Skip to Content

08. Consultancy

"குறுக்கே பேசாதே"

Customer is king. வாடிக்கைக்காரரை ராஜாவாகக் கருது என்பது மானேஜ்மெண்ட் முறை. இது சுமார் 70, 80 ஆண்டுகளாக வளர்ந்து இன்று உலகம் போற்றும் முறையாகவுள்ளது. இதைத் தெரியாத வியாபாரமில்லை. பொய் சொல்லக்கூடாது எனத் தெரியாதவரில்லை என்பதே சரியான உதாரணம். அத்துடன் அதை முழுவதும் கடைப்பிடிப்பது சிரமம் என்பதும் தெரியும். நாம் பல இடங்களில் உண்மையாக இருக்கிறோம். மற்ற இடங்களில் அப்படி இருப்பதில்லை. மெய் உள் வட்டம். பொய் வெளிவட்டம். மெய் என்ற வட்டத்தை சற்று விரிவுபடுத்தினால் மனமும், ஆன்மாவும், வாழ்வும் பெரிய அளவில் உயரும். மனிதன் மனத்திற்குரியவன். இந்த 4 நிலைகள் கடந்தபின் சத்திய ஜீவியம். அடுத்த இரண்டு நிலைகள் கடந்த பின் சத் புருஷன்.

சத் புருஷன் - சிருஷ்டியின் ஆரம்பம்.

சத் என்பது அக நிலை subjective state.

சத்தியம் என்பது சத்தினுடைய objective state புறநிலை.

மெய், உண்மை, சத்தியம் என்பது நாமுள்ள நிலையைக் கடந்த - 6 நிலைகள் கடந்து சிருஷ்டியின் ஆரம்பமான சத் புருஷனுடைய - நிலை. அதனால் இது சக்தி வாய்ந்தது. இந்தியாவின் சுதந்திரச் சின்னம் சத்தியமேவ ஜெயதே. நாம் பொய்யே சொல்லக் கூடாது, பொய்யை மனதில் அனுமதிக்கக் கூடாது என்று ஒரு விஷயத்தில் முடிவு செய்தால் அவ்விஷயத்தில் பிரம்மத்தை நெருங்குவோம். அபார வெற்றி கிடைப்பது ஆச்சரியமில்லை. அதிக வியாபாரம் செய்ய குறுக்கே பேசாதே எனச் சொல்லும் முறை பொய் சொல்லாதே என்பதில் ஓர் சிறு பகுதி, இதைக் கடைப்பிடித்தால் தொழில் சிறக்கும் என்பது உலக அனுபவம். இது முடியாது என்பதால் இம்முறையைக் கற்பிப்பவர்கள் குறுக்கே பேச நினைத்தால், ‘மூச்சை அடக்கி 1,2,3... என எண்ணு' என்று பயிற்றுவிப்பார்கள். அதைச் செய்யலாம், உயிர் போய் உயிர் வரும். அதைப் பின்பற்ற அன்னை முறையுண்டு.

குறுக்கே பேசக்கூடாது என முடிவு செய்து முடிவைச் சமர்ப்பணம் செய்து, பிறகு பேச்செழும்பொழுது அன்னையை நினைத்தால் இனிமையாக முடிவு நிறைவேறும்.

ஒரு சேல்ஸ்மேன் இதை அன்பரிடம் பயின்றார். நடைமுறை கடுமையாக இல்லை, அதிக வியாபாரமாகிறது எனக் கண்டார். இந்த சேல்ஸ்மேன் போன்றவர்கட்குச் சம்பளம் அவர்கள் விற்பதைப் பொருத்தது.

ஏழாம் நாள் அவர் வழக்கமாக விற்பதைப்போல் இருமடங்கு விற்றார்.

இம்முறையின் பலனை மேலும் உயர்த்த இம்முறையின் அடிப்படைத் தத்துவத்தை மனதால் புரிந்து கொண்டு, புரிவதைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்த ஒருவருக்கு 18ஆம் நாள் ஓராண்டு விற்பனைப்போல்  1⅓ பாகம் ஒரே ஆர்டராக வந்தது.

....

ஸ்ரீ அரவிந்த சுடர் 

பிரிக்கும் கருவி மனம். பிரிவினையால் திறன் பெறுவது மனம். புறவெளியில் உள்ளவற்றின் ஒருமைப்பாட்டை உணர்ந்தால் மனத்தைக் கடக்க இயலும்.

சேரும் மனப்பான்மை பிரிக்கும் மனத்தைக் கடக்கும்.



book | by Dr. Radut