Skip to Content

09. பழக்கம்

பழக்கம்

‘வாழ்க்கை ஒரு போராட்டம்’ என்பதை எல்லோரும் அறிவார்கள். வாழ்க்கை அப்படியேதான் அமைந்துள்ளது. அதற்குக் காரணம் உண்டு. ‘ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்’ என்று ஒரு மொழி. இருவருக்கும் திருப்தியாகச் செயல்பட முடியாத ஒரு நிலை அது. வாழ்க்கையில் 10 விளக்கு அணைந்தால் தான் ஒரு விளக்குப் பிரகாசமாக எரியும். வாழ்க்கையின் அமைப்பு ஒன்றைக் குறைத்து மற்றதை நிறைவு செய்யும்படி அமைந்துள்ளதற்குக் காரணம், அடிப்டை சுயநலமாக இருப்பதால்தான். அன்னை ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணும் பொழுது, பெரும்பாலும், இரு தரத்தாருக்கும் சௌகரியமாகவே தீர்வு காண்பது வழக்கம். அன்னை நமக்கு அளிக்கும் வாழ்க்கையில் ஒன்றைக் குறைத்து, மற்றதை நிறைவு செய்வதாக இல்லாமல், இருவருக்கும் நிறைவாக இருக்கும்படி சூழ்நிலைகளை அமைக்கிறார். இதற்குக் காரணம், அன்னை வழங்குவது Divine Love மூலமாக. இதை ‘பக்தி’ என்று சொல்லலாம். எடுக்க எடுக்க அதிகமாக வளரும் தன்மையுடையது Divine Love. பிரதிபலனை எதிர்பார்க்காதது, கொடுப்பதால் நிறைவு பெறுவது, ‘கொடுக்காமலிருக்க முடியாதது’ என்ற உணர்வுள்ளது.

பிரச்சனைகளை இரு வகையாக நாம் எடுத்துக்கொள்வோம். 1. தானே ஏற்படும் சிக்கல். 2. வேண்டுமென்றே பழி வாங்கும் மனப்பான்மையால் ஒருவருக்கு மற்றொருவர் இழைக்கும் தீங்கால் நேரும் சிக்கல். முதலில் வருவது வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சேரும். அடுத்தது விலக்கப்பட வேண்டியது. அன்னை முதல் வகையைச் சேர்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கும் எல்லா சமயங்களிலும் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் சௌகரியமாக இருக்கும்படி தீர்ப்பது வழக்கம்.

3 லட்ச ரூபாய் Projectடில் ‘பணம் முதலிட்டவருக்கும், வேலை செய்பவருக்கும் சரி பாதி’ என்று தீர்மானித்து வேலை செய்ய ஆரம்பித்த ஒரு வருட காலத்தில் பிணக்குகள் அதிகமாக, வேலை செய்த பங்காளி, ‘விட்டால் போதும்’ என்று நினைத்து, எந்த ஈடும் கேட்காமல் Projectடிலிருந்து விலகிவிட்டார். 10 நாட்கள் சென்றன. அன்னையிடம் யாரும் முறையிடவில்லை. அவராகவே பணம் போட்டவரைக் கூப்பிட்டு Projectடை வேலை செய்பவரிடம் கொடுக்கும்படி கூறினார். அவரும் கொடுத்துவிட்டார். இது நடந்தது காலை 10 மணிக்கு. மாலை 3 மணிக்கு வேறொரு விஷயம் தானே கிளம்பி மற்றொரு Projectடில் பிரச்சனை வந்தது. அதைத் தீர்க்க அன்னை முதல் Projectடில் பணம் போட்டவருடைய உதவியை நாடினார். அவர் ஒத்துக்கொண்டார். அது 1 கோடி ரூபாய் Project. காலையில் 3 லட்ச ரூபாய் Project போய்விட்டது. மாலையில் 1 கோடி ரூபாய் Project வந்தது. இதுவே அன்னையின் தீர்ப்பு.

‘பழக்கம்’ என்பதை நாம் முழுவதும் உணருவதில்லை. நல்ல பழக்கங்களை ஏற்றுக்கொள்கிறோம். கெட்ட பழக்கங்களை விலக்குகிறோம். அதுவே வாழ்க்கை. நமக்கு எழுதிப் பழக்கமுண்டு. பெரியவர்களுக்கு மரியாதை செய்து பழக்கமுண்டு; நண்பர்களிடம் பிரியமாகப் பழகும் பழக்கமுண்டு. இவை நல்லவை. கோபப்படும் பழக்கம், அவசரப்படும் பழக்கங்கள் நல்லவையில்லை.

எதையும் முறையாகச் செய்யும் பழக்கம், காலத்தில் கடமையைச் செய்யும் பழக்கம் போன்ற பல பழக்கங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. வாழ்க்கையின் அஸ்திவாரத்தில், நடக்கும் பழக்கம், பேசும் பழக்கம் போன்றவற்றை விலக்கினால் வாழ்க்கை ஒரு நிமிஷம் கூட நடக்காது.

‘‘இறைவனை நேரில் தரிசிக்க வேண்டும்; அவனை மனதில் கோயில் கொள்ளச் செய்ய வேண்டும்; ஒவ்வொரு செயலிலும் இறைவனை வெளிப்படுத்த வேண்டும்’’ என்பது ஆன்மிக இலட்சியம். வாழ்க்கைக்கு எது இன்றியமையாததோ, அதுவே ஆன்மீகத்திற்கு முரண்பாடானது. பழக்கம் அது போன்றது. ‘‘பழக்கங்களை எல்லாரும் விட்டு விட்டால் இறைவனைத் தரிசிக்கலாம்’’ என்று அன்னை கூறுகிறார். ‘‘உன் மனத்திலிருந்து நீ வெளிவந்தால் இறைவனைக் காணலாம்’’ என்று அதே கருத்தை அன்னை வேறு வகையில் தெரிவிக்கின்றார்.

புதியதாக சைக்கிள் கற்றுக்கொள்ளும் பொழுது, குழந்தை முதலில் எழுதக் கற்றுக்கொள்ளும் பொழுது, அதாவது இல்லாத பழக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் பொழுது ஆர்வம் அபரிமிதமாகப் பெருகுவதைக் காணலாம். குழந்தை எல்லா இடங்களிலும் எழுதி வைக்கிறது. பையன் எப்பொழுதும் வெய்யிலில் சுற்றுகிறான். அந்த ஆர்வம் தெய்வத்தன்மையுடையது. நாம் அதை ‘சிறு பிள்ளைத்தனம்’ என்றும், ‘ஆசை’ என்றும் புரிந்து கொள்கின்றோம். அதில் மேலும் விரவியுள்ள தெய்விக உணர்வு கலந்த ஆர்வத்தை நாம் காண்பதில்லை. சிறந்த பாடகன், தான் பல முறை ஆலாபனை செய்த ராகத்தில் ஒரு நாள் மேலும் ஓர் உச்சக் கட்டத்திற்குப் போய்விட்டால் அன்று அவன் தன்னை மறந்து பாடுகிறான். பயிற்சி, பழக்கத்தின் பிடியிலுள்ளது. அதைத் தாண்டி இசை போகும்போது, அதில் தெய்விகம் வந்துவிடும். எழுத்தாளன் தன்னை மறந்து காலை 2 மணி வரை எழுத உற்சாகம் பெறும் நேரத்திலும், பாடகனுக்குப் புதிய கட்டத்தில் ராக ஆலாபனை பலிக்கும் நேரத்திலும், விஞ்ஞானிக்கு இதுவரை புரியாத விஷயம் தட்டுப்படும் நேரத்திலும், தெய்விகம் அவர்களைத் தொடுகிறது. அந்த நிலையில் அவர்கள் சிருஷ்டிகர்த்தாவாக மாறுகிறார்கள். புதிதாகச் சைக்கிள் கற்றுக்கொள்பவனும், எழுதக்கற்றுக் கொள்பவனும் இதே உணர்வு நிலையில்தான் இருக்கிறார்கள். சுருக்கமாக, பழக்கத்தின் பிடியை விட்டு எட்டிப் போனாலும், பழக்கத்தின் பிடியில் இன்னும் வராவிட்டாலும் அங்கு தெய்விகம் தவழ்கிறது. இருக்கும் பழக்கங்களைத் தாண்டிப் போகும் செயல்கள் இவை. ‘பக்தி பரவசமாகி பக்தன் உணர்வில் லயித்து விட்டான்’ என்று நாம் சொல்லும் பொழுது, பக்தன் பெண்டு, பிள்ளை, வீட்டுப் பாசத்தின் பிடியிலிருந்து —அந்தப் பழக்கத்தின் பிடியிலிருந்து — விலகி உயர்ந்து தெய்விக உணர்வில் லயிக்கின்றான். தியானத்தில் தன் உணர்வை இழப்பவன், மனத்தில் மண்டிக்கிடக்கும் ஆயிரமாயிரம் பழக்கங்களிலிருந்து விடுபட்டு ஞானத்தை அடைகிறான்.

பழக்கங்கள் அவசியமானவையானாலும், இன்றியமையாதவையானாலும், நல்லவையானாலும், கெட்டவையானாலும் (ஒரு செயல் பழக்கமாகி விட்டபின், பழக்கம் ஊன்றிய பின்) ஆத்மீக நோக்குடன் பார்க்கும் பொழுது, பழக்கத்தில் ஜீவனில்லை. பழக்கம் உணர்ச்சியற்றது; உயிரற்றது; ஜடம் போன்றது. சாதாரண மனம் பழக்கங்களைப் பயிலுவிப்பதற்காகவேயுள்ளது. ஆதலால்தான் அன்னை, ‘‘சாதாரண மனத்தை விட்டு விட்டு வந்தால், தெய்வத்தைக் காணலாம்’’ என்கிறார்கள். அத்துடனில்லாமல் அவ்வளவு பெரிய ஆத்மீக அனுபவத்தை தன்னை நாடி வருபவர்களுக்கும் அவர்கள் கொடுக்கின்றார்கள்.

‘‘அன்னையைப் பற்றிப் படித்து நான் மெய்சிலிர்த்துப் போனேன்,’’ ‘‘அன்னையின் வரலாறு எனக்குப் புளகாங்கிதமாக இருக்கிறது’’ என்று அன்பர் எழுதுவது எதனால்? அன்னையைப் பற்றிப் படித்தவுடன், அதாவது மனிதன் தன்னிடம் வந்தவுடன், அந்த உயர்ந்த தெய்விக உணர்வை அன்னை அவர்களுக்குக் கொடுப்பதால், பக்தர்கள் மேற்சொல்லியவாறு எழுதுகிறார்கள். சமாதியைத் தரிசித்தவர்கள், ஸ்ரீ அரவிந்தரின் அறையைத் தரிசித்தவர்கள், அன்னையின் அறையை தரிசித்தவர்கள், ‘‘என் மனம் என்னிடம் இல்லை’’, ‘‘நான் எங்கேயோ போய்விட்டேன்’’, ‘‘நான் இந்த உலகத்திலில்லை’’, ‘‘இது போன்றிருக்கும் என நான் கனவிலும் நினைத்தது கிடையாது’’ என்று சொல்வது வழக்கம். கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் அன்னையின் முன் சொல்லிய கூற்றாகிய, ‘‘சாதாரண மனத்தை விட்டு வந்தால் தெய்வத்தைக் காணலாம்’’ என்பது புரியும். ஆழ்ந்த பக்தியாலும், உயர்ந்த தியானத்தாலும், பக்தனுக்கும் ஞானிக்கும் கிடைக்கும் பேற்றை, அன்னை தன்னிடம் வந்தவர்கட்கு வரப்பிரசாதமாக அளிக்கின்றார்கள்; அன்பர்களுடைய முயற்சியின்றி, அவர்களை அவர்களுடைய சாதாரண மனத்தின் பிடியிலிருந்து விலக்கித் தெய்வத்தைக் காட்டுகின்றார்.

பழக்கங்கள் பல விதம். ஒன்றைக் குறிப்பாக அன்னை சொல்கின்றார். செய்த வேலையின் பலனை எதிர்பார்க்கும் பழக்கத்தை அன்னை விளக்குகிறார். ‘‘ஆணவம் இருந்தால்தான் பலனை எதிர்பார்ப்பார்கள்’’ என அன்னை சொல்கிறார். ‘‘பலனை எதிர்பார்க்கும் பழக்கம் இருக்கும் வரை அகந்தையின் வேர்கள் அற்றுப் போகவில்லை என நாம் தெரிந்து கொள்ளவேண்டும்’’ என்கிறார்.

பழக்கம் ஒரு வகையில் பொல்லாதது. கர்ம பலன் நம்மைத் தொடர்கிறது. கர்ம பலன் ஒரு பழக்கத்தின் வழியாக வெளிப்படுமானால், பழக்கத்தின் பிடியில் சிக்கிக்கொண்டுவிட்டால், பிறகு சுலபத்தில் அது போகாது. அன்னையை ஏற்றுக்கொண்ட பின் அன்னையின் ஒளி கர்ம பலனை, அதன் வேரை அறுத்துவிடுகிறது என்றாலும் ஏற்கனவே கர்ம பலன் ஒரு பழக்கமாகி விட்டதால், வேர் அற்றுப்போனாலும், பழக்கம் திரும்பத் திரும்ப தான் செய்ததையே செய்வதால், கர்ம பலன் தன் விளைவுகளை ஓரளவு தோற்றுவித்துக் கொண்டிருக்கும். பொதுவாக, பழக்கத்தையோ அல்லது கர்ம பலனை மீண்டும் மீண்டும் செய்யும் பழக்கத்தையோ விட்டொழிக்க முயன்று வெற்றி பெற்றால், கர்மமும், அதன் விளைவும் அடியோடு அழிந்து விடும்.

**********



book | by Dr. Radut