Skip to Content

16 - அன்பர்களின் வாழ்வில் அற்புதங்கள்

அவர் ஒரு வாசக அன்பர். “அமுதசுரபி”யில் அன்னையின் அருளை விளக்கி எழுதப்படுகின்ற கட்டுரைகளைப் படிக்கின்ற வாய்ப்பு, தமக்குச் சமீப காலமாகக் கிட்டியதாக எழுதி இருந்தார் அவர். அதாவது 1985-இன் பிற்பகுதியில் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதிலிருந்து அக்கட்டுரைகளை அவர் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து படித்து வருகிறார். அதன் மூலம் அவருக்கு அன்னை அருளில் நம்பிக்கை வளர்ந்துவிட்டது.

அந்த வாசகரின் கொழுந்தர் ஒருவர், வெளி நாட்டுக்குச் சென்று வேலை பார்க்கவும், மற்றவர்களைப் போல் நிறையச் சம்பாதிக்கவுமான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, நீண்ட காலமாக அதற்கான முயற்சியைச் செய்து கொண்டிருந்தார். முயற்சி பயனற்றுப் போய், மனிதர் சோர்ந்து போய்விட்டார். என்றாலும் ஆசை அவரை அலைக்கழித்தது. அவருக்குத் தூக்கத்தில்கூட வெளி நாட்டுப் பயணத்தைப் பற்றிய ஏக்கம். ‘இந்த நிலை இப்படியே நீடித்தால், அவருக்கு ஏதாவது ஆகி விடக் கூடும்’ என்று வீட்டில் உள்ளவர்கள் கவலைப்பட்டார்கள்.

அந்தக் கட்டத்தில் அன்னையிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அந்த அன்பர், தம் கொழுந்தரிடம், “அன்னையின் திருவுருவப்படத்தை ஆசிரமத்திலிருந்து வருவித்து அன்னையை வணங்கி வந்தால், உங்கள் எண்ணம் நிறைவேறும்” என்று கூறி, அன்னையின் திருவுருவப்படம் ஒன்றையும் உடனடியாகப் பெற ஏற்பாடு செய்தார். கிடைத்த திருவுருவப்படத்தைத் தினமும் வணங்கி வந்தார் அவருடைய கொழுந்தர். ஒரு மாதம்தான் அவர் அன்னையை வணங்கினார். அதற்குள் பல ஆண்டுகளாக அவர் கண்டு கொண்டிருந்த பகற் கனவு பலித்தேவிட்டது. ஆமாம்; அவருக்கு வெளி நாட்டில் வேலை கிடைத்துவிட்டது!

அவர் வெளி நாட்டுக்குச் சென்றபிறகு, அந்த அன்பர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “என் கொழுந்தரின் விருப்பம் அன்னையின் அருளால் நிறைவேறியது. அவரும் வெளி நாட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அங்கு அவருக்கு எதிர்பார்த்தபடி வேலை அமையவில்லை. அவருக்கு அங்கேயே ஒரு திருப்தியான வேலை கிடைக்க வேண்டும்” என்று எழுதி இருந்தார். அதற்கு நான், “நீங்களும், உங்கள் கொழுந்தரும் அன்னையைத் தினமும் வேண்டுங்கள். விருப்பம் நிறைவேறும் வகையில் அன்னை அருள் செய்வார்” என்று பதில் எழுதினேன்.

ஒரு மாதத்திற்குப்பிறகு ஒரு நாள் அந்த அன்பரிடமிருந்து மறுபடியும் ஒரு கடிதம் வந்தது. “இதற்குமுன், ‘என் கொழுந்தர் தகுந்த வேலை கிடைக்காமல் வருந்துகின்றார்’ என்று நான் உங்களுக்கு எழுதி இருந்தேன். உங்களுக்கு நான் அப்படி எழுதிய ஒரு மாதத்திற்குள்ளாகவே அதிசயிக்கத்தக்க விதத்தில் அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டது. அன்னையின் அருள் விரைவு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. என் நன்றிக் காணிக்கையாக அன்னைக்கு ஒரு சிறு தொகையை அனுப்பியுள்ளேன்” என்று அதில் எழுதி இருந்தார்.

2

மற்றொரு வாசக அன்பர் சற்று வித்தியாசமானவர். அவருக்கு எல்லாமே பிரச்சினைகள். அவற்றால் குழப்பங்கள்.

அவர் எழுதி இருந்தார்: “கடிதத்தை எப்படித் தொடங்குவது, எதிலிருந்து தொடங்குவது என்பன புரியாத அளவுக்கு என் வாழ்க்கை சிக்கலும், சிரமமும் நிறைந்தது. கடந்த சில வருடங்களாக என் வாழ்க்கையில் கருமேகங்கள் சூழ்ந்து, இடியும், மின்னலுமாக இருக்கின்றன. நீச்சல் தெரியாத ஒருவன் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கும்பொழுது பற்றிக் கொள்ள மிதப்புக் கட்டை ஒன்று கிடைத்தது போல, அன்னை அருளை விளக்கி வரும் ‘அமுதசுரபி’க் கட்டுரைகள் என் கவனத்திற்கு வந்தன. அக்கட்டுரைகளைப் படித்ததன் பயனாக, இப்பொழுது எனக்கு ஓரளவு தன்னம்பிக்கை உருவாகியுள்ளது.

‘எனக்கென்று நான் சில தனிப்பட்ட கொள்கைகளையும், வரையறைகளையும், சட்ட திட்டங்களையும் வகுத்துக் கொண்டு, என்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு அதற்கப்பால் வெளி வட்டத்தில் இருந்த சமூகத்தோடு பழகிக்கொண்டு வந்தேன். அது எலியும், தவளையும் முடிச்சுப் போட்டுக் கொண்டதைப் போலாகிவிட்டது. என்னால் சமூக நடைமுறைகளை அங்கீகரிக்கவோ, அவற்றோடு ஒத்துப் போகவோ முடியவில்லை. அதே சமயத்தில் என்னுடைய நடைமுறைகளைச் சமூகம் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை.

“நான் இந்தச் சூழ்நிலையில் நாலரை வருடங்களாகப் பணி புரிந்து வந்த அரசாங்க வேலையை விட்டுவிட்டேன். வால் போய் கத்தி வந்திருக்கிறது! நான் என்னை நம்பி இருக்கும் ஜீவன்களைக் காப்பாற்றியாக வேண்டுமே! அதற்காகவாவது நான் சமூகத்தோடு கொஞ்சம் ஒத்துப் போயாக வேண்டுமே! ஒத்துப் போனேன். எந்த விதப் பிடிப்பும் இல்லாமல் தனியார் நிறுவனம் ஒன்றில் இப்பொழுது பணி செய்து கொண்டிருக்கிறேன். குடும்பச் சூளை அணைந்து போகாமல் இருக்க, நான் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மையான நிலை”.

“கடந்த 28 ஆண்டுகளாக நீ சம்பாதித்தது என்ன?” என்ற கேள்வி, என்னைக் குளவியைப் போலக் கொட்டிக் கொண்டே இருக்கிறது. என்னைச் சுற்றி இருட்டுச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. ‘ஒன்றையும் சாதிக்க முடியாத நீ, எதற்காக மனிதப் பிறவி எடுத்தாய்?’ என்று என் மனம் எழுப்பும் கேள்விக்கு வெட்கமும், வேதனையுமே பச்சாதாபமான பதில்களாகக் கிடைக்கின்றன”. “தேவையான பொருட் செல்வம் கிடைக்கவும், வாழ்க்கையில் நம்பிக்கையின் ஒளி தோன்றி வளர்ந்திடவும் அன்னையின் பாதாரவிந்தங்களை நாடுகிறேன். சொந்தமாகத் தொழில் செய்து முன்னேற அன்னையின் அருளைச் சரண் அடைகிறேன்”.

தன்னை முழுதுமாக வெளிப்படுத்தி இருந்த அவருடைய கடிதத்திற்கு நான் பதில் எழுதினேன். அதன் சுருக்கம் இது.

“கடந்தகால உங்கள் வாழ்க்கையை, குறிப்பாக உங்கள் உத்தியோக வாழ்க்கையை, ஆரம்பக்காலம் முதல் இன்றுவரை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து, அவற்றின் எல்லைக் கோடுகளாக அமைந்த நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு வந்து, அவற்றை வரிசைப்படுத்தித் தினமும் அன்னையிடம் தொடர்பு பிறழாமல் கூறி, அவற்றை அன்னையின் பொறுப்பில் விட்டுவிடுங்கள். அதைச் செய்யும்பொழுது இரண்டு முக்கிய நிபந்தனைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  1. ‘அன்னை அருள் என் வாழ்க்கையில் சூழ்ந்திருக்கும் சிக்கலை விலக்கிப் புத்துணர்வை உருவாக்கிக் கொடுக்கும். என் எதிர்கால வாழ்க்கை செம்மையாக அமையும்’ என்று பூரணமாக நம்ப வேண்டும்.
  2. கடந்தகால நிகழ்ச்சிகளை அன்னையிடம் கூறி வரும்பொழுது மனத்தில் வெறுப்பு, பயம், ஆத்திரம், சோர்வு, முதலிய உணர்வுகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இந்த முறையில் கடந்தகால வாழ்க்கையைக் கூறி வருவதுடன், ஒரு சிறு காணிக்கையையும் அன்னைக்கு (ஆசிரமத்துக்கு) அனுப்பி வையுங்கள். அன்னை உங்கள் கோரிக்கையைப் பூர்த்தி செய்து வைப்பார்”. 

அதற்குப்பிறகு நான்கு மாதங்கள் கழித்து அந்த அன்பரிட மிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தமக்குக் கிடைத்த அருட் செல்வத்தைப் பற்றி அவர் இவ்வாறு எழுதி இருந்தார்.

“அன்னை அன்பன் மகிழ்வோடு எழுதுவது. நீங்கள் எழுதிய வண்ணம் அன்னையை முழுதுமாக ஏற்றுக் கொண்டு என் வாழ்க்கை, உத்தியோக நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி, தினந்தோறும் அன்னையிடம் கூறி வந்தேன். அன்னைக்கு என் எளிய காணிக்கையையும் அனுப்பி வைத்தேன். அன்னை எனக்கு அருள் பாலித்துவிட்டார். ஆம்; என் குறிக்கோள், என் தனிப்பட்ட வரையறைகளுக்கு ஏற்ப, எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை அருளிவிட்டார் அன்னை. சுய வேலைத் திட்டத்தின் (Self Employment Scheme) கீழ், நான் ஒரு தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பித்திருந்தேன். அதிகாரிகள் என்னைத் தேர்ந்து எடுத்து, சொந்தமாகத் தொழில் நடத்துவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து வருகிறார்கள். ஒளி மயமான ஓர் எதிர்காலத்தை எனக்கு வழங்கிய அன்னையின் அருட் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன்.

3

அவர் ஆசிரியையாகப் பணி புரிந்து வரும் ஓர் ‘அமுதசுரபி’ வாசக அன்பர். அவர் எழுதி இருந்தார்.

“நான் ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருக்கிறேன். எனக்குப் பல்லாண்டு கால அனுபவமும், தொழிலில் சிறப்பான தகுதியும் இருக்கின்றன. என்றாலும், மிகவும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். சற்றுத் தொலைவில் சென்று பணி புரியத் தயாராக இருந்தால், எனக்கு நிச்சயமாகக் கணிசமான ஊதியம் கிடைக்கும். என் உடல் ஆரோக்கியம் அதற்கு இடம் கொடாததால், இங்கே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நான் ஆரம்பக்காலத்தில் இங்கே உதவி ஆசிரியையாகத்தான் சேர்ந்தேன். பிறகு என்னைத் தலைமை ஆசிரியையாக நியமித்தார்கள். அதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், பதவி ஏற்ற கொஞ்ச காலத்திலேயே நான் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாகிவிட்டது”.

“பள்ளியில் பணியாற்றி வரும் உதவி ஆசிரியர்கள் பலரும் மனச்சாட்சி இல்லாதவர்கள். அவர்கள் ஆசிரியருக்குள்ள காரியங்களைத் தவிர, மற்ற எல்லா வேண்டாத காரியங்களையும் செய்து வருகிறார்கள். பள்ளி நேரத்தில் பேசிக் கொண்டிருப்பது, கதைப் புத்தகங்களைப் படிப்பது, பொய்க் காரணம் கூறிவிட்டுச் சினிமா பார்க்கச் செல்வது, தன்னிடம் ‘டியூஷன்’ வைத்துள்ள மாணவர்களுக்குக் கேள்வித் தாள்களைப் பரீட்சைக்கு முன்பே கொடுத்து, அவற்றுக்கான விடைகளையும் சொல்லிவிடுவது போன்ற பல காரியங்கள் அவர்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. பெற்றோர்கள் அந்த ஆசிரியர்களைப் பற்றி ஏதேனும் புகார் கூறும்பொழுது, நான் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க நேருகிறது; கண்டிக்கவும் வேண்டியிருக்கிறது. அப்படி விசாரணைக்கு ஆளாகும் ஆசிரியர்கள், என்னை விரோதியாக எண்ணுகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களை எப்படி உண்மையான ஆசிரியர்களாக்குவது? இதுதான் என்னுடைய முக்கியமான பிரச்சினை”.

“இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று எனக்கு விளங்கவில்லை. இதற்கு அன்னைதான் வழி காட்ட வேண்டும். அன்னையின் அருளால் இதற்கு வழி பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தங்களுடைய மேலான அறிவுரைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

அவருடைய கடிதத்திற்கு, “உதவி ஆசிரியர்களைக் கண்டு வேதனையோ, எரிச்சலோ அடையாமல் மனத்தை அமைதியாக வைத்துக் கொண்டு ‘இந்தப் பள்ளி முன்னுக்குவர வேண்டும். இங்குப் பணி புரிகின்ற ஆசிரியர்கள் தவறான வழிகளைக் கைவிட்டு, நேர்மையாகப் பணி செய்ய வேண்டும்’ என அன்னையிடம் தினமும் வேண்டிக் கொள்ள வேண்டும். பள்ளியில் பணிசெய்கின்ற நேரங்களில் ஒவ்வோர் ஆசிரியரையும் பார்க்கும்பொழுது அன்னையை நெஞ்சில் நினைத்துக் கொண்டு பழக வேண்டும். அவர்கள் மீது கோபமோ அல்லது குரோதமோ தோன்றாதபடி உங்கள் மனத்தை நிர்மலமாக வைத்துக் கொள்ள வேண்டும். அன்னைக்குச் சிறிய காணிக்கை ஒன்றையும் அனுப்பி வையுங்கள்” என்று நான் பதில் எழுதி இருந்தேன்.

அதற்குப்பிறகு பத்து மாதங்கள் சென்றுவிட்டன. அந்த ஆசிரியையிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

“கடந்த வருடம் நான் என்னுடைய பிரச்சினைகளைப் பற்றி எழுதி இருந்தேன். நீங்கள் அதற்கு எழுதிய பதிலில் கண்டபடி அன்னைக்குக் காணிக்கையை அனுப்பிவிட்டு, அன்னையைப் பிரார்த்தனை செய்து வந்தேன். எனக்கு எதிராகச் செயல்பட்டு வந்தவர்களை எல்லாம் கண்டபொழுது, அன்னையை நெஞ்சில் நினைத்துப் பழகி வந்தேன். அதனால் ஏற்பட்ட பலனைச் சொன்னால் உங்களுக்கே நம்பிக்கை வாராது. எந்த ஐந்து நபர்கள் எனக்கு எதிராகச் செயல்பட்டுத் துன்பத்தைக் கொடுத்து வந்தார்களோ, அவர்கள் ஐவரும் ஒருவர்பின் ஒருவராக, தாமாகவே வேலையை ராஜினாமாச் செய்துவிட்டுப் பள்ளியிலிருந்து விலகிவிட்டார்கள். இப்பொழுது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்பொழுதுதான் பள்ளிக்கூடம் உண்மையிலேயே பள்ளிக்கூடமாக இருக்கிறது. என் மனமார்ந்த நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மன நெகிழ்வுடன் அதில் எழுதி இருந்தார்.

‘அன்னையின் அருள் தூணையும் துரும்பாக்கும். துரும்பையும் கரும்பாக்கும்’ என்பதற்கு அன்பர்களின் வாழ்வில் நிகழும் அற்புதக் காட்சிகளே சாட்சிகள்.book | by Dr. Radut