Skip to Content

11. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

ஸ்ரீ அன்னையின் அருளாலும், தங்களது மேலான ஆசிர்வாதத்தாலும், நாங்கள் நலமாகவும், சந்தோஷமாகவும், மனநிறைவோடும் இருக்கிறோம்.

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, எண்பதுகளின் முடிவில், ‘சமர்ப்பணம் என்றால் என்ன? அதை எப்படிச் செய்வது?’ என்பதை நீங்கள் ‘ஒரு டிக்க்ஷனரி’ வாங்கும் நிகழ்ச்சியின் மூலம் விளக்கி இருந்த ஒரு கட்டுரையைப் படித்தேன். தங்கள் வழிகாட்டுதலால், பக்தர்களாகிய நாங்கள் வாழ்வில் அதைப் பின்பற்றி பல நன்மைகளை அனுபவித்து வருகிறோம். சமர்ப்பணம் முழுமையாக இருந்தாலும், பல சமயங்களில் செய்ய இயலாவிட்டாலும், கருணைக் கடலாகிய ஸ்ரீ அன்னை, பக்தர்களாகிய எங்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

2004-இல் நான் சமர்ப்பணம் செய்ய முயற்சித்த ஒரு பிரார்த்தனைக்கு ஸ்ரீ அன்னையின் அருளை முழுக்க வெளிப்படுத்தும் விதமாக நடந்த நிகழ்ச்சிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

2004-இல் எனது கணவருக்கு டெல்லி டிரான்ஸ்பர் ஆனது. பெரிய பெண்ணை இரண்டாம் வகுப்பிலும், இளைய பெண்ணை நர்சரியிலும் ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தோம். டிசம்பர் மாதத்தில் அப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடினர். இரு பெண்களும் கலைநிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். பார்க்கச் சென்றிருந்தோம்.

பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. படிப்பு, ஆடல், பாடல், பேச்சுப்போட்டி போன்ற ஏனைய பிரிவுகளில் மிகச்சிறப்பாகத் தேர்ந்தவர்க்கு பரிசுகள் கொடுத்துக் கொண்டிருந்தனர். சின்னச் சின்னக் குழந்தைகள், கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு, மேடையில் ஏறி பரிசுகளை வாங்கும் காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. உடலும், உள்ளமும் நிறைந்தது போன்ற உணர்வு. மனத்தின் ஆழத்தில் இருந்து பிரார்த்தனை எழுந்தது!

‘அன்னையே! எனது இரு குழந்தைகளும் இதுபோல ஒவ்வொரு வருடமும் மேடை ஏறி பரிசு வாங்க வேண்டும்! சமர்ப்பணம்!’ மனம் சந்தோஷத்தால் நிறைந்து கண்கள் பனித்தன! எனது பிரார்த்தனையை முழுக்கச் சமர்ப்பணம் செய்ய முயற்சித்தேன். கணவரிடம்கூட எனது பிரார்த்தனை பற்றிச் சொல்லவில்லை.

ஒரு நாளும் எனது கணவரோ, நானோ பரிசு வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. என்ன ஆச்சரியம்! ஸ்ரீ அன்னையின் அருளால் குழந்தைகள் தாங்களாகவே நன்றாகப் படிக்க ஆரம்பித்தார்கள்! டியூஷன் போன்ற உதவிகள் ஏதும் இல்லாமல் பாடத்தில் ஆர்வத்துடன் கவனம் செலுத்தினார்கள். ஆறு வருடங்களுக்கு இரண்டு பெண்களும், ஒவ்வொரு முறையும், ‘பெஸ்ட் இன் அகடமிக்ஸ்’ என்று சர்ட்டிபிகேட்டும், பரிசும் வாங்கினார்கள். இது முழுக்க முழுக்க ஸ்ரீ அன்னையின் அருள் என்று நாங்கள் முழுவதும் உணர்ந்து நன்றியில் கரைந்தோம். அந்தப் பள்ளியில் இவ்வாறு பரிசு பெறும் மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு தனியாக சிறப்பு அழைப்பிதழ் அனுப்பும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு முறையும் இவ்வாறு அழைப்பிதழ் கிடைக்கும் போதும், எனது கணவர் சிறு குழந்தைபோல, சந்தோஷமாகச் சிரிப்பார். நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக தயாராவார். அப்பாவின் சந்தோஷத்தைப் புரிந்துகொண்ட பெண்கள், இன்னும் நன்றாகப் படிக்க ஆரம்பித்தனர்.

பெரிய பெண் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்பொழுது அவ்வருட ஆண்டு விழாவின் பிரதான நிகழ்ச்சி ஒரு நாட்டிய நாடகம். அதற்குத் தலைமை தாங்க சினிமா மற்றும் நாடகத்துறையில் பிரசித்தி பெற்ற பிரபலத்தை அழைத்திருந்தார்கள். நேரம் குறைவு காரணமாக பரிசு வழங்கும் நிகழ்ச்சியை பாதியாகக் குறைத்து, படிப்பு சம்பந்தமாக பரிசு வாங்குவோர் அனைவருக்கும் ஆண்டு விழாவிற்கு முதல் நாளே, ஒத்திகை நிகழ்ச்சியின்போது பரிசு வழங்க முடிவு செய்தனர். அதனால் எங்களுக்குத் தனி அழைப்பிதழ் வராது. அந்த விழாவிற்கும் செல்ல முடியாது. இதை அறிந்த பெரிய பெண்ணிற்கு மிகுந்த வருத்தம். அப்பாவிற்கு நாங்கள் தரும் சந்தோஷமே இதுதானே! என்று தனது அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லவே தயங்கினாள். எனக்கு ஏனோ மனதில் ஒரு தடுமாற்றமும் வரவில்லை. “ஸ்ரீ அன்னையிடம் பிரச்சனையைச் சொல். சமர்ப்பணம் செய்; அவரை முழுமையாக நம்பு” என்றேன்.

இது அவளுக்கு ஸ்ரீ அன்னையை மிகவும் நெருங்கும் சந்தர்ப்பம் போலும். இரவு முழுவதும் ஸ்ரீ அன்னையை பிரார்த்தித்துக் கொண்டு இருந்ததாகச் சொன்னாள். அடுத்த நாள் பள்ளியிலிருந்து வந்தவள் சிறப்பு அழைப்பிதழோடு வந்தாள். படிப்பில் திறம்பட தேர்ந்தோர்க்கு முதல்நாளே பரிசு கொடுக்கும் நிகழ்ச்சியில் ஒரு மாற்றமுமில்லை. இவள் அவ்வருடத்தில் அவளது பள்ளியின் சார்பாக, பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தாள். அதனால் அவளுக்கு, ‘பெஸ்ட் ஸ்பீக்கர்’ என்கிற அவார்ட் ஆண்டு விழாவின் போது தருவதாக அந்த அழைப்பிதழில் எழுதி இருந்தது. ‘ உண்மையில் இந்தப் பரிசுக்கு நான் தகுதியானவளே அல்ல!’ இது முழுக்க முழுக்க ஸ்ரீ அன்னையின் அருள்! ஸ்ரீ அன்னைதான் நான் ஆண்டு விழாவில் பரிசு வாங்க வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை இப்பரிசுக்காக என்னைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கிறார்கள்” என்றாள் அவள். அன்னை அத்தோடு நின்று விடவில்லை. அவ்வருடம் பள்ளியில் நாட்டிய நாடகத்திற்கு ஒலி, ஒளி அமைப்புகள் மிகப்பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். அரங்கம் முழுவதும் இருளில் இருக்க, இரு பெரிய ஒளி வட்டங்கள்! ஒன்றில் தலைமை விருந்தினர், இன்னொன்றில் என் பெண்ணும் அவளது தோழியும்! தலைமை விருந்தினருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பது, அவரை விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பிக்க மேடைக்கு அழைத்துச் செல்வது, அவருக்கு நினைவுப் பரிசு கொடுப்பது போன்ற அனைத்தையும் இவளே செய்தாள்! இது போன்றவற்றை ஹெட்பாய், ஹெட்கேர்ள் செய்வது வழக்கம். இது வழக்கத்திற்கு மாறாக இருந்தது. இந்த சந்தோஷம் அன்னையால் மட்டுமே தர முடியும்.

2011-இல் கணவருக்கு கல்கத்தா டிரான்ஸ்பர் ஆனது. இங்கும் ஸ்ரீ அன்னையின் அருளால் ஒரு நல்ல பள்ளியில் குழந்தைகளுக்கு அட்மிஷன் கிடைத்தது. சிறு வயதிலிருந்தே பெரிய பெண்ணுக்கு மருத்துவம் படிக்க ஆர்வம் இருந்ததால், அதற்குத் தன்னை தயாராக்கிக் கொண்டிருந்தாள். Competitive Exams மூலமாகத்தான் மருத்துவத்திற்கான நுழைவுத்தேர்வு இருக்கும் என்பதால், cyber olympiad, science olympiad போன்ற எல்லா competitive exams-லும் பங்கு பெற்று பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தாள். அப்போது Indian Institute of Science - Bangalore நடத்திய KVPY Scholarship-க்கு உரிய competitive exam-லும் பங்குபெற்று எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு இரண்டிலும் வெற்றி பெற்று Scholarship-க்குத் தகுதி பெற்றாள். KVPY-இல் தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை தேடித் தந்ததாக ஆசிரியர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர்.

2014-ஆம் வருடம் ஏப்ரல் மாதம், பள்ளியின் ஆண்டு விழா. பன்னிரெண்டாம் வகுப்பிற்குரிய தேர்வு முடிவுகள் வராத நிலையில், அவளுக்கு KVPY-இல் தேர்வு பெற்றதற்காக பரிசு கொடுக்கப் போவதாக பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. கல்கத்தாவின் மிகப்பெரிய Science City Auditorium-இல் விழா! CBSC-இன் Regional Director தலைமை விருந்தினர்! நாங்கள் உள்ளே சென்றதும் ஆசிரியர்கள் escort செய்து எங்களை அழைத்துச் சென்றனர். Special Guests என்று எழுதப்பட்ட இருக்கைகளில் எங்களை அமர வைத்தனர்! மேடையின் இருபுறமும் மிகப்பெரிய (screens) திரைகள்! பிரின்ஸிபல் ஆண்டு விழா உரையின்போது KVPYஐப் பற்றிச் சொல்கிறார். பெண்ணின் படம் பெயரோடு இரு திரைகளிலும் வருகிறது.

தலைமை விருந்தினர் 50,000 ரூபாய் மதிப்புள்ள i-pad பெண்ணுக்குப் பரிசாக வழங்குகிறார். என் மனமோ “அம்மா! அம்மா! என்று அன்னையை அழைக்கிறது! அரற்றுகிறது! பரவசம்! அதே உணர்வு! 2004-இல் சமர்ப்பணம் செய்த போது ஏற்பட்ட உணர்வு!

ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது.

பக்தி, நம்பிக்கை, கடின உழைப்பு .... மற்ற அனைத்திற்கும் மேலே... மிக உயரே ...

தங்கள் அன்பு....

ஸ்ரீ அன்னையின் கருணை...!

ஸ்ரீ அன்னையின் அருள்...!

என்றும் தங்கள் ஆசிகள் வேண்டி
தங்கள் திருப்பாதங்கள் பணியும்
தங்கள் மகள்.

*********

ஜீவிய மணி

பொய் அருளை விலக்கும். பொய் சொல்பவரைப் போற்றுவது அருளை விலக்கும். தான் நினைப்பது சரி என்பது அருளுக்கு எதிரி. எவரும் கேட்கவில்லை என்றால் சரி என்பதும் அதே போன்றது. பொய்யை விலக்குவதும், பொய் சொல்பவரை விலக்குவதும், தான் சரியில்லை என அறிவதும், கேட்டாலும் கேட்காவிட்டாலும் சரியாக இருக்க வேண்டும் என்பதும், மனச்சாட்சியை மீற மாட்டேன் என்பதும், கைவிட்ட தவற்றை நாடமாட்டேன் என்பதும் அருளுக்கு நாம் ஒத்துழைப்பதாகும்.

*********



book | by Dr. Radut