Skip to Content

10 - கர்மவினையும் அன்னையின் அருளும்

தவிர்க்க இயலாத ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டு விழி பிதுங்கும்பொழுது அதனை, ‘தலைவிதி’ என்கின்றோம். இந்தத் ‘தலைவிதி’ என்பது என்ன? ‘முற்பிறவியில் செய்த வினையால் விளையும் பயன்களை யாராலும் தவிர்த்துக் கொள்ள முடியாது. அவற்றை அனுபவித்தே தீர வேண்டும்’ என்று தீர்ப்பு அளிப்பதுதான் தலைவிதி. தலைவிதியால் மட்டுமன்று; ஆரம்பக்கால வாழ்க்கையில் நாம் செய்த செயல்களே பிற்கால வாழ்க்கையின் முடிவாகவும் அமைகின்றது. செயல்களின் காரணமாக விளையும் பலன்களை எந்த விதத்திலும் தவிர்க்க முடியாது. செய்த வினைக்கு ஏற்ப, அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும். இது தொன்று தொட்டு வரும் வினைக் கொள்கையாகும்.

‘வினையால் விளையும் பலனைத் தவிர்க்க முடியாது’ என்பதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. சாபம் பெற்றவன் சர்வேச்வரனாகவே இருந்தாலும், அதிலிருந்து மீள முடியாது. அதன் விளைவுகளை அவன் சந்தித்தேயாக வேண்டும். ‘தசரதனுக்கு ஏற்பட்ட புத்திர சோகம், சாபத்தால் வந்தது’ என்பது நமக்கெல்லாம் தெரியும். ஒரு சமயம் வைகுண்டத்தில் துவார பாலகர்கள் காவல் செய்து கொண்டு இருந்தபொழுது, சில ரிஷிகள் மகாவிஷ்ணுவைத் தரிசிப்பதற்காக வந்தார்கள். அப்பொழுது மகாவிஷ்ணு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள் துவார பாலகர்கள். அதனால் கோபமுற்ற ரிஷிகள், அவர்களைச் சபித்தார்கள். எனவே அவர்கள் மனிதப் பிறவி எடுக்க வேண்டியதாயிற்று. பின்பு அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். “சர்வ வல்லமை பொருந்திய என்னாலும் சாபத்தை மாற்ற முடியாது” என்று மகாவிஷ்ணு கூறிவிட்டார்.

ஊழ்வினையின் வலிமையை வேறொரு விதத்திலும் பார்க்கலாம். இராமனாக அவதரித்த மகாவிஷ்ணு, வாலியை மறைந்திருந்து அம்பு எய்து கொன்றதால், அவர் கண்ணனாக அவதரித்தபொழுது கண்ணுக்குப் புலப்படாத வேடர்கள் எய்த அம்பினால் இறக்க வேண்டியதாயிற்று. இதிலிருந்து கடவுளர்களேயானாலும் வினைப்பயனை ஏற்றேயாக வேண்டும் என்பது தெளிவாகிறது.

அன்பர்களுக்குத் தேவையானதை, அவர்கள் கேட்காமலே கொடுக்கின்ற தெய்வம் அன்னை. அன்னையை நினைத்த மாத்திரத்திலேயே அன்பர்களிடத்தில் அவருடைய அருள் செயல்பட ஆரம்பித்துவிடுகின்றது. அன்பர்கள் வெளியிடாத விருப்பங்களையும் அன்னை பூர்த்தி செய்து வைக்கின்றார். அன்பர்கள் தம் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டவுடன், அன்னையின் அருள் அவற்றைத் தீர்த்து வைப்பதோடு, அவை மீண்டும் தோன்ற இயலாதவாறு அவற்றின் மூல வேர்களை அழித்தும்விடுகின்றது. அது அன்னையின் அருளுக்கு உரிய தனித் தன்மையாகும்.

துறவிகள், தவசிகள் போன்றவர்களை அணுகி, “கர்ம வினையினால் வந்த நோய், துன்பங்களை விலக்கி அருள் செய்ய வேண்டும்” என்று கேட்பவர்களுக்கு, “கர்மவினையினால் வந்தவற்றைப் போக்க முடியாது. அதை அனுபவித்தேயாக வேண்டும்” என்பார்கள் அவர்கள். ஆனால், அன்னையின் அருள் கர்மவினையால் வந்த துன்பங்களையும் எளிதில் விலக்கிவிடும்.

வாழ்க்கையில் சிறப்புப் பெறுவதற்குப் பெருந்தடையாக இருப்பது கர்மவினையே. ‘அன்னை தெய்வத்தின் அவதாரம்’ என்று உணர்ந்து அன்னையை ஏற்றுக் கொண்ட அன்பர்களின் கர்மவினைகள், முற்றுமாக அழிந்து போகின்றன. அன்னையை ஏற்றுக் கொண்ட பன்னிரண்டு மாதங்களுக்குள் அன்பர்களின் செல்வமும், சமூக அந்தஸ்தும் இருமடங்காகப் பெருகி விடுகின்றன. அது அன்னையை ஏற்றுக் கொள்கின்ற ஒவ்வோர் அன்பரின் வாழ்க்கையிலும் ஏற்படுகின்ற முன்னேற்றமாகும்.

கர்மவினையை அன்னையின் அருள் விலக்கிவிட்டதற்கு ஓர் உண்மை நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறலாம்.

ஓர் அரசாங்க அதிகாரி நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். பொறாமை காரணமாக, அவர் மீது இலட்ச ரூபாய்க்கு மோசடி வழக்கு ஒன்றைப் போட்டுவிட்டார் அரசியல் செல்வாக்குள்ள ஒருவர். அது பொய் வழக்குதான் என்றாலும், அதிகாரிக்கு நியாயம் கிடைக்க வழி இல்லை. ‘தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டம் வெகு தூரத்தில் இல்லை’ என்பது தெளிவாகிவிட்டது.

அதிகாரிக்கு, ‘இதிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ள மாட்டோமா?’ என்ற தவிப்பு. ஒரு நாடி ஜோதிடரை அணுகி, தம் கிரக நிலையை அறிந்து கொள்ள விரும்பினார். நாடி ஜோதிடர், “நீங்கள் சென்ற பிறவியில் உங்கள் முதலாளியை மோசம் செய்தீர்கள். அந்த வினையால் விளைந்ததுதான் இந்த மோசடி வழக்கு. நீங்கள் இதிலிருந்து தப்புவது கடினம்” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்.

அதைக் கேட்டபிறகு கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் முழுதுமாக இழந்துவிட்டார் அதிகாரி.

அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர், ‘அவர் பொய் வழக்கிலிருந்து மீள வேண்டும்’ என்று அன்னையைப் பிரார்த்தித்துக்கொண்டு ஆசிரமத்திற்கு மூன்று ரூபாய்களைக் காணிக்கையாக அனுப்பிப் பிரசாதத்தைப் பெற்று, அதை அந்த அதிகாரியிடம் சேர்ப்பித்தார்.

அதிகாரியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒன்பது. ஒவ்வொன்றும் கடுமையான தண்டனைக்கு உரியதாகும். அவர் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்ட பதினான்காம் நாள், “ஒன்பது குற்றங்களிலும் அந்த அதிகாரி சம்பந்தப்படவில்லை என்று தீர்ப்பு அளித்து அவரை விடுதலை செய்துவிட்டார்கள்” என்ற செய்தி, தந்தியின் மூலமாகக் கிடைத்தது.

அன்னையின் அருளுக்குப் பாத்திரமானவுடனேயே அன்பர்களின் கர்மவினைகள், முழுதுமாக விலகிப் போகின்றன; இப்பிறவியில் செய்த வினையானாலும், முற்பிறவியில் செய்த வினையானாலும், அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன.

‘வாழ்க்கையில் வளம் பெறுவதற்குத் தடைகள்தாம் காரணமாக இருக்கின்றன. அத்தடைகள் இருப்பதற்குக் காரணம் கர்மவினைகளே’ என்று நாம் முன்பு குறிப்பிட்டிருந்தோம். அன்னையை ஏற்றுக் கொண்ட அன்பர்களுக்குத் தடையற்ற வளர்ச்சி ஏற்படுவது திண்ணம். அது, ‘அவர்களிடம் இருந்த கர்மவினையை அன்னை அழித்துவிட்டார்’ என்பதற்கு அடையாளம்.

ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஒரு பாராளுமன்றத் தொகுதியில் தம்மை அபேட்சகராக நிறுத்த வேண்டும் என்று கேட்டுத் தம் கட்சிக்கு விண்ணப்பித்துக் கொண்டார். அனுமதி கிடைக்கவில்லை. அதனால் ஏமாற்றமும், வேதனையும் அடைந்த அவர், அன்னையிடம் முறையிட்டுக் கொண்டார். அதற்குப்பிறகு சில நாட்களுக்குள் வேறொரு மாநிலத்தில் உள்ள பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அவருக்கு வாய்ப்புக் கிட்டியது. தேர்தலில் நின்று வெற்றி பெற்றதோடு, அவர் மத்திய அரசில் ஓர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

மூடிக் கொண்டுவிட்ட அவருடைய எதிர்காலக் கதவு, அவர் அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டதும் படீரென்று திறந்து கொண்டதோடு, அவரே எதிர்பார்க்காத வகையில் அவரை அமைச்சராக்கி உயர்த்திவிட்டது அன்னையின் அருள்.

‘அன்னையைச் சரண் அடைந்தவரின் வாழ்க்கை இரு மடங்காக வளர்ந்து சிறக்கின்றது’ என்பதற்கு இன்னோர் அன்பரின் அனுபவம், உதாரணமாக அமைகின்றது.

அவர் அன்னையின் பக்தர்; தொழில் அதிபர். அவருடைய தொழில் வளர்ச்சிக்கு இரண்டு இலட்ச ரூபாய் உடனடித் தேவையாக இருந்தது. வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தார். ‘உங்களின் தொழிலுக்கு அத்தனைப் பெரிய தொகை கிடைக்காது’ என்று அவருடைய விவரம் புரிந்த நண்பர்கள் அவரைக் குழப்பினார்கள். ஆனால், அவர் குழம்பவில்லை. “நான் விரும்பிய தொகையை அன்னையின் அருள் பெற்றுக் கொடுக்கும்” என்று அவர் நம்பிக்கையோடு பதில் அளித்தார்.

அவர் நம்பிக்கை எதிர்பார்த்ததைவிட அவருக்கு அதிகமாகப் பெற்றுத் தந்துவிட்டது. வங்கியில் இரண்டு இலட்ச ரூபாய்தான் கடனாகக் கேட்டார். ஆனால், வங்கியோ, ‘அவருடைய தொழிலில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது’ என்று தீர்மானித்து அவருக்கு நான்கு இலட்ச ரூபாயைக் கடனாக அளிக்க முன்வந்தது!

இவ்வாறு இருமடங்காக நன்மைகள் கிடைக்கின்றபொழுது முற்பிறவிகளில் செய்த ‘கர்மவினைகள் யாவும் விலகிவிட்டன’ என்பதை உணர வேண்டும். வேறு வகை உலகியல் நடை முறையில் பார்த்தால், இந்த வகையிலான வளர்ச்சி இலட்சத்திலோ, கோடியிலோ ஒருவருக்குத்தான் ஏற்படும். அதற்கும் உதாரணங்கள் இருக்கின்றன.

பன்னிரண்டு வயதில் கிழிந்த கால் சட்டையுடன் சென்னைக்கு வந்த ஓர் அனாதைச் சிறுவன், தன் நாற்பதாவது வயதில் 12 கோடி ரூபாய் பெறுமானம் உள்ள சொத்துக்கு அதிபதியானான். அதே போல அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொடி பிடித்துக் கோஷம் போட்ட ஒருவர், அவருடைய கட்சியின் அகில இந்தியத் தலைவராக உயர்ந்தார்.

இலட்சத்திலோ, கோடியிலோ ஒருவர் மட்டுமே பெறக் கூடிய இத்தகைய உயர்வினை, அன்னையை வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு அவருடைய அருளுக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் பெறலாம்.

ஒரு கட்சியில் சாதாரணத் தொண்டராக இருந்த ஒருவர், ஒரு முறை அன்னையைத் தரிசிப்பதற்காக பாண்டிச்சேரிக்கு வந்தார். அவருக்கு அன்னையிடம் பக்தி இருந்த அளவுக்குப் பணம் இல்லை. அந்தக் காலத்தில் இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கக் கூடிய வசதிகளற்ற ஒரு விடுதியின் அறையில்தான் அவரால் தங்க முடிந்தது. அன்னையைத் தரிசித்தபிறகு அவருடைய நிலையில் மாற்றமும், ஏற்றமும் ஏற்படத் தொடங்கிவிட்டன. ஒரு பத்து ஆண்டுகளுக்குள் அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும், மாநில முதல் அமைச்சராகவும் உயர்ந்துவிட்டார்.

இவரைப் போலவே வாழ்க்கையின் உச்சிக்கு உயர்ந்தார் ஒரு வியாபாரி. ஏழு கோடி ரூபாய் அளவில் வியாபாரம் செய்து வந்த அந்த வியாபாரி, அன்னையைப் பூரணமாக ஏற்றுக் கொண்டபிறகு, மூன்று ஆண்டுகளில் நூற்று நாற்பது கோடி ரூபாய் அளவுக்கு அவருடைய வியாபாரம் பெருகிவிட்டது.

அன்னையை ஏற்றுக் கொள்வதற்காக என்ன செய்ய வேண்டும்? ஆசனம், பிராணாயாமம், மந்திரம், பூஜை போன்றவற்றைச் செய்ய வேண்டுமா? ‘தேவையில்லை’ என்று கூறுகின்றார் அன்னை. மனத் தூய்மையும், உண்மையான ஈடுபாடும்தான் தேவை. மனத் தூய்மையோடு உண்மையான ஈடுபாடும் கொள்ளும் பொழுது அன்னையின் அருள் செயல்பட்டு அரிய பெரிய கொடைகளை வழங்குகின்றது.

போக்க முடியாத கர்மவினைகளையும், பிராயச்சித்தத்தால் மட்டுமே தவிர்க்கக் கூடிய பழவினைகளையும்கூட அன்னையின் அருள் அழித்துவிடும். அதற்காக நாம் செய்ய வேண்டியது இதுதான்; ‘இதுவரை செய்த தவறுகளை இனிச் செய்வதில்லை’ என்று உறுதிப்பாடும் அதனைப் பின்பற்றுவதும்தான். அவ்வாறு நாம் நம்மைத் தோல் உரித்துக் கொண்டதும், அன்னையின் அருள் நாம் செய்த தவறுகளையும், அதனால் விளையக் கூடிய தீய பயன்களையும் அழித்துவிடுகின்றன.

சில சமயங்களில் சாபத்திலிருந்து விமோசனம் அடைந்த பலரின் கதைகளை நாம் புராணங்களின் வாயிலாக அறிகின்றோம். அந்தக் கதைகளில் விமோசனம் அளிப்பவர்கள், சில நிபந்தனைகளை வைப்பது வழக்கம். ‘இன்ன நிலையில் அல்லது இந்தக் காலத்தில் சாபம் நீங்கும்’ என்பது போலவிருக்கும் அந்த நிபந்தனைகள், ‘அகலிகைக்கு ஏற்பட்ட சாபம், ஸ்ரீ ராமன் அவதரித்தபிறகு, அவர் பாதம் கல்லாகச் சமைந்த அவள் மீது தீண்டும்பொழுது விலகும்’ என்று காலக்கெடு வைத்து அளித்த சாப விமோசனத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆனால், அன்னையின் அருளைப் பெறுவதற்கு இந்தக் காலக்கெடு எல்லாம் தேவை இல்லை. ‘எந்தக் கணத்தில் அன்னையின் அருள் அன்பரின் மீது பற்றுகின்றதோ, அந்தக் கணமே அவரைப் பற்றிக் கொண்டிருந்த தீமை விலகி விடுகின்றது. இத்தகைய அன்னையின் மகத்தான அருளைப் பெறுவது சுலபம்’ என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். மீண்டும் மீண்டும் அதை நினைவு கூர வேண்டும். ஆமாம், மனப்பூர்வமான வழிபாடும், அன்னையிடம் உள்ளன்போடு கூடிய ஈடுபாடும் மிக மிக இன்றியமையாதவை.

‘பிரச்சினை தோன்றுவதற்குக் கர்மவினையே காரணம்’ எனவும் ‘கர்மவினையை அன்னையின் அருள் விலக்கி விடுகின்றது’ எனவும் முன்னர் கூறியுள்ளோம். இனி, ‘அன்னையின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?’ என்பதைப் பற்றி விளக்குவோம்.

முதலாவதாக, ‘பிரச்சினை தீர வேண்டும்’ என்று அன்னையைப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பிரார்த்தனை செய்த பின்பும் அது விலகாமல் இருந்தால் அடுத்துச் செய்ய வேண்டியது பிரச்சினை எப்படிப் படிப்படியாக வளர்ந்து இப்போதுள்ள நிலையை அடைந்துள்ளதோ, அதனை அன்னையிடம் முறையாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறு பிரச்சினை தோன்றிய வரலாற்றை உண்மையாக எடுத்துச் சொல்லும் பொழுது, அன்னையின் அருள் ஆத்மாவைச் சூழ்ந்து நிற்கும் கர்மவினையின் மீது விழுகின்றது. அந்தச் சந்திப்பே நமக்குக் கர்மவினையிலிருந்து கிடைக்கும் விடுதலையாக அமைகின்றது.

ஒரு கர்மத்தைப் போக்க வேண்டுமானால் அதைப் போக்குவதற்கான மாற்றுக் கர்மங்கள் உண்டு. ‘அழுக்கு’ என்பது ஒரு கர்மமாகும்பொழுது, அதைப் போக்குவதற்கான ‘துப்புரவு’ மாற்றுக் கர்மமாகிறது. இதைப் போன்று கர்மத்தைத் துலக்குவதற்கான மாற்றுக் கர்மங்களைச் செய்வதற்குரிய சூழ்நிலைகளை அன்னையின் அருளே உருவாக்கிக் கொடுத்து நம்மை வழி நடத்தும். மாற்றுக் கர்மங்களைச் செய்ய வேண்டிய அன்பருக்குத் தெரியாமலே இந்த அற்புதத்தை நிகழ்த்துகின்றது அன்னையின் அருள். அன்னை உருவாக்கித் தரும் சூழ்நிலைகளை மட்டும் புரிந்து கொண்டு அன்பர் செயல்பட்டால், மாற்றுக் கர்மங்களை அன்னையின் அருளே முன்நின்று நிகழ்த்துகின்றது. அன்பர் புரிந்து கொள்ள வேண்டியதும், புரிந்த வழியே செயல்படுவதும்தான் முக்கியம். அதனால் அன்னையின் அருள் தடையின்றிச் செயல்பட்டு ஊழ்வினைகளைக் களைந்து உயர்வுகளை வாரி வழங்கும்.

‘ஜோதிடக் கணக்குப்படி ஆயுள் முடியப் போகின்றது’ என்ற நிலையில் அன்னையை அணுகி அன்பர்களான பலர், விதிக்கு விதி செய்து ‘மாரகம்’ என்ற மரண காலக் கெடுவைக் கடந்து நீண்ட காலம் வாழ்ந்ததற்கும், வாழ்வதற்கும் பல சான்றுகள் உண்டு. அன்னையின் அருளுக்கு ஜோதிடத்தைப் பொய்யாக்கி மரணத்தைத் துரத்தும் ஆற்றல் அதிகம் உண்டு.

ஆத்ம ஞானத்தைப் பெற வேண்டுமானால், நீண்ட காலம் தவம் இருக்க வேண்டும். அப்படி நீண்ட காலம் தவம் செய்தாலும், ஆத்ம ஞானம் கிடைப்பது நிச்சயம் இல்லை. ஏனெனில் அந்தப் பேறு ஒரு சிலருக்கே கிட்டுகின்றது. ஆனால், அன்னையை ஏற்றுக் கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் ஆத்ம ஞானத்தை அடிப்படையான அளவில் அன்னை வழங்கி விடுகின்றார். அதற்கு நீண்ட காலமும் தேவை இல்லை; கிடைக்க வேண்டிய பலனும் தடைப்படுவது இல்லை. ‘இது எப்படி?’ என்ற வினா எழும்புமானால், அதற்கு இது பதில்;

“கர்ம வினைகளை முற்றும் போக்குகின்ற அருளுக்கு ஆத்ம ஞானத்தை வழங்குவதில் யாதொரு தடையும் இருக்க முடியாது”.book | by Dr. Radut