Skip to Content

13 - பாலையிலும் பசுஞ்சோலை

அன்பர் ஒருவருடைய பெண் எம்.எஸ்ஸி.வரை படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தாள். வேலை அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடுமா? கிடைக்கவில்லை. அந்த அன்பர் அது பற்றி எனக்குக் கவலையுடன் எழுதி இருந்தார். “அன்னை இருக்க அஞ்சல் ஏன்? ‘கவலை’ என்ற சுமையை நீங்கள் ஏன் சுமந்து மூச்சுத் திணறுகிறீர்கள்? அதை அன்னையிடம் சமர்ப்பித்துவிட்டு நீங்கள் லேசாகிவிடுங்கள். உங்கள் பெண்ணுக்கு உடனே வேலை கிடைத்துவிடும்” என்று நான் அவருக்குப் பதில் அனுப்பினேன்.

அதற்கு அவர் ஒரு பதில் எழுதியிருந்தார். அதில், “உங்கள் அறிவுரை எனக்குக் கைமேல் பலன் அளித்துவிட்டது. என்னுடைய கவலையை அன்னையிடம் கோரிக்கையாகச் சமர்ப்பித்துவிட்டு நான் சுமையற்று இருந்தேன். உடனே என் பெண்ணுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைத்துவிட்டது. எக்கணம் நம்மை ஒப்படைக்கிறோமோ, அக்கணமே ஆட்கொண்டு அருள் மழை பொழியும் அன்னையின் மாட்சிதான் என்னே!” என்று உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார் அவர்.

அந்த அன்பர் அன்னையின் உண்மையான பக்தர். அரசில் என்.ஜி.ஓ.வாகப் பணி புரிந்து வந்தார். மிகவும் நேர்மையானவர். பணியை, ‘கடனே’ என்று செய்யத் தெரியாதவர்; கண்ணைப் போலக் கருதுபவர். உண்மையான உழைப்புக்கு அவர் ஓர் உதாரணம். பழகுவதற்கு இனியவர். மற்றவர்களுடைய சுக துக்கங்களில் கலந்தும், கரைந்தும் போகக் கூடிய மனம் படைத்தவர். எல்லோருக்கும் அன்பர்; நண்பர்.

அவருக்கு நான்கு குழந்தைகள். எல்லாக் குழந்தைகளுமே புத்திசாலிகள். தம் வருமானத்திற்கு ஏற்ப, தம் குழந்தைகளுக்குச் சிறந்தவற்றை எல்லாம் தேடிக் கொடுக்க வேண்டும் என்ற இலட்சியம் படைத்தவர் அவர். எல்லாக் குழந்தைகளையுமே பட்டப் படிப்புக்குக் குறையாமல் படிக்க வைத்தார்.

அவருடைய மூத்த மகன் பி.யூ.ஸி.யில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மிகச் சிறப்பாகப் பரீட்சையில் தேறி இருந்தான். ‘எப்படியாவது இன்ஜினீரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்’ என்பது அந்தப் பையனின் ஆசை.

அவனுடைய ஆசையை அவன் தந்தையின் பொருளாதார நிலையால் பூர்த்தி செய்ய இயலுமா? பொறியியல் படிப்புக்கு மொத்தம் 5 ஆண்டுகள். அத்தனை நீண்ட காலத்திற்காகும் கல்லூரிச் செலவைத் தந்தையால் சரிக்கட்ட இயலுமா? இந்தச் சிக்கலான கேள்விக்கு எந்தப் பக்கம் இருந்தும் சாதகமான பதில்வர வழி இல்லை.

அரசில் பணி புரிகின்றவர்களின் பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால், எல்லோருக்கும் அன்று. ஒரு குறிப்பிட்ட சம்பளம் பெறுபவர்களின் பிள்ளைகளுக்குத்தாம் அந்தச் சலுகை. அதற்கு மேற்பட்ட சம்பளக்காரர்களின் பிள்ளைகள் அந்தச் சலுகையைப் பெற முடியாது. அந்த அன்பர் அரசாங்கம் நிர்ணயித்த தொகைக்குமேல் கொஞ்சம் கூடுதலாகச் சம்பளம் பெறுபவர். அதனால் அவருடைய பிள்ளைக்குச் சலுகை கிடையாது. அரசாங்கச் சட்டங்களே அலாதியானவை. சிலருக்குப் பரிகாரம். அதுவே பலருக்குப் படிகாரம்.

எப்படியாவது பொறியியல் கல்வியைப் பெற ஆசைப்பட்ட பிள்ளையை, எப்பாடு பட்டாவது படிக்க வைக்க முடிவு செய்தார் தந்தை.

அடுத்த பிரச்சினை, இன்ஜினீரிங் கல்லூரியில் இடத்தைத் தேடிப் பிடிப்பது. தகுதியை மட்டும் வைத்துத் தேர்வு செய்வதாக இருந்தால், அந்தப் பையனுக்கு நிச்சயம் இடம் கிடைத்துவிடும். ஆனால், ‘தகுதியைவிடச் சிபாரிசுக்கே முதன்மையான இடம்’ என்ற நிலையில் மதிப்பெண்களுக்கு மதிப்பு ஏது?

சிபாரிசுக்கு யாரைப் பிடிப்பது?

அந்த அன்பர் அரசுப் பணியில் இருந்ததால் பல பெரிய மனிதர்களைத் தெரிந்து வைத்திருந்தார். அவர்கள் உள்ளன்போடு உதவி செய்தால், பையனுக்குக் கல்லூரியில் இடம் கிடைப்பது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால், அக்கறையும், அனுதாபமும் கொண்டு யார் உதவுவார்கள்? மனத்தில் கூட்டல், கழித்தல் கணக்குகளை எல்லாம் போட்டுப் பார்த்தார். அவர் போட்ட கணக்கு உள்ளூர்ப் பிரமுகர் ஒருவரைத் தேர்ந்து எடுத்தது.

அந்தப் பிரமுகர் மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். அவரால் எதுவும் முடியும்; எல்லாம் முடியும். வெளியூருக்குச் சென்றிருந்த அவர், அன்றுதான் ஊருக்குத் திரும்பி இருந்தார். அன்பர் அளவற்ற நம்பிக்கையுடன் அவரைச் சந்திப்பதற்காகக் கிளம்பினார். அவருடைய வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தபொழுது அன்பரின் நம்பிக்கை ஆட்டம் கண்டுவிட்டது. அவரைச் சந்திப்பதற்காகப் பல பெரிய புள்ளிகள் வாசலில் காத்துக் கிடந்தார்கள். பிரமுகர் அவர்களுக்குப் பேட்டி அளித்து முடிப்பதற்கே நீண்ட நேரமாகிவிடும். அதற்குப்பிறகுதான் அந்த அன்பருக்குப் பேட்டி கிடைக்கும். ஒருவேளை பேட்டி கிடைக்காமல்கூடப் போய்விடலாம். “அப்படி ஓர் ஏமாற்றத்தைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கத்தான் வேண்டுமா? அதைவிட இப்பொழுதே புறப்பட்டுவிட்டால் பிறகு ஓர் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காதே!” என்று எண்ணினார்.

ஆனாலும், ‘இவ்வளவு தூரம் வந்துவிட்டு அவரைச் சந்திக்காமல் போவது, நாமே நம் முயற்சியை அலட்சியப்படுத்துவது போன்றதாகும். எவ்வளவு நேரமானாலும் பொறுமையாகக் காத்திருந்து பிரமுகரைப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்’ என்று தீர்மானித்தார்; காத்திருந்தார். பெரும்புள்ளிகள் எல்லாம் பிரமுகரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அவருடைய முறை வந்தது. சென்றார். பிரமுகரைச் சந்தித்து, தம் கோரிக்கையைத் தெரிவித்தார். அவரும் தன்னாலான உதவியைச் செய்வதாக வாக்களித்தார். ஆனால், அன்பருக்கு அது தேர்தல் வாக்குறுதியைப் போலத் தோன்றியதே தவிர, தேர்ந்த வாக்குறுதியாகத் தோன்றவில்லை. பெரு நம்பிக்கையோடு சென்ற அவர், முழுதுமாக நம்பிக்கையை இழந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினார்.

அதற்குப்பிறகு ஒரு நாள் அவர் என்னைச் சந்தித்தார். நடந்தவற்றை எல்லாம் சோர்வான குரலில் தெரிவித்தார்.

அது தேவையற்ற சோர்வு. அன்னையின் பக்தர்கள் நிச்சயம் சோர்வின் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடாது. கை கொடுத்து உதவ அன்னையின் அருள் காத்துக் கொண்டிருக்கும் பொழுது அதை நாடாமல், வேறு எங்கோ அலைந்து அல்லல் படுவது அறிவீனம். அன்னையிடம் வேண்டிக் கொண்டால் அவருடைய பிரச்சினை சாதகமாக மாறிவிடும்.

இவற்றை எல்லாம் நான் அவருக்குத் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் அப்போது இல்லை. பிரச்சினைகளை எதிர் நோக்கும் பொழுது பாறையாக நின்றால்தான் வெல்ல முடியும். ஆனால், அவரோ பனிக்கட்டி. எதிர் விளைவுகளைச் சந்திக்கும்போது அவர் உடைந்தும், உருகியும் போகிறார். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அவரேதான் அவரை உருக்காகச் செய்து கொள்ள வேண்டும்.

அவர் தம்முடைய குறைகளை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டு, “அன்னையிடம் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. என்ன நடக்கின்றது என்பதைப் பார்ப்போம்” என்று கூறி விடை பெற்றுக் கொண்டார்.

நதி எங்கே ஓடினாலும் இறுதியில் அது கடலில்தான் சங்கமிக்கின்றது. அதைப் போல் அந்த அன்பரும் எங்கெங்கோ அலை பாய்ந்துவிட்டு, கடைசியில் அன்னையின் அருளில் சங்கமித்துவிட்டார். அதில் எனக்கும் மகிழ்ச்சி. இனி அவர் பாதையில் படர்ந்திருக்கின்ற இருட்டு மறையும்; வெளிச்சம் தோன்றும்.

தேர்வு முடிவுகள் வெளியாயின. அவருடைய பையனுக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது! இந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்காக என்னைச் சந்தித்த அவர், “அன்னை உண்மையிலேயே உன்னதமானவர்!” என்று நாத் தழுதழுக்க நாலைந்து தடவைகள் கூறிக் கண்ணீர் சொரிந்தார்.

அன்னையின் அருள் நிரூபணமானது; சோதனைகளை நீக்கிச் சுகம் அளிக்க வல்லது. அந்த அன்பரைப் போன்று தேவைகளால் நிரப்பப்பட்ட மனிதர்கள், நிவாரணம் கிடைக்கும்பொழுதே அன்னையை உணர்கின்றார்கள். அவர் அன்னை அல்லவா? குழந்தைகளின் பசி அறிந்து பாலன்னம் படைக்கின்றார்.

அந்த அன்பர் என்னிடம் கூறிய வேறொரு நிகழ்ச்சி: அவர் ஒரு நாள் தம் சைக்கிளில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு கூட்டம் ஒரு பெண்ணைச் சுற்றி நின்று கொண்டிருந்தது. அன்பர் அந்தக் கூட்டத்தில் ஒருவராய்க் கலந்தார். அந்தப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது? விசாரித்தார். அந்தப் பெண்ணுடைய குழந்தை எங்கோ வழி தவறிப் போய்விட்டது. பெற்றவள் தேடிப் பார்க்காத தெருவே இல்லை. ஆனால், குழந்தையைத்தான் கண்டு பிடிக்க முடியவில்லை.

இனிக் குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்த நிலையில், பாசக் கதறலாய் வெடித்து, அழுகை வெள்ளத்தில் அடித்துப் போகப்பட்ட அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது, அந்த அன்பருக்கும் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. தம்முடைய உணர்வில் மட்டுமன்று; மற்றவர்களுடைய உணர்விலும் ஊடாடிக் கரைந்து போகக் கூடிய மெழுகு அவர். அந்தப் பெண் அழ அழ, அவருக்கும் அழுது கதற வேண்டும் என்ற ஓர் உந்தல் ஏற்பட்டது. அவர் தொண்டைக் குழியில் அழுகை புரண்டு கொண்டு வந்தது. அதை அடக்க வேண்டும். அப்படியானால் அழுது புலம்பும் அந்தப் பெண்ணை இனி அவர் பார்க்கக் கூடாது. என்ன செய்யலாம்?

சட்டென்று சைக்கிளைத் தள்ளிக் கொண்டு கூட்டத்திலிருந்து விலகிப் போய் ஒரு வீட்டுப் பக்கமாகத் திரும்பி நின்று கொண்டார். “அன்னையே! அந்தப் பெண்ணின் பரிதாபத்தை என்னால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. காணாமல் போன அவளுடைய குழந்தையை மீண்டும் அவளுக்குக் கொடுங்கள். அதுவும் இப்போதே கொடுங்கள். இல்லாவிட்டால் அவள் நெஞ்சு வெடித்துச் செத்துப் போய்விடுவாள். அன்னையே! அருள்க! அவளுக்குக் குழந்தையை உடனே தருக!” என்று அன்னையிடம் இறைஞ்சினார்.

அப்போது கூட்டத்துக்குள்ளிருந்து வந்த ஒரு கூச்சல், அவரைக் கலைத்தது. அது என்ன கூச்சல்? அந்தப் பெண்ணுக்கு நடக்கக் கூடாதது ஏதேனும் நடந்துவிட்டதோ? கேள்விகள் அவரை உலுக்கின. சைக்கிளை அப்படியே போட்டுவிட்டுக் கூட்டத்தை ஊடுருவிக் கொண்டு பாய்ந்தார்.

அங்கு ஓர் அதிசயம்தான் நடந்திருக்கிறது. யாரோ ஒருவர் காணாமல் போன குழந்தையைக் கண்டு பிடித்து அழைத்து வந்து அந்தப் பெண்ணிடம் சேர்ப்பித்திருக்கிறார். அதைக் கண்டு கூட்டமே மகிழ்ச்சி ஆரவாரம் செய்திருக்கிறது. அதுதான் கூச்சலாக எதிரொலித்தது, அந்த அன்பரை இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது!

அந்தத் தாய் ஆனந்த மிகுதியால் குழந்தையைக் கட்டித் தழுவி உச்சி மோந்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்து விட்டுக் கண் கலங்கி நின்ற அன்பர், “அன்னையே! உங்களுக்கு நமஸ்காரம், உங்களிடம் நான் வேண்டிக் கொண்ட அக்கணமே தாயிடம் குழந்தையைக் கொண்டு வந்து சேர்த்த உங்கள் அருளின் விரைவு எத்தனை மகத்தானது?” என்று உள்ளுருகினார்.

அந்த அன்பரைப் பற்றித் தெரிவிக்க இன்னும் சில உண்டு. சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் எனக்கு அவர் அறிமுகமானார். அதற்குப்பிறகு நண்பர் ஒருவருடைய வீட்டில் நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு. அவரைப் பற்றி என் நண்பர் மிக உயர்வாகப் பேசுவார். அப்போது, “அந்த அன்பர் தம் பணியில் உண்மையாகவும், திறமையாகவும் உழைக்கக் கூடியவர். பண்பில் சிறந்தவர். பழகுவதற்கு இனியவர்” என்றெல்லாம் புகழ்ந்து உரைப்பார் அவர்.

நடுவில் பல வருடங்கள் நானும், அன்பரும் சந்திக்க முடியாமல் போய்விட்டது. ஏனெனில், நானும் அவரும் வெவ்வேறு ஊர்களுக்குச் செல்லும்படியான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எதிர்பாராத விதமாக நாங்கள் இருவரும் வேறு ஓர் ஊரில் சந்திக்க நேரிட்டது. அப்பொழுது அவர் நடுத்தர வயதுடையவராக இருந்தார். அவருக்குப் பதவி உயர்வு கிடைத்து இருந்தது. ‘மிகவும் கடுமையாக உழைத்து மேல் அதிகாரிகளின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற வேண்டும்’ என்ற குறிக்கோளோடு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அதற்குப்பிறகு நானும் அவரும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே ஏற்பட்டன.

அவர் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் முகம் மிகவும் வாடிப் போயிருந்தது. “எனக்கு நீங்கள் உதவ முடியுமா?” என்ற கேள்வியுடன் பேச்சைத் தொடங்கினார் அவர்.

“புரியவில்லை, விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றேன் நான்.

“நியாயமாக எனக்குக் கிடைக்க வேண்டிய உத்தியோக உயர்வு கிடைப்பதில் ஏன் தடை ஏற்பட வேண்டும்?” என்று கேட்டார் அவர். திகைத்த நான், “அந்தச் சூழ்நிலையைப் பற்றிப் புரியும்படியாகக் கூறுங்கள்” என்றேன்.

“பதவி உயர்வு கொடுக்கும்முன் அதற்குத் தகுதியுள்ளவர்களின் பெயர்களைப் பட்டியல் செய்து மேல் அதிகாரிக்கு அனுப்புவார்கள். வேலை காலி இருக்கும் இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தப் பட்டியலிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்துப் பதவி உயர்வு கொடுப்பார்கள். மற்றவர்களை உயர் பதவி காலியாகும்பொழுது அப்பதவிக்கு உயர்த்துவார்கள். என்னுடைய பெயர் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. என்னுடைய பெயரையும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நான் மனுச் செய்தேன். என்னுடைய மனுவை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துவிட்டார்கள். அதனால் எனக்குப் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இப்பொழுது மட்டுமன்று; எப்பொழுதுமே இல்லாமல் போய்விடும். இது நியாயமற்றது. இதை எடுத்துச் சொல்ல, நான் இத்தனை காலமும் உழைத்த உண்மையான உழைப்பால் முடியவில்லை. உழைப்பால் பெற முடியாததைச் சிபாரிசால்தான் பெற முடியும். எனக்கு உதவக் கூடிய வகையில் உங்கள் சென்னை நண்பர்களில் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களைக் கொண்டு எனக்கு உத்தியோக உயர்வு கிடைக்குமாறு உதவுவீர்களா?” என்று கேட்டார் அவர்.

நான் அவருக்கு ஏதேனும் செய்துதானாக வேண்டும். ஆனால், அவர் கோரிய வழியில் அன்று; என் வழியில். அதற்கு அவர் என் வழியில்வரத் தயாராக இருக்க வேண்டும். ஆனால், என் வழி அவர் வழி அன்று.

அவர் அன்னையைப் பற்றியோ அல்லது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியோ அப்போது அறிந்திருக்கவில்லை. அது மட்டுமன்று. அப்போது அவர் பரம நாத்திகராக இருந்தார். அந்தக் காலத்தில் அவர் மட்டுமல்லாது, பெரும்பாலான இளைஞர்களும் நாத்திகத்தில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள். எனக்கும் ஆசிரமத்தோடு தொடர்பு ஏற்பட்டு ஒரு சில வருடங்களே ஆகியிருந்தன. ஆகவே, அவரிடம் அன்னையைப் பற்றியும் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியும் பேசுவதற்கு எனக்குத் தயக்கம். ‘அன்னையிடம் வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்’ என்று அவரிடம் கூற வேண்டும் போலத் தோன்றினாலும், ‘அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்’ என்பது எனக்குப் புரியாமல் இல்லை. அதே சமயத்தில் எனக்கு இன்னொன்றும் புரிந்தது. ‘நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் காதால் கேட்டுக் கொள்ள மறுக்க மாட்டார்’ என்பதுதான் அது.

உடனே நான் பாறையை அகழ்ந்து நீரூற்றைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆமாம்; அவரிடம் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியும், அவர் இந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதைப் பற்றியும், அவருடைய யோகத்தைப் பற்றியும், அன்னையின் பெருமைகளைப் பற்றியும் பல நிகழ்ச்சிகளை மேற்கோளாகக் காட்டி எடுத்துரைத்தேன். பின்னர், “நீங்கள் ஸ்ரீ அரவிந்தர் சமாதியைத் தரிசிக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டேன்.

அவர் பதிலளிக்கவில்லை. ஆனால், நான் கூறியதை ஏற்றுக் கொண்டதைப் போன்ற இணக்கமும், இளக்கமும் அவர் கண்களிலும், முகத்திலும் தெரிந்தன. போதுமே! கற்பாறை உடைந்துவிட்டது. இனி நீரூற்றுக் கசியலாம்; அல்லது பெருகலாம். பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதற்கு நான் தயார். அவர் தயாரா? ஒரு கேள்விக் குறியாய் என்னிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு சென்றார் அவர்.

பத்து நாட்கள் சென்றன. அவர் மீண்டும் என்னைச் சந்திக்க வந்திருந்தார். இப்போது அவர் முகம் வேக்காடாக இல்லை. பூக்காடாக இருந்தது. “டெபுடி தாசில்தாராகப் பதவி உயர்வு பெற்றவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரும் வந்திருக்கிறது. நான் அப்பதவியை ஏற்றுப் பணி செய்ய வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை!” என்று கூறி, தம் மகிழ்ச்சியையும், வியப்பையும் தெரிவித்துக் கொண்டார். “உண்மையிலேயே இது மகிழ்ச்சியும், வியப்பும் நிறைந்த செய்திதான். பதவி உயர்வு கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட பட்டியலில் உங்கள் பெயரும் பிறகு சேர்க்கப்பட்டதா?” என்று கேட்டேன் நான்.

“இல்லை ஆனால், பதவி உயர்வு கொடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறது” என்றார் அவர்.

“ஆச்சரியமாக இருக்கிறதே!” என்றேன் நான்.

“எனக்குக்கூட ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நான் பத்து நாட்களுக்கு முன்னால் உங்களைச் சந்தித்தபோது, ‘ஸ்ரீ அரவிந்தரின் சமாதியைத் தரிசிக்க விரும்புகிறீர்களா?’ என்று என்னை நீங்கள் கேட்டீர்கள். சுத்தமாகக் கடவுள் நம்பிக்கையே இல்லாத எனக்கு, முதலில் அது பைத்தியக்காரத் தனமாகத் தோன்றியது”.

“முயற்சி என்ற விதையை ஊன்றாவிட்டால் கடவுளின் அருளால் எதுவும் முளைத்துவிடாது” என்று என் பகுத்தறிவு சண்டித்தனம் செய்தது. ‘உன் முயற்சியால் எதுவும் நடக்கவில்லை. நீ விதைக்கலாம். ஆனால், உன்னால் அதை முளைக்க வைக்க முடியாது. எது முளைக்க வைக்கிறதோ, அதுதான் மூல சக்தி; கடவுள் சக்தி. நீ இதுவரை அறிவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடினாய்’.

“என்ன நடந்தது? அது உன்னைக் கீழே தள்ளி நன்றாக உதைத்தும்விட்டது. இனி நீ அருளின் ஒளியைத் துணையாகக் கொள். நீ விதைத்தவை எல்லாம் முளைக்கும். ஓடு, ஸ்ரீ அரவிந்தர் சமாதியை நோக்கி!” என்று என்னுள் எழுந்த ஒரு புதிய குரல், என் பிடரியைப் பிடித்துத் தள்ளியது. நான் ஓடினேன். ஸ்ரீ அரவிந்தர் சமாதியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதேன். அழுக்கு அகன்றதும் என் மனத்தை அழுத்திக் கொண்டிருந்த பளு மறைந்துவிட்டது. ‘இனி எது கிடைத்தாலும் அது ஏமாற்றமாகவே இருந்தாலும்-அதை ஸ்ரீ அரவிந்தர் அன்னையின் பிரசாதமாக ஏற்றுக் கொள்வது’ என்ற தீர்மானத்துடன் நான் வீட்டிற்குத் திரும்பினேன்.

“அதற்குப்பிறகு எது நடக்க முடியாததோ, எது மனித சக்திக்கு அப்பாற்பட்டதோ, அது நடந்துவிட்டது! பதவி உயர்வு கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெறாத என் பெயர், பதவி உயர்வு பெற்றவர்களின் பட்டியலில் எப்படி இடம் பெற்றது? இது நடைமுறைக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால், இது எப்படி நடந்தது? ஸ்ரீ அரவிந்தரின் அருளால் நடந்தது; அன்னையின் அருளால் நடந்தது” என்று உணர்ச்சிப் பூக்கள் கண்ணீரில் மலர விரித்துரைத்தார் அன்பர்.

பிறகு அவர் நாத்திகர் அல்லர்; ஆத்திகர்; அன்னையின் அணுக்கமான பக்தர்.

ஆக, ஒரு பாறை உடைந்துவிட்டது! அதன் அடியிலிருந்து நான் ஒரு சிறு நீரூற்றைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால், அதிலிருந்து பெருகி வந்ததோ, பெரு வெள்ளம்!

அன்னையின் அருள் பாலையிலும் சோலையாகும்; தொலையாத துயரங்களையும் விரட்டி அடிக்கும் விடிகாலைப் பொழுதாகும்.book | by Dr. Radut