Skip to Content

14 - சுற்றுச் சுவர்

அன்னையின் அணுக்கமான பக்தர் ஒருவருக்கு ஏற்பட்ட ஓர் இன்னலை, அன்னையின் அருள் எவ்வாறு ஊடுருவி ஆறுதல் அளித்தது என்பதை இங்கே அவரே கூறுகின்றார்:

நான் புதுச்சேரியில் குடியேறி இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. நான் வசித்து வந்த பகுதியில் குடி நீருக்குப் பஞ்சமே இல்லை. எந்த நேரத்தில் குழாயைத் திறந்தாலும் நீர் பிரவாகமாக வரும். நாளாக நாளாக இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

நான் குடி வந்த சமயம் அந்தப் பகுதியில் ஒரு சில வீடுகளே இருந்தன. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்குள் புதிது புதிதாக நிறைய வீடுகள் முளைத்துவிட்டன. அதற்கேற்ப குடிநீர் வசதியைப் பெருக்காததால், தண்ணீருக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. ‘புதிதாகக் குடிநீர் டாங்க் ஒன்று கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அது கட்டி முடிக்கப்பட்டு விட்டால் தண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது’ என்றெல்லாம் பரவலாக பேசிக் கொண்டார்கள். ஆனால், எதுவுமே நிகழும் போலத் தோன்றவில்லை.

‘பொழுது விடிந்தால் தண்ணீர் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாகிவிட்டது. நான் மாடிப் பகுதியில் குடியிருந்ததால் இந்தத் தண்ணீர்ப் பிரச்சினை தலையாய பிரச்சினையாகிப் பயமுறுத்தியது. மாடியில் தண்ணீரைத் தேக்கி வைக்க ஒரு தொட்டிகூட இருந்தது. ஆனால், கீழே இருந்து மாடிக்கு நீரை உந்திக் கொண்டு வருவதற்கு மோட்டார் பொருத்தி இருக்க வேண்டும் அல்லவா? அப்படிச் செய்திருக்கவில்லை. ஏனோ வீட்டுக்காரருக்கு ஓர் அரை ஹெச்.பி. மோட்டாரைப் பொருத்தித் தருவதற்கு மனம் இல்லை. ஆகவே, அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வேறொரு வீட்டுக்குக் குடி பெயர வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்பட்டது’.

புதுச்சேரியில் வாடகைக்கு வீடு கிடைப்பது மிகவும் கடினம். ‘பூர்வஜன்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான் புதுச்சேரியில் வீடு கிடைக்கும்’ என்பது நடைமுறை வழக்கமாக இருந்தது. ஒருவேளை வீடு கிடைத்தாலும், வீட்டுக்காரர் கேட்கும் வாடகையை நினைத்தால் மயக்கமே வந்துவிடும். நகரத்தை ஒட்டினாற் போல் வீடு கிடைக்க வேண்டுமானால் பகீரதப் பிரயத்தனம் செய்தால் தவிரக் கிடைக்காது. அதிலும் கீழ்ப் பகுதியில் வீடு கிடைப்பதானால் கஷ்டத்தைச் சொல்ல வேண்டியதே இல்லை.

நான் அல்லும் பகலும் வீட்டைத் தேடிச் சோர்ந்து போனேன். ‘புரோக்கர்கள் இல்லாமல் இனி முடியாது’ என்ற நிலை. அவர்கள் அசகாய சூரர்கள் மட்டுமல்லர்; ஆகாய வீச்சுக்காரர்களும்கூட. அவர்களுடைய பழக்க வழக்கங்களை அருகிலிருந்து பார்த்தால், அவர்களோடு ஓர் ஐந்து நிமிடம்கூட நம்மால் பழக முடியாது என்பது புரிந்து போகும். புதுச்சேரி உள்ளூராக இருந்தால் எனக்கு அறிமுகமான பலர் இருப்பார்கள். அவர்கள் மூலமாகக் காலியான வீடுகளைத் தேடிப் பெற வாய்ப்பு இருக்கும்.

நானோ புதுச்சேரியில் புதிதாக வந்து குடியேறியவன். அதனால் இங்கே எனக்கு அறிமுகமானவர்கள் மிகக் குறைவு. ஆகவே, புரோக்கர்களைவிட்டால் எனக்கு வேறு வழி இல்லை. அவர்கள் நமக்குக் காட்டுகின்ற வீடுகளில் சில நாம் எதிர்பார்க்கிற மாதிரி அமைந்திருக்கும். ஆனால், வீட்டுக்காரர்கள் சொல்கின்ற வாடகையைக் கேட்டால் நமக்குத் தலையைச் சுற்றும். ‘ஓரளவு நியாயமான வாடகையுள்ள நல்ல வீடு வேண்டும்’ என்று கேட்டால், அதற்கும் புரோக்கர்கள் அயர மாட்டார்கள். நம்மை அழைத்துச் சென்று சில வீடுகளைக் காட்டுவார்கள். அவர்கள் ‘வீடு’ என்று காட்டுகின்ற கூடுகளில், பறவைகளால்தான் வசிக்க முடியுமே தவிர நம்மால் முடியாது.

யார் செய்த புண்ணியமோ, கடைசியாகப் புதுச்சேரியின் மேற்குப் பகுதியில் நகரத்தை ஒட்டினாற் போல் நியாயமான வாடகைக்கு ஒரு வீடு கிடைத்தது. வீட்டுக்காரர் மிகவும் நல்லவர். இனிச் சிறிது காலத்துக்கு வீடு தேடும் தொல்லையில் இருந்து விடுபட்டு இருக்கலாம் என்ற நிம்மதியோடும், நிறைவோடும் அந்த வீட்டுக்கு உடனே குடி போய்விட்டேன்.

அது தெற்குப் பார்த்த புதிய வீடு. அந்த வீட்டில் நான் முதன் முதலில் குடியேறி இருந்தேன். வீட்டுக்கு மேற்குப் பக்கத்தில் நான்கு வீடுகள் இருந்தன. கிழக்குப் பக்கத்திலும், வீட்டின் பின்பக்கத்திலும் காலி மனைகளே இருந்தன. எதிர்ப்புறத்தில் நான்கு வீடுகள். குழாயைத் திருகிவிட்டால் அருவியாய்த் தண்ணீர் கொட்டியது. வீடும் பார்ப்பதற்குக் களையாக இருந்தது. எனக்குப் பரம திருப்தி.

இரவு நேரங்களில் ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்குச் சென்று சமாதியைத் தரிசித்துவிட்டுப் பதினொரு மணிக்கு வீட்டுக்குத் திரும்புவது என் தினசரி வழக்கம். அன்றிரவு வழக்கம் போல் ஆசிரமத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பினேன். அணிந்திருந்த கைக் கடிகாரத்தைக் கழற்றி, ஜன்னல் ஓரமாக இருந்த சிமெண்ட் அலமாரியில் வைத்துவிட்டுப் படுக்கப் போய்விட்டேன்.

மறு நாள் காலையில் வெளியே புறப்படும்போது கைக் கடிகாரத்தை எடுப்பதற்காக அந்த சிமெண்ட் அலமாரியின் அருகே சென்றேன். அங்கே அது காணப்படவில்லை. ‘அது எப்படிக் காணாமல் போயிருக்க முடியும்?’ என்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஏனென்றால், என்னைத் தவிர அக்கடிகாரத்தை உபயோகிக்கக் கூடிய வேறு யாரும் என் வீட்டில் இல்லை. அது வேறு எப்படித்தான் போயிருக்கக் கூடும்? சிந்தித்தேன்.

‘நாங்கள் உறங்கியபின், யாரோ ஒரு நபர் ஜன்னல் வழியாக ஒரு கோலை உள்ளேவிட்டு அந்தக் கடிகாரத்தைத் திருடி இருக்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன். அந்த அலமாரி மேற்குப் புறத்தில் ஜன்னல் ஓரமாக அமைந்திருந்தது. ஆதலால் வீட்டின் மேற்குப் புறத்துக்குச் சென்று ஜன்னல் சுவரில் ஏதேனும் தடயம் தெரிகிறதா என்று பார்த்தேன். சுவரில் கால்களை ஊன்றி, ஜன்னல் கம்பியைத் தாவிப் பிடிப்பதற்குத் திருடன் முயன்று இருக்கிறான் என்பதற்கு அடையாளமாக அவனுடைய கால் விரல்களின் ரேகைகள் சுவரில் பதிந்து இருந்தன. அதன் மூலம் என் கடிகாரத்தைத் திருடன் ஒருவன் திருடிச் சென்றுவிட்டான் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.

அந்தத் திருட்டு இந்த வீட்டுக்கு வந்து இருபது, இருபத்தைந்து நாட்களுக்குள் நடந்துவிட்டது. ‘இனிக் கவனமாக இருக்க வேண்டும்’ என்று என் மனைவியையும், மற்றவர்களையும் எச்சரித்ததோடு, இரவில் படுக்கப் போகுமுன் எல்லா ஜன்னல்களையும் மூடி உள் கொக்கியைப் போடும்படியும் சொல்லியிருந்தேன். பொதுவாக, ‘ஜன்னல் ஓரங்களில் எந்த ஒரு பொருளையும் வைக்க வேண்டாம்’ என்றும் கூறியிருந்தேன்.

இரண்டு நாட்கள் சென்றபின், மூன்றாவது நாள் காலையில் எழுந்து பார்த்தால், எங்களுக்காக ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கிழக்குப் புறமாக உள்ள அறையில் இருந்த துணிகள் மாயமாக மறைந்திருந்தன. அந்தத் துணிகளோடு இருந்த ஐந்து புதிய புடவைகளும் காணாமல் போய்விட்டன.

திருடனுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது, என் வீட்டினரின் கவனக் குறைவுதான். அவர்கள் படுக்கைக்குச் செல்லும்முன் ஜன்னல் கதவுகளை எல்லாம் சாத்தினார்களே தவிர, கொக்கிகளைப் போடவில்லை. அத்தனை போதாதா? திருடன் ஜன்னல் கதவுகளைத் திறந்து குச்சியை அறைக்குள் விட்டு, அங்கிருந்த துணிகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக அபேஸ் செய்து கொண்டு போய்விட்டான்.

ஆக, ‘சிறிது கவனக் குறைவாக இருந்தாலும், வீட்டில் உள்ள பொருள்கள் களவு போய்விடும்’ என்ற அபாய நிலை ஏற்பட்டுவிட்டது. எங்கள் வீட்டை மட்டுமே திருடன் குறி வைத்திருக்கிறான் என்பதற்குச் சில சான்றுகள்:

எங்கள் வீட்டின் அருகே இருந்த வீடுகளில் திருட்டுப் போகவில்லை. சிலர் ஜன்னல் கதவைத் திறந்து போட்டிருந்தாலும் கூட, திருடன் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. திருடன் விரும்பியிருந்தால் கவனக் குறைவாக உள்ளவர்களின் வீட்டிலும் கைவரிசையைக் காட்டி இருக்க முடியும். ஆனால், அவனுடைய கவனம் முழுக்க முழுக்க எங்கள் வீட்டிலேயே திரும்பியிருந்தது. ‘இதற்கு என்ன காரணம்?’ என்று நான் மற்றவர்களிடம் கேட்டேன்.

அதற்கு அவர்கள் ‘தெருவில் உங்கள் வீடுதான் கடைசியாக இருக்கிறது. வீட்டின் கிழக்குப் பகுதியும், பின்பகுதியும் காலி இடங்களாக இருப்பதாலும், அந்த இடங்கள் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருப்பதாலும் உங்கள் வீடு திருடுவதற்கு வாட்டமாக இருக்கிறது’ என்றார்கள்.

அவர்களுடைய விளக்கம் ஏற்புடையதே. திருடன் எங்கள் வீட்டுக் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே வருவதற்கு வெட்ட வெளியாக இருக்கும் மேற்குப் பக்கந்தான் வழியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாயிற்று. பக்கத்து வீட்டுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்படவில்லை. அதனால் திருடன் அந்த வீட்டின் பின்புறத்தில் நுழைந்து வெட்ட வெளியாக இருக்கும் மேற்குப் பக்கமாக முன்னேறி, எங்கள் வீட்டுக்கு வந்து போகிறான். இதனால் யார் கண்ணிலும் படாமல் வருவதற்கும் போவதற்கும் திருடனால் முடிகிறது. வீட்டின் மேற்குப் பக்கமாகத்தான் அவன் வந்து போகிறான் என்பதற்கான தடயங்கள் நிறையவே காணப்பட்டன.

இவற்றை எல்லாம் நான் ஒரு துப்பறியும் நிபுணரின் திறனோடு தெரிந்து வைத்திருப்பதால் என்ன பயன்? திருடனிடமிருந்து எப்படித் தினம் தினம் தப்புவது? ஒவ்வொரு நாளும் மிகவும் எச்சரிக்கையோடு ஜன்னல் கதவுகளைச் சாத்தி, கொக்கி போட்டு வைத்தால்தான் அவனிடமிருந்து தப்பிக்கலாம். அவ்வளவு கவனம் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு இல்லை என்பதை, இரண்டாவது தடவையாகத் திருட்டுப் போனதிலிருந்தே நான் தெரிந்து கொண்டுவிட்டேன்.

இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரு வழி இருந்தது. இந்த வீட்டைக் காலி செய்து வேறொரு வீட்டுக்குப் போய்விடுவதுதான் அந்த ஒரே வழி. ஆனால், ஏற்கனவே வீட்டைத் தேடிப் படாதபாடுபட்டுப் போன எனக்கு இன்னொரு வீட்டைப் பற்றி நினைக்கவே கசப்பாக இருந்தது. வேறு என்னதான் செய்வது? அதுவும் புரியவில்லை.

என்னுடைய வீட்டுக்காரர் மிகவும் நல்லவர். எனக்கு ஏற்பட்டிருந்த தொல்லையையும், நஷ்டத்தையும் அறிந்து கொண்ட அவர், வீட்டில் உள்ள எல்லா ஜன்னல்களுக்கும் வலைக் கம்பி போட்டுத் தந்தார். செலவைப் பார்க்காமல் இந்த முக்கிய வசதியைச் செய்து தரத் தாமே முன்வந்த வீட்டுக் காரரைப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. ‘இனித் திருடன் தொடர்ந்து கொடுத்து வந்த தொல்லைகள் தொலைந்து போகும்’ என்று நிச்சயமாக நம்பினேன்.

என் நம்பிக்கை இரண்டு நாட்கள்கூட நீடிக்கவில்லை. மீண்டும் நள்ளிரவுத் திருடனின் நடமாட்டம் ஆரம்பமாகிவிட்டது. இரவு ஒரு மணிக்குமேல் வீட்டுக்கு வெளியே திருடன் நடமாடும் காலடி ஓசையும், அவன் பிடிக்கும் சுருட்டுப் புகையின் நெடியும் எங்களை நிம்மதியாகத் தூங்கவிடவில்லை. ஜன்னல்களை வலைக் கம்பிகள் போட்டு அடைத்தபிறகும், அவன் ஏன் என் வீட்டை இரவுப் பிசாசாகச் சுற்றி வருகிறான்? புரியவில்லை.

‘போலீஸில் புகார் செய்யலாமா?’ என்று நினைத்தேன். ‘அதனால் பெரிய பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை’ என்றது என் உள்ளுணர்வு. ஆகவே, நான் பேசாமல் இருந்துவிட்டேன்.

திருடனும் சளைக்காமல் ஒவ்வோர் இரவும் வந்து போய்க் கொண்டிருந்தான். அவன் எதற்காக அப்படி வந்து போகிறான்? தெரியவில்லை. ஆனால், அவன் ஏதோ திட்டத்துடன் வந்து போகிறான் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

நாங்கள் மிகவும் விழிப்புடன் இருந்தோம். படுக்கப் போவதற்கு முன்னால் எல்லாக் கதவுகளையும், ஜன்னல்களையும் கவனமாகத் தாழிட்டோம். ஆளுக்கு ஆள் சரி பார்த்தோம். ‘நாம் இத்தனை ஜாக்கிரதையாக இருப்பதால், திருடனுடைய திட்டம் எதுவும் பலிக்கப் போவதில்லை’ என்று எங்களை நாங்களே தைரியப்படுத்திக் கொண்டோம்.

ஒரு நாள் இரவு இரண்டு மணி இருக்கலாம். கொல்லைப் புறக் கதவு உள்ள இடத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியது. அதற்குக் காரணம் புரிகிறது. அந்தக் கதவின் அருகில் திருடன் என்னவோ செய்கிறான். ‘செய்யட்டும். இந்த நேரத்தில் கொல்லைக் கதவைத் திறக்க வேண்டாம்’ என்று முடிவு செய்து வீட்டுக்குள்ளேயே அடங்கி இருந்துவிட்டோம்.

பொழுது விடிந்தது. கொல்லைக் கதவைத் திறந்து பார்த்தோம். அப்போது இரவில் திருடன் செய்த காரியம் என்னவென்று தெரிந்தது. அவன் கடப்பாரையைக் கொண்டு நெம்பிக் கதவைத் திறக்க முயன்றிருக்கிறான். கதவிலும், சுவரிலும் உள்ள வடுக்கள், அவனுடைய திட்டம் என்ன என்பதைத் தெளிவாகக் காட்டின.

அந்தக் கதவு அத்தனை கனமானது அன்று. திருடன் இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் அந்தக் கதவைச் சுலபமாகப் பெயர்த்து எடுத்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை. ஏன்? ஜன்னலுக்கு வலைக் கம்பி போட்டவுடன் அவனுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். அதனால், ‘நீங்கள் வலைக் கம்பி போட்டால் என்ன? நான் கதவை உடைத்துக் கொண்டு வந்து கொள்ளை அடிப்பேன்’ என்று கூறுவது போல இந்தக் காரியத்தைச் செய்துவிட்டுப் போயிருக்கிறான்.

அவனுடைய எச்சரிக்கை அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. அவன் ஒரு கடுமையான போராட்டத்தைத் திட்டமிட்டுச் செய்து வருகிறான். ‘எப்படியும் வீட்டுக்குள் புகுந்து திருடிவிட வேண்டும்’ என்று குறி வைத்துவிட்டான். ‘இனியும் இந்த வீட்டில் தொடர்ந்து இருப்பது சரியல்ல’ என்று நினைத்தேன். ஆனால், புதுச்சேரியில் அவசரத்திற்கு வீடு கிடைப்பது அரிதாயிற்றே! ‘வீடு தேடி அலையும் தொல்லை இன்னும் நம்மை விட்டபாடில்லை’ என்று மனம் கசந்தேன். ‘அந்தத் திருடனை வாராமல் தடுப்பதற்கு வழி ஏதும் இல்லையா?’ என்று நானே என்னைக் கேட்டுக் கொண்டேன்.

ஏன் இல்லை? அதற்கு ஒரு வழி இருக்கிறது. பக்கத்து வீட்டுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டுவிட்டால், திருடன் வருவதற்கு வசதியாக இருக்கும் வழி அடைபட்டுப் போகும். அதுதான் அவனுடைய நடமாட்டத்தை அறவே ஒழிப்பதற்கான ஒரே வழி. பக்கத்து வீட்டின் சொந்தக்காரர் பிரான்ஸில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். அவர் எனக்கு அறிமுகமானவர் இல்லை. இப்போது அவருடைய வீட்டில் வசிப்பவர்கள், வாடகைக்குக் குடி இருப்பவர்கள். என்னுடைய நலத்துக்காகப் பக்கத்து வீட்டின் சுற்றுச் சுவரை உடனடியாகக் கட்டும்படி வீட்டின் சொந்தக்காரரை நான் கேட்டுக் கொள்ள முடியாது. அது நாகரிகம் அன்று. ஒருவேளை நான் அவ்வாறு கேட்டுக் கொண்டாலும், “உங்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்றால் உங்கள் வீட்டுக்காரரையே மேற்குப் பக்கச் சுவரையும் கட்டச் சொல்லுங்கள்” என்றுதான் அவர்களிடமிருந்து பதில் வரும். மேற்குச் சுவரைக் கட்ட வேண்டியவர் பக்கத்து வீட்டுக்காரரே தவிர, என் வீட்டுக்காரர் இல்லை. அப்படி இருக்க, ‘நீங்கள் மேற்குச் சுவரைக் கட்டுங்கள்’ என்று என் வீட்டுக்காரரை நான் எப்படிக் கேட்க முடியும்?

பல சிந்தனை நெருடல்கள். வீட்டில் நிம்மதியாக வசிக்க முடியாமலும், வீட்டைக் காலி செய்ய முடியாமலும் நான் தவித்தேன்; சலித்தேன்.

அந்த அன்பர் அன்னையிடம் உண்மையான பற்றும் நம்பிக்கையும் கொண்டவர். அவரை நான் தினமும் சந்தித்துப் பேசுவதுண்டு. அவரிடம் திருடன் எனக்குக் கொடுக்கும் தொல்லையைத் தெரிவித்து, “என் தொல்லை தீர ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன்!” என்று கேட்டுக் கொண்டேன்.

‘நீங்கள் அன்னை ஸ்ரீ அரவிந்தர் படங்களைக் கையில் ஏந்திக் கொண்டு வீட்டைச் சுற்றி வாருங்கள். இப்படி மூன்று நாள்களுக்குச் செய்யுங்கள். பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்’ என்றார்.

நான் அவர் கூறியபடியே மூன்று நாட்களும் அன்னை ஸ்ரீ அரவிந்தர் படங்களைக் கையில் ஏந்திக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்தேன். அந்த மூன்று நாட்களிலும் திருடன் வரவில்லை. அவன் நான்காவது நாளும் வரவில்லை. அந்த அன்பர் கூறிய முறையை நான் கையாண்டு பத்து நாட்களுக்கு மேலாகி விட்டன. திருடனின் நடமாட்டம் முற்றும் நின்றுவிட்டது. அதற்கு என்ன காரணம்? புரியவில்லை. இப்போது எனக்குச் சிறிது நிம்மதி. கூடவே, ‘திருடன் மறுபடியும் வந்து தொந்தரவு கொடுப்பானோ?’ என்ற பயம்.

ஒரு நாள் காலை நான் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தபோது, அங்கே எனக்காக ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. பக்கத்து வீட்டின் எதிரில் செங்கல்லும், ஆற்று மணலும் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடந்தன. அவை இரவோடு இரவாக வந்திறங்கி இருக்க வேண்டும். ‘எதற்காக? சுற்றுச் சுவர் கட்டவா? இருக்க முடியாது. இத்தனை காலமாக அதைக் கட்டாமல் போட்டவர்களுக்கு இப்போது என்ன அதிலே அக்கறை? வேறு ஏதோ வேலை செய்யப் போகிறார்கள். அதற்காகவே அந்தக் கட்டுமானப் பொருட்கள் வந்திருக்கின்றன’ என்று நினைத்தேன்.

மறு நாள் காலையில் கொத்தனார்களும், சிற்றாட்களும் பக்கத்து வீட்டுக்கு வந்தார்கள். அந்த வீட்டைச் சுற்றிக் கடைக்கால் எடுத்துச் சுற்றுச் சுவரைக் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்! என் கண் முன்னால் நிகழ்ந்த அந்தக் காட்சியை என்னால் நம்ப முடியவில்லை. இரண்டே நாட்களில் சுற்றுச் சுவர் எழும்பிவிட்டது. அதனால் என் வீட்டின் மேற்குப் பக்கத்துத் திறந்த வெளியும் அடைபட்டுவிட்டது.

பிரான்ஸ் நாட்டில் இருந்த அந்தப் பக்கத்து வீட்டுச் சொந்தக்காரருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவர் அங்கு இருந்தபடியே புதுச்சேரியில் உள்ள ஒரு காண்ட்ராக்டரை ஏற்பாடு செய்து தன் வீட்டுக்குச் சுற்றுச் சுவரைக் கட்டிவிட்டார்.

அது எப்படி நிகழ்ந்தது? இந்தப் புரியாத புதிருக்கு விடை, ‘அன்னையின் அருள்’ என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? அதற்குப்பிறகு மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. அந்தத் திருடன் திரும்பி வரவே இல்லை!book | by Dr. Radut