Skip to Content

04.எங்கள் குடும்பம்

 எங்கள் குடும்பம்

                                                                         (சென்ற இதழின் தொடர்ச்சி....)

பெண் : இது அருள் செயல்படும் வகையா?

தாயார் : இது அருள் வந்தபின் அகந்தை செயல்படும் வகை.

பெண் : மிகைப்படுத்திக் கூற உதாரணம்.

தாயார் : வீட்டில் பையன் ஓடி ஒளிந்துகொள்கிறான். அவன் எறிந்த கல் குழந்தை மீது பட்டுப் பெரிய காயமாகி துரத்தி வருகிறார்கள். உன் பேச்சை அவர்கள் நம்புவார்கள் எனில் நீ தம்பியைக் காட்டிக்கொடுப்பாயா? பொய் சொல்வாயா?

பெண் : பெரிய ஆபத்தாயிற்றே. ஆபத்திற்குத் தோஷமில்லையே.

தாயார் : இங்கு ஒரு பெரிய யோக ரகசியம் உண்டு. நீ பொய் சொன்னால் உன்னைக் கடந்து அவனைப் பிடித்து விடுவார்கள். உண்மை சொல்ல முடிவு செய்தால் உன் உண்மை தம்பியைக் காப்பாற்றும். உண்மையின் சக்தியைத் தெரிந்தவரே இதைப் புரிந்துகொள்வார்.

பெண் : உதாரணம்.

தாயார் : இன்டர்வியூவில் தான் அனுப்பிய சர்ட்டிபிகேட் பொய் என்று கூறிய பையனுக்கு அட்மிஷன் கிடைத்தது.

பெண் : நம் வீட்டு விஷயத்தில் சொன்னால் புரியும்.

தாயார் : வரும்பொழுது சொல்கிறேன்.

பெண் : மிகச் சிறிய விஷயம் மிகப்பெரிய விஷயத்தை நிர்ணயிக்கிறது.

தாயார் : கார் வாங்கிப் பரிசு கொடுத்தவர் 3 நாள் உபயோகத்திற்குக் கார் கேட்டபொழுது கொடுக்க மனமில்லாமல் மறுத்தவனுக்கு அச்செயலால் எவ்வளவு பெரிய வாய்ப்பு - பிரபலம் பெறும் வாய்ப்பு - அதே நேரம் ரத்தானது கண்ணில் படவில்லை.

பெண் : அப்படியானால் தெரிவது முக்கியமில்லையா?

தாயார் : தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. தெரிந்தாலும் செய்வது முக்கியம்.

பெண் : செய்வது மனம் மாறுவதா?

தாயார் : ஆமாம். மனம் மாறினால், மாற முடிவு செய்துவிட்டால், பிறகு கண்ணில்படும், மனதில்படும். இல்லையேல் இல்லை.

பெண் : இதற்கு மேலும் உண்டா?

தாயார் : உண்டு. இதுவேதான், நமக்கு வரும் அதிர்ஷ்டமெல்லாம் ஆபத்தாக வரும் என்று அறியவேண்டும்.

பெண் : இதுவரை அப்படி நீங்கள் பேசியதில்லையே.

தாயார் : தடையெல்லாம் வாய்ப்பு.

பெண் : அதைச் சொல்கிறீர்களா?

தாயார் : தடையை வாய்ப்பாக அறிபவன் அன்னை பக்தன்.

பெண் : கேட்க பயமாயிருக்கு.

தாயார் : இந்த பாக்டரி வருமுன் அப்படி ஒரு விஷயம் நடந்தது. அப்பாவுக்கு அளவுகடந்த கோபம். என் தகப்பனார்மீது கோபம். காரணமேயில்லை. நான் இதைப் புரிந்துகொண்டேன். நான் கோபப்படக்கூடாது என முடிவு செய்தேன். முடியவேயில்லை. ஒரு மாத மனப்போராட்டம் வென்றது. ஒரு நாள் அப்பாவுக்கு நடந்த உண்மை தானே தெரியவந்தது. நான் எடுத்துச் சொல்லி இருந்தால் ஏற்றிருக்கமாட்டார். இவருடைய அர்த்தமற்ற கோபத்தை என்னால் பொறுக்க முடியவில்லை. பொறுத்துக்கொள்ள முயன்றால் மேலும் மேலும் கோபத்தைக் கிளறுகிறார். நான் பேசிக்கொண்டே இருக்கிறேன், பதில் சொல்லமாட்டாயா? எனவும் கிளறுகிறார். 4 கட்டம் பொறுத்தேன். 5ஆம் கட்டம் பொறுக்க முடியவில்லை. அன்று விஷயத்தை வெளிப்படையாகப் பேசுவது என்று முடிவு செய்தேன். அன்று ஊருக்குப் போய்விட்டார். நான் அடுத்தாற்போல் படித்தவையெல்லாம் 'தடை சோதனை', 'Difficulties are opportunities', 'உள்ளே பார், உள்ளே மட்டும் பார்' என்றே வந்ததால் சற்று மனம் மாறினேன். ஊரிலிருந்து வரும்பொழுது பார்ட்னர் விஷயத்துடன் அப்பா வந்தார்.

பெண் : ஆச்சரியமாக இருக்கிறது. அப்பாவும் உங்களைப் போலிருந்தால் நல்லது.

தாயார் : பருத்தி புடவையாகக் காய்க்கும்.

பெண் : அப்பாவிடம் இப்பொழுது சொல்லக்கூடாதா?

தாயார் : நடந்ததும் கெட்டுப் போகும். பிரச்சினை என்பது வாய்ப்பு என்பதை முதன்முறையாக அனுபவத்தால் நான் கண்டது இது.

பெண் : இந்த நிகழ்ச்சிமூலம் பிரச்சினை எப்படி வாய்ப்பாகிறது என்று சொல்லம்மா.

தாயார் : பிரச்சினை என்பது மனம் கட்டுப்படாத உணர்ச்சி. கட்டுப்படுவதற்குப் போதுமான தெம்பு மனத்தில் இல்லை என்பது புறத்தில் பிரச்சினையாக உருவாகிறது.

பெண் : அகம் கட்டுப்படாவிட்டால் புறம் பிரச்சினை என்று கூறலாம்.

தாயார் : அதுவே சரி. கட்டுப்படாத அகம் கட்டுப்படுவது வெற்றி.

பெண் : அது அகத்தின் வெற்றி. அப்படியானால் அது புறத்தில் வாய்ப்பு.

தாயார் : எப்படி பிரச்சினை வாய்ப்பாக மாறுகிறது எனப் புரிகிறதா?

பெண் : சொல்வது புரிகிறது. மேலும் ஏதேனும் உண்டா?

தாயார் : நம்மால் தீர்க்க முடியாத பிரச்சினை நமக்கு வாராது.

பெண் : அது என்ன?

தாயார் : நம்மூரில் இல்லாத பொருளை நாம் அறிய முடியுமா? நாம் அறிவோம் என்றால் அது நம்மூரில் உள்ளது எனப் பொருள்.

பெண் : சரி, பிரச்சினை வந்துவிட்டது. நாம் தீர்க்கலாமா?

தாயார் : தீர்க்கலாமா, வேண்டாமா என்பது choice வேண்டாம் என்பவன் வெறும் மனிதன். வந்த பிரச்சினையை அவசியம் தீர்க்கவேண்டும் என்பது அன்னை பக்தன்.

பெண் : தீர்த்தால் அது வாய்ப்பாகுமா?

தாயார் : என் மனக்குமுறலை நான் தீர்க்க முடியவில்லை. வெடிப்பது என முடிவு செய்தேன். நான் தீர்க்காவிட்டாலும், அன்னை தீர்த்துவிட்டார். அது சூழலின் வலிமை.

பெண் : சூழலுக்கே அவ்வலிமையுண்டென்றால், நீங்களே அதை மனத்தில் தீர்த்திருந்தால்,

தாயார் : அது பெரியது.

பெண் : அன்னையைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது.

பெரியவனுடைய நண்பன் ஒருவன் வீட்டிற்கு வந்து சிலநாள் தங்கினான். மிகவும் நல்லவன். இவனுக்கு நெருங்கிய நண்பன். 'டேய்' எனக் கூப்பிட்டுக்கொள்வார்கள். பெரிய குடும்பத்துப் பையன். மிகவும் உயர்ந்த குடும்பத்துப் பையன். ஒரு நாள் இருவரும் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நண்பன் : நான் உன்னிடம் சில விஷயங்களைப் பற்றிப் பேச சந்தர்ப்பம் எதிர்பார்த்தேன். அது இப்பொழுது கிடைத்துவிட்டது. இன்றும் அதெல்லாம் நான் எழுப்பமாட்டேன். உன்னுடைய புதிய பார்ட்னரைப் பற்றி நீ பேசியபிறகு நான் அவரைப் பார்த்தேன்.

பெரியவன்: நீ எங்கே அவரைப் பார்த்தாய்? பேசவில்லையே. ஒரு ஐந்து நிமிஷம்கூட பார்த்திருக்கமாட்டாயே.

நண்பன் : பார்த்தால் தெரியலியா? அவர் சொந்த ஊரைப் பற்றிச் சொன்னாய். நான் அந்த ஊருக்குப் போயிருக்கிறேன். நல்ல ஊர், நல்ல மனிதர்கள். நான் உரிமையோடு சொல்கிறேன். அதுவும் இந்த பாக்டரியில்லாவிட்டால், இந்தப் பிரச்சினையை எழுப்பமாட்டேன்.

பெரியவன் : நீ எது சொன்னாலும் எனக்குக் கோபம் வாராது. சொல், கேட்டுக்கொள்கிறேன்.

நண்பன் : இது உனக்குப் பெரிய வாய்ப்பு. மிகமிகப் பெரிய வாய்ப்பு. பார்ட்னர் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். நீ உன் பழக்கங்களை மாற்றிக்கொள்ளுதல் அவசியம். இந்த பார்ட்னர்ஷிப் நீடிக்க அது அவசியம்.

பெரியவன் : நீ என்ன எங்க அம்மா மாதிரி பேசுகிறாய். ஏன் எல்லோரிடமும் நீ உன் adviceஐ சொல்லக்கூடாது? எல்லோருக்கும் தேவை என்று அம்மா சொல்கிறார்களே.

நண்பன் : நான் உன்னிடம் பேசுவதைப்போல் எல்லோர் எதிரேயும் பேசமுடியுமா?

பெரியவன் : அப்படி என்ன சொல்லப்போறே? திட்டப்போகிறாயா? நீ திட்டினால் நான் குறையமாட்டேன். எல்லோர் எதிரேயும் திட்டேன்.

நண்பன் : சுருக்கமா சொல்றேன். உன் பார்ட்னர் மாதிரி பேசக் கற்றுக்கொள் போதும். உன் சொந்தப் பழக்கம், பேச்சு எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிடு.

பெரியவன் : சொல்லு, கேட்டுக்கொள்கிறேன்.

நண்பன் : குறுக்கே பேசாதே. பார்ட்னர் எது சொன்னாலும் மறுத்துப் பேசாதே, உனக்குப் பெரிய வேலை செய்திருக்கிறார். அவர் பேசும்பொழுது மனதில் சந்தேகம் எழக்கூடாது. மனத்தில் சந்தேகமிருந்தால், ஒரு சமயம் வெளியே வந்துவிடும். அவர் சொல்வதே உண்மை என்று நம்பினால், சந்தேகம் எழாது. உனக்கு கிண்டல் பிடிக்கும். இனி அதை மறந்துவிடவேண்டும்.

பெரியவன் : என்னை அடியோடு மாறச் சொல்றே நீ.

நண்பன் : உன் பார்ட்னர் பெரிய குடும்பம். அவர்களைத் தெரியாதவர்களே அந்தப் பக்கம் எவருமில்லை. எப்படி இது உனக்குக் கிடைத்தது எனத் தெரியவில்லை. விட்டுவிட்டால் தவறு, நீ மடையன். நீ பேசும்பொழுது சற்று நிதானித்து இந்தப் பதிலைச் சொன்னால், என்ன பதில் வரும் என யோசனை செய்து, அவர்கள் சந்தோஷப்படும்படிப் பேசக் கற்றுக்கொள்.

பெரியவன் : அடுத்த முறை நாம் சந்திக்கும்பொழுது எனக்கு மார்க் போடு, எவ்வளவு மாறியிருக்கிறேன் என்று. நீ சொல்வதை எல்லாம் அப்படியே செய்கிறேன். எனக்கென்னமோ நான் சரியாக இருப்பதாகப் படுகிறது. இருக்கட்டும், நீ சொல்றே. நான் மாறிக்கொள்கிறேன்.

நண்பன் போனபிறகு எல்லோரிடமும் அவன் சொல்லியதைப் பெரியவன் கூறினான்.

பெண் : அண்ணா, அதை அப்படியே எடுத்துக்கொள்.

தாயார் : இந்தப் பையன் எந்த ஊர்?

பெரியவன் : என் புரொபசர் ஊர்க்காரன்.

தாயார் : அது நல்ல ஊராயிற்றே. அதனால்தான் அப்படிப் பேசுகிறான்.

பெண் : நீங்கள் சொல்லியபடி நடப்பது ரங்கன்தான்.

பெரியவன் : ஆமாம், ரங்கன் நீங்கள் சொல்வதை எல்லாம் நுணுக்கமாகக் கேட்டுக்கொள்கிறான்.

பெண் : அவன் என்ன சாதிப்பான்? வீட்டு வேலை செய்பவனாச்சே.

தாயார் : உனக்குத் தெரியாது. அன்னை பின்னால் செயல்பட்டபடியிருப்பார். ஒரு நாள் அது பலிக்கும்.

பெண் : அப்படி என்ன பலிக்கும்?

தாயார் : இன்று உழைத்துப் பெறுவது, நாளை உழைக்காமல் வரும்.

பெண் : அது சௌகரியம், ஆனால் பெரிதல்ல.

பெரியவன் : நமக்குப் பார்ட்னர் வந்தபிறகு, நமக்கு மட்டும் உயர்வு வரவில்லை. ரங்கனுக்கும் வந்துவிட்டது.

தாயார் : எதுமூலம் வரும் என்று தெரியாது, வரும்.

பெண் : இன்று அவனுக்கு 900 ரூபாய் சம்பளம். இது உழைக்காமல் 9000 ரூபாய் ஆனால் அது அருள்.

பெரியவன் : ஏதோ அதுபோல் அவனுக்கு நடந்த மாதிரி தோன்றுகிறது.

பெண் : திருடமாட்டான்.

தாயார் : திருடுபவனுக்குத் திருட்டுமூலம் வரும், திருடாதவனுக்கு நல்ல முறையில் வரும்.

பெரியவன் : திருட்டுமூலம் வந்தால் அது சரியாகுமா?

தாயார் : அவனைக் கேளேன், "எது மூலமா வந்தால் எனக்கென்ன, வந்தால் சரிதான்'' என்பான். அது நமக்குச் சரியில்லை. அவனுக்குச் சரி. அவனுக்குச் சரி என்றால், அன்னைக்கும் சரி.

பெண் : திருடு தவறில்லையா?

தாயார் : திருடுபவனுக்கு அது தொழிலாயிற்றே. அன்னை அவன் தொழில்மூலம் அவனிடம் செயல்படுகிறார்.

பெண் : அன்னைக்குத் திருடு சரியாகுமா?

தாயார் : நமக்குத் தொழில் சரி. அதனால் அன்னைக்கு யோகத்தைவிடத் தொழில் சரி என்றாகுமா? நமக்குரியது நமக்கு. அவரவர்கட்குரியது அவரவர்கட்குச் சரி.

பெண் : சரியாகப் புரியவில்லை, பிடிக்கவில்லை.

தாயார் : அன்னைக்குப் பிடிக்காததில்லை. திருடனையும் அவருக்குப் பிடிக்கும். அவனுக்காகத் திருட்டையும் பிடிக்கும். அதனால் அன்னை திருட்டை ஏற்கிறார் என்றாகாது.

பெண் : ரங்கன் திருடமாட்டான். அவனுக்கு என்ன வரும்?

தாயார் : அன்னைச் சட்டப்படி, அவனுக்கு நம்முடைய அந்தஸ்து வரும்.

பெண் : என்ன அநியாயம்?

தாயார் : நமக்கு பாக்டரி வருவது நியாயம், ரங்கனுக்கு நமது அந்தஸ்து வருவது அநியாயம்!

பெண் : அவனுக்கு வருமா?

பெரியவன்: வருபவரெல்லாம் நிறைய பணம் தருகிறார்கள். அது சம்பளத்தைவிட அதிகமாகவுமிருக்கலாம்.

தாயார் : அவனுக்கு நம்பிக்கையிருக்கிறது. அதிகமாகப் புரியும். கர்வம் அதிகம். கர்வம் அடக்கமானால் அவனுக்கு எதுவும் பலிக்கும்.

பெரியவன் : என்ன MLA, மந்திரியாவானா?

பெண் : எதிர்வீட்டிற்கு வரும் பாக்டரி பையன் MLAஆனானே, அது போலவா?

தாயார் : வாழ்வில் வாராது, அன்னையிடம் வரும். நான் மீண்டும் மீண்டும் சொல்வது வாராதது வரும். காப்பாற்றுவது கடினம்.

பெண் : அதிலென்ன பிரயோஜனம். எப்படிக் காப்பாற்றுவது?

தாயார் : எந்த மனிதனுக்கும் வந்ததை எப்படிக் காப்பாற்றுவது எனக் கூற முடியும்.

பெரியவன் : யார் எடுத்துக்கொள்வார்?

பெண் : நான் எடுத்துக்கொள்கிறேன், சொல்லுங்க.

தாயார் : எரிச்சல் வாராமலிருப்பது கஷ்டம். அதுவே ஆரம்பம்.

பெண் : சரி, வரக்கூடாது என்றால் அடக்கிக்கொள்கிறேன்.

தாயார் : முடியுமா?

பெண் : அதுதான் சரியென்றால், முடியும்.

தாயார் : அப்படி நினைத்தால் முடியும், ஆனால் அது பெரிய காரியம். எரிச்சலைக் காட்டாமலிருக்கலாம், வாராமலிருக்காது.

பெண் : கஷ்டம்தான், அதுவே அன்னைக்குச் சரி என்றால் கொஞ்சம் கொஞ்சமாக வரும்.

தாயார் : சரணாகதியே சட்டம். அது முடியாதபொழுது அழைப்பு அவசியம். அதுவும் முடியாதபொழுது அமைதி வேண்டும்.

பெண் : அமைதியாக இருந்து, அழைப்பை மேற்கொண்டு, சரணாகதியை எட்டுவது அதிர்ஷ்டம் எனக் கூறலாமா?

தாயார் : இதை இடைவிடாமல் செய்தால் அதுதான் அதிர்ஷ்டம்.

பெரியவன் : பயித்தியம் பிடித்துவிடும்.

சிறியவன் : என்ன நான் வரும்பொழுது பயித்தியத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்?

கணவர் : யாருக்குப் பயித்தியம்?

தாயார் : ரங்கனைப் பற்றிப் பேசுகிறோம்.

கணவர் : என்ன ரங்கன் MLA ஆயிட்டானா? மந்திரி ஆயிட்டானா?

பெண் : அம்மா, அப்பாவுக்கு நாம் பேசியது எப்படித் தெரியும்?

தாயார் : அப்போ, நாம் பேசியதில் ஜீவனிருக்கிறது எனப் பொருள்.

பெரியவன் : நான் ரங்கனிடம் போய் நீ மந்திரியாகப் போகிறாய் எனச் சொல்லவா?

பெண் : நீ அவனிடம் அப்படிச் சொன்னால், உன் வாய் முகூர்த்தம் அவன் மந்திரியாவான்.

பெரியவன்: அப்படியானால், அந்த பாவத்தை நான் செய்யமாட்டேன்.

சிறியவன் : உன்மூலமாக ரங்கனுக்குப் பெரியது வந்தால் அதன்மூலமாக உனக்குரிய பெரியது வரும்.

பெரியவன்: அப்போ, நான் போய் சொல்லட்டுமா?

எல்லோரும் சிரிக்கிறார்கள். பெரியவனின் சுயநலம், சின்ன புத்தி வெளிவருகிறது. பெண்ணுக்குத் தாயார்போல் விஷயம் புரிய ஆரம்பிக்கின்றது. கம்பனி வந்துவிட்டதால் கணவர் தம் வேலையை ராஜினாமா செய்ய நினைக்கிறார். ஆனால் தயங்குகிறார். பெண்ணுக்கு அன்னைமீது நம்பிக்கை வருகிறது. தாயாரிடம் சமர்ப்பணத்தைப் பற்றிக் கேட்கிறாள்.

பெண் : சமர்ப்பணம், சரணாகதி, என்ன வித்தியாசம்?

தாயார் : ஒன்று ஆரம்பம், அடுத்தது முடிவு.

பெண் : சமர்ப்பணம் செய்தால் எதுவும் கூடிவருமா? நான் என் தோழியின் அக்கா வாழ்வை சமர்ப்பணம் செய்யலாமா?

தாயார் : நம் சொந்தப் பிரச்சினைகளைச் சமர்ப்பணம் செய்யலாம். பிறர் பிரச்சினையில் அவர்கள் மனமும், போக்கும் கலந்திருக்கும். அது நமக்குப் பிடிபடாது.

அந்நேரம் பெண்ணின் தோழியும், அக்காவும் வருகிறார்கள். பெண்ணுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நினைத்தமாத்திரம் அவர்கள் வருவது புரியவில்லை. அக்கா ஊருக்குப் போவதைச் சொல்ல வந்தனர். அக்கா முகம் மலர்ந்திருந்தது. அவர் கணவரைப் பற்றிப் பேச முடியவில்லை. சமர்ப்பணம் செய்ய நினைத்தாள். "அவர் நடப்பதை நம்பமுடியவில்லை. வாழ்வு திரும்பிவிட்டது'' என்றுமட்டும் கூறினாள். பெண்ணிற்கு அன்னைமீது நம்பிக்கை அதிகமாகிறது. அவர்கள் போனபின் பெண் ஏதாவது செய்யவேண்டும் எனத் தாயாரைக் கேட்டாள்.

தாயார் : நீ கேட்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிய விஷயங்களில் perfect ஆக இருக்க முயன்றால் நல்லது.

பெண் : எதைச் சிறியது என்கிறீர்கள்?

தாயார் : நீ எப்பொழுதும் வெளியில் போனாலும், வந்தாலும் கேட்டைத் திறந்து போட்டுவிடுவாய். போன் பேசினால் மீண்டும் சரியாக வைப்பதில்லை. மேஜை அலங்கோலமாக இருக்கும். உன் அலமாரி ஒழுங்காக இருக்காது. இவையெல்லாம் சரியில்லாமல் சமர்ப்பணம் ஆரம்பிக்க முடியாது.

பெண் : இவையெல்லாம் எனக்குத் தெரியாதே.

தாயார் : அன்னை நம்மை unconscious என்கிறார்.

பெண் : நான் தோழியைப் பற்றிப் பேசினேன். உடனே அவள் வந்தது ஆச்சரியமாக இருக்கிறது.

தாயார் : அது சூழல், நாமில்லை.

பெண் : அதனால்தான்  நானே சரியாக இருக்க ஆசைப்படுகிறேன். 

தாயார் : சமர்ப்பணம் செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்து பூரணமாக்கு.

பெண் : அந்த முடிவை, சமர்ப்பணம் செய்யலாமா?

தாயார் : அது செய்வது பெரிய விஷயம்.

பெண் : எதனால்?

தாயார் : சமர்ப்பணம் நினைவு வாராது. அந்த முடிவைச் சமர்ப்பணம் செய்ய ஆத்மா விழிப்பாக இருக்க வேண்டும்.

பெண் : நான் போய் நீங்கள் சொன்னவற்றையெல்லாம் செய்துவிட்டு வருகிறேன்.

கணவர் கம்பனியில் ஓராண்டு லீவு கேட்டதற்கு ஒத்துக்கொண்டதாக வந்து சொன்னார். அவர் முதலாளியுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சர்குலர் ஒன்று வந்தது. அதைப் படித்துவிட்டு முதலாளி சிரித்தார். "நீங்கள் ஓராண்டு லீவு கேட்கிறீர்கள். அதைக் கொடுக்க சட்டமில்லை. இதுவரைப் பழக்கமில்லை. நானே அதை உங்களுக்குக் கொடுக்க முடிவு செய்தேன். இந்த சர்க்குலர்படி இனி எவரும் ஓராண்டு லீவு பெறலாம் எனக் கூறுகிறது''. "நான் எதை முதலாளியின் தயவால் பெற்றேனோ, அதை சர்க்குலர் என் உரிமையாக்கிவிட்டது'' என்று கூறி மகிழ்ந்தார். இவற்றையெல்லாம் கேட்ட பெண்ணிற்கு ஆர்வம் அதிகமாகி உள்ளே போய் 1 மணி நேரம் கழித்து வந்து, "நீங்கள் சொல்வதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை போலிருக்கிறதே. செய்ய ஆரம்பித்தால் எரிச்சல் வருகிறது. நான் வேலை செய்யும்பொழுது போன் வந்தது. பேசிவிட்டு வைத்தேன். அப்பொழுதுதான் நான் சரியாக வைக்கவில்லை எனக் கண்டேன். இது என்னால் முடியாதா?''

தாயார் : முடியாது என்பதில்லை. முயற்சியால் செய்யலாம். சமர்ப்பணத்தால் செய்யலாம்.

பெண் : நான் இரண்டையும் மேற்கொள்கிறேன்.

தாயார் : பெரியவன் வாய் முகூர்த்தம் ரங்கன் மந்திரியாவான் என்றவுடன் அவன் உஷாராகிவிட்டான், கவனித்தாயா?

பெண் : மனம் பொறுக்கவில்லை. எனக்கும் அப்படித்தான் இருந்தது.

தாயார் : வாயால் நல்ல வார்த்தை கேலியாகவும் சொல்ல முடியாத அளவு மனம் சுயநலமாக இருந்தால் அன்னை எப்படி உள்ளே வருவார்?

அப்பொழுது பெரியவன் வந்து ஆச்சரியமாக , "என்னம்மா, அன்னை மின்னல் வேகத்தில் செயல்படுகிறார்? நம் நகரில் ஒரு அரசியல் கூட்டம் போட்டார்கள். என்னை ஏரியா கமிட்டியில் போடுவார்கள் என நானும் போயிருந்தேன். அங்குப் பேசியவர்களில் நான்தான் சிறப்பாகப் பேசினேன். இன்றைய கூட்டத்திற்கு நானே தலைமை தாங்கினேன். என்ன ஆச்சரியம்! ரங்கன் அங்கிருந்தான். மந்திரி அவனுடன் சந்தோஷமாகப் பேசினார். போகும்பொழுது உடன் அழைத்துப் போனார். எனக்குப் பயமாக இருக்கிறது'' என்றான்.

பெண் : ரங்கன் MLA ஆகணும் என்ற மனம் உனக்கு வேண்டும் என்று அன்னையை வேண்டிக்கொள்.

பெரியவன் : வாயால் மந்திரி எனவும் வரமாட்டேங்கிறது.

அப்பொழுது கணவர் வந்தார்.

கணவர் : நம்ம ரங்கன் ஒரு பெரிய வீட்டுப் பையன் போலிருக்கிறது. உள்ளூர் மந்திரிக்கு அந்த விஷயம் தெரிந்திருக்கு. அவனைக் கவனிக்கிறார். ஊர்பூரா அதுவே பேச்சு.

பெரியவன் : இந்திரா காந்தி டிரைவரை மந்திரியாக்கியது போலிருக்கிறது.

கணவர் : பார்ப்போம், என்ன நடக்கிறது என்று. அவசரப்படவேண்டாம்.

தாயாரும், பெண்ணும் பிறகு ரங்கனுக்கு அதிர்ஷ்டம் வரவேண்டும் என்ற மனம் நமக்கெல்லாம் இல்லை. பயமாக இருக்கிறது. பொறாமையாக இருக்கிறது. வந்துவிட்டால் என்ன செய்வது என மனம் துணுக்குறுகிறது. இதுவே உண்மை.Goodwillக்கு ஏது இடம் எனப் பேசினர். ரங்கன் வந்தான். சந்தோஷமாக இருந்தான். நடந்ததை நடந்தபடிக் கூறினான். நமக்கு அவன்மீது முழு நல்லெண்ணம் இருப்பதாக நினைத்துப் பேசினான். அவனுக்கு நம்மீது நல்லபிப்பிராயம். எதுவும் நடக்கவில்லை. மந்திரி கவனித்தார், அதுதான்.

அம்மாவும் பெண்ணும் பேசுவதும், பெண்ணின் நடைமுறை மாறுவதையும் அனைவரும் கவனித்தனர். பெண் தன் முடிவைச் சமர்ப்பணம் செய்தாள். அது சமர்ப்பணமாயிற்று. மனம் மலைபோலக் கனத்தது. இன்பமாகக் கனத்தது. அண்ணன், தம்பி, அப்பா, மூவரும் அவளைத் தேடி வந்தனர். வெகு நேரம் அவளுடன் அமைதியாக, அன்பாக, நெருக்கமாக இருந்தனர். அனைவர் முகமும் மலர்ந்தன. வீடே மாறிற்று. உலகமே மாறியது போலிருந்தது. அப்படியே பெண் தூங்கிவிட்டாள். தூங்கி எழுந்தாள். போன் வந்தது. மந்திரி ரங்கனை வரச் சொன்னாராம். அடுத்த போனில் பார்ட்னர் அப்பாவைக் கூப்பிட்டவர் பெண்ணுடன் நெடுநேரம் பிரியமாகப் பேசி போனை வைத்துவிட்டார். பெண் தாயாரிடம் வந்து இதுபோல் என்னிடம் பிரியமாக இதுவரை எவரும் பேசியதில்லை. பார்ட்னரும் அப்படிப் பேசியதில்லை என்றாள். தம் முடிவு சமர்ப்பணமானதால் பார்ட்னர் அப்படிப் பேசினார் என அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ பெரிய விஷயம் நடந்துவிட்டது என்று தாயாருக்குப் பெண் முகம் விளக்கியது. பெண்ணை விசாரித்து, சமர்ப்பணத்தைத் தாயார் அறிந்தார்.

பெண் : நான் உங்களைவிட்டுப் போய் கொஞ்சம் எழுதினேன். புது பால்பாயிண்ட் பேனா இங்க் வரவில்லை. கொஞ்சம் வருகிறது. நின்றுவிடுகிறது. உதறிப் பார்த்தேன். சில சமயம் இங்க் வரும், மற்ற நேரம் வாராது. எரிச்சல் படக்கூடாது என்ற முடிவை நினைவுபடுத்தி அலமாரியை அடுக்கிவிட்டு, மீண்டும் எழுத ஆரம்பித்தேன். பேனா நன்றாக எழுதியது.

தாயார் : அது சமர்ப்பணம் செய்வது. எந்தக் காரியமானாலும் அன்னைமூலம் மட்டுமே செய்வது என்பது பெரிய முடிவு. அதை நம்மால் செய்ய முடிவதில்லை.

தெருவில் ஒரே அமர்க்களம். ஓடிப்போய் பார்த்தனர். யாரோ குழந்தை வாயில் எதையோ போட்டுக்கொண்டது. தொண்டையில் மாட்டிக்கொண்டு திணறுகிறது. தாயாருக்கு அழுகை வருகிறது. கூட்டம் கூடிவிட்டது. அந்த வழி வந்த காரில் ஒரு டாக்டரிருந்தார்.தாமே தம் ஹாஸ்பிடலில் அழைத்துப் போய்ப் பார்க்கிறேன் என்றார். அதுவே தெய்வச் செயல் என்று எல்லோரும் நினைத்தனர். பெண் உள்ளே ஓடி அன்னை படத்தின்முன் மண்டியிட்டு வணங்கி எழுந்து தியானத்தில் உட்கார்ந்து, "அம்மா, இந்தக் குழந்தையைக் காப்பாற்று'' எனக் கதறினார். அக்குழந்தையும் அதன் தாயாரும் காரில் ஏறினர். உடனே குழந்தை திணறி சத்தம் போட்டதால் காரை எடுக்க முயன்ற டாக்டர் குழந்தையிடம் வந்தார். வாயிலிருந்தப் பொருளை குழந்தை கக்கிவிட்டது. ஒரே ஆரவாரம். ஆரவாரம் கேட்டு பெண் பூஜை அறையிலிருந்து வெளிவந்து நடந்ததைக் கேட்டு ஆச்சரியப்பட்டாள். தாயாரிடம், "அன்னை ஒருபொழுதும் தவறுவதேயில்லை'' என்று நெகிழ்ந்து கூறினாள். அவளுடைய பக்தி நம்பிக்கையாக மலர்ந்தது.

இனி அவள் பழைய மனுஷியில்லை. அவளுக்குப் புனர்ஜென்மம். தாயாருக்கு மட்டும் விஷயம் தெரியும். மற்றவர்கள் பெண் சந்தோஷமாக இருப்பதாக நினைத்தார்கள். அவள் மனம் வேலை செய்யவில்லை. ரங்கன் - பார்ட்னர் - மந்திரி - பேனா - சமர்ப்பணம் - தெருவில் குழந்தை - எல்லாம் நினைவுக்குப் பின்னணியில் இருக்கின்றன. எண்ணம் ஓடவில்லை. அன்னை முன்னணியில் இருக்கிறார். வாழ்வே Legend of Brahman. பிரம்மம் என்ற கதை போலிருக்கிறது. இனி வேலை உள்ளேயிருப்பதையும், அது மிகக் கடினமானது என்பதும் பெண்ணுக்குப் புரிந்தது. அம்மா மீது இதுவரை இல்லாத பாசம் எழுந்தது. அன்னை, நெஞ்சை நிரப்பியவர்கள், அதையும் கடந்து பரவுவதை ஆனந்தமாக உணர்ந்தாள். மனமும், உடலும் கனத்தன. பிற சமயங்களில் உடல் லேசாகிக் காற்றில் பறப்பது போன்றிருந்தது. என்ன என்று புரியவில்லை. கனப்பதும், லேசாக இருப்பதும் இன்பமான உணர்வுகள் என்பதுமட்டும் திட்டவட்டமாகப் புரிந்தது.

தாயாருக்குத் தம்பியிடமிருந்து மனைவிக்குக் கான்சர் என்று செய்தி வந்தது. தம்பி பதறினார். "இந்தச் செய்தியை நம்பாமல், மனத்தை அமைதிப்படுத்திக்கொண்டு புறப்பட்டு வா'' என அமைதியாகக் கூறினார். செய்தி அவரைப் பதட்டப்படச் செய்யவில்லை. தம்பி மனைவிமீது பாசம் இல்லாவிட்டாலும், செய்தியின் முடிவு அன்னை முடிவாக இருக்கப்போவது என்றாலும் பதட்டமிருக்காது என அவர் அறிவார். பிரார்த்தனை செய்ய முயன்றார். பிரார்த்திக்கும் அவசியமில்லை எனத் தோன்றியது. சமர்ப்பணம் செய்ய முயன்றார்.சமர்ப்பணமாயிற்று. மேலும் அமைதியானார்.

அன்று மாலை தம்பி வந்தார். காலையில் பேசிய படபடப்பில்லை.ஆனால் அமைதியாக இல்லை.

தாயார் : தம்பி, நீ பயப்பட ஒன்றும் இல்லை. பூஜை அறைக்குப் போய், "நான் இந்தச் செய்தியை நம்ப விரும்பவில்லை'' என முடிவு செய்து, முடிவைச் சமர்ப்பணம் செய்.

தம்பி சுமார் ஒரு மணிக்குமேல் தியானத்தில் லயித்துவிட்டார். அவர் எழுந்து வெளியில் வந்ததும் கணவர் அவருக்காகக் காத்திருக்கிறேன் என்று சொல்லி "உங்கள் மனைவியிடம் போனில் பேசினேன். அவர் ஒரு முக்கியச் சேதியை உங்களிடம் சொல்லச் சொன்னார். நீங்கள் ஒருவேளை அவர் சொன்ன செய்தியைத் தவறாகப் புரிந்துகொண்டீர்களோ எனச் சந்தேகம்'' என்றார். தம்பி உடனே மனைவிக்குப் போன் செய்தார்.

தம்பி : என்ன தவறாகப் புரிந்துகொண்டேன்?

தம்பி மனைவி : ஒருவேளை எனக்குக் கான்சர் என நினைத்துக் கொண்டீர்களோ என எனக்குச் சந்தேகம்.

தம்பி : (ஆச்சரியமாக) உனக்கில்லையா?

தம்பி மனைவி : என்னுடன் வந்தவருக்கு, எனக்கில்லை.

தாயார் : என்ன சொல்கிறாள், உன் மனைவி?

தம்பி : கான்சர் அவளுக்கில்லை, அவளுடன் வந்தவருக்கு.

தம்பி, கணவர், தாயார், மூவரும் சந்தித்து நடந்ததை விவரமாகப் பேசி மகிழ்ந்தனர்.

கணவர் : ரொம்ப சந்தோஷம். வந்த ஆபத்து போய்விட்டது. Mother'sGrace. நீ ஏதாவது செய்தாயா?

மனைவி : செய்தி வந்ததும் நான் அதை நம்பவில்லை. அதைச் சமர்ப்பணம் செய்தேன். சமர்ப்பணமாயிற்று. நான் அமைதியானேன். தம்பியை நம்பவேண்டாம் என்றேன். சமர்ப்பணம் செய்யச் சொன்னேன்.

தம்பி : நான் தியானத்தில் உட்கார்ந்தவுடன் தியானமே என்னை ஆட்கொண்டது. எழுந்துவந்தேன். நீங்கள் இந்தச் செய்தியைச் சொன்னீர்கள்.

கணவர் : என்ன நடந்தது என எனக்கு விளக்கமாகக் கூறுவாயா?

இந்த நேரம் பேசாமலிருப்பது நல்லது எனத் தாயார் அறிவார். கணவருக்கு என்ன பதில் சொல்வது என்று யோசனை செய்தபொழுது, அவர் ஆபீஸ் நண்பர் வந்ததால் எழுந்து போய்விட்டார். அவரது தம்பி அவருக்கு நமஸ்காரம் செய்தார்.

தம்பி : மதர் காப்பாற்றினார். நீதான் எனக்கு மதர்.

கணவர் : திரும்பிவந்து எனக்கு விவரமாகச் சொன்னால் நானும் சமர்ப்பணத்தை ஏற்பேன் என்றார்.

தாயார் : சமர்ப்பணம் பெரியது. பெரியவனுக்கு அவன் நண்பன் கூறியதை நாம் அனைவரும் கடைப்பிடித்தால் பின்னால் சமர்ப்பணம் செய்ய முடியும்.

கணவர் : சொல்லக்கூடாது என்று சட்டம் உண்டா?

தாயார் : உடனே பேசாமலிருப்பது நல்லது.

தம்பி : அதனால்தான் நான் விவரம் கேட்கவில்லை.

கணவர் : நான் கேட்கவில்லை.

சில வாரங்கள் வீடு சற்று ஆர்ப்பாட்டம் குறைவாக இருந்தது. பெரியவனுக்கு அவனுடைய நண்பன் கூறியதை அனைவரும் மனதில் ஓரளவு ஏற்றது போலிருந்தது அனைவருடைய போக்கும். பெண் மீண்டும் தாயாருடன் அன்னையைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவள் வரும்பொழுதெல்லாம் ஒரு பையன் உடன்வருவது வழக்கம்.சிலசமயம் இரண்டு பேரும் வருவார்கள். ஒரேயொரு முறை கணவரும் வந்தார். அதுபோன்ற உரையாடல் ஒன்றில்,

பெண் : எனக்கு அன்னை நினைவாகவேயிருக்கிறது. என் நண்பர்கள் எல்லாம் நான் ஏதோ புது மேக்கப் செய்வதாக நினைக்கிறார்கள்.

கணவர் : முகம் பளிச்சென்றிருக்கிறது.

தாயார் : The Life Divine படித்தாலும், சமர்ப்பணம் செய்தாலும், அன்னை நினைவிருந்தாலும் முகம் இப்படியிருக்கும்.

சிறியவன் : அம்மா, இதெல்லாம் எப்படித் தெரியும் உங்களுக்கு?

பெரியவன்: அம்மா எப்பொழுதும் படிப்பார்கள். எத்தனைப் புத்தகம் படித்திருக்கிறார்கள்?

கணவர் : நீ படிக்கும் அன்னைப் புத்தகங்களைச் சொல்கிறாயா? நானும் படிக்கிறேன்.

தாயார் : என்னிடம் எல்லாப் புத்தகங்களும் இருக்கின்றன.

பெண் : ஏம்மா, எங்களை எல்லாம் படிக்கச் சொல்லவில்லை?

பெரியவன் : சொல்லியிருந்தால், நான் படித்திருக்கமாட்டேன்.

சிறியவன் : நான் இரண்டு பக்கம் படித்தேன். அப்புறம் மறந்துவிட்டேன்.

கணவர் படிக்க ஆரம்பித்தார். அவருக்கு மனம் புத்தகத்தில் இல்லை. பெண் தீவிரமாகப் புத்தங்களைப் படிப்பதும், தாயாருடன் அவற்றைப் பற்றிப் பேசுவதுமாக இருந்தாள். பிள்ளைகள் முன்போல இல்லை. ஆனால் அவர்கள் மனம் அன்னையிலோ, வேலையிலோ, படிப்பிலோ, ஒழுங்கிலோ பதியவில்லை. ஒருநாள் பெரியவனும், சிறியவனும் பந்தயம் போட்டார்கள்.

பெரியவன் : உன் காலேஜிலே வாலிபால் டீம் பலமானது. மற்றதெல்லாம் சொத்தை.

சிறியவன் : ஒரு உதாரணம் சொல்லேன்.

பெரியவன் : பாட்மிட்டன் டீம் இந்த ஆண்டு முதல் ரவுண்டில் தோற்றுவிடும்.

சிறியவன் : இல்லை semi-finals வரை வரும். நான் அன்னைக்குப் பிரார்த்தனை செய்கிறேன்.

பெரியவன் : பிரார்த்தனை செய்தால் விளையாட வேண்டாமா?

சிறியவன் : Semi-finals எங்கள் டீம் வந்தால் அதற்கப்புறம் என்னைக் கேலிசெய்யமாட்டேன் என ஒத்துக்கொள்வாயா?

பெரியவன் : ஊம்.

சிறியவன் பைத்தியம் பிடித்ததுபோல் Mother, Mother என எந்த வேலை செய்தாலும் மனதால் சொல்ல ஆரம்பித்தான். டீம் முதல் ரவுண்டு ஜெயித்தது. அவன் டீமை மறந்தான். பந்தயத்தை முக்கியமாக நினைத்து அன்னையில் லயித்துப் போனான். டீம் semi-finals வந்து ஜெயித்தது. அண்ணனைத் தேடினான். அவன் ஊரிலில்லை. அன்னையில் கரைந்துபோக முடிவு செய்தான். Finalsஇல் டீம் ஜெயித்துவிட்டது. பந்தயம் ஜெயித்துவிட்டது. அண்ணன் வரவில்லை. மறுநாள் பெரியவன் வந்து சேர்ந்தான்.

சிறியவன் : நீ தோற்றாய்.

பெரியவன்: நானா, உன் டீமா?

சிறியவன் : என் டீம் semi-finals வந்துவிட்டது.

பெரியவன் : என்னைக் கேலி செய்கிறாயா? நான் உன்னை நம்பமாட்டேன். 

தன் நண்பன் ஒருவனுக்குப் போன் செய்து விசாரித்தான். டீம் finalsஇல் ஜெயித்துவிட்டது எனக் கேட்டு ஆச்சரியப்பட்டான். எப்படி என விசாரித்தான். First ரவுண்டில் எதிர் டீமில் சண்டை. அதனால் இவர்கள் ஜெயித்துவிட்டார்கள். இரண்டாம் ரவுண்டில் எதிர் கேப்டனுக்கு ஜுரம். செமி-பைனல்ஸில் காற்று இவர்கட்கு சௌகரியமாயிருந்தது. இத்தனை வெற்றியும் உற்சாகப்படுத்தியதால் பைனல்ஸில் ஆர்வமாக விளையாடி 2 பாயிண்டில் ஜெயித்துவிட்டனர் எனக் கேள்விப்பட்டான்.


 

தொடரும்...

****
 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் அதற்குரிய கட்டுப்பாடுகள், அனுபவிக்கக்கூடிய சந்தோஷங்களுண்டு. அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்காதது அறிவின்மை. எவருக்கும் அது பயன் தரப்போவதில்லை. அடுத்த உயர்ந்த நிலைக்குரிய கட்டுப்பாட்டை நினைத்து, தன் நிலையில் அவற்றை அறிவில்லாமல் பின்பற்ற முயலும் அறிவீனம் மனிதனுக்குண்டு. குழந்தை விளையாட வேண்டும். குடும்பஸ்தன் தான் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவிக்க வேண்டும்.

உரிய இன்பத்தை குறைவற ஏற்பது நல்லது.


 


 

 



book | by Dr. Radut