Skip to Content

19 - அன்னையின் அருள் விரைவு

‘அமுதசுரபி’ ஆசிரியர் திரு. விக்கிரமன் எப்பொழுதும் பம்பரமாகச் சுழன்று கொண்டு இருப்பவர். பத்திரிகைப் பணி என்றும், எழுத்தாளர் சங்கப் பணி என்றும், ஏராளமான நண்பர்களுக்குப் பல வகைகளிலும் உள்ளன்போடு உதவும் நட்புப் பணி என்றும், படைப்புப் பணி என்றும், ஓய்வில்லாத இலக்கியச் சொற்பெருக்குப் பணி என்றும் நாளெல்லாம் தன்னைப் பணிகளுக்குப் பங்கு போட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பவர் திரு. விக்கிரமன்.

‘பணிகளுக்கு மட்டும்தானா பங்கு? எனக்கு இல்லையா?’ என்று திரு. விக்கிரமனின் உடலுக்குள் இருந்து முணுமுணுத்தது பிணி. அவர் அதை அலட்சியப்படுத்திவிட்டு, தம் பெரும் பணிகளில் வழக்கம் போல ஈடுபட்டுவிட்டார். ஆனால், பிணி அலட்சியப்படுத்தத் தயாராக இல்லை.

‘காய்ச்சல்’ என்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு அவர் உடலுக்குள் புகுந்த பிணி, என்னவென்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்குப் பல கிளைகளைப் பரப்பிப் பாய்ச்சல் காட்டியது.

திரு. விக்கிரமனுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள் திணறிப் போனார்கள். அவர்கள் கொடுத்த மருந்துகளும், மாத்திரைகளும், பலனின்றிப் போனதோடு ஒரு பயங்கர நிலையையும் தோற்றுவித்து விட்டது. திரு. விக்கிரமனுக்கு ஆகாரம் இல்லை. பேச்சு இல்லை. படுக்கையைவிட்டு அவரால் அசையக்கூட முடியவில்லை. டாக்டர்களே பயந்து போய்விட்டார்கள்.

திரு. விக்கிரமன் உடல் நலமற்று இருப்பதைக் கேள்விப்பட்டு அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்த தொழில் அதிபர்கள் திரு. வி.ஜி. பன்னீர்தாஸ் சகோதரர்கள் பார்த்ததும் உருகிப் போய்விட்டார்கள்.

“இனி ஒரு கணம்கூட இங்கே வைத்திருக்க வேண்டாம். புறப்படுங்கள் விஜயா நர்ஸிங் ஹோமுக்கு” என்று சொல்லியதோடு விடாமல், திரு. விக்கிரமனை உடனே விஜயா நர்ஸிங் ஹோமுக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்கும் அவசர ஏற்பாட்டைச் செய்தார்கள்.

அந்நிலையில் திரு. விக்கிரமனுக்கு, உடல் அவர் வசம் இல்லை; ஆனால், உணர்வு மட்டும் அவர் வசம் அதிகமாகவே இருந்தது. வீட்டைவிட்டு மருத்துவ விடுதிக்குப் புறப்படுகிற நேரம். அன்னையின் அணுக்க பக்தரான அவருக்குக் கொஞ்சம் கூடப் பயம் இருக்கவில்லை. ‘என் மீது அன்பு செலுத்து கின்றவர்களின் திருப்திக்காக நான் மருத்துவ விடுதிக்குச் செல்கிறேன். அது அவசியம் இல்லாமலே அன்னையின் அருள் எனக்குச் சிகிச்சை அளிக்கும். இப்பொழுது அன்னையின் அருள் விரைந்து செயலாற்ற ஒரு தடை இருக்கிறது.

அன்னையின் அருளை முழுதுமாகச் செயல்படவிடாமல் தடுக்கிறது டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை. நம்பிக்கையை டாக்டர்களின் பக்கம் திருப்பும்பொழுது அன்னையின் அருள் செயல்பட முடியாமல் தடைப்படுகிறது. அது எனக்குப் புரிகிறது. ஆனால், என்னைச் சூழ்ந்துள்ளவர்களுக்குப் புரியவில்லையே! என்றாலும் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனால் நான் செல்கிறேன். நான் உங்கள் அருளை நிரப்பிக் கொள்ள உங்களால் நியமிக்கப்பட்ட பாத்திரம் அல்லவா? காத்தருளுங்கள்’ என்ற உள்ளுணர்வால் அன்னையிடம் பேசிவிட்டு, ஒரு காணிக்கையை ஆசிரமத்திற்கு அனுப்புமாறு தம் பெண் ஹேமாவிடம் சங்கேதமாகக் கூறிவிட்டு, மருத்துவ விடுதிக்குப் புறப்பட்டார் திரு. விக்கிரமன்.

அவருக்கு விஜயா நர்ஸிங் ஹோமில் சிகிச்சைகள் ஆரம்பம் ஆயின. அவருடைய நண்பர்களுக்கு அது எப்படியோ தெரிந்துவிட, அவரைப் பார்க்கச் சென்றவர்களின் கூட்டத்தால் நர்ஸிங் ஹோமே திணறிப் போய்விட்டது. அது மட்டும் அன்று;

தமக்கு ஏற்பட்ட சோதனையையும் வேதனையையும் வெளியே சிதறவிடாமல் உள்ளுக்குள்ளேயே அழுத்திக் கனன்று கொண்டிருந்த திரு. விக்கிரமனின் துணைவியாரை, ஆறுதல் கூற வந்தவர்களே அழுது புலம்பி உடைத்துச் சிதறவிட்டுவிடுவார்கள் போல இருந்தது. அவர் அந்தப் புதிய தாக்குதலையும் பொறுத்துக் கொண்டு ஒரு வேதாந்தியைப் போலக் கண்ணீர்விடாமல் கணவருக்குப் பணிவிடை செய்த காட்சி உருக்கமானது; சாவித்திரிக்கு இணையாக நினைக்கத் தூண்டியது.

எழுத்தாளர் டாக்டர் வாசவனும், மற்றும் பலப்பல நண்பர்களும் திரு. விக்கிரமனுக்கு நலம் தரவேண்டி அன்னைக்குக் காணிக்கை அனுப்பினார்கள். நானும் இச்செய்தியைக் கேள்விப்பட்டு, தொலைபேசியின் மூலமாகத் தொடர்பு கொண்டு, “அன்னையின் அருள் திரு. விக்கிரமனுக்கு நிறைய உண்டு. அவர் நலத்தோடு விரைவில் வீட்டுக்குத் திரும்புவார்” என்று தெரிவித்தேன்.

அன்னையின் அருள் அவருக்கு நிறையவே இருக்கின்றது. பயந்த மாதிரி அவருக்கு ஆபத்தான வியாதி எதுவும் இல்லை. சாதாரணத்திற்கும் கொஞ்சம் மேற்பட்ட டைபாயிடு காய்ச்சல். அவருக்கு ஷுகர் உண்டு. அது மிகுதியாகப் போய்விட்டதால், காய்ச்சலுக்காகக் கொடுக்கப்பட்ட மருந்து வேலை செய்யாமல் போய், நோயை இனம் கண்டு பிடிக்க முடியாதபடி மாறாட்டம் செய்து பேயாட்டமும் போட்டுவிட்டது. முதலில் ஷுகரின் வீச்சைக் குறைக்கச் சிகிச்சை. பிறகு காய்ச்சலைத் துரத்தச் சிகிச்சை.

இப்பொழுது பூரண நலத்தோடு வீட்டுக்குத் திரும்பிவிட்ட திரு. விக்கிரமன், அலுவலகத்திற்கும் போய்வர ஆரம்பித்திருக்கிறார். “எல்லாம் அன்னையின் அருள்” என்று கண்ணீர் மல்கித் தழுதழுக்கின்றார் திரு. விக்கிரமன்.

இந்தத் தழுதழுப்பே அன்னையின் அருளை விரைவில் கூட்டுகின்றது.

2

அறியாமையால் தவறு செய்துவிடுகின்ற அன்பர்களுக்குக் கூட, தம் எல்லையற்ற கருணையை வழங்கி அவர்களின் துயரைக் களைகின்றார் அன்னை. அதற்குச் சான்றாக ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சற்று அருகில் போய்ப் பார்க்கலாம்.

அந்தப் பெண் தமிழகத்தில் வசிப்பவர்; மத்திய அரசுப் பணியில் இருப்பவர்; ‘அமுதசுரபி’ வாசகர். அவர் ஏப்ரல் 84-இல் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “என்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து இருந்த ஒருவர், என்னைப் பிரிந்து சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்து என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு அன்னையின் அருள் கிட்டுமா?” என்று கேட்டிருந்தார்.

“நிச்சயமாகக் கிட்டும். அன்னையின் அருளில் பூரண நம்பிக்கை வைத்துத் தினமும் பிரார்த்தனை செய்து வாருங்கள். உங்களை மணந்து கொள்வதாகக் கூறியவர், “மனம் மாறித் திரும்ப வேண்டும்” என்ற கோரிக்கையை அன்னையிடம் சமர்ப்பித்துக் கொண்டே இருங்கள். அவர் உங்களைப் பிரிந்து சென்றதற்கு எந்த வகையிலாவது நீங்கள் காரணமாக இருந்தால், அதற்காக வருந்தி, இனி ‘அந்தத் தவற்றைச் செய்வதில்லை’ என்று முடிவு எடுத்துக் கொண்டு, அன்னையிடம் நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை பனி போல் மறைந்துவிடும்” என்று நான் பதில் எழுதினேன்.

நவம்பர் 84-இல் அந்தப் பெண்ணிடமிருந்து மற்றும் ஒரு கடிதம் வந்தது. அதில், “நீங்கள் எழுதி இருந்தபடியே நான் அன்னையைப் பிரார்த்தனை செய்து வந்தேன். என் தவறுகளை எல்லாம் மன்னித்து அருள் செய்யுமாறும் வேண்டிக் கொண்டேன். அதன் பயனாக என்னைப் பிரிந்து சென்ற அவர், இந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் திரும்பி வந்தார். என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போனதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

என்னைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால், அவரிடம் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ‘பொறுப்பற்றதனமாக என்னைப் பிரிந்து சென்ற அவரை, எப்படி நம்பித் திருமணம் செய்து கொள்வதற்குச் சம்மதம் தெரிவிப்பது?’ என்ற குழப்பத்தாலும், சந்தேகத்தாலும் திருமணத்திற்குச் சம்மதிக்காமல் நாட்களைக் கடத்திக் கொண்டு இருந்தேன். இப்படி இரண்டு மாதங்கள் சென்றன. இந்த இடைவெளியில் எங்களுக்குள் பல பிரச்சினைகள் முளைத்துவிட்டன.

அதனால் அவர் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு மறுபடியும் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டார். அவர் எங்குச் சென்றார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அன்னையின் அருளால் திரும்பி வந்த அவரை, மறுபடியும் என்னிடமிருந்து பிரிந்து செல்லுமாறு செய்தது எது? அதனால் நான் மிகவும் துயரமும், வேதனையும் அடைந்துள்ளேன். நானும் அவரும் திருமணம் செய்து கொண்டபிறகு கணவன் மனைவியராக ஆசிரமத்திற்கு வருவதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன். என் பிரார்த்தனைக்கு அன்னை செவி சாய்த்து நானும் மற்ற பெண்களைப் போலத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த அனுக்கிரகம் செய்வாரா? அன்னை எனக்கு அளித்த வாய்ப்பை நான் நழுவவிட்டுவிட்டதால், அவர் திரும்பி வந்து என்னைத் திருமணம் செய்து கொள்வாரா? தங்கள் ஆலோசனையைத் தயவு செய்து எழுதுங்கள். மிகுந்த துயரத்தில் இருக்கும் எனக்குத் தங்கள் பதில்தான் ஆறுதல் அளிக்கும்” என்று எழுதி இருந்தார்.

அதைத் தவிர வேறொரு செய்தியையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் அவர். அது அவருடைய உத்தியோகத்தைப் பற்றியது. அவர் இப்படி எழுதியிருந்தார்.

“மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வரும் நான், வேறோர் அலுவலகத்தில் சேர்வதற்காக விண்ணப்பித்து இருந்தேன். ‘உனக்கு அந்த வேலை கிடைக்காது’ என்று பலரும் கூறினார்கள். என்றாலும், நான் அன்னையை வேண்டிக் கொண்டு அந்த வேலைக்கு விண்ணப்பத்தை அனுப்பினேன். அன்னையின் அருள் அந்த வேலைக்கு என்னைத் தகுதியானவள் என்று நினைக்க வைத்து, என்னைத் தேர்ந்தெடுக்குமாறும் அந்த நிறுவனத்தைச் செய்துவிட்டது. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், எனக்கு அந்த வேலை கிடைக்காது என்று கூறியவர்களே நான் வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் செய்தியைச் சொன்னதுதான்! அதனால் எனக்கு இரட்டை மகிழ்ச்சி. ஆனால், நான் தேர்ந்து எடுக்கப்பட்டு ஒரு மாதமாகியும், இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இருந்து வருகின்றது. ஏதோ சில சிக்கல் களினால் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ‘வந்த வாய்ப்பு நழுவிவிடுமோ?’ என்று கவலையாக இருக்கிறது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக எழுத வேண்டுகிறேன்”.

நான் கீழ்க்கண்டவாறு அந்த அன்பருக்குப் பதில் எழுதினேன்.

“(1) உங்களுக்கு வாக்களித்தவர் உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் எங்கோ போய்விட்டாலும், அவர் திரும்பிவர வேண்டும்; திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் அன்னையை வேண்டியதால் அன்னையின் அருள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, உங்கள் கண்களிலிருந்து மறைந்து போனவரை, உங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது. அன்னைக்கு நன்றி தெரிவித்துவிட்டு, திரும்பி வந்தவரை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்வதற்குப் பதிலாக, ‘அவரை நம்பித் திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா?’ என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து விட்டது. இது விரும்பத்தக்கது அன்று. வந்தவரைத் திரும்பிப் போகுமாறு செய்தது எது? என்று நீங்கள் கேட்டு இருக்கின்றீர்கள். அப்படிச் செய்தது எது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். தவறு நடந்துவிட்டது. இது இரண்டாவது தடவையாக நடந்த தவறு. முதலில் நடந்த தவற்றை மன்னித்து, சொல்லிக் கொள்ளாமல் போனவரைத் திரும்பி வருமாறு செய்தது அன்னையின் அருள். அன்னை கருணையுடன் அளித்ததை முறையாக ஏற்றுக் கொள்ளாமல், வேண்டாத சந்தேகங்களுக்கு இடம் கொடுத்தது தவறு என்பதை உணர்ந்து, அன்னையிடம் மறுபடியும் வேண்டிக் கொள்ளுங்கள். ‘இனி இது போன்ற தவற்றைச் செய்ய மாட்டேன்’ என்று அன்னையிடம் மன்னிப்புக் கேளுங்கள். அன்னையின் அருள் மறுபடியும் உங்களுடைய அன்பரை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்”.

(2) கிட்டத்தட்ட வேலை வாய்ப்பும், அவர் திரும்பி வந்ததும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தும், ஒரே சமயத்தில் பிரிந்தும் போய் இருக்கின்றன. ஆகவே அவர் அன்னையின் அருளால் திரும்பி வந்து சேரும் சமயத்தில், அந்த வேலை வாய்ப்பும் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். நீங்கள் வேலையைப் பற்றிக் கவலைப்படாமல், நான் கூறியுள்ளபடி உங்கள் தவற்றைத் திருத்துவதில் கவனத்தைச் செலுத்துங்கள்.

ஐந்து மாதங்களுக்குப்பிறகு, அதாவது, மார்ச் 85-இல் அவரிடமிருந்து மூன்றாவதாக ஒரு கடிதம் வந்தது.

அதில், “தங்களின் அறிவுரைப்படி அன்னையின் அருளை வேண்டிக் கொண்டு நான் காத்திருந்தேன். இரண்டு தடவை மாயமாக மறைந்து போனவர், அன்னையின் அருளால் என்னைத் தேடி வந்தார். நானும் உடனே திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தேன். இப்பொழுது நாங்கள் திருமணம் செய்து கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றோம். அவ்வப்போது அறிவுரை வழங்கி எனக்குத் துணை நின்ற தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அமுதசுரபி’யில் கட்டுரை எழுதும் பணியை நீங்கள் தொடர்ந்து செய்துவர வேண்டும். அதன் மூலம் என்னைப் போலப் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்” என்று எழுதி இருந்தார்.

அந்தப் பெண்ணின் அன்பர் திரும்பியதும், அவரின் வேலை சம்பந்தப்பட்ட உத்தரவும், தடையை உடைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். அவர் அதைப் பற்றி எழுதவில்லை. தன் திருமணத்தைப் பற்றித் தெரிவித்த மகிழ்ச்சியில், அதை எழுத அவர் மறந்து போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதைக் குறிப்பிட அவர் மறந்திருக்கவே மாட்டார்!

அதற்குப்பிறகு ஒரு நாள் அந்த அன்பரும் அவர் கணவரும் பாண்டிச்சேரிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தர் அன்னை சமாதியைத் தரிசித்துவிட்டு என்னையும் சந்தித்தார்கள். ஒவ்வொரு மாதமும் அன்னைக்குக் காணிக்கை அனுப்பி வருவதாகக் கூறிய அந்த அன்பரின் கண்களில் கண்ணீர்ப் பூக்கள் அரும்பின.

அவை அவர் அன்னைக்குக் காணிக்கையாகச் செலுத்திய நன்றிப் பூக்கள்.book | by Dr. Radut