Skip to Content

09. நிலையான சமர்ப்பணம் – நெடு நாளைய யோகம்

நிலையான சமர்ப்பணம் – நெடு நாளைய யோகம்

கர்மயோகி

நிலையான சமர்ப்பணம் ஏற்பட நிதானமான மனம் தேவை. பூரண யோகம் மனிதனுக்குரியதல்ல. இறைவன் செய்யும் யோகம். மனிதன் பங்கு சரணாகதி. மனிதனை உலகம் ‘நாம்’ என அறியும். மனத்துள் உறையும் ஆத்மாவே மனிதன். அந்த ஜீவாத்மா பரிணாமத்தால் பரமாத்மாவாகி மனிதன் பெறும் ஞானம் அஞ்ஞானத்தால் சிதைக்கப்படாதது, தீமையால் தீண்டப்படாதது. தீமையைத் திறம்படும் நன்மையாகத் திருவுருமாற்றவல்லது. தத்துவமாக பகவான் எழுதிய நூல் மொழியின் பவழமல்லி மணம் பெற்றது. அறிவுக்கு எளிதில் எட்டாது. சாவித்ரி, The Life Divine அனுபவமாக மாறிய காவியம். அனுபவம் முழுமையாக பரிணாம பக்குவம் வாய்ந்த சலனம். அதற்கு இடைவெளியில்லை. அன்னை அதைத் திருவுருமாற்றம் என்கிறார். அச்சலனம் வேகமானது. வேகம் அளவைக் கடந்து நிலையான தோற்றம் பெறுவது. அறிவைக் கடந்து, உணர்வின் கனத்தையும் கடந்து உடலுணர்வின் முழுமையைப் பகுதியாக உட்கொண்டு ஜீவனின் உள்ளுணர்வின் பூரணம் பெற்றது அன்னை கூறும் விளக்கம். இம்முயற்சியை அறிவின் சிகரத்தை எட்டியவர் மேற்கொண்டபொழுது எண்ணம் தழலாக உடலை தகித்தது எனக் கூறினார்.

மனிதன் தன்னை உயர்வாக மட்டும் கருதுவான். அனைவரும் அதை ஏற்க விரும்புவான். தனக்குத் தகுதிக்கு மேற்பட்ட திறமையும், திறமைக்கு மேற்பட்ட தகுதியிருப்பதாகவும் உலகம் ஏற்றுப் பரிசு தர வேண்டும் எனப் பல முறை தன்னிடமே கூறுவான். ஷேக்ஸ்பியர் நாடகத்தில் முன்னுரையாக ஒரு சிறு நிகழ்ச்சியுண்டு. ஒரு Duke பிரபு பரிவாரத்துடன் காட்டினுள் நுழைந்தபொழுது ஒருவன் குடிபோதையில் மயக்கமாகக் கிடந்தான். பிரபுவுக்கு ஓர் வேடிக்கையான எண்ணம் தோன்றியது. அவனை எழுப்பி அவனிடம் “நீங்கள்தான் பிரபு. மயக்கத்தின் பேரில் மதியிழந்து விட்டீர்கள்” எனக் கூறி அரண்மனைக்கு அழைத்து வந்து பட்டு மெத்தையில் படுக்க வைத்து பலரும் அவனைப் பிரபுவாக நடத்தச் சொன்னார். முதலில் கொஞ்ச நேரம் திகைத்தான். அவன் பெயர் Christopher Sly கிறிஸ்டோபர் ஸ்லை. திகைத்தவன் தொடர்ந்து பிரபுவாக அனைவரையும் அதிகாரம் செய்தான். இதுவே மனிதனுடைய அந்தரங்கமான உண்மை நிலை. கவி படம் பிடித்துக் காட்டுகிறான். நாம் நம்மை நல்லவனாகப் பேசுவது, நினைப்பது உண்மையல்ல. மனிதன் தன் உண்மையையறியாமல் இறைவனுக்கு எப்படி உண்மையாக இருக்க முடியும்? ஏன் ஒருவன் இந்த யோகத்தைச் செய்ய வேண்டும் என்பவருக்குரிய யோகம் இது இல்லை. இதையறிந்து எதனாலும் தடுக்க முடியாது என்ற ஆர்வத்தால் உந்தப்படுபவர்கட்கே இது உரியது. சமர்ப்பணம் அவர்கட்கேயுரியது. அதை எப்படி நிலையானதாகச் செய்வது என்பதே இக்கட்டுரை.

சமர்ப்பணம் நிலையானால் யோகம் நெடுநாளைக்குரியதாகும் என்பது கருத்து. அதைச் செய்வது The Life Divine-இல் உள்ள அடிப்படைக் கருத்துகள். அவை ஜோதி, சுமுகம், சுதந்திரம், அனந்தம் போன்ற பல. நிலையானது எனில் எது? ஆட்டங்காணாதது நிலையானது. ஏற்றத்தாழ்வு இருந்தால் ஆட்டம் காணும். தாழ்வது ஓரளவைக் கடந்தால் நிலையை இழக்க வேண்டி வரும். ஏற்றத் தாழ்வில்லாமல் முன்னேற்றமில்லை. ஏற்றமும் இறக்கமும் இருக்கும்பொழுது இடைவெளி முன்னுக்கு வர உந்தும். முன்னுக்கு வர உதவும் ஏற்றமும் தாழ்வும் அவசியம். அடிப்படையை இழக்கும் தாழ்வு ஆபத்து. சமர்ப்பணத்தில் ஆர்வத்தால் முன்னுக்கு வரலாம். தாழ்ந்த ஆசைகள் கீழ்நோக்கி இழுக்கும். ஆசையிழுப்பது அதன் பலத்தால். அது வெல்லாது. ஆசைக்கு மனிதன் இடம் கொடுத்தால் ஏற்றம் போய் தாழ்வு நிலையாகும். ஆசைக்கு மனம் உட்படாத நிலை நிலையான சமர்ப்பணத்திற்குரியது.

பிரம்மத்தின் அம்சங்கள் யோகத்தை உயர்த்தும். ஒரு குடும்பத்தில் சுதந்திரம், பிரியம், பண்பு, சற்று அதிகமானால் அந்த அளவு அக்குடும்பம் யோகத்தை நோக்கி முன்னேறும். நாகரிகம் வளர்கிறது. நாகரிகம் என்றால் உடலால் வாழும் மனிதன் உயர்ந்து மனத்தால் வாழ்வான். உடல் வாழ்வு முரடானது. மனவாழ்வு பண்பானது. பிணக்கு ஏற்பட்டால் உடல் எதிரியின் உடலைத் தாக்கும், அழிக்கும். மனத்தால் வாழ்பவர் பிணக்கை பேசித் தீர்ப்பார்கள். நாகரிக வளர்ச்சியை பல்வேறு வகைகளாக அறியலாம். உணவு சுவையிலும், உடையின் அழகிலும், பேச்சின் மென்மையிலும், வீட்டின் வசதியிலும், கல்வியின் முக்கியத்துவத்திலும், நாட்டாண்மையின் தர்மத்திலும், மக்கள் செல்வத்திலும் நாகரிகம் வெளிப்படும். வயதானவர், சிறுவர், பெண்கள், வசதி குறைந்தவர், படிப்பறிவில்லாதவரை சமூகம் நடத்துவதிலும் நாகரிகம் வெளிப்படும். யோகம் தவத்தைக் கடந்தது. தவம், தழல், முயற்சிகளில் சிறந்தது. முயற்சியின் முழுமை ஆத்ம விடுதலை, மோட்சம். அது ஒரு ஆத்மாவுக்கு வரும். யோகம் முயற்சியின் முழுமையைக் கடந்த சரணாகதிக்குரியது. தவம் அகத்திற்குரியது. யோகம் அக சித்தி புறத்தில் பலிப்பது. அகம் ஒருவர்க்குரியது. புறம் பிரபஞ்சத்திற்குரியது. அசைவற்ற ஆதியும் அந்தமுமில்லாத ஒரு ஆத்மா (Spirit) தியானத்தால் அதன் சிறையான மனம், உடலிலிருந்து விடுபடுவது தவம். ஆத்மா (Spirit) என்பது அனைவருடைய ஆத்மா (Soul)வும் சேர்ந்த தொகுப்பு என்பது ஸ்ரீ அரவிந்தம். இது அசையும், வளரும், பரிணாம வளர்ச்சி பெறும். அதன் பரிணாம வளர்ச்சி ஒருவர் பெறும் ஆனந்தத்தை உலகம் முழுவதும் பெறும் பேரானந்தமாக மாற்ற வல்லது.

(தொடரும்)

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

அகந்தைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு ரிஷிகளைக் குழப்பியதால் பகவான் ‘அகந்தையற்ற பார்வைக்குரிய அகிலலோக சமுத்திரம் ஜீவன், ஜீவியமுமாகும். இதன் சக்தி ஜீவனற்றதல்ல, முழு ஜீவனுடையது’ என்கிறார்.

*********



book | by Dr. Radut