Skip to Content

13. அன்னை இலக்கியம் - மீன்கொடி

அன்னை இலக்கியம்

மீன்கொடி

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

16. மறந்ததை நினைவூட்டல்

வழக்கம் போல நான் தாமதமாக எழுந்தபோது வீடு வேறு மாதிரி இருந்தது. சிறிது நேரம் இது யார் வீடு என்று குழம்பி பின் தெளிந்தேன்.

ஜமுனா தலைக்குக் குளித்து விட்டு கிணற்றடியில் உட்கார்ந்து கூந்தலை விரித்துப் போட்டு காய வைத்துக் கொண்டிருந்தாள். முகம் கழுவி விட்டு அவளருகே அமர்ந்தேன். பெண்கள் போடும் ஷாம்பூ, சோப்பின் நறுமணம் அவளிடமிருந்து வந்து என் மெல்லுணர்ச்சிகளைத் தூண்டியது.

பக்கத்திலிருந்த கட்டடத்தைக் காட்டி ‘இதுதான் கம்பெனி கட்டடமா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘ஆமாம். பழைய கட்டடம். தாத்தா பத்திரமாக பராமரித்து வந்தார்’ என்றேன்.

‘வந்தாரா? இப்போது யார் பார்த்துக் கொள்கிறார்கள்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘யாருமில்லை. போன வருடம் அண்ணார்கள் தாத்தாவிடம் பேசினார்கள். ‘மாத சம்பளம் செலவுக்குப் போதவில்லை. சொந்தமாக தொழில் செய்ய நினைக்கிறோம். கம்பெனியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்றார்கள்’ என்றேன்.

‘இந்தக் கம்பெனியைவிட ஆயிரம் மடங்கு பெரிய கம்பெனிக்குத் திட்டம் போடுவதுதானே? புதிதாக ஏதாவது செய்ய வேண்டியதுதானே?’ என்றாள் ஜமுனா.

‘இதையேதான் தாத்தாவும் கேட்டார். ‘நீங்களே புதியதாக ஒரு கம்பெனி ஆரம்பியுங்கள். என்னால் முடிந்த உதவி செய்கிறேன்’ என்றார். ஆனால் அண்ணார்கள் ‘எங்களுக்கு ஓடும் கம்பெனிதான் வேண்டும். அதை வைத்து இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்தது போல கம்பெனியை உயர்த்திக் காட்டுகிறோம்’ என்றார்கள்’ என்றேன்.

‘நீங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘நான் சொல்ல என்ன இருக்கிறது? தாத்தாவிற்குப் பேரர்கள் மீது எப்போதுமே நம்பிக்கையில்லை. இருந்தாலும் எங்கள் பெயருக்குக் கம்பெனியை மாற்றிக் கொடுத்தார். தாத்தா எதையாவது கொடுத்துவிட்டால் அதைப் பற்றி நினைக்கக் கூட மாட்டார். ஆனால் எங்கள் மீதுள்ள பிரியத்தால் கம்பெனியை கொடுத்த பின்பும் ‘நீங்கள் கற்றுக் கொள்ளும்வரை வருகிறேன்’ என்று சொல்லி தினமும் அவர்தான் வந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். ‘நீங்கள் இப்படிச் செய்தால் நாங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது’ என்று அண்ணார்கள் கூறியும் அவர் வந்து கொண்டிருந்தார். அதைக் கேள்விப்பட்ட பாட்டி ‘வயதானாலும் பணத்தாசை போகவில்லை’ என்று கேலி செய்தாராம். அதன்பின் தாத்தா கம்பெனிக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். தாத்தா கம்பெனி பற்றி அண்ணார்களிடம் ஒரு வார்த்தை விசாரிப்பதில்லை. அண்ணார்களும் எதையும் தாத்தாவிடம் கூறுவதில்லை’ என்றேன்.

‘கம்பெனி பற்றி நீங்கள் தாத்தாவிடம் சொல்வதுதானே?’ என்றாள் ஜமுனா.

‘நானா! கம்பெனி பற்றி எனக்கென்ன தெரியும்?’ என்றேன்.

‘நீங்களும் கம்பெனியில் உரிமை உள்ளவர்தானே?’ என்றாள் ஜமுனா.

‘அதெல்லாம் பத்திரத்தில்தான். மற்றபடி அண்ணார்களுக்குத்தான் எல்லாம் தெரியும். நான் கம்பெனிக்குள் போய் எத்தனையோ காலமாகிவிட்டது. என்னிடம் சாவி கூட இல்லை’ என்றேன்.

‘ஆனால் தாத்தா கஸ்டமரைப் பார்க்கப் போயிருக்கிறார் என்று போன வாரம் கூட போனில் சொன்னீர்களே’ என்றாள் ஜமுனா.

‘அவரைப் பற்றித் தெரிந்த போட்டிக் கம்பெனிக்காரர்கள் பெரிய சம்பளத்திற்கு வேலைக்குக் கூப்பிட்டார்கள். முடியாது என்று கூறிவிட்டு எண்பது வயதில் ஏஜென்டாக அலைந்து, திரிந்து சொந்தமாக தொழில் செய்கிறார்’ என்றேன்.

‘எண்பது வயதுதானே ஆகிறது! இன்னும் எத்தனையோ காலம் வேலை பார்க்கலாமே’ என்ற ஜமுனா கட்டடத்தை மீண்டும் பார்த்தாள். ‘பல நாள் மூடிக்கிடக்கும் கட்டடம் போலிருக்கிறதே!’ என்றாள்.

‘சில மாதங்களாக அப்படித்தான் கிடக்கிறது. அண்ணார்களுக்கு அலுவலக வேலை அதிகமாக இருப்பதால் வர முடிவதில்லை என்று நினைக்கிறேன்’ என்றேன்.

‘சிப்பந்திகள் வரத்தானே வேண்டும்?’ என்றாள் ஜமுனா.

‘அக்கவுண்டண்டும், பியூனும் எப்போதாவது வருவார்கள். வேறு எவரும் வருவதில்லை’ என்றேன்.

‘ஏன்?’ என்றாள் ஜமுனா.

‘அண்ணார்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும்? என்னிடம் சங்கப் பாடல்கள் பற்றிக் கேள். பதில் சொல்கிறேனா இல்லையா பார்’ என்றேன்.

புன்னகைத்தாள் ஜமுனா.

‘இன்று பத்தரைக்கு கணக்கர் பழனியப்பரின் பெண் ராகினிக்குக் கல்யாணம். போய் வரலாமா? நேற்று கிளம்பும்போது ஜவுளி அண்ணி சொன்னார். அப்படியே வீடுகளை உனக்கு காட்டும்படி காபி அண்ணி சொன்னார்’ என்றேன்.

‘நிலம்?’ என்றாள் ஜமுனா.

‘நம் நிலத்தையும் காட்டுகிறேன்’ என்றேன்.

‘மோட்டார் சைக்கிளைத் துடைத்து வைத்திருக்கிறேன்.

திருப்பித் தந்து விட்டு வாருங்கள். வெளியே போகலாம்’ என்றாள் ஜமுனா.

‘வண்டி இல்லாமல் எப்படிப் போவது!’ என்றேன்.

‘இத்தனை நாள் எப்படிப் போனீர்கள்?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘வீட்டில் அண்ணார்களின் கார்களும், அண்ணிகளின் ஸ்கூட்டர்களும் இருக்கின்றனவே’ என்றேன்.

‘நமக்கென வண்டி இல்லையென்றால் வேறு ஆயிரம் வழிகள் இல்லாமலா போய் விட்டது? ஆட்டோவில், பஸ்ஸில் போவோம். அது முடியவில்லை என்றால் நடந்து போவோம்’ என்றாள் ஜமுனா.

‘உனக்கு எந்த சிரமமும் இல்லாமல் வெளியே கூட்டிச் சென்று வர ஆசைப்படுகிறேன்’ என்றேன்.

‘புது வண்டி நன்றாக இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இரவல் வண்டியில் ஊர்வலம் வர சங்கடமாக இருக்கிறது. நேற்று உங்களோடு வண்டியில் வந்தபோது உங்கள் நண்பரோடு வருவது போலிருந்தது’ என்றாள் ஜமுனா.

‘வண்டியை இப்போதே திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’ என்றேன்.

கம்பெனி வராண்டாவில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை சுட்டிக்காட்டினாள் ஜமுனா. ‘இது தாத்தாவின் சைக்கிள்தானே? ஏன் இங்கு நிற்கிறது?’ என்று கேட்டாள்.

‘கல்யாண சமயத்தில் பல பெரிய மனிதர்கள் வீட்டிற்கு வருவார்கள். சைக்கிளைப் பார்த்தால் சிரிப்பார்கள் என்று நினைத்து அண்ணார்கள் தாத்தாவிற்குத் தெரியாமல் சைக்கிளை இங்கே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். கல்யாண வேலையில் தாத்தா கவனிக்கவில்லை’ என்றேன்.

‘கவனித்திருப்பார். பொருட்படுத்தியிருக்கமாட்டார். சைக்கிள் தூசி படிந்து நிற்கிறது. நீங்கள் வருவதற்குள் துடைத்து வைக்கிறேன். தாத்தா சைக்கிளில் நாம் வெளியே போய் வரலாம்’ என்றாள் ஜமுனா.

‘உன்னுடனா!’ என்றேன்.

‘அவ்வளவு கனமாகவா இருக்கிறேன்?’ என்றாள் ஜமுனா.

‘பெண்ணைப் பின்னால் உட்கார வைத்து சைக்கிள் ஓட்டி எனக்குப் பழக்கமில்லை’ என்றேன்.

‘நான் சுந்தரத்தையும், அப்பாவையும் பின்னால் உட்கார வைத்து நன்றாக ஓட்டுவேன். இன்று உங்களை பின்னால் உட்கார வைத்து ஓட்டிக் காட்டுகிறேன்’ என்றாள் ஜமுனா. பின் சிரித்துக் கொண்டே ‘அப்பா வீட்டில் ஒரு சைக்கிள்தான் இருக்கிறது. நானும், அப்பாவும் மாற்றி மாற்றி ஓட்டுவோம். சுந்தரம் சைக்கிள் ஓட்டுவதற்காக தவம் கிடப்பான்’ என்றாள்.

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

‘வரும்போது ஒரு நாளைக்கு வாடகை ஸ்கூட்டர் எடுத்து வாருங்கள்’ என்று கூறினாள் ஜமுனா.

என்னிடம் பணம் எதுவுமில்லை. இருந்த எல்லாவற்றையும் நேற்றே அவளிடம் கொடுத்துவிட்டேன்.

‘உங்கள் நண்பர் சிவசங்கரன் சாப்ட்வேர் வேண்டும் என்று கேட்டாராமே. தாத்தா போனில் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்’ என்றாள் ஜமுனா.

‘போகவேண்டும். நேரமே கிடைக்கவில்லை’ என்றேன்.

‘வண்டியை கொடுத்துவிட்டு திரும்பும்போது அவரையும் பார்த்து விட்டு வாருங்கள்’ என்றாள் ஜமுனா.

‘இன்னொரு நாள் போகிறேன். இன்று நாம் வெளியே போகவேண்டுமே’ என்றேன்.

‘வண்டியை கொடுத்துவிட்டு திரும்பும்போது அவரையும் பார்த்து விட்டு வாருங்கள்’ மீண்டும் சொன்னதையே சொன்னாள் ஜமுனா.

இந்த விஷயத்தில் மேற்கொண்டு பேச எதுவுமில்லை என்பது புரிந்தது.

கிளம்பும்போது என்னிடம் நூறு ருபாய் தந்தாள்.

அந்த பணத்திற்குப் பெட்ரோல் போட்டேன். தினகரன் வண்டியை இரவல் தரும்போது பெட்ரோல் போட்டுத்தானே தந்தான்?

நான் தினகரனின் வீட்டிற்குப் போனபோது அவன் அலுவலகம் சென்று விட்டதாக அவன் அம்மா சொன்னார். அப்போதுதான் என் வயதினரில் பெரும்பாலானவர்கள் ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். வண்டியையும், சாவியையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போதுதான் கையில் பணமில்லை என்பது நினைவிற்கு வந்தது. நடக்க வேண்டியதுதான். மெல்ல நடந்து கொண்டிருந்த போது ஒரு சைக்கிள் என்னருகே வந்து நின்றது. ‘என்ன சார், வெயிலில் நடந்து போகிறீர்கள்?’ என்று கேட்டான் சைக்கிள் ஓட்டி வந்த பையன்.

அடையாளம் தெரியாமல் திகைத்தேன்.

‘சென்னை பர்னிச்சர் மார்ட்டில் வேலை பார்க்கிறேன்.

நீங்களும், அக்காவும் பாய் வாங்கினீர்களே?’

‘ஓ! நீ எங்கே இந்த பக்கம்?’

‘தலையணை டெலிவரி கொடுத்துவிட்டு கடைக்குப் போகிறேன்’.

‘பஸ் டிக்கட்டிற்கு பணமில்லாமல் வந்து விட்டேன். அதனால் நடக்கிறேன்’ என்று கூறி புன்னகைத்து விட்டு நடக்கத் தொடங்கினேன்.

‘சார், பின்னால் உட்காருங்கள்’ என்றான் கடை பையன்.

‘பரவாயில்லை தம்பி. நான் நடக்கிறேன்’ என்றேன்.

‘வெயிலில் நடந்தால் அக்கா வருத்தப்படுவார். ஏறுங்கள் சார்’ என்றார்.

அவன் சைக்கிளில் ஏறிக் கொண்டு சிவசங்கரனின் அலுவலகம் சென்றேன். பங்கு தரகர் என்பதால் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

‘காத்திருக்கவா சார்?’ என்றான் பையன்.

‘வேண்டாம் தம்பி, நன்றி’ என்று கூறி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.

‘என்னடா மாப்பிள்ளை! சொல்லி பல வாரங்களாக வரவில்லை. கல்யாணமாகி ஒரே நாளில் பொறுப்பு வந்து விட்டதா!’ என்றான் சிவசங்கரன்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. ஜமுனாதான் உன்னைப் பார்த்து வரச் சொன்னாள்’ என்றேன்.

‘அப்படிப் போடு அருவாளை! இனிமேல் அறுவடைதான்’ என்றான் சிவசங்கரன்.

‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன்.

‘சின்ன வேலைதான் பரமார்த்தா. இந்த சாப்ட்வேரில் சில சிறிய மாற்றங்கள் செய்ய வேண்டும்’ என்று கூறி அவனிடம் ஏற்கனவே இருந்த சாப்ட்வேரில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினான்.

‘சிவா, இது வாடிக்கையாளர்கள் கணக்குகளை வைத்திருக்கும் முக்கியமான சாப்ட்வேர். கொஞ்சம் அதிக செலவானாலும் அனுபவசாலிகளிடம் கொடுப்பதுதான் சரி என்று நினைக்கிறேன்’ என்றார் சிவசங்கரனின் உதவியாளர்.

‘நாம் வேலை தந்தால்தானே இவனுக்கு அனுபவம் வரும்? இவன் செய்வதை சரிபார்த்து விட்டுத்தானே பயன்படுத்தப்போகிறோம்?’ என்றான் சிவசங்கரன்.

‘இரண்டு நாட்களில் செய்து தருகிறேன்’ என்றேன்.

‘உன் போன்ற பெரிய வீட்டுப் பிள்ளைக்கு நான் பணம் தருவது வேடிக்கைதான். ஆனால் வேலைக்கென்று ஒரு மதிப்பிருக்கிறதே’ என்று கூறிவிட்டு இரண்டாயிரம் தந்தான். ‘இது முன்பணம். வேலை முடிந்ததும் மீதி மூவாயிரம் தருகிறேன்’ என்றான்.

சிவசங்கரன் அலுவலகம் அருகிலேயே எங்கள் குடும்பத்திற்கு நன்றாகத் தெரிந்த ஸ்கூட்டர் மெக்கானிக் கடை இருந்தது. ஸ்கூட்டர் ஒன்றை ஒரு நாள் வாடகைக்குக் கேட்டேன். ‘ஜமுனாவோடு வெளியே போக வேண்டும். வாடகை ஸ்கூட்டரில் போகலாம் என்று வீட்டில் சொன்னார்கள்’ என்றேன்.

‘அது யார் ஜமுனா?’ என்றார் கடைக்காரர்.

‘மன்னித்துக் கொள்ளுங்கள். அண்ணார் உங்களுக்கு அழைப்பு தந்திருப்பார் என்று நினைத்து விட்டேன்’ என்று கூறிவிட்டு கல்யாண விவரங்களைக் கூறினேன். ‘ஜமுனாவும், நானும் வீடுகளையும், நிலத்தையும் பார்க்கப் போகிறோம். கனப்பாக்கம் வரை போக வேண்டும். அதற்கு ஏற்றபடி ஸ்கூட்டர் வேண்டும்’ என்றேன்.

கடைக்காரர் சிரித்தார் ‘புதிதாக கல்யாணம் செய்தவர்கள் ஸ்கூட்டரில் போவதுதான் சரி’ என்றவர் கொஞ்சம் யோசித்து விட்டு ‘அடிக்கடி வெளியே போக வேண்டியிருக்குமே! எதையும் யோசிக்காமல் ஒரு வண்டி வாங்கி விடுங்கள். நான் நாலைந்து பழைய வண்டிகளைச் சரி செய்து புதுப்பித்து வைத்திருக்கிறேன்’ என்றார்.

‘இப்போதைக்கு கையில் பணமில்லை’ என்றேன்.

‘உங்களைப் போன்றவர்கள் பேங்கிலும், லாக்கரிலும்தான் பணம் வைத்திருப்பீர்கள்’ என்று சிரித்த மெக்கானிக் ‘இந்த நீல நிற வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரம் ஓட்டிப் பாருங்கள். திருப்தியாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்றால் வாடகை மட்டும் கொடுத்து விடுங்கள்’ என்றார்.

தெரிந்தவர் என்பதால் முன்பணம் எதுவும் கேட்கவில்லை.

நீலநிற ஸ்கூட்டரில் வீடு திரும்பினேன். விவரங்களைச் சொல்லி ஜமுனாவிடம் இரண்டாயிரத்தைத் தந்தேன். வாங்கிக் கொண்டவள் ‘நாளை மறுநாள் சிவசங்கரண்ணா மூவாயிரம் தரும்போது ரொக்கமாக வாங்க வேண்டாம். நல்ல பெரிய கம்பெனியில் பங்குகள் வாங்கித் தரச் சொல்லுங்கள்’ என்றாள்.

‘எனக்கு பங்கு வாங்கத் தெரியாதே’ என்றேன்.

‘உங்களையா வாங்கச் சொன்னேன்? உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். வாங்கித் தருவார்’ என்றாள் ஜமுனா.

‘அதுதான் சரி. வெளிநாட்டுகாரர்களிடம் எத்தனை அழகாக ஆங்கிலத்தில் பேசுவான் தெரியுமா! ஆனால் நாவல்கள் எதுவும் படிக்க மாட்டான். நான் ஏதாவது கதை சொன்னால் கூட பேச்சை மாற்றி விடுவான்’ என்றேன்.

புன்னகைத்தாள் ஜமுனா.

17. சொத்துகளை அறிதல்

பத்தேகால் மணிக்கு நானும், ஜமுனாவும் கிளம்பினோம்.

‘நம் டிரைவர் ரகுதான் மாப்பிள்ளை’ என்றேன்.

‘காதல் கல்யாணமா?’ என்றாள் ஜமுனா.

‘சரியான ஊகம்தான். தாத்தா கம்பெனிக்காக ஒரு கார் கொடுத்திருந்தார். அவர் சைக்கிளில்தான் போவார். கார் பழனியப்பன் சாரை அழைத்து வர அவர் வீட்டிற்கு அடிக்கடி போகும். ரகுதான் டிரைவர். பழனியப்பன் சார் தன் பெண்னை அந்தக் காரில் காலேஜிற்கு அனுப்பி வைப்பார்’ என்றேன்.

‘கார் எங்கே?’ என்றாள் ஜமுனா.

‘நான் காதலைப் பற்றிப் பேசுகிறேன். நீ காரைப் பற்றி கேட்கிறாய்! அண்ணார்கள் பழைய கார் செலவு வைக்கிறது என்று விற்று விட்டார்கள். இப்போது ரகு வீட்டுக் கார்களை ஓட்டுகிறார்’ என்றேன்.

பத்தரைக்கு மண்டபத்திற்குப் போய்விட்டோம்.

மண்டப நுழைவாசலில் வரவேற்பு மேஜைக்கு அருகே நின்றிருந்த பழனியப்பன் சார் ‘வாப்பா பரமா, வாம்மா’ என்று கூறிவிட்டு வேறு எவருடனோ பேச ஆரம்பித்தார். எத்தனை விருந்தாளிகள். தனியாளாக எத்தனை பேரைக் கவனிக்க முடியும்!

நாங்கள் மேஜைக்குப் பின்னால் நின்றிருந்த பட்டுச் சேலை பெண்களிடம் சந்தனம், குங்குமம், ரோஜா, கல்கண்டு வாங்கிக் கொண்டு மண்டபத்திற்குள் நுழைந்தோம். கடைசி வரிசையை நோக்கி நகர்ந்தேன். முன் வரிசையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்த ஜமுனா திரும்பிப் பார்த்தாள்.

‘நான் அழைப்பு வரும் எல்லா விசேஷங்களுக்கும் போவேன். எவரும் என்னைக் கவனிக்காத இடத்தில் உட்கார்ந்திருந்துவிட்டு திரும்பி விடுவேன்’ என்றேன். காலியாக இருந்த கடைசி வரிசையின் முதலிரண்டு நாற்காலிகளைப் பார்த்தேன்.

நுழைவாயிலில் பரபரப்பு எழுந்தது. பழனியப்பன் சார் ‘வாருங்கள், வாருங்கள், உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம்’ என்று அண்ணார்களையும், அண்ணிகளையும் வரவேற்பது தெரிந்தது. பின் அவர்களைத் தன்னோடு முன் வரிசைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தார். தன் மனைவியையும், போட்டோ எடுப்பவரையும், வீடியோ எடுப்பவரையும் பாய்ந்து சென்று அழைத்து வந்தார். ‘என்னம்மா, புதுப் பெண்ணே! எப்படி இருக்கிறது வாழ்க்கை?’ என்று கோணலாக சிரித்துக் கொண்டு எங்களை நோக்கி வந்தார் பூபதி. எங்கள் கம்பெனி பியூன்.

ஜமுனா லேசாக தலையசைத்தாள். புன்னகைக்கவோ, மறுமொழி கூறவோ இல்லை.

‘என்னப்பா மாப்பிள்ளை! பெண்டாட்டியை வெளியே அழைத்து வருமளவிற்குப் பெரிய மனுஷனாகி விட்டாய்’ என்றார் பூபதி.

நான் புன்னகைத்தேன்.

அவர் நகரத் தொடங்கியபோது ‘பூபதி, ஒரு துணி எடுத்து வந்து இந்த நாற்காலியைத் துடை. சார் உட்கார வேண்டும்’ என்று மெல்லிய குரலில் கூறினாள் ஜமுனா. கத்தியின் கூர்மையான நுனி போன்ற மெல்லிய குரல்.

ஒரு கணம் கோபத்தோடு ஜமுனாவின் முகத்தைப் பார்த்த பூபதி திகைத்தார். பின் அங்குமிங்கும் பார்த்துவிட்டு ஒரு மூலையிலிருந்த துணியை எடுத்து வந்தார்.

‘இதை விட அழுக்கான துணி கிடைக்கவில்லையா உனக்கு? எத்தனை காலம் பியூனாக இருக்கிறாய்? போய் நல்ல துணியாக எடுத்து வா’ என்றாள் ஜமுனா.

‘ஒரு நிமிஷம் மேடம்’ என்று கூறிவிட்டு குழப்பத்துடன் சுற்றிலும் பார்த்த பூபதி பழனியப்பன் சாரிடம் வேகமாகச் சென்றார். ‘இந்தத் துண்டை கொடுங்கள்’ என்று அவரது தோளில் இருந்த அங்கவஸ்த்திரத்தைத் தானாகவே எடுத்து வந்து நாற்காலிகளைத் துடைத்து விட்டார். ‘உட்காருங்கள் மேடம்’ என்றார்.

அவன் அப்பால் நகர்ந்தபின் ‘பூபதி கம்பெனியில் எவருக்குமே அடங்காதவர்’ என்றேன்.

‘முதலாளி யாரென்பதை எல்லோருமே மறந்து விட்டீர்கள்’ என்றாள் ஜமுனா.

தாலி கட்டியதும் ஜமுனா எழுந்தாள். ‘வாருங்கள்’ என்று என்னை மேடைக்கு அழைத்துச் சென்றாள். ‘மேடைக்கு எதற்கு? பின்புறமாக போய் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம்’ என்றேன். அவளோ மேடையை நோக்கி நடந்து கொண்டே இருந்ததால் நானும் பின் தொடர்ந்தேன்.

மேடையில் ஏறும்போது எங்களைக் கவனித்த அண்ணிகள் எங்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். அண்ணார்கள் வேறெங்கோ கவனமாக இருந்தனர்.

மணமக்களை வாழ்த்தியபின் ‘கிளம்புகிறோம்’ என்றாள்.

‘மேடமும், சாரும் இன்னும் சாப்பிடவில்லை’ என்று பதறினார் பூபதி.

‘சாப்பிட்டுப் போங்கள்’ என்று எங்கள் பின்னால் ஓடி வந்தார் பழனியப்பன் சார்.

‘முக்கியமான இடங்களுக்குப் போக வேண்டியிருக்கிறது’ என்று கூறி விட்டு திரும்பிப் பார்க்காமல் நகர்ந்தாள் ஜமுனா.

மண்டபத்தை விட்டு வெளியே வந்தபின் ‘பரிசு ஒன்றும் தரவில்லையே’ என்றேன்.

‘நாம் வந்ததே பரிசுதான்’ என்றாள் ஜமுனா.

மண்டபத்திலிருந்து கிளம்பி அண்ணாமலைபுரம் சென்றோம். அண்ணாமலைபுரம் பங்களா மற்றவற்றைவிட புதியது. பெரியது. ஜமுனாவிற்கு அதை முதலில் காட்டலாம் என்று நினைத்தேன்.

போக் ரோடை தாண்டும்போது ‘முதலில் உங்கள் கம்ப்யூட்டரை எடுத்துக் கொள்ளலாம்’ என்றாள்.

‘அதைத் தூக்கிக் கொண்டு அலைவானேன்? இன்னொரு நாள் எடுத்துக் கொள்ளலாம்’ என்றேன்.

‘நான் தூக்கி வருகிறேன்’ என்றாள்.

என்னிடம் ஒரு சாவி இருந்ததால், போக் ரோடு வீட்டிற்குள் சென்று கம்ப்யூட்டரை எடுத்து வந்தேன். ‘நாம் உள்ளே வந்து கம்ப்யூட்டர் எடுத்துச் சென்றது பற்றி ஒரு கடிதம் எழுதி வையுங்கள் அல்லது போன் செய்து சொல்லுங்கள்’ என்றாள்.

நான் ஜவுளி அண்ணிக்குப் போன் செய்து சொன்னேன்.

‘எதற்கு சொல்கிறாய்? இது என்னடா புது பழக்கம்?’ என்று அண்ணி கோபித்துக் கொண்டார்.

‘ஜமுனா சொல்லித் தந்திருப்பாள்’ என்று பின்னால் காபி அண்ணி சொல்வது கேட்டது.

அண்ணாமலைபுர பங்களாவைக் காட்டி ‘அழகாக இருக்கிறதா?’ என்று கேட்டேன்.

ஜமுனாவோ வேறெங்கோ பார்த்துக் கொண்டு ‘பங்களாவிற்கு மேலே வானத்தில் பறக்கும் வெள்ளைப் பறவையைப் பாருங்கள். என்ன அழகு! சிறகுகள் இருந்தால் நானும் பறந்திருப்பேன். எல்லையில்லாத வானத்தில் உயர உயர பறந்து கொண்டேயிருப்பேன். முடிந்தால் எல்லா மனிதர்களையும் இதுபோல பறக்க வைப்பேன்’ என்றாள்.

‘பங்களா பிடிக்கவில்லையா?’ என்று கேட்டேன்.

‘இதிலென்ன இருக்கிறது? இது இன்னொரு வீடு. அவ்வளவுதானே?’ என்றாள் ஜமுனா.

‘நாம் இந்த வீட்டில் இருந்தால் நமக்குப் பெருமை என்று உனக்கு தோன்றவில்லையா?’ என்று கேட்டேன்.

‘மாற்றிச் சொல்கிறீர்களே. நாம் இருந்தால் இந்த வீட்டிற்குப் பெருமை வரும்’ என்றாள் ஜமுனா.

வீட்டிற்கு நீதிமன்றம் முத்திரை வைத்திருந்ததால் உள்ளே போக முடியவில்லை. ஜமுனா வீடு பற்றி எந்தவித உற்சாகத்தையும் காட்டாததால், இரண்டு நிமிடங்கள் அங்கே நின்றிருந்துவிட்டு கனப்பாக்கம் சென்றோம்.

மயானத்திற்கு நடுவில் நிலம் இருந்தது. அதனால் மயானத்திற்குள் நுழைந்துதான் போயாக வேண்டும். ஜமுனா பயப்படுவாள் என்று பயந்தேன். அவளோ உற்சாகமாக இருந்தாள். நிலத்தின் மேல் வழக்கு இல்லை என்பதால் உள்ளே நுழைய முடிந்தது. ‘சூளைமேடு வீடும், இந்த நிலமும்தான் நம் மேல் பிரியமாக இருக்கின்றன’ என்றாள் ஜமுனா. அங்கு ஒரு மணி நேரம் இருந்தோம்.

‘புதைப்பது, சமாதி கட்டுவது என்று எதையுமே ஒழுங்காக அழகாகச் செய்யவில்லை. சரியாகச் செய்தால் இந்த மயானத்தில் உலகத்தையே புதைக்கலாம்’ என்றாள் ஜமுனா.

‘எல்லாவற்றையும் பெரியதாக நினைக்கலாம்தான். அதற்காக இப்படியா சொல்வாய்?’ என்றேன்.

சிரித்தாள் ஜமுனா.

‘தாத்தா அரை கிரவுண்டு, ஒரு கிரவுண்டு என்று சின்ன இடங்கள் சிலவற்றை ஆங்காங்கே வாங்கி போட்டிருக்கிறார். அண்ணார்களுக்குத்தான் விவரங்கள் தெரியும்’ என்றேன்.

வரும் வழியில் நுங்கம்பாக்கம் பங்களாவையும் வெளியே இருந்து இரண்டு நிமிடங்கள் பார்த்துவிட்டு வீடு திரும்பினோம்.

18. மீசை தாத்தாவின் வரவு

நாங்கள் சூளைமேடு வீட்டிற்கு வந்த மூன்றாவது நாள் தன் ஊன்றுகோலை வேகமாக சுழற்றியபடி மீசை தாத்தா வந்தார். அதை அவர் கையிலிருந்து கிட்டத்தட்ட பறித்து மேஜை மீது வைத்தாள் ஜமுனா.

‘என்னம்மா ஜமுனா, உன் அத்தான்கள் என்ன சொல்லி உங்களை வெளியே அனுப்பினார்கள்?’ என்று கேட்டார் தாத்தா. அண்ணார்களிடம் கூறிய கதையை அப்படியே தாத்தாவிடம் கூறினாள்.

அவர் சிரித்துவிட்டு ‘நீ சொன்னதிலிருந்து சொல்லாமல் விட்டதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்’ என்றார்.

ஜமுனாவும் சிரித்துவிட்டு எதையும் மறைக்காமல் நடந்தவற்றைக் கூறினாள்.

பின் சிறிது யோசித்த தாத்தா பெருமூச்சு விட்டார். ‘கூட்டுக் குடும்பம் பெரிதாகி வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என் போன்ற வயதானவர்களின் ஆசை’ என்றார்.

‘காலத்தை நகராமல் நிற்க வைக்க முடிந்தால் கூட்டுக் குடும்பங்கள் சிதறுவதைத் தடுக்க முடியும்’ என்றாள் ஜமுனா.

‘எதற்கு எதையும் தடுக்க வேண்டும்? சிதைவதையும், சிதறுவதையும் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டு நாம் மாறுவதுதான் நல்லது’ என்றார் தாத்தா.

‘நாங்கள் கல்யாணத்தன்றே அங்கிருந்து கிளம்பி இங்கு வந்ததில் உங்களுக்கு வருத்தமில்லையே?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘உண்மையைச் சொல்லப் போனால் இதுதான் எனக்கு பிடித்திருக்கிறது’ என்றார் தாத்தா. பின் என்னைப் பார்த்து ‘சாப்ட்வேர் கேட்ட நண்பரைப் போய்ப் பார்த்தாயா’ என்று கேட்டார்.

‘நேற்று போய் பார்த்தேன். வேலையை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்’ என்றேன்.

‘ஜமுனா அனுப்பி வைத்தாளாக்கும்?’ என்றார் தாத்தா.

நான் புன்னகைத்தேன்.

தாத்தா ஏதோ கேட்க நினைத்து தயங்கினார். ‘முன்பணமாக இரண்டாயிரம் கிடைத்தது. என்னிடம் கொடுத்து விட்டார்’ என்றாள் ஜமுனா.

‘கொடுத்தானா? அல்லது பிடுங்கிக் கொண்டாயா?’ என்று கேட்டு சிரித்தார் தாத்தா.

தன் கையிலிருந்த கண்ணாடி வளையல்களை தாத்தாவிடம் காட்டினாள் ஜமுனா.

‘உங்கள் பேரர் தந்த பரிசு’ என்றாள் ஜமுனா.

‘பரிசு தருவான் என்று தெரியும். கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் என்று ஏதாவது புத்தகம் தருவான் என்று நினைத்தேன்’ என்றார் தாத்தா.

‘புத்தகம் தந்தால் நான் படிப்பேனோ, மாட்டேனோ என்ற சந்தேகம் வந்து விட்டது போலிருக்கிறது. அவரே தினமும் சொல்லித் தரப் போகிறாராம்’ என்றாள் ஜமுனா.

உரக்க சிரித்தார் தாத்தா.

ஜமுனாவும், தாத்தாவும் பேசிக் கொண்ட விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தாத்தா எவரிடமும் அளவாகவும், இறுக்கமாகவும்தான் பேசுவார். என்னோடு எப்போதாவது சில நிமிடங்கள் இப்படி பேசியதுண்டு.

‘இவனைத் தவிர மற்றவர்களுக்கு நான் பெயர் வைக்கவில்லை. சத்தியத்தில் உயர்ந்தது பரமார்த்தம். அந்த அர்த்தத்தில் இவனுக்குப் பரமார்த்தன் என்று நான்தான் பெயர் வைத்தேன். இவனோ பரமார்த்த குரு போல ஒன்றும் தெரியாதவனாக இருக்கிறானே என்று எனக்குப் பல வருடங்களாக கவலை இருந்து வந்தது. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். இனி எனக்குப் பேத்தி, பேரர்களைப் பற்றிய கவலை இல்லை’ என்று கூறி விட்டு துயரப் பெருமூச்சு விட்டார் தாத்தா.

‘கவலைப்படவேண்டாம் தாத்தா, எல்லா கவலைகளும் சீக்கிரம் சரியாகி விடும்’ என்று கூறிய ஜமுனா உள்ளே சென்று சித்தப்பா தந்த காகிதக் கட்டையும், வெற்றுப் பத்திரங்களையும் தந்தாள். சித்தப்பா வீட்டிற்குப் போய்வந்த விவரத்தைச் சொன்னாள்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த தாத்தா ‘இதை ஏன் இன்னமும் நீ வக்கீலிடம் தரவில்லை?’ என்று கேட்டார்.

‘உங்களிடம் சொல்லிவிட்டுச் செய்யலாம் என்று நினைத்தேன்’ என்றாள் ஜமுனா.

‘இனிமேல் என்னிடம் எதையும் கேட்கவோ, சொல்லவோ தேவை இல்லை. நம் குடும்பத்திற்கு எது நல்லதோ அதை எவரிடமும் கேட்காமலே நீ செய்துவிடு’ என்றார் தாத்தா. பின் ‘நீயே வக்கீலைப் போய்ப் பார்த்து வழக்கை முடித்துவிடு’ என்றார்.

‘ஆகட்டும் தாத்தா’ என்றாள் ஜமுனா.

‘குரங்குகளுக்கு இந்த விஷயம் தெரியுமா?’ என்று கேட்டார் தாத்தா.

‘இன்னமும் சொல்லவில்லை’ என்றாள் ஜமுனா.

‘நான் சொல்லிக் கொள்கிறேன். கூத்தாடுவார்கள்’ என்றார் தாத்தா.

‘பாட்டியைத்தான் இன்னமும் பார்க்க முடியவில்லை’ என்றாள் ஜமுனா.

‘எதை, எங்கே, எப்போது, எப்படிச் செய்யக் கூடாதோ, சொல்லக் கூடாதோ அதை, அங்கே, அப்போது, அப்படிச் செய்பவள், சொல்பவள் உன் பாட்டி. நான் அவளைப் பார்த்த முதல் நாளிலிருந்து அப்படித்தான் இருக்கிறாள்’ என்றார் தாத்தா.

‘ஒரேயடியாகத்தான் பாட்டியை கேலி செய்கிறீர்கள் தாத்தா’ என்றாள் ஜமுனா.

‘நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தலைமறைவானபோது, இவள் அண்ணன்தான் ஒரு குடிசையில் ரகசியமாக வைத்து காபியும், கஞ்சியும் கொடுத்து வந்தான். ஊர் முழுவதும் போலீஸ் என்னை தேடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் ஏதோ அவசர வேலை வந்து விட்டது என்று இவளிடம் கஞ்சி எடுத்துக் கொண்டு ரகசியமாக போகச் சொல்லியிருக்கிறான். இவளோ திருவிழாவிற்குப் போவது போல நன்றாக அலங்கரித்துக் கொண்டு, கூடையில் பெரிய டிபன் கேரியரில் விருந்து சாப்பாடு எடுத்து வந்தாள். பகல் நேரத்தில் இவள் சாதாரணமாக நடந்து போனாலே எல்லோருக்கும் சந்தேகம் வரும். அலங்காரம் பண்ணி, முகத்தை முக்காடு போட்டு மறைத்துக் கொண்டு, அங்கேயும் இங்கேயும் திருதிருவென்று விழித்துக் கொண்டு வந்திருக்கிறாள். அது கூடப் பரவாயில்லை. ரகசியமாக தோட்டத்திலும். வயலிலும் வருகிறவள் ஜல், ஜல்லென்று கொலுசு சத்தம் கேட்க நடந்து வருகிறாள். இவள் பின்னோடு போலீஸ்காரன் வந்து என்னைப் பிடித்து விட்டான். என்னை அடிக்கும்போது போலீஸ்காரன் ‘இந்த மாதிரி ஒரு பெண்ணை உதவிக்கு வைத்துக் கொண்டு நீயெல்லாம் ஏன்டா தலைமறைவாக நினைக்கிறாய்?’ என்று சொல்லிச் சொல்லி அடித்தானம்மா’ என்று கூற இருவரும் பல நிமிடங்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

‘பாட்டியை போலீஸ் ஒன்றும் செய்யவில்லையா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘இல்லை. இவளைப் பிடித்து வைத்தால் என்னவெல்லாம் பட வேண்டுமோ என்று போலீஸ்காரன் பயந்திருப்பான்’ என்று சிரித்த தாத்தா ‘அப்படியில்லை. இவள் அண்ணன் ஒரு கட்டுப் பணத்தை கொடுத்தான். அண்ணனையும். தங்கையையும் விட்டு விட்டார்கள். இவள் அண்ணன் எனக்காகவும் பணம் கொடுப்பதாகச் சொன்னான். ‘லஞ்சம் கொடுத்து விடுதலை வாங்க மாட்டேன்’ என்று கோஷம் போட்டேன். அதற்குக் கூடுதலாக நான்கடி விழுந்தது. நான் விடுதலை கேட்கவில்லை.

சுதந்திரப் போராட்ட தியாகி என்று பெரிய தண்டனை தராமல் அவர்களாகவே விட்டு விட்டார்கள்’ என்றார் மீசை தாத்தா.

மீண்டும் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

‘பாட்டி வந்தபிறகுதான் நீங்கள் பெரிய தொழிற்சாலை ஆரம்பித்தீர்கள். அவர் உங்களை விட்டுப் போனபின் திரும்பவும் பழைய நிலைக்கு வர முடியவில்லையே?’ என்றாள் ஜமுனா.

சிறிது நேரம் பேசாமல் இருந்த தாத்தா பின் ‘கவர்னசத்தையை என்ன செய்தாய்? உன் பெயரைச் சொன்னாலே மிரளுகிறாள்’ என்றார் தாத்தா.

‘அவருடைய முகம் பார்க்கும் கண்ணாடியாக சில நிமிடங்கள் இருந்தேன். அவரால் தன் முகத்தைப் பார்க்க முடியவில்லை’ என்ற ஜமுனா ‘வீடு திரும்பி விட்டாரா?’ என்று கேட்டாள்

தாத்தா சிரித்தார். ‘திரும்பாமல் என்ன? அவளுக்கு நம்மை விட்டால் வேறு எவருமில்லை’ என்றார்.

புன்னகைத்தாள் ஜமுனா.

‘பரமார்த்தன் அதிர்ஷ்டக்காரன்’ என்றார் தாத்தா.

அதன்பின் அடிக்கடி அதையே எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

(தொடரும்)

***********



book | by Dr. Radut