Skip to Content

01- ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும்

1872-இல் வங்காளத்தில் பிறந்த ஸ்ரீ அரவிந்தர், தம் இரு சகோதரர்களுடன் சிறு வயதிலேயே கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். தம் 21 வயதுவரை அங்கே தங்கி இருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு தாய் நாட்டுக்குத் திரும்பினார். பரோடா சமஸ்தானத்தில் பணி புரிந்தார். கல்லூரிப் பேராசிரியராகவும் சில காலம் இருந்தார். பின்னர் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்து போராடினார். அந்தச் சமயத்தில் யோகத்தில் உள்ள அதிசய சக்தியை ஒரு நாக சன்னியாசியிடம் கண்டு, ‘அதன் மூலம் இந்திய விடுதலையை அடையலாம்’ எனக் கருதி யோகம் பயின்றார்.

கல்கத்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து அவர் சேவை செய்த பொழுது, அந்தத் தீவிரவாதிகள் வீசிய குண்டு சம்பந்தமான ஒரு வழக்கில் நிரபராதியான அவரும் சேர்க்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரது யோகம் சித்தி பெற்றது. அந்நிலையில் அவர் கைதிகளையும், காவலர்களையும், வழக்கு மன்றத்தில் எதிரிகளையும், நீதிபதியையும் வாசுதேவனாகக் கண்டார். பின்னர், ‘வழக்குப் பொய்யானது’ என்று நிரூபணமாகி, அவர் விடுதலை செய்யப்பட்டார். அவருடைய அந்தராத்மாவின் குரல், ‘இந்தியா விடுதலை அடைந்துவிட்டது. உனக்கு வேறு பணி உண்டு. பாண்டிச்சேரிக்குப் போ’ என அவரைப் பணித்தது. 1910-ஆம் ஆண்டு முதல் 1950, டிசம்பர் 5-இல் சமாதி அடையும் வரையில் புதுவையிலேயே யோகம் பயின்றார்.

‘பராசக்தியின் அவதாரம்’ என்றும், ‘அன்னை’ என்றும் பகவான் ஸ்ரீ அரவிந்தரால் அழைக்கப்பட்ட மிரா, பிரான்ஸ் நாட்டில் 1878-இல் பிறந்தார். ‘நம் ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த உலகத்தில் நாம் பிறக்கவில்லை. பிறப்பின் நோக்கம் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றுவதுதான்’ என்ற கண்டிப்புடன் தம் தாயாரால் வளர்க்கப்பட்டவர் மிரா. அவருடைய குழந்தைப் பருவத்திலேயே அவர் தலை மீது ஒரு சிறு ஒளி மண்டலம் நிரந்தரமாகத் தவழ்ந்தது. திடீரென்று தியானம் தானாகவே வந்து அவரைச் சூழ்ந்து கொள்ளும்.

அவர் கண்களை மூடிக் கொண்டு நெஞ்சினுள் நிறைந்து ஒளிரும் ஒளியில் கலந்துவிடுவார். இந்த நிகழ்ச்சி குடும்பத்தில் இருந்தவர்களுக்கு ஒரு தொந்தரவாகவே இருந்தது. இந்தியர் ஒருவர் அவரிடம் கீதையைப் படிக்குமாறு கூறினார். கீதையின் ரகசியம் அவரை முழுதுமாகக் கவர்ந்தது. அவருடைய தியானத்தில் பல மகான்கள் தோன்றுவது வழக்கம். அவர்களில் அடிக்கடி தோன்றும் ஒருவரை, ‘கிருஷ்ணா’ என்று அழைத்தார் மிரா.

1914-இல் புதுவைக்கு வந்து ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்தார் மிரா. ‘தம் தியானத்தில் கிருஷ்ணாவாகத் தோன்றி உபதேசம் செய்த மகான் இவரே!’ என்று உணர்ந்தார். ‘உலகம் இருளில் மூழ்கி இருந்தாலும், எனக்குக் காட்சி தரும் இந்த ஒளி மயமான திவ்யபுருஷன் இருக்கும்வரை உலகம் பொய்ம்மையிலிருந்து நிச்சயம் விடுபடும்’ என்று உறுதி பூண்டு, ஸ்ரீ அரவிந்தருடன் சேர்ந்து புதுவையிலேயே தங்கி, மரணம், மூப்பு, பிணி, வறுமை, பொய்ம்மை இவற்றிலிருந்து உலகம் முழுதுமாகவும், நிரந்தரமாகவும் விடுபடக் கூடிய யோகத்தை மேற்கொண்டார்.

1926-இல் ஸ்ரீ அரவிந்தரின் யோகம் முதல் கட்டத்தைக் கடந்து இரண்டாவது கட்டத்தை நோக்கி வெற்றிகரமாகச் செல்ல இருந்தபொழுது ஸ்ரீ அரவிந்தர் மிராவை, ‘நமக்கெல்லாம் இவர் அன்னை, உலகத்துக்கே இவர்தாம் அன்னை. உலகத்தை உய்விக்க வந்த பராசக்தி இவரே!’ என்று பிரகடனம் செய்து, ஆசிரமத்தின் எல்லா நிர்வாகப் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு, தனித்தே தவயிருக்கை கொண்டார்.

1950-இல் ஸ்ரீ அரவிந்தரின் தவம் பலித்துவிட்டது. ‘தவத்தின் மூலம் தாம் பெற்ற பேரொளியைப் பெற்றுக் கொள்ள உலகம் தயாராக இல்லை’ என்பதை அறிந்து, அன்னையின் உடலில் அந்தப் பேரொளியை இருத்திவிட்டு, தாம் சூட்சும உலகிற்குச் சென்று உலகைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட வேண்டி, சமாதி அடைந்தார்.

1956, 1967, 1969 ஆண்டுகளில் அன்னையின் யோகம் ஸ்ரீ அரவிந்தருக்குப் பலித்த கட்டங்களைக் கடந்து, சிறந்து, வேகமாக முன்னேறியது. 1973-இல் அன்னை தம் 95-ஆவது வயதில், “நான் 100 ஆண்டுகள்வரை இருந்தால், ஸ்ரீ அரவிந்தரின் யோகம் அவரின் குறிக்கோளைப் பூர்த்தி செய்து உலகத்தின் நலத்திற்காகப் பூரணமாகப் பலிக்கும். இறைவனின் சித்தம் எப்படி என்று தெரியவில்லை. இறைவனின் திருவுள்ளம் என் உடலில் எப்படிப் பூர்த்தியானாலும், அதுவே உயர்ந்ததாகும்” என்று கூறினார்.

இறைவனின் திருவுள்ளம் பூர்த்தியை நாடியது. அன்னை 1973, நவம்பர் 17-இல் சமாதி அடைந்தார். ஒரு பக்தர் அன்னை சமாதி அடைந்த நேரத்தில் வான் வெளியில் ஒரு பேரொளி தோன்றி, அது கோடிக்கணக்கான பொறிகளாகச் சிதறி, ஒவ்வொரு மனித இதயத்தையும் நாடிச் சென்று, அங்கே தங்குவதைக் கண்டார்.

ஸ்ரீ அரவிந்தரிடம் பிறந்து, அன்னையிடம் வளர்ந்த அந்தத் திவ்யப் பேரொளி, உலகத்தில் கவிந்து கிடக்கும் நோய், மரணம், வறுமை போன்ற இருளைப் போக்கிக் கொண்டிருக்கும் நித்திய, சத்தியப் பேரொளியாகும்.book | by Dr. Radut