Skip to Content

15. அன்னையின் தாய்மை

அன்னையின் தாய்மை

‘கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது’ என்பதால், தாய் என்பதை ஏற்படுத்தினார் என்று ஓர் இஸ்ரேலியப் பழமொழி சொல்கிறது. தாய்மையின் தெய்விகத்தை உணர்த்த கடவுளுக்கு இருக்கும் திறமையை இல்லையெனச் சொல்லி, அந்த இடத்தில் தாய்மையைப் பிரதிஷ்டை செய்கிறது இஸ்ரேல். ‘தாய்மை’ என்பது தன்னை மறந்த, தன்னலமற்ற, பலன் எதிர்பார்க்காத, பலனை நினைக்கக் கூடத் தெரியாத சேவையாகும். தாய்மைக்கே தெய்விகம் உரித்தானது. அன்னையே தெய்வம். அன்னையின் தாய்மையை விவரிக்க மொழியின் சிறப்போ, உணர்ச்சியின் பெருக்கோ திறமையுள்ளவையல்ல. மனிதனையும் அவன் இன்று வரை பெற்றுள்ள பெரிய திறமைகளையும் தாண்டிய நிலையில் உள்ளது அன்னையின் தாய்மையின் பெருமை.

40 வருடங்களுக்கு முன் அன்னை ஆசிரமத்தை முழுப் பொறுப்பு எடுத்து நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு முதியசாதகர், அவர் ஆசிரமத்தில் சேர்ந்த 1923-இல், ‘‘ஒவ்வொரு சாதகருடைய எல்லாச் செலவுகளும் மாதம் ரூ. 75 ஆயிற்று’’ என்கிறார். அன்னையைப் பார்க்க வட நாட்டிலிருந்து வருபவர்கள் தென்னாட்டிலுள்ள பல இடங்களுக்கும் போவதுண்டு. அவ்வாறு அன்னையைத் தரிசித்துவிட்டுச் சென்ற சிலர், தென்னாட்டின் விசேஷ ஸ்தலம் ஒன்றுக்குப் போயினர். அப்போது அங்குள்ள ஒரு கோயில் குருக்களைப் பார்க்கச் சென்றார்கள். அவரிடம் பல விசேஷங்கள் இருந்தன. ஆனால் கோயில்களுக்கே உரிய வறுமையும் இருந்தது. வட நாட்டிலிருந்து அன்னையைத் தரிசிக்க வருபவர்கள் தென்னாட்டில் அதைக் கண்டு வேதனையுற்றனர். அவர்கள் அந்தக் குருக்களின் வறுமை நிலையை அன்னை அவர்களிடம் தெரிவித்து அவருக்கு உதவி செய்யுமாறு வேண்டினார்கள். அன்னை அதை ஏற்றுக்கொண்டு அவர் இறுதிக்காலம் வரை அவருக்கு மாதா மாதம் 600 ரூபாய் கொடுத்தார்கள். அவர் புதுவை வந்து அன்னையைத் தரிசிக்க விரும்பிய போது ரெயிலில் முதல் வகுப்பில் போக வர அன்னை டிக்கெட் வாங்கிக் கொடுத்தார். எந்தத் தாயினாலும் தான் பெற்ற பிள்ளையிடம் காட்ட முடியாத பரிவையும், பொறுப்புணர்ச்சியையும், அன்பையும், அருளையும் தன்னகத்தேயுடையது அன்னயைின் தாய்மை.

புதியதாக 120 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய பட்டதாரிக்கு, மற்றொருவர் மூலம் அன்னையின் பக்தர் ஒருவர் அறிமுகமானார். அதற்கு முன்னால் பட்டதாரியின் குண விசேஷங்களையும், செயல் திறமையையும் கேள்விப்பட்ட அன்னையின் பக்தர் பட்டதாரி ஆசிரமம் வரவேண்டும் என விரும்பினார். நடுவிலிருந்தவர் பக்தரையும், பட்டதாரியையும் அறிமுகப்படுத்த ஆர்வமாக இருந்தார். ஜுலை மாதம் இரண்டாவது வாரத்தில் அவர்கள் இருவரும் சந்தித்தனர். பக்தர் ஆகஸ்ட் 15 தரிசனத்திற்குப் பட்டதாரியை வரும்படி சொன்னார். பட்டதாரி ஏற்றுக்கொண்டார். ஜுலை இரண்டாம் வாரம் இந்த அறிமுகம். பட்டதாரி தரிசனத்திற்காக வரப்போவது ஆகஸ்டில். ஆனால் ஜுலை முதல் நாளன்றே அன்னை பட்டதாரியின் வாழ்க்கையில் வெளிப்பட ஆரம்பித்துவிட்டார். அவரது வருமானத்தில் 960 ரூபாயை அதிகப்படுத்தி, புதிய வருமானத்தை பழைய வருமானத்தைவிடப் பன்மடங்கு உயர்த்திவிட்டார்.

அன்னை பொருளைக் கொடுப்பதைப் போல் அருளையும் கொடுப்பார். நடைமுறையில் பொருளுக்கு அவரவர்கள் இருக்கும் சந்தர்ப்பங்களால் ஒரு வரையறை ஏற்பட்டு விடுகிறது. அருளுக்கு வரையறையில்லை. பொருளைக் கொடுப்பதற்கே அளவு வந்து தடுக்கும். அருளை வரையறை இல்லாமல் கொடுக்கலாம். பெற்றுக்கொள்வதில் வரையறை குண விசேஷத்தாலும், பழக்க வழக்கங்களாலும் ஏற்பட்டுவிடுகிறது. அங்கும் அன்னை செயல்படுவதில் சிறப்பான அம்சங்கள் உள்ளன.

‘பொருள் பெருகும் பொழுது நமக்குப் புரிகிறது. அது அன்னையினால் ஏற்பட்டது’ என்பதைப் பலர் தெரிந்து கொள்கிறார்கள். சிலர் அதையும் முதலில் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். அருள் அன்னையிடமிருந்து வந்து நம் ஜீவனில் நிறைவதைத் தெரிந்து கொள்பவர்கள் குறைவு. அருளை அன்னை வழங்கும் பொழுது தவறாமல் அது மழை என்பதாகவேயிருக்கும். ‘மரத்தைப் பார்த்து எனக்கு ஒரு பழம் வேண்டும்’ என்று கேட்டால், மரம் பழுக்கும் பொழுது ஆயிரம் பழத்தைக் கொடுப்பதைப் போல் அன்னையிடம் வருபவர்களுக்கு அருளை வழங்கும் பொழுது அன்னை பெருமழையாக அளவற்றுப் பொழிவது வழக்கம். மனிதனுடைய சிறு ஜீவனில் அகமும் புறமும் நிரம்பி வழிந்து திணறிய பின்னரே அந்த அருள் மழை நிற்கும். ‘ஆற்றில் புது வெள்ளம் வந்து ஓர் அடி தண்ணீர் ஓடுகிறது’ என நாம் அறியும் காலத்தில், பூமிக்கடியில் ஆற்றுப்படுகை நூறு அடி ஊறி, அங்குள்ள கிணறுகள் நிரம்பி, குளங்களுக்கும் ஏரிக்கும் அடியில் நிலம் ஊறி ஊற்றெடுத்த பின், தரைக்கு மேல் ஆற்று மணலில் வழிந்து வரும் நீரைப் பார்த்து நாம், ‘ஆற்றில் ஓரடி தண்ணீர் ஓடுகிறது’ என்கின்றோம். மனிதனுடைய ஜீவனும் அப்படியே. அன்னையை வந்து ஒருவர் வணங்கி அவர் நிரம்பி, அவர் வாழ்க்கையில் சீரும் சிறப்பும் முன்னைவிட அதிகமாகத் தெரியும்பொழுது நாம் காண்பது மணலில் மேலே ஓடும் கலங்கிய குழம்பிய நீரையேயாகும். பூமிக்கடியில் ஊறியவையெல்லாம் நமக்குத் தெரிவதில்லை. அது போலவே மனிதன் அன்னையை அடைந்தவுடன் அவனது இப்பிறப்பின் குறைகளையும், அவனுடைய குடும்பத்தைச் சார்ந்தவருடைய வாழ்க்கைகளையும், தொழிலின் சூழலையும் அடித்தளத்தில் நிரப்ப ஆரம்பித்து விடுகின்றார்கள். அவை நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. கண்ணுக்குத் தெரிபவை சில காரியங்களே. அவற்றுள்ளும் அன்னை அருளை நிரம்பி வழியும் வகையிலேயே பொழிகின்றார்கள். எப்படியாவது ஆங்கிலத்தில் பாஸ் செய்ய வேண்டுமென (மற்றெல்லாப் பாடங்களிலும் சிறப்பாக இருந்தும்) எண்ணும் ஆங்கிலமே வராத மாணவனை எந்த ஆசிரியரும் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாத நிலைமையில், பரீட்சை நெருங்கிவந்து கொண்டிருந்த சமயத்தில் அவன் தவித்துக் கொண்டு இருந்த பொழுது, அன்னையருள் அவனை அறியாமல் வந்து அவன் வாழ்க்கையில் நிரம்பிவழிந்து ஆங்கிலத்தில் வகுப்பில் முதல் மாணவனாக மதிப்பு எண்கள் பெற்று, அவன் கண்கள் வற்றாத ஊற்றாக நன்றியைப் பொழிந்தன. நிரம்பி, பொங்கி, வழிந்து பெருகுவதே அன்னையின் அருளுக்கு அடையாள முத்திரை.

அன்னை அடிக்கடி ஆதியைப் (origin) பற்றிப் பேசுவார். ‘‘சாதகன் ஆதி வரை சென்று, அதன் மூலம் அடுத்த பக்கம் வந்தால், பூர்வ ஜன்ம ஞானம் ஏற்படும்’’ என்று சொல்லி இருக்கிறார். தன் ஆத்மீக விளக்கங்களைத் தெளிய வைக்க அன்னை அடிக்கடி ஆதியைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. ஒருவர் அன்னையிடம் வந்தவுடன், அவர் கண்களை உற்று நோக்கும் அன்னை, கண்கள் மூலம் அவரது ஆத்மாவுக்கும், ஆத்மா மூலம் ஜீவாத்மாவுக்கும், அதன் மூலம் ஆதிக்கும் அவரை அழைத்துச் செல்ல முயல்கின்றார். பக்தன் எந்த நிலையில் இருண்டு இருக்கிறானோ, அங்கு கதவு மூடிக்கொள்கிறது. அதையும் திறக்க அன்னை முயல்வதுண்டு. ஜீவனையும், ஜீவாத்மாவையும் தன் அருளொளியால் நிரப்புவதே அன்னை அளிக்கும் ஆசீர்வாதம். மற்றவை அந்த அருளின் சக்தியினால் தானே நடப்பவை. நாம் அவற்றை நம் அறிவுக்கு ஏற்ற முறையில் புரிந்து கொள்கிறோம்.

*********book | by Dr. Radut