Skip to Content

10. கல்வி

கல்வி

கல்வியைப் பற்றிய அன்னையின் கருத்துகளும், ஸ்ரீ அரவிந்தரின் கருத்துகளும் புரட்சிகரமானவை. அவர் நிறுவிய ஆசிரமப் பள்ளி ஒரு வகையில் இந்தியாவிலேயே தலைசிறந்த பள்ளியாகவும், உலகத்தில் எங்கும் இது போன்ற பள்ளி இல்லை எனக் கருதும் வகையிலும் உள்ளது. ஜவஹர்லால் நேரு அப்பள்ளிக்கு வந்த பொழுது மிகவும் சந்தோஷப்பட்டார். அடுத்த முறை நேரு புதுவைக்கு வந்த பொழுது, ‘‘ஆசிரமப் பள்ளிக்கு எப்பொழுது போகலாம்?’’ எனக் கேட்டார். அவர் அங்கு செல்லும் ஏற்பாடு இல்லை. உடனே திட்டங்களை மாற்றி நேருவை ஆசிரமப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். ராஜீவ் காந்தி அப்பள்ளியைப் பார்த்துவிட்டு, ‘‘இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பள்ளியும் இது போலிருக்க வேண்டும்’’ என்றார்.

இப்பள்ளியின் சிறப்பான அம்சங்கள் கீழ்க்கண்டவை; இறுதியில் பட்டம் கொடுப்பதில்லை. மேல் வகுப்புகளுக்கு மாணவர்கள் வந்தபின் தங்களுக்கு வேண்டிய ஆசிரியரை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். வருஷாவருஷம் பாஸ், பெயில் என்ற அமைப்பில்லை. அங்கு ஆங்கிலம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், தாய் மொழி ஆகிய நான்கு மொழிகள் பயிற்றுவிக்கப் படுகின்றன. எல்லாப் பாடங்களையும் பிரெஞ்சில் நடத்துவார்கள். ஆசிரியரை மாணவர்கள் பெயரிட்டு அழைப்பார்கள். ஓவியம் முக்கியமாகக் கருதப்பட்டு, பயிற்றுவிக்கப்படுகிறது. உடற்பயிற்சிக்கு அளிக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். சாதாரணப் பள்ளியில் ஓர் ஆண்டில் நடக்கும் உடற் பயிற்சியை விட அதிகமாக ஒரு வாரத்தில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதையெல்லாம் தவிர, பள்ளிக்கூட சார்பில்லாமல் பெரும்பான்மையான மாணவர்கள் 6, 8, 10 மொழிகளைப் பேசுவார்கள். எல்லா மாநிலங்களிலிருந்தும் குழந்தைகள் வந்திருப்பதால், அந்த அனுகூலம் அங்கு அபரிமிதமாக உண்டு.

வருஷத்தில் ஞாயிற்றுக்கிழமைகளும், மாத முதல் தேதிகளும், ஆசிரம தரிசன நாட்களும், இறுதி விடுமுறை 45 நாட்களும் தவிர விடுமுறை என்பதே கிடையாது. இப்பள்ளியிலிருந்து வெளியே கல்லூரிகட்கும், IITகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்ற மாணவர்களில் பெரும்பாலோர் அந்தந்த இடத்தில் முதன் மாணவர்களாகவே இருக்கின்றனர்.

கல்வியின் பரிமாணம்

ஏதாவது ஒரு பாடத்தை - அதாவது கணக்கு அல்லது இலக்கியம் அல்லது சரித்திரம் ஆகிய ஏதாவது ஒன்றை - தெளிவாக ஒரு மாணவன் பயின்றால், பின்னர் எல்லாப் பாடங்களையும் முழுவதுமாகக் கற்றுக்கொள்ளும் திறன் அவனுக்கேற்படும்.

சரித்திரம், வாழ்க்கை வரலாறுகள் (Biography) மாணவனுக்கு மிகவும் பயனுள்ள பாடங்களாகும்.

கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களைப் படிப்பதால் மனம் கூர்மையடைகிறது. அது ஆத்மீகத்தை நுணுக்கமாக உணர உதவும்.

குழந்தைகளைத் திருத்துவதற்குமுன் பெற்றோர்களைத் திருத்துவது அவசியம்.

பெற்றோர்களுடைய திறன், குழந்தைகளிடம் மேலும் அதிகமாகக் காணப்படுவது போலவே, பெற்றோர்களிடையே மறைந்துள்ள குறைபாடுகள், குழந்தைகளிடையே வெளிப்படையாகத் தோன்றும்.

ஒருவன் தன் ஆத்மாவுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடிந்தால், அவனுடைய புத்திசாலித்தனமும் (Intelligence) வளர ஆரம்பிக்கும்.

மேற்சொன்னவை அன்னை, ஸ்ரீ அரவிந்தருடைய கருத்துகள்.

கல்வியின் அடிப்படையில் வாழ்க்கையில் ஏற்படும் நிலைகளைக் கருதி அவர்கள் சொல்லியிருக்கும் வேறு பல கருத்துக்களையும் கீழே தந்து, தேவையான இடங்களில் விளக்கம் கொடுக்க முயல்கின்றேன்.

‘‘எந்த மனிதனாலும் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்’’ என்று அன்னை கூறுகிறார். மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது அர்த்தமற்றதாகத் தோன்றும் இக்கருத்தை ஆராய்வோம்.

மனிதனுடைய அனுபவம் வளரலாம்; அறிவுத்திறன் வளர முடியாது’’ என்பது நிபுணர்கள் கருத்து. ஒரு கட்டம் வரை இது உண்மை. மனிதன் மடையனாக இருந்தாலும் எந்த நிமிஷம் தன் ஆத்மாவில் அக்கறை எடுத்துக் கொள்கின்றானோ, அதன் பின் இது உண்மையில்லை. பாரிஸில் அறிவு சிறிதும் இல்லாத ஒரு பெண் நுணுக்கமான நாட்டியங்களைப் பயில ஆர்வம் காண்பித்த பொழுது மற்றவர்கள் சிரித்தார்கள். ‘அவள் தன் ஆத்மாவுடன் தொடர்புள்ளவள்’ என்பது மற்றவர்கட்குத் தெரியாது. அவளது பயிற்சியால், வியத்தகு முன்னேற்றமடைந்தாள். பின்னர் ஆத்மீகத் தொடர்பைப் புறக்கணித்தாள். ‘‘அதிலிருந்து அவளுக்குப் பழைய புத்திசாலித்தனம் வந்துவிட்டது’’ என அன்னை கூறுகிறார். மேலும், பயிற்சிக்கு உள்ள முக்கியத்துவத்தை நாம் உணர்வதில்லை. உலகப் புகழ் வாய்ந்த கல்லூரிகளில், அது போன்ற உயர்ந்த பல இடங்களில் உள்ள பெரும் நிபுணர்களுடைய அறிவுத்திறனை (Intelligence) அளவிட்டுப் பார்த்தால், ‘‘இந்த மனிதர்கள் எல்லாம் இவ்வளவு தூரம் முன்னேற முடியுமானால், எந்த மனிதனும் எந்தக் காரியத்தையும் செய்யலாம்’’ என்ற நம்பிக்கை தோன்றும்.

உடல், உள்ளம், மனம் ஆகியவற்றைப் பற்றி ஓர் ரசமான கருத்து; ‘‘உன் உடலின் நலத்தில் பெரும் அக்கறைக் கொண்டால் உடனே நோய் ஏற்படும். உன் உணர்ச்சிகளையே நீ பெரிதும் கருதினால், சோக மயமாகி விடுவாய்; மனத்தில் எண்ணங்களை தன் சிறப்பை நாடும் வகையில் தொடர்ந்து அக்கறை எடுத்துக்கொண்டால் பைத்தியம் பிடிக்கும்.”

மனித சுபாவம் வினோதமானது. நம் செயலுக்கு எதிர்மாறான பலனை அளிக்க வல்லது. ஆதலால் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் ஆழ்ந்து செயல்பட வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், உடல் நலத்தை அளவோடு பேண வேண்டும். மனம் நிம்மதியாக இருக்க வேண்டுமானால், உணர்வுகளில் அக்கறை காட்டக் கூடாது.

மனிதன் வாழ்க்கையில் சிரமப்படுவதற்கும், துன்பப்படுவதற்கும் அன்னை சொல்லும் காரணம் ஒன்றுண்டு. ‘‘உலகமும், மற்றவர்களும் தாம் நினைத்தபடி, எதிர்பார்த்த வண்ணம் செயல்பட வேண்டும் என நினைக்கின்றனர். அப்படியில்லை என அறிந்தவுடன் ஏமாற்றமும், விரக்தியும், வேதனையும் அடைகிறார்கள். மனிதனுடைய சஞ்சலங்களுக்கு மேற்சொன்னதே அடிப்படை’’ என அன்னை சொல்கிறார்கள். ‘‘தன்னுடைய கடமைகளையெல்லாம் செய்வதில் ஆர்வம் காண்பித்தால், அந்தச் சிரமங்கள் குறையும். மீதியிருக்கும் சிரமத்தைப் போக்கப் பிரார்த்தனை செய்தால் அதை நான் நீக்குவேன்’’ என்கிறார் அன்னை.

அறிவில்லாமல் ஒரு மனிதன் தன்னிஷ்டப்படி நடக்க விரும்பினால், அதில் கூட ஓர் ஆத்மீக உண்மையுண்டு.

அறிவால் நடத்தும் வாழ்க்கையை விடுத்து வாழ்க்கைக்கு ஆத்மாவைத் தலைவனாக ஏற்றுக்கொண்டால், அறிவும், உணர்ச்சியும், செயலும் ஆத்மாவுக்குக் கட்டுப்படும். அதாவது மனிதன் பக்குவம் அடைந்தால் (ஆத்மாவை உணர்ந்தால்) அவன் மனம் அவனுக்குக் கட்டுப்படும். எவனொருவனுக்கு அவன் மனம் கட்டுப்படுகிறதோ, அவனுக்கு உலகமும் கட்டுப்படும். இது ஆத்மீக உண்மை. அகந்தை இந்த உண்மையைக் கண்டு கொண்டு, முதல் பகுதியை விட்டுவிட்டு (தன் மனம் தனக்கு அடங்குதல்) இரண்டாம் பகுதியை மட்டும் எதிர்பார்க்கிறது. இதுவே மனித மனத்தின் இயல்பு. பக்கத்து வீட்டுப்பையன் இரவு பகலாய்ப் படித்து சிறு வயதிலிருந்து முதல் மார்க் வாங்கி இன்று மெடிக்கல் காலேஜில் சேர்ந்தால், படிப்பை முழுதும் புறக்கணித்து அடிக்கடி பெயிலாகும் அடுத்த வீட்டுப்பையன், ‘‘அவனைப் போல் என்னையும் மெடிக்கல் காலேஜில் சேர்க்க வேண்டும்’’ என அடம் பிடிப்பது போல், கடமைகளை மறந்து, உரிமைகளை மட்டும் கோரும் மனம் இப்படித்தான் எப்பொழுதும் செயல்படுகிறது.

‘‘புதிய சிருஷ்டியான சத்திய உலகத்திற்கும், இன்றுள்ள நம் வாழ்க்கைக்கும் பாலமாகப் பெண்கள் அமைகின்றார்கள்’’ என்றொரு கருத்தையும் அன்னை சொல்கிறார். புதியதைச் சிருஷ்டிக்கும் பாணியில் பெண்மை அமைந்துள்ளது. புதிய சக்தியைச் சேகரிக்கும் வகையில் ஆண்மையும், சேகரித்த சக்தியால் சிருஷ்டி செய்வது பெண்மையுமாக இருப்பதால், நாம் இதை நன்குணர முடிகிறது. ‘‘சத்தியத்தின் சக்தியை (Power) எப்படிப் பயன்படுத்துவது என்பது பெண்களுக்கு நன்கு தெரியும்’’ என்றும் அன்னை கூறுகிறார்.

‘‘வன்முறை விலக்கப்பட வேண்டியதே! ஆனால் தற்காப்புக்காக வன்முறையையும் பயன்படுத்தலாம்’’ என்று கூறும் அன்னை, ‘‘தற்காப்புக்காக மட்டும் வன்முறையை உபயோகிக்க வேண்டும்’’ எனக் கூறுகிறார்.

‘ஆத்மீக ஒளி’, ‘ஆத்மீக இருட்டு’ என இரண்டையும் அன்னை உதாரணம் கொடுத்து விளக்குகிறார்! ‘‘ஆத்மீக ஒளியின் முன் நடுப்பகல் கும்மிருட்டாகத் தெரியும். ஆத்மீக இருளின் முன் நள்ளிரவு நடுப்பகலைப் போல் ஒளி வீசும். மேலும் இறைவனின் பிரகாசத்தின் முன் மங்கிய ஒளியாகவே தோன்றுகிறான்.’’

‘சாதாரண வாழ்க்கை’, ‘ஆத்மீக வாழ்க்கை’ என்று நாம் பிரித்துப் பேசுகிறோம்; புரிந்து கொள்கிறோம். ‘‘வாழ்க்கையில் அத்தகைய வேறுபாடில்லை’’ என அன்னை கூறுகிறார். ‘‘வாழ்க்கை என்பது ஒன்றே. ஆண்டவனை உணர்ந்து செயல்படின், வாழ்வு சிருஷ்டியின் சிறப்பாக அமையும். அதை உணராது வாழ்ந்தால் ஜீவனில்லாத வாழ்வாக அமையும். ஆண்டவனை உணர்ந்த பின் சாதாரண வாழ்வு, ஆத்மிக வாழ்வு என வேறுபாடில்லை என்பது விளங்கும்’’ என்கிறார்.

‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்பது வாக்கு. அன்னை, ‘‘உன் எதிரியின் பேரிலும் அன்பு செலுத்து’’ என்கிறார்.

**********book | by Dr. Radut