Skip to Content

20 - ஆட்கொள்ளும் அற்புதம்

‘அமுதசுரபி’ வாசக அன்பர் ஒருவர் அக்டோபர் 84-இல் ஒரு கடிதம் எழுதி இருந்தார். மணிமணியான கையெழுத்து. முழுமையான முகவரியைக் கொடுத்திருந்தார். அவர் ஒரு கிராமவாசி.

அன்பரின் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த செய்தி, அவர் தந்தையைப் பற்றியது. அவருடைய தந்தை அடக்கமான, அப்பாவியான மனிதர். அப்படிப்பட்ட மனிதரின் நடவடிக்கைகளில் திடீரென்று மாறுதல் ஏற்பட்டுவிட்டது. சதா புலம்பவும், கூச்சல் போடவும் தொடங்கினார். உண்ணும்பொழுதுகூட ‘ஐயையோ’, ‘அம்மா’ என்று புலம்பாமல் இருக்க மாட்டார். வர வர அவரே அவருக்குத் தொந்தரவாகிவிட்டதோடு, மற்றவர்களுக்கும் பெரிய தொந்தரவாகிவிட்டார். அவரை யாராலும், எதனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

கிராமத்தில் அவரைப் பற்றிய பேச்சுதான் முக்கியமான பேச்சாக அடிபட்டது. சிலர் அவரைப் ‘பைத்தியம்’ என்று கேலி செய்தார்கள். இன்னும் சிலர், “அவரை மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்று சிகிச்சை செய்து பாருங்களேன்!” என்று ஆலோசனை வழங்கினார்கள்.

கேலி, கிண்டல், ஆலோசனை போன்ற தாக்குதல்களால் வாசக அன்பரும், அவர் தாயாரும் மிகவும் மனம் ஒடிந்து போய்விட்டார்கள். ‘தந்தைக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று அவருக்கு மட்டும் அக்கறையும், கவலையும் இல்லையா? நிறையவே இருந்தன. ஆனால், அவற்றுக்குப் பல தடங்கல்கள் இருந்தன. அந்தக் கிராமத்தில் மருத்துவ விடுதி இல்லை. அவரைத் தொலை தூரத்தில் இருக்கும் நகரத்தில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சிகிச்சை நடக்கும் காலம் வரையில் தந்தையோடு அந்த அன்பரும் தங்கியிருக்க வேண்டும். அவர் அப்படித் தங்கிவிட்டால், குடும்பத்தில் கவனிக்க வேண்டிய அன்றாட வேலைகளைக் கவனிப்பதற்கு வேறு ஆண் பிள்ளைகள் இல்லை. வீட்டை விட்டு வெளியே கிளம்பிப் போய்ப் பழக்கம் இல்லாத தாயாரையும் தந்தைக்குத் துணையாக அனுப்ப முடியாது.

இந்த நிலையில், ‘என்ன செய்வது?’ என்று அவருக்குப் புரியவில்லை. எல்லா விவரங்களையும் எனக்கு எழுதி, “என் தந்தைக்கு நலமாக நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டிருந்தார் அவர்.

ஸ்ரீ அரவிந்தாசிரமத்திற்கு ஒரு சிறு காணிக்கையை அனுப்பி வைத்துவிட்டு, தினமும் அன்னையைப் பிரார்த்தனை செய்யும்படி அவருக்கு எழுதினேன் நான். ஆறு மாதங்களுக்குப்பிறகு அவரிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது.

“என் குடும்ப வாழ்வில் அன்னை பல அருளாசிகளை வழங்கி இருக்கின்றார். சதா புலம்பிக் கொண்டும், உறக்கமின்றித் திரிந்து கொண்டும் இருந்த என் தந்தை, இப்பொழுது அமைதியாக இருக்கின்றார். தன்னால் இயன்ற அளவு வேலைகளைச் செய்து கொண்டும் வருகின்றார்” என்று அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தார் அவர்.

2

பல குழந்தைகளை ஈன்றெடுத்த அன்னையாகிய ஒரு வாசக அன்பர், எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகள் இவை:

“நான் அன்னையைச் சிந்தித்து வந்தனை செய்து வருவதால், பல காரியங்கள் நன்மையாகக் கூடி வருகின்றன. “அன்னையின் அருளால் என் குழந்தைகள் ஒவ்வொருவரும் பரீட்சையில் தேற வேண்டும்” என்று வேண்டிக் கொண்டதோடு அன்னைக்கு ஒரு சிறிய காணிக்கையையும் அனுப்பி வைத்தேன்.

பரீட்சையில் என் இளைய மகனைத் தவிர மற்ற பிள்ளைகள் எல்லாம் வெற்றி பெற்றார்கள். என்றாலும் என் இளைய மகன் வெற்றி பெறாததால், என் மனம் மிகவும் வருந்தியது. அன்னையிடம் என் குறையை முறையிட்டு, ஏதேனும் ஒரு வழியைக் காட்டுமாறு பிரார்த்தித்துக் கொண்டேன்.

பள்ளி திறக்கப்பட்டது. என் இளைய மகனும் பள்ளிக்குச் சென்றான். சென்ற வருடம் படித்த அதே நான்காவது வகுப்பிலேயே அவனை உட்கார வைத்துவிட்டார்கள். அதற்குப் பிறகு ஒரு வாரம் சென்றது. எதிர்பாராத செய்தி ஒன்றை என் மகன் மூலம் அனுப்பி இருந்தார் அவனுடைய வகுப்பு ஆசிரியர். ‘நான்காவது வகுப்பில் தேறாதவர்களுக்கு மறுபடியும் ஒரு பரீட்சை வைக்கப்படும். அதில் வெற்றி பெற்றவர்கள், ஐந்தாவது வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்’ என்பதுதான் அந்தச் செய்தி.

இப்படிப்பட்டதோர் அற்புத நிகழ்ச்சி நடைபெற இருப்பதற்கு அன்னையின் அருளே காரணம் என்பது எனக்கு நன்றாகவே விளங்கியது. இதற்குமுன் அந்தப் பள்ளியில் இப்படிப்பட்ட பரீட்சை நடத்தப்பட்டதில்லை. அதனால் எனக்கு மகிழ்ச்சி; பரபரப்பு. பரீட்சைக்கு இன்னும் இரண்டே நாட்கள்தாம் இருந்தன. இதற்குள் என் மகனைத் தயார் செய்ய வேண்டும். அது அவ்வளவு சுலபமானதன்று. அவனுக்கு விளையாட்டுத்தனம் அதிகம். ஒரு முழு வருடமும் படிக்காமல் கோட்டைவிட்டவன், இந்த இரண்டு நாட்களுக்குள் என்ன படித்துவிடப் போகிறான்? பஞ்சை வேண்டுமானால் திணிக்கலாம். படிப்பைத் திணிக்க முடியுமா? அவன் எப்படிப் பரீட்சையில் தேறப் போகிறான்? ‘பரீட்சைக்கு வழி செய்த அன்னையின் அருள் மேற்கொண்டும் வழி காட்டும்’ என்று பரிபூரண நம்பிக்கையோடு அவனைப் பரீட்சைக்குத் தயார் செய்தேன்.

அவன் குறிப்பிட்ட நாளில் பரீட்சை எழுதி, தேவையான அளவு மார்க்குகளைப் பெற்றான். அவனைத் தேர்வு செய்து ஐந்தாம் வகுப்பில் உட்கார வைத்துவிட்டார்கள். ‘அவன் வெற்றிபெற்றதற்கு அன்னையின் அருள்தான் காரணம்’ என்பதை நான் தெளிவாக அறிகின்றேன்”.

3

ஒரு வாசக அன்பர் தன்னுடைய கைக் கடிகாரம் காணாமல் போய்விட்டது என்றும், அதனால் தான் மிகவும் வேதனை அடைந்திருப்பதாகவும் எழுதி இருந்தார். அதில் அவர், “காணாமல் போன அந்தக் கடிகாரத்தைத் திருப்பிப் பெற ஏதேனும் வழி சொல்ல வேண்டும்” என்று கேட்டிருந்தார்.

அவருக்கு நான் பதில் எழுதினேன். அதில், “எந்த ஒரு பொருளின் மீதும் அதற்குரிய கவனத்தைச் செலுத்தாவிட்டால், அது நம்மைவிட்டுப் போய்விடும். அதன் மீது யார் கவனத்தைச் செலுத்துகின்றார்களோ, அவர்களிடம் அது போய்ச் சேர்ந்து விடுகின்றது. உங்கள் கைக் கடிகாரத்தின் மீது செலுத்தத் தவறிய கவனத்தைக் கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இருப்பதோடு, நடந்துவிட்ட தவற்றுக்காக மனம் வருந்தி அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். காணாமல் போன கடிகாரம் கிடைத்துவிடும்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

சில நாட்களுக்குப்பிறகு அவரிடமிருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது. அதில், “4-12-84 அன்று சுமார் 9.30 மணி அளவில் என் கைக் கடிகாரம் காணாமல் போய்விட்டது. இரவு 12 மணி வரையில் தேடினேன். அது கிடைக்கவில்லை. என் மனம் மிகவும் நொந்துவிட்டது. மறு நாள் (5-12-84) உங்களுக்கு அது பற்றிக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்துவிட்டு, மறுபடியும் கடிகாரத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். அன்றிரவு 9.30 மணி அளவில், எந்த இடத்தில் அது காணாமல் போயிற்றோ, அதே இடத்தில் அது இருக்கக் கண்டேன். காணாமல் போன கடிகாரம் மீண்டும் அதே இடத்தில் எப்படிக் காணப்பட்டது? எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது; மிக மிக மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது” என்று எழுதி இருந்தார் அந்த அன்பர்.

4

இந்தியாவில் இருக்கும் ஒரு வாசக அன்பரின் மகளும், மருமகனும் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உயர் பணியாற்றி வந்தார்கள். அவர்கள் இருவரும் இந்தியப் பிரஜைகளாதலால் அவர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் அங்கே தங்குவதற்கு ‘விசா’ என்ற அனுமதியை அளித்திருந்தது. குறிப்பிட்ட ஒரு தேதியில் அந்த விசா காலாவதியாகி விடுமாதலால், அதனை அவ்வப்பொழுது புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு தடவை, ‘மேற்கொண்டு விசாவைப் புதுப்பிக்க முடியாது’ என்று கூறிவிட்டது அமெரிக்க அரசாங்கம். அதனால் சம்பந்தப்பட்ட இருவரும் உயர் பணியையும், மிகப் பெரிய வருமானத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதைக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்த அந்த வாசக அன்பர், இந்த விவரங்களை எல்லாம் எனக்கு எழுதி, பிரச்சினை தீர வழி கேட்டிருந்தார்.

“உங்கள் மகள், மருமகன் சார்பில் அன்னைக்கு ஒரு காணிக்கையை அனுப்பிவிட்டு, ‘விசா புதுப்பிக்கப்படுவதில் ஏற்பட்ட சிக்கல் நீங்க வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ளுங்கள். அன்னை எளிதில் சிக்கலை நீக்கி உதவுவார்” என்று பதில் எழுதினேன் நான்.

சில மாதங்களுக்குப்பிறகு, டிசம்பர் 84-இல், அந்த வாசக அன்பர், இரண்டாவதாக ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர், “நான் சில மாதங்களுக்குமுன்பு என் மகள், அவளுடைய கணவர் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையைப் பற்றி உங்களுக்கு எழுதினேன். நீங்கள் உங்கள் பதிலில் குறிப்பிட்டிருந்தபடி அன்னைக்குக் காணிக்கை அனுப்பிவிட்டு மனமுருகப் பிரார்த்தித்துக் கொண்டேன். அதற்குப்பிறகு அவர்களுடைய விசாப் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிட்டது என்பதை, நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கொண்டு அவர்கள் இருவரும் அமெரிக்காவில் தங்குவதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. மணியார்டர் மூலம் அன்னைக்கு மீண்டும் காணிக்கை அனுப்பியுள்ளேன். அன்னையின் அருள் மகத்தானது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

5

தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு வாசகரின் கணவர், ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார். என்ன காரணத்தாலோ அவருக்குப் பதவி உயர்வோ, 5 வருடங்களாகச் சம்பள உயர்வோ கிடைக்கவில்லை. அந்த நிறுவனத்தில் 24 வருடங்களாகப் பணி புரிந்து வரும் அவருக்கு ஏன் அந்த நிலை? புரியவில்லை.

அந்த வாசக அன்பரின் தோழி ஒருவர் ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அவர் ஊருக்குத் திரும்பும்பொழுது அன்னையின் திருவுருவப்படம் ஒன்றை வாங்கிச் சென்று நம் வாசக அன்பரிடம் கொடுத்தார்.

அன்னையின் படம் வீட்டிற்கு வந்தவுடன் 5 வருடங்களாகத் தடைப்பட்டிருந்த சம்பள உயர்வு அவருடைய கணவருக்குக் கிடைத்துவிட்டது. இந்த விவரத்தைத் தெரிவித்து எனக்குக் கடிதம் எழுதி இருந்த அந்த வாசக அன்பர், விரைந்து செயல்படும் அன்னையின் அருளை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.book | by Dr. Radut