Skip to Content

12. அன்னை இலக்கியம் - இறைவனுடன் அரைமணி நேரம்

அன்னை இலக்கியம்

இறைவனுடன் அரைமணி நேரம்

இல. சுந்தரி

முன்னுரை

வடநாட்டு பகவான் சீடர் ஒருவர், பேணி என்ற தம்மூரில் பகவான் உத்தரவுப்படி, வெள்ளையரின் குண்டு வீச்சிற்கு அஞ்சி ஊரை விட்டுக் குடி பெயராது தம் மனைவியொடும், மகள் மீராவுடனும் பேராசிரியர் பணிபுரிந்து வாழ்ந்து வந்தார். தம் பூஜையறையில் பகவானின் திருவுருவப் படத்தை வைத்துத் தியானம் செய்வார். குழந்தை மீரா அதைக் கண்டும் அவர் வாயிலாக பகவானைப் பற்றிக் கேட்டறிந்தும் பகவான் மீது பக்தி கொண்டிருந்தாள். சதா அவர் நினைவு. ஒருநாள் அவள் கண்ட கனவே “இறைவனுடன் அரைமணி நேரம்”. வெள்ளையர் குண்டு வீச்சில் மடிந்த குடும்பங்களில் அவர்கள் குடும்பமும் மடிந்தது. ஆனால் அவர்கள் கொண்ட பக்தி மடியவில்லை. மீராவின் கனவு பலித்ததா?

*******

நம் எல்லாச் சிந்தனைகளையும், எழுச்சிகளையும் உணர்ச்சிகளையும் ஆண்டவன் அனுமதிக்கவோ, மறுக்கவோ அவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.

ஸ்ரீ அரபிந்தோ

********

பகவான் திருவுருவப் படத்தின் முன் நின்று கைகூப்பி, “பிரபு நான் உங்களைக் காண வேண்டும்” என்றேன்.

‘ஆம் கண்டு கொண்டுதானேயிருக்கிறாய்’ என்றார். “இல்லை இப்படியில்லை. பௌதிக நிலையில் காண வேண்டும். அப்போதுதான் உம்மை என்னால் உணர முடியும்” என்றேன்.

‘சரி! எங்கே காண வேண்டும்? பரோடாவிலா? கல்கத்தாவிலா? அலிப்பூரிலா? புதுவையிலா?’ என்றார்.

‘தெரியவில்லை’ என்றேன். அப்படியென்றால் அலிப்பூருக்கு வா’ என்றார்.

‘சரி’ என்று தலையாட்டினேன். உடனே என் முன் அலிப்பூரின் பிரம்மாண்ட சிறைச்சாலை தெரிந்தது. மீசை முறுக்கிய கடும் பார்வையுடைய வெள்ளைக்காரக் காவலர்கள் துப்பாக்கி ஏந்திய வண்ணம் நின்றனர்.

நான் முன்னேற முயன்றேன். ஒரு காவலாளி என்னைத் தடுத்து நிறுத்தி ‘நில்’ என்று கடுமையாய்க் கூறினான்.

“இல்லை நான் என் பிரபுவைக் காண வேண்டும்” என்றேன். அதற்கு உனக்கு அனுமதி இல்லை என்றான். ‘அவர்தாம் என்னை வரச் சொன்னார்’ என்றேன் உறுதியாக.

‘யாரவர்?’ என்று உறுமினான். ‘ஸ்ரீ அரபிந்தோ, என் இஷ்ட தெய்வம்’ என்றேன்.

கட்டாயம் அவரைநீ காண முடியாது என்று முரட்டுத்தனமாய் என்னைப் பிடித்துத் தள்ளினான். எனக்குப் பின்னால் அப்போதுதான் வந்து கொண்டிருந்த டாக்டர் டாலி (Dally) (பகவானுடன் நட்பு முறையில் பேசிப் போகும் ஆங்கிலேயர்) என்னைக் கீழே விழாமல் பிடித்துக் கொண்டு, என்ன? என்று காவலரிடம் கேட்டார். அவன், ‘இந்தப் பெண் ஸ்ரீ அரபிந்தோவைக் காண வேண்டுமாம்’ என்றான்.

அப்படியா? என்று என்னைக் கனிவுடன் பார்த்தார். ‘வா’ என்று என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். பின்புறம் திரும்பி காவல்காரனை ஒரு பார்வை பார்த்து, என் வெற்றியைக் கொண்டாடிய வண்ணம் சென்றேன். அங்குத் தனிச் சிறையொன்றில் நடுவில் அமர்ந்து கண்மூடி யோகத்தி- லிருந்த பிரபுவைப் பார்த்துக் கைகூப்பினேன். என் கண்கள் கண்ணீர் பொழிந்தன. (காதலாகிக்கசிந்து பொழியும் கண்ணீர் இது). ‘பேசிவிட்டு வா’ என்று கூறி டாலி சென்று விட்டார். என் கேவல் கேட்டு பிரபு என்புறம் திரும்பி கனிவுடன் பார்த்தார். நான் அன்பால் நெகிழ்ந்து போனேன்.

‘பிரபு! நான் உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வரலாமா?’ என்றேன்.

‘வேண்டாம். எனக்கு இங்கேயே உணவு தருவார்கள்’ என்றார். வேண்டாம் பிரபு. அது உமக்கு வேண்டாம். நானிருக்கிறேன் உமக்கு உணவு படைக்க. என்னை அனுமதியுங்கள்.

உன்னை இவர்கள் இங்கே கொண்டுவர அனுமதிக்க மாட்டார்கள்.

அவர்கள் யார் என்னை அனுமதிக்க? நான் வருவேன் பிரபு.

சரி. உன்னிஷ்டம். புன்னகைத்தார். பாதங்களில் தலை பதித்தேன். மெல்ல என் தலையை வருடி வழியனுப்பினார்.

(ஓ நான் யாரென்றுதானே யோசிக்கிறீர்கள். கடைசியில் சொல்கிறேன்)

வீட்டிற்கு ஓடினேன். அம்மாவிடம் நல்ல சாப்பாடு தயாரிக்க வேண்டுமென்றேன். தயாரிப்பதாய்ச் சொன்னார்கள். இல்லையில்லை. நானே தயாரிக்க வேண்டும் என்றேன். உனக்கென்ன தெரியும்? நீ சின்னப்பெண் என்றார்கள். பரவாயில்லை என்றேன். யாருக்குச் சாப்பாடு செய்யப் போகிறாய்? என்றார்.

என் இஷ்ட தெய்வம் ஸ்ரீ அரபிந்தோவுக்கு என்றேன். அம்மா சிரித்தாள். சொல்லிக் கொடுத்தாள். என் சின்னக் கைகளால், இறைவனை ஏந்திய பெரிய மனதோடு சமைத்தேன். கேரியர் என்னை விடப் பெரியது. தெருவெல்லாம் எடுத்துச் செல்லாது கயிற்றைக்கட்டி இழுத்துச் சென்றேன். ஒருவாறு சிறைவாயிலை அடைந்து விட்டேன். யாரும் என்னைத் தடுக்கவில்லை. வசுதேவர் கண்ணனைத் தலையில் சுமந்து நந்தகோபன் இல்லம் சென்றபோது எப்படி எல்லாம் வழிவிட்டதோ அது போல எனக்கும் சிறை வழிவிட்டது.

பகவானுக்குப் பிரியமாக என் சின்னக் கையால் பரிவாக உணவு படைத்தேன். சிறிதே உட்கொண்ட அவர் அங்குள்ளோர் அனைவருக்கும் அதைப் பகிர்ந்தளிக்கச் சொன்னார். செய்தேன்.

நீ உண்ணவில்லையா? என்றார். ‘நீர் உண்டதைக் கண்டது நானுண்டது’ என்றேன். சிரித்தார். பிரியமனமில்லாது, மீண்டும் தங்களை எப்படிக் காண்பேன்? என்றேன்.

நான் புதுவை சென்றதும், அங்கு எனக்கு உணவளிக்க வருவாய் என்றார்.

மனங்கொள்ளா மகிழ்வுடன் விடைபெற்றேன். மீரா! எழுந்திரு என்று அம்மா என் உறக்கம் கலைத்தாள். அதற்குள்ளாகவா விடிந்து விட்டது?

ஏதாவது படித்துவிட்டு கனவு காண்பதே உனக்குப் பழக்கமாகிவிட்டது என்றாள் அம்மா. கனவா? ஸ்ரீ அரவிந்தரை நான் தரிசித்தது, அவருக்கு நான் உணவு படைத்தது, யாவும் கனவா? இல்லையில்லை. அதுகனவன்று. நான் அக்கனவு மெய்யாகப் பிரார்த்திப்பேன். புதுவைக்கு உணவளிக்க வருவாய் என்றாரே. நான் சதா ஸ்ரீ அரவிந்தரை எண்ணினேன்.

********

தென்னகத்தில் உள்ள சிறு கிராமம் கிருஷ்ணாபுரம். பசுமை நிறைந்த இக்கிராமத்தின் நடுநாயகமாய் ஒரு கிருஷ்ணன் கோயில். இக்கோயிலில் பாரம்பரியமாய் பூஜை செய்யும் வழியில் வந்தவர் இராமன் பட்டாச்சாரியார். இவர் மகள் பூங்கோதை. இவர்களை அண்டிப் பிழைத்த சிறுவன் வரது என்ற வரதன். இராமன் மிகுந்த பக்தி சிரத்தையுடன் கோயில் பூஜா காரியங்களைச் செய்து வந்தார். கோதை நந்தவனத்தில் பூக்களும் துளசியும் பறித்து மாலை கட்டி கண்ணனுக்குச் சார்த்தக் கொடுப்பாள். சந்தனம் அரைத்து வைப்பாள். நிவேதனத்திற்குச் சர்க்கரைப்பொங்கல் தயாரிப்பாள். வரது அபிஷேகத்திற்கு நீர் கொண்டு வருவான். இது அவர்கள் பணி. கோதை பக்தி வடிவானவள். கோயிலில் நடக்கும் இசைச் சொற்பொழிவுகளைக் கேட்டுக்கேட்டு கண்ணன் மீது ஆராத அன்பு கொண்டிருந்தாள். இராமனின் மனைவி காலமாகிவிட்டதால் கோதையே நிவேதனம் தயாரிப்பாள். பதின்மூன்றே வயதான அவள் பொறுப்பும், அக்கறையுமாயிருந்தாள். இராமன் அதிகாலை எழுந்து காலை நேர பூஜைக்காக ஆற்றில் நீராடி வந்தார். நிர்மால்யம் களைந்து தீபம் ஏற்றி அபிஷேக ஆராதனை தொடங்க வேண்டும்.

அம்மா கோதே! நைவேத்யம் ரெடி பண்றயா? என்கிறார் இராமன்.

ஆமாம் அப்பா. பூவெல்லாம் பறித்து வைத்து விட்டேன். துளசி மாலையும் ரெடி. சந்தனம் அரைத்து வைத்து விட்டேன். அபிஷேகத்துக்கு வரது தீர்த்தம் கொண்டு வருவான். நீங்கள் அபிஷேகம் ஆரம்பிக்கலாம். அதற்குள் நான் சர்க்கரைப் பொங்கல் ரெடிபண்ணி எடுத்துக் கொண்டு தீபாராதனை பார்க்க வந்து விடுவேன் என்கிறாள் கோதை. தன் பெண்ணின் பக்தியும், சிரத்தையும் பட்டாச்சாரிக்கு பெரும் பெருமை.

அவள் அகம் இந்த ஸ்ரீ கிருஷ்ணனால் நிறைந்து வழிந்தது. பக்தி செய்வதில் அவள் கோபியர்க்கு இணையானவள். அக அழகால் முக அழகு நிறைந்து ஈஸ்வர கைங்கர்யம் தவிர ஏதும் அறியாதவள். இராமனே அவளுக்குத் தந்தையும், குருவும். அவரே அவளுக்கு எண்ணும் எழுத்தும் கற்பிப்பார். மதிய நேரங்களில் ஆழ்வார் பாசுரங்களைக் கற்பிப்பார். ஆண்டாள் பாசுரங்களைக் கேட்டுக் கேட்டு அவள் ஆண்டாளே ஆனாள். தீபாராதனை முடிவில் அவள் பாடும் பாசுரம் கேட்கவே ஒரு பக்தர் குழாம் அங்குக் கூடிவிடும். அவள் தன் இனிய குரலில் பக்தியும் கலந்து,

என்புருகியின வேல்நெடுங் கண்கள் இமைபொருந்தா பலநாளும்
துன்பக்கடல்புக்கு வைகுந்தன் என்பதோர்தோணி பெறாதுஉழல் கின்றேன்.
அன்புடையாரைப் பிரிவுறு நோயதுநீயும் அறிதி குயிலே!
பொன்புரை மேனிக்கருளக் கொடியுடைப் புண்ணியனை வரக்கூவாய்.
என்று பாடுவாள் (இப்பாடல் பகவானால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது).

‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்று பாடுவாள்.

கோதையின் பக்தியும், அவள் தயாரிக்கும் நைவேத்யமும் கண்ணன் உவந்தது என அதைப் பெற ஒரு கூட்டம் காத்திருக்கும்.

அபிஷேக ஆராதனை முடிந்தவுடன் கோதை நைவேத்யம் கொண்டு வைத்துவிட்டு, பாசுரம் பாடுகிறாள். கண்ணன் சிலை ஜீவனோடு அவள் கண்களுக்குத் தெரிகிறது.

கடந்த இரண்டு நாட்களாக அதிகாலையில் கண் விழிக்கும்முன் கண்ணனின் குழலோசை கேட்கிறது. கேட்டு விழித்துக் கொள்கிறாள். புன்னகை தவழ கண்ணன் காட்சி தருகிறான். திடீரென அவனே முதிய சந்நியாசியாய் காட்சி தருகிறான். மீண்டும், மீண்டும் இவ்வாறு காண்கிறாள். ஒன்றும் புரியவில்லை. மெய்சிலிர்த்து ஆனந்தம் பெறுகிறாள். இது என்னவாக இருக்கும்?

அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை, நிவேதனம் யாவும் முடிந்து கோதையின் இசையாராதனையும் முடிந்து, பக்தர்களுக்குப் பிரசாத விநியோகமும் முடிந்தது. கோதை கையில் பிரசாதத்துடன் கண்ணனைக் காண்கிறாள். காலையில் கண்ட அதே காட்சி. திடீரென கண்ணன் ஒரு துறவிபோல் காட்சி தருகிறான். கணப்போதுதான், காட்சி மறைகிறது. நடை சார்த்தும் நேரம். கேசவன் சார் வேக வேகமாக வருகிறார். அவரைக் கண்ட இராமன், ‘வாங்கோ, நல்ல வேளை நடை சார்த்துமுன் வந்தீர். ஏன் இத்தனை நாட்களாய் வரவேயில்லை?’ என்கிறார்.

கைகூப்பி வணக்கம் தெரிவித்த கேசவன் “நான் ஊரில் இல்லை சுவாமி. இன்றுடன் வீடும் விற்று நிரந்தரமாய் ஊரை விட்டுப் போவதால் கண்ணனைத் தரிசித்து, உங்களிடமும் சொல்லிக் கொண்டு போக வந்தேன்”. என்றார்.

ஊருக்கா? எங்கு வேலை மாற்றல்? இராமன் கேட்கிறார். வேலையுமில்லை. மாற்றலுமில்லை. நடமாடும் கண்ணனைக் காணச் சென்று விட்டேன் - கேசவன் கூறிய பதில்.

தீர்த்தம், சடாரி யாவும் பெற்றுக் கொண்ட கேசவன் ‘நைவேத்யப் பிரசாதத்தை இழந்து விட்டேன்’ என்றார் வருத்தமாக.

‘இந்தாருங்கள் மாமா. கண்ணன் யாரையும் ஏமாற்ற மாட்டான்’ என்று தன் கையில் தொன்னையில் வைத்திருந்த பிரசாதத்தை அவருக்களித்தாள் கோதை.

“உன் பங்கை எனக்குத் தந்தாயா கோதை?” என்றார் கேசவன்.

“அவள் பக்தியைப் பகிர்ந்தளிக்க வந்தவள் அல்லவா?” என்றார் இராமன்.

“மாமா பதிலுக்கு நீங்கள் ஒன்று சொல்ல வேண்டும்” என்றாள் கோதை.

“கேளம்மா சொல்கிறேன்” என்றார் கேசவன். “நடமாடும் கண்ணன் என்றீர்களே அவர் எங்கிருக்கிறார்?”

“அவர் இங்குப் புதுச்சேரியில்தான் இருக்கிறார்”.

“புதுவை குடிக்குச் சலுகையான ஊரல்லவா? அங்கு ஏன் கண்ணன் நடமாடுகிறார்?” என்று இராமன் கேட்கிறார்.

“புல்லாங்குழல் தரும் சுகம் தெரியாதவர் குடியை நாடுகின்றனர். நாமென்ன செய்ய” என்கிறார் கேசவன்.

“என்ன சொல்கிறீர் கேசவன்?”

“ஆமாம் சுவாமி புதுவையில் கிருஷ்ணாவதாரத்தின் அடுத்த அவதாரமாக பகவான் ஸ்ரீ அரவிந்தர் வந்து விட்டார்”.

“மாமா! என்ன சொல்கிறீர்கள். கிருஷ்ணன் அடுத்த அவதாரமானாரா? புதுவையில் இருக்கிறாரா?” ஆர்வம் மேலிடுகிறது கோதைக்கு.

“ஆமாம் கோதை. பரமன் (ஸ்ரீ அரவிந்தர்) மனிதனாய் வந்து பூரணயோகம் செய்து பூமிக்கு அதிமானசம் என்ற சத்திய ஜீவிய சக்தியைக் கொண்டு வரப் போகிறார். அதன் முதற்கட்டமாக நவம்பர் 24-இல் அவர் ஏற்ற பௌதிக உடலில் தெய்வீக ஆனந்தமான ஸ்ரீ கிருஷ்ணன் கலந்து விட்டார்”.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார் இராமன்.

“நீங்கள் செய்தித்தாள் பார்க்கவில்லையா? வார இதழ், மாத இதழ் யாவுமே இச்செய்தியைச் சிறப்பித்து எழுதியிருந்தது. அதன் பிறகு அவரைக் காண வேண்டும் என்ற ஆவலில்தான் புதுவை சென்றேன். அவரைத் தரிசித்த பிறகு மனம் அங்கேயே லயித்து விட்டது. அதனால்தான் அங்கேயே குடியேறிவிட்டேன்”.

“ஏன் இங்கு நம் கிருஷ்ணர் (கோயிலில்) இல்லையா?” என்றார் இராமன்.

“இல்லையென்று சொல்லவில்லை. இவரே எழுந்து வந்தால் வேண்டாம் என்பீரோ?”

“ஐயய்யோ! அப்படிச் சொல்லவில்லை. ஏனோ எனக்கு இங்குதான் விதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இவருக்குக் கைங்கர்யம் பண்ணாமல் என்னால் இருக்க முடியாது” என்றார் இராமன்.

“கண்ணனை வழிபட்டோம். அவரே நம்மிடையே வரச் சம்மதித்து வந்தால் அவரைப் பார்க்காது விட்டு விடுவோமா?” என்கிறார் கேசவன்.

“ஆமாம் அப்பா. மாமா சொல்வது போல் கண்ணனைச் சென்று காண வேண்டாமா? எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறதப்பா” என்று கெஞ்சுகிறாள் கோதை.

“கோவில் என்றிருந்தால் பூஜா கைங்கர்யம் செய்வது முக்கியம் அம்மா. பூஜையை விட முடியாது” என்றார் இராமன்.

“அப்படியானால் நானாவது மாமாவுடன் போய்க் கிருஷ்ணனை தரிசித்து வருகிறேனே அப்பா. இரண்டு நாட்களாய் எனக்கு விடியற்காலையில் கண்ணன் குழலூதி என்னை எழுப்புவது போல் கனவு வருகிறதப்பா. அது ஒருவேளை இவர் சொன்ன மாதிரி நான் பூமியில் மீண்டும் வந்து விட்டேன் என்று சொல்வதாயிருக்குமோ?” என்கிறாள் கோதை.

“நீ போய்விட்டால் இங்கு பூஜைக்கு யார் பூக்கொண்டு வருவார்? நைவேத்யம் யார் தயாரிப்பார்?” என்கிறார் இராமன்.

“மாமா கோதை போய் தரிசனம் செய்து வரட்டும் மாமா. அதுவரை நானே எல்லாம் செய்கிறேன் மாமா” என்கிறான் வரது. அவனுக்குக் கோதை மீது மிகுந்த அன்பு. அவள் ஆசை நிறைவேற வேண்டும் என்று ஆசைப்படுகிறான். கோதை அவனை நன்றியுடன் பார்க்கிறாள்.

“குழந்தையை என்னுடன் அனுப்புங்கள் மாமா. நான் அவளுக்குத் தரிசனம் செய்வித்து கொண்டு வந்து விடுகிறேன். தெய்வ தரிசனத்திற்குத் துணை செய்வது புண்ணியமல்லவா!” என்கிறார் கேசவன்.

இராமனுக்கு அவளைப் பிரிய மனமில்லை என்றாலும் செல்லமாய் வளர்த்த பெண். பக்தி பூர்வமானவள். இதுவரை அவள் விருப்பம் என்று எதுவும் கேட்டதில்லை. அவள் சந்தோஷத்திற்காக அவளை அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டார்.

கோதை பரம சந்தோஷத்துடன் இரண்டு பாவாடை சட்டைகளைப் பையில் எடுத்துக் கொண்டு கேசவன் சார் கையைப் பிடித்துக் கொண்டு கிளம்பி விட்டாள். இதுவரை அவளைப் பிரிந்தறியாத இராமன் பாசத்தால் கண்கலங்கி விடை கொடுத்ததுடன் விரைவில் அவளைக் கொண்டுவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“ஆகட்டும் சுவாமி, கவலைப்படாதீர். தரிசனம் ஆனவுடன் கொண்டு வந்து விட்டு விடுகிறேன். குழந்தை கண்ணன் மீது எவ்வளவு பக்தி வைத்திருக்கிறாள். அவள் கட்டாயம் அந்தப் பிரபுவை தரிசிக்க வேண்டும்” என்று கூறி புறப்பட்டு விட்டார்.

இரண்டு நாட்களாய் விடியற்காலையில் கண்ணன் அவள் கனவில் வருகிறான். குழலூதி அவளை எழுப்புகிறான். அவள் விழித்துப் பார்க்கும் போது புன்னகை செய்கிறான். திடீரென முதிய துறவியாய் மாறுகிறான். புதுவை வந்து தரிசன வரிசைக்கும் வந்து விட்டாள். கேசவன் மாமாவுக்குப் பின் வரிசையில் நிற்கும் சிறுமி அவள். அவளுக்கு முன்னே வரிசையில் நிற்கும் பெரியவர்கள் அவள் கண்ணனைப் பார்க்க முடியாதவாறு மறைக்கிறார்கள். இரண்டு பக்கமும் தலையை வெளியே நீட்டிப் பார்க்கிறாள். ஸ்ரீ அன்னை அவளுக்குக் குழலூதும் கண்ணனாகவே காட்சியளிக்கிறார். பக்கத்தில் துறவி போன்ற பெரியவர். அவள் கனவில் கண்ணன் மாறிய அதே வடிவம். இதற்கு என்ன பொருள். சிறுமியவள். பொருள் புரியவில்லை. தன் முறை வந்த போது அவள் பகவானை ஸ்ரீ கிருஷ்ணராகவே காண்கிறாள். பிறகு துறவியாய் மாறிய ஸ்ரீ அரவிந்தராய்க் காண்கிறாள். பக்திப் பெருக்கில் கண்ணீர் கண்ணை மறைக்க வரிசை நகர்ந்து அவளை நகர்த்திவிட்டது. “கோதை! கண்ணனைத் தரிசித்தாயா? முதலில் இருந்தவர் ஸ்ரீ அன்னையாகிய பராசக்தி, அடுத்து இருந்தவர்தாம் ஸ்ரீ அரவிந்தராய் அவதரித்த உன் கண்ணன்” என்றார்.

“மாமா! நான் மறுபடியும் அவர்களைக் காண முடியுமா?” என்கிறாள்.

“தரிசனம் முடிந்து எல்லோரும் போய் விட்டார்கள் இனிமேல் நாம் இங்கிருக்க முடியாது. வா போகலாம்” என்கிறார் கேசவன்.

“இல்லை மாமா. நான் மீண்டும் என் பிரபுவைத் தரிசிக்க வேண்டும் போலிருக்கிறது,” என்கிறாள் குழந்தை.

இன்னொரு மிட்டாய் வேண்டும் என்பது போலல்லவா கேட்கிறாள்? இது அப்படிப்பட்டதா? சாத்தியமா? எப்படிப் புரியவைப்பது? “அம்மா கோதே! நாம் இன்னொரு நாள் தரிசனத்திற்கு வருவோம். இன்று முடிந்துவிட்டது.”

“இல்லை மாமா. நான் மீண்டும் என் கண்ணனைத் தரிசிக்க வேண்டும் மாமா” என்று கெஞ்சிக் கேட்கிறாள்.

அவளை எப்படிச் சமாதானம் செய்து அழைத்துப் போவது என்று தவிக்கும் போது ஒரு சாதகர் அவர்களை நோக்கி வருகிறார்.

“இங்குக் கோதை என்பவர் யார்?” என்கிறார். சிறுமி உற்சாகமாக “நான்தான் கோதை” என்கிறாள். கேசவனுக்கோ எதற்காக இருக்கும் என்ற பதற்றம்.

“வாம்மா. உன்னை அன்னை அழைத்து வரச் சொன்னார்” என்கிறார்.

“அன்னையா!” ஒருபுறம் கேசவனுக்கு மகிழ்ச்சி, மறுபுறம் அதிர்ச்சி. என்னவாக இருக்கும்.

கேசவன் கையை விட்டுவிட்டு, சாதகர் கையைப் பற்றிக் கொண்டாள் கோதை. சாதகர் அவளை அன்னையிடம் அழைத்துச் செல்ல ஸ்ரீ அன்னை அவளுக்குக் கிருஷ்ணராகக் காட்சி தருகிறார். ஓடிப்போய் மனம் கொள்ளா மகிழ்வுடன் அவர் பாதங்களைப் பற்றுகிறாள். அன்னையும் அவளைத் தூக்கி நிறுத்தி, “நீ என்னுடன் இங்கேயே இருந்து விடுகிறாயா?” என்கிறார்.

“ஆம் கிருஷ்ணா. நான் இங்கேயே உன்னுடன் இருக்கிறேன்” என்று வேகவேகமாய்ச் சொல்கிறாள். அவள் ஆர்வம் கண்டு அன்னை புன்னகை செய்கிறார். “நீ எனக்கு என்ன தருவாய்?” என்கிறார் அன்னை.

“அங்குக் கோவிலில் உனக்குத் தினமும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து தருவேனே அதே போல் செய்து தருகிறேன். ஆனால் நீ அதைச் சாப்பிட்டு நான் பார்க்கவில்லை. அப்பாவிடம் கேட்டேன் ஏன் கண்ணன் நம் நைவேத்யத்தைச் சாப்பிடவில்லை என்று. அதற்கு அப்பா, நீ சாப்பிடுவது நம் கண்ணுக்குத் தெரியாது. அதற்கு நிறைய பக்தி வேணும் என்பார்.”

“இப்போது உன் கண்ணன் சாப்பிடுவதை நீயே பார்க்கப் போகிறாய்” என்கிறார் அன்னை.

“அப்படியென்றால் இப்போதே செய்யட்டுமா?” என்று ஆவலுடன் கேட்கிறாள்.

“இன்று கண்ணன் சாப்பிட்டு விட்டார். நாளை நீ தருவதைச் சாப்பிடுவார்” என்றார் அன்னை.

அத்துடன் சாதகரை அழைத்து, “நாளை இவள் உணவு சமைக்க அவள் கேட்பதெல்லாம் கொடு. இவளை அழைத்து வந்தவரிடம் இவள் இங்கேயே இருப்பாள் என்று சொல்லிவிடு” என்று உத்தரவிட்டார் அன்னை.

சாதகர் கேசவனிடம் வந்து, “குழந்தையை அன்னை இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். நீங்கள் நிம்மதியாகப் புறப்படுங்கள்” என்றார்.

“ஐயய்யோ, என்ன சொல்கிறீர்?” என்று துடித்துவிட்டார் கேசவன். “ஐயா, தயவு செய்து அந்தக் குழந்தையை என்னிடம் கொடுங்கள். அவள் என் மகளாக மட்டுமிருந்தால் மிகுந்த மகிழ்வுடன் விட்டுவிட்டுப் போயிருப்பேன். பக்கத்தில் கிருஷ்ணாபுரம் கண்ணன் கோயில் பட்டாச்சாரியார் மகள் அந்தக் குழந்தை. பகவானைத் தரிசிக்க மிகவும் ஆசைப்பட்டதால் தெரிந்தவர் வீட்டுக் குழந்தை என்று அழைத்து வந்தேன். உடனே கொண்டு விட வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். குழந்தை எங்கே என்றால் என்ன பதில் சொல்வேன்” என்று அழாக் குறையாகப் பதறினார் கேசவன்.

சாதகர் அதையும் போய் அன்னையிடம் கூறினார்.

‘அவனை இங்கே அழைத்து வா’ என்றார். ‘ஐயா! அன்னை உங்களை அழைக்கிறார்’. இத்தனை நெருக்கடியிலும் அன்னையைத் தரிசிக்கப் போகிறோம் என்பது மகிழ்ச்சியாகத்தானிருந்தது. இந்த வாய்ப்பிற்குக் கோதைக்கு மானசீகமாய் நன்றி சொல்ல மறக்கவில்லை.

அன்னையைக் கண்டதும் கீழே விழுந்து நமஸ்கரித்து எழுந்து பணிவுடன் நிற்கிறார்.

“அவள் இங்கே இருக்கட்டும். நீ போகலாம்” என்றார்.

கேசவன் என்ன சொல்வதென்று தெரியாமல் மனத் தவிப்போடு அன்னையைப் பார்க்கிறார்.

“எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன். நீ போகலாம்” என்று ரத்தினச் சுருக்கத்துடன் கூறினார்.

வேறு வழியின்றி செய்வதறியாது, அரை மனத்துடன் செல்கிறார் கேசவன். அவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் வானம் பொத்துக்கொண்டது போல் மழை கொட்டியது. ஒரே இரவில் ஊரில் வெள்ளம் புரண்டது. புதுவையுடன் எல்லாப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டன. சரியாகச் சில நாட்கள் ஆகலாம். கேசவன் தற்காலிகமாகப் பிரச்சனையிலிருந்து (கோதையைக் கொண்டுவிடும் பொறுப்பிலிருந்து) விடுபட்டதாக உணர்ந்தார்.

இராமன் பட்டாச்சாரியார் செய்தித்தாள் மூலம் வெள்ளம் பற்றி அறிந்து விரைவில் வெள்ளம் வடிந்து குழந்தை வர வேண்டும் எனப் பிரார்த்தித்த வண்ணமிருந்தார்.

அன்னை கூறியது போல் கோதை சர்க்கரைப்பொங்கல் தயாரிக்க அவள் கேட்ட பொருட்களைச் சாதகர் தருகிறார். இந்தச் சின்னப் பெண் என்ன செய்யப் போகிறாள் என்று சாதகர்கள் ஆர்வத்துடன் கவனிக்கிறார்கள். அவள் மிகுந்த ஆர்வத்துடன் தன் சின்னஞ்சிறு கைகளால் பானையை அடுப்பிலேற்றி படிப்படியாய்ச் செயல்பட்டு பொங்கலைக் கிளறுகிறாள். முந்திரியும், திராட்சையும் நெய்யில் வறுத்து அதில் இடுகிறாள். ஏலப்பொடி தூவி மணக்க மணக்க பொங்கல் செய்து சின்னக் கைகளால் பிடிதுணியால் அடுப்பினின்றும் இறக்கி வைத்து கண்ணனை நினைக்கிறாள்.

பகவானின் உணவு நேரம். அன்பர் பலர் தயாரித்த உணவுப் பொருள்கள் தனித்தனிப் பாத்திரங்களில் நிவேதனமாக அனுப்பப்படுகிறது. அதில் கோதை தயாரித்த சர்க்கரைப் பொங்கலும் பாத்திரத்தில் இட்டு அனுப்பப்படுகிறது. மிகுந்த பக்தியுடன் அனுப்பி வைத்துவிட்டு தன் கண்ணன் அதைச் சுவைப்பதை எண்ணி மகிழ்ந்த வண்ணம் காத்திருக்கிறாள் கோதை.

பகவான் தன் முன்னுள்ள காணிக்கைகளில் தம் அருட்பார்வையைச் செலுத்துவார். அவை அவரவர்க்குத் திருப்பி அனுப்பப்படும். அன்னை அவருக்காக அனுப்பும் பதார்த்தங்களையே அவர் உண்பார். அன்னையே பல நேரம் பார்த்துப் பார்த்துப் பரிமாறுவார். இன்றைக்கு மிகுந்த ஆவலுடன் அனைவரும் காத்திருக்க பகவான் கோதையை அழைத்து வரச் சொல்கிறார். குறிப்பாக அவர் அவள் சர்க்கரைப் பொங்கல் உள்ள பாத்திரத்தைக் கையில் எடுக்கிறார். முகம் மலர்ந்து புன்னகை செய்கிறார். எப்போதும் அவர் முகத்தில் தீவிரத்தையே பார்த்திருந்த சாதகர்கள் அவர் புன்னகையை இரசித்து மகிழ்ந்தனர்.

எல்லோரும் அந்தப் பாத்திரத்தைத் திறந்தவுடன் நெய் மணம் நுகர, பகவானோ ‘பக்தியின் சுவையும், மணமும் இணையற்றதல்லவா’ என்கிறார்.

கோதை அழைத்து வரப்படுகிறாள். பகவான் அவளுக்குப் புல்லாங்குழலுடன் ஸ்ரீ கிருஷ்ணனாக காட்சி தருகிறார். அவள் வியந்து நிற்கும் போது ஸ்ரீ அரவிந்தராய்க் காட்சி தருகிறார். அவளுக்குத் தன் கனவுக் காட்சி நினைவிற்கு வருகிறது. இவரே தம்மைத் தனக்குக் காட்டியுள்ளார். கிருஷ்ணாவதாரம் ஸ்ரீ அரவிந்த அவதாரமாய் வந்துள்ளது என்று கேசவன் மாமா கூறியதும் நினைவு வருகிறது. தன்னையிழந்து பரவசப்பட்டு நிற்கிறாள் குழந்தை. பகவான் அவள் கண்முன் அந்தச் சர்க்கரைப் பொங்கலை எடுத்து உண்கிறார். அத்தனை பேருக்கும் கண் கொள்ளாக் காட்சியானது. அவளை அழைத்துக் கனிவுடன் பிரசாத பாத்திரத்தை அவளிடமே அளித்து விட்டு உள்ளே சென்று விட்டார்.

அனைவரும் அவளைச் சூழ்ந்து கொண்டு பகவத் பிரசாதம் பெறுகின்றனர். பாத்திரம் காலியானது. ஒரு முதியவர் ‘நீ உனக்குச் சிறிதும் வைத்துக் கொள்ளவில்லையே’ என்கிறார். மனம் நிறைந்து சிரிக்கிறாள்.

ஒரு சாதகர் பகவானிடம் வந்து தயங்கியபடியே நிற்கிறார்.

‘கோதையின் நிவேதனத்தை மட்டும் ஏன் உண்டேன் என்பதுதானே உன் கேள்வி?’ என்கிறார் பகவான்.

சாதகர் தலையசைக்கிறார்.

‘அவள் தனக்கென மீதம் வைத்துக் கொள்ளவில்லை பார்த்தாயா? நானுண்டதே அவளுண்டது. பக்தியை பகிர்ந்தளிக்க வந்தவள் அவள்’, என்கிறார் பகவான். ‘நான் அவளுக்கு முன்பளித்த வாக்குப்படி அவள் சமைத்ததை உண்டேன்’ என்றார்.

அன்னை அவளுக்குத் தன்னை தாயாகக் காட்டியருளினார். அவள் தன் கண்ணனுக்கு நைவேத்யம் கொடுத்து அவர் உண்பதைக் காண அன்னையே ஏற்பாடு செய்தார் என்பதையும் குழந்தை அறிந்து கொண்டாள்.

சிறிது சிறிதாக அவள் அன்னையைப் பற்றியும் பகவானைப் பற்றியும் அங்குள்ளோர் கூறக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள்.

வெள்ளம் வடிந்து, போக்குவரத்து சீரானது. ஒவ்வொரு நாளும் கோதையின் வரவிற்காகக் காத்திருந்த இராமன் ஒருநாள் பூஜைக்கு வரதுவை ஏற்பாடு செய்து விட்டுக் கேசவனைத் தேடி வந்துவிட்டார்.

“வாங்கோ சுவாமி” என்று கனிவுடன் அவரை வரவேற்று உபசரித்தபின், பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்ற எண்ணம் தோன்றியவுடன் ‘அன்னையே’ என்று மனதில் நினைத்தார். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அன்னை கூறிய அந்தச் சொல்லை, சூழலை நினைவு கொள்கிறார் கேசவன். இராமனே பேசுகிறார். “வெள்ளம் காரணமாய் குழந்தையை உடனே கொண்டுவிட முடியாமற் போயிருக்கும் என்று யூகித்தேன். பரவாயில்லை, இத்தனை நாட்கள் குழந்தையைப் பார்த்துக் கொண்டீர்களே. நான் ரொம்பவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எங்கே கோதை? அங்கு ஒரு நாள் பூஜைக்கு வரதுவை ஏற்பாடு செய்து விட்டு வந்திருக்கிறேன். உடனே புறப்பட வேண்டும். தவறாக எண்ண வேண்டாம்”.

“அவள் பகவானைத் தரிசிக்கப் போயிருக்கிறாள்” என்று வாயில் வந்த வார்த்தையைக் கூறிவிட்டார்.

“அப்படியா? சரி, சரி, நாமும் அங்கேயே போய் அவளை அழைத்துக் கொண்டு நான் புறப்பட வேண்டும்” என்றார் இராமன். தம் மகளைக் காண அவர் ஆர்வப்படுவது அவர் பேச்சில் தெரிகிறது. என்ன செய்வது என்று புரியாத நிலையில் ‘எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்’ என்ற அன்னையின் வார்த்தையை மீண்டும் நினைவில் பதித்து ஒன்றும் பேசாது அவருடன் ஆஸ்ரமம் வந்தார்.

அங்கு முன்பு கோதையை அன்னையிடம் அழைத்துச் சென்ற அதே சாதகர் வெளியே வர, அவரிடம் “கோதையின் தகப்பனார் இவர். அவளை அழைத்துப் போக வந்திருக்கிறார்” என்றார் கேசவன்.

சாதகர் செய்தியை அன்னைக்குச் சொல்ல, அன்னை அவரைத் தம்மிடம் அழைத்து வரச் சொல்கிறார்.

அன்னை அவருக்கு மகாலட்சுமியாய்க் காட்சி தருகிறார். அவரைக் கீழே விழுந்து சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து எழுந்து கை கூப்பித் தொழுது மந்திரங்களை உச்சரித்து விடுகிறார்.

அன்னை புன்னகை செய்கிறார். “என் மகள் கோதையை அழைத்துச் செல்ல வந்தேன்” என்கிறார் இராமன்.

“அவள் இங்கே இருக்கட்டும்” என்றார் அன்னை. “அங்குக் கோயிலில் கிருஷ்ணனுக்கு அவள் கைங்கர்யம் தேவைப்படுகிறது” என்று மிகவும் நயந்து கூறினார்.

“அதை நீயே பார்த்துக் கொள்” என்றார். “என் குழந்தையை பிரிந்து நான் இத்தனை நாட்கள் இருந்ததில்லை. அவளை என்னுடன் தயவு செய்து அனுப்பி வையுங்கள்” என்று அழாக் குறையாகக் கெஞ்சினார்.

“உன் குழந்தையா?” என்று அவரை அன்னை உற்றுப் பார்க்க, அவள் தன் சுவீகாரக்குழந்தை என்பதைக் கேசவன் கூறியிருப்பாரோ என்று இராமன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, கேசவன் சொல்லாமலே எனக்கு அது தெரியும் என்று சிரித்தார் அன்னை. இராமனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவர் சொல்லாமல் எப்படித் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, “கேசவனுக்குத் தெரியாத உண்மையும் எனக்குத் தெரியும்” என்று அன்னை கூற, இராமனுக்கு வியர்த்தது.

“கேசவனோ அது என்ன உண்மையாக இருக்கும் என்று நினைக்கிறார்”.

“நிஜமாகவே இவருக்கு உண்மை தெரியுமா? என் குழந்தையைப் பறித்துக் கொள்ள என்னை பயமுறுத்துகிறாரா” என்று இராமன் எண்ணுகிறார்.

“நீ கோவிந்தபுரம் சென்ற போது அநாதையாய்க் கிடந்த குழந்தையை எடுத்து வந்து, காலஞ்சென்ற உறவினர் குழந்தை என்று கூறி அவளைச் சுவீகரித்துக் கொள்ளவில்லையா?” என்கிறார் அன்னை குறும்பாக அவரை நோக்கி.

மீண்டும் இராமன் அன்னையை நமஸ்கரிக்கிறார். “தாயே என்னை மன்னித்து விடுங்கள். குழந்தை பாசத்தால் தவறு செய்துவிட்டேன்” என்கிறார்.

“இல்லை. நீ தவறேதும் செய்யவில்லை அவளை வளர்க்கும் பாக்கியத்தை நானே உனக்குக் கொடுத்தேன். உன் பொறுப்பு முடிந்து விட்டது. இனி அவள் இங்கு தன் இஷ்ட தெய்வத்-தோடி ருக்க வரம் பெற்றவள். அவள் மீது வைத்த பாசத்தை இறைவனிடம் பக்தியாய் மாற்றி உன் கடமையை அர்ப்பணமாகச் செய்” என்றார் அன்னை.

பொறி தட்டியது போல் ஏதோ ஓருணர்வு. கோதை மீது கொண்ட பாசக் கயிறு அறுபட்டது.

கோதையை அழைத்து வரச் சொன்னார் அன்னை. ‘அப்பா!’ என்று ஓடி வந்தாள் சிறுமி.

“கோதே! உன் இஷ்ட தெய்வத்தைக் கண்டாயா? நைவேத்யம் படைத்தாயா?” என்று அன்புடன் விசாரிக்கிறார்.

“ஆமாம் அப்பா! அவர் நான் செய்த சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டதை பார்த்தேனப்பா” என்று பரவசப்பட்டு, “நான் இங்கேயே இருந்து கண்ணனுக்குத் தொண்டு செய்யட்டுமா அப்பா” என்று கேட்கிறாள்.

“ஆமாம் கோதை. இரு. உன் இஷ்டம் போல் கண்ணனுக்குக் கைங்கர்யம் செய். உன்னை மகளாய்ப் பெற்ற பெருமையோடு அங்கு நம் கண்ணனுக்கு நானும் கைங்கர்யம் செய்கிறேன்” என்று விடை பெற்றார்.

“எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்” என்ற அன்னையின் சொல் எத்தனை சத்தியமானது என எண்ணிக் கேசவன் சிலிர்க்கிறார்.

(முற்றும்)

********



book | by Dr. Radut