பஸ்ஸை அவர் கவனிக்கவில்லை. யாரோ தன்னைப் பின் பக்கமாக இழுத்துப் பல அடிதூரம் தூக்கிப் போட்டதையும், பஸ்ஸை நிறுத்தி டிரைவர் கோபமாகத் திட்டியதையும் கேட்டு நினைவுலகத்திலிருந்து திரும்பிய அன்னை, ஏதோ ஓர் ஆபத்து நேரவிருந்த சமயத்தில் ஏதோ ஒரு சக்தி தன்னை விபத்தில் இருந்து காத்து உந்தித் தள்ளியதை உணர்ந்தார்.

இரவில் அன்னை தூங்கியபின் தன்னுள் இருந்து ஏதோ ஒன்று கிளம்பி உயரே சென்று நகரின் மையத்தில் வானைச் சென்றடையும் வரை உயர்ந்து, அதிலிருந்து தன்னுருவம் வெளிவருவதும், தன் உடை வளர்ந்து நகரை முழுவதும் தன்னுள் கொண்டு வருவதையும், ஏராளமான உயிர்க்குலங்கள் சோகத்தின் உருவாக உள்ள நிலையில் அந்த உடையை நோக்கி வந்து அதைத் தொட்டவுடன் சோகம் நீங்கி மலர்ச்சியடைவதையும் அன்னை கண்டார். அவருடைய உடை ஜீவனுள்ளதாகவும், பிறருடைய சோகத்தைப் போக்க வல்லதாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளும் இது நிகழ்வதுண்டு. அன்னை இந்த அனுபவத்தை மிகவும் ரசித்தார். எப்பொழுது தூங்குவோம் என்று ஆவலுடன் இந்த அனுபவத்திற்காக அன்னை காத்திருப்பார்.

ஸ்ரீ அரவிந்தருக்கு நோபல் பரிசு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த பொழுது ஸ்ரீ அரவிந்தர் சமாதி அடைந்துவிட்டார். அவருக்கு அளிக்க இருந்த நோபல் பரிசை, அன்னைக்குக் கொடுக்க விழைந்தனர். ‘தான் ஒரு கருவி மட்டுமே. வெறும் கருவியே. இயக்குவதெல்லாம் ஸ்ரீ அரவிந்தரே. எண்ணங்களும், அவற்றைச் செயல்படுத்தும் ஆத்மீக சக்தியும் ஸ்ரீ அரவிந்தருடையதே. ஆதலால் வெறும் கருவியான தன்னை — இந்த உடலை — பேருக்கும், புகழுக்கும் ஆளாக்குதல் சரியில்லை’ என்று அந்த மாபெரும் பரிசை மறுத்துவிட்டார் அன்னை.

சூரிய மண்டலத்திலுள்ள பல்வேறு கிரகங்களை — செவ்வாய், வியாழன் போன்ற கிரகங்களை — அன்னை தன் சூட்சும உடலில் சென்று பார்த்திருப்பதாகச் சொல்கிறார். பாரிசில் ஓர் இந்தியரைச் சந்தித்ததாகவும், அவர் கீதையைப் படிக்கும்படி சொல்லியதாகவும், அது தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் அன்னை கூறுகிறார்.

இறைவன் ‘உள்ளே’ இருப்பதாக ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டு, உள்ளேயுள்ள ஒளியைக் கண்டுபிடிப்பதில் முனைந்து பல ஆண்டு தவமிருந்து பெறும் பாக்கியத்தை சில நாட்களிலேயே அடைந்தார் அன்னை. தன்னுடைய தியானத்தில் அன்னை அநேக உருவங்களைச் சந்திப்பதுண்டு. அவர்களெல்லாம் சித்தி பெற்ற மகான்களாவர். அவர்களில் ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் போலவும், கரிய நிறமுடையவராகவும் காணப்பட்டார். அவர் அன்னையின் தியானத்தில் தினமும் தோன்றுவதுண்டு. அன்னை அவரை ‘கிருஷ்ணா’ எனப் பெயரிட்டழைத்தார்.

பல ஆண்டுகட்குப் பின் அன்னை தன் கணவருடன் புதுவை வந்து ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்த பொழுது, தன் தியானத்தில் தினமும் சந்தித்த ‘கிருஷ்ணா’, மகான் ஸ்ரீ அரவிந்தரே எனத் தீர்மானமாக உணர்ந்து, அவருடனேயே தங்குவது என முடிவு செய்தார். முதல் மகாயுத்தம் ஏற்பட்டதால் அன்னை பிரான்சுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. பிரான்சிலும், ஜப்பானிலும் 5 ஆண்டுகள் கழித்து யுத்தம் முடிந்த பின் ஸ்ரீ அரவிந்தருடன் மீண்டும் அன்னை 1920ல் வந்து சேர்ந்து கொண்டார். ‘பிரான்சுக்குப் போகுமுன் என் ஆத்மாவை ஸ்ரீ அரவிந்தரிடமே வைத்துவிட்டுப் போய்விட்டேன்’ என அன்னை கூறுகிறார்.

‘தியான்’ என்றொருவரை அன்னைக்கு அறிமுகப்படுத்தினார்கள். ‘அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை’ எனக் கூறுகிறார். அவரது மனைவி இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அன்னை அவர்களுடன் பழகிய போது, ‘உலகம் எப்படி உற்பத்தியாயிற்று, அதன் எதிர்காலம் என்ன, ஆத்மீகம் என்பது என்ன, மனிதனுக்கு மிக உயர்ந்த இலட்சியம் எதுவாக இருக்கும்?’ என்பன பற்றி எல்லாம் விவாதித்தபொழுது, தியான் மிக உயர்ந்த ஆத்மீகத்திறமை வாய்ந்தவர் என்பதையும், அவர் மனைவிக்கு சூட்சும சக்திகளில் பூரணமான பயிற்சியும், திறமையும் இருப்பதையும் அன்னை கண்டு, தியானை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். தன் தியானத்தில் கண்ட ஆசிரியர் இவராக இருக்குமா என ஓர் ஐயமிருந்தது அன்னைக்கு.

தியானுக்கு சொந்தமான அல்ஜீரியா நாட்டிலுள்ள ஓர் எஸ்டேட்டிற்குச் சென்று மூவரும் கொஞ்ச நாள் தங்கிருந்தனர். அப்பொழுது அன்னை சூட்சுமப் பயிற்சிகளைப் பெற்றார். உடலை விட்டுச் செல்லுதல், வேறு உலகங்களுக்குப் போதல், மற்றவர் மனத்துள் மர்மமாக மண்டலமிட்டு இருக்கும் எண்ணங்களை அறிதல் போன்ற பலவகைப் பயிற்சிகளைப் பெற்று அவற்றில் தேர்ந்தவரானார். அல்ஜீரியாவிலிருந்து பாரிசுக்குச் சூட்சும உடலில் செல்லும் சோதனைகளில் கலந்து வெற்றி கண்டார்.

ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து அவர் யோகத்தை ஏற்றுக்கொண்ட பின், அடுத்த சிருஷ்டியான (Supramental being) சத்திய ஜீவன் உலகில் அவதரிப்பதற்கு உதவியாக அமையும் யோகம் உலகுக்குத் தேவை என்று அன்னை உணர்ந்து ஏற்றுக்கொண்டார். அந்த யோக முறைகளை ஸ்ரீ அரவிந்தருடன் பயிலும் பொழுது, தான் அல்ஜீரியாவில் தியானுடன் அவரது எஸ்டேட்டில் இருந்த பொழுது பார்த்த ஒரு தெய்வீக ஜீவனை நினைவுபடுத்தி, ‘அதுவே இன்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடும் சத்திய ஜீவன்’ என்று பிற்காலத்தில் விளக்கியுள்ளார்.

தியான் மனைவி தரையில் படுத்துக்கொண்டு ஒரு பழத்தைத் தன் வயிற்றில் வைத்துச் சிறிது நேரமான பின் அதிலுள்ள சாரத்தை முழுவதும் நாம் சாப்பிட்டால் உடல் எடுத்துக்கொள்வது போல், தான் சூட்சுமமாக எடுத்துக் கொண்டதாகச் சொல்வார். அப்பழம் — அவர் பயன்படுத்தியது Grape fruit — தன்னிடம் உள்ள சாரத்தையும், பருமனையும் இழந்து வெறும் தோலாக மாறிவிடும்.

ஒரு நாள் தியான் மனைவி பகலில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அரச தோரணையுடன் ஓர் உருவம் அவர் பக்கத்தில் வந்து நின்றது. அவர் விழித்துப் பார்த்து, ‘‘நீ யார்? என்ன வேண்டும்?’’ எனக் கேட்டதற்கு, ‘‘நான் பனி மலை அரசன் (Lord of snow). என்னை அழைத்ததால் வந்தேன்’’ எனப் பதிலளித்தார். தியான் மனைவி அவரை அனுப்பிவிட்டுப் பக்கத்தில் பார்வையைச் செலுத்திய பொழுது, பனிமலை அரசன் நின்ற இடத்தில் பனியும் (ice), குளிர்ந்த நீரும் பரவியிருந்தன. ஜன்னல் வழியாகப் பார்த்த பொழுது தூரத்திலுள்ள மலைச் சிகரங்கள் பனியால் மூடப்பட்டிருந்தன. அந்த இடம் பூமத்திய ரேகையில் உலகிலேயே அதி வெப்பமான இடம்; சகாரா பாலைவனத்தையொட்டியுள்ள இடம். பனிக்கும் அந்த இடத்திற்கும் எக்காலத்திலும் எந்த ஒரு தொடர்பும் இருந்ததில்லை. பின்னர் விசாரித்ததில் வட துருவத்தில் வளரும் பிர் மரங்களை (Fir trees) கொணர்ந்து அம்மலையில் நட்டதாகவும், அவை அங்கு உயிருடனிருப்பதாகவும் தெரிய வந்தது.

அன்னையும் தியானும் ஒரு நாள் மாலை தனியாக மாடியில் நின்று கொண்டிருந்தார்கள். திடீரென வானம் இருண்டு மின்னியது. மின்னல் இவர்களை நோக்கி வந்தது. வந்த மின்னல் க்ஷணத்தில் தயங்கி, திசை மாறிச் சென்றது. அன்னை தியானை நோக்கி, ‘‘மின்னலைத் திசை மாற்றியது நீங்களா?’’ எனக் கேட்டார். அவர், ‘‘ஆம்’’ என ஒப்புக்கொண்டார்.

சூட்சுமப் பயிற்சி (Occult training) உச்சக் கட்டத்தை அடைந்த பொழுது அன்னை எல்லாச் சூட்சும உலகங்களுக்கும் செல்லக் கற்றுக் கொண்டார். அன்னைக்குத் தியானிடம் பெருமதிப்புண்டு. அவரது ஞானத்திலும் நம்பிக்கையுண்டு. ஆனால் தன் தியானத்தில் சந்தித்த, தான் ‘கிருஷ்ணா’ என்று அழைத்த அம்மகானை அவர் முழுவதுமாக நம்பினார். அவரை வாழ்க்கையில் சந்திக்க விழைந்தார். தியான் அந்தக் கிருஷ்ணாவாக இருக்குமா என முதலிலிருந்த ஐயம் நீங்கி, ‘இவரில்லை’ எனத் தெளிந்தார். அன்னைக்குத் தியானிடம் பெருமதிப்பு இருந்தாலும் பூரண நம்பிக்கை ஏற்படவில்லை.

ஒரு நாள் தியான் அன்னைக்குச் சூட்சும பயிற்சி அளிக்கும் பொழுது அன்னையின் சூட்சும உடல் மிக முக்கியமான உலகில் சஞ்சாரம் செய்தது. அங்கு ஒரு மந்திரம் எழுதப்பட்டிருந்தது. அதை அன்னை, ‘ஜீவ மந்திரம்’ (Mantra of life) என்கிறார். அன்னைக்கு அப்பொழுது சம்ஸ்கிருதம் தெரியாது. அந்த மந்திரம் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது. அன்னை மந்திரத்தைப் பார்த்தவுடன், ‘சிருஷ்டியில் ஒரு பெரிய இரகஸ்யம் அது’ என உணர்ந்தார். மந்திரத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டார். அதை தியானுக்குக் கொடுக்க முடியாது எனவும் புரிந்து கொண்டார்.

தியான் அந்த மந்திரத்தைத் தன்னிடம் கொடுக்கும்படி வற்புறுத்தினார். அன்னையின் உடல் தரையில் கிடக்கின்றது. உயிர் சூட்சும உலகிலிருக்கின்றது. ‘உடலும், உயிரும் ஒரு சூட்சுமத்தால் இணைக்கப் பெற்றுள்ளன.’ இவையெல்லாம் தியானின் தலைமையில் நடக்கிறது. அந்த நிலையில் அன்னையைத் தியான் வற்புறுத்திய போது, அன்னை, ‘முடியாது’ என உறுதியாகவும், அறுதியாகவும் கூறிவிட்டார். அதனால் தியான் அன்னையின் உயிருக்கும் உடலுக்கும் இடையேயிருந்த தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

அன்னை கலங்கவில்லை. தியானை எதிர்க்கவில்லை. பயங்கரமான அச்செயலைக் கண்ணுற்ற போதும், தன் வாழ்நாள் முடிந்துவிட்டது என்று பூரணமாகத் தெரிந்த பொழுதும் அன்னை தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பதற்றம் அடையவும் இல்லை. ஒரு கணம் தியான் திகைத்துப் போனார். தான் செய்த காரியத்தின் கோரத்தைத் தானே உணர்ந்தவர் போல், துண்டித்த தொடர்பை மீண்டும் ஏற்படுத்தினார். பிற்காலத்தில் அன்னை ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்து அவருடன் ஐக்கியமான பொழுது அந்த மந்திரத்தைக் கொடுத்தார்.

அன்னை ஸ்ரீ அரவிந்தரை முதல் முறையாகத் தரிசித்தது 1914ல். அவர் கணவர் புதுவையிலிருந்து பிரெஞ்சு பார்லிமெண்ட் தேர்வுக்கு நின்றதால் அவர் தேர்தலுக்கு வேலை செய்ய பிரான்ஸின் ஒரு பகுதியாக இருந்த புதுவைக்கு வந்தார். அவர் பெயர் ரிச்சர்ட். முதல் முறையாக ரிச்சர்ட் புதுவைக்குத் தனியாகத் தேர்தல் விஷயமாக வந்தபொழுது அவர் ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து ஆத்மீக விஷயமாகப் பேசினார். அடுத்த முறை ரிச்சர்ட் புதுவைக்கு வந்தபொழுது அன்னையும் அவருடன் வந்தார். இருவரும் கப்பலில் வந்து தனுஷ்கோடியில் இறங்கி, அங்கிருந்து இரயிலில் ஏறி பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்தனர். புதுவைக்கு 10 மைல் தூரம் இருக்கும் பொழுது அன்னை நகரின் மையத்திலிருந்து ஓர் ஒளி வானளாவ ஓங்கி இருப்பதைக் கண்டார்.

புதுவை வந்த தம்பதிகள் ஸ்ரீ அரவிந்தரை வந்து சந்தித்தனர். அன்னை மாடிப்படியின் அருகே வந்த பொழுது ஸ்ரீ அரவிந்தர் அவரை வரவேற்க, தன் அறையிலிருந்து புறப்பட்டு மாடிப்படியின் உச்சிக்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் அன்னை, ‘‘இவரே தான் கண்ட கிருஷ்ணா!’’ என உணர்ந்தார். ரிச்சர்டும் ஸ்ரீ அரவிந்தரும் அறையில் எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர். அன்னை ஸ்ரீ அரவிந்தரை ஒளி மயமாகக் கண்டார். தான் காண வேண்டியவரைக் கண்டு விட்டதாக உணர்ந்தார். மேலை நாட்டினர் அறியாத நம் நாட்டு சாஷ்டாங்க நமஸ்காரத்தை அன்னை இயல்பாகச் செய்தார். எழுந்து ஸ்ரீ அரவிந்தரின் காலடியில் தரையில் உட்கார்ந்து கொண்டார். அவர்கள் இருவரும் அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அன்னை தன்னை மறந்தார். தன் தலையில் ஏதோ ஒரு பெரிய விஷயம் திடீரென நடப்பதைக் கண்டார் அன்னை. அது என்ன என்று புரிந்து கொள்ள முடியாமல், ‘அது ஒரு வரப்பிரசாதம்’ எனக்கருதி, அந்த மாற்றத்தை வரவேற்கும் வகையில் மனத்தில் பணிவுடன் இருந்தார். தன் எண்ணங்களும், எண்ணங்களைத் தாங்கி வரும் செய்திகளும், அவற்றின் உறைவிடமான நினைவுகளும், மனத்தின் மற்ற பகுதிகளும், தான் அதுவரை — அப்பொழுது அன்னைக்கு வயது 36 — படிப்பால் பெற்ற ஒரு பெரும் திரளான அறிவின் முழுமையும் தன்னை விட்டகன்று, மனத்தில் அகண்ட மௌனம் புகுவதை உணர்ந்தார்.

சுமார் 20, 30 வருஷத் தியானம் பலிக்கும் கட்டத்தில் கிடைக்கும் மௌனத்தை ஸ்ரீ அரவிந்தர் ரிச்சர்டுடன் பேசிக் கொண்டே அன்னைக்கு வரப்பிரசாதமாகக் கொடுத்துவிட்டார்! அந்த மௌனம் அன்னையை விட்டு இறுதிவரை அகலவில்லை. ‘‘பல்லாயிரக் கணக்கான ஜீவன்கள் உலகில் அந்தகாரத்தில் மூழ்கியிருந்தாலும், நான் கண்டவர் — ஸ்ரீ அரவிந்தர் — உலகில் இருக்கும் வரை இறைவனின் திருவுள்ளம் பூவுலகில் பலிப்பது நிச்சயம்’’ என அன்னை தன் குறிப்பில் எழுதினார். அந்த முதல் சந்திப்பைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர், ‘‘ஒரு ஜீவனில் ‘சரணாகதி’ என்ற தத்துவம் மனத்திலும், உடலிலும் பூரணமாக நிலவியிருப்பதை நான் அன்னையிடம் அன்று கண்டேன்’’ என்று கூறினார்.

உலகில் உள்ள வறுமை, நோய், துன்பம் ஆகியவற்றை ஒழிப்பதுடன் மரணத்தையும் பூவுலகத்தில் அழித்து விடுவதே குறிக்கோள், அன்னை தன் குறிக்கோளும், ஸ்ரீ அரவிந்தரது இலட்சியமும், ஒன்றாக இருப்பதைக் கண்டார். ஸ்ரீ அரவிந்தர் அன்னையின் பிறப்பின் இரகசியத்தை உணர்ந்து, ‘அன்னை வெறும் மானுடப் பிறவியில்லை; பராசக்தியின் அவதாரம். தன் யோகத்தைப் பூர்த்தி செய்ய இறைவன் தனக்கு அளித்த சக்தி’ என்று உணர்ந்தார். இலட்சியம் இருவருக்கும் ஒன்றானாலும் அதை அடைய வேண்டிய முறைகளைக் கலந்தாலோசிக்கும் பொழுது, ‘தெய்வ லோக சக்தியை (overmind) பூவுலகில் கொணர்ந்து தங்கள் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யலாம்’ என அன்னை கருதினார். ‘அந்தச் சக்தி கிருஷ்ணாவதாரத்தால் உலகுக்கு அளிக்கப்பட்டது. உலகில் தர்மத்தை நிலை நாட்டவல்ல சக்தி அது. ஆனால் அது மரணத்தை அழிக்கவல்லதல்ல. மரணத்தை அழிக்கவல்ல சக்தி அதற்கடுத்த லோகமாகிய சக்தியலோகத்தில் உறைகிறது. அதற்கே மரணத்தை வெல்லும் திறனுண்டு’ என ஸ்ரீ அரவிந்தர் விளக்கம் அளிக்க, அன்னை அதை ஏற்றுக்கொண்டு யோகத்தை ஆரம்பித்தார்.

ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து ஐரோப்பா திரும்பிய அன்னை, மீண்டும் இந்தியா வருவதற்கு முன் ஜப்பானில் கொஞ்ச காலம் தங்கிருந்தார்.

‘எரி நட்சத்திரம்’ என்று நாம் சொல்வது சில சமயம் வானில் தோன்றி சில வினாடிகளில் மறைந்துவிடும். கப்பற் பிரயாணத்தில் தாம் எரி நட்சத்திரம் ஒன்றைப் பார்த்த விவரங்களை அன்னை கூறுகிறார். ‘எரி நட்சத்திரத்தைப் பார்த்த ஒருவர், அது மறைவதற்குள் மனத்தில் ஒரு விருப்பத்தைக் கொண்டு வந்து தெளிவாக உணர்ந்தால், அந்த விருப்பம் ஒரு வருஷ காலத்தில் நிறைவேறும்’ என ஒரு நம்பிக்கையிருப்பதாக அன்னை கூறுகிறார்.

அன்னைக்குத் தன்னைப் பூரணமாக சரணாகதியால் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற இலட்சியம் பல நாட்களாக உண்டு. சமர்ப்பணம் செய்வது ஒன்று; ‘பூரண சமர்ப்பணம்’ என்பது வேறு. மனிதனுக்கு அவனது சுபாவம் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. தன் சுபாவத்தை மீறி அவனால் செயல்பட முடியாது. ‘சுபாவம் மாறாது’ என்பதே பல நாட்டு மக்களுடைய கருத்து. ‘ஒரு மதக்கோட்பாட்டின்படி இயல்பாகப் படிந்த சுபாவத்தை மாற்ற முடியும்’ எனக் கூறுகின்றனர். அதற்குரிய கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் கடுமையானவை. ‘வாழ்வைத் துறந்து ஒருவர் அந்த யோகப் பயிற்சிகளை மேற்கொண்டால் சுபாவத்தை மாற்ற முடியும்’ என்கிறார்கள். அதற்கு அவர்கள் நியமிக்கும் காலம் 35 ஆண்டு. அன்னைக்கு அந்த இலட்சியம் மனத்தில் மேலோங்கியிருந்த சமயம் அது. கப்பலின் மேற் தளத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது ஓர் எரி நட்சத்திரத்தைப் பார்த்தார். பார்த்த மாத்திரத்தில், ‘என் சுபாவம் முழுவதும் மாறி இறைவனுக்கு என்னுடைய சரணாகதி பூர்த்தியடைய வேண்டும்’ என்று தன் மனத்திலுள்ள கருத்தை அந்தச் சில வினாடிகளில் தெளிவாக நினைத்தார். அந்த ஆண்டின் முடிவில் அப்பெரும் காரியம் தன்னுள் பூர்த்தியானதாக அன்னை தெரிவிக்கின்றார்.

அன்னையைச் சந்திப்பவர்கள் பலரும், அவருடன் ஆதியில் இருந்தவர்களில் பலரும், அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் கொள்கைச் சிறப்பை உணர்ந்து அவற்றின் அடிப்படையில் உலகத்தில் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. ‘இயக்கம் என ஆரம்பித்தால், அது சீக்கிரத்தில் ஒரு புதிய மதம் போன்று உருவாகும். மதங்களுடைய காலம் கடந்து விட்டது. எதிர்காலம் ஆத்மீகத்திற்கு உரியது. மனிதனுக்குத் தேவையானது சத்தியம் மட்டும் தான். மதம் இல்லை’ என அன்னை வலியுறுத்திக் கூறுகிறார். ‘ஆசிரமத்தில் ஒரு மதத்தை ஸ்தாபிக்க முனைந்தால் முதலில் ஆசிரமத்தை விட்டு வெளியேறுவது நான் தான்’ எனவும் அன்னை கூறினார்.

இறைவன் சிருஷ்டியைப் படைத்தவன். படைக்கப்பட்ட சிருஷ்டி அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும். அதற்கான சக்தி உலகில் இல்லை. அந்தச் சக்தியை அன்னை உருவில் இறைவன் பூவுலகிற்கு அனுப்பியுள்ளார். ‘‘சிருஷ்டியின் செயலை, முன்னேற்றத்தை விரைவு படுத்தும் சக்தியை நான் தாங்கிச் செயல்பட வந்திருக்கின்றேன். நான் இயக்கங்களையோ, மதத்தையோ, கோட்பாடுகளையோ ஸ்தாபிக்க வரவில்லை. இறைவன் எனக்கு ஒரு கடமையைப் பணித்திருக்கிறார். அதை நிறைவேற்றவே நான் இங்கு இருக்கிறேன். எனக்குத் தேவையானதெல்லாம் தூய்மையான உள்ளங்கள்; சத்திய நெறியைக் கடைப்பிடிக்கும் சாதகர்கள்; இறைவனின் பணிக்குத் தன்னைப் பூரணமாக சரணாகதி செய்த பக்தர்கள் தாம்’’ என அன்னை கூறுகின்றார்.

‘தெய்வமாக விரும்புகிறாயா?’ என அசரீரி கேட்டதைப் புறக்கணித்த அன்னையின் சகோதரர், பிரெஞ்சு சர்க்காரில் சேர்ந்து ஆப்பிரிக்காவிலுள்ள மடகாஸ்கரில் கவர்னராக இருந்தார். பிரிட்டீஷ் பகுதியை விட்டு பிரெஞ்சு பகுதியில் ஸ்ரீ அரவிந்தர் இருந்தாலும், அவர் அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், பிரிட்டிஷ் சர்க்கார் அவரைக் கண்டு பயந்தது. பிரெஞ்சு சர்க்காரின் துணை கொண்டு ஸ்ரீ அரவிந்தரை ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு பிரெஞ்சு மாநிலத்திற்கு அனுப்ப முயற்சி செய்தது. இந்த விவரம் தெரிந்த அன்னை தம் சகோதரர் மூலம் பிரெஞ்சு சர்க்காரை அணுகி பிரிட்டீஷாருடைய எண்ணம் நிறைவேறாமல் தடுத்தார்.

1926ல் ஸ்ரீ அரவிந்தரது யோகம் அடுத்த கட்டத்திற்குச் சென்று பலித்தபொழுது, தாம் தனித்திருந்து யோகத்தைத் தொடர முடிவு செய்து, ‘மிரா’ என்று எல்லோரும் அறிந்து கொண்டிருந்த அவரை ‘அன்னை’ என அழைத்து, ஆசிரமத்தின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு, தாம் தனிமையில் ஆழ்ந்தார். இது பற்றி அன்னை பிற்காலத்தில் விளக்கும் பொழுது, ‘‘ஸ்ரீ அரவிந்தர் என்னிடம் எதையும் சொல்லவில்லை. என்னைக் கலக்கவும் இல்லை. எல்லா சாதகர்களையும் அழைத்து, தம் முடிவை அவர்களுக்கு அவர் அறிவிக்கும் பொழுதே நானும் முதல் முறையாக அதைக் கேட்டுக் கொண்டேன்’’ என்றார்.

ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை 30 வால்யூம்களாக வெளி வந்துள்ளன. ‘Life Divine’ என்பதே அவருடைய தலையாய நூல் எனக் கருதப்படுகிறது. ஆயினும் அன்னை, ‘Synthesis of Yoga’ என்ற நூலே எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது’’ எனக் கூறுகிறார்.

80 வயது வரை அன்னை படுக்கையில் படுத்துத் தூங்கியதே இல்லை. அவர் அறையில் படுக்கையே கிடையாது. ஒரு சாய்வு நாற்காலியில் இரவு 12லிருந்து 1.30 மணி வரை ஓய்வு எடுத்துக்கொள்வதே அன்னையின் வழக்கம்.

ஆசிரமத்தின் ஆரம்ப காலங்களில் சாதகர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதிலிருந்து, புத்தகங்களையும், பொருள்களையும் எப்படி வைத்துக்கொள்வது என்று கற்பிப்பதிலிருந்து, ஸ்ரீ அரவிந்தருக்குத் தேவையான அலமாரி செய்ய தேக்கு, நூக்க மரங்களை வாங்குவது வரையிலான எல்லாப் பணிகளையும் தாமே செய்து வந்தார். சாதகர்கள் அப்பொழுது 15, 20 பேர்கள் இருந்தனர். அன்னை தாமே அவர்களுக்குச் சமைப்பார். சமைத்த உணவைத் தட்டுகளில் எடுத்து ஒவ்வொரு சாதகரிடமும் தானே கொடுப்பார். சமையலும், சாப்பாடும் தியானமாகவே நடக்கும்.

‘‘150 சாதகர்கள் சேரும் வரை சாதகர்களின் புற நிகழ்ச்சிகளையும், அக உணர்வுகளையும் என்னுடைய கைக்குள் அடங்கிய பிடியில் பத்திரமாக வைத்திருந்தேன்’’ என்கிறார். தாம் பெற்ற பெரும் செல்வத்தை, அன்னை ஸ்ரீ அரவிந்தரின் காலடியில் வைத்து 1942 வரை ஆசிரமச் செலவுகளை தம் சொந்தப்பணத்தைக் கொண்டே சமாளித்து வந்தார். அன்னை ஸ்ரீ அரவிந்தரின் அலமாரியில் உள்ள புத்தகங்களைத் துடைத்து வைக்க முற்பட்டபோது, புத்தகங்களில் ரூபாய் நோட்டுக்களைக் கண்டு அவற்றையெல்லாம் சேர்த்து, ‘‘3000 ரூபாய் இருக்கிறது’’ என ஸ்ரீ அரவிந்தரிடம் சொன்னார்.

‘ஹென்றி போர்ட்’ என்ற தொழில் அதிபர் அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை நேரில் காணப் புறப்பட ஆயத்தமான பொழுது இரண்டாம் உலக யுத்தம் ஏற்பட்டு அவரது பிரயாணம் தடைப்பட்டு விட்டது.

அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் என்பவரின் மகள் இங்கு வந்து ஆசிரமத்தையும், அன்னை, ஸ்ரீ அரவிந்தரையும் ஏற்றுக்கொண்டு இறுதிவரை 18 ஆண்டுகள் இருந்தார்.

அன்னை சிதம்பரம் கோவிலுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு மடத்திற்கும் ஒருமுறை சென்றிருக்கிறார். அன்னை ஆரம்ப நாட்களில் புடவை கட்டிக் கொண்டிருந்தார். காலப்போக்கில் அவரிடம் சுமார் 500 புடவைகள் சேர்ந்துவிட்டன. அன்னையின் புடவை ஒன்றைப் பெறப் பலரும் விருப்பப்பட்டார்கள். அன்னையிடம் சென்று அவர் அருகில் இருந்த சாதகர், தமக்கு இரண்டு சேலைகள் கொடுக்குமாறு கேட்டுக்கெண்டார். அன்னை அவருக்கு அவற்றை அளித்தார். இந்த விவரத்தைக் கேள்விப்பட்ட தொழில் அதிபரான பக்தர் ஒருவர் தமக்கு அதில் ஒன்று வேண்டுமெனக் கேட்டுப்பெற்று, காணிக்கையாக ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தார். விவரம் தெரிந்தவுடன் அடுத்த புடவையும் போய்விட்டது! அன்னையிடம் அந்தச் சாதகர், காணிக்கையைக் கொடுத்தவுடன், அன்னை ஆசிரமத்திலுள்ள ஒவ்வொரு சாதகிக்கும் ஒரு புடவையைப் பிரசாதமாக வழங்கிவிட்டார்.

சந்திர மண்டலத்திற்குச் சென்று திரும்பிய விண்வெளி விஞ்ஞானிகள், வங்காள விரிகுடாவில் ஒரு பிரம்மாண்டமான பந்து போன்ற ஒளியைப் பார்த்ததாகக் கூறினர். அதை அன்னையிடம் சொல்லிய பொழுது, ‘‘அவர்களில் ஒருவருக்குச் சூட்சுமப் பார்வை இருந்திருக்கிறது. அவர்கள் கண்டது ஸ்ரீ அரவிந்தரின் ஒளியே’’ என விளக்கினார். அன்னையின் ஒளியும், ஸ்ரீ அரவிந்தரின் ஒளியும் கலந்ததே அவ்வொளி.

அன்னையின் யோகம் 1960க்கு மேல் சிறப்படைந்தது. தம் அனுபவங்களைத் தனியாக 13 வால்யூம்களில் சொல்லியிருக்கிறார் அன்னை. இதுவன்றி அன்னையின் எழுத்து, பேச்சு ஆகியவை 15 வால்யூம்களாக வெளியிடப்பட்டுள்ளன. தம் ஆத்மானுபவங்களை அவற்றில் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஸ்ரீ அரவிந்தருக்கு யோகம் பலித்ததைத் தாண்டி அடுத்த கட்டங்களிலும் தமக்கு யோக சித்தி ஏற்பட்டதை விளக்குகிறார். தம் அறையிலேயே அன்னை சில சமயம் நடப்பதுண்டு. தமக்குள் புதிய யோக சக்தி ஏற்பட்டபின், அறையில் நடக்கும் பொழுது 1 வினாடியில் தாம் அறையை 10, 15 முறை சுற்றி நடப்பதாகக் கூறி இருக்கின்றார்.

ஹிட்லரை ஒரு பொய் சக்தி ஒளிமயமாக அவர் முன் தோன்றி உலகை அழிக்கத் தூண்டிக் கொண்டிருந்தது. அந்தச் சக்திக்கு அன்னையைத் தெரியும். அதுபற்றி அவர் ‘‘என்னை அறியாமல் அவனால் எதையும் சிந்திக்க முடியாது. அவனும் என் குழந்தையல்லவா?’’ என்றார். அந்தச் சக்தி அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து என்ன நடக்கிறது எனப் பார்த்துப் போகும். உலகமகா யுத்தத்தை வெற்றியாக நடத்தும் பொறுப்பை அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் மேற்கொண்டனர். நிலைமை மோசமான பின் ஒரு நாள் அன்னை அந்தச் சக்தி உருவம் தாங்கி ஹிட்லரைச் சந்தித்து ‘‘நீ ரஷ்யாவைத் தாக்கு’’ எனக் கூறிவிட்டுத் திரும்பி வரும்பொழுது, அந்தச்சக்தியை வழியில் சந்தித்தார்கள். ஹிட்லர் ரஷ்யாவைத் தாக்க ஆரம்பித்ததிலிருந்து அவனது முடிவு நெருங்கிவிட்டது. அதுவே அவனது இறுதித் தோல்விக்கு காரணம்.

தம் முந்தியப் பிறவிகளில் எகிப்து ராணியாகவும், எலிசபத் மகாராணியாகவும், ரஷ்யநாட்டு ராணி காதரீனாகவும், ஜோன் ஆப் ஆர்க்காகவுமிருந்ததாகக் கூறியுள்ளார் அன்னை. 14ஆம் லூயி அரசனுடைய சபைக்கு ஒரு முறை சென்றிருந்தபொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த ராணிகளுடைய படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, அது முந்தையப் பிறவியில் தம்முடைய படம் எனவும், அது சமபந்தமான விவரங்களையும் அன்னை சொல்லியிருக்கிறார். ஒரு மியூசியத்தில் எகிப்து ராணியின் சீப்பு வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ‘‘அது நான் முன் பிறவியில் பயன்படுத்திய சீப்பு’’ என அன்னை கூறினார்.

அன்னையின் தியானத்தில் ரிஷிகளும், லட்சுமி, சரஸ்வதி, காளி போன்ற தேவதைகளும் தவறாமல் வருவதுண்டு. ஆசிரமத்தில் லட்சுமி, சரஸ்வதி, துர்கா பூஜை நாட்களில் அன்னை அவர்களுக்குத் தரிசனம் கொடுப்பார்கள். துர்கா பூஜைக்குமுன் ஓரிரு தினத்தில் காளி ஒவ்வொரு வருடமும் தவறாது வருவதுண்டு. அன்னை அவர்களுடன் உரையாடியிருக்கிறார். தெய்வங்கள் பூமி அளவு இருக்கின்றார்கள். அவர்களது சக்தி மகத்தானது. ஆனால் அவர்களால் தங்கள் நிலையிலிருந்து உயர்ந்து இறைவனை நோக்கிச் செல்லமுடியாது. அப்படி அவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் பூவுலகில் பிறப்பெடுக்க வேண்டும் என்பது அன்னையின் அனுபவம்.

காளியிடம் இந்தக் கருத்தைப் பற்றிச் சொல்லி, சரணாகதியின் மகத்துவத்தை அன்னை காளிக்குப் போதித்துள்ளார். காளி அதை ஏற்றுக்கொண்டு சரணாகதியைப் பயின்று, ‘‘அதனால் பெறும் இன்பம் உயர்ந்தது’’ என்று அன்னையிடம் விளக்கியுள்ளார்.

தம் திருஷ்டியில் ஒரு நாள் கல்கத்தாவில் சீனர்கள் உலவுவதைப் பார்த்த அன்னை, வரவிருக்கும் பேராபத்தை உணர்ந்து அதைச் சூட்சும உலகிலேயே அழித்துவிட்டார். சீனா இந்தியா மீது படையெடுத்த பொழுது சென்னையில் உள்ள சர்க்கார் அதிகாரி ஒருவர் தம் பூஜையில் கண்ட காட்சியின் விளைவாக, சீனா தானே திரும்பிப் போகவும் வாய்ப்புள்ளது என்று சொன்னார். மற்றொரு சமயம் ஒரு துர்நாற்றம் வருவதை அன்னை தெரிந்து, அது ஆபத்தின் அறிகுறி என்று உணர்ந்து அதையும் அழித்துவிட்டார். சில நாள் கழித்து இமாலயத்திலிருந்து வந்த இராணுவ அதிகாரி ஒருவர், சீனர்கள் அங்கு அணுகுண்டு வெடித்ததாகவும், அதிலிருந்து இந்தியாவை அன்னை காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீ அரவிந்தர் 24,000 வரிகள் கொண்ட ‘சாவித்திரி’ என்ற பெருங்காவியத்தை ஆங்கிலத்தில் இயற்றினார். அன்னை அதைப்படித்துப் பார்த்த பிறகு, தம் உடலும் ஆன்மாவும் பெற்ற ஆத்மானுபவங்களை ஸ்ரீ அரவிந்தர் தம் காவியத்தில் எழுதியிருப்பதாகக் கூறினார்.

1950இல் ஸ்ரீ அரவிந்தர் சமாதியானார். 1959லிருந்து, அன்னை சூட்சும உலகில் ஸ்ரீ அரவிந்தரைத் தினமும் சந்திக்கலானார்.

‘பிரார்த்தனையும் தியானமும்’ (Prayers and Meditations) என்ற நூலில் அன்னை தம்முடைய ஒரு தியான நிலையை விளக்குகின்றார். தம்னுடலிலுள்ள சக்கரங்கள் — ஆக்ஞா சக்கரம், சகஸ்ரதளம் போன்றவை — அனைத்தும் ஒளி மயமாகக் காணப்படுகின்றன. தலைக்குப் பதில் ஒரு சந்திரன் இருக்கிறது. அதற்குமேல் ஒரு சூரியன் இருப்பதாகத் தம்மைத் தியானத்தில் காண்பார் அன்னை. தியானத்தை ஆரம்பித்து ஒவ்வொரு நிலையாகக் கடந்து ஒன்பது நிலையைத் தாண்டிய பின், இந்தக் காட்சியைக் கண்டதாகச் சொல்கிறார்.

***********

 book | by Dr. Radut