Skip to Content

17 - அன்னையின் அருளுக்கு இணை ஏது?

அந்த அன்பர் ஓர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். ‘அமுதசுரபி’யில் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீ அரவிந்தர் அன்னையைப் பற்றிய கட்டுரைகளைப் படிப்பதற்கு முன்பே, அவர் ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்கு வந்திருக்கின்றார். அன்னையிடமும் ஸ்ரீ அரவிந்தரிடமும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

அவர் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கி இருபத்தாறு ஆண்டு காலமாகிறது. அதில் 10 ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியராக இருந்து வருகின்றார். மாணவர் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவர் பணி புரிந்த பள்ளிகளில் மாணவர்கள் மிகவும் கணிசமான அளவில் தேர்வு பெற்றுள்ளார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் 95 சதவிகிதத் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

பாராட்டுக்குரிய செயல்களைச் செய்து கொண்டு இருந்த அவர், படு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தது. அவருடைய சாதனையைக் கண்டு பொறாமையும், பொல்லாங்கும் கொண்ட சக ஆசிரியர்கள், அவர் மீது போர் தொடுத்தார்கள். அது நேரடிப் போர் அன்று. மறைந்திருந்து எய்கின்ற ராமபாணப் போர். சக ஆசிரியர்களால் மேல் அதிகாரிக்குச் சரமாரியாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பறந்தன. அத்தனையும் பொய்; பொறாமை. அந்த உமிகளை ஊதிப் பார்த்தால் உள்ளே இருக்கும் அரிசி மணி கண்களுக்குத் தெரிந்திருக்கும். மேல் அதிகாரி அந்தச் சிறிய முயற்சியைக்கூடச் செய்து பார்க்கவில்லை. அவரை, அவர் வேலை பார்த்து வந்த ஊரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள வேறோர் ஊருக்கு மாற்றல் செய்து உத்தரவு பிறப்பித்துவிட்டார்.

உண்மையில் உழைத்த மனிதருக்கு இப்படி ஒரு தண்டனையா? அவமானமும், அல்லலும் அவரைத் துவம்சம் செய்தன.

அந்த நிலையில் அவர் ‘அமுதசுரபி’க் கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது. அவற்றால் தூண்டப்பட்ட அவர், நடந்தவற்றை எல்லாம் எனக்கு விவரமாக எழுதிவிட்டுக் கடிதத்தை இப்படி முடித்திருந்தார்: “இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழி என்ன?”

எனக்குத் தெரிந்ததும், உடனடியாகப் பயன் அளிக்கக் கூடியதுமான ஒரே வழி அன்னை வழிதான்.

அந்த வழியை மொழியாகக் கொண்டு அவருக்குப் பதில் எழுதினேன்.

“சக ஆசிரியர்கள் எவ்வளவுக் குற்றங்களைக் கூறி இருந்தாலும், அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். ‘நாம் அந்தக் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவரா?’ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மீது குற்றம் இல்லை என்பது தெளிவாகியபின்பு, குற்றம் சுமத்தியவர்கள் மீது எழும் ஆத்திரம், வெறுப்பு முதலியவற்றை மனத்திலிருந்து நீக்கிவிடுங்கள். குற்றம் சாட்டியவர்களில் யாராவது உங்களிடமிருந்து உதவியைப் பெற்றவராக இருப்பின், ‘அவர்களுடைய தகுதியை ஆராயாது அவர்களுக்கு உதவி செய்தது தவறு’ என உணர்ந்து, அதற்காக வருந்தி, ‘இனி அம்மாதிரியான தகுதி இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில்லை’ என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அன்னையின் அருளில் பூரண நம்பிக்கை வைத்து, தினமும் உங்கள் குறையைக் கூறி, அதனை விலக்குமாறு அன்னையிடம் கேட்டு வாருங்கள். கேட்டது கிடைக்கும்” என்பதுதான் நான் எழுதிய பதில்.

சிறிது காலத்திற்குப்பிறகு, “நீங்கள் கூறியவற்றை நடை முறையில் பின்பற்றி வந்தேன். பலன் அதிசயிக்கத்தக்க அளவில் கிடைத்துள்ளது. என் ஊரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்ட நான், இப்பொழுது என் ஊருக்கு அருகில் உள்ள வேறொரு பள்ளிக்கு மாற்றல் செய்யப்பட்டிருக்கிறேன். கலைந்து கிடந்த என் எண்ணத்தை அழகிய வண்ணமாக்கிய அன்னையின் அருட்சக்திக்கு இணை ஏது?” என்று வியப்புடன் எழுதி இருந்தார் அந்த அன்பர்.

2

இந்த அன்பர் பெங்களூர்வாசி. மே 84-இல், “தங்களுடைய கட்டுரைகளைக் கடந்த மூன்று வருடங்களாக ‘அமுதசுரபி’யில் தொடர்ந்து படித்து வருகின்றேன். அவற்றைப் படிக்கத் தொடங்கியபிறகு, எனக்கு அன்னையின் அருளில் ஈடுபாடும், பக்தியும் உண்டாயின. பலருடைய சிக்கல்களும், துன்பங்களும், தொல்லைகளும் அன்னையின் அருளால் நீங்கியதை அக்கட்டுரைகளின் மூலமாக அறிந்தேன். அதைப் போல என்னுடைய பிரச்சினைகளையும் அன்னையின் அருள் தீர்த்து வைக்க வேண்டும் என்று அன்னையிடம் நம்பிக்கையோடு பிரார்த்திக்கின்றேன்”.

“என்னுடைய மூத்த பெண்ணுக்குத் திருமணம் நடைபெற வேண்டுமே என்ற கவலை என் மனத்தைப் பாறையாக அழுத்திக் கொண்டிருக்கின்றது. திருமணத்திற்குத் தேவையான பொருள் வசதி இல்லை. அன்னையின் அருள்தான் கண்ணுக்குத் தெரியாத வரனைக் காட்டி, கையில் இல்லாத பொருள் வசதியைக் கொடுத்துத் திருமணத்தைக் கூட்டி வைக்க வேண்டும். இதற்கான அறிவுரைகளை எழுதி அனுப்புமாறு வேண்டுகின்றேன்” என்று எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார் அவர்.

“உங்கள் கடிதம் கிடைத்தது. அன்னையின் அருளில் பூரண நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆக வேண்டிய உங்கள் மூத்த பெண்ணும், பெற்றோராகிய நீங்களும் அன்னையின் அருளில் முழுமையான நம்பிக்கை கொண்டு, ‘திருமணம் விரைவில் கூடிவர அருள் செய்ய வேண்டும்’ என்று தினந்தோறும் வேண்டிக் கொள்ளுங்கள். அன்னைக்காக ஆசிரமத்திற்கு ஒரு சிறு காணிக்கையையும் அனுப்பி வையுங்கள். விரைவில் திருமணம் கூடி வரும்” என்று இந்த அன்பருக்குப் பதில் எழுதினேன்.

அன்னையின் அருளால் இரண்டே மாதங்களில் தகுந்த வரன் கிடைத்து, போதுமான பணமும் கிடைத்து, அந்தப் பெண்ணுக்குச் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்து முடிந்தது.

வாழ்க்கை கடலைப் போன்றது. ஓர் அலை ஓய்ந்தால் மற்றோர் அலை சீறிக்கொண்டு வரும். இந்த அன்பரை நோக்கி இன்னோர் அலை பாய்ந்து வந்தது.

அவர் அதைப் பற்றி அடுத்து எழுதி இருந்தார். அதில்

“எங்கள் வீட்டின் மாடிப் பகுதியில் 84, பிப்ரவரியிலிருந்து ஒரு விரிவுரையாளர் குடி இருந்து வருகின்றார். வந்த புதிதில் ஒட்டி ஒட்டிப் பழகிய அவர் குடும்பம், மூன்றாவது மாதத்திலிருந்து வெட்டிப் பேச ஆரம்பித்துவிட்டது. ஆகவே இப்பொழுது நாங்கள் அவரிடமோ, அவர் மனைவியிடமோ அவசியமானால் தவிரப் பேசுவதில்லை”.

“இன்னும் இரண்டு வாரங்களில் என் மூத்த பெண்ணும் மாப்பிள்ளையும் இங்கே வரப்போகின்றார்கள். காரணம், மாப்பிள்ளைக்கு பெங்களூர் அலுவலகத்திற்கு ‘டிரான்ஸ்பர்’ கிடைத்திருக்கின்றது. எனக்கு (அந்தப் பெண்ணின் தாயாருக்கு)சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் நான் சிறிது பலவீனமாக இருக்கின்றேன். அதோடு என் கணவர் உத்தியோகப் பணியின் காரணமாக அடிக்கடி வெளியூருக்குச் செல்ல நேரிடுகின்றது. இந்த நிலையில் என் பெண்ணும், மாப்பிள்ளையும் எங்கள் கூடவே இருந்தால் எனக்குப் பேராதரவாக இருக்கும்”.

“எங்கள் குடும்பம் வீட்டின் கீழ்ப் பகுதியில் இருக்கின்றது. அது சிறிய இடமாக இருப்பதால், பெண்ணும் மாப்பிள்ளையும் எங்களுடன் இருக்க முடியாது. ஆகவே, மாடியில் குடியிருப்பவர்கள் காலி செய்து கொடுத்தால்தான் அவர்கள் இருவரையும் எங்களுடன் தங்க வைக்க முடியும். குடி இருப்பவரிடம் எங்களுடைய நிலையை எடுத்துச் சொல்லி வீட்டைக் காலி செய்து கொடுக்கும்படிக் கேட்டால், அவர் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றார். அன்னைதான் எங்களுக்குக் கருணை காட்ட வேண்டும். அன்னையின் அருளால் அன்றி, வேறு வகையில் குடி இருப்பவரைக் காலி செய்ய வழி இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு நான் இவ்வாறு பதில் எழுதினேன்:

“அன்னையிடம் தினமும் உங்கள் கோரிக்கையைச் சொல்லுங்கள். அதை இடைவிடாது கூறிவர வேண்டியது முக்கியம். உங்கள் வீட்டில் குடியிருப்பவர் மீது கோபம், எரிச்சல், போன்றவற்றைக் காட்டுவதை முழுதுமாக விட்டுவிட வேண்டும். அவரைப் பற்றி உங்கள் வீட்டாரிடமோ, வெளியாரிடமோ குறை கூறிப் பேசுதலும் கூடாது. ‘அவர் வீட்டைக் காலி செய்துவிட்டுப் போய்விட வேண்டும்’ என்று எண்ணும்பொழுதும், அது பற்றிப் பிறரிடம் பேசும் சந்தர்ப்பம் ஏற்படும்பொழுதும் அன்னையை நினைத்துக் கொள்ள வேண்டும். அவசியமானபொழுது மட்டுமே அதைப் பற்றிப் பிறரிடம் கூற வேண்டுமேயன்றி, குறை கூறும் நோக்கில் கூறக் கூடாது. எந்தச் சமயத்திலும் அதைப் பிரச்சினையாக எண்ணி நாலுபேர் முன்னிலையில் குரோதமாகப் பேசி வேதனை அடைதலும் கூடாது. ‘அன்னையின் அருள் குடியிருப்பவரைத் தானாகவே காலி செய்துவிட்டுப் போகுமாறு செய்யும்’ என்ற முழு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இவ்வாறு செயற்படும்பொழுது உங்கள் பிரச்சினை பனி போல் விலகிவிடும்”.

டிசம்பர் 85-இல் அந்த அன்பரின் கணவர் தம் அலுவலகம் சம்பந்தமாக, சென்னைக்குச் செல்ல வேண்டி இருந்தது. சென்னைக்குச் சென்ற அவர், பாண்டிச்சேரிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தர் அன்னை சமாதியைத் தரிசித்து, “மாடியில் குடி இருப்பவர் வீட்டைக் காலி செய்து கொடுக்க, நீங்கள் அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

அன்று மாலை என்னைச் சந்திப்பதற்காக வந்திருந்தார். அப்பொழுது கூறினார்: “பெங்களூரில் குடி இருப்பவரைக் காலி செய்ய வைப்பது மிக மிகக் கஷ்டமான காரியம். சட்டம் குடி இருப்பவர்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது. அந்தப் பேராசிரியர் எங்கள் வீட்டுக்குக் குடி வந்து இன்னும் இரண்டு வருடங்கள் ஆகவில்லை. ‘மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் வீட்டைக் காலி செய்து கொடுப்பேன்’ என்று பிடிவாதமாகக் கூறுகிறார் அவர். இந்த நிலையில் நானே அவரைக் காலியாக இருக்கும் சில வீடுகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்தேன். ஆனால், அவர், ‘எனக்கு இந்த வீடுகளெல்லாம் பிடிக்கவில்லை’ என்று கூறிவிட்டார். அவரை எப்படிக் காலி செய்ய வைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை”.

“அன்னை ஸ்ரீ அரவிந்தர் சமாதியில் நீங்கள் உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்து இருக்கிறீர்கள். இனிப் பிரச்சினை விரைவில் விலகிப் போய்விடும். நான் முன்பு எழுதியிருந்தவாறு குடியிருப்பவரைப் பற்றி எப்பொழுது நினைவு வந்தாலும், அக்கணமே அன்னையை நினைத்துக் கொள்ளுங்கள். மனத்தில் குழப்பம், கவலை, குரோதம், கோபம் முதலியவற்றுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நம்பிக்கையோடு அன்னையை நினைத்து வந்தால், உங்கள் கோரிக்கையை அன்னை நிறைவேற்றி வைப்பார்” என்று கூறி, அவருக்கு விடை கொடுத்து அனுப்பினேன்.

10-01-1986 அன்று அவரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில்

“நான் சென்ற மாத இறுதியில் உங்களைச் சந்தித்துப் பேசியது நினைவு இருக்கலாம். நான் ஊர் போய்ச் சேர்ந்த பிறகு, நான் கொடுத்த காணிக்கையை ஏற்றுக் கொண்டு அன்னை பிரசாதத்தை ஆசிரமத்திலிருந்து அனுப்பி வைத்தார்கள். ‘குடி இருப்பவர் வீட்டைக் காலி செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார்’ என்ற என் குறையை அன்று உங்களிடம் கூறினேன்”.

“ஜனவரி 3-ஆம் தேதியன்று குடி இருப்பவர் வாடகைப் பணத்தைக் கொடுப்பதற்காக என்னிடம் வந்தார். வந்தவர் பணத்தைக் கொடுத்துவிட்டு, இரண்டு அல்லது மூன்று மாதங்களில்தான் வீட்டைக் காலி செய்யப் போவதாகவும், தனக்குச் சேர வேண்டிய முன்பணம் ரூபாய் ஆறாயிரத்தையும் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யும்படியும் கூறிவிட்டுச் சென்றார்”.

“குடி இருப்பவர் தாமாகவே முன்வந்து இந்தச் செய்தியைத் தெரிவிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு பிடிவாதக் காரரைப் பிடித்துக் கொண்டு வந்து என் கண் முன்னால் நிறுத்தி, இப்படிச் சொல்ல வைத்த சக்தி எது? அன்னையின் அருட்பெருஞ்சக்தி. எங்களுக்குக் கருணை பாலித்து எங்களின் பாறை போன்ற பிரச்சினையைப் பனி போல நீக்கி அருளிய அன்னையின் சக்தியே மகத்தான சக்தி” என்று பரவசத்துடன் எழுதி இருந்தார் அவர்.

அவருக்கு பாண்டிச்சேரிக்கு வரவேண்டும் என்ற திட்டம் இல்லை. அவருக்குச் சென்னைக்குச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பம் அவரைத் தானாகவே பாண்டிச்சேரிக்குக் கொண்டு வந்து அன்னை ஸ்ரீ அரவிந்தர் சமாதியின் முன்னால் நிறுத்தியது. இது அவருக்குப் பின்னால் ஏற்படவிருந்த நல்ல பலனுக்கு ஒரு சிறந்த அறிகுறி.book | by Dr. Radut