Skip to Content

02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்

ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்

கல்கத்தாவில் வாழ்ந்த டாக்டர் ஒருவருடைய பிள்ளையாக மகான் ஸ்ரீ அரவிந்தர் அவதரித்தார். அவருக்கு இரு சகோதரர்கள். ‘ஸ்ரீ அரவிந்தர் எனப்பெயரிட்டது அதுதான் முதல் முறை’ என ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிட்டுள்ளார். தன் பிள்ளைகளுக்கு இந்திய மொழி, பழக்கங்கள், ஆசாரங்கள் எதுவும் தெரியலாகாது. அவர்கள் ஆங்கிலம் மட்டும் பயின்று, இங்கிலாந்துப் பழக்க வழக்கங்களைப் பெற்று, ஆங்கிலேயர்கள் போல வளர வேண்டுமென எண்ணிய தகப்பனார், குழந்தைகளை டார்ஜிலிங் நகரிலுள்ள ஓர் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தார். ஸ்ரீ அரவிந்தர் அப்பள்ளியில் சேர்ந்தவுடன், ‘ஒரு கரிய இருள் தன்னுள் புகுந்து நிலைத்து விட்டது’ என்கிறார்.

பிறகு தன் குழந்தைகளை இங்கிலாந்தில் கொண்டு போய்ப் பள்ளியில் சேர்த்து, அவர்கள் கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரை அங்கேயே விட்டிருந்தார் தந்தை. செயின்ட்பால் பள்ளியிலும், கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலையிலுள்ள கிங்க்ஸ் கல்லூரியிலும், ஸ்ரீ அரவிந்தர் பயின்று ஐ.சி.எஸ். முடித்தார். ஐ.சி.எஸ்ஸுக்குக் குதிரை சவாரி முக்கியமான பரீட்சை. ஆங்கில அரசுக்கு சேவை செய்ய மனமில்லாத ஸ்ரீ அரவிந்தர் ஐ.சி.எஸ். பரிட்சையில் தேறக்கூடாது என்ற நோக்குடன் குதிரை சவாரிக்கு செல்லவில்லை.

பரோடா மகாராஜா லண்டன் சென்றபொழுது தன் சமஸ்தானத்தை நிர்வகிக்கத் திறமையானவர் தேவை எனக்கருதி, ஸ்ரீ அரவிந்தரைத் தேர்ந்தெடுத்து ரூ.250 சம்பளத்தில் அவரை நியமித்தார். அங்கு அவர் கல்லூரி முதல்வராகவும் கொஞ்ச நாளிருந்து, பிறகு கல்கத்தா வந்தடைந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு ‘வந்தேமாதரம்’ என்ற பத்திரிகையில் எழுதி வந்தார். தேசியக் கல்லூரியின் முதல்வராகவும் பணி செய்தார்.

அது தீவிரவாதிகள் எங்கும் குண்டு வீச்சு நடத்திய காலமாதலால், சர்க்கார் இவரையும் தீவிரவாதியாகக் கருதியது. ஒரு குண்டு வீச்சு நடந்த பொழுது இவரைக் கைது செய்து அலிப்பூர் சிறையில் அடைத்தார்கள். அங்கிருந்த ஓர் ஆண்டு காலமும் ஸ்ரீ அரவிந்தர் யோகம் பயிலும் காலமாகக் கழிந்தது. அதன் மூலம் அவர் யோக சித்தி பெற்று கைதிகளையும், சிறைக் கம்பிகளையும் மரத்தையும், கோர்ட்டில் உள்ள போலீஸ், நீதிபதி, வக்கீல், எதிரி வக்கீல் ஆகிய எல்லோரையும் நாராயணனாகக் கண்டார். சித்தரஞ்சன்தாஸ் அவரின் வக்கீல். கேஸில் அவர் மீது குற்றமில்லை. தன் வக்கீலுக்கு வேண்டிய விஷயங்களை அவர் சொல்ல முயற்சி செய்தபொழுது அவருள்ளிருந்து அசரீரியாக ஒரு குரல், ‘‘நீ எதுவும் பேச வேண்டாம். கேஸை நடத்தும் பொறுப்பு உன்னதல்ல. நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று கூறியது.

கேஸில் அவர்மீது குற்றம் ருசு ஆகாமல் விடுதலை செய்யப்பட்டவுடன் அதே குரல் அவரைச் சந்திர நாகூர் செல்லும்படி பணித்தது. அங்கிருந்து புதுச்சேரிக்குப் போகப் பணித்தது அதே குரல். அதன் ஆணையைச் சிரமேற்கொண்டு புதுவை வந்த ஸ்ரீ அரவிந்தர், தன் இறுதிக்காலம் அவரை அங்கேயே தங்கிவிட்டார்.

புதுச்சேரி அந்த நாட்களில் பிரெஞ்சுப் பகுதியானதால், அது விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டிஷாருடைய கோபத்திற்காளான சுதந்திர வீரர்களுக்குப் புகலிடமாக இருந்தது. அப்படி புதுவையை நாடி வந்தவர்கள் வ.வே.சு. அய்யர், சீனுவாச அய்யங்கார், சுப்ரமணிய பாரதி போன்றவர்கள். ஸ்ரீ அரவிந்தர் புதுவை அடைந்தவுடன் சங்கர செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார். ஆரம்ப காலத்தில், அதாவது 1910ல் இங்கு அவர் வந்ததிலிருந்து 1920ல் அன்னை மீண்டும் இவருடன் வந்து சேரும் வரை ஸ்ரீ அரவிந்தர் பல வீடுகளில் தங்கியிருந்து, கடைசியாக இப்பொழுது ஆசிரமம் என நாம் அறியும் தபோவனத்தை வந்து அடைந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள யோகி ஒருவர், ‘‘வட நாட்டிலிருந்து ஒரு பெரிய மகான் தமிழ் நாட்டிற்கு சமீபத்தில் வருவார். அவரை ‘உத்தரயோகி’ என நாம் அறிவோம். உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் செயல்கள் புரிய அவர் இங்கு வருகிறார். அவர் ஒரு மூன்று இலட்சியங்களை உலகுக்கு அறிவிப்பார்’’ எனச் சொல்லியிருந்தார். ஸ்ரீ அரவிந்தர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் அந்த யோகி கூறியதைப் போலவே மூன்று இலட்சியங்களை வெளியிட்டுள்ளார்.

புதுவை வந்தவுடன் ஸ்ரீ அரவிந்தரோடு 4, 5, சாதகர்கள் இருந்தார்கள். அவர்கள் ஸ்ரீ அரவிந்தரின் நண்பர்கள் போலவே பழகி வந்தார்கள். ஒரு வகையில் ஸ்ரீ அரவிந்தருடைய ஆரம்ப நாட்கள் சிரமமானவை எனக் கருதப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவதற்கான செய்திகளும் உள்ளன. மற்றொரு வகையில் அவருக்குச் சிரமம் அடிக்கடி வருவதானாலும், வருவது போல் தோன்றி மறைந்தன என்பதற்கு உரிய செய்திகளும் உள்ளன. ‘35 ரூபாய் வாடகை கொடுத்து, 1910ல் ஸ்ரீ அரவிந்தர் தங்கியிருந்தார்’ எனவும், வெளியில் நிகழ்ந்த ஒரு திருமணத்திற்குப் போக இருந்த சமயத்தில் இருந்த ஒரே வேஷ்டியும் கிழிந்துவிட்டதால், கிழிந்ததைத் தைத்து உடுத்திக்கொண்டு போனார் எனவும் ‘ஐந்து பேரும் ஒரே துண்டைப் பயன்படுத்திக்கொண்டார்கள்’ எனவுமான பல செய்திகளை நாம் கேட்கிறோம்.

சென்னையில் அந்த நாளில் பிரபல வக்கீலாக விளங்கிய துரைசாமி ஐயர் ஒரு நாள் ஸ்ரீ அரவிந்தரைப் பார்க்க வந்திருந்தார். ஸ்ரீ அரவிந்தருக்கு அவரைத் தெரியாது. வந்தவர் சி.ஆர். தாஸ் தன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் அனுப்பியதாகக் கூறியவாறு வந்தார். மீண்டும் சில முறை ஐயர் ஸ்ரீ அரவிந்தரைப் பார்க்க வந்தார். ஒரு முறை வந்தபொழுது, ஐயர் ஸ்ரீ அரவிந்தரிடம் ஒரு கேஸைப்பற்றி ஆலோசனை கேட்க ஆரம்பித்தார். தான் வக்கீல் இல்லை எனவும், தனக்கு ஆலோசனை சொல்லும் திறனில்லை எனவும் ஸ்ரீ அரவிந்தர் கூறினார். அந்த கேஸ் ஜெயித்தால் தனக்கு ஓர் இலட்ச ரூபாய் பீஸாக வரும் எனக்கூறிய ஐயர், ஸ்ரீ அரவிந்தரை கேஸ் கட்டுகளைப் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். ஐயர் கட்டைப் பிரித்து அவர் முன் வைத்தவுடன் பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஒரு வரியைச் சுட்டிக்காட்டி ‘‘இந்த விவரம் முக்கியமானது’’ என்று கூறினார்.

சிறிது காலத்திற்குப் பிறகு துரைசாமி ஐயர் மீண்டும் ஸ்ரீ அரவிந்தரைப் பார்க்க வந்தார். தான் அவர் சொன்னதுபோல் கேஸை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ஆர்வத்தோடு கூறியதுடன், தனக்கு பீஸ் இலட்ச ரூபாய் கிடைத்தது எனச் சொல்லி அப்பணத்தை ஸ்ரீ அரவிந்தருக்குக் கொடுக்க முன்வந்தார். ஸ்ரீ அரவிந்தர், ‘‘எனக்கு பணத்தால் பயன் கிடையாது. எனக்குச் செலவுகளில்லை. பணம் வேண்டாம்’’ எனக் கூறிவிட்டார்.

‘‘உங்கள் ஆலோசனையாலேயே கேஸ் வெற்றி பெற்றது. ஆகவே பீஸ் உங்களுக்குத்தான் சேர வேண்டும்’’ என ஐயர் கூறியதை ஸ்ரீ அரவிந்தர் ஏற்கவில்லை. ஐயர் பிடிவாதம் செய்யவே, ஸ்ரீ அரவிந்தர் அன்னையைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி அவருடைய கருத்தைக் கேட்டார். அன்னை, ‘‘பத்தாயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்’’ எனச்சொல்ல, ரூபாய் பத்தாயிரத்தைப் பெற்றுக்கொண்டார் ஸ்ரீ அரவிந்தர்.

1926ல் ஸ்ரீ அரவிந்தர் முழுமையாகத் தனிமையை நாடினார். எனினும் அதுவரை கூட அவர் தனித்தே இருந்தார். மாலையில் சாதகர்களுடன் அமர்ந்து அவர்களுடன் உரையாடுவதைத் தவிர அவர் தனியாகவே இருந்தார். அவரைப் பார்க்க வருபவர்களை மாலையில் சாதகர்களுடன் வரச்சொல்வார். காங்கிரஸ் தலைவரான சீனிவாச ஐயங்காரும், பாரதியாரும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் எப்பொழுது வந்தாலும் நேரே ஸ்ரீ அரவிந்தரைச் சென்று பார்த்து உரையாடுவார்கள்.

1914ல் அன்னையும் அவர் கணவரும் முதன் முறையாகப் புதுவைக்கு வந்தபொழுது ஸ்ரீ அரவிந்தரின் கருத்துக்களைக் கேட்டு, ‘‘இவையெல்லாம் கட்டுரைகளாக வெளிவர வேண்டும்’’ என்று வற்புறுத்தினார்கள். அவர்களுடைய தூண்டுதலின் விளைவாக, ஸ்ரீ அரவிந்தர் ‘ஆரியா’ என்னும் மாத இதழை ஆரம்பித்தார். ஆரம்பிக்கும் காலத்தில் அவர்கள் மூவரும் எழுதுவது என்று திட்டம். இதழை ஆரம்பித்தவுடன் யுத்தம் வந்துவிட்டதால் அன்னையும் அவர் கணவரும் பிரான்ஸ் திரும்பிவிட்டார்கள். அதனால் ஸ்ரீ அரவிந்தரே பத்திரிகைக்குத் தேவையான அனைத்தையும் எழுதி நிர்வகிக்க வேண்டியதாயிற்று. 1914லிருந்து 1920க்குள் ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய அடிப்படை நூல்களான ‘Life Divine’, ‘Synthesis of Yoga’, ’Human Cycle’, ‘Ideal of Human Unity’, ‘Future Poetry’, ‘Foundations of Indian Culture’ ஆகியவற்றை, ‘ஆரியா’ பத்திரிகைகளில் ஒரே சமயத்தில் ஆரம்பித்துத் தொடர்ந்து எழுதி முடித்தார். உலக மேதைகளில் பலர் எழுதியது ஒன்று அல்லது இரண்டு முக்கிய நூல்களே. இவையெல்லாம் கதைகளோ, கட்டுரைகளோ அல்ல; உலகம் சீர் பெற்றுத் துலங்கத் தேவையான புதிய தத்துவங்கள். ‘‘இதுவரை உலக வரலாற்றில் 5 பெரும் நூல்களை ஒரே சமயத்தில் எழுத ஆரம்பித்த மேதை எவருமில்லை’’ என ஒரு பிரெஞ்சு ஆசிரியர் கூறுகிறார்.

ஸ்ரீ அரவிந்தர் எழுதியவற்றை 5 ஆண்டுகளில் யாராவது படித்து முடித்துவிட்டால் அவரை ஓர் அவதார புருஷராகவே கருதலாம். 1934ல் ஸ்ரீ அரவிந்தரை அவரது யோகத்தைப் பற்றி விளக்கங்கள் எழுத வேண்டும் என்று ஒருவர் கேட்டபொழுது, ஸ்ரீ அரவிந்தர், ‘‘நான் எழுதினேன். எவருக்கும் இதுவரை புரியவில்லை’’ என்று பதில் சொல்கிறார். ‘லண்டன் டைம்ஸ்’ என்ற பிரபலப் பத்திரிகை ஸ்ரீ அரவிந்தரின் நூல்களைப் பற்றி, ‘‘உலகத்தில் இது வரை வெளிவந்த நூல்களில் மிகச்சிறந்தவை’’ என வர்ணிக்கிறது. மேலை நாடுகளில் ஸ்ரீ அரவிந்தரை, ‘மனித சமுதாயத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்’ எனக் கருதுகின்றனர்.

இங்கிலாந்திலிருந்து ஸ்ரீ அரவிந்தர் இந்தியா திரும்பியவுடன், அவரது தலையாய இலட்சியம் இந்திய விடுதலையாகவே இருந்தது. ஒரு தடவை அவரது சகோதரருக்குக் கடுமையான ஜூரம் வந்தது. அச்சமயம் அங்கு வந்த நாகசன்னியாசி ஒருவர், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து ஒரு மந்திரத்தை ஜபித்து கத்தியால் நீரில் கீறி, அந்தத் தண்ணீரைப் பருகச்சொன்னார். பருகியவுடன் தன் சகோதரரின் கடுமையான ஜுரம் மறைந்த ஆச்சரியத்தை ஸ்ரீ அரவிந்தரால் தாங்க முடியவில்லை. இது போன்ற ஒரு சக்தியை யோகத்தால் பெற்று அதைப் பயன்படுத்தி இந்தியாவை விடுதலை செய்ய வேண்டுமென முடிவு செய்தார். அதனாலேயே அவர் யோகப் பாதையை நாடினார்.

ஸ்ரீ அரவிந்தர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி, கப்பலிலிருந்து இறங்கித் தாய் நாட்டின் மண்ணில் காலடி வைத்தவுடன், ‘‘ஒரு பேரமைதி படர்ந்து வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு என்னுள் பாய்ந்து, மனம், உடல் இவற்றில் புகுந்து ஜீவனின் ஆழத்தைத் தொட்டு, இறுதிக் காலம்வரை அப்படியே நிலைத்துவிட்டது’’ என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். டார்ஜிலிங் பள்ளியில் சேர்க்கப்பட்டபொழுது தன்னுள் புகுந்த இருள் இதுவரை தன்னுடன் இருந்ததாகவும், இப்பொழுதுதான் விலகியதாகவும் கூறுகிறார்.

யோகத்தை மேற்கொண்டவர், தாம் ஓர் அவதார புருஷர் என்பதை அறிந்தாரில்லை. ‘நாடு சுதந்திரம் பெற தமக்கு யோக சக்தி தேவை’ என்பது மட்டுமே அவர் மனதில் இருந்தது. அந்த நோக்கோடு அவர் பல யோகிகளை அணுகினார். அவர்கள் தத்தம் பயிற்சிகளைச் சொல்லிக்கொடுக்க முன்வந்தனர். ஆனாலும் ஸ்ரீ அரவிந்தருக்கோ யோகத்தில் முன்னேற்றம் என்பது, அவருடைய பிறப்பின் அமைப்புப்படி ஓர் அவதார புருஷனுக்கு நேரக்கூடிய விதத்தில்தான் நிகழ வேண்டியதாக இருந்தது. மனித குரு அவருக்கு வெகுநாள் வரை தேவைப்படவில்லை.

வேதம், உபநிஷதம் போன்ற நூல்களை அவர் சாத்திரங்களைப் பயிலும் ஆசார முறைப்படி சாஸ்த்ரோக்தமாகப் பயிலவில்லை. சொல்லப்போனால், அவர் வேதத்தைப் படிக்கவேயில்லை. ஆனால் அவர் மேற்கொண்ட யோகப் பயிற்சிகளால் வேதத்தால் கிடைக்க வேண்டிய யோகானுபவம் கிடைத்தது. ஒரு சமயம் தியானத்தில் வரிசையாகத் தெய்வங்களைப் பார்த்தார். அவற்றில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாத் தெய்வங்களையும் அவர் கேள்விப்பட்டிருந்தார். தான் கேள்விப்படாத ஒரு தெய்வம் அவருக்கு விளங்கவில்லை. புதுவை வந்தபின் சுப்பிரமணிய பாரதியாருடன் வேதங்களைப் பயிலும் பொழுது அவர் ஒரு தெய்வத்தை — இளா — பற்றிய விளக்கத்தைப் படித்தவுடன் தன் தியானத்தில் கண்ட தெய்வத்தை விளங்கிக்கொண்டார். அவதார புருஷர் என்பதால், தனக்குப் பயிற்சி அதிகமில்லாமலேயே யோக அனுபங்கள் வரும் சிறப்பை அவரே முதலில் தெரிந்து கொள்ளவில்லை.

விஷ்ணு லீலி என்ற ஒரு மராட்டிய யோகியைச் சந்தித்த சமயம், லீலி ஸ்ரீ அரவிந்தருக்கு மௌனப் பயிற்சி அளிக்கவேண்டி, ‘‘கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தால், எண்ணங்கள் வெளியிலிருந்து வருவது தெரியும். அவற்றை முயன்று விலக்க வேண்டும்’’ என்று அவருக்கு உபதேசம் செய்தார். இந்தப் பயிற்சியை ஆரம்பிப்பது கடினம். அதில் வெற்றி கண்டால் பல ஆண்டுகளுக்குப் பின் மௌனம் பலிக்கும். ஸ்ரீ அரவிந்தருக்கு அன்றே மௌனம் பலித்தது. 3 நாட்களில் 30 வருட யோகத்தை முடித்துவிட்டார்.

ஸ்ரீ அரவிந்தர் நிகழ்ந்து கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரைத் தவிர்க்க, தன்னுடைய யோக சக்தியால் முயன்றார். ‘அது தவிர்க்க முடியாதது’ என்று அறிந்தவுடன், தன் யோகத்திறன் முழுவதையும் நேசநாடுகளுக்குக் கொடுக்க முடிவு செய்தார். உலகத்தின் பொய்மைக்குத் தலைவராக 4 அசுரர்கள் உண்டு. அவர்களை அன்னை மரணத்தின் தலைவன், இருளின் தலைவன், பொய்யின் தலைவன், தேசங்களின் தலைவன் (Lord of Death, Lord of Darkness, Lord of Falsehood, Lord of Nations) எனக் குறிக்கிறார். தேசங்களின் தலைவனே இரண்டாம் உலகயுத்தத்தை ஆரம்பிக்கும்படி ஹிட்லரைத் தூண்டியவன். யுத்தம் முடிந்தால் அவன் அழிந்து விடுவான் எனத் தெரிந்து நேசநாடுகளுக்குத் தன் ஆத்மீகத் திறனை முழுவதுமாகக் கொடுத்தார் ஸ்ரீ அரவிந்தர். ‘இது அன்னையின் யுத்தம்’ எனவும் அவர் சொல்வதுண்டு. உலகம் சக்தியத்தை நோக்கி முன்னேறுவதால், இவர்களில் இருவர் அழிந்துவிட்டதாக அன்னை கூறுகிறார். சத்தியத்தின் முழு ஆட்சி ஏற்பட மற்ற இரு அசுரர்களும் அழியவேண்டும்.

ஸ்ரீ அரவிந்தருக்கு யோகம் ஆரம்பித்தவுடன் மௌனம் சித்தித்தது. மோட்சம் கிட்டியது. புத்தர் அனுபவித்த நிர்வாண நிலை ஏற்பட்டது. இவையெல்லாம் யோக வரலாற்றில் பெரும் சிறப்புகளானாலும், ஸ்ரீ அரவிந்தர் தன் இலட்சியம் பூர்த்தியாக இவையெல்லாம் பயன்படாது என உணர்ந்தார். அலிப்பூர் சிறையிலிருந்த பொழுது ஸ்ரீ அரவிந்தர் தியானம் செய்யும் சமயங்களில் சுவாமி விவேகானந்தர் அவர் அருகில் வந்து நின்று தியான மார்க்கத்தை உணர்த்துவது உண்டு. 15 நாட்கள் அப்படி விவேகானந்தர் தனக்கு யோகத்தைப் பயிற்றுவித்து வழி நடத்தினார் என அவர் கூறுகிறார்.

சிருஷ்டி பல நிலைகளையுடையது. ஜடப் பொருள், உணர்வு, அறிவு என்பன கீழேயுள்ள முதல் 3 நிலைகள். அவை உடல், நெஞ்சம், மனம் இவற்றால் நம்மிடம் உறைகின்றன. ‘சச்சிதானந்தம்’ என்பது ஆன்மாவின் உயர்ந்த நிலை. சத்து, சித்து, ஆனந்தம் ஆகியவை சச்சிதானந்தமாகின்றன. இவற்றிடையேயுள்ள நிலையை உபநிஷதங்கள் விஞ்ஞான உலகம், சத்திய லோகம் என அழைக்கின்றன. ‘மனம்’ என்பது மனிதனின் தலைவன். அதை மட்டும் தனியாகக் கூர்ந்து பார்த்தால், அதன் இயல்பு பல நிலைகளைக் கொண்டது என்பது புரியும். அதன் நிலைகள் 6. சாதாரண மனிதனுடைய மனம் முதல் நிலையை ஏற்றுக் கொண்டால், மௌனத்தால் ஆட்கொள்ளப்பட்ட முனிவர் மனம் இரண்டாம் நிலையிலுள்ளது. ஸ்ரீ அரவிந்தர் இதை Higher mind என்கிறார்.

உலக நிகழ்ச்சிகளை ஞான திருஷ்டியால் காணும் ரிஷியின் மனத்தை அடுத்த கட்டமாக illumined mind என்கிறார். அடுத்தது யோகியின் மனம் (Intuitive mind). இதற்கு ஞானத்தை நேரடியாகப் பெறும் திறனுண்டு. நாம் ‘சுவர்க்க லோகம்’ என்று தெய்வங்கள் உறையுமிடத்தைக் குறிப்பிடுகிறோம். சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் போன்றவர்கள் உள்ள லோகம் அது. அடுத்த நிலையிலுள்ள அதை ஸ்ரீ அரவிந்தர், Overmind என்கிறார். இவையெல்லாம் சிருஷ்டியின் கீழ் பாதியிலுள்ள நிலைகள். அடுத்த உலகத்தை - வேத, உபநிஷதங்கள் விஞ்ஞானம் எனக் குறிக்கும் உலகத்தை - ஸ்ரீ அரவிந்தர் Supermind என்கிறார். இது சத்தியம் உறையுமிடம். அதாவது சத்திய லோகம். அடுத்த மூன்று நிலைகளும் மனத்தைத் தாண்டியவை; ஆத்மாவைச் சேர்ந்தவை. அவை ஆனந்த லோகம், சித் லோகம், சத் லோகம் ஆகும். இறைவன் இதற்கெல்லாம் அப்பால் இருக்கின்றான்.

யோகி தன் இஷ்டப்படி தவம் பலித்தால் ஏதாவது ஓர் இலட்சியத்தை நாடுகிறான். காய கல்பம் வேண்டுபவர் உண்டு. சிவபதம் நாடுபவர் அநேகர். வைகுந்தப் பதவிக்காக விஷ்ணுவின் திருவடி நிழலை இறைஞ்சுபவர் பெரும்பாலோர். சிருஷ்டிக்கு அப்பாலுள்ள இறைவனுடன் இரண்டறக் கலந்து பிறவிச் சுழலிலிருந்து விடுபட விழைவோர் ஞானிகள், யோகிகள், தவசிகள் ஆவர். பல்வேறு சித்துக்களை நாடி அவை பலித்து சித்தர்களானோர் பலர். ‘பதினெண் சித்தர்’ என்பது வழக்கு. பல பிறவி எடுத்து உழவாரப் படைகொண்டு இறைவனுக்குத் தொண்டு செய்ய பிரார்த்திப்போர் உண்டு. ‘எல்லாப் பிறவிகளிலும் உன் புகழ்பாட எனக்கு அருள்வாய்’ என பக்தன் வேண்டுகிறான்.

யோகம் பலவகை. மனிதர்கள் பல ஆயிரம் வகை. தவம் பலித்தால், தான் விரும்பியது பலிக்கிறது. இது ஒரு பெரிய பாரம்பரியத்தோடு அமைந்த இந்திய மரபு. சுருக்கமாகச் சொல்ல இயலாத ஒன்று. ஸ்ரீ அரவிந்தர் தாம் செய்த யோகப் பரீட்சைகளின் விளைவாகக் கண்டு கொண்டதன் சுருக்கம் :-

  1. யோகி தவமுயற்சியால் மோட்ச பதவியை முதலில் அடைகிறான். அவன் அதை ஏற்றுக்கொண்டால் அவனது யோகம் முடிவடைந்துவிடும்; பிறவியும் முடிந்துவிடும். அவனுக்கும் உலகத்திற்கும் இனித்தொடர்பு கிடையாது. உலகம் பொய்யிலிருந்து விடுபட்டு சத்திய ஆட்சியை நிறுவ வேண்டுமானால், யோகி மோட்சத்தை ஏற்றுக் கொள்ளாமல் உலகிலேயே இருக்க வேண்டும்.
  2. மனித ஜீவனுக்கு அதில் அடைபட்டுள்ள ஆத்மாவை விடுதலை செய்து மோட்சத்திற்கு அனுப்பும் மனம், நெஞ்சம், பிராணன், உடல், இருதய குகை ஆகிய இடங்களில் ஒரு கதவு உண்டு. எந்தக் கதவைத் திறந்து கொண்டும் ஆத்மா மோட்சப் பாதையில் செல்லலாம். எந்தக் கதவைத் திறக்க வேண்டுமோ அந்தக்கரணத்திலுள்ள அகந்தை மட்டும் கரைந்தால், கதவு திறக்க அதுவே போதுமானதாகும்.
  3. மனிதன் தான் ஒரு ஜீவனின் ஆத்மா என்பதைப் போலவே, இந்தப் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும் இருக்கின்றான். சிருஷ்டிக்கு அப்பாலுள்ள இறைவனுக்கும் உரிமையுள்ள ஒரு இடம் அவன் ஆத்மாவில் உண்டு. அந்த நிலையை அடைந்தால் அவன் இறைவனோடு ஐக்கியமாகலாம்.
  4. முனிவருடைய நிலை பெரியதானாலும் அந்நிலை ஆத்ம ஞானத்தைப் பெற மட்டுமே உதவும்.
  5. ரிஷியின் சக்தி அதைவிடப் பெரியது. அதனால் அதைவிடப் பெரிய ஞானத்தை அவர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். யோகியும் அடுத்த கட்டத்தைச் சார்ந்தவரே.
  6. தெய்வ லோகத்திலுள்ளவர்கள் இறைவனை நோக்கி முன்னேறப் பிரியப்பட்டால், அந்த லோகத்திற்கு அத்திறனில்லை. பூமியில் மானுடராய்ப் பிறந்துதான் அந்த முன்னேற்றத்தைப் பெறலாம். சிருஷ்டியில் மனிதனுக்குள்ள இந்தச் சிறப்பு தெய்வங்களுக்கில்லை. (‘மானிடர் தேவரின் மேலெனச் செய்தான்’ என ஒரு வாக்குண்டு).
  7. அதற்கடுத்த மகர லோகம், விஞ்ஞான லோகம், சத்திய லோகம் எனப் பலவாறாகச் சொல்லப்படும் உலகத்திலுள்ள சக்தி, சத்தியத்தின் பெரும்சக்தி. அங்குள்ள வாழ்வு சத்திய ஜீவியம். அந்த லோகத்திலுள்ள சக்திக்குப் பூமியிலுள்ள பொய்யையும், மரணத்தையும் அழிக்கும் திறனுண்டு. அந்த சக்தியை முக்தி பெற்ற முனிவர் அந்த லோகத்திற்குச் சென்று பெற்றால், அவர் மட்டுமே சூட்சுமமாக அனுபவிக்கலாம். உலகுக்கு வழங்க முடியாது.
  8. அந்தச் சத்திய லோக சக்தி உலகுக்கு வந்து செயல்படுவது சாத்தியம். வேத கால ரிஷிகள் இந்த லோகங்களுக்கும் சென்றிருக்கின்றனர்.
  9. யோகி தன் தவத்தால் இந்த லோகத்தை அடைந்து அங்குள்ள சத்திய சக்தியை உலகுக்குக் கொண்டு வரமுடியும் அது பலித்தால், சமுதாயத்தின் முயற்சியின்றி மரணமும், பொய்யும், துன்பமும் உலகை விட்டு அகலும். 

மேற்சொன்ன முடிவுகளுக்கு ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் வந்த பின்னரே, 1920ல் அந்தப் பாதையில் யோகத்தை மேற்கொண்டார்கள். ‘பூரணயோகம்’ எனத் தன் யோகத்தை ஸ்ரீ அரவிந்தர் அழைப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. ஒவ்வொரு கட்டமாகப் பூரண யோகி தன் நிலையை உயர்த்தியவுடன், அந்நிலையின் சக்தி அவனது ஜீவனில் இறங்கி, அவனது கரணங்களையெல்லாம் அந்த லோகத்தின் திறனுக்கு உயர்த்தி விடுகிறது. உதாரணமாக பூரணயோகி ரிஷியின் நிலையை எய்தினால் அவனது மனம், உயிர், உடல் ஆகியவை ரிஷியின் யோக சக்தியால் பூரணமாக நிரப்பப்பெறும்.

1926ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தருக்கு அத்தகைய பூரண நிலை (Overmind) தெய்வலோக சக்தியில் பலித்தது. ஸ்ரீ அரவிந்தர் தெய்வ லோக நிலையை அடைந்தது மட்டுமல்லால், தெய்வலோக சக்தி தன் இடத்திலிருந்து பெயர்ந்து இறங்கி வந்து அவருடைய மனம், உயிர், உடல் ஆகியவற்றைப் பூரணமாக நிரப்பியது. அதன் பின்னரே ஸ்ரீ அரவிந்தர் முழுமையாகத் தனிமையை நாடினார். 1950ல் ஸ்ரீ அரவிந்தர் சத்திய லோகத்தை (Supermind) அடைந்து, முன் போலவே அவர் உடல், உயிர், மனம் ஆகிய கரணங்களெல்லாம் சத்தியலோக சக்தியால் நிரப்பப்பெற்றார். பூரண யோகம், ஸ்ரீ அரவிந்தருக்குப் பூரணமாகப் பலித்துவிட்டது. அடுத்த கட்டம் அது உலகுக்குப் பலிக்க வேண்டும்.

1926-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதியைச் சித்தியடைந்த நாள், வெற்றித் திருநாள் என ஆசிரமத்தில் குறிப்பிடுவது வழக்கம். அது அன்றிலிருந்து தரிசன நாளாக இன்றுவரை இருந்து வருகிறது. தெய்வலோக சக்தியை (overmind) ஸ்ரீ அரவிந்தர் இதற்கு முன் பெரும் அளவில் பெற்றிருந்தாலும், அன்றைய தினத்தில் அந்தச் சக்தி அவரது உடலில் பாய்ந்து, நிறைந்தது, பூரண சித்தியை அளித்தது. அதேபோல் சத்திய லோக சக்தி (Supermind) ஸ்ரீ அரவிந்தரிடம் பல நிலைகளில் பெருவாரியாக இருந்தாலும், 1950ல் அவர் அந்தச் சக்தி பூரணமாகத் தன்னுடலில் பாய்ந்து நிரந்தரமாக நிறைந்து (Supramental Siddhi) தாம் இலட்சியமாகக் கொண்ட சத்திய லோக சித்தியை அளித்து, தம் வாழ்வை சத்திய ஜீவியமாக மாற்ற முயல்வதை உணர்ந்தார். அவரது யோகம் அவருக்குப் பலித்துவிட்டது. அவரது இலட்சியமான பூரண யோகம் உலகுக்குப் பலிக்க வேண்டும் என்பதால், அவர் முன் உள்ள பிரச்சனைகள் இரண்டாகப் பிரிந்து தெரிந்தன.

1. சித்தித்த பலனைப் பெற்று அதன் மூலம் உலகம் அந்தப் பலனை ஏற்றுக்கொள்ளும் வரை உலகத்தில் காத்திருத்தல், 2. தமக்குக் கிடைத்த அந்தப்பலனை தாம் பெறாமல், தாம் சூட்சும உலகுக்குச் சென்று உலகம் அப்பலனை விரைவில் பெறத் தம் யோகத்தைச் சூட்சும உலகிலிருந்து தொடர்தல்.

முதல் முடிவை ஏற்றுக்கொண்டால், பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உலகம் அடையப் போகும் பேறு 300 ஆண்டுகளில் உலகத்திற்குக் கிடைத்து, மரணம் ஒழிந்து சத்திய ஜீவியம் ஏற்படும். தாம் யோக சித்தி பெற்றதைப் போல 12 பேர் பெற்றால் 300 ஆண்டுகளுக்குப்பின் நிகழப்போவது அன்றே நிகழும். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடலை நீத்தால் சத்திய ஒளியாகிய பொன்னொளி புனிதமான அந்த உடலில் உடனே வந்து தங்கும். ஆனால் அங்கு அது நிலைக்க முடியாது. ஒளி மீண்டும் பிறப்பிடத்திற்கே செல்லும். இருப்பினும் இப்பூமியில் ஒரு முறையாவது அப்பொன்னொளி சுடர்விட்டுப் பிரகாசித்துத் தன் வித்தை ஊன்றிவிடும். ‘தான் சூட்சும உலகுக்குச் சென்று யோகத்தைத் தொடருவதே சிறந்தது’ என முடிவு செய்து 1950, டிசம்பர் 5-ஆம் நாள் சமாதியடைந்தார் ஸ்ரீ அரவிந்தர்.

ஸ்ரீ அரவிந்தர் தம் உடலில் உள்ள அனைத்து யோக சக்திகளையும் அன்னையின் உடலில் புகுத்திவிட்டார். அவரது உயிர் உடலை விட்டு நீங்கிய பின் உடல் பொன்னொளியால் நிரம்பிவழிந்து அப்படியே 3 நாள்கள் இருந்தது. பொன்னொளியில் பிரகாசித்த ஸ்ரீ அரவிந்தரின் பூத உடலை இலட்சக் கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். பொன்னொளி பின்னர் இறங்கியது. 5-ஆம் நாள் அவரது புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அன்னை இனி ஆசிரமப் பொறுப்புடன், சாதகர்களுடைய யோகப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதுடன், ஸ்ரீ அரவிந்தரது யோகத்தையும் அவர் விட்டுப்போன கட்டத்திலிருந்து தொடர வேண்டும். அது அன்னைக்கு ஒரு பெரும் பொறுப்பாக அமைந்தது. அந்தக் கடினமான பணியை அன்னை மேற்கொண்டார்.

பிரவாகமாகப் பொன்னொளி பூவுலகத்தின் மேல் பாய்ந்த அதே சமயம், புவியில் உள்ள இருள் பிரவாகமாகப் பொங்கி எழுந்து அப்பொன்னொளியை விழுங்குவதையும் அன்னை கண்டார். ‘‘இன்றிலிருந்து பிப்ரவரி 29, இறைவனின் தெய்வத்திருநாளாகும்’’ என உலகுக்கு அன்னை அறிவித்தார். அன்னையின் யோகம் விரைந்து வீறு கொண்டு முன்னேறியது. 1959ல் சூட்சும லோகத்தில் ஸ்ரீ அரவிந்தரை அன்னை 1950க்குப் பின் முதன் முதலாகப் பார்த்தார். அதிலிருந்து அன்னை ஸ்ரீ அரவிந்தரைத் தினமும் சூட்சும உலகில் சந்தித்து அவர் உயிருடன் இருக்கும் பொழுது பழகியதைப் போலவே பழக ஆரம்பித்தார். 1962 அன்னையின் யோகத்தில் முக்கிய பெரிய மாறுதல் ஏற்பட்ட கட்டம். ‘‘1967லிருந்து உலக அரசாங்கங்களெல்லாம் சத்திய சக்திக்கு உட்படும்’’ என அன்னையிடம் ஸ்ரீ அரவிந்தர் தெரிவித்தார். ‘‘4-5-67 அன்று சத்திய லோக சத்தி புவியின் வாழ்க்கையில் மேலும் ஒரு கட்டத்தில் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்தியது’’ எனவும், ‘‘உலக அரசுகள் அச்சக்திக்கு மேலும் கட்டுப்படுவார்கள்’’ எனவும் கூறி, அன்று விசேஷமாகத் தரிசனம் அளித்தார் அன்னை.

மேலும் 1969-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி சத்திய லோக சத்தி மேலும் வெற்றியடைந்து உருவம் தாங்கி அன்னை முன் வந்து காட்சியளித்து. அன்னை அதை ‘‘சத்திய மனிதன்’’ (Superman) என்றார். அன்னையின் யோகம் மேலும் விரைந்து செயல்பட்டதுடன் விரிந்து பலிக்க ஆரம்பித்தது. ஸ்ரீ அரவிந்தர், ‘‘மனத்தின் இருள் நிறைந்த பகுதியை மாற்ற முடியாது. அதை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை’’ எனக் கூறியிருந்தார். அப்பகுதியை அவர் ‘அறியாமையான மனம்’ (Physical mind) என்பார். அது மாற ஆரம்பித்து விட்டதை அன்னை தன் யோகத்தில் கண்டார். அன்னையின் யோக சித்திகள் பரந்தும், உயர்ந்தும், ஸ்ரீ அரவிந்தரது சித்தியைக் கடந்தும், வெற்றி பெறும் வகையில் ஸ்ரீ அரவிந்தர் சூட்சும உலகிலிருந்து அன்னைக்கு உதவினார்.

அன்னை தரிசனத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் தரிசனம் முடிந்தவுடன், ‘‘நான் அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அவரது முகம் ஸ்ரீ அரவிந்தரது முகமாக மாறிவிட்டது’’ என்று கூறினார். அத்தகையக் கருத்தை அன்னையும் சொல்லியிருக்கிறார். ஸ்ரீ அரவிந்தருடன் தான் உணர்விலும், உயிரிலும், நினைவிலும் இரண்டறக் கலந்துவிட்டதாகவும், பல சமயம் தன் முகமும், கை, கால் போன்ற உறுப்புக்களும் ஸ்ரீ அரவிந்தரது உறுப்புக்களாகக் காட்சி அளிக்கின்றன என்றும் கூறியிருக்கிறார். ஸ்ரீ அரவிந்தருடைய கையெழுத்து மிகச் சிறியதாக இருக்கும். அன்னையின் கையெழுத்து பெரியதாக இருக்கும்.‘‘என் கையெழுத்துத் தானே ஸ்ரீ அரவிந்தருடைய கையெழுத்தாக மாறுகிறது? நானே வலிந்து தடை செய்யாவிட்டால் என் எழுத்து அவருடைய எழுத்தாகவேயிருக்கும்’’ என்றார்.

1926லிருந்து 1950 வரை ஸ்ரீ அரவிந்தர் தனித்திருந்தார். அப்பொழுதும் சில முக்கிய சந்தர்ப்பங்களில் விதிவிலக்காக நடந்திருக்கின்றார். இரண்டாம் யுத்தம் நடந்தபொழுது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குப் படிப்படியாக சுதந்திரம் கொடுக்கலாம் எனக் கருதி கிரிப்ஸ் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியிருந்தனர். காங்கிரஸ்காரர்களுக்கு அது பிடிக்கவில்லை. ஸ்ரீ அரவிந்தர் சுதந்திர இயக்கத்தில் இருந்த சமயத்தில் சுதந்திரம் என்றால், ‘அரசாங்கத்திற்கு பெட்டிஷன் எழுதுவது’ என்று பொருள். 1904-ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தர், ‘‘இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் தேவை. அதற்குக் குறைந்த எதையும் ஒத்துக்கொள்ளமுடியாது’’ எனப் பிரகடனப் படுத்தினார். 1904ல் அவர் எழுப்பிய கோஷத்தை காங்கிரஸ் 1930ல் தான் ஏற்றுக்கொண்டது. ‘‘கிரிப்ஸ் கமிஷன் கொடுக்கும் கருத்தைத் தற்பொழுது ஏற்றுக்கொண்டால் பூரண சுதந்திரம் குறைவின்றிப் பெற ஏதுவாகும்’’ என ஸ்ரீ அரவிந்தர் கருதினார். காங்கிரஸ் தலைமையில் மாறுபட்ட எண்ணத்தைக் கண்ட அவர், இதுவரை இந்திய அரசியலில் நேரடியாகத் தொடர்பு கொள்ளாமல் இருந்த தன் பழக்கத்தை மாற்றி பி. சிவராவ் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு கிரிப்ஸ் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி ஒரு கடிதம் அனுப்பினார்.

‘1947-ல் நாடு பிரிக்கப்பட வேண்டும்’ என்ற நிலையில், தலைவர்களில் ஒரு சிலர் ஸ்ரீ அரவிந்தரின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்தனர். ‘‘1947-ல் நாடு மீண்டும் ஒன்றுபடும்’’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறினார்.

கவி ரவீந்திரநாத தாகூர் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசிக்க வந்தார். அப்பொழுது அவர், ‘‘உங்கள் கரத்தில்தான் உலகத்தின் எதிர்காலம் இருக்கிறது’’ என்றார்.

ஸ்ரீ அரவிந்தர் தம் அறையை விட்டு வெளியே வராமல் இருந்தார். வருடத்தில் 4 முறை தரிசனம் கொடுப்பதற்கு மட்டும்தான் அவர் வெளியே வருதல் வழக்கம். எனினும் தம்முடைய பாணியில் உலக விவகாரங்களில் அவர் ஈடுபட்டதுண்டு. புதுவையில் கவர்னராக இருப்பவர்கள் ஸ்ரீ அரவிந்தரின் சமாதிக்கு வருவது வழக்கம். அன்னையையும் வந்து தரிசிப்பதுண்டு. கோவாவிலிருந்து ஓர் அரசியல்வாதியைக் கவர்னராக ஒருமுறை நியமித்திருந்தார்கள். அவர் ஆசிரமத்திற்கு வருவதில்லை. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு கவர்னர் ஞாயிறு தோறும் வந்து சமாதியைத் தரிசனம் செய்ய ஆரம்பித்தார். கவர்னருடைய உள்ளுர் நண்பர்கள், ‘‘ஏன் இந்த மாற்றம்?’’ என்று விசாரித்தார்கள். ஸ்ரீ அரவிந்தர் தம் கனவில் தோன்றியதாகவும், அதிலிருந்து தம் பழக்கத்தை மாற்றிக்கொண்டதாகவும் அவர் சொன்னார்.

யோகிகளும், முனிவர்களும் செயல்படும் முறை நம் போன்ற எளிய மனிதர்களுக்குப் புலப்படுவதில்லை. ரமண மஹரிஷியின் ஆசிரமத்தில் திருடர் புகுந்து ஒன்றும் கிடைக்கவில்லை என்று கண்டு கோபப்பட்டு, ‘‘ஏன் ஒன்றுமில்லை?’’ எனக் கேட்டு ரமணரை அடித்தார்கள். சிஷ்யர்கள் ஓடிவந்து தடுத்தனர். ‘ரமணர், அவர்களைத் தடுக்க வேண்டாம். எனக்குப் பூசை நடக்கிறது!’ என்று சொன்னார். நமக்கு எளிதில் புரியாத இதுபோன்ற செயல்கள் மூலம் அவர்களது பெருமை வெளியாகிறது. ஆசிரமம் ஆரம்பிக்கும் முன் தினமும் ‘ரொட்டி சப்ளை செய்யும் பையன் ஒருவன் ஐந்து ரூபாய் திருடி விட்டான். அவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்ட சிஷ்யர்கள் அவனை அடித்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த ஸ்ரீ அரவிந்தர், அவனை அடிப்பதைத் தடுத்து நிறுத்தினார். திருடிய ஐந்து ரூபாயை அவனிடமே கொடுத்தனுப்பச் சொன்னார்.

ஆங்கில அரசாங்கத்திற்கு ஸ்ரீ அரவிந்தரால் எந்தத் தொந்தரவும் இல்லை என்றாலும், அது அவருக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தது. 1937-ஆம் ஆண்டு வரை ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்குள் செல்லும் ஒவ்வொரு நபரும் வாயிலில் உட்கார்ந்திருக்கும் பிரிட்டிஷ் போலீஸுக்குப் பதில் சொல்லி விட்டு, அவர்களுடைய ரிஜிஸ்தரில் கையெழுத்துப் போட்டுவிட்டே உள்ளே நுழையலாம். 1937-ல் காங்கிரஸ் மந்திரிசபை அமைந்தபின் அது விலக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு 5 முறை ஸ்ரீ அரவிந்தரைத் தூக்கிச் செல்லும் முயற்சியை ரௌடிகள் மூலமும், அரசியல்வாதிகள் மூலமும், அதிகாரத்தின் மூலமும் செய்தது. ஒவ்வொரு முறையும் அம்முயற்சியைச் செய்தவர் அவர்களுடைய எதிரிகளால் தூக்கிச் செல்லப்பட்டனர். ஒரு முறை அம்முயற்சியைச் செய்த பிரெஞ்சு அரசியல்வாதியை அவருடைய உறவினன் ஒருவன் சுட்டுக்கொன்றான்.

முந்தையபிறவிகளில், ஸ்ரீ அரவிந்தர் நெப்போலியனாகவும், கிருஷ்ண பரமாத்மாவாகவும், ‘மைக்கேல் ஆஞ்சலோ’ என்ற ஓவியராகவும், ‘லியனார்டோ’ என்ற மேதையாகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது. நெப்போலியன் பிறந்த தினம் ஆகஸ்ட் 15.

‘உலகத்தில் அறிவு சிறப்பாக ஆட்சி செலுத்துகிறது. அந்த அறிவைச் சிறப்பாகப் பெற முக்கியமான 100 நூல்களைப் படித்தால் போதும்’’ என்று ஒரு மேதை சொல்லியிருக்கிறார். அப்படிச் சிறப்பான அறிவைப் பெற்றவர்கள் ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களைப் படிக்கும்பொழுது அவற்றிற்கும், அவரது கருத்துகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை உணர்ந்து பேசுவது வழக்கம். பிரான்சிலிருந்து ஒரு மந்திரி வந்திருந்தார். அவருக்கு ஸ்ரீ அரவிந்தரது நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். புத்தகத்திலுள்ள கருத்தின் பெருமையைக் கண்ட அவர், ‘‘இந்தியக் கலாச்சாரம் முழுவதும் இங்கிருக்கிறதே! இது பிரெஞ்சு நாடு பெற வேண்டிய ஒன்றாயிற்றே! இந்திய பிரெஞ்சு கலாச்சார நிலையம் ஒன்றை ஸ்ரீ அரவிந்தர் தலைமையில் ஏற்படுத்தி இந்தக் கருத்துகளை உலகுக்கு வழங்க வேண்டும்’’ எனக் கூறினார்.

‘மௌனம்’ என்பது பெரிது. யோகியின் எந்தப் பகுதி மௌனத்தைப் பெறுகிறதோ, அதற்குத் தகுந்த திறனுடன் அது செயல்படும். மனம் மௌனமானால் அதன் திறன் ஒன்று; ஆத்மா மௌனத்தால் சூழப்பெற்றால், அதன் திறன் வேறு. மனத்தில் லயித்த மௌனம் ஜீவனில் ஆழ்ந்து உயிரையும் தொட்டால் அதன் திறன் அதிகம். ஸ்ரீ அரவிந்தர் பெற்ற மௌனம் மனத்தின் ஆறு நிலைகளையும் தாண்டி பரம்பொருளில் உறையும் மௌனமாகும். அது பலித்த பின் ஒவ்வொரு நிலையாக மௌனம் ஜீவனில் ஊறி மனத்தைத்தாண்டி, உயிரிலும், உயிரைத் தாண்டி உடலிலும் பாய்ந்து ஆழ்ந்து வியாபித்திருந்தது.

மேலே பரம்பொருளை விட உயர இடமில்லை. கீழே வியாபிக்க உடலை விட ஆழமான பகுதியில்லை. அப்படிப்பட்ட உயர்ந்த மௌனத்தால் சூழப்பட்டவர் ஸ்ரீ அரவிந்தர். ஒரு நாள் புயல் வீசி, மழை பெய்து அட்டகாசம் செய்த நேரத்தில், அன்னை ஸ்ரீ அரவிந்தர் அறையின் கதவுகளை எல்லாம் மழைத் தண்ணீர் உள்ளே வராமலிருக்கும் படி சார்த்துவதற்காகச் சென்றார். ஜன்னலுக்குப் பக்கத்தில் தன் மேஜைக்கு எதிரே நாற்காலியில் உட்கார்ந்து ஸ்ரீ அரவிந்தர் ஆழ்ந்து எழுதிக்கொண்டிருந்தார். எந்த ஜன்னல் வழியாகவும் சூறாவளிக் காற்றோ, மழையோ உள்ளே வரவில்லை. அது அன்னைக்கே திகைப்பை விளைவித்தது.

பூரண யோகம் இறைவனின் யோகம். மனிதன் செய்யக் கூடியதெல்லாம் சரணாகதிதான். மனிதனானாலும், முனிவரானாலும், ரிஷியானாலும், தெய்வமானாலும், அவர்கள் தங்கள் திறனால் செய்யக்கூடிய யோகம் இது இல்லை. தங்கள் திறனை இறைவனுக்குச் சரணம் செய்வதால் பின்னர் இறைவன் நம்மில் அந்த யோகத்தை மேற்கொள்வான். சரண் அடையும் கருவி பெரியதானால், இறைவன் செயல் அதன் மூலம் பெரியதாக இருக்கும். ஆனால் நம்முடைய திறனுக்கும், யோக பலனுக்கும் சம்பந்தமில்லை. அறிவில்லாத சிறிய மனிதனுக்கும், பேரறிவுடைய மேதைக்கும் சரணாகதியை மேற்கொள்ளாதவரை பூரணயோகத்தில் பலன் சமமானதே. அதாவது பூஜ்யம். சரணாகதி செய்தபின், பலன் சரணாகதி செய்த கருவியின் அளவைப் பொறுத்தது. பெரிய கருவிக்குப் பெரிய பலன்; சிறிய கருவிக்குச் சிறிய பலன். ஸ்ரீ அரவிந்தர் அன்னைக்குக் கொடுத்த அதே பெரும் பேற்றையே அவர் கணவர் ரிச்சர்டுக்கும் அளித்தார். ரிச்சர்ட் தன்னால் சரணாகதியினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றதால், யோகத்தை மேற்கொள்ளவில்லை.

சிவபெருமானையும், கிருஷ்ண பரமாத்மாவையும் அன்னை ஸ்ரீ அரவிந்தர் உடலில் பிறந்து யோகத்தை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். சிவபெருமான் மனித உடலில் அவதரிப்பதில்லை. ‘‘பூரணயோகம் பலித்தால் நான் பிறகு வருகிறேன்’’ என்று சொன்னார். கிருஷ்ண பரமாத்மா அன்னையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். ‘‘என் கண்களால் கிருஷ்ணன் ஸ்ரீ அரவிந்தர் உடலில் புகுந்து ஐக்கியமாவதை நிதர்சனமாகக் கண்டேன்’’ என்று அன்னை கூறுகிறார். இந்த விஷயத்தை அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் சொன்னார். ‘‘அவருக்கு அதில் ஆர்வமில்லை’’ என்று பிறிதொரு சமயம் கூறினார் அன்னை. வேறு ஒரு சமயம் தெய்வங்கள் சாதகர்களிடம் அவதரித்து, பூரணயோகம் செய்யும் முறையைப் பற்றி அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் பேசியபொழுது, தன் யோகம் தெய்வங்களின் வரையறையால் தடுக்கப்படுவதைத் தாம் விரும்பவில்லை என அவர் அபிப்பிராயம் தெரிவித்தார்.

1947ல் சுதந்திரம் வந்த சமயத்தில் மைசூர் இந்தியாவுடன் சேருவதில் சில அரசியல் சிக்கல்கள் இருந்தன. மைசூர் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். நாட்டில் குழப்பமான நிலை நிலவியது. மைசூர் மகாராஜா ஸ்ரீ அரவிந்தரின் ஆலோசனைகளையும், ஆசியையும் பெற விரும்பினார். அவரை ஆகஸ்ட், 15-ஆம் தேதியன்று வரும்படி ஆசிரமத்திலிருந்து கடிதம் எழுதினார்கள். அதன்படியே வந்த மைசூர் மகாராஜா, அன்று தரிசன நாள் என்பதையும், தானும் மற்றவர்கள் போல் க்யூவில் போக வேண்டும் என்பதையும் அறிந்து ஏமாற்றமடைந்த செய்தி ஸ்ரீ அரவிந்தரை எட்டியது. அவர் மகாராஜாவை க்யூவில் முதலாக வரும்படிப் பணித்தார். பணிக்கப்பட்டவர் பணிவுடன் வந்தார். ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் அவரை ஆசீர்வாதம் செய்தனர். மன நிறைவுடன் மைசூர் சென்ற அவர், நிலைமை முழுதும் மாறி தனக்குச் சாதகமாக அமைந்ததைக் கண்டு மகிழ்ந்தார்.

புதுவையிலிருந்த நாள் முழுவதும் ஸ்ரீ அரவிந்தர் வெளியில் சென்றதாகத் தெரியவில்லை. ஒரு கல்யாணத்திற்குச் சென்றதாக ஒரு செய்தி. தம்மைப் பார்க்க வந்த தம் சகோதரர் கல்கத்தா திரும்பும் போது அவரை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனதாக மற்றொரு செய்தியும் உண்டு.

************



book | by Dr. Radut