Skip to Content

05.அஜெண்டா

“Agenda”

Vol.11 Mother never asked HIM questions

Pg. 60 அன்னை பகவானிடம் கேள்வி என்று கேட்டதில்லை

கேட்டறியும் ஞானம் கேள்வி ஞானம். புறம் அகத்திற்கு புனிதமாக உணர்த்தும் ஞானம் அது. கேள்வி ஞானத்திற்குக் கேட்பது அவசியம். கேள்வி எழுந்தால் ஞானம் எழும். கண் பார்த்தால் கை செய்ய வேண்டும் என்ற வழக்கு கேள்விக்கு இடமில்லை என்று கூறுகிறது. புறம் தருவது புலனறிவு.

தியான் என்றொருவரை அன்னை பாரிசில் சந்தித்தார். தியான் என்றால் கடவுள், ஆண்டவன் எனப் பெயர். நம்மவர், 'ஆண்டே', 'சாமி', எனக் கூப்பிடுவது போன்ற சொல். அச்சொல்லையே தமக்கு இயற்பெயராகப் பூண்டவர். அது அவர் பெயரன்று. தம் பெயரை மாற்றியவர், தாம் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என எவரிடமும் கூறியதில்லை. ஓர் ஆங்கிலப் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். தியானுக்கு சூட்சும அறிவு அதிகம். இறைவனின் சிருஷ்டியைக் காணும் திறன் பெற்றவர். அவர் உருவம் அன்னை தம் தியானத்தில் கண்ட கிருஷ்ணா என்ற உருவம் போலிருந்ததால், அன்னை அவரை நாடினார். அவர் மனைவி அன்னைக்களித்த புத்திமதி,
 

"குருவை ஒருபொழுதும் கேள்வி என்று கேட்கலாகாது''

என்பது. அன்னை அவருடன் அல்ஜீரியா சென்றார். சூட்சுமம் பயின்றார். உடலைவிட்டு உலகெங்கும் செல்லும் திறன் பெற்றார். வெளிவந்த உடலினின்று மீண்டும் வெளிவரவும் முயன்றார். அதுபோல் 12 முறை வரவும் பயின்றார். 12ஆம் முறை அதுபோல் வந்தபின் தலைமீது சூரியனும், சூரியன்மீது சந்திரனும் உறையக் கண்டார். அவ்வாறு சூட்சும உலகங்களில் சஞ்சாரம் செய்தபொழுது பூமியின் ஞாபகம் உறையுமிடத்தை அடைந்தார். வாழ்வின் மந்திரம் சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டதையும் கண்டார். சமஸ்கிருதம் தாமறியாதது என்றாலும் அன்னையால் அதை மனத்துள் வாங்கிப் பதிக்க முடிந்தது. அதைக் கண்ட தியான் அந்நிலையில் தமக்கு அம்மந்திரம் வேண்டும் என்றார். அதற்குள் அன்னைக்கு தியான் தாம் கண்ட கிருஷ்ணா இல்லை என்று தெரிந்தது. அத்துடன் அவர் மரணத்தின் தலைவன் எனவும் தெரிந்தது. மரணத்தின் தலைவன் வாழ்வின் மந்திரத்தைப் பெற்றால் வாழ்வு மரணத்தினின்று விடுபடும் வாய்ப்புப் போய்விடும் என அறிந்து மறுத்துவிட்டார். தியான் அன்னை சூட்சுமத்தினின்று திரும்பிவரும் மார்க்கத்தைத் துண்டித்துவிட்டார். இருப்பினும் அன்னை மறுப்பை மாற்றவில்லை. ஏனோ துண்டித்த மார்க்கம் துண்டிப்பை இழந்தது. அன்னை மீண்டும் உயிர் பெற்றெழுந்தார். பிற்காலத்தில் பகவானைச் சந்தித்தபொழுது அம்மந்திரத்தை அவரிடம் கொடுத்தார்.
 

. குருவை கேள்வி கேட்கக் கூடாது.

. குரு, சிஷ்யன் இலட்சியத்தின் எதிரியானால், குருவின் பேச்சை சிஷ்யன் கேட்கக் கூடாது.

. எத்தனை மகத்துவம் வாய்ந்ததானாலும், சூட்சுமம் உலகை மாற்றப் பயன்படாது.

. உலகை மாற்ற சத்திய ஜீவியம் பயன்படும்.

. உலகில் எதிர்மறையானவையும் உண்மை.

 

****


 


 



book | by Dr. Radut