Skip to Content

01. யோக வாழ்க்கை விளக்கம் IV

644) இறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும், என் விருப்பம் வேண்டாம்", என்பது மேல் மனத்திலிருந்து ஆழத்திற்குப் போக உதவும் சக்தி வாய்ந்த மந்திரம். நமக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்றால், அதைத் தவிர்த்து, இதை மேற்கொண்டால், இம்மந்திரம் சக்தி வாய்ந்ததாக அமையும்.

திருவுள்ளம் திருப்தியானால், பிரச்சினை தீரும்.

நமது விருப்பம் என்பதும், இறைவனின் திருவுள்ளம் என்பதும், அளவுகடந்து மாறியவை.வீடு கட்ட நினைப்பவன் மனதில் தனக்கு ஒரு வீடு கட்டிக் கொள்ளும் விருப்பம் மட்டுமே இருக்கும். இறைவன் திருவுள்ளம் என்பதில் விருப்பம் இல்லை, தான் என்பதில்லை. அகந்தை இல்லை.அளவு என்பதில்லை. நாம் கேட்கும் மனநிலையைப் பொறுத்து,  இறைவன் அவ்விருப்பத்தை நம் சௌகரியத்தின் மூலம் நிறைவேற்றினால் நமக்கு வீடு கிடைக்கிறது. நாமுள்ள கோவாப்பரேட்டிவ் சொஸைட்டி மூலம் நிறைவேற்றினால், அதன் உறுப்பினர் அனைவருக்கும் வீடுண்டு. நம் மனம், நம்மை விலக்கி, இருளிலிருந்து அகன்று ஜோதியிலிருந்து கேட்டால், வீடு கிடைக்கும்.அனைவருக்கும் மனதில் இருளற்று ஜோதி நிரம்பும். ஜோதியான நானோ, விரும்பும் நானோ வேண்டியதில்லை, என் விருப்பம் வேண்டியதில்லை, இறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்றால், இறைவன் அந்தவுள்ளம் மூலம் செயல்படும்பொழுது, நம் மனதிலுள்ள அதிகபட்ச இலட்சியத்தை இறைவனால் பூர்த்தி செய்ய முடியும். இந்த நாட்டில் எவரும் வீடில்லாமலிருக்கக் கூடாது என நான் ஆழ்ந்து விருப்பப்பட்டிருந்தால், என் விருப்பம் வேண்டாம் என்ற பொழுது எனது மேலெழுந்த விருப்பம் - வீடு கட்ட வேண்டும் - விலகுகிறது. இறைவன் திருவுள்ளம் நேரடியாகச் செயல்படாமல், என் மனதில் ஆழத்திலுள்ள விருப்பம் -நாட்டில் அனைவரும் வீடு பெற வேண்டும் - இறைவன் திருவுள்ளமாகப் பூர்த்தியாகிறது. அந்த ஆழ்ந்த விருப்பமும் இல்லாமலிருக்க, விருப்பமே இல்லாமலிருக்க வேண்டும். அது மனிதனுக்கு மட்டுமன்று, தவசிக்கும் சிரமம். என் விருப்பம் வேண்டும் என்றால் என் சிறிய விருப்பம் வேண்டும் என்று முடிகிறது.

நாம் மோட்சத்தை நாடலாம், செல்வத்தை நாடலாம், உலகம் உய்ய வேண்டும் எனலாம். இவை மேல் மனத்தின் எண்ணமாக இருப்பதால், நாம் நாடுவதால் நடக்கப் போவதில்லை. இவற்றிற்கு சக்தியில்லை. தடையாகச் செயல்படுவதே இவற்றின் கடமை.  இவற்றை விலக்க என் விருப்பம் வேண்டாம் என்கிறோம். இறைவனால் உள்மனத்தில் (inner mind) நாம் தயார் செய்யப்பட்டிருக்கிறோம். நாம் தயாராகியிருந்தாலும், இறைவன் நம்மைத் தயார் செய்திருப்பதால் - ஊரில் அனைவருக்கும் வீடு கட்ட, உலகில் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்க - அதுவே இறைவன் திருவுள்ளம். நம் உள்மனத்தில் (inner mind) ஆழ்மனத்தில் (subconscious) உள்ள நம் எண்ணம், இறைவனின் திருவுள்ளமாகிறது. நம்மைப் பொறுத்தவரை நம் ஆழ்ந்த பகுதிகளே நமக்கு இறைவனாகும். மேற்சொன்னவை சாதாரண மனிதனுக்குரியவை.யோகியின் நிலை என்ன? யோகியும் ஆரம்பகாலத்தில் சாதாரணமாக ஆரம்பிக்க வேண்டும். பெரும்பாலும் அந்நிலையோடு யோகம் முடிந்துவிடும். எளிய நிலைகளை யோகி கடந்தால், என் விருப்பம், திருவுள்ளம் என்பவை எப்படியிருக்கும்? எளிய நிலைகள் occupation, preoccupation மனத்தை நிரப்பிக் கொண்டுள்ளவை, பேயாகப் பிடித்துக் கொண்டிருப்பவையாகும். என் மனதில் எதுவும் இல்லை என்றால், என் மனதிலுள்ளதை நான் அறியேன் என்று பொருள்.அறையில் காற்றேயில்லை எனில் காற்றில்லை என்று பொருளில்லை, காற்று வீசவில்லை என்று பொருள். காற்றில்லாமல் அறையிலிருக்க முடியாதது போல், மனத்தில் எண்ணமற்று மனமிருக்க முடியாது. எண்ணம் உயர்ந்திருக்கலாம், எண்ணமில்லாமலிருக்க நம்மால் முடியாது. எண்ணமற்ற மனம் முனிவருடைய மௌனம் நிறைந்த மனம். நம் போன்றவர்க்கு அது இல்லை. நம் மனம் எக்காலத்திலும் எண்ணங்களால் நிறைந்திருக்கும். உள்ளபடி என் விருப்பம் வேண்டாம் என்றால் மேல் மனத்தின் விருப்பம் விலகி, உள்மனத்திற்கு நம்மை இம்மந்திரம் கொண்டு செல்லும். உள்மனத்திற்கு போவது பெரிய நிலை. தவத்தை மேற்கொண்டவர்க்கு 1) ஆசை அழிதல் 2) மௌனம் பலிப்பது 3) அசைவு அழிவது 4) நிதானம் வருவது 5) பக்குவம் பெறுவது 6) புலன் அடங்குதல் 7) புலன் அவிழ்தல் 8) புலன் செயன்றி பார்க்க, கேட்க முடிவது 9) வார்த்தை பலிப்பது 10) உள்மனத்தை அடைவது போன்றவை பெரிய கட்டங்கள். முதற் கட்டங்களே ஆனாலும் பெரிய முதற் கட்டங்களாகும்.

Let Thy will be done, not my will  என்பதை உருக்கமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தால் அகந்தை கரையும் என்கிறார் அன்னை. அதை நிறைவேற்ற ஓர் உபாயமும் சொல்கிறார். (அன்னை முன்பு) இறைவன் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதாக ஒவ்வொரு முறை இதைச் சொல்லும்பொழுதும் கற்பனை செய்ய வேண்டும் என்கிறார். தம்மை வழிபடவேண்டும் என்று சொல்வது அன்னையின் பழக்கமன்று. அதனால் இறைவன் முன் என்கிறார். நமக்கு அன்னையே இறைவன் என்பதால் அன்னை முன் நமஸ்காரம் செய்வதாக நினைப்பது சரி. சூட்சுமமானவர்க்கு, இதை நினைக்கும்பொழுதே அக்கற்பனை மனதிலெழுந்து, உள்ளேயுள்ள வேகம் அடங்கி, அமைதியுறுவதைக் காணலாம். அக்காட்சி தானே எழுவதும் உண்டு. தானே எழும் காட்சி பக்குவத்திற்குரியது.

*****

645) ஒருவன் தன் தாழ்ந்த விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் முறை அவன் சாதிப்பதை நிர்ணயிக்கும். உடல் கடைசி நிலையிலுள்ளது. அதன் தேவையைத் திருமணத்தால் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். அதனால் திருமண வாழ்வின் தரம், ஒருவன் தன் வாழ்வில் சாதிப்பதைக் குறிக்கும்.

உன் நிலை உன் திருமணத்தின் நிலை.

உயர்ந்த இலட்சியங்கள் உச்சியிலும், தாழ்ந்த விருப்பங்கள் அடியிலும் உள்ள அளவுகோல் மனிதனையும் அவன் உணர்வுகளையும் நிர்ணயிக்கும் அளவுகோலாகும், இந்த அளவு கோல் 10 நிலைகளை ஏற்படுத்தலாம். மனித முயற்சியை, அவன் சாதனையை இவ்வளவுகோலால் நிர்ணயிக்கலாம். மனிதனுடைய உயர்வையும், தாழ்வைவயும் அவன் செயல்கள் மூலம் அறியலாம். ஒரு வீட்டில் முன் ஹாலே குப்பையாக இருந்தால், பிறகு அவர்கள் சுத்தத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. பாத்ரூம் சுத்தமாகவும், வாடையின்றியும் இருந்தால் அவர்கள் அதிக சுத்தமானவர்கள் என எளிதில் அறியமுடியும்.

பெற்றோர், பிள்ளைகள் ஆகியவரைப் புறக்கணிப்பவர் கடமையிலிருந்து முழுவதும் விலகியவர் எனவும், ஒரு வாரம் தமக்கு வேலை செய்தவருக்கு உடல் நலமில்லை என்றபொழுது வீட்டு நபர் போல் அவரைக் கவனித்தவர் உச்சகட்டப் பொறுப்புள்ளவர் என்றும் நாம் எளிதில் அறிகிறோம்.

மனமும், ஆன்மாவும் உயர்ந்தவை. உடல் நம் ஜீவனின் கடைசி பகுதி, அதனால் மிகவும் தாழ்ந்ததாகும். உடலுக்குப் பசி, தாகம், உறக்கம் தேவை. மனத்தின் அறிவுத் தாகத்தைப் புறக்கணித்தால், மனம் அதை நாடியபடியிருக்கும். உடலின் பசியைப் புறக்கணிக்க முடியாது. புறக்கணித்தால் மனிதனை வெறியனாக்கும். பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும். யுத்த காலத்தில் கப்பல்கள் அங்கங்கு கடலில், உணவின்றி, பெட்ரோலின்றி நின்றுவிட்டபொழுது அவர்கட்கு யுத்த சந்தர்ப்பத்தில் உதவி அனுப்ப முடியவில்லை. கப்பலிலிருந்த மாலுமிகள் பட்டினியால் இறந்தனர். இறப்பதற்கு முன் அவர்கள் ஒருவரையொருவர் சாப்பிட்டிருந்தனர். பசியின் தீவிரம் மனிதனை விலங்குக்கும் கீழாக்கக்கூடியது.

பசி, தாகம், உறக்கம் தவிர்க்க முடியாதன. அதேபோல் உடலுணர்ச்சி. மனிதனை நிலையிழக்கச் செய்யும். காலத்தில் திருமணமானால் மனிதன் நிதானமாகச் செயல்படுகிறான். திருமணமாகாவிட்டால், பூர்த்தியாகாத தேவை அவனை நிலை குலையச் செய்யும். எனவே, அதை எப்படி அவன் பூர்த்தி செய்து கொள்கிறானோ அது அவன் யார் என்பதை அறிவிக்கும். அத்துடன் திருமணம் குடும்பத்தை அளிக்கிறது. குடும்பத்தில் பெற்றோர், தாம் பெற்ற குழந்தைகள் உள்ளனர். தன் வாழ்வு வளம் பெறும் கருவியான குடும்பத்தை, அதன் அடிப்படையான திருமணத்தை எப்படி நடத்துகிறான் என்பது முக்கியம். நுட்பமான இடம் என்பதால் ஆழ்ந்த சுபாவத்தைக் காட்டும்.

திருமணத்தில் முடிந்தவற்றையெல்லாம் கேட்கலாம், எந்தத் துரோகத்தையும் விரும்பிச் செய்யலாம் என்றவர் வாழ்வில் உள்ள அத்தனைச் சந்தர்ப்பங்களும் அவருக்கு உதவாமற் போயின. ஆரம்பக்கட்டத்திலேயே ஓய்வு பெறும்வரை இருக்க வேண்டியதாயிற்று.

ஒரு பெரிய ஆபீசருக்கு நூற்றுக்கணக்கான நண்பர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிக உயர்ந்த பதவியிலுள்ளார்கள். எவராலும் அவர் எந்தச் சிறு உதவியையும் பெற முடியவில்லை. தாம் திருமணமானவுடன் குடும்பத்தை மறந்து எட்ட வந்ததுபோல், நண்பர் குழாம் இவருக்கு உதவவில்லை.

நினைக்க முடியாத சம்பந்தம் தேடி வந்து, விரும்பி, போற்றி ஏற்றுக்கொண்டதை, கிராக்கி செய்து, மட்டமாக நடந்து கொண்டவருக்கு, வாழ்வில் அளவுகடந்த உயர்வு வந்தபொழுது அதன் பெருமையையோ, சிறப்பையோ அனுபவிக்க முடியாத நிலைக்குத் தாமே தம்மை ஒதுக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

தொடரும்... 

    ஜீவிய மணி

அகண்டமாக தன்னை உணரும் கண்டம் பிரம்மம்



book | by Dr. Radut