Skip to Content

முகவுரை

‘எல்லாம் தரும் அன்னை'யின் அளப்பரிய கருணைப் பிரவாகத்தைச் சுட்டிக்காட்டும் முயற்சியே இந்நூல்.

இந்நூலுக்கென எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளோடு மிகுதியாகக் கலந்து இருப்பவை ‘அமுதசுரபி’யில் வெளியான கட்டுரைகள். ஒன்றிரண்டு ‘கலைமகளி’ல் வந்தவை.

‘அமுதசுரபி’ ஆசிரியர் டாக்டர் விக்கிரமன் சமீபத்தில் பாரிஸுக்குப் புறப்படுவதற்குமுன் ஆசிரமத்திற்கு வந்து சமாதி தரிசனம் செய்தார். அப்பொழுது அவர் ஆசிரமத்தின் டிரஸ்டி ஒருவரைச் சந்தித்துப் பிரசாதம் பெற்றபொழுது, “உங்கள் பத்திரிகையில் வெளியாகிக் கொண்டிருக்கும் ஸ்ரீ அரவிந்தர் அன்னை பற்றிய கட்டுரைகள், தமிழ்நாட்டில் ஒரு புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தி உள்ளன. உங்களுக்கு அம்மாறுதலின் அளவு தெரியாமல் இருக்கலாம். ஆனால், நான் அதைப் பூரணமாக அறிவேன்” என்று கூறினார் அந்த டிரஸ்டி.

‘அமுதசுரபி’ வாசகர்களில் பெரும்பாலோர் எனக்கு எழுதும் கடிதங்களில், “அன்னையைப் பற்றி அறிந்து நான் மெய் சிலிர்த்துப்போனேன்” என்று குறிப்பிடுகின்றார்கள். தெய்வத்தை அறிவால் புரிந்து கொள்ளும்பொழுது நம்பிக்கை பிறக்கின்றது. உணர்வால் ஏற்றுக் கொள்ளும்பொழுது பக்திப் பரவசம் ஏற்படுகின்றது. அவற்றையும் கடந்து ஆழமாக உடலில் அவ்வொளி பரவும்பொழுது மெய் சிலிர்க்கின்றது. சமாதியைத் தரிசித்தோ, அன்னையின் திருவுருவப்படத்தைப் பார்த்தோ, அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டோ அல்லது தரிசித்தோ ஸ்ரீ அரவிந்தர் அன்னையை அறிபவர்களுக்கு ஏற்படும் அனுபவம், மெய் சிலிர்த்துப் புளகாங்கிதம் அடைதல்.

‘ஒரே விநாடியானாலும் அன்னையின் அன்பையும், அருளையும் உணர்ந்தவர்கள், உணர்ந்து மெய்சிலிர்த்தவர்கள், அன்னையை எக்கணமும் மறப்பதில்லை’ என்பது பக்தர்களுடைய அனுபவம்.

 

கர்மயோகி



book | by Dr. Radut