Skip to Content

05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்

ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்

பூரண யோகத்தின் அடிப்படையைச் சுருக்கமாக அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பற்றிய பகுதிகளில் சொல்லியாகி விட்டபடியால் இங்கே ஒரு நீண்ட விளக்கம் தேவை இல்லை. அன்னை, ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கையிலும் அவர்கள் சொல்லிய விஷயங்களிலும் பூரண யோகம் சம்பந்தமான சில முக்கிய நிகழ்ச்சிகளையும் உண்மைகளையும் மட்டும் கீழே தருகிறேன். பல கோணங்களிலிருந்து பார்த்த பல விஷயங்களைப் பற்றி அவர்கள் அவ்வப்போது சொல்லிய விஷயங்கள் அவை.

தன்னை பற்றி அன்னை விளக்கும் பொழுது, ‘‘நான் ஒரு தத்துவத்தை விளக்கவோ, கொள்கையைப் பரப்பவோ, மதத்தை ஸ்தாபிக்கவோ இந்த அவதாரத்தை எடுக்கவில்லை. மின்சாரம் பயன் கொடுக்கக்கூடிய ஒரு சக்தி என்பது போல் இறைவனின் அருள் செறிந்த ஆத்மீக சக்தியை என்னுள் தாங்கி நான் இங்கிருக்கிறேன். ஆத்மாவை விடுதலை செய்யத் தவம் செய்யும் யோகியும், பொய்யை விட்டொழிக்க முயலும் எந்த ஒரு மனிதனும், செய்யும் காரியங்களையும், கடமைகளையும் சிறப்பாக (Perfect) செய்ய முயல்வோரும், மனித வாழ்வைத் தெய்வத்திற்கு அர்ப்பணமாக்கித் தன்னை நீற்றுக்கொள்ள முன்வரும் எவரும், உலகிலோ, ஆத்மீகத்திலோ அரிய பெயரிதோர் செயலை ஏற்று முடிக்க எண்ணும் மாபெரும் தலைவனும் என்னிடம் வந்து தம் செயலுக்குத் தேவையான சக்தியை அளவில்லாது பெறலாம். நான் இறைவனின் சிருஷ்டியைத் துரிதப்படுத்தும் செயல் திறன் நிறைந்த சக்தி. நான் ஒரு தத்துவமில்லை’’ என அன்னை விளக்கி, அதை உதாரணத்தின் மூலம் விளக்குவது போல் யோகத்தின் அடிப்படையான நிலையில் ஒரு செய்தியை நமக்கு அளிக்கிறார்.

இருதய குகையில் உறையும் சைத்திய புருஷன் ஜீவாத்மாவின் பிரதிநிதி. பல பிறவிகளில் தவமிருந்தால் சைத்திய புருஷன் குகையை விட்டு வெளிவந்து தவசியின் யோகத்தை நடத்திச் செல்லும். ‘‘பக்தி மார்க்கத்தில் தோய்ந்த சிவனடியார்களும், ஆழ்வார்களும் இந்த சைத்திய புருஷனாலேயே யோகத்தைச் செய்தார்கள்’’ என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். ‘‘இடைவிடாது 30 வருஷம் கணமும் பிறழாது தெய்வத்தை வணங்கி ஒருவருக்கு சைத்திய புருஷன் பலித்தால் அது அதிர்ஷ்டம்’’ என்று அன்னை கூறுகிறார். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த சித்தியை அன்னையின் யோக சக்தியின் அருள் துணை கொண்டு ஒரு சாதகன் சில மாதங்களில் அடையலாம்’’ என்கிறார்.

‘‘தவப் பலன், யோக சித்தி ஆகியவற்றை அடையாதவர்கள், அத்தனையும் தம்மிடம் இருப்பது போல் போலியாக நடித்து ஏமாற்ற முயற்சி செய்வதுண்டு. அதில் அவர்கள் வெற்றியும் பெறுவதுண்டு. ‘‘பூரண யோக சித்தியான (Supramental realisation) சத்திய லோக சித்தியை, அது போல் ஏமாற்றுவதற்குக் கூட நடித்துக் காட்ட முடியாது’’ என்று அன்னை கூறுகிறார்.

அன்னையிடம் நேரடியாகப் பேசும் பொழுது நம் எண்ணங்கள் தெளிவாக இருந்தால், மெல்லிய குரலில் பேசினாலும் அன்னைக்குப் புரியும். பேசுபவரின் எண்ணங்கள் தாறுமாறாகவும், குழப்பத்தால் நிறைந்தும் இருந்தால், உரக்கப் பேசினாலும் அவர் காதில் விழுவதில்லை; புரிவதில்லை.

அன்னையின் Symbol 12 பகுதிகளைக் கொண்டது. அவை 12 அம்சங்களைக் குறிக்கும். அவை Sincerity, உண்மை; Humility, அடக்கம்; Gratitude, நன்றி; Perseverence, விடாமுயற்சி; Aspiration, ஆர்வம்; Receptivity, கிரகிக்கும்தன்மை; Progress, முன்னேற்றம்; Courage, தைரியம் ஆகிய தெய்வீக அம்சங்களும், Goodness, நல்லியல்பு; Generosity, தாராள மனப்பான்மை; Equanimity, நிதானம்; Peace, சாந்தம் ஆகிய மனித குணங்களைச் சேர்ந்த 12 ஆகும்.

மனம் விளக்கத்தைக் கொடுக்கும் இயல்புடையது. Supermind சத்திய லோக சக்தி, செயல் திறனைக் (Power) கொடுக்க வல்லது.

இப்பொழுது மனிதன் பொய் சொல்லும் அளவுக்கு உலக சரித்திரத்திலேயே அவன் பொய் சொன்னதில்லை. அணையப் போகும் விளக்கு சுடர்விட்டு எரிவதைப் போல் பொய்க்கும் வீரியம் வந்தது போலும்!

80 வயதுக்கு மேல்தான் அன்னை இரவில் தூங்கினார்கள். ‘‘பகலில் உணர்வு எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ, அவ்வளவு தெளிவாக இரவிலும் உடல் உறங்கும்போதும், என் உணர்வு தெளிவாக இருக்கிறது’’ என்பார் அன்னை.

ஒரு சமயம் சாதகர் ஒருவர் அன்னை அருகில் வந்தபொழுது மின்சாரத்தால் தாக்குண்டவரைப் போல் அதிர்ச்சியடைந்தார். மனித உடலிலுள்ள மின்சாரம் 18 அடி தூரத்திலுள்ளவருக்கும் அதிர்ச்சியைத் தரவல்லது.

‘‘என் சூட்சும உடலை உலகம் முழுவதும் வியாபிக்கச் செய்யும் திறன் எனக்கு ஏற்படுள்ளது’’ என்கிறார் அன்னை.

இரவில் அன்னையைப் பார்ப்பவர்கள், ‘‘வழக்கத்தைவிட அன்னை உயரமாகக் காணப்படுகிறார்’’ என்று வியந்து கூறுவார்கள்.

உலகமும், உயரமும் அன்னையின் கைவசம். அவரால் எதாகவும் ஆக முடியும்.

‘‘மாற்ற முடியாத விதி’’ என்று ஒன்றில்லை.

‘‘அகந்தை ஜீவனிலிருந்து முழுவதுமாகக் கரைந்துவிட்டால் நிழல் விழாது’’ என்கிறார் அன்னை. 1969ல் சத்தியஜீவன் (Superman) அன்னை எதிரில் வந்த பொழுது ‘‘அதற்கு நிழல் ஏற்படவில்லை’’ எனக் கூறுகின்றார்.

ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தால் அவரது இருதயம் துடிப்பதை நிறுத்தியது. ஆனால் உயிர் போகவில்லை.

மனமும், உடலும், ஜீவனும் பதற்றம் அடையும் நேரங்களில், ‘ஓம் நமோ பகவதே’ என்ற மந்திரத்தை ஸ்மரித்தால் பதற்றம் அமைதியாக மாறிவிடும்.

மனம் சலனமடையாமலிருப்பதே Absence of reaction யோகப் பக்குவத்தின் அறிகுறி.

நம் மரபில் குண்டலினி சக்தி வெளிப்பட்டபின் யோகி சீக்கிரத்தில் சமாதியடைவார். மேலும் அவர் உயிரோடு வாழ முடியாது. ஸ்ரீ அரவிந்தருக்கும், அன்னைக்கும் குண்டலினி சக்தி வெளிப்பட்டது. அதன் பின் 50 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் உயிரோடிருந்தனர்.

ஒரு சண்டை நடக்கும் இடத்தில் அன்னையின் அமைதியை அழைத்தால் விரைவில் அந்தக் கலவரம் அமைதியுறும்.

மனிதன் பணத்தை நம்பி வாழ்கிறான். அல்லது செல்வாக்கை நம்புகிறான். அல்லது சொந்தத் திறமையை நம்பிச் செயல்படுகிறான். நம் உயர்ந்த நம்பிக்கை எதில் இருக்கிறதோ, அதற்குப் பதிலாக அன்னையை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து அன்னையை நம்புவதைக் கற்றுக்கொண்டால் யோகம் பலிக்க உதவும். வாழ்க்கை பலிக்கவும் அது மூல மந்திரம்.

தன்னடக்கம், புலனடக்கம் ஆகியவை சிறந்தவை. அவற்றை ஒரு சில வினாடிகள் கடைப்பிடிப்பதும் சிறப்பு. ஒரு நாளில் 24 மணி உண்டு. புலனடக்கத்தை ஒரு நாள் முழுவதும் இடைவிடாது கடைப்பிடித்தால் யோக சித்தி பெற அதுவே போதும்.

Purity, தூய்மைக்கு அன்னை புது விளக்கம் கொடுக்கிறார். தெய்வத்தை மட்டும் நம்பும் மன நிலையை ‘‘தூய்மை’’ என அன்னை கூறுகிறார்.

‘Trust’, ‘Surrender’ என்ற இரு சொற்களுக்கு, தமிழில் நம்பிக்கை, சரணாகதி எனச் சொல்லலாம். இதிலும் ஒரு புது விளக்கம் அளிக்கிறார் அன்னை. ‘நம்பிக்கையை விட சரணாகதியே உயர்ந்தது’ என்பதே நாம் அறிவது. ‘‘நீ என் தலைவன். நான் உனக்குப் பணிபவன். நீ நல்லதும் செய்வாய்; அல்லாததும் செய்வாய். இருந்தாலும் எனக்கும் உனக்கும் உள்ள உறவில் நான் சரணடைந்தே பழக்கப்பட்டவன். ஆகையால் நான் சரண் அடைகிறேன். நீ எது செய்தாலும் சரி என்று சரண் அடையும் நிலையும் உண்டு’’ என்று அன்னை கூறுகிறார். Trust என்றால் நம்பிக்கை. ‘‘உன்னை நான் தலைவனாக ஏற்றுக்கொண்டேன். உனக்கே என் உயிரையும் உடலையும் ஒப்படைத்து விட்டேன். எது செய்தாலும் எனக்குச் சம்மதம் என்பது உண்மையானாலும், நீ செய்வது எதுவும் எனக்கு இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் நல்லதாக மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கையுண்டு’’ என்பதை, Trust குறிப்பதால், ‘‘அந்த வகையில் Trust, சரணாகதியை விட சிறந்தது’’ என்கிறார்.

சிறப்பாக வேலை செய்யும் சாதகன், தன் வேலையின் சிறப்பை இன்னும் ஒருபடி உயர்த்த முயன்றால், ஒரு முனையிலுள்ள முன்னேற்றம், இன்னொரு முனையில் பின்னேற்றமாகத் தெரியும். பின்னேற்றமில்லாத, முன்னேற்றமாக ஏற்கனவே சிறப்பாக உள்ளதை மேலும் சிறப்படையச் செய்தால், யோகப் பலன் கிடைக்கும்.

ஒரு பாக்டரியில் இது போன்ற முன்னேற்றத்தை பெற்ற ஒரு சாதகர், மறுநாள் காலை பாக்டரிக்குள் நுழைந்து தன் மெஷினுக்கு அருகில் சென்றவுடன் ஸ்ரீ அரவிந்தர் 6 அடி உயரம் தத்ரூபமாக அவர் திகைப்படையும் வகையில் காட்சியளித்தார். 3 நாள் வரை அதுபோல் அடிக்கடி சாதகருக்கு அவர் தோன்றினார்.

*********book | by Dr. Radut