Skip to Content

09. The Life Divine – Outline

The Life Divine – Outline

தமிழ்

(சென்ற இதழின் தொடர்ச்சி)                                                                                                           கர்மயோகி

BOOK II

ஞானமும் அஞ்ஞானமும் - ஆன்மிகப் பரிணாமம்

Part 1

அனந்த ஜீவியமும் அஞ்ஞானமும்

பகவானுடைய தத்துவம் இறைவன் உலகமானான் என்பது. இறைவன் ஞானம், உலகம் அஞ்ஞானம். மீண்டும் அஞ்ஞானம் ஞானமாவது ஆன்மிகப் பரிணாமம். மரபு ஆன்மாவை மனிதக் கரணங்களாகிய உடல், உயிர், மனம் இவற்றுள் தலையாயது எனக் கருதியது. ரிஷிகள் கண்டது: அற்புதமான ஆத்மா சிறைப்பட்டுள்ளது. இதற்கு விடுதலை வேண்டும் எனக் கருதி தவம், யோகம் மூலம் ஆன்மாவுக்கு விடுதலை அளித்து ஆன்மா அதன் பிறப்பிடமான பிரம்மத்தைச் சேரும் வகை செய்தனர். அவர்கள் கருவி மனம், பகுத்து மட்டும் அறிவது. மனம் ஆன்மாவை ஜீவனிலிருந்து பிரித்துப் பார்த்து எடுத்த முடிவு மரபில் கண்ட ஆன்மிக உண்மை.

பகவானுடைய கருவி சத்திய ஜீவியம். இதற்கு முழுமை தெரியும். ஆன்மாவைச் சத்திய ஜீவியம் மனித ஜீவனின் ஒரு பகுதியாகக் காணவில்லை. மனித ஜீவன் முழுவதும் ஆன்மா எனக் கண்டது. மேலும் உலகமே ஆன்மா எனவும் அதற்குப் புரிந்தது. தொடர்ந்த பார்வையால் சிருஷ்டி முழுவதும் - பிரபஞ்சம், அதற்கு மேலுள்ள பிரம்மம், அதன் கீழுள்ள உலகம் - ஆன்மா எனத் தெளிந்தது.

பகவானுக்கு ஆன்மா சிருஷ்டியின் சத்தியம் என்று தெரிந்தது.

பிரம்மம் பிரம்மமான நிலையிலிருந்து அசைந்து சிருஷ்டிக்க ஆரம்பித்தவுடன் சிருஷ்டியில் பிரம்மம் தன்னை ஆன்மாவாகக் கண்டது.

இந்த ஆன்மா சிருஷ்டியின் முதற்கட்டத்தில் சச்சிதானந்தமாயிற்று. பிரம்மம் அகம், புறம் எனப் பிரிந்தபொழுது புறம் சிருஷ்டியாயிற்று. அந்நிலை சச்சிதானந்தம். மீண்டும் சச்சிதானந்தம் அகம், புறம் எனப் பிரிவதால் புறம் சத்திய ஜீவியமாயிற்று. சத்திய ஜீவியம் மீண்டும் அகம் புறம் எனப் பிரிந்து அவற்றிடையே மனம் உற்பத்தியாயிற்று. மனம் வாழ்வு, ஜடத்தை உற்பத்தி செய்தது.

சிருஷ்டிக்குரிய முறை - அகம் புறம் எனப் பிரிதல்.

சிருஷ்டி மனத்தோடு முடிகிறது.

வாழ்வும், ஜடமும் மனத்தால் சிருஷ்டிக்கப்பட்டாலும், அவை சிருஷ்டியில் சேரா. மனமே சிருஷ்டிக்கு கடைசிக் கட்டம். இவையெல்லாம் மரபு அறிந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மனம் உள்பட வாழ்வும் ஜடமும் விலக்கப்பட வேண்டியவை என்றனர்.

சிருஷ்டியில் அஞ்ஞானமில்லை. அஞ்ஞானத்தை மனமே உற்பத்தி செய்கிறது. மனம் வாழ்வையும், ஜடத்தையும் உற்பத்தி செய்தாலும் மனத்தின் அஞ்ஞானம் மனம், வாழ்வு, உடலைப் பாதிப்பதில்லை. அஞ்ஞானம் சிருஷ்டிக்கு அற்புதமான திறமையைத் தருகிறது. அதாவது அஞ்ஞானத்தை எந்த நேரத்திலும் விலக்கலாம். அஞ்ஞானத்துள் ஒளிந்துள்ள ஞானம் வெளிவருவதாலும் ஞானத்திலிருந்து ஆன்மா வெளிவருவதாலும், பிரம்மத்திலிருந்து சிருஷ்டியின் சத்தியமாக எழுந்த ஆன்மா பரிணாம வளர்ச்சி பெறுகிறது. எனவே,

பூரணயோகம் ஆன்மிகப் பரிணாம யோகம் எனப் பெயர் பெற்றது.

மரபுக்கு ஆன்மா ஆதி, அந்தம், அசைவு, வளர்ச்சி, மாறுதலற்றது. பகவானுக்கு ஆன்மா பரிணாம வளர்ச்சி பெறுவது. பரிணாம வளர்ச்சியில் ஆன்மா முழுவதும் - பிரபஞ்சத்தில் பரவிய ஆன்மா முழுவதும் - பெறும் ஆனந்தம் பேரானந்தம். வளர்ச்சி ஆனந்தம் தரும். பெரும் வளர்ச்சி பேரானந்தம் தரும்.

பகவானுடைய யோகத்தில் மனிதன் ஆன்மாவாகி, பிரபஞ்சம், அதைக் கடந்த பிரம்மத்திலும் வியாபித்து தான் பெறும் பரிணாம வளர்ச்சியால் வளரும் ஆனந்தம் பெறுவதை சத்திய ஜீவனான மனிதன் அனுபவிக்கிறான்.

அப்பேரானந்தப் பெருவெள்ளம் என்ற பேற்றை நாடி பிரம்மம் சிருஷ்டித்தது.

இப்பகுதிக்குரியவை 14 அத்தியாயங்கள். ஞானம் அஞ்ஞானத்திலிருந்து வெளிவருகிறது. அந்த அஞ்ஞானம் மேல் மனத்தில் முழுமை பெறுகிறது என்றார். அஞ்ஞானம் முழுமை பெற ஒரு குறுகிய எல்லைக்குள் அதை அடைக்க வேண்டி மேல் மனத்தை அடி மனத்திலிருந்து பிரித்து வரையறை ஏற்படுத்தப்பட்டது. மேல் மனம் என்பது அகந்தை, காலம், மனம், சிறியது ஆகியவை செயல்படுமிடம். இது ஜடமான மனம் (13) அடிமனம் முழுமனம். மேல் மனம் அதனின்று பிரிக்கப்பட்டதுடன் திருப்பி அமைக்கப்பட்டதால் (reverse)) மீண்டும் அடி மனத்துடன் சேர்வது இயலாது. முழுமை பெற்ற அஞ்ஞானம் ஞானத்தைவிடப் பெரியது என்கிறார் பகவான். பிரம்மம் (self) காலத்துள் வீரமாக செயல்பட வேண்டி (adventure in Time) மேல் மனம் உற்பத்தியாயிற்று என்பது தத்துவம். முழுமை பெற்ற அஞ்ஞானம் இருளால் பூரணம் பெற்று தீமை (evil) உற்பத்தியாயிற்று (14). தீமை பரிணாமத்தால் அஞ்ஞானமாயிற்று. சத்திய ஜீவியத்திலிருந்து மனம் பிரிந்ததால் (12) அஞ்ஞானம் எழுந்தது. இவ்வஞ்ஞானம் 7 வகையானது (11). அஞ்ஞானத்தைப் பூரணமாக அறிய ஞானத்தை அறிய வேண்டும் (10). ஞானம் நால்வகை (9). ஞானம் தன்னை அஞ்ஞானமாக மாற்றிக் கொண்டது (7). மேல் மனம் அகந்தை செயல்படுமிடம். அஞ்ஞானம் சுய ஜீவியத்தில் சுய அனுபவம் பெற்றால் அகந்தையாகிறது (8,9). அஞ்ஞானம், ஞானத்தைப் பற்றிக் கூறுமுன் பகவான் சங்கரருக்குரிய பதிலை 5, 6 அத்தியாயங்களில் எழுதுகிறார். சங்கரர் உலகம் மாயை என்றார். பகவான் அஞ்ஞானத்தை சங்கரர் மாயை என விவரிக்கிறார் என்ற விளக்கம் தருகிறார்.

இரண்டாம் அத்தியாயம் இப்பகுதிக்கு முக்கியமானது. அங்குப் பரம்பரை பிரம்மம், புருஷா, ஈஸ்வரனைப் பிரித்து அறிகிறது எனவும் அவை ஒன்றே எனவும் கூறுகிறார். பிரித்து அறிவது அஞ்ஞானம். சேர்த்துப் பார்ப்பது ஞானம். மேலும் மரபு காலம், காலத்தைக் கடந்த நிலையை அறியும். பகவான் அந்த லோகங்கள் அஞ்ஞானத்திற்குரியவை என்கிறார். ஞானத்திற்குரிய காலம் மூன்றாம் நிலைக் காலம். இங்கு காலமும், கடந்ததும் இணைந்து செயல்படுவதால் செயல்கள் க்ஷணத்தில் பூர்த்தியாகின்றன என்கிறார்.

முதல் அத்தியாயம் பிரம்ம சிருஷ்டி பிரபஞ்ச சிருஷ்டி என்பது. இங்கு தன் மிகப் பெரிய கொள்கையை வெளியிடுகிறார். இறைவன் உலகைப் படைக்கவில்லை, இறைவனே உலகமானார் எனக் கூறுகிறார். அத்துடன் பிரம்மா சிருஷ்டிக்கவில்லை எனக் கூறி உலகை சத்திய ஜீவியம் சிருஷ்டித்தது எனக் கூறுகிறார்.

மூன்றாம் அத்தியாயம் பரமாத்மாவும் ஜீவாத்மாவும். மரபு பல்லாயிரம் ஜீவாத்மாக்களுண்டு, ஜீவாத்ம சித்தி பரமாத்ம சித்திக்கு வழிகோலும், அந்த சித்தியில் ஜீவாத்மா பரமாத்மாவில் கரைந்து விடுகிறது என்கின்றது. பகவான் பிரபஞ்சத்திலுள்ள ஒரே ஜீவாத்மா, நாம் - மனம், அதை ஆயிரமாயிரம் ஜீவாத்மாக்களாகக் காண்கிறோம், அத்துடன் ஜீவாத்ம சித்தி ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவை எட்டித் தானே பரமாத்மாவாகும் நிலையைத் தருகிறது, ஜீவாத்மாவுக்கு அழிவில்லை, மேலும், பரமாத்ம நிலையையும் கடந்து ஜீவாத்மா பிரம்மத்திற்குரிய ஆத்மாவாகவும் மாறுகிறது என்கிறார்.

4-ஆம் அத்தியாயம் இறைவனும் எதிரான உலகமும். பகவான் அனைத்துமே இறைவன், அவனுக்கு எதிரானது உலகிலில்லை, எதிராக இருப்பது தோற்றம், எதிரான தோற்றத்தை ஏற்று மலர்ந்தால் இறைவனின் பூரண ஜீவனை அறிய முடியும், சச்சிதானந்தமே முடிவில்லை, சச்சிதானந்தமும் அதற்கு எதிரானதும் இணைந்து உயர்ந்து எழுந்து முழு பிரம்மமாவதை நாம் எதிரானது எனத் தவறாக நினைக்கிறோம் என்கிறார்.

(தொடரும்)

**********



book | by Dr. Radut