Skip to Content

09.இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

"அன்னை இலக்கியம்''

இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

                                                                                                                    இல. சுந்தரி

பி.. பட்டம் பெற்றுவிட்டாள் உமா. அக்குடும்பத்தில் யாருக்குமே பெண் வாரிசு இல்லை. எனவே, தாத்தாவின் செல்லப் பெண்ணாய் வளர்ந்து பி.. பட்டம் பெற்றுவிட்டாள். மேற்கொண்டு ஆனர்ஸ் படிக்க ஆவல் இருந்தும் தாத்தாவின் மறைவிற்குப்பின் மேற்படிப்பு மறுக்கப்பட்டுவிட்டது. உயர் சிந்தனையாளர்களின் எழுத்துகளைப் படிக்கும் வாய்ப்பிருந்ததால் பத்தாம்பசலித்தனம் இல்லாத அபூர்வப் பெண்ணாய் தனக்குள்தானே வளர்ந்துவந்தாள். புறச் சூழல்களில் ஒரு சலிப்பிருந்தது. வீட்டில் திருமணப் பேச்செழுந்தது. துவண்டு போனாள் உமா. வாழ்வின் இலக்கு என்னவாக இருக்கும்? பெண்ணைப் பொருத்தவரை படிப்பிற்கு முக்கியத்துவம் எழாத காலமது. ஏதோ சிறிது படிப்பு, திருமணம், பிள்ளைப்பேறு, குடும்ப வாழ்வு என்று சுற்றிச்சுற்றி வருவதாக உணர்ந்தாள். உள்ளுக்குள் ஓருணர்வு, இல்லை, இது இல்லை என்று சதா மறுக்கிறது. பரமஹம்சர் சொல்வாரே நேதி, நேதி என்று அதைப்போல. அடிக்கடி போட்டுப் போட்டுச் சுழலவிட்டதால் கீரல்விழுந்த பிளேட்டுப்போல ஏதோ அபஸ்வரம் தட்டுவது போலுணர்கிறாள்.

ஒரு நாள், சமையலறையில் அம்மாவிற்கு ஒத்தாசை செய்தவண்ணம் அம்மாவிடம் பேச்சுக் கொடுக்கிறாள்.

"ஏனம்மா? உனக்குத் திருமணமாகும்போது எத்தனை

வயதிருக்கும்?'' என்றாள் உமா.

"எதற்காக கேட்கின்றாய்?'' என்றாள் அம்மா.

"சும்மாத்தான். சொல்லேன்'', என்றாள்.

"எனக்குப் பதின்மூன்று வயதில் திருமணம்'', என்றாள் அம்மா.

"பதின்மூன்று வயதில் உனக்கு என்ன தெரியும்? ஏன் அப்போதே திருமணம்'' என்றாள் உமா.

"எனக்கெதற்குத் தெரியவேண்டும்? பெரியவர்கள் சொல்வதைக் கேட்டால் போதாதா?'' என்றாள் அம்மா.

என்னவொரு கண்மூடித்தனம் இது? என்று உமாவின் உள்ளம் சலிப்படைந்தது. "நீயாகவே எதுவும் சிந்தித்தது இல்லையாம்மா? உனக்காக அபிப்பிராயங்களே கிடையாதா?'' என்றாள் உமா மெதுவாக.

அவ்வளவுதான் அப்போது அங்கு வந்த அப்பா ருத்ரமூர்த்தியானார். இதற்குத்தான் பெண் அதிகம் படிக்கக்கூடாது என்று சொல்வது, பெரிய மேதை என்று மனதில் எண்ணமோ? என்றார் அப்பா.

உமா பேச்சை நிறுத்திவிட்டாள். தாத்தா இருந்திருந்தால் தனக்கு ஆதரவாய்ப் பேசியிருப்பார். அப்பாவிடம் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை.

என் வாழ்வின் இலக்குதான் என்ன? மனிதப் பிறவியின் உயர்நோக்கம் எதுவாக இருக்கும்? எங்கிருந்து வந்தோம்? எங்கு போகவேண்டும்? சிந்தனைகள் எழுந்தவாறு இருந்தன. யாரிடம் கேட்டாலும் நிறைவளிக்கும் பதில் இல்லை.

அம்மாவிடம் கேட்டாள் இதை. "யார் கண்டது? வந்துவிட்டோம். ஒரு நாள் போய்த்தான் ஆகவேண்டும்'' என்று சர்வசாதாரணமாய்க் கூறினாள்.

எனக்கு மட்டும் ஏன் எதைக் கண்டாலும் நிறைவில்லை? மாலை நேரங்களில் இக்கேள்வி பூதாகரமாய் எழுந்து வேதனையளித்தது.

"எப்பொழுது பார்த்தாலும் என்ன சிந்தனை? உலகில் உன்னையொத்தவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கவில்லையா?'' என்றாள் அம்மா.

மாலைப் பொழுதாகிவிட்டால், மக்கள் உல்லாசமாய் கடற்கரைக்கும், பூங்காவிற்கும் புறப்படுகின்றனர். வண்ண விளக்குகள் சென்னையை சொர்க்கபுரியாய் மாற்றுகின்றன.

போதாக்குறைக்குப் பேசும்படம் வேறு வந்துவிட்டது. மக்களுக்கென்ன? பொழுதுபோக்க வேண்டும், அலுப்புத் தீரவேண்டும், துன்பங்களை மறக்கவேண்டும்.

ஏன் தன்னால் மட்டும் இப்படியெல்லாம் இருக்க முடியவில்லை? எங்கிருந்து வந்தோம்? எங்குச் செல்லவேண்டும்? உண்பது, உடுப்பது, களிப்பது என்று முடிந்துவிட்டதா வாழ்க்கை? எதைச் செய்தாலும் ஏன் மனநிறைவில்லை? எதையோ உள்மனம் தேடுகிறது. எது கிடைத்தாலும் இதுவன்று, இதுவன்று என்கிறது. ஓயாத சிந்தனையால் அகப்பட்டபோது, அம்மா வந்தாள்.

"எங்கெல்லாம் தேடுவது உன்னை? விளக்கு வைக்கும் நேரத்தில் இங்கே (மொட்டைமாடியில்) தனியே உட்கார்ந்து என்ன சிந்தனை? வா, கீழே போகலாம்'' என்று கையைப் பற்றி அழைத்துப் போனாள் அம்மா. அம்மாவின் எளிய அன்பு புரியாமலில்லை.ஆனால் என்ன செய்ய, அம்மாவைப்போல் தன்னால் சிறுசிறு விஷயங்களில் எல்லாம் சந்தோஷப்பட முடியவில்லையே. தன் கவலை யாருக்கும் புரியாது. சின்னச் சின்ன ஆசைகளைச் சுமந்து திரியும் தோழிகள் அவளுக்கு ஒத்துவரவில்லை. அவளைப் புரிந்துகொண்டு, அவளுக்கு இதமாய், "நீ தேடுவது இதோ இங்கேயிருக்கிறது' என்று சொல்பவர் யாரேனும் உண்டா?

இப்படிப்பட்ட சூழலில்தான் ஒருநாள் இவள் தாய்மாமனும், மாமியும் புதுவையிலிருந்து வந்தார்கள். உமா அவர்கள் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு என்பதால் எல்லோர்க்கும் அவள்மீது ஈடுபாடுண்டு. அதிலும் இவள் மாமன், மாமியர்க்குப் பிள்ளைப்பேறும் இல்லை. சிறு வயது முதலே மாமி அடிக்கடி இவளை அழைத்துப் போய்விடுவாள். விடுமுறை நாட்கள் என்றால் மாமன் மாமியுடன்தான் இருப்பாள். இப்போது மாமா புதுவைக்கு மாற்றலானபிறகு இன்னும் அவள் போகவில்லை.

மாமி, அவளைத் தன்னுடன் சில நாட்கள் வைத்துக் கொள்வதாய் அவள் தாயிடம் கேட்டாள். எப்போதும் அனுப்பிவிடும் அம்மா இப்போது தயங்கினாள்.

உமாவின் தாயும், மாமியும் சம வயதுக்காரர்கள். ஆதலால் பெயரிட்டு அழைத்துக்கொள்வது வழக்கம்.

"என்ன மைதிலி யோசிக்கிறாய். ஆசையாய்த்தானே கேட்கிறேன்'' என்றாள் மாமி.

"அதற்கில்லை கோமதி, இத்தனை நாட்கள் அவள் சிறு பெண்ணாயிருந்தாள். இனி திருமண வயதல்லவா?'' என்றாள் அம்மா.

"அதனாலென்ன, வரன் வந்தது என்றால் உடனே அவளை இங்கே அழைத்து வந்துவிடுகிறேன். இல்லையென்றால் அங்கு நம் வீட்டில் பெண் பார்க்கும் நிகழ்ச்சி வைத்துக்கொள்வோம்'' என்றாள் மாமி.

இவள் அம்மா அதற்கு மறுப்புக் கூறுமுன், அப்பா அங்கு வந்தார். "என்றிருந்தாலும் வேறு வீட்டிற்குப் பிரிந்து போகப் போகிறவள்தானே, சிறிது நாட்கள் அவர்களுடன் இருந்துவிட்டு வரட்டும்'' என்றார்.

உமாவின் பிரார்த்தனை (திருமணத்திலிருந்து விடுபடுதல்) நிறைவேறியது. மாமன் மாமியுடன் புதுவை வந்தாள்.

சில தினங்களில், திடீரென ஒரு நாள் மாமியிடம், "மாமி, என் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்களா?'' என்று உரிமையுடன் கேட்டாள்.

"நிச்சயம் நிறைவேற்றுவேன் உமா. மாமிக்கு உன் மகிழ்ச்சிதான் பெரிது. கேள், உனக்கென்ன ஆசை?'' என்று அவள் கூந்தலை வருடி அன்புடன் கேட்டாள்.

"மாமி! நான் பிரெஞ்சு கற்றுக்கொள்ளட்டுமா?'' என்று கேட்டாள் உமா.

"உன்னை அனுப்பவே அம்மா தயங்கினாள். இப்போது படிப்பதென்றால் பர்மிஷன் வாங்க வேண்டாமா?'' என்று தயங்கினாள் மாமி.

"இருக்கட்டும் கோமதி, குழந்தையின் ஆசையை நாம் ஏன் தடுக்க வேண்டும்? கிளாஸ் ஒரு மணி நேரம்தான் இருக்கும்'' என்று மாமா பரிந்து பேசியதுடன், அன்றே விபரம் அறிந்துவந்தார். "ஒரு தமிழர்தான் வகுப்பெடுக்கிறார். நாளைக்கே உமா போய்வரட்டும்.நான்கிலிருந்து ஐந்து மணிவரையில்தான்'' என்றார் மாமா. முதல் விருப்பம் நிறைவேறியது.

முதல் வகுப்பே மிகச் சுவையாக அமைந்தது. இவள்தான் அன்று புதிதாக வகுப்பில் சேர்ந்ததால், மற்ற மாணவிகள் வகுப்பிற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையில் நீண்ட பெஞ்சில் டெஸ்க்கின்மேல் நோட்டுப் புத்தகங்களுடன் உட்கார்ந்திருந்தனர். "உள்ளே போம்மா!'' என்று மாமா கொண்டுவிட்டுவிட்டுப் போனார். உள்ளே வந்தாள் உமா. அது பெண்கள் மட்டும் பயிலும் வகுப்பாகவிருந்தது. நான்கு பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர்.

உமாவின் முதல் பார்வை ப்ரீத்தியின் மீதுதான் விழுந்தது. அத்தனைபேரும் ஆவலுடன் புதிய மாணவியின் வருகையைப் பார்த்துக்கொண்டிருந்த அதே வேளை, ப்ரீத்தி நகர்ந்து தன் பக்கத்தில் உமா அமரும்வண்ணம் இடம் விடவே, மகிழ்வுடன் அங்கு வந்தமர்ந்தாள் உமா. வகுப்பு முழுவதையும் அன்புடன் பார்த்த உமாவின் பார்வை, ப்ரீத்தியில் வந்து நிலைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ப்ரீத்தியும் உமாவைக் கனிவுடன் பார்க்கிறாள். இவர்கள் இருவரின் நட்பு இவர்களை மையமாகக் கொள்ளாமல் ஓர் அற்புதப் பொருளில் மையம் கொண்டிருந்தது அவர்களே அறியாதவொன்று.

உமாவின் தவம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் இவள் ப்ரீத்தியின் வருகைக்கு ஆவலுடன் காத்திருக்கிறாளே, ஏன்? அவள் கொண்டுவரும் இனிமைக்கே இவள் ஜீவன் காத்திருந்தது. ஒவ்வொரு நாளும் இவள் தன் இலக்கை நோக்கி ஓரடி வைப்பதாக உணர்கிறாள்,மகிழ்கிறாள். அவள் அகத்தில் நுழைந்து பார்க்க முடிந்தால் அதை அறியவும் முடியும்.

அன்று உமாவிற்கு வகுப்பில் ஏனோ கவனமே செல்லவில்லை. வகுப்பில் ஆர்வமாகக் கவனிக்கும் இயல்பு, ஆசிரியர் வினாக்களுக்கு உடனுக்குடன் விடையளிப்பது என்று உற்சாகமான மாணவியான இவளிடம் ஆசிரியருக்குத் தனி ஈடுபாடு. ஆனால் அன்று இவள் எதிலும் ஒட்டாமலிருந்தாள். ஆசிரியர் தொடுத்த எளிய வினாவிற்குக்கூட ஆர்வமாக எழுந்து பதிலளிக்காமல் ஏதோ நினைவிலாழ்ந்த இவளை ஆசிரியர் வியப்புடன் பார்த்தார்.

"என்ன உமா? என்னாயிற்று இன்று? பாடம் விளங்கவில்லையா?'' என்றார்.

எழுந்து நின்றாள் உமா. ஒன்றும் பேசவில்லை. மற்ற மாணவிகள், ஏன் உமா? ப்ரீத்தி வரவில்லை என்று படிக்கப் பிடிக்கவில்லையா? என்று கேலிசெய்தனர்.

அவர்கள் விளையாட்டாய்க் கூறியபோதும் உண்மையதுவே. இவர்கள் நினைப்பதுபோல் கேலி பேசி பொழுதுபோக்க அவள் ப்ரீத்தியை எதிர்நோக்கவில்லை. அவள் கொண்டுவரும் அற்புத அன்னை பற்றிய ஆன்மீகப் பரிசுகளுக்காக அவளை எதிர்பார்க்கிறாள். இது மற்றவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. இன்றுபோல் அக்காலங்களில் பாண்டிச்சேரி மக்கள் ஸ்ரீ அன்னையையோ, அவர் ஆன்மீக நிலைநாட்டலையோ புரிந்துகொண்டிருக்கவில்லை. தம் பெண்களை தம் அறியாமைப் பிடியில் வைத்து அடக்கி வாழ்ந்த காலம் அது. எனவே, பெரும்பாலானோர் ஆசிரமத்தின் அமைப்பையும், ஸ்ரீ அன்னையின் வரவையும் அதன் சாராம்சத்தால் புரிந்துகொண்டிருக்கவில்லை.


 

தொடரும்.....

****


                                    ஸ்ரீ அரவிந்த சுடர்

 

தொடர்ந்து இடைவிடாமல் தீவிரமாகப் பிரார்த்திப்பது காலத்தின் கதியை நடைமுறையில்
தவிர்க்க முயல்வதாகும். 
 
  • தீவிரப் பிரார்த்தனை காலத்தை கட்டுப்படுத்தும்.
  • தீவிரமாகப் பிரார்த்திப்பது, காலத்தின் கதியை நடைமுறையில் தவிர்க்க முயல்வதாகும். 


 


 


 


 


 


 book | by Dr. Radut