Skip to Content

10. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

5 குழந்தைகளுக்குத் தாயானவள், 6-ஆம் குழந்தைப் பிரசவத்திற்குத் தாய் வீட்டிற்கு வந்திருந்தபொழுது, கணவனுக்குப் பிரமோஷன் வந்தது. அத்துடன் அவனுடைய பெற்றோர்களுக்கு, அவனுக்கு இரண்டாம் திருமணம் செய்தால், புதிய உத்தியோகத்தால், அதிக சீர்வரிசைகள் கிடைக்கும் என்ற எண்ணமும் உற்பத்தி ஆயிற்று. கணவனும் சம்மதப்பட்டு, பெண் பார்க்கப் புறப்பட்டுவிட்டார். இந்நிலை மனைவிக்குப் புதியதில்லை. திருமண நிச்சயதார்த்தத்தில் இருந்து குதர்க்கமான செயல்களுக்குப் பலியானவளானதால், கணவன் போக்கு நிரந்தரமாகத் திகிலையும், ஆபத்தையும் உற்பத்தி செய்துவிட்டதை உணர்ந்தாள். இந்நிலையில் அன்னையை வழிபட்டால், அன்னை இருப்பதை அதிகமாக்கிக் கொடுப்பார்கள். அவர்களை வழிபட ஆரம்பித்த பின்னர் கணவனால் தொந்தரவு கொடுக்க முடியாது என்ற கருத்தை ஏற்றுக்கொண்டால், இருக்கும் வசதிகளை அதிகமாக்கும் அன்னை, குறைக்க முடியாதன்றோ? என்ற கருத்து பெண்மணியின் மனதைத் தொட்டது; நம்பிக்கை பிறந்தது; திகிலும், கவலையும் ஒழிந்தன. கணவர் திரும்பி வந்தார். கொஞ்ச நாள் கழித்துத் தாமும் அன்னை பக்தரானார். அதிலிருந்து 25 வருஷ காலம் அவர் உயிரோடிருந்தவரை, மனைவிக்கு அது போன்ற தொந்தரவைக் கொடுக்கவில்லை; வேறெந்தத் தொந்தரவையும் கொடுக்கவில்லை. இந்த மாற்றத்திற்கு வித்து அப்பெண்மணிக்கு ஏற்பட்ட நம்பிக்கை; அந்த நம்பிக்கையிலிருந்த உண்மை. நம்பிக்கை கவலையை அழிக்கும்; நிம்மதியைக் கொடுக்கும். “எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அதனால் நிம்மதி வந்துவிட்டது” என்று அவளால் சொல்ல முடிந்தது.

1929-இல் உலகப் பொருளாதார நெருக்கடி நியூயார்க்கிலும், லண்டனிலும் ஆரம்பித்து, உலகம் பூராவும் பரவி, 1939-இல் உலக யுத்தம் வரும்வரை வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சம், பட்டினியை அமெரிக்காவிலிருந்து எல்லா நாடுகளிலும் ஏற்படுத்தியது. அப்பொழுது பாங்கில் டெபாசிட் போட்டவர்கள், பாங்கை நம்பாமல் பணத்தை எடுக்க ஆரம்பித்தனர். ஓரிரு பேங்க் திவாலானவுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணத்தை பேங்கிலிருந்து வாபஸ் செய்தார்கள். தினமும் 10, 20 நூறு பாங்குகள் திவாலாகிக்கொண்டிருந்தன. அமெரிக்க ஜனாதிபதி ஹூவர் மக்களை, “அப்படிச் செய்தால் நாடு திவாலாகிவிடும்’’ என்று கேட்டுக்கொண்டார். மக்கள் அதைப் புறக்கணித்தனர். 1929-லிருந்து 1932 வரை இந்த நிலை நீடித்தது. ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிலைமை மேலும் மோசமான நேரம். தொடர்ந்து மக்கள் பணத்தை வாபஸ் செய்தால் நாடு திவாலாகும். பாங்கில் உள்ள பணத்தை எடுக்காவிட்டால் பாங்க் திவாலானபின் எல்லாப் பணமும் போய்விடும். அந்த நிலையில் பணம் போட்டவர்களை எப்படி ‘எடுக்காதே’ என்று சொல்ல முடியும்? ரூஸ்வெல்ட் தினமும் ரேடியோவில் மக்களிடம் பேசினார். நாட்டின் நிலையை விளக்கினார். பாங்கைப் பற்றியும், மக்களுடைய பணத்தைப் பற்றியும் பேசுமுன் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மக்கள் அறிந்திராத உண்மையை எடுத்து விளக்கினார். “ஒரு நாட்டின் செல்வம் அந்த நாட்டு நிலங்களிலும், தொழிற்சாலைகளிலும் மனித உழைப்பால் ஏற்படுகிறது. இதுவரை அமெரிக்கா செல்வர் நாடாக விளங்கியது, நம் நாட்டு விவசாயிகளாலும், தொழிலாளிகளாலுமன்றோ? இன்று அந்த நிலங்கள், தொழிற்சாலைகள், அங்கு வேலை செய்தவர்கள் எல்லாம் இருக்கிறார்களா? அல்லது மறைந்து விட்டார்களா? எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவையிருக்கும் பொழுது பொருளாதாரத்திற்கு நெருக்கடி எப்படி வரும்? நிலமும், தொழிலும், மனிதனும் இருக்கும்வரை நெருக்கடிக்கிடமில்லை. அவற்றைத் தாண்டி எழும் பிரச்சினைகள் அரசுக்குக் கட்டுப்பட்டவை” என்ற விளக்கம் கொடுத்தார். கேட்ட இலட்சக்கணக்கானவர்களுக்கு மனதிலிருந்த குழப்பம் நீங்கியது; தெம்பு வந்தது. அதையுணர்ந்த ரூஸ்வெல்ட் “நீங்களெல்லாம் எடுத்த பணத்தை மீண்டும் பாங்கில் போட வேண்டும்” என்றார். மறுநாள் வரிசை வரிசையாகப் பாங்கில் மக்கள் திரண்டு எடுத்த பணத்தை மீண்டும் டெபாசிட் செய்தனர். அதன்பின் பாங்குகள் திவாலாகவில்லை. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. மக்கள் மனதிலுள்ள அறியாமையையும், குழப்பத்-தை யும் நீக்கியவுடன் அவர்களுக்குத் தெம்பு வந்தது. நாடு திவாலாகப்போவதைத் தடுக்க முடிந்தது.

ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பிக்கும் உற்சாகத்தில், அதை லட்சியமாய் நடத்த வேண்டுமென்ற ஆர்வத்தில், தலைவருக்குச் சிறப்பான இடமளிக்க விரும்பி, அதுபோன்ற ஸ்தாபனங்களில் இல்லாத ஒன்றைத் தலைவருக்குக் கொடுக்க விரும்பி, எல்லாவித உரிமைகளையும் அவருக்கே அளித்து, சட்டதிட்டங்களை இயற்றினார்கள். அதற்கமைந்த தலைவர் சாதாரண மனிதனுக்கு உள்ள நல்ல குணங்கள்கூட இல்லாதவர். ஸ்தாபனம் பெரும்புகழ் பெற்றது. எந்தப் பிரச்சினையும் இல்லை. பெருஞ்சொத்து ஏற்பட்டது. தலைவருக்கே உண்டான குதர்க்கபுத்தி செயல்பட ஆரம்பித்தது. ஸ்தாபனத்தை உடைத்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அனைவரும் ஸ்தாபனத்தின்மீது உயிரையே வைத்திருந்தனர். தலைவருடைய போக்கு விபரீதமாக இருந்தது. அனைவரும் அவரிடம் சென்று, “நாங்களெல்லாம் விலகிக் கொள்கிறோம். மற்றவர்களை நீங்களே நியமித்து, ஸ்தாபனத்தைத் தொடர்ந்து நடத்துங்கள்’’ என்றார்கள். தலைவர் மறுத்தார். “ஸ்தாபனத்தைக் கலைத்து வேடிக்கைப் பார்க்கப்போகிறேன். எனக்கு அந்த அதிகாரம் உண்டு. என்ன செய்ய முடியும்?’’ என்று சில்லறை மனிதனாகப் பேசினார். மற்ற அங்கத்தினர்கள் ஸ்தாபனத்தைக் கட்டி வளர்த்தவர்கள். சர்வபரித்தியாகம் செய்தவர்கள். தங்கள் முழுச் சொத்தையும், உழைப்பையும் கொடுத்தவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளத் தயார். ஸ்தாபனம் உடைவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வக்கீலைக் கலந்தார்கள். “உங்கள் ஸ்தாபனம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது. இதுபோன்ற அதிகாரத்தை எந்த ஸ்தாபனமும் தலைவருக்குக் கொடுத்ததில்லை. நீங்களே அப்படிச் செய்தபின் சட்டம் எப்படி உதவும்” என்றார். அனைவரும் வீடு திரும்பினர். மனம் உடைந்தனர்.

முக்கிய ஊழியர் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. “நான் முழுமனதுடன் செய்தேன். நல்லெண்ணத்துடன் இந்த ஸ்தாபனத்தை ஆரம்பித்தேன். அந்த நல்லெண்ணத்திற்கு அடையாளமாகவே முழு அதிகாரத்தையும் தலைவருக்குக் கொடுத்தேன். அதனால் தவறு வாராது. என் எண்ணம் சட்டத்தைவிட உயர்ந்தது. சட்டம் உதவாவிட்டால் வேறு வழியிருக்கும்” என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு, மறுபடியும் வக்கீலைப் பார்த்து, “தலைவர் அவர் போக்கில் சென்றால், சட்டப்படி மற்றவர்களுடைய பங்கை நிறைவேற்ற நாங்கள் தயார்” என்று கூற வக்கீலைப் பார்த்தார். விவாதத்தைக் கூட இருந்து கேட்டுக்கொண்டிருந்த மற்றொரு வக்கீல், “தலைவருக்கு ஏகபோக அதிகாரத்தை நீங்கள் தானே கொடுத்தீர்கள். கமிட்டி முழுவதும் இங்கே இருக்கிறீர்களே, கொடுத்த அதிகாரத்தை வாபஸ் செய்ய உரிமை, கமிட்டிக்கு உண்டு’’ என்று விளக்கினார். ஊழியர்களுக்குச் சட்டம் கைகொடுத்தது. தலைவர் தாமே விலகிப் போய்விட்டார். நம் மனத்தில் கோணலில்லாவிட்டால் மற்றெந்தக் குறையையும் விலக்க ஒரு மார்க்கம் கண்டுபிடிக்கலாம்; விலக்கலாம். அதன் வழியே சிக்கல் அவிழும். நம் மனத்தில் கோணல் இருந்தால், அதை நாமே விலக்கிக்கொள்ள வேண்டும். மற்றவர்களால் விலக்க முடியாதது அது. கோணல் இல்லையென்றால், குறையை நிவர்த்தித்து, பின்னர் செய்யும் பிரார்த்தனை முழுவதும் பலிக்கும். பிரச்சினை தீர்வதற்கு முன் கவலை நீங்கி, மனம் நிம்மதியடையும். அந்த நிம்மதியே பிரச்சினையைத் தீர்க்கவும் உதவும்.

(தொடரும்)

*********

ஜீவிய மணி

ஆசையழிந்த நிலையில் ஆண்டவன் தரிசனம் தருகிறான்.

**********



book | by Dr. Radut