Skip to Content

07 - செய்யும் தொழிலில் அன்னை செயல்படுவது எப்படி?

அன்னைக்குப் பிரார்த்தனை செய்து பலன் அடைந்தவர்கள் பலர். சிறிய பிரச்சினைகள் தீர்ந்தாலும், பிரச்சினைக்கு உரியவர்கட்கு அது பெரு வியப்பாக இருக்கும். மற்றவர்கட்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்காது. காணாமல் போன மோதிரம் கிடைத்துவிட்டால் தொலைத்தவருக்கு அது பலன்; சந்தோஷம். ஒரு மோதிரம் ஒரு சவரனோ, அரைச் சவரனோ இருக்கலாம். அதை இழந்தவர் திரும்பிப் பெற்றதில் கேள்விப்படுபவர்க்கு வியப்புக்குரிய செய்தி இல்லை. ஆனால், கால் இலட்சம் பெறுமானம் உள்ள வைர மோதிரமாக இருந்தால், கேட்பவரிடம் ஏற்படும் விளைவே வேறாக இருக்கும். அரைச் சவரன் கிடைப்பதற்கும், வைர மோதிரம் கிடைப்பதற்கும் செயல்படும் சக்தி ஒன்றுதான்.

500 ரூபாய் வருமானம் உள்ள ஒருவர் அன்னையை வழிபட்டு 5000 ரூபாய் வருமானம் பெற்றால், அவரைப் பொறுத்தவரை அது நல்ல செய்தி. மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்குப் பொதுவாக அதனுள் ஒன்றும் இல்லை. இரண்டரைக் கோடி நஷ்டம் அடைந்த ஓர் ஆலையில் அன்னையின் முறைகளைக் கடைப்பிடித்து இரண்டரைக் கோடி இலாபத்தை எட்டக் கூடிய நிலையை அவ்வாலை அடையும் பொழுது, அது எல்லோருக்கும் ஒரு செய்தியை அளிக்கின்றது.

அன்னையைப் பொறுத்த வரையில் குடும்பம் ஒரு தொழில்தான்; ஒரு தொழிலும் (Industry) ஒரு குடும்பம்தான். இரண்டிற்கும் அடிப்படை ஒன்றுதான். அளவுதான் வித்தியாசம். என்றாலும், ஒரு தொழிலை நடத்துபவரிடம் அன்னையைப் பற்றியும், அவரின் முறைகளைப் பற்றியும் சொல்வதற்குப் பல அம்சங்கள் உள்ளன.

100 கோடி மூலதனம் உள்ள ஓர் அரசு நிறுவனம், பத்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை நிறுத்தம்; போராட்டம், உற்பத்திக் குறைவு, நஷ்டம் என்று கீழ் நோக்கில் போய்க் கொண்டு இருந்தது. அதில் வன்முறை நித்திய நிகழ்ச்சியாக இருந்தது. அதிகாரிகளும், உண்மை ஊழியர்களும் அடிக்கடி தாக்கப்பட்டனர். ‘இனி அந்த நிறுவனம் ஓர் ஒழுங்கின் கீழ் வாராது’ என்று எல்லோரும் முடிவு கட்டிய நிலையில், அதன் தலைவர் அன்னையின் முறைகளைக் கேள்விப்பட்டு அவற்றை பக்தி சிரத்தையுடன் பின்பற்றியதும், எல்லாத் தொந்தரவுகளும் விலகி, உற்பத்தி உபரியாகிப் பெருவாரியாக இலாபம்வர ஆரம்பித்தது, பல தேசிய விருதுகளும் கிடைத்தன.

இந்த நிலைக்கு முன்னால் அந்த நிறுவனத்திற்கு எல்லா வகைகளிலும் சோதனை. கச்சாப் பொருளுக்குக் கடுமையான தட்டுப்பாடு. விற்பனையான சரக்குக்கு வரவேண்டிய தொகை பல கோடிகள் நிலுவையாய் நின்றன. எல்லா வகைகளிலும் நெருக்கடி. கான்டீனில் எப்பொழுது பார்த்தாலும் கலாட்டா. எங்கும், எந்த நேரத்திலும் கோஷம்; போராட்டம்.

அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர், “எங்காவது கூச்சல் கேட்டால் தலையைச் சுற்றுகிறது. எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருக்கின்றது” என்று அடிக்கடி கூறுவார். அதன் தலைவர் அன்னையைப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்த மறு நாளே, அதுவரை கலக பூமியாக விளங்கி வந்த கான்டீனில் உள்ள தகராறு நின்றுவிட்டது. தலைவருக்கு அதைக் கண்டு ஒரே ஆச்சரியம். ‘அன்னையின் எல்லா முறைகளையும் நாள் முழுதும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று தீர்மானித்து, அதன்படி ஒழுகினார். வியப்புக்குரிய பல மாறுதல்கள் ஏற்பட்டன. அந்த நிறுவனம் ஒரு பெரிய அமைப்பின் முக்கியப் பகுதி. ஓராண்டுக்குப்பின் அதன் தலைவர் அங்கு ஏற்பட்ட நல்ல பல மாறுதல்களை எல்லாம் என்னிடம் விவரித்து, “எதையுமே இன்றுகூட என்னால் நம்ப முடியவில்லை” என்று வியந்தார். அதற்குப்பிறகு அந்த நிறுவனத்தின் உற்பத்தி, நாட்டிலேயே முதன்மையான அளவுக்கு பெருகியது.

இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் முறைகள் யாவை? அன்னையின் சக்தி என்னுடைய சிறுதொழிலில் சிறப்பாகச் செயல்பட நான் செய்ய வேண்டியது என்ன?

‘செய்ய வேண்டியதைச் சிறப்பாகச் செய்வது’ என்பதுதான் பொதுவான பதில்.

ஒரு தொழிலை மேற்கொண்டால் அதற்குத் தேவையானவை: உழைப்பு, பொறுப்பு, நிதானம், விரைந்து செயல்படுதல், நேர்மையாகச் செயல்படுதல், பொருள்களையும், செயல்களையும் கூர்மையாகக் கண்காணித்தல், குழப்பமின்றிக் காரியங்களைச் செய்தல், தொழிலகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.

நான் குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டிடம் 1½ பர்லாங் நீளம் உள்ளது. அவ்வளவு பெரிய கட்டிடத்தில் எந்தப் பகுதிக்குப் போனாலும் அந்தச் சோதனையான காலத்திலும்கூடச் சுத்தமாக வைத்திருந்தார் அதன் தலைவர். அன்னையின் சக்தி விரைந்து செயல்படுவதற்கு அந்தச் சுத்தம் ஒரு முக்கியக் காரணம். “இந்த ப்ராஜெக்ட்டில் முதல் செங்கல்லை எடுத்து வைத்ததிலிருந்து நான் எஞ்ஜினீயராக இருக்கின்றேன். இன்று நானே இதன் தலைவர். இது என் குழந்தையைப் போன்றது” என்றார் அந்தத் தலைவர்.

அவருடைய பொறுப்புணர்ச்சி, கடமையுணர்ச்சி, அந்த அரசு நிறுவனத்தைத் தம் சொந்த நிறுவனம் போல எண்ணும் உளப்பாங்கு ஆகியவை, அன்னை முழுமையாகச் செயல்பட மற்றொரு முக்கியக் காரணம்.

இன்று கடை வீதிகளில் உள்ள கடைகள் மிகச் சுத்தமாகவும், அழகாகவும் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. வியாபாரிகள் அவற்றின் அவசியத்தை உணர்ந்துவிட்டார்கள். ஆனால், ஒரு தொழிற்சாலைக்குப் போனால் அந்தச் சுத்தத்தைக் காண முடியாது. அங்கு, பொருள்கள் அலங்கோலமாகவும், கண்ட கண்ட இடங்களில் சிதறிக் கிடப்பதையும் காணலாம்.

முதலாவதாக, ஒரு தொழிலில் தேவைப்படுவது உழைப்பு. முதல் கட்டத்திலிருந்து கடைசிக் கட்டம் வரையில் உழைப்பு குறை இல்லாமல் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் முதலாளியாவது சுறுசுறுப்பானவராக இருத்தல் வேண்டும். சுறுசுறுப்புள்ளவர்கள் நடத்தும் தொழிலில் அன்னை சுலபமாகச் செயல்பட முடியும். வாழ்க்கையில் சோம்பேறித்தனத்தைவிடச் சுறுசுறுப்பு பலன் அளிப்பது போல, அன்னையின் சக்தியைப் பெற்றுப் பலன் அளிப்பதிலும் சுறுசுறுப்பு முக்கியமானது.

ஒரு நீர் ஏற்றும் மோட்டார் செய்யும் நிறுவனத்தைச் சிறிய அளவில் தொடங்கினார் ஒருவர். அவர் மனைவி தம் தோழிகள் மூலம் அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆசிரமத்திற்கு வந்தார். தம் கணவரையும் அழைத்து வந்தார். அவர் உழைப்பாளி என்பதுடன் மிகச் சுறுசுறுப்பானவராகவும் இருந்தார். அவர் மட்டும் அல்லாது அவருடைய குடும்பமே சுறுசுறுப்பானது. அவர் சில ஆண்டுகளில் வானளாவ வளர்ந்து விட்டார். அவருடைய வியாபாரம் ஒன்றரைக் கோடியைத் தாண்டிவிட்டது. அன்னையின் அருளை வியந்து போற்றிய அந்த வியாபாரி, ஆண்டு தோறும் வடநாட்டிலிருந்து தம் குடும்பத்துடன் ஆசிரமத்திற்குவரத் தவறுவதே இல்லை. அவருடைய வெற்றிக்குக் காரணம் அவர் குடும்பத்தின் சுறுசுறுப்பேயாகும்.

தொழிலில் நுணுக்கம் உண்டு. இதை (Technology) என்கின்றோம். இதைத் ‘தொழில் திறன்’ எனவும் கூறலாம். வேலைப்பாடு (Workmanship) தொழிலுக்கு முக்கியம். அது தானே பலன் அளிக்கும் தன்மையுள்ளது. அன்னைக்கு முக்கியமானவற்றில் அதுவும் ஒன்று. கல்லில் கலை வண்ணம் செய்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கற்கலைஞர் ஒருவர் பாண்டிச்சேரிக்கு வியாபார விஷயமாக வந்தார். வந்த இடத்தில் அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டுச் சமாதியைத் தரிசனம் செய்தார். ஆண்டுக்குப் பத்து இலட்சம் சம்பாதிக்கக் கூடிய அவர், மனம் நெகிழ்ந்து அன்னைக்குக் கணிசமான ஒரு காணிக்கையைச் செலுத்தினார். சில ஆண்டுகளுக்குப்பிறகு அவருடைய வருமானம் பல கோடிகளைத் தாண்டிவிட்டது. தொழில் நுணுக்கமும், திறமையும் உயர்ந்தவை. அவை இரண்டும் பொருந்தியவர்களை ‘வல்லுநர்’ என்கின்றோம். அன்னையின் அருள், திறமை கூடியிருக்கும் இடங்களில் அளவு கடந்து செயல்படும்.

ஒரு மனிதனுக்கு எல்லா அங்கங்களும் முழுமையாக இருக்க வேண்டும். ஓர் அங்கம் குறைந்தால்கூட ஊனம்தான். அதே போல, ஒரு நல்ல மனிதனுக்கு எல்லாச் சிறப்பான குணங்களும் மொத்தமாகத் தேவை. அவற்றில் ஒன்று குறைந்தாலும் ஊனமே. அதே போல, குறையற்ற எல்லா உயர்ந்த குணங்களும் ஒரு தொழிலுக்குத் தேவைப்படுகின்றன. அன்னை எல்லா மனித இயல்புகளையும் ஏற்றுக் கொண்டாலும், உயர்ந்த குணங்களைப் பெரிதும் பாராட்டி, அவற்றின் மூலம் விரைவாகவும், விரிவாகவும் செயல்படுவார்.

ஓர் இளம் பொறியாளர் சொந்தத்தில் ஒரு தொழிலைத் தொடங்குவதற்காகத் தீவிரமான பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், தோல்வியைத்தான் சந்தித்தார். அவருடைய விடா முயற்சியின்பால் ஈர்க்கப்பட்ட அவருடைய நண்பர் ஒருவர் அவருக்கு உதவ முன்வந்து, ஒரு பெரிய தொழில் அதிபரை நாடி அவருக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். அந்தத் தொழில் அதிபர் 15 பெரிய தொழில்களை நடத்தி வந்தார். யாரையுமே அவர் கூட்டாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. ‘கூட்டுக் கூடாது’ என்பது அவருடைய திட்டவட்டமான கொள்கை. அப்படிப்பட்டவர், அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பொறியாளரின் திறமையையும், தமக்கு அவரை அறிமுகம் செய்து வைத்த நண்பரின் தகுதியையும் கருதி, 40 இலட்ச ரூபாய் மூலதனத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கி, அதில் அந்தப் பொறியாளருக்குக் கால்கூட்டுக் கொடுப்பதாகவும், இலாபம் வரும் காலம்வரை சம்பளம் கொடுப்பதாகவும், இதுவரை அந்தப் பொறியாளர் செய்த தொழில் முயற்சிகளால் ஏற்பட்ட கடனைக் கொடுப்பதாகவும் கூறினார். இப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், அந்தப் பொறியாளர், “எனக்குக் கூட்டு வேண்டாம். சம்பளம் போதும். 5 ஆண்டுகள் சென்றதும் அந்த முழுத் தொழிலையும் எனக்கே கொடுத்துவிட வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். அப்படியானால், ‘அவருக்கு ஒருவர் பெரிய முதலீடு செய்து ஒரு தொழிலை ஆரம்பித்துக் கொடுத்துவிட்டு, 5 ஆண்டுகளுக்குப்பிறகு தலையில் துணியைப் போட்டுக் கொண்டு வெளியேறிவிட வேண்டும்’ என்பதுதானே அந்த நிபந்தனையின் பொருள்? அதற்கு இசைவதற்கு யாருக்கு மனம் வரும்? உதவி செய்ய முன்வந்த தொழில் அதிபர், ‘கழற்றிக் கொண்டு போனால் போதும்’ என்ற முடிவுக்கு வந்து, பேசாமல் எழுந்து போய்விட்டார்.

அந்தப் பொறியாளர் திறமையானவர்தாம். சந்தேகம் இல்லை. ஆனால், பேராசை கொண்டவர். அதனால்தான் அவருடைய முயற்சிகள் வரிசையாகத் தோற்றுக் கொண்டு வந்தன. எனவேதான் தொழிலில் வெற்றி காண்பதற்குத் திறமை மட்டுமல்லாது எல்லா உயர்ந்த குணங்களும் தேவைப்படுகின்றன.

15 ஆண்டுகளுக்கு முன்னால், 100 ரூபாய் மாத வருமானம் உள்ள ஓர் இளைஞர், 5 இலட்சம் பெறுமான மிக்க ஓர் ஆலையில் பங்குகள் விற்பதாகக் கேள்விப்பட்டார். அவர் அந்தப் பங்குகளை வாங்க நினைத்தார். அதன் காரணமாக அந்த ஆலையின் நிலையை அறிய முற்பட்டார். ‘அந்த ஆலையில் இலாபம் வந்து பல ஆண்டுகள் ஆகின்றன’ என்று பலரும் கூறினார்கள்.

அந்த இளைஞர் ஒரு தீர்மானத்துடன் சென்று அதன் நிர்வாக இயக்குநரைச் சந்தித்து, “நான் உங்கள் ஆலையில் இருபதாயிரம் ரூபாய்க்குப் பங்குகள் வாங்க நினைக்கின்றேன். ஆனால், இன்று ஆலை இலாபகரமாக இயங்கவில்லை என்று அறிகின்றேன். என்னை நீங்கள் மானேஜராகப் போட்டால் இந்த ஆலையை இலாபகரமாக மாற்றிக் காட்டுகின்றேன்” என்றார். நிர்வாக இயக்குநர் அதற்குச் சம்மதித்ததுடன், பங்குகளுக்கு உரிய இலாபம், சம்பளம், உபரியாக வியாபார இலாபத்தில் 10 சதவிகிதப் பணம் ஆகிய எல்லாம் தருவதாக வாக்களித்தார். இளைஞர் முதலீடு செய்துவிட்டு மானேஜர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஒரே ஆண்டில் சில இலட்ச ரூபாய் இலாபமாகக் கிடைத்தது. நிர்வாக இயக்குநர் வாக்களித்தது போல அவருக்கு இலாபத்தில் 10 சதம் அளிக்க முன்வந்தார். ஆனால், இளைஞர், “5 சத இலாபம் போதும்” எனக் கூறி, அதை மட்டுமே பெற்றுக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அவர் அந்த ஆலைக்கு டைரக்டராகவும் ஆனார். பின்னர் அவர் ஆண்டுக்கு ஒரு தொழிற்சாலை என்று தொடங்கி வியாபார உலகில் முன்னணி நட்சத்திரமாக ஒளி வீசினார்.

பேராசை தவிர்க்க முடியாதது. முதலில் கூறிய இளம் பொறியாளர் அந்தப் பேராசையில் சிக்கி, தம் எதிர்காலத்தையே இருளாக்கிக் கொண்டார். பின்னர் கூறிய இளைஞர் நிதானம், கட்டுப்பாடு, அதுவும் முறையாகத் தமக்குக் கிடைத்த பணத்தைக் கூட ‘வேண்டாம்’ என்று மறுக்கும் மனக் கட்டுப்பாடு ஆகிய உயர்ந்த குணங்களால் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனார். உயர்ந்த குணங்கள் நிறைந்த அவரிடம், அன்னை பேரளவில் செயல்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.

ஓர் அயல் நாட்டுக் கடை. அது சிறிய கடை. நாள் ஒன்றுக்கு நம் கணக்குப்படி பத்தாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். திடீரென்று ஓரிரு நாட்களுக்குள் இருபத்தையாயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இம்மாதிரியான நெருக்கடிக் கட்டங்களில் கடைக்காரர் அந்தத் தேவையைத் தவிர்த்துவிடுவதே வழக்கம். இந்த முறை அந்தக் கடை முதலாளிக்கு, ‘எப்படியாவது சமாளிக்க வேண்டும்’ என்ற ஓர் உந்துதல் ஏற்பட்டது. ‘இதற்கு வழி என்ன?’ என்று தம் நண்பர்களிடம் கேட்டார் அவர். அவர்கள் அன்னைக்குப் பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள்.

வெளி நாடுகளில் ‘பிரார்த்தனை’ என்றால் கேலி செய்வார்கள். ஆகவே, யோசனை கூறிய அன்பர், ‘அன்னைக்குச் சுத்தம் முக்கியம். உங்கள் கடையைச் சுத்தம் செய்யுங்கள்’ என்றார். கடை முதலாளியும், மற்றவர்களும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், மனத்தின் ஒரு மூலையில், ‘இது பைத்தியக்காரத்தனம்’ என்ற நினைவு குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக் கொண்டு இருந்தது. இருந்தாலும் கடையை எவ்வளவு சுத்தம் செய்ய முடியுமோ, அவ்வளவு சுத்தம் செய்தனர்.

அன்று மாலைத் தபாலில் கடைக்காரருக்குத் தேவைப்பட்ட ஒரு தொகை-குறிப்பாக அதே தொகை-ஒரு வாடிக்கைக்காரரிடமிருந்து செக் மூலம் வந்தது. அந்த வாடிக்கைக்காரர் அத்தனை சுலபமாகப் பணம் கொடுப்பவர் இல்லை. கொடுத்தாலும் பல தவணைகளில்தான் கொடுப்பார். அப்படிப்பட்டவர், இன்று மொத்தப் பணத்தையும் தாமே அனுப்பி வைத்திருக்கின்றார்! இது எல்லோருக்கும் வியப்பை அளித்தது. அந்தக் கடையில் உள்ள அனைவரும் இப்பொழுது சுத்தத்தின் மகிமையையும், அன்னையின் அருளையும் புரிந்து கொண்டதோடு, ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்.

ரூபாய் 7,000 முதலோடு ஒரு தொழிற்சாலையைத் தொடங்கிய இளைஞர் ஒருவர், பத்தே ஆண்டுகளில் 10 இலட்சம் புரளக் கூடிய அளவுக்கு உயர்ந்துவிட்டார். ஒரு கட்டத்தில் அவர் ஈடுபட்டு இருந்த தொழிலில் ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டது. பலரும் தொழிற்சாலைகளை மூடிவிட்டார்கள். அந்தக் கெட்டிக்கார இளைஞர் மட்டும் தம் தொழிற்சாலையை மூடாமல் திறந்து வைத்துக் கொண்டு இருந்தார். ஆனால், உற்பத்தி இல்லை. கடன் ஏற்பட்டுவிட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுகூட அவரால் கடனை அடைக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் சமாதியைத் தரிசித்துவிட்டுப் போனார். அதிலிருந்து அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அவருடைய நிலையோடு ஒப்பிடும்பொழுது அவருக்கு ஏற்பட்டிருந்த கடன் அப்படி ஒன்றும் பெரிதில்லை. தொழிலைத் தொடர்ந்து நடத்த வேண்டும். அதுதான் அவருடைய பிடிவாதம். “உற்பத்தி இல்லாமல் தூசி படிந்து கிடக்கும் இயந்திரங்களை, வேலை நடக்கும் காலத்தில் துடைப்பது போலத் துடைக்க வேண்டும். சுத்தமான இடத்தில் அன்னையின் அருள் தங்கி நிற்கும்” என்பதை ஓர் அன்னையின் பக்தர் மூலம் அறிந்தார். அவ்வாறே செயல்பட்டார். நாள் தோறும் அவருடைய இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. உடனே உற்பத்திக்குக் கிராக்கி வந்து விட்டது. அவருடைய தொழிற்சாலையில் இயந்திரங்கள் இரவு பகலாக ஓட ஆரம்பித்தன. ஆறே மாதங்களில் கடன் அடைபட்டது. மூன்றே வருடங்களில் அவருடைய வியாபாரம் மூன்று மடங்காகப் பெருகிவிட்டது.

அன்னையின் முறைகள் அநேகம். வாழ்க்கையில் பொதிந்து இருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் அன்னை விளக்கமாக எழுதி இருக்கிறார். அவருடைய கட்டுரைகள் 17 வால்யூம்களாகப் பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றன. அதே போல் தொழிலைப் பற்றியும் நிறையவே எழுதி இருக்கின்றார் அன்னை.

ஒரு தொழிலை நடத்துபவர் அன்னையின் பக்தராக இருந்தால், அவர் தம் தொழிலில் அன்னையின் முறைகளைப் பின்பற்றி வெற்றி அடைய நினைத்தால், கீழ்க்கண்ட கருத்துகள் அவருக்கு மிகவும் பயன்படும். 

 1. தொழிலுக்குத் தேவையான முழு உழைப்பை மனப் பூர்வமாகவும், மகிழ்வாகவும் அளித்தல் வேண்டும்.
 2. அன்றாட வரவு செலவுக் கணக்குகளை அன்றன்றே முடிக்க வேண்டும். ‘நாளைக்கு’ என்று ஒத்திப் போடக் கூடாது.
 3. தம் தொழிலில் உள்ள பொருட்களை ஜீவன் உள்ள குழந்தைகளைப் பாதுகாப்பதைப் போலப் பராமரிக்க வேண்டும்.
 4. தொழிலின் முழுப் பொறுப்பையும் முழு மனத்தோடு ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்.
 5. தொழிலில் மற்றவர்கள் கையாளும் நுணுக்கங்களை (Technology) புறக்கணிக்காமல் கடைப்பிடிக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேலே போய் முன்னோடியாக இருக்க முயல்வது சிறப்பு.
 6. புதிய முறைகள் (Systems) தொழிலில் அமுலுக்கு வந்தால், அவற்றைக் கடைப்பிடிக்க விரைவாக முன்வரல் வேண்டும்.
 7. தொழிலகத்தைச் சுத்தத்திற்கு எடுத்துக்காட்டாக வைத்தல் வேண்டும்.
 8. சீராகவும், முறையாகவும் பொருட்களை வைத்தல் வேண்டும்.
 9. தணிந்த குரலில் பேசுதல் அவசியம்.
 10. மனச்சாட்சிக்கு விரோதமான காரியங்களைச் செய்தல் கூடாது. ஒவ்வொரு தொழிலிலும் ஒரு முறை உண்டு. வீட்டில் ஏற்றுக் கொள்ளாத காரியங்களை, தொழில் கருதித் தொழிலில் ஏற்றுக் கொள்வார்கள். எந்த நிலையிலும் தொழிலில் உள்ள நல்லவர்கள் செய்யாத காரியங்களை நாம் செய்யக் கூடாது. தொழிலில் உள்ள மனச்சாட்சி தனி நபரின் மனச்சாட்சியைப் போலத் துல்லியமாக இருக்காது. என்றாலும், தொழிலில் உள்ள மனச்சாட்சியை மதித்து நடக்க வேண்டும். 

தவறாமல் கணக்கு எழுதும் எந்த வியாபாரத்திலும் பணத் தட்டுப்பாடு இருக்காது. ஒரு தொழிலில் பண நெருக்கடி ஏற்பட்டால், அங்கு கணக்கு பாக்கியாக இருக்கின்றது என்று பொருள். பாக்கியுள்ள கணக்கை எழுதி முடித்துவிட்டால், மறு நாளே பணத் தட்டுப்பாடு தீர்ந்துவிடும். அன்னை செயல்பட இந்த ஒழுங்கு மிக அவசியம் தேவை.

உழைப்பு, பொறுப்பு, கவனம், கணக்கு, நுணுக்கம், முறைகள், நியமம், சுத்தம், தணிந்த பேச்சு, மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயற்படுதல் ஆகியவை வாழ்க்கையில் எவர்க்கும் வெற்றி அளிக்கும். தொழிலில் மந்தப் போக்குள்ள ஒருவர், அன்னையை ஏற்றுக் கொண்டு மேற்சொன்னவற்றில் ஏதாவது ஓர் அம்சத்தை முழுமையாகக் கடைப்பிடித்தால், தொழில் சிறப்பாக மாறிவிடும். மேற்சொன்ன எல்லா அம்சங்களையுமே முழுமையாகக் கடைப்பிடிக்க முயல்வது சிறந்த இலட்சியமாகும். இலட்சியத் தொழில் அதிபராகத் தம்மை உருவாக்கிக் கொள்ளும் பொழுது, ஒருவர் வரலாற்றைப் படைப்பவராகவும் ஆகின்றார்.

பெருந்தொழில்களை (Industries) நடத்துபவர்களுக்கு உபயோகமான சில குறிப்புகளைக் கீழே தருகின்றேன். உலகத்தில் தொழில் தலைவர்களாக (Industrial Kings) உள்ளவர்களின் வாழ்க்கையிலிருந்து சேகரிக்கப்பட்டவை இவை:

 1. தொழில் சம்பந்தமாக ஒருவரைச் சந்தித்துப் பேசும் பொழுது ஆர்வமாகவும், கவனமாகவும் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். அவருடைய சொந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ள முயலக் கூடாது.
 2. வங்கியோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள் வங்கி அதிகாரிகளைச் சந்திக்கும்முன், அவர்கள் என்னென்ன தஸ்தாவேஜூகளைக் கேட்பார்களோ, எந்தப் புள்ளி விவரங்களை எதிர்பார்ப்பார்களோ அவற்றை எல்லாம் முன்கூட்டியே தயார் செய்துகொண்டு போக வேண்டும்.
 3. தம் மனத்தில் எழும் எண்ணங்களை வெளியிடாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் (Silent will).
 4. தம்முடைய நிறுவனத்திற்கு மானேஜர், அக்கவுண்டென்ட் போன்ற பதவிகளுக்கு நபர்களை நியமிக்க இண்டர்வியூ கொடுக்கும்பொழுது, அவர்களுடைய முக்கியம் இல்லாத சிறிய செயல்களைக் கூர்ந்து கவனித்துக் குறித்துக் கொள்ள வேண்டும்.
 5. ஆர்டர்கள் தேவைப்படும்பொழுதோ, ஒரு பெருந் தொகையை எதிர்பார்த்தோ மற்றவர்களைச் சந்திக்கும்பொழுது, அச்சம், கவலை, படபடப்புப் போன்றவை இயல்பாக எழும். அத்தகைய சந்தர்ப்பங்களில் ‘யாரைப் பார்க்கின்றோம்? பிரச்சினை எவ்வளவு பெரியது?’ என்பன போன்ற நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘நான் இந்த வேலைக்காக வந்திருக்கின்றேன்’ என்பதை மட்டும் மனத்தில் கொண்டு வேலையைக் கவனித்தால், கவலையும், படபடப்பும், பயமும் விலகும். பொறுப்பேற்ற வேலை சிறப்பாக நடக்கும்.
 6. வியாபாரம் மந்தமாக இருந்தால், வியாபாரம் அபரிமிதமாக நடக்கும் வேளைகளில் இயங்குவதைப் போல் சிறு சிறு விஷயங்களையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
 7. இயந்திரங்களைச் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்.
 8. ‘ஒரு முக்கியமான வேலையை அவசரமாகச் செய்ய வேண்டும். ஒரு டாக்குமென்டைத் தயாரிக்க வேண்டும்’ என்றால், அந்தச் சமயத்தில் கையாள வேண்டியவை மூன்று.
  ஒன்று: ‘அவசரப்படக் கூடாது’ என்ற தீர்மானமான முடிவு.
  இரண்டு: அவசரத்தை முழுதுமாக விலக்கி, ‘எப்படிச் செய்வது?’ என்ற வரையறையான திட்டம் (plan).
  மூன்று: படபடப்பு இல்லாமல் ஒவ்வொரு காரியத்தையும்விடாமல் செய்யும் நிதானம்.
  இவற்றைக் கையாண்டால், முடிக்க வேண்டிய நேரத்திற்கு முன்னாலேயே அந்த வேலை முடியும்.
 9. அளவு கடந்த கோபம் வரும் சமயங்களில் நம் வாழ்க்கையில் நாம் பிறரைக் கோபமூட்டிய நிகழ்ச்சிகளை நினைவு கொள்ளல் வேண்டும்.
 10. பேரம் பேசும் சந்தர்ப்பம் வந்தால், எதிராளியின் சௌகரியங்களையும், தேவைகளையும் ஆராய்ந்து பார்த்துப் பேசும் பழக்கத்தை மேற்கொள்ளுதல் நலம். தொழில் சிறப்பானது. அதில் அன்னையைச் செயல்பட வைக்கும் நெறிகளும் வழிகளும் மிக மிகச் சிறப்பானவை.book | by Dr. Radut