Skip to Content

11 - கைகொடுத்த நம்பிக்கை

பதினைந்து ஏக்கர் நிலத்தில் தென்னை பயிர் செய்து, ஆண்டு தோறும் நல்ல அறுவடை செய்த அனுபவம் எனக்குண்டு. அதைத் தொடர்ந்து 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் தென்னைப் பயிர் செய்யத் திட்டமிட்டேன். என் நண்பர் என் திட்டத்தில் அக்கறை காட்டவே, ‘எங்கேனும் 100 ஏக்கர் தரிசு நிலம் விலைக்குக் கிடைக்குமா?’ என்று தேட ஆரம்பித்தேன். நான் நினைத்த மாதிரி நூறு ஏக்கர் பரப்பில் தரிசு நிலம் கிடைக்கவில்லை. ஒரு மலைப்பாங்கான இடத்தில் நூறு ஏக்கர் முந்திரிக் காடு ஒன்று விலைக்கு வருவதாகக் கேள்விப்பட்டேன். எனக்கு முந்திரிப் பயிர் சம்பந்தமான முன் அனுபவமோ, அல்லது ஆர்வமோ இல்லை. ‘தானாகத் தேடி வருகின்ற ஒன்றை ஏற்றுக் கொள்வது சிறந்த பலனை அளிக்கும்’ என்பது அன்னையின் அருள் மொழி. அம்மெய்ம்மொழியின் உந்துதலால், எனக்கு முற்றிலும் புதியதான முந்திரி மரங்கள் நிரம்பிய அந்த நூறு ஏக்கரையும் வாங்குவது என்று தீர்மானித்தேன்.

அந்த இடத்தை ஒட்டி ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. அரசாங்க தஸ்தாவேஜூகளின்படி அந்த இடம் ‘ஒரு காடு’ என்றே சொல்லப்பட்டு வந்தது. அதில் உண்மையும் இருந்தது. விவசாயத்தையே கண்டிராத காட்டுபூமி அது. அங்கே தண்ணீர் கிடைப்பது அரிது. கோடைக் காலத்தில் அங்கே குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் கிடைக்காது. அங்குள்ள ஓர் எழுபதடிக் கிணற்றைத் தவிர மற்ற கிணறுகள் எல்லாம் வறண்டுவிடும். ‘இத்தகைய நிலவளம், நீர்வளம் அற்ற ஓர் இடத்தில் நிலம் வாங்க வேண்டாம்’ என்றும், ‘மனித நடமாட்டம் இல்லாத அந்தக் காட்டில் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இராது’ என்றும் என் அன்பர்கள் என்னை எச்சரித்தார்கள். அன்னையின் அருளில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. ஆகவே அறிவார்ந்த அவர்களின் எச்சரிக்கையை மீறி, அன்னையின் அருளையே துணையாக்கிக் கொண்டு செயல் பட்டேன். 125 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதைப் பண்படுத்தி, பயிர் செய்ய, நான் அல்லும்பகலும் அயராது உழைத்தேன். ‘பயனற்றது’ என்று ஒதுக்கப்பட்ட நிலம், பயன் மிக்கதாய் மாற்றமும், ஏற்றமும் பெற்றது. ஆரம்பத்தில் என் உழைப்பையும், உறுதியையும் ‘பைத்தியக்காரத்தனம்’ என்று கருதியவர்கள், இறுகிக்கிடந்த இந்த மண்ணின் வறட்டுத்தனத்தை நீக்கி, ‘விளைச்சல்’ என்னும் விந்தையைச் செய்து காட்டிய என்னை, இப்பொழுது வியப்புடன் பாராட்டினார்கள். அதனால் அதுவரை அங்கு கவனிப்பாரற்றுக் கிடந்த காடுகளும், மேடுகளும், அருகே இருந்த நகரத்தைச் சேர்ந்த செல்வர்களின் கவனத்துக்கு உரியனவாயின. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த அத்தனை நிலங்களும் நல்ல விலைக்குப் போயின.

என் முந்திரிக் காட்டிற்கு மிக அண்மையில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு மழை இல்லை. மழை பெய்தாலும் சேகரித்துப் பாதுகாப்பதற்கு ஏரிகள் இல்லை. அதனால் அங்கு உள்ளதெல்லாம் வானம் பார்த்த பூமிதான். மழை ஒத்துழைத்தால் அதில் மணிலா, மற்றும் புன்செய்ப் பயிர்கள் விளையும். இல்லாவிட்டால் பஞ்சம் விளையும். அங்கு நிலம் விளைவதைவிடப் பஞ்சம் விளைவதே அதிகம். அங்குள்ள மக்கள் தம் பஞ்சத்தைப் போக்கப் படாத பாடுபட்டார்கள்.

அங்கு மண் மட்டும் வறட்சியாக இல்லை. மனிதர்களும் வறட்சியாக இருந்தார்கள். ‘மண்ணிற்கும் மனிதத் தன்மைக்கும் அங்குப் பொதுவாக இருந்த வறட்சியைப் போக்காவிட்டால் அந்தக் கிராமம் உயிர் பெற்று உலவ முடியாது. அங்கே நானே நிலத்தைத் திருத்த மட்டும் வரவில்லை; அங்குள்ளவர்களின் நெஞ்சத்தைத் திருத்தவும் வந்திருக்கிறேன்’ என்று என் உள்ளுணர்வு பேசியது.

எப்படித் திருத்துவது? உலக நீதிகளைச் சொல்லியா? ஏற்கனவே அங்கு நீதிகள் செத்துக் கிடந்தன. நியாயங்கள் தோற்றுக் கிடந்தன. பசியாக இருப்பவர்களுக்கான பாடத்தை, சோற்றுப் பானையிலிருந்தே தொடங்க வேண்டும். அதாவது வளத்தைக் காட்டி அதன் வழியே வாழ்க்கையைக் காட்டி, பிறகே அவர்களைப் பண்பாளர்களாகப் பயிர் செய்ய வேண்டும். ஆகவே அவர்களுக்குரிய பாடத்தை, ‘பயிரில்’ இருந்து தொடங்க நினைத்தேன்.

பயிர் செய்ய வேண்டுமானால் பணம் வேண்டும். ஆனால், மக்களிடமோ பணம் இல்லை. அவர்கள் பணத்தைப் பெறுவதற்குச் சர்க்காரில் கடன் வாங்கலாம், அல்லது நிலத்தைப் பாங்க்கில் அடைமானம் வைத்துக் கடன் வாங்கலாம். கிராம மக்களிடம் அவற்றிற்கெல்லாம் நம்பிக்கை இல்லை. பாங்க்குகளில் பயிர்த் தொழிலுக்குக் கடன் கொடுக்கும் வழக்கம் அப்பொழுது இல்லை. ஏனென்றால், அந்தக் காலத்தில் பாங்க்குகள் தேசிய மயமாக்கப்படவில்லை. ஆனாலும் முயன்று அந்தக் கிராமத்து மக்களுக்குப் பயிர்க் கடன் வாங்கிக் கொடுப்பது என்று தீர்மானித்தேன்.

என் முன்னால் இரண்டு பிரச்சினைகள் எதிர் முளைத்தன. ஒன்று, கிராம மக்களிடம், ‘பாங்க்கில் கடன் வாங்குவதால் உங்கள் நிலம் பறி போய்விடாது’ என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும். ‘கிராம மக்களுக்குப் பணம் கொடுத்தால், அதை வசூல் செய்ய முடியாது’ என்ற பாங்க்குகளின் பயத்தைப் போக்கவேண்டும். ‘இவ்விரண்டையும் செய்துவிடலாம்’ என்ற என் உறுதியை, என் நண்பர்கள், ‘வேண்டாம் இந்த விஷப்பரீட்சை!’ என்று கூறிக் கலைக்க முயன்றார்கள். ஆனாலும் நான் கலையவில்லை.

இந்தச் சமயத்தில் கிராமத்தில் உள்ளவர்கள் ஒன்று கூடி, ‘இனி சாராயம் காய்ச்சுவதோ, குடிப்பதோ இல்லை’ என்று முடிவு செய்ததாகக் கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல சகுனமே. ‘இது போன்ற உணர்வு பூர்வமான மாற்றங்கள், கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்கு உதவக் கூடியவை அல்ல’ என்பது எனக்குத் தெரியும். ஆனால், ‘விளையும்’ என்று நம்பிக்கை இல்லாமல் விதைக்க முடியாது அல்லவா?

என் நிலத்தைத் திருத்துவதற்கு ஒரு பாங்க்கில் கடன் வாங்கி இருந்தேன். நான் அதை இலாபகரமாகப் பயன்படுத்தியதை அறிந்த ஒரு மிகப் பெரிய பாங்க், பெரிய அளவில் கடன் வாங்கி, என் திட்டத்தைத் தீவிரப்படுத்துமாறு என்னை அழைத்தது.

‘அந்தக் கிராமத்திற்கு எந்த வகையிலாவது கடன் கொடுத்து உதவ முடியுமா?’ என்று அந்த பாங்க்கிடம் கேட்டேன். அந்த பாங்க்கில் உள்ளவர்களுக்கு நான் கொடுத்த திட்டத்தில் நம்பிக்கையோ, விருப்பமோ இல்லை. கடனைக் கொடுத்துவிட்டுக் கிராமத்துக்குப் போய் அலைந்து திரிந்து வசூல் செய்கின்ற சிரமத்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இந்நிலையில் அந்த பாங்க்கின் சேர்மன் எனக்கு அறிமுகமானார். ‘கிராமத்திற்குக் கடன் கொடுக்க வேண்டும்’ என்று அவரிடம் நான் வற்புறுத்தினேன். அதன் பயனாக சேர்மனின் ஒப்புதலோடு என் திட்டத்தை அந்த பாங்க் ஒப்புக் கொண்டது. ஆனால், பாங்க் அதிகாரிகள் சேர்மனின் உத்தரவை மறுக்க இயலாமல் பொருமினர். ‘கிராமத்திற்குக் கடன் கொடுத்தால் வசூலிப்பது நடக்காத காரியம்’ என்று அவர்கள் தீர்மானமாக நினைத்ததுதான் அதற்குக் காரணம். என் நண்பர்களும் அவ்வாறே நினைத்தார்கள்.

அவர்களின் நினைவை நான் ஒரேடியாக அலட்சியப்படுத்தி விட முடியாது. ஏனென்றால் பாங்க் அதிகாரிகள், என் நண்பர்கள் ஆகியவர்களின் ஒத்துழைப்போடுதான் நான் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய ஒரு நிலை இருந்தது. கிராமத்தின் கணக்குப்பிள்ளை, மணியக்காரர் போன்றவர்கள் கூட என் திட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனாலும் நான் அதில் தீவிரமாக இருந்தேன்.

நான் பாங்க்குக்கு இப்படி ஒரு திட்டத்தைக் கொடுத்தேன்; ‘ஒரு சிறிய திட்டத்தைத் தயார் செய்து அதற்கு பாங்க் கடன் வழங்க வேண்டும். அறுவடைக்குப்பிறகு, கொடுத்த கடனை கிராமத்திலிருந்து வசூலித்து பாங்க்கில் சேர்ப்பிப்பது என் பொறுப்பு. அடுத்து, கடன் முழுதும் வசூலாகிவிட்டால், அடுத்த ஆண்டு கிணறு வெட்டுவதற்குக் கடன் கொடுக்க முன்வர வேண்டும்’ என்று பாங்க் அதிகாரிகள் வந்து கிராமத்தைப் பார்வை இட்டார்கள். அந்த அதிகாரிகள் என் திட்டத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், தம்முடைய சேர்மனின் ஆணையைத் தழுவியது போன்ற ஒரு நிலையை உருவாக்குவதற்காக, சிறு அளவில் சோதனை செய்து பார்க்க ஒப்புக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து பாங்க்கின் சேர்மனே நேரில் வருகை புரிந்து கடன் வழங்கும் திட்டத்தைக் கிராமத்தில் ஆரம்பித்து வைத்தார்.

கடன் வழங்குவதற்கு இன்னும் சில வாரங்களே இருந்தன. அப்பொழுது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலரும், என் தோப்பில் பல வருடங்களாக வேலை செய்பவர்களும், நான் ஒரு பெரிய ஆபத்தில் சிக்கவிருப்பதாக எண்ணிக் கவலையுடன், “நீங்கள் நல்ல எண்ணத்துடன் உதவி செய்ய நினைக்கிறீர்கள். ஆனால், கிராமத்தில் உள்ள யாருமே, நாங்கள் உள்பட நல்லவர்கள் இல்லை. அவனவன் கடனை வாங்கி வாயில் போட்டுக் கொண்டுவிடுவான். கடைசியில் பொறுப்புக் கொடுக்கிற நீங்கள்தான் மொத்தக் கடன் தொகைகளையும் கட்ட வேண்டியதிருக்கும்” என்று அச்சுறுத்தினார்கள். பாங்க்குக்காரர்களும், “உங்களை நம்பித்தான் கடன் கொடுக்கிறோம்” என்றனர்.

இப்படிக் கடைசிவரை எச்சரிக்கைகள் என்னைச் சூழ்ந்த வேலிகளாக அமைந்தன. என் திட்டத்தை, ‘பயன்மிகு திட்டம் ஒன்றின் முன்னோடி’ என்று பாராட்டி, என்னை உற்சாகப் படுத்தும் ஆர்வலர் யாரும் அப்போது இருக்கவில்லை. ஆனாலும், நான் என் திட்டத்தை ஆக்க பூர்வமானதாக்க ஒவ்வொரு கணமும் தீவிரமாக இருந்தேன்.

இந்தத் திட்டம் இந்தியத் துணைக்கண்டத்திலேயே யாரும் செயல்படத் துணியாத ஒன்றாகும். இது இங்கு வெற்றிகரமாக அமையுமானால் இந்தியா முழுதும் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பு ஒன்று உருவாகும். அதே சமயத்தில் இது இங்கே தோல்வி அடையுமானால், பயிர்த் தொழிலுக்குக் கடன் கொடுக்கும் எந்த ஒரு திட்டமும் எதிர்காலத்தில் ஏற்படாமலே போய்விடக் கூடும். இந்தத் திட்டத்தின் சிக்கலான பகுதி, ‘கொடுத்த பணத்தைக் கிராமத்திலிருந்து எப்படி வசூல் செய்வது?’ என்பதுதான். ஆனால், எனக்கு இது ஒரு பிரச்சினையாகவே தோன்றவில்லை. ‘எந்த ஒரு பணியினையும் உண்மையான நம்பிக்கையோடு செய்தால், செலவழிக்கப் படுகின்ற பணம் நற்பணிக்குப் போய்ச் சேருமானால், சந்தேகத்திற்கு இடமின்றி நல்ல பலன் கிடைக்கும்’. நான் அன்னையிடமிருந்து தெரிந்து கொண்ட உண்மை இது.

‘கொடுத்த பணத்தைக் கிராமத்து மக்கள் பயிர்ச் செலவுக்குத்தான் உபயோகப்படுத்துவார்கள்’ என்ற முழு நம்பிக்கையோடு நான் செயல்பட்டேன். “பயிர் நன்றாக விளையும். அமோகமான மகசூல் கிடைக்கும். விவசாயிகள் வாங்கிய கடன் தொகையை பாங்க்கில் கட்டிவிடுவார்கள்” என்று நம்பினேன். ‘செயல்களுக்கு நாமே கர்த்தாவாக இல்லாமல், அவற்றை அன்னையிடம் சமர்ப்பித்துவிட்டு நம்பிக்கையோடும் நல்ல எண்ணத்தோடும் நாம் செயல்பட்டால், கிராமத்து மக்களின் எண்ணமும், செயலும் நல்லனவாகவே அமையும் என்று முழுமையாக நம்பினேன்’.

விவசாயிகளுக்கு அறுபத்து மூவாயிர ரூபாய் பயிர்க் கடனாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் மூலம், ஒரு கிராமத்தை ஒரு பாங்க், சுவீகாரம் செய்து கொள்ளும் திட்டம், இந்தியாவிலேயே முதன் முதலாக அந்தக் கிராமத்தில் செயல்படுத்தப்பட்டது.

உரிய காலத்தில் மழை பெய்தது ஆச்சரியம் என்றால், விவசாயிகள் சோம்பலை உதறி எறிந்துவிட்டு உடனே பயிர்த் தொழிலை ஆரம்பித்தது ஆச்சரியம்! கிராமம் முழுமையும் மணிலாப் பயிராகக் காட்சி அளித்தது. வாங்கிய பணத்தை முறையாகச் செலவு செய்திருந்தார்கள்.

ஒரு கிராமத்து மக்கள் இப்படி ஒட்டு மொத்தமாக நாணயமானவர்களாக மாறிய முதல் சந்தர்ப்பம் அதுதான். அந்த வருடம் தேவையான காலங்களில் எல்லாம் சீராக மழை பெய்தது. மணிலாப் பயிரின் கொடிய விரோதிகளான பூச்சிகள் அந்த வருடம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. மொத்தத்தில் அபரிமிதமான விளைச்சல். அமோகமான அறுவடை. அது மட்டுமன்று. அதுவரை 90 ரூபாய் விற்ற மணிலா மூட்டை 180 ரூபாய்க்கு விற்று இரண்டு மடங்கு வருமானத்தைக் கொடுத்தது. மணிலாப் பயிர் செய்து பெரிய பண அறுவடையையே செய்துவிட்ட விவசாயிகள், மகிழ்ந்தும், நெகிழ்ந்தும் போனார்கள்.

உரிய நேரத்தில் கை கொடுத்து, கை நிறையப் பணத்தைப் பார்க்க உதவி செய்த பாங்க்கை அவர்கள் மறக்கவில்லை. ஓடோடிச் சென்று பணத்தைக் கட்டினார்கள். ஒரு விவசாயி மாலை ஆறரை மணிக்கு பாங்க்கில் போய் நின்று கொண்டு, “இன்று பணம் கட்ட நேரமாகிவிட்டது. நாளைக்கு வந்து கட்டுங்கள்”, என்ற பாங்க் அலுவலர்களின் பேச்சைக் கேளாமல் பிடிவாதம் பிடித்து, கட்ட வேண்டிய கடனைக் கட்டி விட்டுத்தான் பாங்க்கைவிட்டு வெளியேறினார். எல்லோருமே வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்துக் குறித்த காலக் கெடுவுக்குள் கட்டி முடித்தனர்.

சமுதாயத்தில் யாருமே கெட்டவர்கள் அல்லர். கெடுக்கப் பட்டவர்கள். அதாவது சந்தர்ப்பம், சூழ்நிலை ஆகியவற்றால் கெடுக்கப்பட்டவர்கள். ஆன்ம நேயத்துடன் அணுகி, அவர்களை ‘நம்பிக்கை’ என்னும் மத்தால் கடைந்தால், நமக்குக் கிடைப்பது அமிர்தம் போன்ற வெண்ணெய் ஆகும். அங்கே மண்ணை வாங்கப் போன எனக்கு, அமிர்தமும் கிடைத்தது அன்னையின் அருளே!

இனிதான் ஒரு முக்கியமான செய்தி: இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, அனைத்து இந்தியாவிலிருந்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள், பாங்க்குகளால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டன. அன்னையின் அருளைத் துணையாகக் கொண்டு தமிழகத்தில் எங்கோ ஓர் மூலையில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு திட்டம், இன்று நாடு தழுவிய நலம் தரும் திட்டமாக உருப் பெற்று ஓங்கி வளர்ந்து வருகிறது.book | by Dr. Radut