Skip to Content

25. தமிழர் மரபில் வாழ்க்கைப் பிரச்சினைகளும், அன்னையின் அருளும்

வேத காலத்திலிருந்து இன்றுவரை நம் வாழ்க்கை தெய்வீக நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகக் கூறப்படும் திருமூலர் வழியில் வந்த தமிழ் மக்களின் வாழ்க்கையில், ஆன்மிகமே முதல் இடத்தைப் பெற்று வருகின்றது. சிவன், விஷ்ணு முதலிய கடவுளர்களை வழிபடும் தமிழர்கள் சைவ, வைணவ மரபுகளை உருவாக்கி அவற்றை வளர்ப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான ஆலயங்களை எழுப்பி இருக்கின்றார்கள். “எவ்வளவு உயர்ந்தவர்களாக இருப்பினும்-ஆண்டவனின் அவதாரமாகவே இருப்பினும் கூட-மனிதர்களுக்குக் கோயில் எடுக்கும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை” என்று டாக்டர் வாசவன் கூறி இருக்கும் கருத்து, இங்கு சிந்திக்கற்பாலது.

ஆன்மிகம் இவ்வுலகத்தைப் புறக்கணிக்கின்றது. அதனால் அது மனித வாழ்வைத் தெய்வீகமாக ஏற்றுக் கொள்வது இல்லை. அதன் காரணமாக மனித வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்சினைகளையும், அந்தப் பிரச்சினைகளை விளக்குவதற்கான வழி முறைகளையும் ஆன்மிகம் கண்டு கொள்வதே இல்லை.

சன்னியாசமும், யோகமும் போற்றுதற்குரிய பெரு நெறிகள். அவை வாழ்க்கையை வைரியாகக் கருதுகின்றன. அதனால் அவை வாழ்க்கையில் உள்ள சிக்கல்களைப் புறக்கணித்து விட்டு அப்பால் விலகிச் சென்றுவிடுகின்றன. ஆகவே வாழ்க்கையில் உழலும் பாமரர்களுக்கு அவற்றால் பயன் இல்லை.

அதே சமயத்தில் ஆன்மிகம், சன்னியாசம், யோகம் போன்ற மாறுபட்ட நெறிகளைப் படைத்துச் சுவாரசியமான சுழற்சி மையமாக இருக்கும் இறைவனைவிட்டும் (அவன் எவ்வளவுதான் புதிரானவனாக இருப்பினும்கூட) அவனால் விலகிப் போகவே முடிவதில்லை. அதனால் அவர்கள் இம்மைக்கு இவ்வுலகத்தையும், மறுமைக்கு இறைவனையும் ஏற்றுக் கொண்டு எப்படியோ திருப்தி அடைகின்றார்கள். ‘உயர்ந்தோர்’ எனப்படுபவர், மறுமைக்குப் புண்ணியம் சேரும் வகையில் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றார்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள அவர்களை விட்டுவிட்டால், மிகுதியாக மிஞ்சி இருப்பவர்கள் சாதாரண மக்கள். அவர்களுடைய வாழ்க்கை, பிரச்சினைகள் நிறைந்ததாக அமைந்திருக்கின்றது. தம்மை வாட்டும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு அவர்கள் எப்படி எல்லாமோ முயன்று பார்க்கின்றனர். அதில் வெற்றி கிடைக்காத போது அவர்கள் தெய்வங்களின் துணையை நாடுகின்றனர்.

பொதுவாக, சாதாரண மக்கள் சிவபெருமானிடமோ, திருமாலிடமோ அந்தத் துணையை எதிர்பார்ப்பது இல்லை. வினைகளைத் தீர்ப்பவர் என்றும், பிரார்த்தனைகளுக்கு உடனே செவி சாய்ப்பவர் என்றும் விநாயகர் போற்றப்படுகின்றார். அவரைப் போலவே சாதாரண மக்களிடையே முருகன், காளி, ஐயப்பன், அம்மன் முதலிய கடவுளர்களின் ஆலயங்கள் பிரசித்தி அடைந்துள்ளன. ஓரிரு கோயில்களைத் தவிர அந்த அளவிற்கு சிவபெருமானை அல்லது திருமாலை வழிபடு தெய்வங்களாகக் கொண்ட கோயில்கள் உயரவில்லை.

திருமணம் கூடவும், குழந்தைப் பேறு கிடைக்கவும், செல்வம் உண்டாகவும், இவற்றைப் போன்ற பல கோரிக்கைகள் நிறைவேறவும், பல விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. துர்க்கை, வரலட்சுமி போன்ற தெய்வங்களை வேண்டி இந்த விரதங்கள் நோற்கப்படுகின்றன. பொதுவாக, தெய்வங்களுக்குள் மேலான தெய்வங்களாகக் கருதப்படும் சிவபெருமானும், திருமாலும், அவர்கள் உறையும் ஆலயங்களும் புண்ணிய மூர்த்திகளாகவும், புண்ணியத் தலங்களாகவும் கருதப்படுகின்றனவே தவிர, அங்கே வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்வதற்கான கோரிக்கை எதுவும் வைக்கப்படுவது இல்லை.

அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும், ‘உலகத்தையோ அல்லது வாழ்க்கையையோ புறக்கணிப்பது தவறு’ என்று உறுதியாகக் கூறுகின்றார்கள். காயத்தைப் (உடலை) ‘பொய்’ என்று கூறும் கொள்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘காயத்தில் பொதிந்துள்ள பொய்யையும், உலகத்தைப் பிணித்துள்ள துன்பத்தையும்தாம் புறக்கணிக்க வேண்டும்’ என்று அவர்கள் தெளிவுப்படுத்தி இருக்கின்றார்கள். ‘யோகத்தின் குறிக்கோளே அதுதான்’ எனவும் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

‘பிரச்சினைகள்’ என்பது என்ன? ‘பொய்யின் வடிவங்கள்’ என அவர்கள் கூறுகின்றார்கள். ஸ்ரீ அரவிந்தர் வகுத்துள்ள யோகத்தை ஏற்றுக் கொண்டு அதன் வழியே செல்கின்றவர்கள், முதலில் இவ்வுலகையும், வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்வதோடு, அவற்றில் இருக்கும் பொய்களை அடியோடு களையவும் முயல வேண்டும். அம்முயற்சியின் பயனாய் பொய் மறைய, பிரச்சினைகளும், அவற்றால் விளைகின்ற துன்பங்களும் அகலும்.

அதில் வெற்றி பெறுகின்றவர்கள் பொய்யை அழித்து, சத்தியத்தை நிலை நாட்டுகின்ற அன்னையின் உண்மையான தொண்டர்களாகி விடுகின்றார்கள். ‘வறுமையைப் போக்க வேண்டும்’ என்றோ, ‘வியாதி தீர வேண்டும்’ என்றோ, ‘பெண்ணுக்குத் திருமணம் நடைபெற வேண்டும்’ என்றோ, ‘உத்தியோகம் கிடைக்க வேண்டும்’ என்றோ மக்கள் அன்னையை நாடுகின்றபொழுது, அன்னை அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, வேறு ஒன்றையும் அருளுகின்றார். அந்த அன்பர்கள் அனைவரும் பொய்யை விடுத்து, சத்தியத்தை நாடுவதாகக் கருதி மகிழும் அன்னை, அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப உள்ளொளியைப் பெருக்கித் தருகின்றார். உள்ளொளி பெருகி வளர வளர, சம்பந்தப்பட்டவர்களின் எல்லாப் பிரச்சினைகளும் அடியோடு விலகிவிடுகின்றன. அவர்களுடைய இந்த விடுதலையானது, இறைவனை நோக்கித் தீவிரமாகச் செல்வதற்கான பேரூக்கமாக அமைந்துவிடுகின்றது.

இத்தகைய நிலையை அடைந்து நிற்கும் அன்னையின் அன்பர்கள், ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மிகமும், வாழ்க்கையும் வெவ்வேறானவை அல்ல. இவ்வுலகும், வாழ்வும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டவை. அவற்றை ஒளி மயமாக்கி, போற்றுவதற்குரியதாகச் செய்ய வேண்டியது நம் தலையாய தொண்டு. அதுவே அன்னைக்குச் செய்யும் தொண்டுமாகும்.

அன்னையை நாடி வருகின்றவர்களை இரு வகையினராகப் பிரிக்கலாம். ஒரு பிரிவினர்: அன்னையை, ‘பராசக்தியின் திருவவதாரம்’ என உணர்ந்தவர்கள். அவர்கள் தம் வாழ்க்கையைப் பூரணமாக அன்னைக்கும், அன்னையின் யோக நெறியான பூரண யோகத்திற்கும் அர்ப்பணம் செய்து கொண்டவர்கள். யோகத்தையே முதல் இலட்சியமாகக் கொண்டு அன்னைக்காக அன்னையின் அருகில் ஆசிரமத்தில் தங்கி இருக்கும் சாதகர்கள் அவர்கள். மற்றொரு பிரிவினர்: சிறு சிறு தொல்லைகளிலிருந்து விடுபடவும், வளங்களையும் நலங்களையும் பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தோடும் அன்னையை ஏற்றுக் கொண்டு குடும்பஸ்தர்களாக இருப்பவர்கள். இந்தப் பிரிவைச் சேர்ந்த அத்தனை பேர்களும் அவ்வப்போது ஆசிரமத்திற்கு வந்து செல்கின்றவர்கள்.

இந்தக் கட்டுரை அவர்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காகவே எழுதப்படுகின்றது.

பிரச்சினைகள் நிரம்பியது மனித வாழ்க்கை. உதாரணத்திற்கு ஓர் இளைஞனை எடுத்துக் கொள்ளலாம். அவன் படித்துப் பட்டம் பெறுகின்ற வரையிலோ, ஒரு வேலையைப் பெறுகின்ற வரையிலோ, சுமை அவனுக்கு இல்லை; அவன் பெற்றோர்க்குத்தான். பிறகு அவன் தனக்குக் கிடைத்த வேலையில் கால் ஊன்றி, அதற்குப் பிறகு திருமணத்தைச் செய்து கொண்டு வாழ்க்கையில் கால் ஊன்றி, தனக்கு என்று ஓர் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளும் பொழுது வாய்ப்புகளும், அவை தொடர்பான பிரச்சினைகளும் அவனை எதிர் கொள்கின்றன.

அவன் பலருடன் தொடர்பு கொள்ள வேண்டும்; பல காரியங்களைச் சாதிக்க வேண்டும்; பற்பல சூழ்நிலைகளில் சிக்கிச் சுழன்று மீண்டுவர வேண்டும். இத்தனையும் கொண்டதே வாழ்க்கை. ஆனால், ஆளுக்கு ஆள் வாழ்க்கையும், பிரச்சினைகளும் மாறுபடுகின்றன. அதாவது, ‘ஆண்’, ‘பெண்’ என்ற இன வேறுபாட்டாலும், வயது, குணம், பொருளாதாரம், உடல் திறன், மன வலிமை, அறிவு முதலானவற்றில் குறுக்கிடும் வேறுபாடுகளினாலும் மக்களிடையே காணப்படும் பிரச்சினைகளும் வேறுபடுகின்றன.

வேறுபடுகின்ற பிரச்சினைகளின் வேரினை வெட்டி வீழ்த்தவும், வாய்ப்புகளைப் பெற்றுப் பலன் அடையவும், தோல்விகளை எல்லாம் வெற்றியாக மாற்றவும், நாம் அன்னையை நாடும்பொழுது அன்னையின் அருள் எவ்வாறு செயல்படுகின்றது என்பதை இனி நோக்குவோம்.

அன்னை கூறிய முக்கியமான கருத்து ஒன்றினை முதலில் நினைவு கொள்ள வேண்டும். “இப்பொழுது மனிதன் பொய் கூறுவது போல உலக வரலாற்றிலேயே இந்த அளவிற்கு வேறு எப்பொழுதும் அவன் பொய் கூறியது இல்லை” என்கிறார் அன்னை. இன்றைய சூழ்நிலையில் ஒருவன் நல்ல முறையில் குடும்பம் நடத்த வேண்டுமானால், பல பொய்களைக் கட்டாயமாகப் பேச வேண்டி இருக்கின்றது. பொய் சொல்ல விரும்பாதவர்கள், பல சிக்கல்களுக்கு இரையாகி வாழ்க்கையின் கீழ் மட்டத்திற்குத் தள்ளப்படுகின்றார்கள்.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீட்டுச் சொந்தக்காரரிடம், “நான் கொடுக்கும் வாடகைக்கு ரசீது வேண்டும்” என்று கேட்டால் அவர்களுக்கு ரசீது கிடைக்காது. அதற்குப் பதிலாக அவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டு வீட்டிலிருந்து விரட்டி அடிக்கப்படுவார்கள். “நல்ல பள்ளியில் இடம் பெறுவதற்கு முறையற்ற வகையில் பணம் கொடுப்பது இல்லை” என்று பிடிவாதம் காட்டுகின்றவர்களுடைய குழந்தைகளுக்கு ஏதோ ஒரு சராசரிப் பள்ளியில்தான் இடம் கிடைக்கும். தொகையைக் கொடுக்கத் தயங்காதவர்களுடைய குழந்தைகள்தாம் சிறந்த பள்ளிகளில் சேர்ந்து தரமான கல்வியைப் பெறுகின்றனர். நேர்மையைக் கடைப்பிடிக்கும்பொழுது ஏற்படும் எதிர் மறையான விளைவுகளை, இது போல அடுக்கிக் கொண்டே போகலாம். பொய் பேச விரும்பாவிட்டால் நல்ல உத்தியோகம் கிடைக்காது; நல்ல தொழிலைத் தொடங்க முடியாது. சுருங்கக் கூறினால், நல்லது எதையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

இதிலிருந்து, “இப்பொழுது மனிதன் பொய் கூறுவது போல, உலக வரலாற்றிலேயே இந்த அளவிற்கு வேறு எப்பொழுதும் அவன் பொய் கூறியது இல்லை” என்ற அன்னையின் கூற்று எவ்வளவு உண்மை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அன்னையை ஏற்றுக் கொண்டவர்கள், ‘பொய் கூறித்தான் நல்லவற்றைப் பெற வேண்டும்’ என்பதில்லை. நம் மனத்தில் ‘பொய் சொல்லக் கூடாது, தவறு செய்யக் கூடாது’ என்ற எண்ணம் உண்மையாகவும், உறுதியாகவும் இருக்குமேயானால், நமக்குப் பொய் சொல்ல வேண்டிய சந்தர்ப்பமே நேராது. மேலும் நமக்குத் தேவையான நல்ல கல்வி, நல்ல வீடு, நல்ல உத்தியோகம், நல்ல சூழ்நிலை போன்றவை அபரிமிதமாகக் கிடைக்கும். “உன் மனத்தில், ‘பொய் சொல்லக் கூடாது; தவறு செய்யக் கூடாது’ என்ற எண்ணம் இருந்தால், பொய் சொல்லக்கூடிய சந்தர்ப்பத்தையே நான் உனக்குக் கொடுக்க மாட்டேன்” என்று கூறுகின்றார் அன்னை. மேலும் கூறுவார்: “பொய்யையும், முறையற்ற வகையில் வரும் வருவாயையும் நம்பி நடத்தும் வாழ்க்கையைவிட, உண்மையையும் நேர்மையையும் நம்பி நடத்தும் வாழ்க்கை, பன்மடங்கு வளமாக இருக்கும்”.

‘ஓரளவு நேர்மையை விட்டுக்கொடுத்தாலன்றி சௌகரியமான வாழ்க்கையைக் காண்பது என்பது சாத்தியமே இல்லை’ என்று நம்புகின்ற சாதாரண மக்களுக்கு, அன்னையின் கூற்று நம்ப முடியாததாக இருக்கலாம். உதாரணமாக, “தவறு செய்தாலன்றி யாரும் செல்வராக முடியாது” என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றார்கள். இந்தப் பின்னணியில் “அன்னையின் கூற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது?” என்பதைச் சிந்திப்போம்.

“உண்மை பொய்யைவிடப் பன்மடங்கு வலிமை பெற்றது. ஆகையால் உண்மையைக் கடைப்பிடிக்கும்பொழுது மிகப் பெரிய அளவில் சிறந்த பலன்களைப் பெற முடியும்” என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உண்மையைக் கடைப்பிடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அன்று. அதற்கு மரணத்தையும் பொருட்படுத்தாத மனவலிமை வேண்டும். அத்தகைய மன வலிமையும், தியாக நோக்கும் ஓர் இலட்சிய வீரனுக்கே இருக்க முடியும். இந்த இடத்தில், ‘ஒரு சாதாரண மனிதனால் உண்மையை உறுதியோடு பின்பற்ற இயலாதா?’ என்ற ஐயப்பாடு எழுகின்றது.

அன்னையை ஏற்றுக் கொண்டபிறகு, வாழ்க்கையில் சாதாரணமாக ஏற்படக் கூடிய சிக்கல்களை அடியோடு மாற்றி அமைத்துவிடுகின்றார் அன்னை. அவர் தம் அன்பர்களிடம் படிந்துள்ள பொய்யை விலக்கி, கொஞ்சம் கொஞ்சமாக உண்மையைக் கடைப்பிடிக்கும் மனவலிமையைத் தம் அன்பர்களுக்குக் கொடுத்துவிடுகின்றார். உதாரணமாக, வீடு தேவைப்படும் அன்பருக்கு, அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் வீடு ஒன்றைக் கொடுத்து, ரசீது கேட்க வேண்டிய அவசியத்தை இல்லாமல் செய்துவிடுகின்றார்.

இங்கு ஓர் அன்பரின் அனுபவத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அவர் ஒரு தொழிலதிபர். அரசாங்கத் துறைகளில் ஆக வேண்டிய காரியங்களை, பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து மிகச் சுலபமாக முடித்துவிடுவார்.

அந்த வழக்கம் அவருக்கு ஒரு வாழ்க்கை முறையாகவே அமைந்திருந்தது. அவர் அன்னையை ஏற்றுக் கொண்டபிறகு, புதிய தொழில் ஒன்றைத் தொடங்கி, அதற்காக அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடன் கேட்டிருந்தார். அவர் கேட்டிருந்த தொகை ஆறு கோடி ரூபாயாகும். ‘அது சம்பந்தமான காரியங்கள் அனைத்தையும் தம் வழக்கத்திற்கு மாறாக நேர்மையான வழியில்தான் செய்ய வேண்டும்’ என்ற உறுதியோடு அவர் செயல்பட்டு வந்தார். முடிவில் கடன் தொகை உரிய காலத்தில் கிடைக்க ஏற்பாடாகி, அந்தத் தொகையும் எந்த விதச் சிக்கலும் இல்லாமல் அவர் கைக்குக் கிடைத்துவிட்டது. அந்தத் தொழிலும் அகடவிகட சாமர்த்தியம் எதுவும் இல்லாமல், முறையாக வளரத் தொடங்கியது. உடன் இருந்தவர்களும், அவரை நன்கு அறிந்தவர்களும் அதைப் பார்த்து வியந்தனர்.

அவர் ஆரம்பித்த தொழில் நாட்டு முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஒன்று. அவருக்குக் கடன் கொடுத்த வங்கி, அவர் அந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னால், பலரை அணுகி அத்தொழிலை ஆரம்பிக்குமாறு தூண்டியும்கூட, அவர்களில் யாரும் செவி சாய்க்கவே முன்வரவில்லை. அந்த நிலையில்தான் அந்த அன்னையின் அன்பர் அந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு அந்த வங்கியின் உதவியை நாடினார். அவரைக் கண்டதும் பழம் நழுவி பாலில் விழுந்தது போலாகிவிட்டது வங்கியில் உள்ளவர்களுக்கு. ஆகவே, வங்கி தீவிரமாகச் செயல்பட்டு அவருக்குத் தேவைப்பட்ட தொகையை மறுமொழி இல்லாமல் வழங்கிவிட்டது. இதிலிருந்து அந்த அன்பருக்குத் தேவையான ஒரு சூழ்நிலையை அன்னை எத்தனை சிறப்பாக உருவாக்கிக் கொடுத்துவிட்டார் என்பதை உணரலாம்.

அன்பர்கள் தங்களுடைய வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளத் தேவையானவை: நேர்மையும், உண்மையும். இவற்றை முழு மனத்தோடு கடைப்பிடித்து ஆர்வத்தோடு செயல்பட்டு வந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் வளங்கள் குவியும்.

அன்னையை ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுவது புதிய அத்தியாயம் இல்லை; ஒரு புதிய சகாப்தம் ஆகும். அதாவது, நாம் எடுத்த பிறவியில் இன்னொரு புதிய பிறவி கிடைக்கின்றது. அதற்குத் தக்கபடி புதிய எண்ணங்கள், புதிய பார்வைகள், புதிய மாற்றங்கள், புதிய ஏற்றங்கள் எல்லாம் ஏற்படுகின்றன.

அன்னையின் அன்பர்களை நான்கு வகையினராகப் பிரிக்கலாம். அவர்களிடம் அன்னையின் அருள் செயல்படும் விதத்தை நோக்குவோம். கீழே கூறப்படும் யாவும் சாதகர்களைக் கருத்தில் கொண்டவை அல்ல; அவை அன்பர்களுக்காக மட்டுமே கூறப்படுபவை.

முதல் வகையைச் சேர்ந்தவர்கள், அறிவில் சிறந்தவர்கள். அவர்களுக்குத் தியானம் இயல்பாகவும், சுலபமாகவும் அமையும். அவர்கள் தியானத்தை மேற்கொண்டால் அறிவு தெளிவு அடையும். அந்தத் தெளிவால் அவர்களுடைய வாழ்க்கை ஒளி மயமாக அமையும். பொய், புரட்டுப் போன்றவை அவர்களிடமிருந்து விலகும். சில ஆண்டுகளுக்குப்பிறகு, “என் வாழ்க்கையில் இம்மாதிரியான நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லும் அளவுக்கு, அவர்களுடைய வாழ்க்கை படிப்படியாக உயரும்.

இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள், உணர்ச்சியை மையமாகக் கொண்டவர்கள். அவர்களுக்கு பக்தி இயல்பாக அமையும். அவர்கள் தியானத்தை மிக எளிதில் பயிற்சி செய்வார்கள். அந்தத் தியானம் பக்தி பூர்வமாக அமையும். ஆனால், ஞான பூர்வமாக அமையாது. நெஞ்சிலிருந்து செய்யும் தியானம் அவர்களுக்கு மிகவும் பொருந்தும். அன்னையின் சத்தியப் பேரொளி, உணர்ச்சிகளின் மூலமாக அவர்களின் இதயத்தில் புகுந்து செயல்படுகின்றது. அவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்து முன்னேறும். அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் முக்கிய அம்சங்களாக அமையும். மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள், செயல் திறம் படைத்தவர்கள். அவர்களுக்கு ஞானம், பக்தி, தியானம் போன்றவை இயல்பாக அமைவதில்லை. என்றாலும் அவர்கள் எதையும் செம்மையாகச் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். எனவே, தம் செயலை “அன்னைக்கு அர்ப்பணம் செய்தல்” என்பது அவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. காலக் கட்டத்தில் அவர்கள் எதனையும் தங்கள் திருப்திக்காகச் செய்யாமல் அன்னையின் சேவையாகச் செய்யும் நிலையை அடைவார்கள். அவர்களுடைய வாழ்க்கை விரிந்து பரந்து ஒளி மயமான சிறப்பால் நிரம்பி நிற்கும். அவர்கள் புதிய நிறுவனங்களை உருவாக்குவார்கள். விருதுகளைப் பெறுவார்கள். அவர்களுடைய சேவை சிறு அளவில் தோன்றி, பெரிய அளவில் வளர்ந்து நாடு முழுதும் பரவும். எல்லாக் கட்டங்களிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

நான்காவது வகையைச் சேர்ந்தவர்கள், மேற்கூறிய மூன்று பிரிவுகளிலும் அடங்காதவர்கள். “நான் சாதாரண மனிதன்; குடும்பத்தையும், உத்தியோகத்தையும் தவிர, வேறு எதையும் அறியாதவன். என் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. நீங்கள் சொல்வது மேல் நிலை மனிதர்களைப் பற்றி. அது எனக்கு ஒத்து வாராது” என்று கூறக் கூடியவர்கள் அவர்கள். ‘அப்படிப்பட்டவர்கள் அன்னையை ஏற்றுக் கொண்டபிறகு சிறப்பு மிக்கவர்களாக மாறிவிடுவார்கள்’ என்பது அனுபவத்தின் மூலம் தெளிவான உண்மை. அன்னையை ஏற்றுக் கொண்ட பிறகும்கூட அவர்கள் வழக்கம் போலவே செயல்படலாம். ஆனால், ஒரு மாறுதலுடன் அவர்கள் எந்த ஒரு செயலையும் அன்னையை நினைத்துத் தொடங்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், அதை ‘நினைவே வழிபாடு’ எனலாம். அவர்கள் அவ்வாறு தொடர்ந்து அன்னையை ஒவ்வொரு செயலையும் தொடங்குவதற்கு முன்னால் நினைவு கூர்வதால், அன்னை அவர்களுடைய எண்ணங்களையும், செயல்களையும், அவை பற்றிய சூழ்நிலைகளையும், கொஞ்சம் கொஞ்சமாக இருளின் பிடியிலிருந்து மீட்டு, ஒளியின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துவிடுகின்றார். அதன் பலனாக, பிரச்சினைகள் தாமாக விலகி, வாய்ப்புகள் நிறைந்து, அவர்களுடைய வாழ்க்கை அடுத்த கட்டங்களை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கின்றது.

இந்தக் கடைசி வகையினரை நான்கு பிரிவினராக வகைப்படுத்தலாம். அவர்கள் யார், யார்?

 1. பிரச்சினை நிறைந்தவர்கள்;
 2. பிரச்சினை இல்லாதவர்கள்;
 3. ஆழ்ந்த உணர்ச்சி உள்ளவர்கள்;
 4. சிறந்த உழைப்பாளிகள். 

அவர்களில் பிரச்சினை நிறைந்தவர்களைப் பற்றிச் சிந்திப்போம். ‘மருத்துவத்திற்குக் கட்டுப்படாத வியாதி, பெற்றோருக்குக் கட்டுப்படாத பிள்ளைகள், வயது கடந்த நிலையிலும் திருமணம் ஆகாத பெண்கள், பல ஆண்டுகளுக்குமுன் வீட்டைவிட்டு ஓடி விட்டவர்களுடைய நிர்க்கதியாக நிற்கும் குடும்பம், வருடக் கணக்காகத் திரும்பி வாராத பணம், தொலைந்து போன நகைகள்’ என அவர்கள் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள். வேறு சிலருடைய வாழ்க்கையில் வேறு விதமான பிரச்சினைகள் இருக்கலாம். அத்தகையோரின் பிரச்சினைகள் எதனாலும் தீர்க்க முடியாத நிரந்தரப் பிரச்சினைகளாக இருக்கும்.

அவர்கள் அன்னையை ஏற்றுக் கொண்டு, ‘பிரச்சினை தீர வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டால், பாறையைப் போல அடைத்துக் கொண்டு நிற்கும் பிரச்சினை பனி போல் நீங்கும்.

பிரச்சினை நிறைந்தவர்களின் பிரிவில் ஓர் உட்பிரிவும் உண்டு. ‘பிரச்சினை’ என்பது பொதுவாகத் தானாக ஏற்படுவதுதான் வழக்கம். அதற்கு மாறாக, சிலர் பிரச்சினையைத் தாமே தேடிக் கொள்வதும் உண்டு. உதாரணமாக, வசதி மிக்க ஒருவர் ஊரிலேயே நாணயம் கெட்ட ஒருவருக்கு, ‘கடன் கொடுக்க வேண்டாம்’ என்று உறவினர்களும், நண்பர்களும் கூறியதைப் புறக்கணித்துவிட்டுக் கடன் கொடுக்கின்றார். பிறகு கொடுத்த பணம் திரும்பி வாராத நிலையில் தம்மைத் தாமே நொந்து கொள்கின்றார் அவர். தமக்குக் கணிதம் வாராது என்று தெரிந்தும்கூட, பொறியியல் கல்லூரியில் சேர்ந்து ஒவ்வொரு வருடமும் தேர்வில் தவறித் திண்டாடுகின்றார்கள் சிலர். 100 ஏக்கருக்குமேல் சொத்துள்ள செல்வர் ஒருவர், எம்.ஏ. படித்த தம் அழகிய பெண்ணுக்கு 35 வயதுவரை திருமண முயற்சி எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, காலம் கடந்த நிலையில், ‘என்ன செய்வது?’ என்று தெரியாமல் கவலையில் மூழ்குகின்றார்.

மேற்கூறியவர்கள் தவறான நோக்காலும், பிடிவாதத்தாலும் வேண்டுமென்றே பிரச்சினையை உற்பத்தி செய்பவர்கள். அவர்களுடைய பிரச்சினை உடனே தீர வேண்டுமானால், அவர்கள் தமது குறைகளை உணர்ந்து, அவற்றை நீக்கிக் கொள்ள முன்வந்து புதுக்கிய மனத்துடன் அன்னையைப் பிரார்த்தனை செய்தால், பிரச்சினை உடனே தீரும். பொதுவாக, தன்னை மாற்றிக் கொள்ள முன்வருபவர்கள் மிகவும் குறைவு. மன மாற்றமின்றிக்கூட அன்னையிடம் செய்யும் பிரார்த்தனை பலன் அளிக்கும். ஆனால், உடனே பலன் கிடைக்காது. நிதானமாக, காலப் போக்கில் பலன் கிடைக்கும்.

வாழ்வில் பிரச்சினைகள் நிறைந்த அவர்களுக்கு, ‘வீடு கட்ட வேண்டும்’, ‘பெரிய உத்தியோகத்திற்குப் போக வேண்டும்’ என்பன போன்ற ஏராளமான எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அவர்கள் அன்னையை ஏற்றுக் கொண்ட ஒரு வார காலத்திற்குள் அவை ஆச்சரியப்படும் வகையில் திடீரென்று பூர்த்தியாகிவிடும். இரண்டாவது பிரிவில் குறிப்பிட்டபடி குறைகள் இருக்குமானால், அவற்றை விலக்கியவுடன் அபிலாஷைகள் பூர்த்தியாகிவிடும். குறைகளை நீக்கிக் கொள்ளாவிட்டாலும்கூட அன்னையை ஏற்றுக் கொண்ட காரணத்தால், அவை நிதானமாகப் பூர்த்தியாகும்.

பிரச்சினை இல்லாதவர்கள்: அவர்கள் குண நலனும், செயல் திறமும் படைத்தவர்கள்; பெரிய எதிர்பார்ப்புகளை வாழ்க்கையில் வைத்துக் கொள்ளாமல் அமைதியாக வாழ்பவர்கள். அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏதும் எழுவதே இல்லை. அவர்கள் முழு மனத்துடன் அன்னையைத் தம் தெய்வமாக ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் வாழ்வில் ‘அற்புதம்’ என்று கருதும்படியாகப் பல அரிய நிகழ்ச்சிகள், அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். அவர்கள் அன்னையை வழிபடு தெய்வமாக ஏற்றுக் கொண்ட ஓர் ஆண்டுக்குள்ளேயே தம் செல்வம், செல்வாக்கு, தொழில், பதவி முதலியவற்றில் இருமடங்கு முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

கீழ்க்கண்ட சில உதாரணங்கள் இந்தக் கூற்றுக்குச் சான்றுகளாக அமைகின்றன.

பாதிரிமார்களையே தலைமை ஆசிரியராகப் போடும் நூறாண்டு காலப் பழக்கமுள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில், திறமைகள் நிறைந்த ஒருவர் ஆசிரியராக இருந்தார். எத்தனை திறமை உள்ளவராக இருந்த போதிலும்கூட அவர் ஒரு பாதிரியாராக இல்லாத காரணத்தால், அவர் பணி செய்த பள்ளியில் எந்தக் காலத்திலும் தலைமை ஆசிரியராக உயரவே முடியாது. தலைமை ஆசிரியராகக்கூட உயர முடியாத அவர், வாழ்க்கையில் எப்படித்தான் உயரப் போகின்றார்? எதிர் காலமே இருண்டுவிட்டதைப் போன்ற மனநிலையில் அவர் அன்னையை நாடினார். எட்டடிகூடத் தாண்டமுடியாத நிலையில் இருந்த அவர் எண்பதடியைத் தாண்டிவிட்டார்! ஆம்; அவர் அமெரிக்காவில் பட்டம் பெற்று ஒரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உயர்ந்துவிட்டார். சில அரசுத் துறைகளில் குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினால், தலைமைக் குமாஸ்தாவாக வேண்டுமானால் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறலாம். அதிகாரியாக உயர வேண்டுமானால் துறை சம்பந்தமான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், அன்னையை ஏற்றுக் கொண்ட குமாஸ்தா அன்பர் ஒருவர், அத்தகைய துறை சம்பந்தமான கல்வித் தகுதி எதுவும் இல்லாமலே அதிகாரியாக உயர்ந்துவிட்டார். அது எப்படி? ‘குமாஸ்தாவாகப் பணியைத் தொடங்கிய ஒருவர், திறமையின் காரணமாக அதிகாரியாக உயரலாம்’ என்ற புதுச் சட்டம் ஒன்று நடைமுறைக்கு வந்ததால், அந்த அன்பர் உத்தியோகத்தின் உச்சிக்கு உயர்ந்தார். அவருக்காகவே அந்தச் சட்டம் வந்ததைப் போல அமைந்துவிட்டது சந்தர்ப்பம்.

அரசியல் தொண்டராக வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவருக்குப் பெரிய ஆசைகள் எல்லாம் இல்லை. தாம் செல்வாக்குள்ள ஒரு தொண்டராக உயர்ந்தாலே போதும் என்றும், ‘அதிகம் போனால் ஒரு முனிசிபல் கவுன்சிலர் பதவி கிடைத்தால் பெரிய அதிர்ஷ்டம்’ என்றும் சிறிய ஆசைகளில் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்த அவர், அன்னையை ஏற்றுக் கொண்டபிறகு, எம்.பி. ஆகவும் உயர்ந்து புகழ் பெற்றார்.

தெருவில் தலைச் சுமையாகப் பொருள் விற்றுக் கொண்டு இருந்த ஒருவர், அன்னையின் அன்பராக மாறியபிறகு மொத்த வியாபாரியாக உயர்ந்தார்.

‘எப்படியாவது திருமணம் நடந்தால் போதும். குமாஸ்தா மாப்பிள்ளை கிடைத்தாலே பெரிய யோகம்’ என்று ஏக்கப் பெரு மூச்சுவிட்டுக் கொண்டு இருந்த பல பெண்கள், அன்னையை நாடி வந்தபிறகு கனவு காணக்கூட இயலாத அளவுக்கு உயர் நிலையில் உள்ள மணமகனைக் கைப்பிடித்து மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்க்கையைப் பெற்று இருக்கின்றனர்.

இனி ஆழ்ந்த உணர்ச்சி உள்ளவர்களைப் பார்க்கலாம். அவர்கள் அமைதியாகச் செயல்படுவார்கள். குடும்பத்தினரிடம் அவர்கள் ஆழ்ந்த அன்பைச் செலுத்துவார்கள். நண்பர்களிடம் உணர்வு பூர்வமாக நட்பாடுவார்கள். அவர்கள் உணர்ச்சியை முன்நிறுத்தியே எதையும் சிந்திப்பார்கள்; செயலாற்றுவார்கள்.

ஆழமான சிந்தனை அமைத்துத் தரும் பாட்டையில் அவர்களின் வாழ்க்கை நிதானமாகச் சென்று கொண்டு இருக்கும். அவர்கள் அன்னையை நாடினால் அவர்களின் ஆழமான உணர்வு உப்பாகக் கரைந்து புதுவெள்ளமாகப் பெருக்கு எடுக்கும். அந்தக் கணத்திலேயே அவர்கள் அன்னையை முழுதுமாக ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். அவர்களுக்குத் தியானம், சடங்கு முறைகள் என்பன எல்லாம் ஒத்து வாரா. உணர்வு பூர்வமாக அன்னையை ஏற்றுக் கொண்டு, நிரந்தரமாக நெஞ்சில் வைத்து வழிபாடு செய்யக் கூடிய அவர்கள் சிறப்பாகக் குடும்பத்தையும், தொழிலையும் நடத்துவார்கள். அவர்களுக்கு அன்னையின் நினைவு பின்னணியாகத்தான் இருக்குமே தவிர, முன்னணியில் இருக்காது. ஆனால், அன்னையிடம் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகும்.

உதாரணமாக, அன்பர் ஒருவர், 1972-இல் அன்னையின் பக்தரானார். அப்பொழுதைய அவர் வருமானம் ரூபாய் ஆயிரம். அவர் அன்னையை ஏற்றுக் கொண்டபிறகு பத்தே வருடங்களில், அதாவது 1982-இல் பெரிய கோடீஸ்வரராகிவிட்டார்.

மற்றோர் அன்னையின் பக்தர், 1940-இல் பிரைவேட்டாகப் படித்து எம்.ஏ. பட்டம் பெற்று கல்லூரி ஆசிரியராக வேண்டும் என விரும்பினார். அவர் விரும்பிய விதமே எல்லாம் நடந்தன. ஆனால், அவர் எதிர்பாராத ஒன்றும் நிகழ்ந்தது. அதாவது, ‘கல்லூரி ஆசிரியரானால் போதும்’ என்று நினைத்தவருக்கு, பத்தே ஆண்டுகளில் துணை வேந்தர் பதவி மட்டுமல்லாது, அதைவிட உயர் பதவிகள் பலவும் கிடைத்தன. அந்தக் காலத்தில் சர் பட்டம் பெற்றவர் மட்டுமே துணைவேந்தர் பதவியை எட்ட முடியும். ஆனால், அந்த அன்பர் சர் பட்டம் பெற்றவர் இல்லை. அன்னை அளப்பரிய கருணை நிறைந்தவர். எதிர்பார்ப்பதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான நன்மைகளைக் கொட்டி குவிக்கக் கூடியது அன்னையின் அருள்.

ஆழ்ந்த உணர்ச்சி நிறைந்த அன்பர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டு இருக்கும் பணியில் அன்னையின் விதி முறைகளைக் கடைப்பிடித்தால், அவர்கள் எந்த மட்டத்தில் இருந்தாலும் அவர்களுடைய நிறுவனத்தில் உச்சிப் பதவிக்கு உயர்ந்துவிடுவார்கள். அதற்கும் ஓர் உதாரணம் இருக்கின்றது. ஓர் அகில இந்திய அரசுச் சார்பு நிறுவனத்தில் ‘ஆபீஸர் கிரேடு’ என்பது 6 நிலைகளில் இருந்தது. அந்நிலைகளுக்குக் கீழே குமாஸ்தா வேலை. ஆபீஸருக்கு மேலே ‘எக்ஸிக்யூடிவ் கிரேடுகள்’. அந்த கிரேடுகளின் உச்சியில் சேர்மன் பதவி. சேர்மன் பதவிக்கு மட்டும் மத்திய அரசாங்கத்திலிருந்து புகழ் வாய்ந்த அதிகாரிகளை நியமிப்பது வழக்கம். ஆக, ‘அந்த நிறுவனத்தில் பணியாற்றும் யாரும் சேர்மன் பதவியை எட்ட முடியாது’ என்பது நிர்வாகத்தில் உள்ள நிலை. ஒருவர் அந்த நிறுவனத்தில் உள்ள 6 கிரேடுகளில் கடைசி கிரேடு அதிகாரியாக வந்தபொழுது அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டுப் பக்தரானார். பக்தரானது மட்டுமல்லாது, அவர் அன்னையின் விதி முறைகளையும், நெறிகளையும் தம் வாழ்விலும், பணியிலும் கடைப்பிடித்தார். அவர் சில ஆண்டுகளுக்குள்ளேயே படிப்படியாக உயர்ந்து, அந்த நிறுவனத்து அதிகாரிகள் யாரும் பெற்றிராத, பெற முடியாத சேர்மன் பதவியை எட்டி, நீண்ட காலம் அந்தப் பதவியை வகித்து, தனக்கும், நிறுவனத்துக்கும் பெருமை சேர்த்தார்.

இனி, ‘சிறந்த உழைப்பாளிகள்’ என்ற பிரிவினரை நோக்குவோம். அவர்களில் பெரும்பாலோர் தமக்காகவும், தம் குடும்பத்திற்காகவும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். சேலத்திலிருந்து எனக்குக் கடிதம் எழுதி இருந்த ஓர் அன்பர், வயதில் இளைஞர்; வியாபாரி. அதிகாலையில் நாலரை மணிக்கு எழுந்து சரக்குக் கொள்முதல் செய்யக் கிளம்பிப் போனால், மனிதருக்கு மூச்சுவிடக்கூட நேரம் இருக்காது. இரவு 10 மணிக்குக் கடையைக் கட்டும் வரையில் பம்பரமாகச் சுழலும் அவர், அதற்குப் பிறகுதான் கணக்கு எழுத உட்காருவார். 11.30 மணிக்குக் கணக்கை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி, ஆறி உலர்ந்த உணவை உட்கொண்டுவிட்டுக் கண் அயர்ந்தால், அதிகாலையில் நாலரை மணிக்கு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து சரக்குக் கொள்முதல் செய்ய ஓட வேண்டும்.

அவரைப் போல வாழ்க்கையில் முன்னேறக் கடுமையாக உழைப்பவர் பலர். இந்தப் பகுதி அவர்களைக் குறிக்கும்.

‘கடுமையாக உழைத்தும் கை நிறைந்த பலன் கிடைக்க வில்லையே!’ என்று சோர்வுப் பெரு மூச்சுவிடுபவர்கள் அன்னையிடம் வந்தால், தங்கள் உழைப்பெல்லாம் கொம்புக் கனியாக மாறுவதையும், பெரு மூச்செல்லாம் பெரிய வெற்றிகளாகக் கிடைப்பதையும் நாட்கணக்கிலேயே சந்திக்கலாம். சாதாரணக் கடை வியாபாரி அன்னையின் பக்தராக மாறுவாரேயானால், ஊரில் உள்ள கடைகளில் அவர் கடையே முதன்மையானதாக வளர்ந்து, செல்வாக்கையும், செல்வத்தையும் குவிக்கும். ஒரு மாணவன் அன்னையிடம் வந்தால், அவனே வகுப்பில் முதல் மாணவனாகப் பிரகாசிப்பான். ஒரு விவசாயி அன்னையை ஏற்றுக் கொண்டால், அதற்குப்பிறகு அவருடைய ஊரில் அதிகப் பட்ச மகசூல் எடுக்கும் விவசாயியாக அவர்தாம் இருப்பார். அன்னையிடம் தம்மை ஒப்புக் கொடுத்த ஒரு விஞ்ஞானி, தம்முடைய துறையில் வியத்தகு சாதனைகளைப் புரிந்து ஏராளமான பட்டங்களையும், விருதுகளையும் பெறுவார்.

மேற்கூறியவர்களுக்கு விதி விலக்காகவுள்ள வேறு சிலரைப் பற்றியும் சிறிது சிந்திப்போம்.

“நான் நீண்ட நாட்களாக அன்னையை வணங்குகின்றேன். என் வாழ்க்கையில் பல நல்ல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. நான் உண்மையை உபாசிப்பவன். ‘வஞ்சகம் இல்லாமல் உழைப்பவன்’ என்ற நல்ல பெயரை நான் எடுத்து இருக்கின்றேன். ‘இதுவரை கட்டுரையில் வந்த செய்திகள் எல்லாம் பலரின் வாழ்வில் உண்மையாக நிகழ்ந்தவை’ என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்கின்றேன். ஆனால், என் வாழ்க்கையில் இதுவரை அந்த வியக்கத்தக்க பெரு மாறுதல்கள் ஏதும் ஏற்படவில்லை. இது ஏன் என எனக்குப் புரியவில்லை” என்று, சிலர் எப்பொழுதாவது கூறுகின்றார்கள்.

அவர்கள் கூற்றிலும் உண்மை இருக்கின்றது. குறைபடும் அந்த அன்பர்களின் வாழ்வில் பாதகமான சில அம்சங்கள் இருக்கும். அவை அன்னையின் அருள் செயல்படுவதைத் தடை செய்யும். எனவேதான் அவர்களுக்குக் கிடைத்து இருக்கவேண்டிய பெரும்பலன்கள் கிடைக்காமலே போய்விடுகின்றன. பாதகமான அம்சங்களை உணர்ந்து அவற்றை விலக்கிக் கொள்ள முன்வந்தால், இதுவரை கிடைக்காத பெரும்பலன்கள், உடனே ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து கிடைக்க ஆரம்பிக்கும்.

பாதகமான அம்சங்களைக் குணங்களாகக் கொண்ட சிலரையும் இங்கே நாம் அடையாளம் கண்டு கொள்வோம்.

 1. இலட்சியம், நாணயம், கௌரவம், உழைப்புப் போன்ற உயர்ந்த இயல்பு படைத்த சிலர், சிறு தெய்வ வழிபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். நம் மரபில் சித்து விளையாட்டுகளைத் தூற்றுவது இல்லையாயினும் போற்றுவது இல்லை. ஆன்மிக நெறி முறைகளைப் பின்பற்றுகின்றவர்கள், சிறு தெய்வ வழிபாட்டினை ஏற்றுக் கொள்வதில்லை. வள்ளல் பெருமானார் இராமலிங்க சுவாமிகள், ‘சிறு தெய்வ வழிபாடு கூடாது’ என்று கூறுகின்றார்.

  அந்தச் சிறு தெய்வங்கள் தமது பக்தர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து, அவர்களின் ஆத்மாவைத் தம் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்கின்றன. அவை தம்மைவிட்டுப் போக பக்தர்களை அனுமதிப்பதில்லை. இறைவனின் ஒளி, சத்தியம், அருள், பேரருள் போன்றவை, அந்தச் சிறு தெய்வங்களுக்குப்பிடிக்கா. சித்து விளையாடும் சாமியார்களுக்கும் அந்தக் குணம் உண்டு. சிறு தெய்வ வழிபாடோ, சித்தாடும் சாமியார்களிடம் தொடர்போ உள்ள அன்னையின் பக்தர்களுக்கு அன்னையின் அருள் கிடைப்பது இல்லை. அந்த பக்தர்கள் எதனோடு தொடர்பு கொண்டாலும், அதனுடன் உண்மையான ஈடுபாட்டுடன் இருக்கக் கூடியவர்கள். மேலும், அவர்கள் பிறரின் புத்திமதியைச் செவி சாய்த்துக் கேட்கத் தயாராக இல்லாதவர்கள். அவர்களாகவே தமது தவற்றை உணர்ந்து அந்தப் பிடியிலிருந்து விலகும்வரை, அன்னை அருளின் முழுப் பலன் அவர்களை வந்தடையாது.

 2. அம்மாதிரியான பக்தர்கள் அநேகமாக உயர்ந்த பரம்பரையிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். நற்பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பிறரிடம் உதவியை எதிர் பார்ப்பதைக் கேவலமாகக் கருதக் கூடியவர்கள். வாழ்க்கையில் இது போற்றத்தக்க உயர்ந்த பண்பாகும். ஆனால், அவர்கள் அந்தக் கொள்கையை எங்கே கடைப்பிடிக்க வேண்டும் என்பது புரியாமல் தெய்வத்திடமும் செயல்படுத்துவார்கள். மனிதர் களுக்குரிய சட்டம், தெய்வத்திற்கும் உரிய சட்டம் ஆகாது அல்லவா?

  ‘தெய்வத்திடம் நான் எதையும் கேட்க மாட்டேன்’ என்று கூறிய சிலரை நான் பார்த்திருக்கின்றேன். அவர்களுக்கு அன்னை வழங்கும் அருள், ஆத்ம விளக்கத்திற்குப் பயன்படுவதுடன் நின்றுவிடுகின்றது. அன்னையின் அருள் அதற்கும் மேலே சென்று அவர்களுடைய வாழ்க்கையில் வளம் பெற உதவுவது இல்லை. ஏன்?

  ‘ஆத்ம சமர்ப்பணம்’ என்பது முழுமையாக அமையவேண்டும். ‘தெய்வத்திடம் நான் எதையும் கேட்க மாட்டேன்’ என்பது, தனது சொந்தத் திறமையின் காரணமாக எழுந்த அகம்பாவமாகும். இந்த அகம்பாவம் நாம் தெய்வத்தைச் சென்றடையும் வழியில் முட்டுக்கட்டையாக நின்றுவிடுகின்றது. ஆகவே, இந்த முட்டுக்கட்டையை முதலில் நீக்கிவிட வேண்டும். ‘மிச்ச சொச்சம்’ என்று எதையும் நம்மிடம் வைத்துக் கொள்ளாமல், பரிபூரண சரணாகதி தத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் தெய்வத்திடம் நமக்குள்ள நம்பிக்கையும், பிடிப்பும் அதிகமாகின்றன. இந்தப் பிடிக்குள் தெய்வம் அடங்கும். ‘அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே’ என்பது மூதுரை.

  ‘கேட்பதும், கேட்டுப் பெறுவதும் சிறந்த தெய்வ வழிபாடு’ என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதில் பிழை ஒன்றும் இல்லை. தெய்வத்திடம் நாம் ஒன்றைக் கேட்டுப் பெறும் பொழுது நாம் பெறுவது பொருள் மட்டும் அன்று; அருளுமாகும். நம் திறமையால் பொருளீட்டும்பொழுது செல்வம் பெருகும். அன்னையின் மீது பக்தி கொண்டு பொருளீட்டும்பொழுது செல்வத்தோடு சேர்ந்து அன்னையின் அருளும், ஒளியும் பெருகும். திறமையினால் மட்டுமே பொருளீட்டும்பொழுது திறமை குறையும் சமயத்தில் செல்வம் வடிந்து போகும் நிலை ஏற்படுவதுண்டு. அன்னையின் மீது பக்தி கொண்டு பொருளீட்டும் பொழுது நம் திறமை நம்மைக் காலை வாரிவிட்டாலும், அன்னையின் அருள் துணை நின்று செல்வத்தைப் பெருக்கும்.

 3. மற்றொரு வகையினரிடம் ஏதாவது ஒரு குணக் குறைபாடு இருக்கும். கோபமும் ஒரு பெரிய குணக் குறைபாடே. ஒரு கோபக்காரப் பெரியவருக்கு வயது 80. அவர் தமக்குச் சொந்தமான 27 ஏக்கர் நிலத்தை விற்க முயன்றார். அன்றைய நிலவரப்படி அந்த நிலம் எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம்வரை விலை போகலாம். ஆனால், ‘அதை 27000 ரூபாய்க்குக் குறையாமல் விற்றுவிட வேண்டும்’ என்ற அவருடைய பிடிவாதத்தால், 12 ஆண்டு காலமாக அதை விற்க முடியவில்லை. அவர் அன்னையைத் தரிசனம் செய்வதற்காக ஆசிரமத்திற்கு வந்துவிட்டுப் போனார். அதுவரை விற்காமல் கிடந்த அவருடைய நிலத்திற்கு மதிப்பு ஏற்பட்டுவிட்டது.

  ஓர் உர நிறுவனம் அவருடைய நிலத்தை ரூ.81,000க்குக் கிரயம் வாங்குவதற்கு முன்வந்தது. ஒப்பந்தம் செய்து கொள்ள இருந்த நிலையில், அவர் தம் முன்கோபத்தால் பொரிந்து தள்ள, ஒப்பந்தம் எழுதப்படாமல் விஷயம் முறிந்து போய்விட்டது. பிறகு அவர் தம் தவற்றை உணர்ந்து அன்னையின் சமாதிக்குச் சென்று, ‘என்னுடைய நிலம் அதே விலைக்கு விற்க வேண்டும்’ என்று பிரார்த்தித்துவிட்டு வீடு திரும்பினார். ஏற்கனவே ஒப்பந்தமாகும் நிலையில் கைகழுவிவிட்டுப் போன உர நிறுவனத்தின் மானேஜர், அந்தப் பெரியவரை எதிர்பார்த்து வீட்டில் காத்துக் கொண்டு இருந்தார். பழைய தொகைக்கே கிரயம் நல்லபடியாக முடிந்தது.

  இன்னொருவர், திறமைகள் பலவற்றுக்குச் சொந்தக்காரராக இருந்தார். ஆனால், அவர் பிரகாசமான வாழ்க்கைக்கு அன்னியராக இருந்தார். அவருடைய திறமைகள் இருண்டு கிடந்தன. வறுமை அவரைக் கசக்கிப் பிழிந்தது. ஒரு முறை சொந்த வேலையாக பாண்டிச்சேரிக்கு வந்த அவர், ஆசிரமத்திற்குச் சென்று அன்னையின் சமாதியைத் தரிசித்துவிட்டு ஊருக்குத் திரும்பினார். வீட்டிற்குள் கால் எடுத்து வைத்ததும் அவரை எதிர்பார்த்து நல்ல செய்தி ஒன்று காத்திருந்தது. ஒரு பெரிய செல்வர் அவரைத் தேடுவதாகக் கிடைத்த செய்திதான் அது. அவர் உடனே சென்று அந்தத் தனவந்தரைச் சந்தித்தார். தனவந்தர் அவருடைய திறமையைப் பாராட்டி, ஒரு பெருந்தொகையைக் கொடுக்க முன்வந்தார். அவருக்கு ஒரே திகைப்பு. அதோடு அவர் நிறுத்திக் கொண்டு இருந்தால் தேவலை! ஆனால், அவருடன் குடி கொண்டிருக்கும் அகம்பாவம், சந்தர்ப்பம் தெரியாமல் தலை நீட்டியது. ‘என்னுடைய திறமைக்கு இதெல்லாம் சாதாரணம்’ என்பது போலப் பேசினார். அதனால் வேதனை அடைந்த செல்வர், நீட்ட வந்த தம் உதவிக் கரத்தை நீட்டாமல் மடக்கிக் கொண்டார். அந்தத் திறமைசாலிக்குக் கிடைக்கக் காத்திருந்த பாராட்டும், பலனும் கிடைக்காமலே போய்விட்டன. அவருக்கு எஞ்சியது, தம் குணச் சிறப்பை நிலை நாட்டியது ஒன்றுதான்!

  குணத்தில் குறைபாடு இருப்பது இயற்கை. ஆனால், தன்னைத் தேடி வரும் சிறப்பை இழப்பது இயற்கை அன்று. அக்குறையுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து குறையை விலக்க முற்பட்டால் அல்லது அக்குறையை நல்ல காரியங்களில் மட்டுமாவது தலை நீட்டவிடாது தடுத்தால், விலகியுள்ள அன்னையின் அருள் விரைந்து செயல்பட்டு நன்மைகளை வாரி வழங்கும். அவ்வாறு தம் குறையை உணர்ந்து மனம் மாறிச் செயல்பட்ட அந்த 80 வயதுப் பெரியவர், தம் நிலத்தை ரூ.81,000க்கு விற்க முடிந்தது என்பதை நாம் முன்னர் பார்த்தோம்.

 4. அடுத்த வகையினர் மேற்கண்டவர்களிடமிருந்து மாறுபடுகின்றவர்கள். அவர்கள் அருவருக்கத்தக்க குணம் படைத்தவர்கள். தம் குறைபாடு தெரியாத பரிதாபத்திற்குரியவர்கள் அவர்கள். பொதுவாக, அவர்கள் அன்னையிடம் வருவதில்லை. எப்படியோ ஒரு சிலர் விதிவிலக்காக அன்னையிடம் வருவதும் உண்டு.

  ஒருவர் உயர்ந்த படிப்பும், உயர்ந்த உத்தியோகமும் உள்ளவர். அவர் யாரைச் சந்தித்தாலும் கடன் கேட்பார். அவர் நிலை கருதி அவர்கள் தட்டாமல் கடன் கொடுத்துவிடுவார்கள். தமக்குப் பழக்கமான ஒருவரையும் பாக்கி வைக்காமல் அவர் கடன் வாங்கித் தீர்த்தார். ஆனால், அவர் வாங்கிய கடனை யாருக்கும் திருப்பிக் கொடுத்ததே இல்லை. மற்றொருவருக்குக் கோள் சொல்வதே வாழ்க்கையின் குறிக்கோள். ஒருவரைப் பற்றி மற்றொருவரிடமும், ஒரு குடும்பத்தைப் பற்றி இன்னொரு குடும்பத்திலும் கோள் மூட்டுவது, அவருக்குக் கைவந்த கலை. அவருடைய கைங்கரியத்தால் சீர் குலைந்து சிதைந்து போன குடும்பங்கள் பல. இது அவருக்கு இயல்பாக அமைந்த குணம். ‘இது தவறு’ என்று புரியாமலே, கோள் சொல்லும் பழக்கத்தை சகஜமாகக் கொண்டிருந்தார் அவர். வேறொருவர் மிராசுதார். கடந்த 25 ஆண்டுகளில் ஒரு வருடம்கூடத் தம் நிலங்களில் ஒழுங்காகப் பயிரிட்டதே இல்லை. நிலத்தை தரிசு போட்டால் வருமானம் எப்படி? வாழ்க்கையை ஓட்டுவது எப்படி? அவற்றைப் பற்றி எல்லாம் அவருக்குக் கவலை இல்லை. தம் தந்தை வைத்துவிட்டுப் போன பொன் விளையும் நஞ்சை நிலங்களை ஒவ்வொன்றாக விற்று வாழ்க்கையைக் கழித்து வருகிறார் அவர். பிறிதொருவர், வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், தம் பெற்றோர்களைத் திரும்பிக்கூடப் பார்ப்பதே இல்லை.

  அத்தகைய மனிதர்கள் அன்னையிடம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்களுக்கு அன்னையின் அருள் பெரிய அளவில் கிடைப்பதும் இல்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அவர்களிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்கள், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும்.

  அவர்களில் சிலர், தம் அனுபவத்தைப் பற்றி இப்படிக் கூறியுள்ளார்கள்: “நான் அன்னையிடம் வந்தபிறகு, நிலை இல்லாத வருமானத்தால் தத்தளித்துக் கொண்டிருந்த என் வாழ்க்கை, சீராகச் சென்று கொண்டிருக்கின்றது. தவிப்பு, ஏமாற்றம் எதுவும் இல்லாது, இப்பொழுது நிலையாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு நிலையான வருமானமும் வந்து கொண்டிருக்கின்றது. எல்லாக் கோணங்களிலும் என் வாழ்க்கை உயர்ந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மற்ற அன்னை பக்தர்களின் வாழ்க்கையில் காணும் வியக்கத்தக்க பெரு மாறுதல்கள் ஏன் என் வாழ்க்கையில் ஏற்படவில்லை என்பது எனக்குப் புரியவில்லை”.

  அவர்களுடைய பக்தியும், பிரார்த்தனையும் அவர்களிடம் உள்ள குணக் கேடுகளைக் குறைப்பதில் செலவழிந்துவிடுகின்றன. ‘அன்னையின் அருளால் கரி அப்பிய அவர்களுக்கு வெள்ளை அடிக்கத்தான் முடிகின்றதே தவிர, வெளிச்சமாகப் பரவி நிற்க முடிவதில்லை’ என்பதை அவர்கள் அறிவதில்லை.

அறிந்தவர்களுக்கு அன்னையின் அருள் அரியன எல்லாம் தரும்.book | by Dr. Radut