Skip to Content

05 - ஸ்ரீ அரவிந்தரின் யோகம்

மகான் ஸ்ரீ அரவிந்தர் மகாசமாதி அடைந்தபொழுது அவருடைய உடலில் ஜகஜ்ஜோதியான பொன்னொளி பரவி மூன்று நாட்கள் வரையில் தங்கியிருந்து மறைந்தது. அவரது ஆயுட்காலத்தில் அவருடலில் இருந்திராத இப்பொன்னொளி மகாசமாதி அடைந்தபின், அவர் உடலில் புகுந்தது. மரணம், வறுமை, மூப்பு, நோய், துன்பம் போன்றவற்றையும், இவற்றிற்கெல்லாம் அடிப்படையான பொய்யையும் உலகிலிருந்து நிரந்தரமாகவும், அடியோடும் அழித்துவிடக் கூடிய சக்தி பெற்றது இப்பொன்னொளி. பன்னெடுங்காலம் தவமிருந்து தம் யோக முயற்சியால் இவ்வொளியைத்தான் உலகிற்குக் கொண்டுவரப் பாடுபட்டார் ஸ்ரீ அரவிந்தர்.

‘ஆத்மாவைப் பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து மோட்சம் அடையச் செய்வது’ என்பதே எல்லா யோகங்களின் இலட்சியமாகும். இறைவன் ஆத்மாவைச் சிருஷ்டித்தது உலகில் சத்தியத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அமைப்பதற்குத்தானே தவிர, அதிலிருந்து விடுபட்டுப் பிறப்பிடமான மோட்ச லோகத்தை வந்து அடைவதற்கன்று. பகவான் புத்தரும், சுவாமி விவேகானந்தரும் மோட்ச லோக வாசலை வந்தடைந்தபொழுது, இறைவனின் இலட்சியத்தை நினைவு கூர்ந்து, ‘உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் மோட்சம் கிடைக்கும்வரை, தங்களுக்கும் அந்த மோட்சம் தேவை இல்லை’ எனக் கூறி, வாராது போல் வந்த மோட்சத்தை மறுத்துவிட்டார்கள்.

புருஷனாகிய ஆத்மா பிரகிருதியுடன் கலந்தும், பின்னியும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. ஞான யோகி தன் ஆத்மாவுக்கு மோட்சம் வேண்டி, பிரகிருதிக்கு அடிமைப்பட்டு உழல்கின்ற புருஷனை அதிலிருந்து பிரிப்பதற்காக, பிரகிருதியின் வாயில்களான புலன்களை அவித்து தியானத்தின் தீவிரத்தால் புருஷனைப் பிரகிருதியிடமிருந்து பிரித்து வெற்றி காண்கிறான். அவ்வகையில் விடுதலை அடைந்த ஆத்மா, தன் பிறப்பிடமான பரம்பொருளை-இறைவனை-விரைந்து அடைகின்றது. விடுதலை அடைந்தபிறகு (இதுவரை பிரகிருதியின் பிடியில் சிக்கி, உடலின் அடிமையாகக் கட்டுண்டு இருந்த ஆத்மா) இந்த உடலிலேயே தங்கி இருக்க விரும்பினாலும், தூய்மையற்றதான உடலும், மனமும் ஆத்மாவின் விருப்பத்தைச் செயல்படுத்தத் தடையாகிவிடுகின்றன. எனவே இறைவனின் சத்திய ஆட்சியைத் தூய்மைப்படுத்தப்பட்ட தன் ஆத்மா மூலம் நிலை நாட்ட முனையும் பூரண யோகத்துக்கு ஞான யோக முறை-பிரகிருதியைப் பிரிக்கும் முறை-பயன்படாது.

ஸ்ரீ அரவிந்தரின் யோகம் ‘பூரண யோகம்’ எனப்படும். இதன் இலட்சியம் இறைவனின் பணியை உலகில் பூர்த்தி செய்வதாகும். அவ்வேலையைச் செய்வதற்கு விடுதலை அடைந்த ஆத்மா, உடலிலேயே தங்கியிருக்க வேண்டும். ஆகையால் இந்த யோகத்தில் ஆத்மாவுக்கு விடுதலை கொடுப்பதற்குமுன்பு, உடலுக்கும் மனத்துக்கும் பொய்ம்மையிலிருந்து பூரண விடுதலை அளிக்க வேண்டும். உடலையும் மனத்தையும் தூய்மைப் படுத்துவதன் வாயிலாக ஆத்மாவுக்குப் பிரகிருதியிலிருந்து விடுதலை கிடைக்க முயல்வது இந்த யோக நெறியின் நோக்கமாகும்.

ஆத்மா இறைவனின் கருவி. அகங்காரம் இருளின் கருவி. உடலையும், மனத்தையும் அகங்காரத்தினின்று விடுவித்தால், அதை ஏவிய கருவியாகிய இருள் அழிந்து போகின்றது. அதன் மூலம் ஆத்மாவைக் கவிந்துள்ள ஆணவ மலம் விலக்கப்படுகின்றது. ஆத்மா பொய்ம்மையிலிருந்தும், அதன் வாயிலாகப் பிரகிருதியிலிருந்தும் விடுதலை அடைகின்றது. பொய்யான எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள் எல்லாம் அகங்காரத்தின் பல கூறுகள். அவற்றை ஆத்ம ஒளிக்குச் சமர்ப்பித்துச் சரண் அடைவதன் மூலம், தூய்மையான உடலும், தூய்மையான மனமும் கிடைக்கின்றன. ஆத்மாவுக்கு விடுதலை கிடைக்கின்றது. சரணாகதி முழுமையாகும்

நிலையில் அகங்காரம் முழுதுமாக அழிந்துபடுகின்றது. அந்நிலையில் ஆத்மாவுக்குப் பூரண விடுதலை கிடைக்கின்றது. இத்தன்மை படைத்த விடுதலை பெற்ற ஆத்மா, இறைவனுக்குக் கருவியாகச் செயல்பட விரும்பி உலகிலேயே தங்க முடிவு செய்தால், அதற்குத் தக்க இருப்பிடமாக அமைந்த ஒரு தூய்மையான உடல் இப்பொழுது அந்த ஆத்மாவுக்கு உண்டு.

மகான் ஸ்ரீ அரவிந்தர் தம் யோகத்திற்கு ஒரு புதுக் குறிக்கோளையும் அளிக்கின்றார். ‘ஆத்மா என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இறைவனின் பிரதிநிதியாக இருக்கின்றது’ என்பதை நாம் பொதுவாக அறிவோம். யோக மரபுப்படி உலகத்துக்கு ஓர் ஆத்மா உண்டு; பிரபஞ்சத்திற்கும் ஓர் ஆத்மா உண்டு (Universal Soul). ஸ்ரீ அரவிந்தர், ‘மனிதனுடைய ஆத்மாவுக்கு இந்த இரண்டு அம்சங்களும் உண்டு’ என்பதை நினைவுபடுத்துவதுடன், ‘மனிதனாகிய தன்னை ஆத்மாவாக அறிந்ததுடன் நில்லாமல் யோகி தன்னைப் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும் உணர வேண்டும்’ (A Centre of Universal Soul) என்று கூறுகின்றார். அதோடு, பரம்பொருளை இந்த இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகவும் யோகி உணர வேண்டும் என்றும் கூறுகிறார். தன்னையும், பிரபஞ்சத்தையும், அப்பாலுக்கும் அப்பால் உள்ள இறைவனையும் ஆத்மாவாக உணர்தல் என்பது ஸ்ரீ அரவிந்தருடைய பூரண யோகத்தின் முதற்படியின் மூன்று பாகங்களாகும்.

யோகியின் ஆத்மா விடுதலை அடைந்தவுடன் அது பரம்பொருளுடன் தொடர்பு கொள்கின்றது. தான் பிரபஞ்சத்தின் ஆத்மாவுமாகும் என்ற யோக நிலையை எய்தியவன், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியுடனும் ஆன்மிகத் தொடர்பு உள்ளவனாகின்றான். சாதாரண மனிதன் தன் விருப்பங்களுடைய கருவியாக மாறி, அவற்றைப் பூர்த்தி செய்வதற்காக வாழ்க்கையை நடத்துகின்றான். யோக சித்தி பெற்றவனும் வாழத்தான் செய்கின்றான். ஆனால், அவன் தன்னுள் விடுதலை அடைந்த ஆத்மா பரிபூரணமாகிப் பக்குவம் அடைவதற்காகவே உலகில் தங்கியிருக்கின்றான். அவனை ‘ஜீவன் முக்தன்’ என்கிறோம். மரத்தில் பழுத்த பழம் காம்பிலிருந்து கழன்று விழுவதற்கு மேலும் சில நாட்களாவதைப் போல், ஜீவன் முக்தன் மேலும் சில காலம் உலகில் இருக்கின்றான். இறைவனின் பணியைப் பிரபஞ்சம் முழுதும் செயலாற்ற ஜீவன் முக்தன் பயன்பட மாட்டான். ஏனெனில் அது முதலிலிருந்தே அவனுடைய குறிக்கோள் இல்லை.

பூரண யோகி, ஜீவன் முக்தனினின்றும் வேறுபட்டவன். அவன் தன் உடலையும் கரணங்களையும் (புலன்களையும்) தூய்மைப் படுத்திவிட்டமையால் இறைவனுக்கு ஏற்ற கருவியாகின்றான். இறைவனுடன் முழுமையான நேரடித் தொடர்பு உள்ளதால், இறைவனின் எண்ணத்தைப் பூரணமாகப் பிரதிபலிக்கும் திறன் அவனுக்கு உண்டு. அவனுக்குப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுடனும் ஆன்மிகத் தொடர்பு ஏற்பட்டிருப்பதால், பிரபஞ்சத்தில் அவனால் திறம்படச் செயல்பட முடியும். ஆகவே பூரண யோகம் கொண்டுள்ள ஓர் இலட்சியத்தை-அதாவது உலகில் மரணத்தையும், பொய்யையும், பிணியையும், துன்பத்தையும் விலக்கி, சத்தியத்தின் ஆட்சியைத் தோற்றுவிக்கும் இலட்சியத்தை-நிலை நாட்ட அவன் ஓர் ஆற்றல் மிகு கருவியாக இறைவனுக்குப் பயன்பட முடியும்.

யோக நிலைகளில் பல கட்டங்கள் உண்டு. மௌனம் காத்து ‘முனிவர்’ எனப் பெயர் பெற்றோர் முதல் கட்டத்தில் வருகின்றார்கள். உலக நிகழ்ச்சிகளை அகக் காட்சிகளாகக் காணும் ரிஷி, அடுத்த நிலையில் உள்ளவர். அவற்றைக் கடந்து ஆத்ம ஞானத்தை நேரடியாக உணர்பவர் யோகி. இந்த நிலைகளுக்கு அப்பால் தெய்வங்களாகிய சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் போன்றவர்கள் உறையும் லோகம். ‘கிருஷ்ணாவதாரம் இந்த லோகத்தின் சிறந்த சக்தியை மனித குலத்துக்கு வழங்கிற்று’ என்பர். சிருஷ்டியை ஒரு கோளமாக உருவகப்படுத்தினால், மேற்சொன்ன நான்கு நிலைகளும் கோளத்தின் கீழ்ப் பாதியைச் சேர்ந்தவை. கிருஷ்ணாவதாரம் அதன் உச்ச கட்டம். அந்த நிலைக்குரிய நிறம் நீலம். அவற்றைக் கடந்து சென்றால் கோளத்தின் மேற்பகுதியின் முதல் நிலை. இந்து மரபுப்படி அதற்கு ‘மகர லோகம்’ என்றும், கடைசி லோகத்துக்கு ‘சத் லோகம்’ என்றும் பெயர்கள். அதற்கும், மகர லோகத்திற்கும் இடையேயுள்ள லோகங்கள், ‘ஆனந்த லோகம்’, ‘சித் லோகம்’ என்பனவாகும். சிருஷ்டி அத்துடன் முடிவடைகின்றது. சிருஷ்டிக்கும் அப்பாற்பட்ட இறைவன், சிகரமாக இருக்கின்றான். வேத ரிஷிகள் தங்கள் யோக மார்க்கத்தின் வழியாக இந்த எல்லா லோகங்களிலும் சஞ்சரிக்கின்றனர்.

பூரண யோகி இப்போது கருவிக்கேற்ற முழுத் தகுதியையும் பெற்றுவிட்டான். ஆனால், இறைவனின் இலட்சியத்தை நிறைவேற்றும் சக்தி அவனிடம் இல்லை. தெய்வ லோகத்திற்கு அடுத்த நிலையில் உள்ள மகர லோகத்தில் அந்த சக்தி உறைகின்றது. அந்த லோகத்தை அடைந்தவர் பலர். அதற்கும் அப்பால் உள்ள உலகங்களுக்குச் சென்று சேர்ந்தவரும் பலர். அங்கெல்லாம் சென்றவர்கள் அந்த லோகங்களின் மேன்மையால், தம் ஆத்மாவின் உயர்ந்த இலட்சியங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் ஆற்றலைப் பெறுகின்றார்கள். ஆனால், அந்த லோகங்களில் பொதிந்துள்ள தெய்விக சக்தியைப் பூவுலகிற்குக் கொண்டுவரக் கூடிய ஆற்றல் அவர்களுக்கு இல்லை.

ஞான யோகம் உயர்ந்தது. அது ஞானத்தையே கருவியாகக் கொண்டது. மனிதனின் பல பகுதிகளில் ஒன்றான மனத்தின் சிறப்பு ஞானம். ராஜ யோகம் எல்லா யோகங்களுக்கும் தலையானது. அதன் கருவி மனமாகும். பூரண யோகத்தில் ஒரு கருவியை மட்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஆத்மா, மனம், உடல் ஆகிய எல்லாக் கருவிகளையும் பூரணமாகப் பயன்படுத்துகின்றான் பூரண யோகி. அத்துடன் அவன் ஆத்ம விடுதலைக்கு முன்னதாக கரணங்களைத் தூய்மைப்படுத்தும் செயலில் முனைகின்றான். எனவே, பூரண யோகி மனித நிலையிலிருந்து ஒரு கட்டத்திற்கு-மௌன நிலைக்கு-உயர்ந்தவுடன், தெய்வ நிலையில் உள்ள எல்லா சக்திகளும் அவனுடைய ஆத்மாவிலும், உடலிலும் பாய்ந்து நிரம்புகின்றன. முனிவன், ரிஷி, யோகி, தெய்வம் ஆகிய நிலைகளை அவன் அடையும்போது, ஒவ்வொரு முறையும் அந்தந்த லோகத்திற்கு உண்டான எல்லா சக்திகளும் அவனுடலில் இறங்கி நிலைக்கின்றன. அவனுடைய உடலை நிரப்புகின்றன.

‘ஆத்ம விடுதலையாலும், விடுதலையை மோட்சமாக மாற்றாத இலட்சியத்தாலும், தன்னைப் பிரபஞ்சத்தின் ஆத்மாவாக உணர்ந்து, அதனால் சகல ஜீவராசிகளுடனும் முழுத் தொடர்பு கொண்டமையாலும் பூரண யோகி இறைவனுக்கு ஏற்ற கருவியாகின்றான்’ என்று சொன்னோம். அவன் முனிவன், ரிஷி, யோகி, தெய்வ நிலைகளைக் கடந்து மகர லோகத்தை அடையும்பொழுது, அந்த லோகத்தில் உள்ள சக்தி-சத்தியத்தின் மகத்தான சக்தி-மரணம், மூப்பு, பிணி, பொய்ம்மைகளை வெல்லும் வலிமையை அவனுக்குப் பூரணமாக அளிக்கின்றது.

அந்த லோகத்தின் ஒளி பொன்னொளி. பொன்னொளி படர்ந்த அந்த சக்தி முழுமையாக அவனுடைய தூய்மையான உடலில் பாய்ந்து, நிரம்பி, மிளிர்ந்து ஒளிர்கின்றது. இனி அவனால் ஒவ்வொரு கணமும் இறைவனின் கருவியாக உலகில் செயல்பட முடியும்; மரணத்தை வெல்லும் கருவியாகச் செயல்பட முடியும். துன்பத்தைத் துடைக்கும் கருவி அவனே. சத்திய உலகிற்கு அவனே அஸ்திவாரக் கல். எல்லா ஜீவராசிகளுடனும் ஆன்மிகத் தொடர்பு கொண்டுள்ளதால், அவற்றின் வாழ்வில் திரையிட்டு மூடும் மரணத்தை வெல்ல அவனால் முடியும்.

1920-இல் அன்னை ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து உலக நலனுக்காக யோகத்தை அவர்கள் இருவரும் கூட்டாக மேற்கொள்வதென முடிவு செய்தபொழுது, நீல ஒளி நிறைந்த தெய்வ லோக சக்தியால் தம் யோகத்தைப் பூர்த்தி செய்யலாம் என்று கருதினார் அன்னை. “அந்த சக்திக்கு மரணத்தை வெல்லும் ஆற்றல் இல்லை” என்று மகான் ஸ்ரீ அரவிந்தர் விளக்கம் கூறிவிட்டு, “அதற்கு அடுத்த சக்தியைப் (Supramental Force) பயன்படுத்த வேண்டும்” என்றார்.

முடிவில், ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் உலகத்துக்காக யோகத்தை மேற்கொண்டு ஆசிரமம் நிறுவினர். அதன் நோக்கங்களாவன:

  1. கரணங்களை-மனம், உடல்-முதலியவற்றைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் அகங்காரத்தை அறுத்து ஆத்மாவுக்கு விடுதலை (மோட்சத்துக்குச் செல்லும் தகுதி) அளிப்பது.
  2. தன்னைப் பிரபஞ்சத்தின் ஆத்மா என உணர்ந்து, எல்லா ஜீவராசிகளுடனும் ஆன்மிகத் தொடர்பைப் பூரணமாகப் பெறுதல்.
  3. யோகத்தால் ஆத்மாவையும், கரணங்களையும் மகர லோகம் அடையச் செய்தல்.

மகான் ஸ்ரீ அரவிந்தர் தம் யோகத்தில், தம் குறிக்கோளாகக் கொண்டவற்றை எல்லாம் முழுதுமாகப் பெற்றார். அவருக்கு சக்தியாக விளங்கிய அன்னை ஸ்ரீ அரவிந்தருடைய அருளை, தம்மைச் சூழ்ந்திருந்த சாதகர்கட்கும், தம்மை வணங்கும் பக்தர்களுக்கும், தம்மை அறிந்திராத ஏனைய உலகத்தாருக்கும் பரிபூரணமாகப் பரிமாறினார். அதாவது ஊற்று நீராக இருந்த ஸ்ரீ அரவிந்தக் கருணையைப் பருகும் நீராக அளித்தவர் அன்னை. ‘அன்னை இல்லாவிட்டால் தம் யோகப் பலன்கள் எல்லாம் தம்முடனேயே இருந்துவிட்டிருக்கும், மற்றவர்கட்குப் பயன்பட்டிராது’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியிருப்பது இதற்குச் சான்று.

பூரண யோகத்தால் பொன்னொளியையும், அது நிறைந்துள்ள உலகையும் அடைந்தார் ஸ்ரீ அரவிந்தர். இறைவனின் அருள் தன் இருப்பிடத்தைவிட்டு நகர்ந்து பூவுலகிற்கு வந்து செயல்படத் தயாராக இருக்கின்றது. ஸ்ரீ அரவிந்தரின் யோகம் பூரணமாகப் பலித்துவிட்டது. அப்பலனை அவரிடமிருந்து பெற்று உலகுக்கு வழங்க அன்னை அவர் அருகில் இருக்கின்றார்.

ஆனால், பூவுலகம் தயாராக இல்லை. பூவுலகம் இறைவனின் அருளை ஏற்கத் தயாராக இருப்பதற்கு ஓர் அறிகுறி உண்டு. 12 பேர் இறைவனின் கருவிகளாக ஏற்படுவதே அந்த அடையாளம். பூவுலகம் இன்னும் தயாராகவில்லை. 12 கருவிகள் இன்னும் ஏற்படவில்லை. ஸ்ரீ அரவிந்தரின் முன்னுள்ள பிரச்சினை இதுதான். அந்த நிலையில் பெற்ற பாக்கியத்தைத் தாமே அனுபவிக்கலாம்; அல்லது, உலகம் தயாராகும்வரை அவர் உலகத்தில் காத்திருக்கலாம். ‘காத்திருக்கலாம்’ என்றால் எத்தனை காலம்? அவருடைய கணக்குப்படி 300 ஆண்டு காலம். அத்தனை ஆண்டு காலம் காத்திருக்க அவர் தயாராக இல்லை. தம்முடைய உடலை நீத்து, சூட்சும உலகில் சென்று தங்கி, உலகைத் தயார் செய்வது என முடிவு செய்தார் அவர். அத்துடன், ‘ஒரு முறையாவது, ஓர் உடலிலாவது அப்பேரொளி -பொன்னொளி-உலகில் செயல்பட வேண்டும்’ எனக் கருதினார். ஆனால், தம்முடைய உடலில் உயிர் உள்ளவரை அது சாத்தியம் இல்லை என அறிந்து, தம் உயிரை நீத்து உடலை அப்பொன்னொளிக்கு ஏற்ற பாத்திரமாக வழங்குவது எனத் தீர்மானித்தார். அதன்படி 1950, டிசம்பர் 5-ஆம் தேதி அவர் மகாசமாதி அடைந்தார். அவர் உடலில் பொன்னொளி எழுந்தது. அப்பொன்னொளி அவருடைய உடலில், அது வைக்கப்பட்டிருந்த ஐந்து நாட்களில் மூன்று நாட்கள் வரை தங்கிப் பிரகாசித்தது.

மகான் ஸ்ரீ அரவிந்தர், தம் உடலில் உள்ள எல்லா யோக சக்திகளையும் அன்னையின் உடலில் தங்க வைத்த பின்னரே சமாதி அடைந்தார். அன்னை அவரின் யோகப் பணியைத் தொடர்ந்து செய்தார். 1956-ஆம் ஆண்டு அன்னை தம் தியானத்தில் பொன்மயமான அந்த உலகைப் பொன் மயமானதும், பிரம்மாண்டமானதுமான கதவு ஒன்று மூடி இருப்பதைப் பார்த்து, மிகப் பிரம்மாண்டமான பொன் சுத்தியால் அக்கதவைத் தூள் தூளாக உடைத்தார். அக்கணமே பொன்னொளியின் பிரவாகம், உலகைத் தன் வெள்ளத்தால் மூடியது. அச்சமயம் உலகில் உள்ள தமோ குண சக்திகள் பொங்கி எழுந்து, பொன்னொளியை முழுதுமாக மறைக்க முயன்றன. அதில் பெரிய அளவுக்கு அவை வெற்றியும் கண்டன.

1967-இல் பொன்னொளிக்கு மேலும் ஒரு வெற்றி கிட்டியதாகக் கூறுகின்றார். அன்னை 1969-இல் அப்பொன்னொளி மேலும் வெற்றி பெற்று, உருவம் பெற்று ஜனவரி முதல் தேதியன்று அன்னையின்முன் வந்து காட்சி அளித்தது. “உலகியல் வாழ்வில் ஏற்பட்ட பேராபத்துகள்-க்யூபாவில் அமெரிக்க-சோவியத் மோதல், சீனாவின் படை எடுப்புப் போன்றவை தாமாகவே மறைந்த அற்புதம், இந்த ஒளி செயல்படுவதால்தான் ஏற்பட்டது” என்று அன்னை கூறுகின்றார்.

எளிய மனிதனுடைய வாழ்வில் இந்த ஒளிச் சிறப்பும், யோக சக்தியும் பல வகைகளில் செயல்பட்டாலும், அவை குறிப்பாகவும், சிறப்பாகவும் இரு வகைகளில் வெளிப்படுகின்றன. அவை

  1. கர்ம பலனை (விதியை) அழித்து கர்மத்திலிருந்து மனிதனுக்கு விடுதலை அளிப்பது.
  2. பிரார்த்தனை செய்யாமலேயே-அதாவது கேட்காமலும் கோராமலும் இருக்கும் போதே-தம் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வது.

 



book | by Dr. Radut