Skip to Content

12. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

பரம்பொருள் புத்தகத்தை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்த ஒரு வட இந்தியப் பெண்மணியின் அனுபவம்.

அவரது பெயர் மது வர்மா. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியைச் சேர்ந்தவர். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சிங்கப்பூரிலும் இளைய மகன் அமெரிக்காவிலும் பணி புரிகிறார்கள்.

ஒரே காலனியில் இருப்பதால் ஸ்ரீ அன்னையைப் பற்றி கேள்விப்பட்டு அன்பர் வீட்டில் நடக்கும் தியான கூட்டங்களில் பல வருடங்களாக கலந்து கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ கர்மயோகி அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்களின் சாரங்களையும், கடந்த சில மாதங்களாக மலர்ந்த ஜீவியத்தில், ‘பரம்பொருள்’ புத்தகம் வாசிப்பதால் அன்பர்கள் வாழ்வில் ஏற்பட்ட அற்புதங்களை விவரிக்கும் அனுபவக் கட்டுரைகளை அவருக்கு ஹிந்தியில் மொழி பெயர்த்துச் சொல்ல மிகவும் நெகிழ்வுடன் கேட்டுக் கொள்வார்.

‘Life Divine’-ஐ தொடர்ந்து படித்தால் படிப்பவரை இப்புத்தகம், higher consciousness-க்கு எடுத்துச் செல்லும் என்றும், மேலும் புத்தகத்தைப் பற்றி ஸ்ரீ கர்மயோகி அவர்கள் எழுதி இருப்பவற்றை ஏற்கனவே அறிந்திருந்தார்.

‘பரம்பொருள்’ புத்தகத்தில் ஆங்கிலத்திலும், ‘Life Divine’ எளிமையாக எழுதப்பட்டிருப்பதை அறிந்ததும், ஒரு பக்கம் தமிழ் இருந்தாலும் பரவாயில்லை என்று மூன்று பாகங்களையும் ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டார். இனி அவர் பகிர்ந்து-கொண்டதை அப்படியே தர முயல்கிறேன்.

***

எனக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்தாலும் சில இடங்களில் தடுமாறுவேன். முதன் முதலாக பள்ளிக்குச் சென்று எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள், வீட்டுப் பாடம் எழுத அம்மாவுடன் அமர்வது போல், நான் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, ‘பரம்பொருள்’ புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீ அன்னையின் முன் அமர்ந்து கொள்வேன். அம்மாவிடம் கேட்டு எழுதும் குழந்தை போல எனக்கு ஏதாவது தெரியாவிட்டால் ஸ்ரீ அன்னையிடம் கேட்டுப் படிப்பேன். சில வார்த்தைகளைத் தவறாக உச்சரிக்கிறோம் என்று உணர்ந்து ஸ்ரீ அன்னையை ஏக்கத்துடன் பார்க்கும் போது, ‘நீ என்ன சொல்ல வருகிறாய் என்று புரிந்துவிட்டது, மேற்கொண்டு வாசி’ என்று ஸ்ரீ அன்னை குறும்பாகச் சொல்வது போலிருக்கும்.

எப்போதும் எந்த விஷயத்திலும் எதையாவது கூறியபடி இருப்பது என்னுடைய சுபாவம். மௌனமாக இருப்பது என் குணத்திற்குச் சிறிதும் பொருத்தமற்ற ஒன்று.

என்னுள் அன்னை என்னை வழி நடத்துவதை அறிந்த பின், எங்கு என்ன பேச வேண்டும் என்பதை அவரே கூறுகிறார். தேவையற்ற இடத்தில், ‘இங்கு உனக்கு வேலையில்லை, நிறுத்திக்கொள், பேசாமலிரு’ என்கிறார். தேவையான இடத்தில் அளவோடு பேச உதவுகிறார்.

நான் எப்படிப் பேசாமலிருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இது என் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட விஷயமில்லை. நிறுத்து, என்று உள்ளிருந்து குரல் எழுந்ததும், பேச்சை நான் நிறுத்தவில்லை, அது தானே நின்று விடுகிறது என்பது எனக்கே புதிராக இருக்கிறது. எங்கு என்ன பேச வேண்டும், கூடாது என்ற தெளிவுடன் என் personality முற்றிலும் சாந்தமாக மாறியிருப்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது.

இம்மாற்றங்கள் அசாதாரணமானவை. மனித கட்டுப்பாட்டை மீறியவை. என்னுள் பெரிய அமைதியை என்னால் உணர முடிகிறது.

பொதுவாக தோழிகள் யாராவது என்னோடு பேச வீட்டிற்கு வந்தால், எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு நான் அவர்களோடு தேவையற்ற பேச்சில் நேரத்தை வீணடிப்பதை நான் அடிக்கடி செய்வதுண்டு. அவர்கள் தவறாக எண்ணுவார்கள் என்று நான் மணிக்கணக்கில் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.

ஆனால் அகத்தில் இம்மாற்றம் ஏற்பட்ட பிறகு, யாராவது வந்தால் அவர்களோடு பேச எனக்குத் தோன்றுவதில்லை. நல்ல முறையில் இரண்டு நிமிடங்கள் அவர்களோடு பேசி விட்டு வேலை இருப்பதாகக் கூறி அனுப்பி விட்டு என் வேலையில் ஈடுபடுகிறேன். அவர்களும் நான் கூறுவதை ஏற்றுப் புரிந்து கொண்டு மன வருத்தமின்றி சென்று விடுவதை என்னால் நம்ப முடியவில்லை. யோசித்தால், என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்தவரையும் மாறச் செய்கிறது என்று எனக்குப் புரிந்த பொழுது தெளிவு ஏற்பட்டது.

இவை சிறு விஷயங்களானாலும் இம்மாற்றங்கள் எனக்கு மிகப் பெரியவை. என் கணவர், நான் தோழிகளோடு அரட்டையில் ஈடுபடாமல், அமைதியாக இருப்பதைப் பார்த்து மலைத்துப்போய் ‘உனக்கு என்னாயிற்று’ என்று கேட்கிறார்.

எந்த விஷயத்திற்கும் நான் டென்ஷன் ஆகிவிடுவதுண்டு. சிறிது நாட்களுக்கு முன் வீட்டில் சில தேவையற்ற மரச்சாமான்களை விற்க எண்ணினேன். இது போன்ற நேரங்களில் பொதுவாக நான் அதிக பதற்றத்துடன் காணப்படுவேன். இம்முறை உள்ளிருந்து ‘ஒரு டென்ஷனும் தேவையில்லை, வேலை முடிந்து விடும்’ என்ற குரல் எழுந்தது. எல்லா சாமான்களும் ஒன்று விடாமல் நேற்று, நல்ல விலைக்கு விற்கப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் எனது இளைய மகனுடன் இரண்டு மாதங்கள் தங்க நினைத்திருந்தேன். முதன் முதலாக தனியாகப் பயணம் செய்கிறேன். புறப்படும் நாளன்று அதிக வேலை காரணமாக உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட 19 மணிநேரப் பயணம், இந்த உடல் நிலையுடன் எப்படிப் போவாய் என, என்னைத் தனியாக அனுப்ப பயந்தனர். ஆனால் நான் கேபின் லக்கேஜில் போடுவதற்காக சூட்கேசில் வைத்திருந்த ‘பரம்பொருள்’ புத்தகங்களை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டேன்.

ஸ்ரீ அன்னை என்னுடன் கூடவே வரும்பொழுது எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றியது.

எந்த விதமான தொந்தரவும் இன்றி பயணம் இனிமையாக இருந்தது.

அமெரிக்காவில் இரண்டு மாதங்களும் ‘பரம்பொருள்’ புத்தகங்களைத் தவறாது படித்தேன். தலை முழுக்கக் காலியாகி விட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது (என்று தன் பின்னந்தலையினைத் தொட்டுச் சொல்கிறார்). சந்தோஷம் பொங்கி வருகிறது. கனம் நெற்றிப் பொட்டில் சேருகிறது.

நான் வாசிப்பதைக் கேட்ட எனது மகன், அம்மா உங்கள் ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலத்தில் டாக்டரேட் முடித்தவர்கள் போலுள்ளது. இப்பொழுது நீங்கள் படிப்பதை யாராவது கேட்டால் நீங்கள் படிக்காதவர் என யாரும் நம்ப மாட்டார்கள். எப்படிம்மா இப்படி படிக்கிறாய் என ஆச்சர்யமாய் சொன்னான்.

அமெரிக்கா புறப்படும்பொழுது, கணவரை விட்டுத் தனியாக அங்கு எப்படி இருப்பாய் என்று மற்றவர் கேட்டனர். அங்கிருந்த 52 நாட்களும் நான் பரம்பொருள் படிப்பதிலும் அன்னையோடு பேசுவதிலும் நாட்களைக் கழித்தேன். பயமோ தனிமையோ என்னை வாட்டவேயில்லை. மனம் சில்லென்று அமைதியாக அற்புதமான ஒன்றாக இருந்தது. என்னோடு ஒரு தெய்வீக ஜீவன் அளவற்ற energy-யுடன், பிரியாமல் இருந்ததை அறிந்தேன்.

கணவரைத் தனியாக விட்டு வந்திருப்பதால், சாப்பாட்டிற்கு என்ன செய்கிறாரோ, உடல் நிலை எப்படி உள்ளதோ என்ற கவலைகள் எழும்போது, உள்ளிருந்து அதே குரல், ‘கவலைப்பட அவசியமில்லை’ என்றது. அதே போல் நான் திரும்பி வரும் வரை, அவர் ஒரு நாளும் சாப்பாட்டிற்கு சிரமப்படவில்லை, ஒரு சிறு உபாதையும் இன்றி நல்ல உடல்நிலையோடு இருந்தார்.

அங்குக் காலையில் வாக்கிங் போகும் போது, ப்ளூ பெர்ரி மரங்களும், சிறு அணில்களும்கூட என்னுடன் பேசின. அனைத்து இயற்கையோடும் - மரங்கள், புல்வெளிகள், சாலைகள், ஓடைகள், நதிகள், பறவைகள் - நான் அளவளாவிய அவற்றுடன் ஐக்கியமாகும் அற்புத அனுபவம் எனக்குக் கிட்டியது. அமெரிக்காவிலிருந்து திரும்புவதற்கு ஒரு நாள் முன்னர் அவை அனைத்தையும் தொட்டு, நன்றி கூறி அவற்றிடமிருந்து நான் விடை பெற்றேன்.

அமெரிக்காவில் இருந்த போது அற்புதமான கனவுகள் என்னை ஆட்கொண்டன. அதில் நான் அழகான தோட்டத்தில், வெண்ணிறத்தில் புலி, நாகம் மற்றும் மயில் இவைகளைப் பார்த்தேன். மேலும் சிவன், சக்தி போன்ற தெய்வங்களும் கனவில் வந்தார்கள்.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது, அனைவரும் நான் தனிமையில் தவித்து வாடி வருவேன் என எதிர்பார்த்தார்கள். ஆனால் நானோ தனிமையில் இனிமை எய்தி, இமயமலையிலிருந்து திரும்பிய யோகி போல் என்னை உணர்ந்தேன்.

முன்பு கோபம் கொள்ளும் குணமுடையவளாக இருந்தேன். இப்போது என்னுள்ளிருந்து அமைதி, நிதானம், பொறுமை இவற்றை வெளிப்படுத்தும்படி குரல் வழி நடத்துகிறது. இப்போதெல்லாம் எனக்கு பிரார்த்தனையில் ‘அம்மா, என்னை நீ முழுவதுமாக ஏற்றுக்கொள்’ என்று மட்டுமே கேட்கத் தோன்றுகிறது. வேறு எதுவும் மனத்தில் எழுவதில்லை.

நன்றி! நன்றி! நன்றி!

**********

ஜீவிய மணி

ஞானத்தைத் தேடும் மனிதன் முதலில் திறமையைப் பெறுகிறான். அன்னையை அறிவது புண்ணியம் எனில் காணிக்கை கொடுக்கத் தோன்றுவது பெரிய அனுபவத்தால் வருவது. $10 காணிக்கை கொடுக்க மறுத்தவர் இரண்டு ஆண்டிற்குப் பின் $120 கொடுத்தார். அந்த அனுபவம் பெற 800 கோடி வியாபாரத்தையும் 30 கோடி இலாபத்தையும் சொந்த கம்பெனியையும் இழந்தபின் இந்த அறிவு ஏற்பட்டது. இது அனுபவம் தரும் திறமை. இதற்குப் பின் வருவது ஞானம்.

************



book | by Dr. Radut