Skip to Content

23 - நினைவுகள் எல்லாம் விளைவுகளாகும்

வடஇந்தியாவில் வாழ்ந்து வரும் ‘அமுதசுரபி’ வாசகர் ஒருவர் எனக்குக் கடிதம் எழுதி இருந்தார். அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்: “நீங்கள் ‘அமுதசுரபி’யில் எழுதி வரும் அன்னையைப் பற்றிய கட்டுரைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக நானும், என் கணவரும் தவறாமல் படித்து வருகின்றோம். அதன் காரணமாக நாங்கள் அன்னையின் பக்தர்களாகிவிட்டோம்”.

“இப்பொழுதெல்லாம் நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை அன்னையிடம் ஒப்படைத்துவிடுவது வழக்கம். அந்தப் பிரச்சினைகளும் ஒன்றன்பின் ஒன்றாகத் தீர்ந்து போய் விடுகின்றன. ஆனால், புதுப்புதுப் பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அதனால் எங்களுடைய நம்பிக்கை சில சமயங்களில் கலகலத்துப் போய்விடுகின்றது”.

“தற்சமயம் குளவியைப் போல எங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் இரண்டு. ஒன்று, என் கணவரின் உத்தியோக உயர்வு; இரண்டு, எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கடன்”.

“என் கணவருக்கு எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டிய உத்தியோக உயர்வு, இன்னும் கிடைத்தபாடாக இல்லை. இனிமேலாவது கிடைக்குமா என்பதும் சந்தேகமாக இருக்கின்றது. ஏனென்றால், என் கணவருக்கு உத்தியோக உயர்வு கிடைத்து விடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தும் யாரோ ஒருவர் பலமாக முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு இருக்கின்றார்”.

“இரண்டாவதாகக் கடன். சமீபத்தில் நிறையக் கடன் வாங்கி ஒரு வீடு கட்டினோம். கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு கடனையும் அடைக்க வேண்டும்; குடும்பத்தையும் நடத்த வேண்டும் என்றால், இந்தக் காலத்தில் அது சாத்தியமா? பாரத்தையும், கடனையும் சுமந்து சுமந்து தலை சுற்றுகிறது; விழிகள் பிதுங்குகின்றன”.

“இந்த இரண்டு பிரச்சினைகளையும் நாங்கள் எப்படிச் சமாளிக்கப் போகின்றோம்? மனித யத்தனத்தில் எதுவும் முடியும் போல இல்லை. அன்னையைத்தான் நாங்கள் மலையைப் போல நம்பிக் கொண்டிருக்கின்றோம். ‘ஒரு தடவை பாண்டிச்சேரிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தர் அன்னை சமாதியைத் தரிசிக்க வேண்டும்’ என்று தீவிரமாக நினைக்கின்றோம். ஆனால், அதற்குத் தேவையான வசதி இல்லாததால், பயணம் ஒத்திப் போய்க் கொண்டே இருக்கின்றது”.

‘எல்லாவற்றிற்கும் அன்னையின் அருளையே நம்பிக் கொண்டிருக்கின்றோம். அன்னை எங்களுக்கு எப்போது அருள் செய்வார் என்பதை நீங்கள்தான் கூற வேண்டும்’.

அந்த அன்பருக்கு நான் பதில் எழுதி அனுப்புவதற்குள் அவரிடமிருந்து இரண்டாவது கடிதம் வந்துவிட்டது.

இந்தச் சமயத்தில் எல்லா வாசக அன்பர்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகம். ‘அல்லற்படுத்தும் அந்தப் பிரச்சினைகளை எல்லாம் அறவே நீக்கி உதவுகின்றது அளப்பரிய அன்னையின் அருள்’ என்பதை, முன்பெல்லாம் ஐரோப்பியநாட்டு அன்பர்களே அதிகம் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது ‘அமுதசுரபி’யின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் அன்பர்களும் அதிகம் தெரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கின்றார்கள். அதனால் தம் பிரச்சினைகளைத் தெரிவித்து எழுதும் அன்பர்களின் கடிதங்கள் நாள் தோறும் பெரிய எண்ணிக்கையில் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொன்றும் பிரச்சினை; ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் வாழ்க்கை; அதை நான் மிக நுணுக்கத்துடன் அணுக வேண்டும். பிரச்சினைகள் வெளியே இருந்து வருவதில்லை. அவை நமக்குள் இருந்துதான் கையும், காலும் முளைத்து விஸ்வரூபம் எடுக்கின்றன. சம்பந்தப்பட்டவரே பிரச்சினையின் அடிப்படையை, மூல காரணத்தை அறிந்திருப்பதில்லை. ஒருவேளை அறிந்திருந்தாலும், மறக்காமல் அதை நினைவில் வைத்திருப்பதில்லை. இந்தச் சிக்கலை எடுப்பது என் வேலையின் முதற் கட்டம். இதைத் தொடர்ந்து பல கட்டங்கள் இருக்கின்றன. இறுதியாக, அன்னையின் கோட்பாட்டுக்குள் அன்பர்களின் பிரச்சினைகளைக் கொண்டு சென்று அன்னையின் அருள் வெளிச்சத்தில் அவற்றின் இருளைத் துடைத்து நான் ஒரு பதிலை எழுத வேண்டும்.

கையால் வாங்கிய கடிதங்களுக்குக் கையால் எழுதப் படுகின்ற கடிதங்கள் அல்ல அவை. நெஞ்சாலே பெறப்படுகின்ற கடிதங்களுக்கு அன்னையின் அருளை நிரப்பி அனுப்ப வேண்டிய நிலை.

‘கையிலே காசு, வாயிலே தோசை!’ என்கின்ற லௌகிக அவசரங்களுக்கு எல்லாம் இதில் இடம் இல்லை; இருக்கவும் கூடாது. வரும் கடிதங்கள் அதிகமாக அதிகமாக, எவ்வளவுதான் விரைவாக ஒரு பதிலை அனுப்பினாலும்கூட, இடையிலே ஏற்படுகின்ற கால தாமதம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகின்றது.

தாமதத்தையும் தபசாக நினைத்துவிட்டால், பிரச்சினையின் வெப்பம் சிறிது தணிந்து போய்விட்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். யோகம் காட்டில் இல்லை; நம் மனக் கூட்டில் இருக்கின்றது.

அந்த வடஇந்திய அன்பர் எனக்கு இரண்டாவது கடிதத்தை அனுப்புவதற்குள், நான் அவருடைய முதல் கடிதத்திற்குப் பதில் போட முடியாததற்குத் தாமதம் அன்று காரணம். அவர் முதல் கடிதத்தில் தம்முடைய முகவரியைக் குறிப்பிடவில்லை.

இரண்டாவதாக வந்த கடிதத்தில் அதை அந்த அன்பரே குறிப்பிட்டிருந்தார்: “இதற்கு முன்னால் நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அதற்குப் பதில் எழுதுமாறும் கேட்டுக் கொண்டிருந்தேன். கடிதத்தை அனுப்பியதற்குப் பிறகுதான் நான் என் முகவரியை எழுதாமல் மறந்து போனது ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே, என் முகவரியோடு இந்தக் கடிதத்தை எழுதி இருக்கின்றேன்”.

அதற்குப்பிறகு அந்தக் கடிதத்தில் ஒரு முக்கியமான செய்தியைக் கொடுத்திருந்தார் அவர்: “நான் உங்களுக்கு என் முதல் கடிதத்தைத் தபாலில் சேர்த்தபிறகு, அன்னையை வேண்டிக் கொண்டு அன்னைக்கு ஒரு காணிக்கையை அனுப்பி இருந்தேன். அதற்கான பலன் உடனே கிடைத்துவிட்டது. நான் முதல் கடிதத்தில் முதல் பிரச்சினையாகக் குறிப்பிட்டிருந்த என் கணவரின் உத்தியோக உயர்வுப் பிரச்சினை தீர்ந்துவிட்டது. இதுவரை தடைப்பட்டு இருந்த பதவி உயர்வு, அன்னையின் அருளால் என் கணவருக்குக் கிடைத்துவிட்டது. இதற்கு எங்கள் நன்றியை அன்னைக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்”.

அன்னைக்குக் காணிக்கை அனுப்பியவுடன் நீண்ட காலமாகத் தடைப்பட்டு இருந்த பதவி உயர்வு, தம் கணவருக்குக் கிடைத்துவிட்டதாக அந்த அன்பர் எழுதி இருந்தாரே, அது எப்படி அவ்வாறு நிகழ்ந்தது? இங்கே எல்லா அன்பர்களும் கூர்ந்து நோக்க வேண்டும்.

நாம் அன்னைக்கு மனப்பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் பிரார்த்தனை செய்து கொண்டாலும்கூட, அது சில சமயங்களில் பூரணமான பலனைக் கொடுக்காமல் இருந்துவிடுகின்றது. அப்பொழுது நம் கோரிக்கை நிறைவேறாமல் தாமதப்படும். அதே சமயத்தில் நாம் அன்னைக்குக் காணிக்கை அனுப்பி வைத்துப் பிரார்த்தனை செய்து கொண்டால், நம்முடைய பிரார்த்தனை பூரணமாகிவிடுகின்றது. அதனால் அதுவரை தாமதப்பட்டு வந்த பலன் நமக்கு உடனடியாகக் கிடைத்து விடுகின்றது.

‘காணிக்கை அனுப்பினால்தான் பிரார்த்தனை பூரணம் அடையுமா?’ என்று கேட்கத் தோன்றுகிறதா? கேளுங்கள். கேட்டால்தானே விளக்கம் கிடைக்கும்? நீங்கள் அப்படிக் கேட்பதாக நினைத்துக் கொண்டு, முடிந்த வரையில் ஒரு விளக்கத்தைத் தர முயல்கிறேன்.

இப்பொழுது விவசாயத்தையும், பக்தியையும் பொருத்திப் பார்க்கலாம்.

பயிர் செய்வதற்கு முதற் கட்டமாக நாம் என்ன செய்கின்றோம்? நிலத்தை உழுது திருத்திச் சீர் செய்கின்றோம். நாம் மனப்பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் செய்து கொள்ளும் பிரார்த்தனை, நிலத்தில் செய்கின்ற இந்தச் சீருக்குச் சமானம். இதுவரை உழைப்பு அல்லது ஈடுபாடு மட்டுமே முன்நிற்கின்றன. அதற்கு அடுத்த கட்டம் விதை போடுவது. ‘விதை’ என்பது ஒரு பொருள். அந்தப் பொருள் இல்லாமல் விளைச்சல் இல்லை. விளைச்சல் இல்லாவிட்டால் பலனும் இல்லை. அதைப் போலக் ‘காணிக்கை’ என்ற பொருளைப் பிரார்த்தனையில் சேர்க்கும் பொழுது அது விளைகின்றது; பலனைக் கொடுக்கின்றது.

அருள் உலகத்திற்கு இந்தக் கணக்கு இல்லை.

நாம் வாழ்கின்ற இந்த உலகம் பொருள் உலகம்; பொருளை ஆதாரமாகக் கொண்டு இயங்குகின்ற உலகம். பிறப்புக்கு ஒரு பொருள். கற்கும் கல்விக்கு ஒரு பொருள். இல்லற வாழ்வுக்கு ஒரு பொருள். சந்ததிக்கு ஒரு பொருள். வாழும் வாழ்க்கைக்கு ஒரு பொருள். இறப்புக்கும் ஒரு பொருள். இவ்வாறு மனித வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் பொருள் பொதிந்திருக்கின்றது. அதனால்தான் மனிதன் பொருள் இல்லாத எதையும் பொருட் படுத்துவதில்லை; எதிலும் ஈடுபாடு கொள்வதும் இல்லை.

அத்தகைய சூழலில் வளர்ந்துவிட்ட மனிதனை ‘நம்பிக்கை’ என்ற வளையத்திற்குள் கொண்டு போய் நிறுத்தத்தான் ‘காணிக்கை’ என்பது பயன்படுத்தப்படுகின்றது.

நிலம் மனிதர்களைத் தேடி வந்து ‘எனக்குள் விதையுங்கள்’ என்று சொல்வதில்லை. அதைப் போலவே அன்னையும், ‘எனக்குக் காணிக்கை கொடுங்கள்’ என்று கேட்டதில்லை. நிலத்தில் விதைத்து விளைச்சலைக் கண்ட முதல் மனிதன் நமக்கு உதாரணம். அதைப் போலவே, அன்னைக்குக் காணிக்கையைச் சமர்ப்பித்துப் பலனை முழுதுமாய்க் கண்ட அன்னையின் முதல் அன்பர் ஒருவர் நமக்கு உதாரணம்.

காணிக்கை நம் கோரிக்கையைப் பூரணம் ஆக்குகின்றது. அது முழுமையாகின்றபொழுது நம்முடைய பிரச்சினைகள் முற்றுமாகத் தீர்ந்து, நாம் எதிர்பார்த்ததற்கும் அதிகமான நன்மைகள் நமக்கு வரவாக வந்து சேர்கின்றன.

இனி அந்த வடஇந்திய அன்பரின் விஷயத்திற்கு வருவோம். இரண்டாவது கடிதத்தின் மூலம் அவருடைய முகவரி கிடைத்து விட்டது. இனி அவருக்குப் பதில் எழுதத் தடை இல்லை.

நான் அவருடைய இரு கடிதங்களுக்குமாகச் சேர்த்து இவ்வாறு ஒரு பதில் எழுதினேன்: “கடன் இரண்டு விதங்களில் ஏற்படுகின்றது. ஒன்று, கையிருப்புப் பணத்தை விரயப் படுத்துவதனாலோ அல்லது தேவையற்ற வகையில் செலவு செய்வதனாலோ ஏற்படும் கடன். மற்றொன்று, இருப்புப் பணத்தை ஒரு முதலீட்டில் போடுவதால் உண்டாகும் கடன். உங்களுடைய பிரச்சினை இரண்டாவது வகையைச் சேர்ந்தது. ஒரு சிறு தொகையை வைத்துக் கொண்டு பெரிய முதலீடுகள் செய்யும்பொழுது பிரச்சினை வரத்தான் செய்யும். அதைச் சமாளிக்க வேண்டுமானால், வருமானம் தேவையான அளவுக்குப் பெருக வேண்டும். ஆகவே, வருமானம் பெருக நீங்கள் அன்னையிடம் வேண்டி வந்தால், அன்னை நல்ல வாய்ப்புகளை உருவாக்கி வருமானம் பெருக வழி செய்வார். உங்கள் கணவருக்குக் கிடைத்திருக்கும் உத்தியோக உயர்வே, உங்கள் வருமானம் பெருகுவதற்கு ஒரு வழியாக அமையலாம்”.

தமிழ்நாட்டில் தென் பகுதியைச் சேர்ந்த ஓர் அன்பர் தமக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு நெருக்கடியைப் பற்றி எழுதி இருந்தார்.

“நான் சொந்தத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கிப் போட்டிருந்தேன். அதில் வீடு கட்ட முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினேன். முதலில் அன்னைக்கு ஒரு காணிக்கையை அனுப்பினேன். பின்னர் ஒரு கொத்தனாரிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைத்து, ரூபாய் ஐயாயிரத்தை அச்சாரமாகக் கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டு போனவர்தாம்! பிறகு கொத்தனார் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அவரைச் சந்தித்துக் கேட்டால், வேலைதானே? அடுத்த வாரம் ஆரம்பித்துவிடுவோம்” என்கின்றார். அப்படி எத்தனையோ அடுத்த வாரங்கள் ஓடிவிட்டன. ஆனால், அவர் வேலையை மட்டும் ஆரம்பித்த பாடாக இல்லை.

‘அது மட்டும் அன்று. பொதுவாக நான் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும், இப்படித்தான் சிக்கலாகிவிடுகின்றது. எவ்வளவு முயன்றாலும் பலன் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. இந்த நிலை மாறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும், சால்ஜாப்புக் கூறி வரும் கொத்தனார் சட்டென்று வீட்டு வேலையைத் தொடங்குவதற்கும் ஒரு வழியைக் கூறும்படி வேண்டுகின்றேன்’.

அந்த அன்பரின் கடிதத்திற்கு நான் எழுதிய பதில் இது:

“பொதுவாக, நம் கடந்தகாலச் செயல்களுக்கும், எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஏற்பத்தான் நம்முடைய நிகழ்காலச் சூழ்நிலைகள் உருவாகின்றன. இந்த நிகழ்காலச் சூழ்நிலை களுக்கும் நம் கடந்தகாலச் செயல்களுக்கும் உள்ள தொடர்பை நாம் கவனிப்பதில்லை. முயற்சி செய்வதால் அந்தத் தொடர்புகளை நாம் அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்டவுடனேயே பாதகமாக இருந்து வந்த சூழ்நிலை சாதகமாக மாறுவதை நிதர்சனமாகக் காணலாம். சில சமயங்களில் நமக்கு நாமே செய்து கொண்ட மதிப்பீட்டு அறிவு, புறச் சூழ்நிலையை ஓரளவு மாற்றினாலும், அது முழு நிவாரணமாக அமையாமல் இருந்து கொண்டிருக்கும். அப்பொழுது நம் கடந்தகால வாழ்க்கையில் எந்தச் செயல் இப்பொழுதுள்ள பாதகமான சூழ்நிலை ஏற்படுவதற்குக் காரணமாக இருந்ததோ, அந்தச் செயலை இப்பொழுது மாற்றிக் கொள்ள முன்வந்து, அதற்கு வகை செய்யும் அளவில் மனத்தையும் மாற்றிக் கொண்டுவிட்டால், சாதகமான சூழ்நிலை உருவாகும்; பிரச்சினையும் முற்றுமாக மறைந்து போகும்”.

“கடந்தகால வாழ்க்கையை நினைவுக்குக் கொண்டு வருகின்றபொழுது, மனத்தை நிதானமாகவும், உணர்ச்சி வசப்படாமலும் வைத்துக் கொள்ள வேண்டும்”.

‘இந்தக் கண்ணோட்டத்தில் உங்களின் கடந்தகால வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை நெஞ்சால் தொகுத்து அவற்றைத் தினமும் அன்னையிடம் எடுத்துக் கூறி வந்தால், உங்களுடைய கொத்தனார் பிரச்சினை தீர்வதோடு, உங்களின் எதிர்கால வாழ்க்கையும் பல வகைகளில் சிறப்பாக அமையும்’.

நான் இந்தக் கடிதத்தை 1984-இல் டிசம்பர் மாதம் எழுதினேன். அதற்குச் சரியாக ஓராண்டு காலத்திற்குப்பிறகு அந்த அன்பரிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அவர் அதில், “நான் வீடு கட்டுவதைப் பற்றி உங்களுக்கு எழுதி இருந்தது நினைவு இருக்கலாம். அன்னையின் அருளால் வீட்டைக் கட்டி முடித்துவிட்டேன். வரும் 15-12-85 அன்று புதுமனை புக இருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று எழுதி இருந்தார்.

முந்தைய ஆண்டுவரை உருவாகாமல் போக்குக் காட்டிக் கொண்டு இருந்த வீடு, இப்பொழுது உருவாகிவிட்டது! இந்த வீட்டை உருவாக்கியவை செங்கல்லோ, சிமெண்டோ, அன்பருடைய பணமோ அல்ல. அவர் தம்மைத் தாமே ஒப்பு நோக்கிக் கொண்டதும், தம்மைத் திருத்திக் கொண்டதும்தாம் வீடு உருவாகக் காரணமாக இருந்த மூலங்கள்.

இதை அவர் சொல்லவில்லை. அதற்குக் காரணம், ‘சொல்ல வேண்டாம்’ என்பதாக இருக்க முடியாது. சொல்லத் தெரியாமல் போனதே காரணமாக இருந்திருக்க வேண்டும்.

பண் செய்த நிலத்தில் பயிர் விளைவதைப் போல, அன்னையின் வழியில் மனத்தை நேர் செய்து கொண்டால், நினைவுகள் எல்லாம் விளைவுகளாகும்.book | by Dr. Radut