Skip to Content

24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்

அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்

அன்னை தெய்வம். தெய்வத்தை நாம் வணங்குகிறோம். கஷ்டம் வந்தால் பிரார்த்தனை செய்கிறோம். அன்னையின் தெய்விகத்தை அறிந்து போற்றுகிறோம். சாமான்ய மனிதனாக வந்து அன்னையைத் தெரிந்துகொண்டு, ஓரளவு அன்னையை ஏற்றுக்கொண்டு, பல வகைகளில் அன்னையிடம் தொடர்புகொண்டு, அவர்களது அவதாரச் சிறப்பை அறியும் பொழுது, அவர்களது இலட்சியத்தின் தன்மையைக் கண்டு கொள்ளும்பொழுது சிலருக்குத் தம்மைப் பூரணமாக அன்னைக்கு அர்ப்பணிக்கத் தோன்றும். அப்படிப்பட்டவர்கள் சாதகர்களாவதுண்டு. அந்நிலையை அடைய முதற்படி என்ன? ‘அன்னையைப் பூரணமாக நான் உணர்ந்துவிட்டேன். இனி அன்னைக்கே நான் உள்ளும் புறமும் அர்ப்பணமானவன். இனி நானில்லை’’ என்ற பெரிய இலட்சிய உணர்வு சிலருக்கு ஏற்பட்டு, அதுவே ஜீவனை ஆட்கொண்ட பின்னும், எல்லோராலும் சாதகர்களாக முடிவதில்லை. முடியும் என்றாலும் உடனே முடிவதில்லை. அம் மனநிலையிலுள்ளவர் அன்னையைப் பூரணமாக ஏற்றுக் கொள்ள, தங்கள் ஜீவனின் ஆழத்தில் பிரதிஷ்டை செய்ய, தங்களைப் பூரணமாக அர்ப்பணிக்க விழைந்தபின், அவர்கள் என்ன செய்தால் அவர்களுடைய எண்ணமும் இலட்சியமும் சிறக்கும்? அவர்கள் செய்யக் கூடியவற்றை கீழே தருகிறேன். இவை எல்லாம் யோகச் சிறப்புப் பெற்ற முறைகள். அவை எளிமையாகத் தோன்றினாலும், செய்வதில் எளிமையில்லை என்று புரியும். எளிமையுடன் உயர்வும் சேர்ந்தவை கீழ்க்கண்ட சில.

 1. செய்யும் காரியங்கள் எத்தகையதாக இருந்தாலும் எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் - வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வது போன்ற செயலானாலும் - அதை முழுமையான சிறப்புடன் (Perfect) செய்வது, அன்னையை நம் ஆத்மாவின் ஆழத்தில் பிரதிஷ்டை செய்வதாகும்.
 2. நிதானம் (equality) எந்த நிலையிலும், எளிய காரியங்களிலும், பொறுப்புள்ள பெரிய வேலைகளிலும், குறைவற்ற நிதானத்தை நிறைவுடன், தவறாது கடைப்பிடிக்க வேண்டும். நிதானம் ஆத்மாவின் அம்சம். நிதானமாகச் செயல்படும் பொழுது ஆத்ம விழிப்புடன் இருக்க முடியும்.
 3. உதவி செய்தல், கடமையைச் செய்தல், திறமையாகச் செயல்படுதல் போன்ற ஏதாவது ஒரு நல்ல குணம் நம்மிடம் இருந்தால், அதை நூறு சதவிகிதமாக முழுமைப்படுத்த முயன்று பூர்த்தி செய்தல் தெய்விகச் சிறப்பை அளிக்கும்.
 4. அறிவு, பகுத்தறிவு என்பவை சிறப்பானவை. ‘rationality’ என்று ஆங்கிலத்தில் சொல்வதை, தமிழில் ‘பகுத்தறிவு’ என்கிறோம். ‘‘நியாய மனப்பான்மை’’ என்பதும், rationalityயும் தொடர்புள்ளவை. நம் கடமைகளில் யாராவது ஒருவரிடத்தில் அல்லது ஒரு கடமையை நிறைவேற்றும் இடங்களில் பூரணமாக, நியாய மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுதல். (எல்லா இடங்களில் அப்படி நடப்பது சிறப்பு எனினும் ஓர் இடத்திலாவது அதைக் கடைப்பிடித்தல் அவசியம்.)
 5. வாரத்திலோ, மாதத்திலோ ஒரு நாளைத் தேர்ந்து எடுத்து, அன்று ஒரு நிமிஷம் கூட விரையம் செய்யாமல், வீண் பேச்சுப் பேசாமல், நல்ல காரியங்களை மட்டும் சுறுசுறுப்பாகச் செய்வது.
 6. தண்ணீர், பேப்பர், துணி, காய்கறி, அரிசி என்று பல வகையான பொருட்களைப் பயன் படுத்துகிறோம். அவற்றுள் ஒரு பொருளைக் குறிப்பிட்டு அதை விரயம் செய்யாமல் (fullest utilisation) முழுவதுமாக, கடைசி வரை நன்கு பயன்படுத்துதல்.
 7. பணத்தை ஏதாவது ஒரு விஷயத்திலாவது முழுமையாக, கொஞ்சம் கூட வீணாகாமல் (fullest utilisation) செலவு செய்தல்.
 8. பூரணமான, பவித்திரமான அடக்கத்தை ஏதாவது ஒரு விஷயத்திலாவது கைக் கொள்ளுதல்.
 9. நமக்குச் சிரமம் வந்தால் பிரார்த்தனை செய்கிறோம். திறமையிருந்தால் அன்னையை நினைவு கூராமல் வேலை செய்து வெற்றிகரமாக முடிக்கின்றோம். பக்தியுணர்வு ஏற்பட்டால் அன்னையை அனுதினமும் நினைத்தே செயல்படுகிறோம். பரீட்சை எழுதினால் பாஸ் ஆக வேண்டும் என்றே பிரார்த்தனை செய்கிறோம். ‘பாஸானாலும் சரி, பெயிலானாலும் சரி’ என்று நினைப்பதில்லை. ஒரு புது வீடு வாங்குவதில் சிரமம் ஏற்பட்டால், ‘வாங்கினாலும் சரி, வாங்காவிட்டாலும் சரி, அன்னை காட்டியவழியில் செல்வோம்’ என நினைக்கிறோம். இது ஒரு விதமான அவநம்பிக்கையே. ‘அன்னையின் இஷ்டப்படியே நடக்கட்டும். என் விருப்பப்படி தேவையில்லை’ என்று சில சமயங்களில் சொல்லலாம். ‘குழந்தையைக் காணோம்’ என்று தேடும் தாயார், குழந்தை கிடைக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பாள். என்றாலும் நம் கடமைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை நிறைவேற்ற வேண்டிய எல்லாச் சந்தர்ப்பங்களிலும், ‘‘முயல்வோம். பிறகு அன்னை விட்ட வழி என்ற எண்ணம் தேவை இல்லை. அன்னையின் எண்ணமே பூர்த்தியாகட்டும்’’ என்று நினைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
 10. நம்முடைய ஏதாவது ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அது சம்பந்தமாக நம்மிடம் உள்ள எல்லாக் குறைகளையும், ஏற்கனவே இருந்த குறைகளையும் கண்டு பிடித்து அவற்றை நீக்க முற்படுதல்.
 11. நாம் பல்வேறு காரியங்களை மேற்கொள்கிறோம். அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அன்னையின் இலட்சியமான make most progress என்பதை நிறைவேற்றுதல். ஒரு மாணவன் படிக்கிறான்; விளையாடுகிறான்; பெற்றோருக்கு மிக அடங்கி நடக்கிறான். அது போலவே அவன் பல காரியங்களைச் செய்கிறான். அவற்றில் ஒன்றை எடுத்து அதிகபட்ச முன்னேற்றத்திற்காகக் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.
 12. நாம் பொதுவாக நம் அறிவுக்கு ஏற்ப நடக்கிறோம். யோக முறைப்படி ‘அறிவை நம்பாதே. ஆத்மாவை நம்பு’ என்கிறார் அன்னை. ‘‘ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது அறிவின் வழியைப் புறக்கணித்து ஆத்மாவின் வழியை நாடினால் ஆத்மா வழி காட்டும்’’ என்கிறார். அப்படி ஆத்மாவின் வழி புரியவில்லை என்றால், அன்னை சொல்லிய முறைப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தால், ‘‘கொஞ்சம் கொஞ்சமாக ஆத்மா வழி காட்ட ஆரம்பிக்கும்’’ என்கிறார். நம் கடமைகளில் ஏதாவது ஓர் இடத்தில் இம்முறையைக் கைக் கொள்ள வேண்டும்.
 13. நம் விருப்பைப் புறக்கணித்து ஏதாவது ஒரு கடமையிலாவது, உதாரணமாக Proof readingஐ அன்னை சொல்லும் ஆர்வத்தோடு, ஆத்மீக நெகிழ்வுடன் செய்தல் வேண்டும்.
 14. அன்னை, ‘‘சௌகரியத்தைத் தேடாதே’’ என்கிறார். ஏதாவது ஒரு வேலையில் இந்த இலட்சியத்தை முழுமையாகப் பிரயோகப்படுத்த வேண்டும்.
 15. ‘‘பிறரைக் குறை கூறாதே’’ என்கிறார் அன்னை. நம்மவர்களில் யாரேனும் ஒருவர் மீதாவது குறை கூறாமலிருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
 16. ‘‘புற நிகழ்ச்சிகள் நம் மன நிலையைப் பிரதிபலிக்கின்றன’’ என்கிறார் அன்னை. ஏதாவது ஒரு விஷயத்திலாவது இந்த உண்மையைப் பூரணமாகப் பின்பற்ற வேண்டும்.
 17. ஏதாவது ஒரு விஷயத்திலாவது உள்ளுணர்வுப் படியே நடக்க வேண்டும்.
 18. ஒருவரிடமாவது முழு இலட்சியப் பண்புடன் பழக வேண்டும்.

மேலே சொல்லியவை எல்லாம் பூரணமாகத் தன்னை அர்ப்பணம் செய்ய விழைபவர்களுக்கு முதற்படியாகச் சொல்லப்பட்டவை. ஓர் இலட்சியத்தைப் பரிபூரணமாக நூறு சதவீதம் முழுமையாகப் பின்பற்றுதலும், எல்லா இலட்சியங்களையும் கொஞ்சம் பின்பற்றுதலும் ஒரே பலனைக் கொடுக்கும்.

**********book | by Dr. Radut