Skip to Content

13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு

அன்னையின் தனிப்பெரும் சிறப்பு

அன்னையைத் தரிசிக்க வந்த தந்திர யோகி ஒருவர், ‘‘நான் வணங்கும் லலிதாம்பிகை இதோ இருக்கிறார்கள்’’ என்று மகிழ்ந்து பேசினார்.

தற்காப்புக்கு மட்டுமே வன்முறையைப் பயன்படுத்தலாம் என்று கூறிய அன்னை, அதையும் தன் விஷயத்தில் உபயோகப்படுத்தியதில்லை. ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்த ஆரம்ப காலத்தில் அன்னையும் அவரும் இருந்த கட்டிடத்தில் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. ஸ்ரீ அரவிந்தர் அறை தவிர மற்றெல்லா அறைகளிலும் கற்கள் விழுந்தன. யார் மீதும் விழவில்லை என்றாலும், தொடர்ந்து கல் விழுந்தபடியிருந்தது. சிறிது நேரத்தில் அன்னை கல் விழும் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டார். ஸ்ரீ அரவிந்தரின் உத்தரவு பெற்று கல் விழக் காரணமான ஒரு புதுவேலைக்காரப் பையனை வெளியே அனுப்பிவிட்டார். கல் விழுவது உடனே நின்றுவிட்டது. சில நாட்கள் கழித்து அந்த வேலைக்காரப் பையனுடன் உள்ளவர் ஒரு மந்திரவாதியென்றும், அவர் மரணப் படுக்கையிலிருக்கிறார் என்றும் செய்தி வந்தது. ஸ்ரீ அரவிந்தர் அதைக் கேட்டுவிட்டு, ‘‘அவன் இறக்கக் கூடாது, நாலு கல் போட்டதற்காக அவன் உயிரை விடவேண்டிய அவசியமில்லை’’ என்று சொல்லி அவனை உயிர் பிழைப்பித்தார். அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் தங்களுக்குப் பாதகம் விளைவித்தவர்களைத் தண்டிப்பதில்லை. அவர்களிடம் இருந்து வந்த கெட்ட எண்ணங்களை அவர்களிடமே திரும்ப அனுப்பியதுமில்லை.

செய்யாத பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யும் சிறப்பு அன்னைக்கே உரியது. எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க முன்கூட்டி சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் சிறப்பும் உடையவர் அன்னை.

பக்தர்கள் விஷயத்தில் எங்கும் இருப்பவராகவும் எங்கும் நிறைந்தவராகவும், சர்வ வியாபியாகவும் அன்னை இருக்கிறார். ஒரு வேலையை மேற்கொண்டு பக்தன் சாதாரணமாக பல ஆபீஸ்களுக்குப் போக வேண்டியிருந்தால், போகுமிடமெல்லாம் ஒரு உறவினர், ஒரு நண்பன், ஒரு நல்ல மனிதர், சட்ட நுணுக்கங்களை உணர்ந்து நேர்மையாக செயல்படும் ஆபீசர், உதவியான சட்டம், உபயோகமான வழக்கம் என்று போகுமிடமெல்லாம் ஓர் உதவி, ஒரு சிறப்பு தானே பல உருவங்களில் பக்தரைச் சந்திப்பதுண்டு. அன்னை எல்லா உருவங்களிலும், எல்லா இடங்களிலும் எல்ர் இதயத்திலும் நம்மைச் சந்திப்பது பக்தர்களின் அன்றாட அனுபவம்.

அன்னை பக்தர்கள் அன்னைக்கோ, தங்களுக்கோ, பிறருக்கோ, கடமையை ஆற்றும் வண்ணம் ஆபீஸீலேயோ ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியம் வளர்ந்து, பெருகி, பரவும் தன்மையுடையது. அன்னை பிரபஞ்சம் முழுவதும் பரவியவர்கள். அன்னையின் பக்தர் இத்தனை நாளில்லாமல், கரும்பு பயிரிட்டால் கரும்புப் பயிர் பெருவாரியாகப் பெருகும். பக்தர் ஒரு புதுத்தொழில் ஆரம்பித்தால், அத்தொழில் அளவு கடந்து நாட்டில் பெருகும். இது அன்னையின் அம்சம்.

அன்னையின் பக்தர் ஒரு புது வேலையை ஆரம்பித்தால் புதிய சட்டங்கள் அவருக்குச் சாதகமாக வரும். மின்சாரம், மழை, பூமிக்கடியிலுள்ள நீர், சட்டம் போன்ற எல்லா அம்சங்களும், இல்லாதவையும் புதியதாக ஏற்பட்டு பக்தருக்காகக் காத்திருக்கும். தண்ணீர் இல்லாத காட்டில் பக்தர் கிணறு தோண்டினால் இவருக்காகப் பூமிக்கடியில் புதிதாகத் தண்ணீர் ஏற்பட்டு, கிணறு வெட்டக் காத்திருக்கும். இதுவே அன்னை பக்தர்கள் வாழ்வில் செயல்படும் அம்சங்களில் ஒன்றாகும்.

படிப்பில்லாத ஒரு தொழிலாளி அன்னையைப் பற்றி பிரான்சில் கேள்விப்பட்டு, தான் மற்றவர்களுடைய நோயைக் குணப்படுத்துவதாகவும், அன்னையைப் பார்க்க ஆசைப்படுவதாகவும் எழுதியிருந்தார். பின்னர் நேரில் இங்கு வந்தார். அன்னை வழக்கம் போல் அவரை உற்றுப் பார்த்தார். தன்னுள் உள்ள ஆத்மீக சக்தி அவரிடம் விரைந்து செல்வதையும், அவர் அதை விரும்பிப் பெறுவதையும், மேலும் மேலும் ஆர்வத்துடன் ஆத்மீகத்தைக் கிரகிக்க ஆசைப்படுவதையும் கண்டு அன்னை தன் பார்வையை அவர் கண்களில் பதித்தார். நேரம் போனபடியிருக்கிறது. வந்தவர் சளைக்காமல் அருளைப் பருகுகிறார். அன்னை அளவின்றி அருள் மழையைப் பொழிகிறார். மழை நின்ற பின் அன்னை நன்கு கடிகாரத்தைப் பார்த்து, ‘’20 நிமிஷம் நான் வழங்கியதை இந்தப் படிப்பில்லாத தொழிலாளி ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டார். இது போன்ற ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை’’ என்றார்.

கம்பீரமாக, ஆஜானுபாகுவாக தேஜஸ் நிறைந்த சாமியார் ஒருவர் அன்னையைத் தரிசிக்க வந்து அன்னையின் பார்வையைச் சந்திக்க முடியாமல், அறையிலிருந்த பொருள்களைப் பார்வையிட ஆரம்பித்தார்.

காலையில் அன்னை 6.15க்கு பால்கனி தரிசனம் தினமும் தரும் வழக்கம். 1962 வரை பால்கனி தரிசனம் இருந்தது. 1940, 45களில் ஒருவர் அன்னையைத் தரிசனம் செய்ய வந்தால், முதல் நாள் எந்த சாதகர் அவரை அழைத்து வருகிறாரோ அவருடன் பால்கனிக்கு வரச் சொல்வார். பால்கனி தரிசனத்தில் புதியதாக வந்தவரைப் பார்த்தபின் அன்னை எப்படிப் பார்க்கிறார், எந்தப் பிறவியில் அவரைப் பார்க்கிறார் என்பது அதிசயிக்கத் தக்க அளவில் வெளிப்படும். ஆசிரமத்தில் மறுநாள் அந்த சாதகரும், புதியவரும் அன்னையை தரிசிக்க அனுமதிப்பது வழக்கம். ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு புதியவர் வந்திருந்தார். வழக்கம் போல் பால்கனிக்கு முதல் நாள் வந்தார். அன்னை அவரைப் பார்த்துவிட்டு அன்று அவரை அழைத்து வந்த சாதகரைக் கூப்பிட்டு, ‘‘உயரமாகவும், தாடியுடனும் உள்ள நண்பரை நான் காலையில் பார்த்தேன். நாளைக்கும் அவரைத் தரிசனத்திற்கு அழைத்து வா’’ என்றார்.

‘‘நான் அழைத்து வந்தவருக்குத் தாடியில்லை குள்ளமாகயிருப்பார். நீங்கள் பார்த்தவர் வேறு’’ என்றார் சாதகர். மீண்டும் இருவரையும் மறுநாள் பால்கனிக்கு அன்னை வரச்சொன்னார். சாதகருக்கு வலப் பக்கம் வந்தவர் நிற்க ஏற்பாடு. அன்னை மீண்டும் அவரை உயரமாகவும், தாடியுடனுமே கண்டார். ‘‘நான் பார்த்தது வந்தவருடைய முற்பிறவியின் உருவம்’’ என அன்னை விளக்கம் கொடுத்தார்.

‘வ.ரா.’ என்று புகழ் வாய்ந்த தமிழ் எழுத்தாளரை மறுமலர்ச்சி இலக்கியத்தின் முன்னோடி என்பார்கள். கொஞ்ச நாள் அவர் ஸ்ரீ அரவிந்தருடன் தங்கியிருந்தார். அவரை ஸ்ரீ அரவிந்தர் முதன்முறையாகப் பார்த்து, மற்றவர்களிடம் வ.ரா.வின் முகச் சாயலை விளக்கிய போது, வ.ரா. மீண்டும் வந்த பொழுது எல்லோரும் ஆச்சர்யத்தோடு அவர் முகத்தை உற்று நோக்கினர். ஸ்ரீ அரவிந்தர் விளக்கிய முக ஜாடை இன்று அவர் முகத்தில் இருந்தது. ஸ்ரீ அரவிந்தர் ஓராண்டுக்குப் பின் இருக்கக் கூடிய வ.ரா.வின் தோற்றத்தை அவரிடம் முன்னமேயே கண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

அன்னையின் சக்தி முழுவதும் ஆத்மீக சக்தியானாலும் வாழ்க்கையில் பெரும் பலன் அளிக்க வல்லது. ஒருவர் அன்னையின் பக்தராகி, தன் தொழிலில் அன்னையின் நெறிமுறைகளை ஏற்றுத் தொழில் செய்யப் பிரியப்பட்டால், அவர் செய்யும் தொழிலின் உச்சியை அடைவார். சாதகனுக்கு வாழ்க்கைச் சிறப்புத் தேவையில்லை. ஏனெனில் அவன் வாழ்வை அன்னைக்கு அர்ப்பணித்து வாழ்வின் மூலம் யோகச் சிறப்பை நாடுகிறான். கிருகஸ்தனுக்கு வாழ்க்கையே யோகம். எந்த ஸ்தாபனத்திலிருந்தாலும், எந்தக் குடும்பத்திலிருந்தாலும், எங்கிருந்தாலும், அன்னையை ஒருவர் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டதுடன் அவரது நெறிகளைக் தொழிலில் பின்பற்றினால் அவர் இருக்குமிடத்தில் முதல்வராக, முதன்மையானவராக ஆவதுண்டு.

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்து அன்னையிடம் வந்த இருவரில் ஒருவர் சங்கத்தின் தலைவராகவும், மற்றொருவர் திடீரென ஏற்பட்ட புது சந்தர்ப்பத்தால் பொதுச் செயலாளராகவும் வந்து, அடுத்த தேர்தலில் இருவரும் மீண்டும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தவறாமல் அன்னை பக்தர்களுக்குக் கிடைக்கும் பிரசாதமிது.

பிரச்சனைகள் தீர்வது என்பது நமக்கு அன்னை மீதுள்ள நம்பிக்கையாலும் தீரும்; அன்னையின் அருளாலும் தீரும். நம்பிக்கையால் 99 சதவிகிதமும், அருளால் நூற்றுக்கு நூறு சதமும் தீர்வு ஏற்படும்.

அன்னையின் யோகம் புவியில் மரணத்தை வெல்லும் நோக்கத்தோடு ஏற்பட்டது. அந்த யோகச்சக்திக்கு மரணத்தை மாய்க்கும் திறன் பூரணமாக இன்னும் ஏற்படவில்லை என்றாலும் மரணத்தை ஏய்க்கும் திறனுண்டு! அன்னை பக்தர்கள் அனைவருக்கும் தக்கப்படி விதிக்கப்பட்ட வாழ்நாளை விட அதிக கால வாழ்வுண்டு.

ஜாதகத்தில் ‘கண்டம்’ என்று குறிப்பிட்டுள்ளது ஒன்றானாலும், பல ஆனாலும், அன்னையின் பக்தர்களுக்கு ஜாதகம் பலிப்பதில்லை. அப்படிக் குறிப்பிட்டுள்ள கண்டங்கள் சுவடு தெரியாமல் விலகும். ஆனால் ஒரு சிறு அடையாளத்தைக் காட்டிவிட்டுச் செல்லும். அதாவது அந்தச் சமயத்தில் ‘கண்டத்தை இந்தக் காலத்தில் தாண்டுகிறோம்’ என நாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு நிகழ்ச்சி வந்துபோகும். எதுவானாலும் கண்டத்திற்குத்தான் கண்டம் ஏற்படுமே தவிரப் பக்தருக்கில்லை!

ராகு காலம், எம கண்டம், கெட்ட நட்சத்திரங்கள், கெட்ட வேளைகள், கெட்ட சகுனம் போன்றவை பக்தர்களைப் பொறுத்தவரை பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. பக்தர்களுக்கு அதில் நம்பிக்கையிருந்தால், மற்றவர்களைப் போலவே பாதிக்கப்படுவார்கள். நம்பிக்கை இல்லை என்றால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். மேலும், ஆச்சரியமான சிறப்புண்டு. ராகு காலத்தில் ஒரு பக்தர் ஒரு தொழிலை ஆரம்பித்தால், அத்தொழிலில் அவருக்கு இடையூறாக இருக்கும் விஷயங்கள் பாதிக்கப்படும். அதாவது ராகு காலத்திற்குக் கெடுக்கும் குணம் உண்டு. பக்தர் விஷயத்தில் கெட்டுப்போக வேண்டியவற்றை ராகுகாலம் கெடுத்து அவருக்குச் சேவை செய்வது போல் அமையும்.

ஆண்டவன் பக்தனுக்கு அனுக்கிரகம் செய்யும் பொழுது பக்தனுக்கு வரும் துன்பங்களைத் துடைத்து அவனுக்கு விடுதலை அளிப்பான். ஆனால் அன்னையோ தொந்தரவால் வாடும் பக்தனுக்கு அனுக்கிரகம் செய்யும்பொழுது தொந்தரவை மாற்றிச் சௌகரியங்களை வழங்குகிறார்.

மத்துவாச்சாரியார் இமாலயத்தில் போய்க்கொண்டிருந்த பொழுது தன்னைத் தொடர்ந்து வரவேண்டாம் என்று சொன்ன பின்னும் பின்தொடர்ந்து வந்த சிஷ்யனைத் திரும்பிப் பார்த்து, ‘‘மடத்துக்குப போ!’’ என்று அவர் கையை அசைத்தவுடன், ஒரு சக்தி தோன்றி சிஷ்யனை ஆகாய வழியாகத் தூக்கிச் சென்று மடத்தில் போட்டுவிட்டது என்று ஒரு நிகழ்ச்சியுண்டு. பக்தன் அன்னையுடன் இணைந்து, தன்னை மறந்து தன் காரியத்திலோ, அன்னையின் சேவையிலோ ஈடுபடும் பொழுது வேலை நடக்கும் வேகம், அது நடக்கும் முறை, தன்மை பிரமிக்கும் அளவில் இருக்கும். ‘‘இரண்டு ஆண்டு காலத்தில் 50 ஏக்கர் காட்டை அழித்து நிலத்தைத் திருத்தினால், இப்பொழுது கொடுத்திருக்கும் இரண்டு லட்சத்திற்கு மேல் எத்தனை லட்சம் கேட்டாலும் கொடுக்கிறோம்’’ என்று ஒரு பிரம்மாண்டமான காட்டின் முன் நின்று 10 வங்கி அதிகாரிகள் அந்தக் காட்டின் சொந்தக்காரரான ஓர் அன்னையின் பக்தரிடம் கூறினார்கள். அன்று பிப்ரவரி 21. தரிசன நாள். அடுத்த தரிசனத்திற்கு முதல்நாள். ஏப்ரல் 23 அன்று அதே அதிகாரிகள் அங்கு வந்து 150 ஏக்கர் நிலம் திருத்தப்பட்டதைப் பார்த்து, ‘‘என்ன மாயம் செய்தீர்கள்?’’ என்று கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் திகைப்பில் ஆழந்தார்கள். இவ்வாறு மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு அன்னையின் பக்தர்களுடைய வேலை நடக்கும்.

யார் தொந்தரவுக்கு அஸ்திவாரமாக இருக்கிறார்களோ, அவர்களைக் கொண்டே அன்னை அந்தத் தொந்தரவை விலக்க முயல்வது அவர்களுக்கே உரிய பாணி.

அன்னையின் யோகப் பலனை யார் பெறலாம் என்ற வரையறை கிடையாது. அதைப்பெற விழைவோர் அனைவருக்கும் அது கிட்டும்.

‘தான் எழுதும் பொழுது பேனா முனையில் ஒன்றரை அங்குல அளவில் எலுமிச்சம் பழம்போல் ஓர் ஒளி ஏற்படுகிறது. எழுதும் எழுத்துத் தெரியவில்லை’ என்று அன்னை கூறுகிறார்.

தன் 60-ஆம் ஆண்டு பிறந்த நாளன்று அன்னையைத் தரிசிக்கச் சென்ற ஒரு பக்தரை, அன்னை, ‘‘உனக்கென்ன வேண்டும்? வயதாகிவிட்டதால் உடலில் பலம் வேண்டுமென்று நினைக்கின்றாயா? என்று கேட்டுவிட்டு, அவர் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தார். குழாயைத் திறந்ததும் தண்ணீர் கொட்டுவது போன்ற ஓர் உணர்வு முழுதும் பரவி பலத்தால் நிரம்பியது. பின்னர் அந்த முதியவர் 16, 18 சிறுவர்கள் ஓடும் கால் மைல், அரை மைல் ஓட்டங்களில் பங்கெடுத்து ஓடி விளையாடினார்.

அன்னையின் முறைகள் சிறப்பானவை; திறம்மிக்கவையும் கூட. ஒரு ஜட்ஜ் அன்னையின் பக்தர். அவர் ஓர் இளைஞரை ஆசிரமத்திற்கு அறிமுகப்படுத்தினார். இளைஞர் ஆர்வத்துடன் அன்னையை ஏற்றுக்கொண்டார். அடிக்கடி சமாதிக்கு வருவார். ஜட்ஜையும் அடிக்கடி சந்திப்பார். ஒரு நாள் இளைஞர் நீதிபதியைப் பார்க்க வந்தபொழுது இளைஞருடன் அவர் நண்பரும் வந்திருந்தார். நீதிபதி புதியவரைப் பற்றி விசாரித்தார்.

இளைஞர் மற்றவர் தன் நண்பரெனவும், இருவரும் சமாதிக்குச் சென்று திரும்புவதாகவும், நண்பர் சமாதிக்கு முதன்முறையாக வந்ததாகவும், சமாதியில் உட்கார்ந்த நண்பர் தான் ஆகாயத்தில் உயர்ந்து சென்று அருகே சுவரில் உள்ள மழை நீர் வடியும் குழாயின் உச்சியில் கொஞ்ச நாழிகை தொத்திக் கொண்டிருந்ததாகவும், இதையெல்லாம் ஆசிரமத்தில் அவருக்குப் பழக்கமான, அன்னைக்கு நெருக்கமான முதிய சாதகரிடம் சொன்னதாகவும், அவர், ‘‘அந்தக் குழாய் அன்னையின் அறையிலிருக்கிறது. உங்கள் நண்பருக்கும் அன்னைக்கும் முற்பிறவியில் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அவரது சூட்சும தேகம் சமாதி அருகே அவர் இருக்கும்பொழுது அன்னையை நாடிச் சென்றிருக்கிறது’’ என்று விளக்கமளித்ததாக நீதிபதியிடம் கூறினார். நீதிபதி இதைக்கேட்டுச் சிரித்தார். ‘‘இதெல்லாம் வெறும் கற்பனை. இம்மாதிரியான கற்பனைக்கு இடம் கொடுக்கக் கூடாது என அன்னையே சொல்லியிருக்கிறார்’’ என்றார்.

இளைஞர் ஆசிரமத்திற்குப் புதியவர். ஆனால் ஆர்வத்துடன் அன்னையை ஏற்றுக்கொண்டதுடன், அன்னையின் முறைகளை ஒவ்வொன்றாய்ப் பின்பற்றுபவர். நீதிபதி பெரியவர்; 30, 40 ஆண்டுகளாக ஆசிரமத்துடன் தொடர்புள்ளவர். இளைஞர் தன் கருத்தை நீதிபதியிடம் தெரிவிக்கவில்லை. அன்னையிடம் நெருங்கிய தொடர்புள்ள சாதகரின் கருத்தையே தெரிவித்தார். நீதிபதியின் சொற்கள் சரியானதாக இளைஞருக்குப் படவில்லை. உடனே தான் புதியதாக ஏற்றுக்கொண்ட discipline முறை அவருக்கு நினைவுக்கு வந்தது. பொருத்தமில்லாமல் ஒருவர் பேசினால், அவரது பேச்சைப் பற்றி மனத்தில் ‘சரி’, ‘தவறு’ என்ற கருத்தை அனுமதிக்காமல் மனத்தைத் தெளிவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதே அந்த முறை. பிரயத்தனப்பட்டு ஓரிரு நிமிடங்களில் இளைஞர் அதுபோன்ற தெளிவான மனநிலைக்கு வந்துவிட்டார். அதே கணத்தில் நீதிபதி பேச ஆரம்பித்தார். ‘‘நான் சொல்லியது சரியில்லை. சூட்சம தேகத்தைப் பற்றி எனக்கென்ன தெரியும்? மேலும், ஆசிரம சாதகர் அப்படிச் சொல்லியபின் நான் அதை மறுத்துப் பேசுவது சரியில்லை. அது மடத்தனம்’’ என்று முடித்தார். நீதிபதியின் பேச்சும், அவர்தன் மனநிலையை விவரித்ததும் இளைஞர்களுக்குப் புதியதாக இருந்தன. ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் கூறும் கருத்து அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றாலும், மனத்தில் அதைப்பற்றி நம் அபிப்பிராயத்திற்கு இடம் கொடுக்காவிட்டால், அன்னை உடனே செயல்படுவார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டனுக்கு வந்து திரும்பும் போது பாண்டிச்சேரிக்கு வர ‘சில்வியா’ என்ற பெண் திட்டமிட்டார். வியாபாரத்திற்காக பாண்டிச்சேரியிலிருந்து கைத்தறித் துணி வாங்கியது தவிர சில்வியாவுக்கு பாண்டிச்சேரியில் ஓர் ஆசிரமம் இருப்பதுகூடத் தெரியாது. லண்டனிலிருந்து பம்பாய் வந்தார். பம்பாயிலிருந்து விமானம் மாறி சென்னை வரவேண்டும். சென்னைக்கு விமானத்தில் இவருக்கு ஒரு சீட் ரிஸர்வ் செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் சில்வியா சீட் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும், சில்வியாவை அடுத்த விமானத்தில் போகும்படியும் சொன்னார்கள். அவர்கள் நாட்டில் இது போன்று ஒரு நிகழ்ச்சி நடக்காது. சில்வியா அபாரமாகக் கோபப்பட்டு, விமான நிலைய அதிகாரிகளிடம் சண்டை போட்டார். பலன் இல்லை. பாண்டிச்சேரியில் அவரைக் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்த்தவர் ஏமாந்தார். ஆசிரம விடுதியில் சில்வியாவுக்கு அறை ஏற்பாடாகியிருந்தது. சில்வியா வரவில்லை. மறுநாள் வந்தார். நண்பர் - வியாபாரி - சில்வியாவை மறுநாள் சந்தித்தார். முதன்முறையாகப் பார்க்கிறார். அப்பெண்மணி ஒரு நிலையில் இல்லை. பீதியே உருவாக இருந்தார். முகம் பேயறைந்தது போலிருந்தது. சில்வியா வியாபார விஷயம் ஒன்றும் பேசும் நிலையில் இல்லை. ‘‘இது என்ன இடம்? இந்த ஹோட்டல் பெயர் என்ன? அளவு கடந்த அமைதியாக இருக்கிறதே!’’ என்றார். பிறகு சில்வியா எதுவும் பேசவில்லை. பின்னர், நண்பர், ‘‘ஏன் தாமதம்?’’ என்று கேட்டவுடன், பீதி அதிகரித்தது சில்வியாவுக்கு. தான் வரவேண்டிய விமானம் தவறி விட்டதாகவும், அது தன் கண் முன்னாலேயே விமான நிலையத்தில் விழுந்து எரிந்ததாகவும், அந்த அதிர்ச்சி தாங்கவில்லை எனவும், இந்த ஹோட்டல் ரூம் அமைதியின் உறைவிடமாக இருப்பதாகவும் பேசி முடித்தார்.

அன்னையின் விடுதியில் தங்க ஏற்பாடு செய்த ஒரு விஷயம் மட்டுமே அன்னைக்கும் சில்வியாவுக்கும் உள்ள தொடர்பு. அவருக்கு நேர இருந்த விமான விபத்தை அற்புதமாக நீக்கிவிட்டார் அன்னை. சில்வியா, விபத்துக்கு ஆளான விமானத்தில் சீட் வேண்டுமென ஒரு புரட்சியே செய்துவிட்டார்!

ஒரு சேவை நிறுவனமும், வியாபார நிறுவனமும், சேர்ந்து ஒருவர் தலைமையில் செயல்பட்டது. மனம் அவருக்கு வியாபாரத்தில், சேவை உலகத்தாருக்கு. சேவை நிறுவனமானது ஒரு சந்தர்ப்பத்தில் அன்னைக்குச் சிறப்பான சேவை செய்ய ஆரம்பித்தது. சேவை பலித்தது. தொடர்ந்து, மிகச்சிறியதான வியாபார நிறுவனம், லட்சக் கணக்கில் வருவாயை ஈட்டியதும் அன்னையின் சேவை நாளுக்கு நாள் அதிகரிக்க சேவை நிறுவனத்தின் தலைவருக்கு பேரும், புகழும், நல்ல வசதியும் ஏற்பட்டன. பின்னர் வசதி பெருகி பேரும் புகழும் பெரும் அளவுக்கு வளர்ந்தன. தலைவருடைய நிலை அளவுக்கு மீறி உயருகிறதே தவிர சேவை நிறுவனம் இருமடங்கு, மூன்று மடங்குதான் பெருகியுள்ளது. வியாபார நிறுவனம் அளவு கடந்து பெருகி, மாநிலத்தில் முதன்மையாகவும், அகில இந்தியாவில் இரண்டாவதாகவும் உயர்ந்துவிட்டது. அதன் விரிவு 28 மடங்காக இருந்தது. முதலாளிக்கு அன்னையைப் பற்றி அதிகமாகத் தெரியாது. அன்னைக்கு தன் நிறுவனம் செய்யும் சேவையைப் பற்றியும் விவரமாகத் தெரியாது. ‘தெரியாது’ என்றாலும், சேவை தன் மகத்துவத்தை நிலைநாட்டிவிட்டது.

அன்னையை ஏற்றுக்கொண்ட ஒருவர் கொஞ்ச நாள் கழித்து தன் வாழ்க்கையை ஊன்றிப் பார்த்தால், அங்கு பிரச்சனை என்று ஒன்று இருக்காது. அப்படி மிச்ச சொச்சமாய் ஒன்றிருந்தால் அது அவர்களாகவே உற்பத்தி செய்ததாக இருக்கும்! தானே விரும்பி ஏற்படுத்தும் பிரச்சனைகளைத் தவிர அன்னை பக்தர்களுக்குப் பிரச்சனையில்லை.

***********



book | by Dr. Radut