Skip to Content

08. பாதுகாப்பு

பாதுகாப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

சொற்பொழிவு ஆற்றியவர்: திருமதி உஷா ராமதாஸ்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: மார்ச் 15, 2015

இறைவன் எங்குமிருக்கிறார், இதயத்திலிருக்கிறார், ஆனால் நம்மால் அவரைக் காண முடியவில்லை. ஒருவர் பெற்ற ஆன்மிக அனுபவத்தால் அவரை ஏற்று, இறைவனை நாம் வழிபடுகிறோம். பாதுகாப்பு அபரிமிதமாகவுள்ளது. ஆனால் நாம் அதைக் கேட்டுப் பெற வேண்டியிருக்கிறது, கேட்கவும் நினைவு வருவதில்லை. நம் பொய் தவறு, பிறர் பொய்யை ஏற்பது பெரும் தவறு. பெற்றோர் பொய் உடலில் ஊறியது. அதிலிருந்து நாம் பிரிவது அவசியம் என்றே புரியாது. “அவர் என் தலைவர். அவர் எழுந்தால் நான் எழுவேன். அவர் உட்கார்ந்தால் நான் உட்காருவேன்” என்பவர் தலைவருடன் (vital) உணர்வில் ஒன்றானவர். நாம் நம் பெற்றோர் கொடுத்த உடலில் வாழ்வதால், நம்மைப் பெற்றோரிடமிருந்து பிரித்துப் பார்ப்பது கஷ்டம். அன்னையைக் கேட்டால் அதுவும் கிடைக்கும். அது நிரந்தரமான பாதுகாப்பு. நாம் வழிபாட்டைப் பின்பற்றுகிறோம். ஆன்மிகத்தை ஏற்கவில்லை. துன்பமான வாழ்விலிருந்து இன்பமான வாழ்வைப் பெறுவதை மோட்சம் என நினைக்கிறோம். வாழ்வு பிறவிச்சூழல். பிறவி பூர்வஜென்ம பாவம். வாழ்வு தொல்லையும், விரக்தியுமானது. அதைவிட்டு நாம் அடையும் சுவர்க்கத்தில் தொந்தரவுகள் இருக்கா. தேவைகள் தானே பூர்த்தியாகும். பணக்காரனுடைய வாழ்வு பெரும்பாலும் அது போன்றது. பகவானுடைய சொர்க்கம் என்பது வேறு. நாமறிந்த சொர்க்கம் (finite) சிறியது தருவது. பகவான் கூறும் சொர்க்கம் (infinite) பெரியது தருவது. வசதி அபரிமிதமான வீட்டில் எந்தப் பிரச்சனையுமின்றி வாழ்வது நாமறியும் சுவர்க்கம். பகவான் கூறுவது (infinite) அதன் வாய்ப்புகளை முடிவில்லாமல் தருவது. அவர் கூறுவதை நாம் சிந்திப்பதும் கஷ்டம். மனிதன் அறிந்த சொர்க்கத்தில் வாழ்வில் கேட்டுப் பெறுவதை கேட்காமல் பெறுகிறோம். உயர்ந்த சுவர்க்கத்தில் நம் திறமைகள் அனைத்தும் உயர்ந்த நிலையில் பரிமளிக்கும். கற்பனையுள்ளவன் கதை எழுதுவான். அது உலகம் படைத்ததைக் கடந்ததாக இருக்கும். காவியம், செய்யுள், கலை, சிற்பம், சிலை இவற்றுள் ஒருவனுடைய படைப்புத்திறன் வெளிப்பட்டபடியிருக்கும். எலிசபெத் பெம்பர்லியால் பரவசப்பட்டாள். விக்காமில் பரவசப்பட்டாள். விக்காம் தரும் பரவசம் பொய்யின் பரவசம். டார்சிக்கு தான் எலிசபெத்தைக் காதலிக்க அவள் அனுமதிக்க வேண்டும். தன் அன்பை ஏற்கும் மனைவியை அவன் அவளில் தேடினான். அவள் தன்னை காதலிக்க வேண்டும் எனவும் அவனுக்குத் தோன்றவில்லை. அவன் தேடியது இனிய திருமண வாழ்வு. காதல் எழ இருவரும் ஒருவரையொருவர் நாட வேண்டும். அதை அவன் எதிர்பார்க்கவில்லை. அப்படி ஒரு உறவுண்டு என டார்சிக்குத் தெரியாது. நாமறிந்த சொர்க்கம் டார்சி தேடிய எலிசபெத். பகவான் கூறும் சொர்க்கத்தை உலகில் எவரும் இதுவரை கருதவில்லை. அது Romance அமரகாதல், பெருங்காதல். அதன் முக்கிய அம்சம், ஒருவரையொருவர் அதிகாரம் செய்ய விரும்பும்வரை அதற்கு இடமில்லை. மேலும் ஒருவர் அன்பைத் தான் மட்டும் பெற வேண்டும் என்ற சுயநல மனப்பான்மையால் பெற முடியாதது. மனைவி தன் பெற்றோர் உறவினரிடம் பாசமாக இருப்பதை ஏற்க முடியாத மனிதர்கள் உண்டு. கணவன் தன் பெற்றோர், உடன் பிறந்தவரிடம் பாசமாக இருப்பது சுயநலமான பெண்ணுக்கு உறுத்தும். காதலை உணர சுயநலம் பரநலமாக வேண்டும். பாதுகாப்பு நிரந்தரமாக, மனம் பரநலத்தால் பரவசப்பட வேண்டும். பொய் சொல்பவருக்குக் காதலில்லை. ஏன் பிரியமே அவர் மனதில் எழாது. பாசம் என்பது உடலின் பிரியம். அது possessive. பெற்றதை ஆக்கிரமிக்கும்.

நாம் உடலில் மனமாக வாழ்கிறோம். அன்பனானவுடன் மனத்தைக் கடக்கும் திறன் நமக்கு வருகிறது. அதில் இரு கட்டங்கள் உள. இரண்டாம் கட்டம் சத்திய ஜீவன். முதற்கட்டத்தை பகவான் (gnostic being) சத்திய ஜீவனாகக்கூடிய ஆன்மிக ஜீவன் என்கிறார். மனத்தின் பிரிக்கும் இறுக்கமான தடைகளைக் கடந்த நிலையது. இதற்கு பிரபஞ்ச அம்சமும் அதைக் கடந்த பிரம்ம அம்சமும் உண்டு. ஹாலண்டில் திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தைகட்கு சட்டத்தின் எந்த உரிமையும் கிடையாது. அப்படிப்பட்டவர் அன்பரானபொழுது அவருக்கு யோகத்தைவிட தான் சட்டபூர்வமான பிரஜையாக வேண்டும் என்பதே முக்கியமாக இருந்தது. 25-ஆம் வயதில் அவருக்கு அன்னையின் சூழலை உணர்ச்சியால் அறிய முடியும். ஆனால் தனக்குச் சட்டபூர்வமான உரிமை வர முடியும் என நினைக்க முடியவில்லை. 35-ஆம் வயதில் நாட்டில் சட்டம் அவர் நம்ப முடியாதபடி மாறியது. அவருக்கு அது ஆன்மிகப் புனர்ஜென்மம். அன்னை விஷயத்தில் அன்பனுக்குப் பூரண பாதுகாப்புண்டு என்று பலரால் நம்ப முடியவில்லை. பூரண ஆரோக்கியம் பெறலாம் என்பதை நம்ப முடியாதவருண்டு. அளவுகடந்த பெரும் செல்வம் பெறலாம் என்றும் நினைக்க முடிவதில்லை. நாட்டில் எந்த விருதையும் பெறலாம். உலகில் எந்தப் பரிசையும் பெறலாம், எந்தப் பதவியும் அன்பனுக்குண்டு, எந்த அந்தஸ்தும் அவன் விரும்பினால் கிடைக்கும் என நம்ப முடிவதில்லை. எளிய வேலையிலிருந்தவர் திருமணம் செய்து கனடாவுக்குப் போகலாம் எனக் கனவும் கண்டிருக்கமாட்டார். மனை விலை ஏராளமாக உயர்ந்து பலன் வரும்பொழுது எல்லாருக்கும் உள்ளது எனக்கும் வருகிறது என நினைக்க மனம் முன் வருகிறது. ஓர் அன்பன் பெற்றதால் அனைவருக்கும் வந்தது என நினைக்க முடியவில்லை. இதய ஆப்பரேஷனுக்கு ஆஸ்பத்திரியில் நாள் குறித்த பின் ஒரு கிருஸ்த்துவர் ஏசுவுக்குப் பிரார்த்தனை செய்தார். இதயம் பூரண குணமாயிற்று. ஆப்பரேஷன் செய்யவில்லை. அவருடைய ஆப்த நண்பன் அன்பர். கிருஸ்த்துவர் பிரார்த்தனை செய்த அன்றிரவு அவர் உடல் முழுவதும் சில்லிட்டு விட்டது. உடல் சில்லிடுவது சைத்திய புருஷன் வெளிவருவது. மேல் மனத்தினின்று உள்மனம் வழி அடிமனம் செல்வது யோகம். மேல் மனம் ஜடமானது (physical) உள்மனம் சூட்சுமமானது. மனம் க்ஷணம் வழிவிட்டு சூட்சுமமாகி உள்மனம் சென்றால் பிரார்த்தனை பலித்து விடும். பிரார்த்தனை பலிப்பது ஒரு நேரம். அன்பனுக்கு எந்தப் பாதுகாப்பு தேவையென்றாலும் ஒரு நேரம் தவறாமல் பலிக்கும். சில விஷயங்களில் பாதுகாப்பு தேவையானால் ஆரஅமர சமர்ப்பணம் செய்யலாம். சில விஷயங்களில் அதே சமர்ப்பணத்தை உடனே செய்ய வேண்டிய அவசியம் உண்டு. ஆரஅமர செய்ய வேண்டிய சமர்ப்பணம் - கடன், வழக்கு, திருமணப் பிரச்சனை போன்றவை, உடல் நலம் - முடியாது எனத் தோன்றும். பொதுவாக நினைவு வாராது. நினைவே வாராதவர் ஏராளம். நினைவு வந்தவருக்குச் சமர்ப்பணம் செய்யத் தோன்றாது. தோன்றினால் அது பிரார்த்தனையாகும். சமர்ப்பணமாகாது. நாம் கேட்பது பிரார்த்தனை. அன்னை கொடுப்பதை ஏற்பது சமர்ப்பணம். சமர்ப்பண மனப்பான்மையுடன் செய்யும் பிரார்த்தனை உடனே பலிக்கும். பிரார்த்தனை சொல்லாக, நினைவாக இருக்கும் வரை பலிக்கத் தாமதமாகும். சமர்ப்பணத்தை ஒன்றரை ஆண்டு முறையோடு செய்தவர் அதன்பின் நிறுத்தி விட்டார். November 18, 1973-இல் அன்னை உடல் முன் அவர் வந்தபொழுது அவர் மேனி பொன்னிறமாயிற்று, தேனாக இனித்தது. உடல் இருந்த மூன்று நாளும் அந்த அனுபவம் தொடர்ந்தது. எந்தப் பிரார்த்தனையும் பலிக்கும். எந்தச் சமர்ப்பணமும் பலிக்கும். அன்பன் மறந்த பின்னும் சமர்ப்பணம் மறக்காது. சமர்ப்பணத்திற்குத் தடையானவை உள்ளவரை மற்ற விஷயங்கள் தனக்கும் பிறர்க்கும் பலிக்கும். எந்த விஷயத்தில் தடையிருக்கிறதோ அத்தடை விலகும்வரை அந்த விஷயம் பலிக்காது. அமெரிக்கர் thank you என ஒரு நாளில் 200 அல்லது 300 தரம் தவறாமல் வாய் ஓயாமல் சொல்கிறார்கள். பிறரை மரியாதையுடன் நடத்துகிறார்கள். பிரியமாக நடக்க வேண்டி, பிறர் பிரியத்தை உணரும் வகையில் பிரியமாகப் பழகுகிறார்கள். இது அந்த நாட்டு politeness, மேலெழுந்தவாரியான பழக்கம். அதில் sincerity துளியுமில்லை. அவர்கள் - ஒரு விஷயத்திலாவது - உண்மையாக நடந்தால் அவரே அன்பரானால், அன்னை அவர் வாழ்வில் அளவுகடந்து பலிப்பார். மனப்பாடம் செய்பவனுக்கும் ஓரளவு புரியும். புத்திசாலிப்பிள்ளைகள் பழக்கத்தால் மனப்பாடம் செய்பவர் புரிந்து கொள்ள முயல்வது நல்லது. அதன் வழி வேறு. மனப்பாடம் முதல் மார்க் வாங்கும். ஆனால் பாடம் புரிய உதவாது. புரிந்து பெறும் பலனை அடைய மனப்பாடம் தடையாகும். புரிவது பாதுகாப்பு. கேட்காமல் கிடைக்கும். புரியாமல் மனப்பாடம் செய்யும் நிலையில் அன்பர் வாழ்வுள்ளது. சாப்பிட்ட பிறகு ஜீரணம் செய்வது உடலின் பங்கு. சமர்ப்பணம் செய்த பின் பாதுகாப்பது அன்னையின் பங்கு. கோபக்காரர் ஒரு விஷயத்தில் தனக்கு கோபம் வரக்கூடாது என முன்கூட்டியே சமர்ப்பணம் செய்தால் அவர் செய்த சமர்ப்பணத்தின் பலன் பத்து அல்லது இருபது வருஷம் வரை தொடர்வதைக் காணலாம். பாதுகாப்பைக் கேட்டுப் பெறும் நிலையில் உள்ள அன்பன் கேட்டால் கிடைக்கும். தவறாது கிடைக்கும். நினைவு இனிமையாக நிலைத்தால் கேட்கும் அவசியமிராது.

(முற்றும்)

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்  

பூரண யோகம் கர்மத்தை ஏற்கவில்லை. கடவுள் உலகைப் படைத்தார் என்பதை கடவுளே உலகமானார் என்றார் பகவான். ஆத்மாவை மனிதனின் சிறந்த பகுதியாக பூரண யோகம் நினைக்கவில்லை. பிரம்மம் சிருஷ்டியுள் வந்தவுடன் பெற்ற நிலை ஆத்மா என்பது. அவ்வாத்மா சிருஷ்டியுள் தன்னை மறைத்து பரிணாமத்தால் வளர்ந்து முடிவான கட்டத்தில் சத்திய ஜீவியமாகிறது. மோட்சம் பெறுவது ஒரு ஆத்மா. அது பெற்ற ஆனந்தம் ஒரு ஆத்மா பெற்ற ஆனந்தம். சத்திய ஜீவியம் ஆன்மிகப் பரிணாமத்தால் அனைத்து ஆத்மாக்களையும் தன்னுட்கொண்டு சிருஷ்டியில் உள்ள அனைத்து ஆனந்தமும் ஒவ்வொரு ஆத்மாவும் அனுபவிக்கும் நிலைக்கு வருகிறது.

இது உலகிலுள்ள எல்லாச் செல்வமும் எல்லா ஞானமும் எல்லா இன்பமும் ஒவ்வொரு ஆத்மாவும் முழுமையாகப் பெறும் நிலை.

 **********



book | by Dr. Radut