Skip to Content

08. ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக சிந்தனைகள் - பாகம் 1

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக சிந்தனைகள் - பாகம் 1

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் மற்றும் சொற்பொழிவு: திரு. M. ஜகந்நாதன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 06.09.2015

6. துன்பம் எவ்வளவு இறுதி இன்பத்திற்கு அவசியம், தோல்வி எவ்வளவு இறுதி வெற்றிக்கு அவசியம் என்பதைப் புரிந்து கொண்டால், ஆண்டவன் செயல்படும் வகை ஓரளவுக்குப் புரியும்.

திருமணமாகாத பெண்ணுக்கு திருமணம் அவசியம் என நாம் நினைப்பது தவறல்ல. அவள் வீட்டு நிலைமையில் அவள் மனம் எப்படியிருக்கிறது, எதைத் தேடுகிறது, எதன் மூலம் தேடுகிறது, ஆண்டவன் அவளுக்கு என்ன அளிக்கிறான் என்பது நமக்குத் தெரிவதில்லை. கிருஷ்ணதன் கோஷ் தன் மகனுக்கு ICS வேண்டும் என நினைத்தார். பகவான் ஸ்ரீ அரவிந்தர் மனத்தில் காவியமிருந்தது. அது பிரபஞ்ச காவியம். மந்திரத்தின் மூலம் அறிய வேண்டும் என்பது அன்று அவருக்கோ அவரையறிந்தவர்க்கோ தெரியாது. வேலை செய்பவளுக்குச் சாப்பாடு வேண்டும் என அவளுக்கும், மற்றவர்க்கும் தெரியும். அவள் உடலில் என்ன வியாதியிருக்கிறது, அது சரியாக அவள் பட்டினியுடன் வேலை செய்ய வேண்டும் என அவளுக்கோ அவளைக் கண்டு பரிதாபப்படுவர்க்கோ தெரியாது. மனிதனுடைய பார்வை கண்பார்வை. கண் பார்க்கும், கண் பார்த்ததை மனம் புரிந்து கொள்ளும். புரிந்து கொள்ள மேலும் ஒரு நிலையுண்டு. அது ஆத்மா. B.A. பரீட்சை எழுத விரும்பும் தமிழ் பண்டிட் விரும்புவது B.A. எனத் தெரிகிறது. 20 வருஷமாக ரிஜிஸ்டரில் பியூனுக்கு முன் எழுதப்பட்ட அவர் பெயர் அங்கிருந்து உயர வேண்டும் என அவர் நினைப்பதை மற்றவர் அறிவதில்லை. தன் படிப்பில் பாதியும் பெறாத இதர ஆசிரியர்கட்கு ஆங்கில அறிவால் ஏற்படும் மரியாதையை அவர் விரும்புவதை எவரும் அறிவதில்லை. அதையும் கடந்த சட்டங்கள் உண்டு, மனிதன் வசதி தேடுவது உண்மை. அதையும் கடந்து தேடுவது மரியாதை. மரியாதையைத் தேடுவது உணர்ச்சி. உடல் அதைக் கடந்தது. உடல் தேடுவது வலிமை. வலிமை அதிகாரத்தைக் காட்டும். பிறரை அழிக்கும் வலிமையுள்ள அதிகாரம் தேடுவது மனித உறவு. அடுத்தவரை அழிக்க முடியாவிட்டால், உதவி செய்பவர், உறவாடுபவரை, இவனுக்கு வேலை போய் நடுத்தெருவில் நிற்க வேண்டும், என்னை வந்து கெஞ்ச வேண்டும் என மனித மனம் நினைக்கிறது என்பதை சொல்ல முடியாது. சொன்னால் எவரும் கேட்டுக் கொள்ள மாட்டார்கள். இந்த அம்சத்தைத் தன் மகனிடம், பெற்றோரிடம், உற்ற நண்பரிடம் கண்டவர்க்கு உலகத்து மேல் வெறுப்பு எழும். அந்த வெறுப்பு எழாதவர் நாகரிகமானவர். மனம் நயத்தக்க நாகரிகம் தேடினால் நண்பர் விஷம் பரிமாறுவார் என்பது குறள். வயது 60-க்கு மேலானால், அனுபவம் 100 அல்லது 200 ஆனால் சற்று கவனமாகச் சிந்தித்தால் இத்தனையும் பாரதத்திலிருப்பதைக் காணலாம். அதைக் காண நுணுக்கம் தேவை. வாழ்வில் யோகம் என்பது இதனையும் கண்டபின் நாகரிகமாக, நயமான பண்புடன் நடப்பது. ஆண்டவன் செயல், திருவுள்ளம் என்பது என்ன என்று தெரியும் மார்க்கம் இவை. கால் இடுப்பு வரை அளவுகடந்து வீங்கியபின் வீக்கம் வடியும் மருந்தில்லை. அப்படியொரு மருந்து இருந்து வைத்தியம் செய்து குணமாக பெருவசதி தேவை. வசதியுள்ளவர்க்கு அது வாராது. பட்டினி கிடப்பவருக்கே அது வரும். அன்பருக்கு, அன்னை சூழலிலிருப்பவர்க்கு எதற்கும் வழியுண்டு. இருக்கும் வழி மூலம் அன்னை சிரமத்தைத் தீர்ப்பதை உலகம் துன்பம் என அறிவது மக்களுடைய அறியாமை. நாள் முழுவதும் கடுமையாக உழைத்தவனுக்கு மது மாலையில் இதமாக உறக்கம் தருகிறது. இதில் அவசியம் உண்டு, தவறு இல்லை. பகவான் கனவில் சன்னியாசி சூலம் கொடுத்த பின்னும் பகவான் ICS-ஐ விட்ட பின்னும் அவர் மனம் சுதந்திரத்தை நாடியது. சுதந்திர நாட்டம் பெற வேண்டிய துன்பம், அவதார புருஷன் என்பதால், பிரபஞ்ச இருளை அழித்து விஸ்வரூப தரிசனத்தில் தீமையற்ற நன்மையைக் காட்டியது. காளிங்க நர்த்தனம், சிசுபாலனைக் கொன்றது, கம்ச வதம், துரியோதனாதிகள் பூண்டோடு அழிந்தது ஆகியவை துன்பமாகத் தெரிந்தால் சத்திய ஜீவிய திருஷ்டியில் அவை புனிதமான இன்பமாகத் தெரியும். நம்மால் அவற்றில் ஒன்றையாவது நம் அனுபவங்களில் காண முடியும். அது “திரிகால திருஷ்டி”. போர் முனையில் நிகழும் செயல்கள், ஊர் திரண்டு உற்றாரை அழிப்பவை தெய்வச் செயல் என அறிய நம் பார்வை சத்திய ஜீவிய திருஷ்டி, திரிகால திருஷ்டியாக வேண்டும். தத்துவத்தை விளக்கினால் அது தர்க்கமாக இருக்காது. குதர்க்கமாக இருக்கும். பொறுமை அஞ்ஞானத்தை ஞானமாக மாற்றும். மனிதன் செடல் குத்திக் கொள்கிறான். தீ மிதிக்கிறான். பூரி ஜகன்நாத்தில் தேரடியில் வீழ்ந்து மடிகிறான். இவை அவன் தேடும் இன்பம் என்பது ஆன்மிக ஞானம். ஆவீன மழை பொழிய அகத்தினள் மெய் நோவ சாவோலை கொண்டு ஒருவன் எதிரே வருவதைத் தமிழ்ச் செய்யுள் கூறுகிறது. இவை, பெருவெற்றியை நாடும் எலக்க்ஷனுக்கு முன் இரவு பகலாய் வேலை செய்பவர், மேதை எனப் பட்டம் பெறுபவன் இரவு பகலாய்ப் படிப்பது என அறிய அனுபவம் ஆன்மிகமாக ஏற்க வேண்டும். 27-ஐ தேடிப் பெறாதவர் 81 பெற்றபின் முதலாக நினைப்பது “போதும் போதும், இனிமேல் வேண்டாம்” எனக் கருதி அதைப் பெற்றுத் தருபவரைத் திட்டுவார் என்பது ஆன்மிக விவேகம். சத்பிரேமுக்கு உள்ள அம்சம் அன்னை கண்ணில் பட்டு, அதை பகவான் ஆமோதித்து, 20 ஆண்டு அன்னை முயற்சியால் அவர் Sri Aurobindo or The Adventure of Consciousness எழுதியபொழுது அவர் உடல் எரிய ஆரம்பித்தது. அது உடலின் ஏற்புத்திறன் ஒருவர் தேடுவது என்பது அவருக்கே தெரியாத பொழுது அடுத்தவர்க்கு எப்படித் தெரியும்? என் பக்தியால், என் தாயார் செய்ய மறுத்ததை நான் பெற வேண்டும் எனப் பெண் நினைப்பது அவளுக்கோ பிறருக்கோ தெரியாது. எவனாவது என் கையில் மாட்டினால் அவனை அழித்துச் சமாதி கட்டி மறு வேலை பார்க்கிறேன் என்பவர் அதையறியாமல், அறிந்தால் வெளியிட முடியாமல் B.A. படிக்க முனைவது உலகம் காணும் நிகழ்ச்சி. “எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்” என்பவன் குருவுக்கு ஞானம் தர வந்த சிஷ்யன். “தோற்றேன் என்றபொழுது வென்றேன்” என்பது ஞானம். ஒருவருக்கு இந்த ஞானம் வந்தபின் அவரால் இந்த ஞானம் செயலில் பொறுமையாக வெளிப்படுமாறு இருக்க முடியுமானால், அவர் பார்வை, அவர் சூழல் அன்னையின் ஆன்மிகச் சூழல். அதில் பிரச்சனை தடம் மாறி திருவுருமாறி ஆன்மிக வாய்ப்பாகும். மீரா பெற்ற விஷம் அவள் பெற்ற மோட்சம். சீராளனைக் கறி சமைத்ததால் தாயார், தந்தை, மகனுக்கு மோட்சம் கிடைத்தது. அது இறைவன் திருவுள்ளம். அன்பர் சொந்த வாழ்வில் அரெஸ்ட் வாரண்ட் பெற்று, அரசியல் செல்வாக்கடைந்து, அகில இந்தியாவில் தொழில் நடத்தினார் என்பது ஓர் அன்பர் அனுபவம்.

(தொடரும்)

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

உலகில் விரயமில்லை என்பது பெரும் கருத்து. உலகம் அறியாதது. எப்பொழுது விரயமில்லாமலிருக்கும்? விரயமின்றி ஷர்ட் தைக்க முடியாது. எந்தக் காரியத்தை உதாரணமாக மேஜை செய்வதை விரயமின்றி செய்ய முடியுமா? மேஜைக்கு பெயிண்ட் அடிப்பதை தத்துவப்படி சிந்தாமல் சிதறாமல் அடிக்கலாம். நடைமுறையில் அது நடக்காது. சிலையை விரயமின்றி செய்ய முடியாது. சாப்பிட்டது ஜீரணமானபின் மீதி கழிவு. விரயமில்லாமல் சாப்பிட முடியாது. ஒரு பெயிண்டர் விரயமின்றி பெயிண்ட் செய்ய பிரஷ்ஷில் பெயிண்ட் அளவோடு எடுக்க வேண்டும். பிரஷ்ஷிலிருந்து பெயிண்ட் சிந்தக்கூடாது. பெயிண்ட் செய்யும்பொழுது சிந்தக்கூடாது. இது நடைமுறையில் சாத்தியமில்லை. அது முடியும் எனக் கொண்டால் அந்தப் பெயிண்டருக்கு மனம் பெயிண்ட், பிரஷ், பெயிண்ட் அடிப்பது போன்ற எல்லாச் செயலிலும் தெளிவாக (conscious) இருக்க வேண்டும். சிருஷ்டியில் விரயமின்றியிருக்க பிரம்மம் சிருஷ்டிக்கு வெளியே தெளிவாக (conscious) இருக்க வேண்டும். பிரம்மம் conscious -ஆக இருக்க வேண்டுமானால் அது அக்ஷர பிரம்மமாக இருக்க முடியாது.ஏனெனில் அக்ஷர பிரம்மம் அசையாதது, வளராதது. அதனால் மரபின் கூற்றை நாம் ஏற்க முடியாது.

பிரம்மம் உயர்ந்து அக்ஷர பிரம்மம், க்ஷர பிரம்மம்
இரண்டும் இணைந்து முழு பிரம்மமாக வேண்டும்
என்று பகவான் கூறுவதை ஏற்க வேண்டும்.

************



book | by Dr. Radut