Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

23. நம்மால் முடியாதது அன்னையால் முடியாதது என அர்த்தமில்லை. நாம் அன்னைமீது வைக்கும் நம்பிக்கை இப்படியொரு திடமானதாக இருக்க வேண்டும். பிரச்சினையென எழுந்தால், நம் பர்சனாலிட்டியை விலக்கி, பிரச்சினையை அன்னையிடம் சமர்ப்பித்தால், பிரச்சினை விரைவில் தீரும்.

மனிதனுக்கு தான் முக்கியம். அவனே அவன் உலகம். தனக்குத் தெரிந்ததற்குமேல் உலகில் எதுவுமில்லை என்று எப்படி ஒரு மனிதனால் நினைக்க முடியும் என நாம் ஆச்சரியப்படுவதுண்டு. நேரம் வரும் பொழுது நாம் அதுபோல் நினைப்பதை நாம் கருதுவதில்லை. அன்னை அதுபோன்ற மனநிலையை unconscious தன்னை அறியாத மனநிலை என்கிறார். இந்த நிலை எல்லோர்க்கும் உண்டு. படிக்காதவன், அனுபவமில்லாதவனுக்கு மட்டுமல்ல. ஜில்லா கோர்ட் வக்கீல்கள், சென்னையில் பிரபலமான டாக்டர்கள்வரை இந்த நிலையுண்டு. கவர்னர் பிரகாசாவுக்கு இருமல். கவர்னருடைய டாக்டர், சென்னையில் பிரபல டாக்டர்கள் பார்த்தனர். பலனில்லை. இராஜாஜி அவரைப் பார்க்கப் போனார். குருசாமி முதலியாரைக் கேட்டீர்களா என்றார். குருசாமி வந்தார். பிரகாசாவுக்கு உடல் நலமாயிற்று. என்ன சொன்னார் டாக்டர் என்று கேட்டனர். கவர்னர் “அவர் ஒன்றும் சொல்லவில்லை” என்றார். ஹை கோர்ட் வக்கீல் சிவில் கேசில் ஜாமீன் கேட்கிறார்! இவர் ஹை கோர்ட் ஜட்ஜ்.

  • நமக்குத் தெரிந்ததே முடிவு. அதைக் கடந்த முடிவில்லை. மேலும் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஒருவரில்லை என்ற மனப்பான்மை எல்லா நிலைகளிலும் உண்டு.
  • சுதந்திரம் வந்த அடுத்த மாதம் டெல்லி கலவரத்தை எப்படி அடக்குவது எனப் பட்டேலுக்குத் தெரியவில்லை. மவுண்ட் பேட்டனைக் கேட்டனர்.
  • பட்டதாரிகள் ஒரு சொல்லுக்கு அர்த்தம் புரியவில்லை என்றால் டிக்ஷனரியைப் பார்த்தீர்களா என்று கேட்பார்கள். ‘எனக்கு அது தோன்றவில்லை’ என்பார்கள்.
  • கான்சருக்கு மருந்தில்லை என்றால் ஆயுர் வேதத்தை நினைக்க மாட்டார்கள். மருந்தால் முடியாது என்றால் அன்னைக்குப் பிரார்த்தனை செய்து என்ன பலன் என்பது அன்னையாலும் முடியாது என்று நினைப்பதாகும்.
  • ரசீது இல்லாமல் கொடுத்த பணம் எப்படி வரும். அன்னைக்குப் பிரார்த்தனை செய்வது பிரயோஜனமில்லை என நினைப்பது அதுபோன்ற மனநிலை.
  • நமக்குத் தெரியாதது எவருக்கும் தெரியாது என்று நினைப்பது அர்த்தமற்றது. தொழிலில் உள்ளவர்க்குத் தெரியும். எந்த வேலையிலும் (Professionals) தொழிலில் உள்ளவர்களைக் கலப்பது முறை.

சோகம் வந்தால் அன்னை “மனிதன் சோகத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அது இவனைப் பிடித்துக் கொண்டில்லை” என்கிறார். மனிதன் விட்டுவிட்டால் சோகம் மறையும். என்னால் விட முடியவில்லை என்பவன் எனக்குச் சோகத்தை விட மனமில்லை என்பதாகும். இந்த நிலை ஆத்மாவுக்கே உண்டு என பகவான் கூறுகிறார். ஆத்மாவைக் கண்டு பகவான் சிரிக்கிறார். ஆத்மா பிரச்சினைகளை விட்டவுடன் அடுத்த நிமிடம் பிரச்சினை மறைகிறது. விட முடியவில்லை என்பவர் அன்னையை அழைத்தால் அது விடுபடும். என்னால் அன்னையை அழைக்க முடியவில்லை என அன்பர் சொல்லக் கூடாது. முடியாது என்பவர் ஒருமுறை அழைக்கலாம். சற்று பொறுத்து இரண்டு அல்லது மூன்று முறைகள் அழைக்கலாம். தொடர்ந்து முயன்றால் அரை மணி அழைப்பதற்குள் சோகம் விட்டு விடும். நாமும் பிரச்சினையும் ஒன்றாக இருப்பது நமக்குத் தெரியவில்லை.

ஜில்லா கோர்ட் பெரிய வக்கீலுக்கு மைனர் சொத்தை வாங்கும் முறை தெரியவில்லை. கோர்ட்டில் எவருக்கும் தெரியவில்லை என்றால், வக்கீல் அனுபவத்தில் அது இல்லை எனப் பொருள். படித்து அறிவது தொழில். படிக்காமல் அனுபவத்தை மட்டும் பாராட்டுவது படிக்காதவருடைய மனநிலை. படித்தாலும், அனுபவம் பெற்றாலும், நாம் வேறு பிரச்சினை வேறு என்றில்லையானால், பிரச்சினையுடன் நாம் இரண்டறக்கலந்தால், நாமே பிரச்சினையாவோம். அது தீர்க்க முடியாத நிலை.

  • பிரச்சினையை நம்மிடமிருந்து விலக்கி தனியே வைத்துப் பார்த்தால் புரியும். புரியாவிட்டால் அன்னை தீர்ப்பார்.
  • நாமே பிரச்சினையானால், அன்னையிடம் கூறத் தோன்றாது. கூறினாலும் பிரச்சினைத் தீராது.
  • பல சமயம் பிரச்சினையை நாமே உற்பத்தி செய்வோம். அதை நாம் அறிவதில்லை, பிரித்துப் பார்த்தால் புரியும்.
  • கல்லூரி பிரின்ஸ்பால் ஒரு மகன், ஒரு பெண் வைத்திருப்பவர். அவர் என் மகனுக்குத் திருமணம் செய்ய என்னிடம் பணமில்லை என்றால் அதை நாம் கேட்டுக் கொள்ள வேண்டியதில்லை.
  • என் கணவனை நான் திட்டுவேன், குறை கூறுவேன், ஒரு சில சமயம் அடிப்பதும் உண்டு. அன்னை எங்களுக்குள் சுமுகம் ஏற்படுத்த வேண்டும்! என்பது பிரச்சினை.
  • பிரச்சினையை நம்மை விட்டுப் பிரித்தபின் சமர்ப்பணம் செய்தால் - நம்மால் பிரச்சினை வளராததால் - அருள் உடனே செயல்படும். பிரியாத நிலையில் நம் சக்தி பிரச்சினையை அடைந்து அதை வலுப்படுத்தும். வாலிக்கு எதிரியின் பலம் வரும் தத்துவம் அது.

(தொடரும்)

*********

ஜீவிய மணி

தம் பெருமையைத் தாமே நினைந்து மகிழ்ந்து பூரித்து பூரணம் பெறுவது சின்ன புத்தி. பூரணம் பெற்றது பொல பொல என உதிர்ந்து பெருமையைச் சிறுமையாக்கிச் சிறுமை அடக்கமானபின் சின்ன புத்தி பெரிய புத்தியாகும்.

********



book | by Dr. Radut