Skip to Content

03 - தரிசனமும் தகவல்களும்

“விசேடமான நாட்களில் தவறாது கோயிலுக்குப் போக வேண்டும்” என்பது நம் நாட்டு வழக்கம். “வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போவது மிகவும் நல்லது” என்று கருதப் படுகின்றது. “ஒவ்வொருவரும் தம் பிறந்த நாள் அன்று கோயிலுக்குச் செல்ல வேண்டும்” என்று பெரியவர்கள் கூறுவார்கள். அந்த நாட்களில் சுவாமிக்கு அர்ச்சனை செய்வது நம் வழக்கம். பூஜா காலங்களில் அர்ச்சகர் பூஜையை முடித்துவிட்டு, கோயிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், தீர்த்தம், தளம் முதலிய பிரசாதங்களை வழங்குவார். இவை யாவும் நம் மரபில் வந்தவை.

அவதார மூர்த்திகளாகிய அன்னையையும் ஸ்ரீ அரவிந்தரையும், ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் அடக்கம் செய்து சமாதி எழுப்பி இருக்கின்றார்கள். ஒரே சமாதியில் இருவருடைய உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. “பக்தியோடும், நம்பிக்கையோடும் இந்த சமாதியைத் தரிசிக்கச் செல்கின்றவர்களுக்கு எல்லா விதங்களிலும் மனத் தெளிவு மிகத் தேவை” என்பதை உணர வேண்டும்.

“சமாதியைத் தரிசிக்கச் செல்லும்பொழுது கையில் ஏதேனும் கொண்டு போக வேண்டுமா? சமாதியை அடைந்த பின் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்ன? சமாதியைத் தரிசிப்பதால் ஏற்படும் பலன்கள் யாவை? என்பன போன்ற கேள்விகள் எழுவது இயற்கையே. அங்கு விக்கிரகமோ, அர்ச்சகரோ, அர்ச்சனையோ எவையும் கிடையா”.

அது சமாதி. சமாதி முழுதும் அழகான பல வண்ண மலர்கள் நிறைந்திருக்கும். தியான மண்டபத்தில் அன்னையின் படுக்கை இருக்கிறது. அங்கு நம் மரபின் வழியாய் வந்த பூஜை முறைகள் எவையும் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. மரபில் வந்தவர்களுக்கு இது ஏதோ ஒரு வினோதமான இடமாகத் தோன்றலாம்; எளிதில் புரிந்து கொள்ள முடியாத ‘சிதம்பர ரகசிய’மாகவும் தோன்றலாம்.

அப்படி இல்லை.

பிறகு ஏன் அத்தகைய வித்தியாசமான சூழ்நிலை?

பொது மக்களிடையே சமய உணர்வை உயிர்ப்பிப்பதற்காகவும், வளர்ப்பதற்காகவும் தோன்றியவை கோயில்களும், அங்கு நிகழ்த்தப்பெறும் பூஜைகளும். ஆத்ம ஞானத்தினை வளர்த்து, அதைப் பக்குவப்படுத்துவது ஆசிரமம். மத நம்பிக்கையை வளர்ப்பது கோயில். ‘கோபுர தரிசனம் பாவ விமோசனம்’ என்பார்கள். சமாதிதரிசனமோ ஆன்மாவையும் இறைவனையும் ஒன்றுபடுத்துகின்றது. ‘ஆத்ம அனுபவத்தைத் தரும் இடம் சமாதி’ என்று அன்னை கூறியுள்ளார்கள்.

ஒரு சமயம் ஆசிரமத்தைப் பார்ப்பதற்குச் சிலர் வந்திருந்தார்கள். அவருள் மணமாகாத ஒரு பெண்ணும் இருந்தாள். நாள்தோறும் ஸ்ரீ அரவிந்தருடைய அறை பக்தர்களுக்காகத் திறக்கப்படும். காலை 11.45 அளவில் அறை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் அங்கு போய்த் தரிசனம் செய்து வருவார்கள். முன் குறிப்பிட்ட பக்தர்களும் 11.45க்கு அறைக்குச் செல்லத் தயாராக இருந்தார்கள். அதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னால் அந்தப் பெண், சமாதியின் அருகில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்துவிட்டாள். மணி 11.40 ஆகி விட்டது. அவள் தியானத்தை முடித்தபாடாக இல்லை. மற்றவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொதுவாக, தியானத்தில் ஆழ்ந்து இருப்பவர்களைக் கலைத்து எழுப்புவது சரி இல்லை. அது அவர்களுக்குப் புரிந்தது. அந்தப் பெண்தான் தியானம் கலைந்து சமாதியைவிட்டு எழுந்திருக்க வேண்டும்.

அவளைச் சேர்ந்தவர்கள், ‘அவள் சமாதியைவிட்டு உடனே எழுந்திருக்க வேண்டும்’ என்று நினைத்தவர்களாய், அவள் அருகே நின்று கொண்டு இருந்தார்கள். யாரும் அவளை அணுகி, ‘தியானத்தை முடித்துக்கொள்’ என்று கூறவில்லை.

அந்த நேரத்தில் அவள் கண்களைத் திறந்து அவர்களை நோக்கி “நான் இதுவரை பேரானந்தத்தில் மூழ்கி இருந்தேன். கண்களைத் திறக்கவே எனக்கு மனம் இல்லை. நீங்கள் என்னை அழைக்கவே, நான் தியானத்தை முடித்துக் கொண்டேன்!” என்று கூறிக் கொண்டே எழுந்தாள்.

உண்மையில், யாருமே அவளை அழைக்கவில்லை. ஆனால், அப்படிச் சொன்னாளே, எதனால்? மற்றவர்கள், ‘அவள் சமாதியை விட்டு உடனே எழுந்திருக்க வேண்டும்’ என்று நினைத்தது, அவளுக்கு ‘அழைத்ததாக’த் தோன்றி இருக்கின்றது! சமாதியின் அருகில் அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருந்ததால், மற்றவர்கள் நினைத்தது அவர்கள் கூறாமலே அவளுக்குப் புரிந்துவிட்டது. இதுதான் சமாதியின் சக்தி.

இனி சமாதிக்கு வரும் அன்பர்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைச் சிறிதே சிந்திப்போம். சமாதிதரிசனத்திற்கு வருபவர்கள் உணர்வின் அலைப்பாய்ச்சல்களிலிருந்து முழுதும் விடுபட்டவர்களாகவும், ஒருமுகப்பட்ட சிந்தனையோடும் வந்தால், தியானத்திலும், அந்தச் சூழலிலும் மனம் ஒன்றித் திளைக்க முடியும். வரும் அன்பர்கள் அன்னையை மட்டுமே நெஞ்சம் முழுதும் நிறைத்துக் கொண்டு மற்றவற்றை அறவே களைந்துவிடல் வேண்டும். அது இயலாவிட்டால், மனத்தை அமைதியாகவாவது வைத்துக் கொண்டு வரவேண்டும். சமாதிக்கு வரும்பொழுது நல்ல வாடாத மலர்களையும், நறுமணம் நிறைந்த ஊதுபத்திகளையும் கொண்டு வந்து சமாதியில் வைத்து வணங்க வேண்டும்.

ஆசிரமத்தில் விசேடமான நாட்கள் எனக் கருதப்படுபவை:
ஜனவரி 1-ஆம் தேதி;
பிப்ரவரி 21, 29-ஆம் தேதிகள்;
ஏப்ரல் 24-ஆம் தேதி;
ஆகஸ்ட் 15-ஆம் தேதி;
நவம்பர் 17, 24-ஆம் தேதிகள்;
டிசம்பர் 5-ஆம் தேதி.

ஜனவரி 1-ஆம் தேதியை ‘சுபிட்ச தினம்’ என்று கூறுகின்றார் அன்னை. பிப்ரவரி 21-ஆம் தேதி அன்னையின் பிறந்த நாளாகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரிக்கு 29 தேதிகள் வரும். இதை ‘லீப்’ வருடம் என்பார்கள். இப்படி வாராது போல் வரும் பிப்ரவரி 29-ஆம் தேதி, ‘சுத்த தெய்வ சக்தி பூமியில் வந்து தங்கும் நாள் என்று சொல்லப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் ‘சூப்ராமென்டல் டே’ (Supramental day) என்பர். ஏப்ரல் 24, அன்னை பாண்டிச்சேரிக்கு வருகை தந்த நாளாகும். ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாள். நவம்பர் 17-ஆம் தேதி அன்னை சமாதியான புனித தினம். நவம்பர் 24-ஆம் தேதி ஸ்ரீ அரவிந்தர் மேற்கொண்ட யோகத்தில் ஓர் அடிப்படையான திருப்பம் ஏற்பட்ட நாள். இந்நாள் ‘வெற்றித் திருநாள்’ என அழைக்கப்படுகின்றது. டிசம்பர் 5-ஆம் தேதி ஸ்ரீ அரவிந்தர் சமாதியான நாள்.

இந்த விசேட நாட்களில் ஆசிரமத்தில் உள்ள சாதகர்களும், அன்பர்களும் சமாதியின் அருகில் கூடித் தியானம் செய்வது வழக்கம். இந்த நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் அன்னை வாசம் செய்த அறைகளுக்குச் சென்று தரிசனம் செய்வதற்கு சாதகர்களும், அன்பர்களும் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

ஆசிரமத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்: அன்னை ஸ்ரீ அரவிந்தர் சமாதி; தியான மண்டபத்தில் வைக்கப் பட்டிருக்கும் அன்னையின் கட்டில் (இந்தக் கட்டிலில்தான் அன்னை 1973-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி சமாதியானார்கள்). இவற்றைத் தவிர ஸ்ரீ அரவிந்தரின் அறை. ஸ்ரீ அரவிந்தர் தன் இறுதி நாள்வரை வாசம் செய்த இந்த அறை, ஒவ்வொரு நாளும் காலை 11.45க்குத் திறக்கப்பட்டு, அன்பர்களும் சாதகர்களும் அனுமதிக்கப்படுகின்றார்கள். இங்கு செல்ல முன்னதாகவே அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ‘வரவேற்பு அறை’ என்ற பிரிவில் விசாரித்தால், ‘அனுமதிச் சீட்டை எங்கு பெற வேண்டும்?’ என்ற விவரத்தைச் சொல்வார்கள்.

ஆசிரமத்தில் இயங்கி வரும் வரவேற்புப் பிரிவு, வருகின்ற அன்பர்களுக்குத் தேவையான விவரங்களைக் கொடுத்து உதவி செய்து வருகின்றது. தரிசன காலங்களிலோ, மற்ற நாட்களிலோ ஆசிரமத்தில் வந்து தங்க வேண்டும் என்று அன்பர்கள் விருப்பப்பட்டால், அதற்கு ஆசிரமத்தில் உள்ள வரவேற்புப் பிரிவு ஏற்பாடு செய்கின்றது. நேரிலோ, கடிதம் மூலமோ வரவேற்புப் பிரிவோடு தொடர்பு கொண்டால், தங்குவது சம்பந்தமான எல்லா விவரங்களும் கிடைக்கும். ஆசிரமத்தில் விருந்தினர் மாளிகைகள் பல இருக்கின்றன. அன்பர்களுடைய வசதிக்கேற்ப, அங்குத் தங்குவதற்கு வகை வகையான அறைகள் வாடகைக்குக் கிடைக்கும். உணவுக்கு ஆசிரமத்தைச் சேர்ந்த உணவுக் கூடம் ஏற்பாடு செய்கின்றது. ‘ஒரு நாளைக்குத் தேவையான உணவு இவ்வளவு’ என்று நிர்ணயிக்கப்பட்ட சீட்டை முன்கூட்டியே வாங்கிக் கொள்ள வேண்டும். இதற்கும் வரவேற்புப் பிரிவு உதவுகின்றது.

சமாதியில் சூழ்ந்துள்ள புனித அமைதி, ஆசிரமத்தோடு மட்டுமன்று; ஆசிரமத்தைச் சுற்றிப் பல மைல்கள் தூரம் வரையில் வியாபித்து இருப்பதையும் நாம் உணரலாம். ஒரு சமயம், நம் மறைந்த பாரதப் பிரதமர் நேரு அவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது அவர், இந்த அமைதியினைத் தாம் உணர்ந்ததாகக் கூறினார்.

ஓர் அமெரிக்க இளைஞர் விமானத்தில் இந்தியாவுக்குப் பறந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது விமானத்தில் இந்தியாவை நெருங்கிக் கொண்டிருக்கும் செய்தியை அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பைக் கேட்டவுடன், தாம் ஓர் அமைதிச் சூழலில் பிரவேசிப்பதை உணர்ந்ததாகக் கூறியுள்ளார் அந்த இளைஞர். அவர் அன்னையைத் தரிசிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார். அவரைப் போலவே பல அன்பர்களும், ‘இப்படிப்பட்ட ஓர் அமைதிச் சூழலை வேறு எங்கும் உணர முடிவதில்லை’ என்று அனுபவ பூர்வமாகக் கூறி இருக்கின்றார்கள்.



book | by Dr. Radut