Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னை அன்பர்களே! அன்னையின் சக்தி அளவிட முடியாதது, அற்புதமானது, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் உற்சாக சக்தி! மனம் கசிந்து நினைத்த மாத்திரத்திலேயே 'மந்திரத்திற்குக் கட்டுண்டதைப்போல' அதிசயங்களை நிகழ்த்தும் பேரின்ப சக்தி ஸ்ரீ அரவிந்த அன்னையின் சக்தி!

மே மாதம் 11ஆம் தேதி என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் இப்போது பகிர்ந்துகொள்ளப் போகிறேன். அன்று மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்குச் செல்லவேண்டிய அத்தியாவசியம். மதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திருமங்கலம் போனால் நாகர்கோவில் செல்லும் பஸ்ஸைப் பிடித்துவிடலாம் என்று நினைத்துப் போனோம், நானும், என் இரு குழந்தைகளும், உறவினர்களும். ஆனால் வெகு நேரமாகியும் பஸ் கிடைக்கவில்லை. அதன்பிறகு அங்கிருந்து மாட்டுத்தாவணி என்னுமிடத்திற்குப் போக பஸ் ஏறினோம் (அங்கிருந்துதான் நாகர்கோவில் செல்லும் பஸ் புறப்படுமாம்). பஸ்ஸில் அவ்வளவாய் கூட்டமில்லை. என் சின்னக் குழந்தையை (7 வயது) மடியில் தூங்க வைத்துவிட்டு சாய்ந்து உட்கார்ந்தேன். மழை மிகவும் பலமாய் பெய்யத் தொடங்கியது. அவசர அவசரமாய் பஸ்ஸின் சாளரத்தை அடைப்பதற்காக எழுந்தேன். அவ்வளவுதான் ஏதோ பெரும் புயல் மரக்கிளை ஒன்று உடைந்ததைப்போல் 'மொடக்' என்று ஒரு சத்தம் என் வலது முட்டியில் கேட்டது. எனக்கு பகீர் என்றது. பகீர் என்கின்ற உணர்ச்சி என்னுள் ஊடுருவுமுன்பே நான் அன்னையை சரணடைந்துவிட்டேன். "அம்மா, நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ, என் முட்டி எலும்பு முறியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்கின்ற அன்பான வேண்டுகோளை அன்னையிடம் சமர்ப்பித்தேன். இடைவிடாமல் அன்னையை வேண்டி உடனுக்குடன் என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணிப் பார்த்துக் கொண்டே எழுந்து நிற்க முயன்றேன், முடியவில்லை! முட்டியில் ஒரே வலி. என் உறவினர்களிடமும் எதுவும் சொல்லவில்லை. அன்னையிடம் மட்டும் என் நிலைமையைச் சொல்லிக்கொண்டே வந்தேன். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வந்தது. இறங்கி என் குழந்தையின் கைப்பிடித்து மெதுவாய் நடந்தேன். இரண்டு, மூன்று அடிகூட எடுத்து வைத்திருக்கமாட்டேன், தடக்கென்று மழைத் தண்ணீரில் விழுந்துவிட்டேன். எழுந்து நிற்கமுயன்றால் என் முட்டி காலியாகிவிட்டதைப்போல் ஒரு வெறுமை. விரும்பும் திசையில் கால்களைத் தூக்கி வைக்க முடியாததைப்போல் ஒரு செயல் இழந்த நிதர்சனம் என் வலக் காலுக்குக் கண நேரத்தில் நிகழ்ந்துவிட்டதைப் போல் ஒரு தளர்வு. என் மனம் தளரவில்லை. தளர்வை உடலுக்கு மட்டும் கொடுத்துவிட்டு மனமெங்கும் அன்னையை நிறைத்து வைத்தேன். மெதுவாய் என் குழந்தைகள், உறவினர்களின் கரம் பிடித்து நாகர்கோவில் செல்லும் பஸ்ஸிற்குள் ஏறி உட்கார்ந்தேன். மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு 5 மணி நேர பிரயாணம். காலை கொஞ்சம் நீட்டி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தேன். முட்டிக்குக் கீழ் கால் வீங்க வேறு ஆரம்பித்துவிட்டது. அன்னையை இடைவிடாமல் பிரார்த்தனை செய்ததால் எதையும் தாங்க முடியும் என்கின்ற ஆத்ம சக்தியை அன்னை எனக்குக் கொடுத்து விட்டார்கள். வலியோ, வலியினால் ஏற்பட்ட கஷ்டங்களோ, எதுவுமே என்னுள்ளே வரமுடியாமல் எனக்கு வெளியே நிற்பதைப்போல் ஒரு பிரமை. 5 மணி நேரப் பயணம் சிரமமில்லாமல் முடிந்தது. நாகர்கோவில் வந்து சேர்ந்தோம். ஆனால் பஸ்ஸிலிருந்து கீழே கால்களைத் தூக்கிவைக்க முடியவில்லை. மூளை நரம்புகளும், கால்களும் பெருஞ் சண்டையிட்டன. என்னால் அதை வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது. அன்னையை வேண்டிக்கொண்டே எப்படியோ பெரு முயற்சியினால் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். இதில் என்ன அதிசயம் என்றால் என் கால்களில் 1 முட்டியில் நடக்கும் இவ்வளவு போராட்டங்களையும் அன்னையைத் தவிர வேறு யாரிடமும் நான் பகிர்ந்துகொள்ளவில்லை. என் முட்டியின் வலியை என் முகத்தில்கூடப் பிரதிபலிக்காமல் அன்னையிடம் மட்டும் பிரதிபலித்தேன். எப்படியோ வீடு வந்துசேர்ந்தேன். கால் சுளுக்கிவிட்டது என்று மட்டும் வீட்டில் சொன்னேன். இரவு முழுக்க முட்டி வலித்தது. வலியுடனேயே அன்னை என்னைத் தூங்கவும் வைத்தார்கள்.

அடுத்த நாள் காலை என் அம்மா பக்கத்திலிருந்த ஒரு வர்மக்கலை தெரிந்த நபரை அழைத்து வந்தார்கள். அவர் என் முட்டியைப் பார்த்துவிட்டு அதிர்ஷ்டவசமாய், ஏதோ புண்ணியத்தினால் எலும்பு முறியாமல் தப்பித்திருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு காயத்திருமேனி எண்ணெய் வைத்துத் தடவி சுளுக்கெடுத்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து உலக்கையில் நடக்கவைத்து, மூன்று நாட்களுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் தடவி சுளுக்கெடுத்தார். என் கால்கள் பெரியதாய் எந்தவிதமான பிரச்சனைகளுமில்லாமல் சரியாகிப்போனது உண்மை! உண்மை!

அன்னையை நினைத்தமாத்திரத்திலேயே என் கால் முட்டியில் கேட்ட மொடக், தடக் போன்ற முறிவான சப்தங்களையே நிசப்தங்களாக்கிவிட்ட அன்னை, 5 மணி நேரப் பிரயாணத்திலேயே கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து என்மீது கருணை காட்டிய அன்னையைப் பற்றி, ஒவ்வொரு நிமிடமும் அன்னையை நினைத்துக்கொண்டே வாழ்க்கைப் பயணத்தை நடத்தினால் இன்னும் என்னென்ன அற்புதங்களை அன்னை எனக்கு நடத்திக் காட்டுவார்களோ!! என் மனதில் எழும் எண்ணங்கள் அன்னையின் விஸ்வரூபத்தை என் மனக்கண்களுக்கு விரிய வைக்கிறது. அன்னை அன்பர்களே எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் சந்தேகத்தின் நிழல்கூட இல்லாமல் அன்னையைச் சரணடையுங்கள். அன்னை பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள், உங்களுக்கு ஓர் ஆத்ம சக்தியைக் கொடுப்பார்கள்! நமக்கு வரும் கஷ்டங்கள் நாம் அன்னையைப் பற்றி அதிகப்படியாக அறிந்துகொள்ள நமக்கு வரும் சந்தர்ப்பங்கள்!

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அழைப்பு:

எந்த நேரமும் நாம் உச்சகட்ட உணர்வோடு செயல்படத் தேவையான அறிவும், உணர்வும், திறமையும், அவற்றின் சாரமும் உழைப்பின்மூலம் நாம் அன்னையிடமிருந்து பெறலாம்.

உச்சகட்ட திறமைக்கான அறிவும், உணர்வும் தரும் அழைப்பு.


ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னை தம் மீது நம்பிக்கையுள்ளவர் தாமுயரவேண்டி, அன்னையை அழைத்தால், அன்னை அவர்கள் நேரடியாக ஒரு செயலில் சத்தியஜீவியத்தை அடையும் வகை செய்கிறார்.சில க்ஷணங்களேயாயினும், அன்னை அதைச் செயல்படுத்துகிறார்.

முதற் ஸ்பர்சம் முழு அனுக்கிரஹம்.


 


 book | by Dr. Radut