Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V                                                           கர்மயோகி


 801) ஞான யோகத்திற்கு நிஷ்டை கருவியாவதுபோல், ஆன்மாவின் வளர்ச்சிக்கு ஆர்வம் கருவியாகிறது.

ஆன்மாவின் வளர்ச்சிக்கு ஆர்வம் கருவியாகிறது.

****

802) வேலை செய்ய உடலில் சக்தியைச் சேகரம் செய்யவேண்டும் என்பதால், மனிதன் சோம்பேறி ஆகிறான்.

சக்தியற்றவன் சோம்பேறி.

வேலை செய்யாதவனை நாம் சோம்பேறி என்கிறோம். வேலை செய்யச் செய்ய சக்தி அதிகமாக எழும். முதலிலேயே வேலை செய்ய ஓரளவு சக்தி வேண்டும். அது இல்லாதவனால் வேலையை ஆரம்பிக்க முடியாது.

****

803) கெட்ட பழக்கத்தில் தன்னையழிக்க மனிதன் பிரியப்படுகிறான். ஏனெனில் இது கட்டுப்பாட்டுக்கு எதிரானது. கட்டுப்பாட்டுக்கு சக்தியும், தெம்பும் சேகரிக்கப்பட வேண்டும்.

அழிவில் பெறும் ஆனந்தம்.

ஆனந்தம் பெற காரியத்தைச் சாதிக்க வேண்டும். அதற்குத் தெம்பும், கட்டுப்பாடும் தேவை. தகப்பனார் சொத்து வைத்துவிட்டுப் போனால், மகன் மேலும் சம்பாதிப்பது சுலபம். சுலபம் என்றாலும் முயற்சி வேண்டும், உழைக்க வேண்டும், கட்டுப்பாடு வேண்டும். தகப்பனார் சொத்தை விற்றுச் செலவு செய்வது சுலபம். இதனால் ஏற்படுவது நல்ல பழக்கமன்று. கெட்ட பழக்கங்களே உற்பத்தியாகும். கெட்ட பழக்கத்தால் தன்னையழிக்க மனிதன் பெரும்பாலும் பிரியப்படுகிறான்.

****

804) சொந்தமான சிந்தனைக்கு மனம் அளவுகடந்த சக்தியைச் சேகரம் செய்யவேண்டும். அது கடினம் என்பதால், நாலு பேர் சொல்வதைத் தன் அபிப்பிராயமாக மனிதன் ஏற்றுக்கொள்கிறான்.

நாலு பேர் சொல்வதை நானும் சொல்கிறேன்.

சொந்தமாகச் சிந்தனை செய்ய அளவுகடந்த சக்தி மனதில் சேகரம் செய்யவேண்டும். அது பொதுவாக இருப்பதில்லை. கடினம். நாலு பேர் பேசுவதை நாம் ஏற்க அதுபோன்ற சக்தி தேவையில்லை என்பதால், அதையே தன் அபிப்பிராயமாகப் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

****

805) தவத்தை நாடுபவர் குறைவு. இது ஆன்மீக சக்தியால் நடப்பது. மனிதனுடைய எல்லாச் சக்திகளையும் - மனம், உணர்வு, உடல் சேகரம் செய்து மனத்திற்குமேல் குவிக்க வேண்டும் என்பதால் இதை நாடுபவர் அரிபொருள்.

பெரிய சக்தி தேவைப்படுவதால் சிறிய மனிதன் நாடாதது தவம்.

உழைப்பாளியின் கருவி உடல். அவன் சக்தி உடலினின்று பிறக்கிறது. தலைவருடைய சக்தி உணர்விலிருந்து பிறக்கிறது. அறிவாளியின் சக்தி மனதிலிருந்து பிறக்கிறது. தவத்திற்கு இந்த எந்த சக்தியும் நேரடியாகப் பயன்படாது. தவத்திற்குத் தேவைப்படுவது ஆன்மீக சக்தி. ஆன்மா விழித்து, அதன் சக்தியை எழுப்புதல் கடினம். அதனால் தவத்தை நாடுபவர் குறைவு.

****

தொடரும்.....


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னையின் தருணம், அகண்ட பிரபஞ்சத்தின் அளவில் வருகிறது. நாம் அதை உலகத்தினளவுக்குச் சுருக்கி விடுகிறோம். மேலும் முயன்று நம் அளவுக்கும் அதைச் சுருக்குவதே நம் வழி.

அகண்டம் கண்டமாவது.


 

ஜீவிய மணி

துரோகம் ஆன்மீக விஸ்வாசம்.


 



book | by Dr. Radut